Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்த் தலைமைகள் இந்திய அரசை நம்புவதில் நன்மை எதுவுமில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தலைமைகள் இந்திய அரசை நம்புவதில் நன்மை எதுவுமில்லை

[07 - January - 2009]

வ.திருநாவுக்கரசு

தமிழ்த் தலைமைகள் இந்திய அரசை நம்புவதில் நன்மை எதுவுமில்லை

"கிளிநொச்சியைக் கைப்பற்றியதானது எமது வரலாற்றில் பல நூற்றாண்டுகளாகக் காணப்பட்டு வந்த இராணுவ வீரகாவியத்தின் பதிவுகளில் மிக உச்சமான கௌரவம் கொண்டதாகும்' என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி செயலகத்தில் மந்திரி பிரதானிகள் மத்தியில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார். அதாவது உதாரணமாக துட்டுகைமுனு எல்லாளன் போரில் ஈட்டப்பட்ட வெற்றியினை விடவும், கிளிநொச்சியில் ஈட்டிய வெற்றி பிரமாதமானதென ஜனாதிபதி ராஜபக்ஷ கருதியுள்ளார் போல் தெரிகிறது. நிகரற்றதொரு வெற்றியென அதனைக் குறிப்பிட்ட அவர். அதேநேரத்தில் கிளிநொச்சியைக் கைப்பற்றியமை தெற்கு வடக்கைத் தோற்கடித்து விட்டதாகக் கொள்ளக் கூடாதெனவும், அது அனைத்து மக்களுக்கும் கிடைத்த வெற்றியெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், ஜனாதிபதியின் உரையில் தொக்கிநிற்கும் செய்தியினைப் புரிந்துகொள்வது கடினமாயிருக்க முடியாது. மறுபுறத்தில் புரையோடிப் போயுள்ள தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்த்துவைக்கும் முகமாக நம்பகத்தன்மையான தீர்வுத் திட்டம் எதனையும் முன்வைக்காமல் தனது இருப்பை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் இராணுவ அணுகுமுறையினையே முதன்மைப்படுத்தி வருவது கண்கூடு. எனவே, சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான அரசியல் தீர்வுகண்டு, சமாதானத்தை எட்டி நாட்டினை சுபிட்சப்பாதையில் இட்டுச்செல்ல முடியுமென்றால் அதுவே முழுநாட்டினதும் வெற்றியாகும்.

பிரிவினைவாதம் 1956 இல் நாட்டப்பட்டது

"இது பிரிவினைவாதம், பயங்கரவாதம் மற்றும் இனவாதத்தை எதிர்க்கும் மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகும். ஒரே தேசம், ஒரே கொடி' என ஜனாதிபதி ராஜபக்ஷ தனது வெற்றியுரையில் மேலும் கூறியதோடு, "தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியில் பல தசாப்த காலங்களாகச் சிக்குண்டிருந்த மக்கள் இனிமேல் சுதந்திரத்தை அனுபவிக்கப்போகின்றனர்' எனவும், தொடர்ந்து குறிப்பிட்டுள்ளார். உண்மையில் பிரிவினைவாதம் என்பது 1956 இல் நாட்டப்பட்டுவிட்டது என்பதை முற்றிலும் மறந்த நிலையிலேயே சிங்கள அரசியல் தலைமைகளால் காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன. இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராய் விளங்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ மிக இளைய பாராளுமன்ற உறப்பினராக அன்று அரசியலில் பிரவேசிக்க முன்னதாகவே அன்றைய ஸ்ரீ.ல.சு.க.தலைவர் பண்டாரநாயக்கவின் "சிங்களம் மட்டும்' சட்டத்தின் மூலம் அது முடுக்கிவிடப்பட்டது. இந்த விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஐ.தே.க. அதே நிலைப்பாட்டில் இருந்ததை மறந்துவிட முடியாது. அன்று பிரதமர் பதவியை எட்டுவதற்குத் துடித்துக்கொண்டிருந்த பண்டாரநாயக்க ஐ.தே.க.வை முந்திக் கொண்டார். அவ்வளவுதான்.

இரு கட்சிகளுமே சிங்கள பேரினவாதத்தை வளர்த்து வந்தன

இவ்வாறாக ஐ.தே.க.வும் ஸ்ரீ.ல.சு.க.வும் ஆட்சி அதிகாரத்தைக் குறியாகக் கொண்டு ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்பட்டு தமிழ் பேசும் மக்களை ஓரங்கட்டி, சிங்கள பேரினவாதத்தினை மென்மேலும் வளர்த்துவந்தன. அது முற்றி தமிழ் மக்கள் மீது மூர்க்கத்தனமான அடக்குமுறைகளையும் தொடர்ச்சியாக உயிர் உடைமை அழிப்புகளையும் மேற்கொண்டு வந்த நிலையில் 3 தசாப்தங்கள் பொறுத்தது போதும் என்றவாறாகவே 1976 இல் தனிநாட்டுக் கோரிக்கையும், அதனையடுத்து ஆயுதம் ஏந்திப் போராடுவதைவிட வேறு வழியில்லை எனும் நிலைமையும் ஏற்பட்டது. இதனைச் சிங்கள தலைமைகள் உணர மறுத்து வந்துள்ளது மட்டுமல்லாமல் இறுதியில் யுத்தத்தையும், தமிழர் மீது திணித்துவிட்டன. ஆனால், யுத்தம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திற்கு எதிரானதே ஒழிய தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல எனக் குறிப்பாக சர்வதேச ரீதியில் பிரசாரம் செய்யப்பட்டு வருவதைக் காணலாம். விசேடமாக இன்றைய நிலையில் அரசாங்கம் தனது செல்வாக்கை நிலைநாட்டுவதற்கும் தனது இருப்பை உறுதிப்படுத்துவதற்கும் யுத்தத்தையே பிரதான சாதனமாகப் பயன்படுத்துகின்றது. "அரசியல் நலனுக்காகவே யுத்தம் வியாபாரமாக்கப்பட்டுள்ளது' என்கிறார் வேறுயாருமல்ல பெருந்தோட்டத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா சு.க.வின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவருமாகிய டீ.எம்.ஜயரத்ன. அடிக்கடி தேர்தல்களை நடத்தி அவற்றில் வெற்றியீட்டுவதற்கும் யுத்தம் பயன்படுத்தப்படுகிறது. கடந்த வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தலின்போது அது வெட்ட வெளிச்சமாகக் காணப்பட்டது. ஆகஸ்ட் 23 தேர்தல் தினத்தில் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டுவிடும் எனப்பிரசாரம் செய்யப்பட்டது.

எதிர்வரும் மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் தொடர்பாக 01/01/2009 ஆம் திகதி கொழும்பு மகாவலி நிலையத்தில் விளக்கமளித்தவராகிய ஸ்ரீ.ல.சு.க.வின் பொதுச் செயலாளரும் விவசாய அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன; "கிளிநொச்சியில் ஓரிரு தினங்களில் சிங்கக்கொடி பறக்கும், மக்கள் மகிழ்ச்சியுடன் பார்க்கப் போகிறார்கள்' என்று கூறிவைத்தார். விடுதலைப் புலிகள் கிளிநொச்சியை விட்டு பின்னகர முடிவெடுத்து விட்டனர் என்பதற்கான சமிக்ஞை அரச தரப்பினருக்கு அப்போது தென்பட்டுவிட்டது எனலாம். மற்றும், போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும, "நாட்டைக் காப்பாற்றும் யுத்தத்தை நாம் காப்பாற்றுவோம்' என்பதே தமது தேர்தல் பிரசாரத்திற்கான சுலோகம் என பறைசாற்றியுள்ளார்.

ஐ.தே.க.வின் யுத்த வெற்றிக் கதைகள்

இதனிடையே யுத்தத்தில் ஈட்டப்பட்டு வரும் வெற்றிகளுக்கான பெருமை தம்மையே சாரும் என ஐ.தே.க.வினர் மார்தட்டுகின்றனர். 2002 இல் யுத்தநிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்ட பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பெரியதொரு பிளவை ஏற்படுத்தியதற்கு ஐ.தே.க.வே காரணகர்த்தாவாயிருந்தது என அண்மையில் ஐ.தே.க.பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த றங்க பண்டார பெருமிதப்பட்டுக் குறிப்பிட்டிருந்தார்."கருணா அம்மானும் அவரின் 6000 உறுப்பினர்களும் விலகுவதற்கு நாமே வழிசமைத்தோம். அதுதான் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியின் ஆரம்பம். அப்போது ஐ.தே.க.தலைவர் ரணில் விக்கிரமசிங்க தயாரித்துவைத்த உண்டியையே இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ருசித்துக் கொண்டிருக்கிறார்' என பண்டார குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான பிரசாரம் தான் 2005 ஜனாதிபதித் தேர்தலின்போது ஐ.தே.க.விலிருந்து பின்னர் அரசாங்கத்திற்குத் தாவி இன்று அமைச்சர்களாய் விளங்குபவர்களாகிய மிலிந்த மொறகொட, நவீன் திஸாநாயக்க ஆகியோர் மேற்கொண்டிருந்தனர். இன்று ஈட்டப்படும் வெற்றிகளுக்கு 2002 யுத்தநிறுத்த ஒப்பந்தமே வழிசமைத்ததென ரணில் விக்கிரமசிங்கவே நேற்று முன்தினம் ஸ்ரீ.ல.சு.க.(ம) தலைவர் மங்கள சமரவீர, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் சகிதம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கூறிவைத்தார். முன்னர் ஐ.தே.க.ஆட்சிக்காலத்திலும் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு உருப்படியான அரசியல் தீர்வின்றி ஏறத்தாழ 10 வருடங்களாக யுத்தம் நடத்தி தமிழ் மக்களைப் பதம் பார்த்ததை யாரும் மறந்துவிடமுடியாது. பின்பு 2001 முதல் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சிக்காலத்திலும் தமிழர் தரப்பிலான போராட்டத்தினை மட்டந்தட்டு முகமாக சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னல் ஒன்றினை ஏற்படுத்துவதில் அவர் ஈடுபட்டிருந்தார். தனது ஆட்சிக் காலத்தில் செய்துகொண்ட யுத்தநிறுத்த ஒப்பந்தம் காரணமாகவே அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஆயுதப்படையினருக்கு ஆயுதங்கள் வழங்க முன்வந்தன எனவும், அதே ஆயுதங்களைப் பயன்படுத்தியே இன்று வெற்றிகள் ஈட்டப்பட்டு வருகின்றன எனவும் விக்கிரமசிங்க மகிழ்ச்சியடைந்துள்ளார்.

APRC மீது ஜே.வி.பி.யினர் ஏன் கொக்கரிக்கின்றனர்?

இதனிடையில் அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதிகள் குழு (APRC) தமிழ் மக்களுக்கு ஏதோ அள்ளிக் கொடுத்து விடப்போகின்றதென ஜே.வி.பி.யினர் கொக்கரித்துத் திரிகின்றனர். அதனை உடனடியாகக் கலைத்து விடவேண்டுமென ஆவேசப்படுகின்றனர். தமிழரைப் பொறுத்தவரை அக்குழுவானது வலுவற்றது. முற்றிலும் பிரயோசனமற்றது என்பது ஏற்கனவே தெரிந்த விடயமாகும். "தமிழ் பேசும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே எமது நோக்கம். அதில் முக்கியமானது சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதாகும். எத்தகைய தீர்வுத்திட்டத்தை தயாரித்தாலும் எமது நாட்டின் பெரும்பான்மை மக்களான சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளா விட்டால் அதை அமுல்படுத்த முடியாது. எனவே தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் அதேவேளை அதற்கு சிங்கள மக்களின் சம்மதத்தையும் பெறும் வகையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து செல்கிறோம்' இவ்வாறு அமைச்சர் விதாரண அண்மையில் வழங்கியிருந்த செவ்வியொன்றில் குறிப்பிட்டுள்ளார். இது உண்மையில் சிங்களப் பெரும்பான்மை மேலாதிக்கத்திற்கு அடிபணிந்து போகும் தன்மையையே கோடிட்டுக் காட்டுகிறது. அககீஇ யானது எதுவித தீர்வுத் திட்டத்தையும் கொண்டு வருவதற்கு வக்கற்ற நிலையில் உள்ளதால் தாம் அதிலிருந்து விலகுவது பற்றி ஒரு முடிவை விரைவில் எடுக்கப்போவதாக ஸ்ரீ.ல.மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வில் அரசாங்கத்திற்கு அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை எனவும் அவர் விசனம் தெரிவித்துள்ளார்.

வன்னியில் அப்பாவி மக்கள் கொலைகள்

கடந்த சில தினங்களாக வன்னியில் குறிப்பாக முரசுமோட்டை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நாள்தோறும் நடத்தப்பட்ட விமானக் குண்டு வீச்சுக்கள் மற்றும் ஷெல் தாக்குதல்கள் காரணமாக நான்கு நாட்களில் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 78 பேர் காயமடைந்துமுள்ளனர்.

காஸா மீது இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் விமானக் குண்டு வீச்சுக்கள் காரணமாக ஒப்பீட்டு ரீதியில் பெருந்தொகையானோர் கொல்லப்பட்டும், காயமடைந்தும் உள்ளனராயினும், அதே பாணியில் வன்னியில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவது மிகவும் வேதனையளிப்பதாகும். "பொது மக்களுக்கு இழப்புகள் எதுவும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கொள்கையை' படையினர் மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி ராஜபக்ஷ திருப்தி தெரிவித்துள்ளதாக அறியக்கிடக்கிறது. பலஸ்தீனத்திலுள்ள உண்மையான நிலைமையை அறிந்து கொள்வதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷ எடுத்த முயற்சி பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அங்கே உண்மையில் நடப்பது வெள்ளிடை மலைபோல் தெரிகிறது. அதன் காரணமாகவே குருதிப் பெருக்கு அதிகரித்துச் செல்வது கவலையளிக்கிறது; கலந்துரையாடல்கள் நடத்திப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென சென்ற வாரம் இலங்கை அரசாங்கத்தின் தரப்பில் அறிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

அரசியல் தீர்வு

அரசியல் தீர்வில் அரசாங்கம் அக்கறை காட்டவில்லை என்ற விடயம் தொடர்பாக பங்களாதேஷ் "டெயிலிஸ்ரார்' பத்திரிகை நேற்று முன்தினம் தீட்டிய ஆசிரியர் தலையங்கத்தில் வழங்கிய அறிவுரையை இலங்கை அரசாங்கம் கவனத்தில் கொள்வது சாலச் சிறந்ததாகும். "பேச்சுவார்த்தை மூலமே நிலையான தீர்வு' எனக் கூறியுள்ள ஆசிரியர் தலையங்கத்தில், அந்நியப்படுத்தப்பட்டவர்கள் என தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் உணர்வைப் போக்குவதற்காக அவர்கள் சமத்துவமாக நடத்தப்படுவார்கள் என உறுதியளிக்கப்படுவதோடு, தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும் அவர்களைச் சம்பந்தப்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆம், தமிழ் மக்கள் இறைமையுள்ள பிரஜைகள், அரசியல் அதிகாரப் பகிர்வு மூலம், இந்த நாட்டின் அபிவிருத்திப் பணியில் அவர்கள் பங்குதாரர்களாக்கப்பட வேண்டும் என நாம் பல தடவைகள் வலியுறுத்தியுள்ளோம். இராணுவ வெற்றி நிலையானதல்ல என்ற அர்த்தப்பட "டெயிலிஸ்ரார்' கூறியதும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியதாகும். விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்து சரணடைய வேண்டும் என ஜனாதிபதி கடுமையான தொனியில் கோரிக்கை விடுத்துள்ளாராயினும் அது நடைபெறுமா இல்லையா என்று கூறுவதற்கு ஒருவர் அரசியல் மேதையாயிருக்க வேண்டியதில்லை. ஆக அரசியல் தீர்வு தான் இறுதி வெற்றி, அதன் மூலம் தான் நாட்டையும் மக்களையும் உண்மையில் காப்பாற்ற முடியும். எனவே, "டெயிலிஸ்ரார்' ஆசிரியர் தலையங்கம் ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் சிந்தனைக்கு விருந்தாகட்டும்.

தமிழ்த் தலைமைகள் சுய விமர்சனம் செய்ய வேண்டிய தேவை மிக அவசியமானதாகும். அதாவது, அவர்களின் சமகால அணுகுமுறைகள் கண்டிப்பாக மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டியவையாகும். குறிப்பாகச் சொன்னால், இந்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குக் கைகொடுக்கும் என்றெண்ணுவதில் பயன் எதுவுமில்லை. அண்மைக்கால நிகழ்வுகள் இதனை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. அன்று இந்திரா காந்தி முதல் இன்று மன்மோகன் சிங் வரை அதே நிலைமைதான் காணப்பட்டு வந்துள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதியைப் பொறுத்தவரை அவர் இலங்கைத் தமிழருக்காகச் செத்து மடியவும் தயாரென எவ்வளவுதான் கூறினாலும், அவரின் வகிபாகம் மண்குதிரைக்குச் சமனானதாகும். அவர் பிரசார யுக்தியாக அண்மையில் தமிழ்நாடு அரசியல் கட்சித்தலைவர்கள் சகிதம் டில்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தாராயினும் வெளிநாட்டமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்பி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உறுதியளிக்கப்பட்டதாயினும் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்போது கருணாநிதி மெளனம் காத்து வருகிறார்.

மறுபுறத்தில், இந்திய கம்யூனிஸ்ட்கட்சி (CPI) களத்தில் நின்று போராடி வருகிறது. நேற்று செவ்வாய் கூட சென்னையில் ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்கட்சியும் (CPIM) அக்கறை கொண்டு குரல் கொடுத்து வருகிறது. இவ்விரு கட்சிகளும் இணைந்து மேலும் காத்திரமாகக் குரல் கொடுக்கச் செய்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.

http://www.thinakkural.com/news/2009/1/7/a...s_page65259.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒன்றும் புதிதல்ல. அன்று தொட்டு இன்றுவரை மற்றய நாடுங்கள் சவுடால்கள் தான் விட்டுள்ளது உதவியதில்லை. மாறாக உபத்திரபவம் செய்துள்ளது.

திருமங்கலம் இடைத்தேர்தல்....விரைவில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் ...மீதமிருக்கும் தமிழ்நாடு அரசின் பதவிக்காலம் இதையெல்லாம் கணக்கிடஇடே காய்நகர்த்துகிறார் கருணாநிதி. ராமதாஸ் ஒருமாதத்தில் முடிவு சொல்வாராம்...அதுவும்: முதல்வரின் முடிவைக் கேட்டு...மத்திய அரசிலிருந்து விலலகுவோம் என நாடகம் நடித்து ஏமாற்றிவிட்டார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்றால் இந்தியர்களை எப்போதும் நம்புவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாநிதி : வாங்க, வாங்க :mellow: இலங்கைத் தமிழர்களின் கண்ணீரைத் துடைக்கிறதுக்காக பதவியைத் தூக்கி எறிய முடிவு செஞ்சு, ராஜினாமா கடிதங்களை கையிலே கூட தூக்கிட்டோம். எறிய வேண்டியதுதான் பாக்கி. எப்படி எறியறதுன்னு யோசிச்சிட்டிருந்தப்போ, நல்ல வேளையா நீங்க வந்துட்டீங்க.

பிரணாப் முகர்ஜி : உடனே உங்களைப் பார்க்கச் சொல்லி சோனியா அனுப்பினாங்க. எப்படியாவது போர் நிறுத்தம் ஏற்பட்டேயாகணும்னு உறுதியா இருக்காங்க.

கருணாநிதி : அப்படியா? இலங்கையிலே போர் நிறுத்தம் ஏற்படணும்னா சோனியா சொன்னாங்க? :o

பிரணாப் முகர்ஜி : ஊஹூம். இலங்கைப் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாட்டிலே அரசியல் கட்சிகள் நடத்திக்கிட்டிருக்கிற போரை, உடனடியா நிறுத்தணும்னு சோனியா சொல்லி அனுப்பினாங்க. அதுக்காகத்தான் வந்தேன்.

கருணாநிதி : இலங்கையிலே அமைதி ஏற்படுத்த சோனியாவும், பிரதமரும் எடுக்கிற நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிச்சுக்கறேன். மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்குதுன்னு சொல்லுங்க. பாராட்டிடறேன். :wub:

பிரணாப் முகர்ஜி : பிரதமர் ரொம்பக் கவலைப்பட்டாரு. சோனியாவும் கவலைப்பட்டாங்க. ராஜபக்ஷே ஆலோசகர் பாஸில் ராஜபக்ஷேவும் டெல்லிக்கு வந்து கவலைப்பட்டாரு.

கருணாநிதி : தாய் தமிழக மக்களின் கனவுகள், இப்படி ஒவ்வொண்ணா நிறைவேறிக்கிட்டிருக்கிறதை நினைக்கும்போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்குது. :lol:

பிரணாப் முகர்ஜி : அதுமட்டுமில்லை. தமிழக மீனவர்கள் மேலே துப்பாக்கிச் சூடு நடத்தமாட்டோம்னு பிரதமர் கிட்டே பாஸில் ராஜபக்ஷே உறுதி அளிச்சிருக்காரு.

கருணாநிதி : அதை விட, மீனவர்களை விடுதலைப் புலிகள் சுட்டுடாமப் பாத்துக்கச் சொல்லுங்க. அதுதான் முக்கியம். அப்பதான் வேற யாராவது மீனவர்களைச் சுடும்போது, நான் துணிஞ்சுக் கண்டிக்க முடியும்.

பிரணாப் முகர்ஜி : இலங்கைப் பிரச்சனையிலே மத்திய அரசுக்கு நீங்க ஒத்துழைப்பு கொடுக்கணும்னு பிரதமர் கேட்டுகிட்டாரு.

கருணாநிதி : கவலைப்படாதீங்க. இலங்கைப் பிரச்சனையிலே மத்திய அரசோட நாங்க ஒத்துப்போறது புதுசு இல்லை. அந்தக் காலத்திலிருந்தே மத்திய அரசின் கொள்கையை ஒட்டித்தான் கழகம் செயல்பட்டு வருது.

பிரணாப் முகர்ஜி : பின்னே, எம்.பி. பதவிகளை ராஜினாமா பண்ணிடுவோம்னு, மத்திய அரசுக்கு எதிரா தீர்மானம் போட்டிருக்கீங்களே.... :o

கருணாநிதி : மத்திய அரசோடு நாங்க மோதறதும் புதுசு இல்லையே. அந்தக் காலத்திலேயே மோதியிருக்கோமே.

பிரணாப் முகர்ஜி : சரி விடுங்க.... :(

கருணாநிதி : அப்படி வாங்க வழிக்கு. இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கா விட்டால், இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல,

இங்கேயிருக்கிற தமிழர்களும் சாவோம்னு பொதுக்கூட்டத்திலே நான் பேசினது மத்திய அரசு கவனத்துக்கு வந்ததா?

பிரணாப் முகர்ஜி : அதைக் கேட்டு பிரதமர் ரொம்ப வருத்தப்பட்டாருன்னு சொன்னேனே....

கருணாநிதி : அதுபோதும். அதுக்காகத்தான் அப்படிப் பேசினேன்.

பிரணாப் முகர்ஜி : சரி. பொதுக்கூட்டம் தான் போட்டீங்களே. அப்புறம் ஏன், மக்களை மத்திய அரசுக்கு தந்தி அனுப்பச் சொன்னீங்க? அதனாலே என்ன பிரயோஜனம்?

கருணாநிதி : இதே சந்தேகம்தான் எனக்கும் வந்தது. அதனாலேதான் தந்தி அனுப்பினது போதாதுன்னு, அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினேன்.

பிரணாப் முகர்ஜி : :blink: சரி. தீர்மானங்களை அனுப்பின பிறகு, மனிதச் சங்கிலி எதுக்கு நடத்தினீங்க?

கருணாநிதி : தீர்மானங்களை நீங்க படிச்சீங்களா இல்லையான்னு தெரியலை. அதுக்காகத்தான் மனிதச் சங்கிலி. அடுத்ததா ஒரு கோடி கையெழுத்து வாங்கி அனுப்பலாம்னு இருந்தோம். அதுக்குள்ளே நீங்களே வந்துட்டீங்க. இலங்கையிலே அமைதி ஏற்படுத்த என்ன செய்யணும்னு மத்திய அரசுக்குத் தெரியும். அதுக்காகத்தான் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினேன்.

பிரணாப் முகர்ஜி : நாற்பதாண்டு கால போராட்டத்தை நாலு நாளிலே நிறுத்திட முடியாது.

கருணாநிதி : :lol: அது எனக்குத் தெரியாதா? அதனாலதான் மத்திய அரசுக்கு 14 நாட்கள் அவகாசம் கொடுத்தோம்.

பிரணாப் முகர்ஜி : தீர்மானங்களைப் படிச்சுப் பார்த்தோம். "ஈழத்தில் அமைதியும் சக வாழ்வும் திரும்ப, உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கணும்'னு முதல் தீர்மானம் சொல்லுது. அதுக்கு இலங்கை அரசுதான் நடவடிக்கை எடுக்க முடியும். எடுப்போம்னு ராஜபக்ஷே பிரதமர் கிட்டே உறுதியளிச்சிருக்காரு.

கருணாநிதி : அது போதுமே. இனிமே இலங்கையிலே குண்டு வெடிக்காதே. பொதுவா, சிங்கள வெறியர்கள் பேச்சை நாங்க நம்பற வழக்கம் இல்லை. ஆனா, நீங்க சோனியா தூதுவரா வந்து சொல்றதாலே நம்பறேன். இலங்கை ராணுவத்துக்கு மத்திய அரசு ஆயுத உதவி செய்யக்கூடாதுன்னு தீர்மானம் போட்டிருந்தோமே!

பிரணாப் முகர்ஜி : அந்த விஷயத்தையும் மத்திய அரசு உரிய முறையில் பரிசீலிக்கும்னு பிரதமர் சொல்லியிருக்காரு.

கருணாநிதி : ரொம்ப நன்றி. இதன் விளைவாக, இனி இலங்கையிலே அழுகுரல் கேட்காது, தமிழர்கள் பட்ட பாடு வீண் போகலைன்னு நினைக்கும்போது ரொம்பப் பெருமையா இருக்குது. உணவு, மருந்துப் பொருள்களை செஞ்சிலுவைச் சங்கம் மூலமாகத்தான் கொடுக்கணும்னு தீர்மானம் போட்டிருக்கோம். மத்திய அரசு என்ன முடிவெடுத்திருக்குதுன்னு தெரிஞ்சா அதை வரவேற்கத் தயாரா இருக்கேன்.

பிரணாப் முகர்ஜி : உணவு, மருந்துப் பொருட்களை இலங்கை அரசிடம்தான் இந்திய அரசு ஒப்படைக்க முடியும். அதை எப்படி விநியோகிக்கணும்னு முடிவெடுக்கிற பொறுப்பு இலங்கை அரசுக்கு இருக்குது.

கருணாநிதி : அதாவது ராஜபக்ஷே பொறுப்போட நடந்துக்கணும்னு

மன்மோகன் சிங் தொலைபேசியிலே சொல்லிடுவாருன்னு சொல்லவர்றீங்க. அதானே? இந்த நடவடிக்கையைத்தான் நாங்க எதிர்பார்த்தோம். தமிழ் இனம் அழியாதபடி

தடுத்துட்டீங்க.

பிரணாப் முகர்ஜி : மத்திய அரசு எடுக்கிற நடவடிக்கைகள் நிஜமாவே உங்களுக்கு திருப்தி அளிக்குதா?

கருணாநிதி : திருப்தி அடைஞ்சாத்தானே வெற்றியா கொண்டாட முடியும்? அந்தக் கோணத்திலே பார்க்கும்போது திருப்திதான். விலைவாசி உயர்வு, மின்வெட்டு, அமைச்சர்கள் மீதான புகார்கள் எல்லாத்தையும் சமாளிக்க – இந்த வெற்றியைப் பயன்படுத்திக்க முடியுமே.

பிரணாப் முகர்ஜி : இலங்கைத் தமிழர்கள் பலியாகறதை நிறுத்தறது கஷ்டம். அதை யாரும் பிரச்சனையாக்காம நீங்கதான் பாத்துக்கணும்.

கருணாநிதி : அப்போ, "இலங்கைத் தமிழர் பிரச்சனையில் சில கட்சிகள் நம்மோடு ஓரணியில் திரளாமல் குறுக்குசால் ஓட்டியதன் விளைவை, இலங்கைத் தமிழர்கள் அனுபவிக்கிறார்கள்'னு அறிக்கை விட்டு சமாளிக்க வேண்டியதுதான்.

பிரணாப் முகர்ஜி : மறுபடியும் மீனவர்கள் கொல்லப்பட்டா, மத்திய அரசுக்கு எதிரா எதுவும் செய்யமாட்டீங்களே...

கருணாநிதி : பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் அஞ்சாறு மாசம்தானே இருக்குது? அதுவரைக்கும் வீரமாவும், சோகமாவும் மாத்தி மாத்தி கவிதை எழுதி காலத்தைக் கடத்திடறேன்.

பிரணாப் முகர்ஜி : இலங்கையிலே போர் தொடர்ந்துகிட்டுத்தான் இருக்கும். ஆட்சிக்கு ஆபத்து ஏற்படற மாதிரி நடவடிக்கை எடுக்க மாட்டீங்களே?

கருணாநிதி : சேச்சே! "அம்மையார் ஆட்சிக் காலத்திலும் இலங்கையில் போர்

நடந்துள்ளது. அப்போது வாய் மூடிக் கிடந்தவர்கள் இப்போது பிரச்சனை செய்கிறார்கள் என்றால் – புராணிகர்கள் மொழியில் கூறுவதானால் – என் ஜாதகம்தான் காரணம்'னு சொல்லிடறேன்.

பிரணாப் முகர்ஜி : அப்ப நான் புறப்படறேன். உங்க ஆட்சியிலே இருக்கிற குறைகளை விமர்சிக்காம நாங்க ஆதரிக்கிறோம். அதே மாதிரி மத்திய அரசு குறைகளை நீங்க பெரிசுபடுத்தக் கூடாது.

கருணாநிதி : அந்தக் கூட்டாட்சித் தத்துவப்படிதான் நடக்கிறேன்! இருந்தாலும், தமிழ் உணர்வு திடீர் திடீர்னு உறுத்துது. இலங்கைப் பிரச்சனை சம்பந்தமா, ஏதாவது உறுதி மொழி குடுத்துட்டுப் போங்களேன்.

பிரணாப் முகர்ஜி : நம்ம கூட்டணி தொடரும். உங்க ஆட்சியிலே பங்கு கேட்கமாட்டோம். உங்க விருப்பப்படிதான் மத்திய ஆட்சி நடக்கும்னு சோனியா உறுதி அளிச்சிருக்காங்க...

சுட்ட இணையம்: Thatstamil.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.