Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா தமிழ்வன் (Tamil One) தொலைக்காட்சி: ஓர் சிறு விமர்சனம்!

Featured Replies

கனடா தமிழ்வன் (Tamil One) தொலைக்காட்சி: ஓர் சிறு விமர்சனம்

இனிய வணக்கங்கள்,

நான் கொஞ்சக் காலத்துக்கு முன்னம் கனடா தமிழ்விசன் தொலைக்காட்சி பற்றிய ஓர் சிறிய பதிவை யாழில போட்டு இருந்தன். கனடாவில இருக்கிற இன்னொரு தமிழ் தொலைக்காட்சியான தமிழ்வன் பற்றிய ஓர் பதிவை எழுதலாம் எண்டு கொஞ்சக்காலமாக யோசிச்சு இருந்து கடைசியில அந்த எண்ணம் இண்டைக்கு கைகூடி இருக்கிது. சரி, இனி கதைக்கு வருவம்...

நாங்கள் வீட்டில கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியை அது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில இருந்து வச்சு இருக்கிறம். இதேமாதிரி கனடா தமிழ்வன் தொலைக்காட்சியையும் அது ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப காலத்தில இருந்து வச்சு இருந்தம். ஆனால் Cable கட்டணம் அதிக அளவில வரத்துவங்கினதால தமிழ்வன் தொலைக்காட்சியை கொஞ்சக்காலமாய் நிறுத்தி இருந்தம். எண்டாலும்..

எனது பெற்றோருக்கு தொலைக்காட்சி தவிர வேறு பொழுதுபோக்கு ஒண்டும் இந்தக்குளிருக்க கிடைக்கிறது கஸ்டம் எண்டுறதாலயும், மற்றது எங்கட குடும்பத்தினர் கடந்த 35 வருசங்களாக ஞானவழிமுறை பற்றி போதிக்கின்ற குருமகராஜி எனப்படுகின்ற ஓர் ஆசானிண்ட அறிவுரைகளை - வாழ்வியல் சிந்தனைகளை காதுகொடுத்துகேட்டு / பின்பற்றி வருகிறதாலையும் - அவர்பற்றிய விபரணம் ஒவ்வொரு கிழமையும் ஞாயிற்றுக்கிழமை காலை பத்துமணிக்கு தமிழ்வன் தொலைக்காட்சியில போறதாலையும் (உந்தநேரம் பற்றின தகவலை இப்ப அம்மா டங் எண்டு சொன்னா..) கனடா தமிழ்வன் தொலைக்காட்சிக்கு மீண்டும் சந்தாதாரராகி பார்த்து - நிகழ்ச்சிகளை ரசிச்சு வருகிறம்.

இதர ஆங்கில, வேற்று மொழி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கள் தவிர எங்கட வீட்டில மொத்தம் மூண்டு தமிழ் தொலைக்காட்சிகள் இருக்கிது. ( ஆக மூண்டுதானோ எண்டு கேட்கக்கூடாது. ஐரோப்பாவில இருக்கிறமாதிரி கள்ள விளையாட்டுக்கள் செய்ய இஞ்ச வசதி இல்லை. அத்தோட செய்மதிக்கால கண்டதையும் பார்க்கிறதுக்கு கறிச்சட்டியை - Dish - பூட்டுறதுக்கு வீட்டில வசதியும் இருக்கவேணும்). அப்ப என்ன எண்டால் நாங்கள் இவற்றோட ஜெயா தொலைக்காட்சியும் வச்சு இருக்கிறம்.

என்ன இருந்தாலும்... முதலாவது விசயமாய் சொல்லவேண்டியது ஜெயா தொலைக்காட்சிக்குத்தான் நான் மூண்டு தொலைக்காட்சிகளிலையும் சிறந்த தொலைக்காட்சி எண்டு மணிமகுடம் சூட்டுவன். அவர்களிட்ட அதிகளவு வளம் இருக்கிது. மற்றது, அவர்களிண்ட நிகழ்ச்சிகள் பல்வேறு துறைகளில சிறந்த அனுபவம் வாய்ந்த நிபுணர்களால மிகச்சிறப்பான முறையில தயாரிக்கப்படுகிது. தாயகம் சம்மந்தமாக மிகவும் கவலையை ஏற்படுத்தக்கூடியவகையில மிகத்தவறான பார்வையை ஜெயா தொலைக்காட்சி வச்சு இருக்கிது எண்டுறது தவிர, அதில குறைசொல்லும்படியாய் வேற ஒண்டும் பெருசாய் இல்லை. எங்கட தொலைக்காட்சிகள் அவர்களிட்ட படிக்கவேண்டிய விசயங்கள் ஏராளம் இருக்கிது. பிறகு ஒரு சந்தர்ப்பத்தில வசதிவரேக்க அதுகள் பற்றி சொல்லுறன். அடுத்ததாக..

கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியை எடுத்தால் தாயகம், எங்கட கலைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தம்மால முடியுமான அளவு நல்லாய் செய்து வாறீனம். அவர்கள் பாராட்டப்படவேணும். குறிப்பாக Cross Roads எண்டு ஞாயிற்றுக்கிழமைகளில போகின்ற நிகழ்ச்சி என்னை மிகவும் கவர்ந்து இருக்கிது. இதேமாதிரி ஒளிக்கீற்று நிகழ்ச்சியையும் சொல்லலாம். மிக நன்றாக செய்கின்றார்கள். அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் கஜனுக்கு நான் முந்தி ஒருக்கால் கதைக்கேக்க பாராட்டு தெரிவிச்சு இருந்தன். ஒளிக்கீற்று நிகழ்ச்சியிண்ட சிறப்பு அம்சமாய் கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியினர் அண்மையில விருது வழங்கல் நிகழ்ச்சி ஒண்டையும் செய்து இருந்திச்சீனம். நீங்களும் பார்த்து இருப்பீங்கள் எண்டு நினைக்கிறன். யாழ் அஜீவன் அண்ணா சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை தேர்ந்து எடுத்து இருந்தார். இதேமாதிரி பல நல்ல நிகழ்ச்சிகள் எல்லாம் தமிழ் விசனில இருக்கிது. சரி அப்பிடி எண்டால்...

இந்த கனடா தமிழ்வன் தொலைக்காட்சியில இருக்கிற விசேசம் என்ன? அதைப்பற்றி ஒண்டும் பெரிசாய் கதைக்காமல் நான் ஏன் ஜெயா தொலைக்காட்சியையும், தமிழ்விசன் தொலைக்காட்சியையும் ஆகா ஓகோ எண்டு புகழ்ந்துகொண்டு இருக்கிறன் எண்டு நீங்கள் கோவிக்கக்கூடாது. தமிழ்வன் பற்றி இனி முழுதாய் ஆராய இப்ப.. இந்தா.. களத்துக்க குதிக்கிறன்..

தமிழ்வன் தொலைக்காட்சி பற்றி ஒரு வசனத்தில விமர்சனம் சொல்லிறதாய் இருந்தால்.. மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் ஆனால் அவற்றை உச்சரீதியாக பயன்படுத்தி மிகத்தரமான நிகழ்ச்சிகளை கனடாவில தருகின்ற தமிழ் தொலைக்காட்சி எண்டு சொல்லலாம். எங்கட ஆக்களிட்ட மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் இருக்கிறதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல தரமான நிகழ்ச்சிகளையோ இல்லாட்டிக்கு வித்தியாசம், வித்தியாசமாய் விதம்விதமான நிகழ்ச்சிகளையோ தாறது கடினமான வேலைதான். இந்தியாவில இருக்கிற தமிழ் தொலைக்காட்சிகளோட போட்டி போடுறது எண்டால் எங்கட ஆக்களுக்கு மிகவும் சிரமமான வேலைதான். ஆனாலும்..

தமிழ்வன் தொலைக்காட்சியை பொறுத்த அளவில பார்வையாளர்களை திருப்திப்படுத்தக்கூடிய அளவுக்கு அவர்களிண்ட சேவை இருக்கிது எண்டு நிச்சயமாய் சொல்லலாம். கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியோட ஒப்பீட்டளவில பார்க்கேக்க கனடா தமிழ்வன் தொலைக்காட்சி கனடாவுக்கு உள்ள நடைபெறுகின்ற நம்மவர் விசயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதிக அளவில நம்மவர் நிகழ்வுகளை படம்பிடிச்சு காட்டுது எண்டும் சொல்லலாம். தமிழ்விசனும் எங்கட ஆக்களிண்ட கனடா நிகழ்வுகளை படம்பிடிச்சு காட்டுவீனம்தான். நான் இல்லை எண்டு சொல்ல இல்லை. ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள், வசதிகளோட ஒப்பீடு செய்து பார்கேக்க தமிழ்வன் தொலைக்காட்சி இந்தவிசயத்தில தமிழ்விசனை விட அதிக சேவையை செய்யுது எண்டு சொல்லவேணும்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் எண்டு சொல்லுவீனம். எனக்கு அதிக அளவில தமிழ்வன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க வசதி கிடைக்க இல்லை எண்டாலும்... அண்மையில பார்த்த சில நிகழ்ச்சிகளிண்ட அடிப்படையில தமிழ்வன்னை அளவுகோலிடுறது பொருத்தமாய் இருக்கும் எண்டு நினைக்கிறன்.

அதுக்கு முன்னம் ஒரு விசயம்... இப்ப கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியில On Demand எண்டு வலைத்தளத்துகாலயே அவர்கள் நிகழ்ச்சியை கண்டு களிக்க வசதி இருக்கிது. ஆனால் இதன் முன்னோடிகள் எண்டு தமிழ்வன் தொலைக்காட்சியைதான் சொல்லவேணும். ஏன் எண்டால் தமிழ்விசன் அண்மையில சிறிது காலத்துக்கு முன்னம்தான் இந்த வசதியை கொண்டு வந்திச்சிது. அதுவும் காசுகட்ட வேணும் எண்டு நினைக்கிறன். ஆனால்.. தமிழ்வன் தொலைக்காட்சியை நான் நினைக்கிறன் ரெண்டு வருசங்களுக்கு முன்னமே இலவசமாக வலைத்தளத்தில பார்த்து இருக்கிறன். வலைத்தளத்தில முதன்முதலாக ஒரு தமிழ் தொலைக்காட்சியை நேரடியாக live ஆக பார்த்தது எனக்கு நல்லதொரு அனுபவமாய் அப்போது இருந்திச்சிது. இப்பவும் வலைத்தளம் மூலம் தமிழ்வன் தொலைக்காட்சியை நீங்கள் பார்க்கமுடியும் எண்டு நினைக்கிறன். நான் அண்மையில தமிழ்வன் தொலைக்காட்சி வலைத்தளத்துக்கு போக இல்லை. இதனால சரியாக சொல்லத்தெரிய இல்லை. (On Demand எண்டுறதுக்கும் live எண்டுறதுக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிது. நீங்களே மிச்சம் இந்த ஆராய்ச்சிகளை செய்துகொள்ளுங்கோ).

இந்த பிரபலமான ஆடு விளம்பரத்தை எல்லாரும் பார்த்து இருப்பீங்கள். 'மெய்யே ஆடு.. ' எண்டு துவங்கி கடைசியில 'சிறந்த தரமான ஆட்டு இறைச்சிகளுக்கு நீங்கள் நாடவேண்டிய இடம் யோகாஸ்' எண்டு முடியும். இந்த விளம்பரத்தில ஆட்டோட கதைக்கிறவர்தான் தமிழ்வன் தொலைக்காட்சியிண்ட நாயகன் எண்டு சொல்லலாம் (அதுக்காக இதை One Man Show எண்டு நீங்கள் பிழையாக விளங்கிக் கொள்ளக்கூடாது).

நான் கொஞ்ச நாளைக்கு முன்னம் 'இதுதாண்டா இம்சை' எண்டு ஒரு சூப்பரான நம்மோட கலைஞர்கள் வழங்கிற நிகழ்ச்சியை தமிழ்வன்னில பார்த்தன். அருமையாய் இருந்திச்சிது. நீங்கள் எல்லாரும் சன் ரீவியில போகிற அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியை பார்த்து இருப்பீங்கள். அவர்கள் எவ்வளவு வளங்கள், வசதிகளை பாவிச்சு அந்த நிகழ்ச்சியை உருவாக்குகிறீனம் எண்டு அதை பார்க்கும்போதே விளங்கிக்கொள்ளலாம். ஆனால்.. 'இதுதாண்டா இம்சை' நிகழ்ச்சியில என்னை மிகவும் கவர்ந்த அம்சம் என்ன எண்டால் சும்மா ரெண்டுபேர் வீட்டில சொகுசு கதிரைகளில சாவகாசமாய் குந்தி இருந்து ஆளோட ஆள் கதைச்சுக்கொண்டு இருந்திச்சீனம். நல்ல நகைச்சுவையான நிகழ்ச்சி எண்டுறது தவிர, பல்வேறுவிதமான சிந்தனைகளையும் அந்த நிகழ்ச்சி மூலம் என்னால கிரகிச்சு விளங்கக்கூடியதாக இருந்திச்சிது.

அண்டைக்கு நான் பார்த்த Episode இல என்ன நடந்திச்சிது எண்டால்.. அந்த யோகாஸ் ஆடு விளம்பரத்தில வாற அண்ணையரும், இன்னொருத்தரும் அப்பாவும், மகனுமாய் வீட்டில இருந்து உரையாடிக்கொண்டு இருந்திச்சீனம். கருப்பொருள் என்ன எண்டால் மகன் வாகனங்கள் எல்லாம் தண்ணியில (Water.. மற்றத்தண்ணி இல்லை) ஓடுறமாதிரி ஒரு புது device ஒண்டை கண்டுபிடிச்சுப்போட்டாராம். அப்ப அதை வச்சு பெரிய ஒரு பணக்காரனாய் வாறதுக்கு அப்பரிட்ட ஆலோசனைகள் கேட்டுகொண்டு இருக்கிறார். அப்பாவிண்டதும் மகனிண்டதுமான சிந்தனைகள் - தாங்கள் Lake Ontarioவை விலைக்கு வாங்கி - இதனால கடைசியில அமெரிக்கா கனடாவை ஆக்கிரமிச்சு - பிறகு இஞ்ச இருந்து தமிழ் அகதிகள் திரும்பவும் சிறீ லங்காவுக்கு போகிற அளவுக்கு - இப்பிடி உரையாடல் மிக ஆழமாய் போச்சிது. இரண்டு கலைஞர்களும் கதைச்சது ஏற்கனவே தயார்ப்படுத்தி செய்த சம்பாசணை மாதிரி எனக்கு தெரிய இல்லை. மிகவும் இயல்பாய், நல்ல கற்பனை வளத்தோட, நகைச்சுவையாக இருந்தாலும் ஆழமான பல சிந்தனைகளோட, சோர்வு ஒண்டையும் ஏற்படுத்தாமல் நிகழ்ச்சியை செய்திச்சீனம் (அதாவது சன்ரீவியிண்ட அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியை பார்க்கேக்க கிடைக்கிறதுக்கு சமமான அனுபவம் எனக்கு கிடைச்சிது).

எங்கட கலைஞர்களோ அல்லாட்டிக்கு அவர்கள் நிகழ்ச்சிகளோ சரியான முறையில எம்மவர்கள் மத்தியில முன்னிலைப்படுத்தப்படுவது இல்லை. எம்மத்தியில காணப்படுகின்ற இந்தக்குறைபாடு நீக்கப்பட்டால் நிச்சயம் தமிழ்நாட்டு கலைஞர்கள் மாதிரி எங்கட கலைஞர்களும் பல்வேறு கலைகளில ஈடுபடுறதை தங்கட முழுநேரத் தொழிலாக செய்து காசு சம்பாதிக்க முடியும். இந்த 'இதுதாண்டா இம்சை' நிகழ்ச்சியை அண்டைக்கு பார்த்தபோது எனக்கு இந்த எண்ணம்தான் மனதில வந்திச்சிது. சன்ரீவியில வருகிற அசத்தப்போவது யாரு கலைஞர்களை விடவும் திறமையான பல கலைஞர்கள் எம்மத்தியில இருக்கிறீனம். ஆனால் நாங்கள்தான் அவர்களை கண்டுகொள்ளுறதோ, உற்சாகம் கொடுக்கிறதோ இல்லை.

பிறகு தமிழ்வன்னில இன்னொரு நிகழ்ச்சி பார்த்தன். இந்த நிகழ்ச்சியிண்ட பெயர் தெரிய இல்லை. ரெண்டு வைத்தியர்களோட ஒரு அம்மா உரையாடல் செய்தா. அன்றைய உரையாடலில இந்த குடற்புண் (stomach ulcer) சம்மந்தமாகவும், ஒவ்வாமை (allergy) சம்மந்தமாகவும் மிகவும் பயனுள்ள தகவல்கள் பகிரப்பட்டிச்சிது. நாளாந்த வாழ்வில எல்லாரும் கட்டாயம் அறிஞ்சு இருக்கவேண்டிய பல விசயங்கள் பற்றி எங்கட வைத்தியர்கள் முக்கியமான கருத்துக்களை சொல்லி இருந்திச்சீனம். ஒவ்வாமை பற்றி ஒரு வைத்தியர் தான் இயற்றின குறள் ஒண்டும் சொன்னார். அதாவது எங்கட எங்கட ஒவ்வாமைகள் பற்றி நாங்கள் அறிஞ்சு இருக்கிறதோட மட்டும் இல்லாமல் எங்களில ஒவ்வாமையை ஏற்படுத்துகிற காரணிகளை நாங்கள் தவிர்க்கவும் வேணும் எண்டு அதில சொல்லி இருந்தார். இந்த நிகழ்ச்சியை பார்த்தபோது எனக்கு வயிற்றை கலக்கின ஒரு விசயம் என்ன எண்டால்...

குடற்புண் இருக்கிதுதானே? நேரத்துக்கு ஒழுங்காய் சாப்பிடாட்டிக்கு குடற்புண் வரும். அத்தோட அதிக மன அழுத்தம் ஏற்பட்டாலும் குடற்புண் வருமாம். அப்ப வைத்தியர் என்ன சொன்னார் எண்டால்... குடற்புண் வரேக்க ஒரு நிலையில குடலில சுரக்கிற அமிலங்கள் காரணமாய் குடலில ஓட்டை வந்திடுமாம். பிறகு நாங்கள் சாப்பிடுற சாப்பாடுகள் குடலைவிட்டு ஓட்டைக்கால வெளியேறி உள்ளுக்க கொட்டுப்படுமாம். இதனால உயிர் ஆபத்துக்கள் ஏற்படும் எண்டு சொல்லி இருந்தார். குடற்புண் புற்றுநோய் ஏற்படவும் காரணமாய் அமையும் எண்டு சொல்லி இருந்தார். இந்த நிகழ்ச்சியை பார்த்தபிறகு நான் நேரத்துக்கு ஒழுங்காய் சாப்பிடுறது. எனக்கு இன்னமும் குடற்புண் எண்டு ஒரு கோதாரியும் வரவில்லை - நான் தப்பீட்டன் எண்டு நினைச்சு ஆறுதல்பட்டுக்கொண்டன்.

எங்கட ஆக்கள் தேத்தண்ணி, கோப்பியை அளவுக்கு அதிகம் குடிக்கிறதால வரக்கூடிய ஆபத்துக்கள் பற்றியும் வைத்தியர் இந்த உடல் நலம் பற்றிய நிகழ்ச்சியில சொல்லி இருந்தார். இப்ப பொதுவாக ஒரு நாளைக்கு நாலைஞ்சு தடவைகள் நடுத்தர வசதியுள்ள ஆக்கள் குடிக்கிற TimHorton கோப்பியும், வசதி படைச்ச ஆக்கள் குடிக்கிற StarBucks கோப்பியும் எங்கட உடல் நலத்தில ஏற்படுத்தக்கூடிய தீய விளைவுகள் பற்றியும் வைத்தியர் அழகாய் விபரிச்சு இருந்தார். மிகவும் பயனுள்ள நிகழ்ச்சியாய் எனக்கு இது தென்பட்டிச்சிது. ஒரு விசயம் சொல்லவேணும் - அதாவது இப்பிடியான பயனுள்ள நிகழ்ச்சிகளை பார்க்க எங்களுக்கு முதலில கொஞ்சம் பொறுமை வேணும். பக்கத்து தொலைக்காட்சியில ஒரு சீரியல்போகேக்க இல்லாட்டிக்கு ஒரு தமிழ்ப்படம் போகேக்க இஞ்சால இப்பிடி ஒரு நிகழ்ச்சி போனால் குரங்கு மனம் எப்பவும் சீரியலை இல்லாட்டிக்கு படத்தைத்தான் பார்க்க முயற்சிக்கும். நான் இதை ஆர்வத்தோட பார்க்கத்துவங்கினவுடன கொஞ்ச நேரத்தில அம்மா டிங் எண்டு அங்கால அறையுக்க இருந்து Remoteமூலம் channelஐ மாத்தினா. நான் இஞ்சால hallக்க இருக்கிற இன்னொரு தொலைக்காட்சிக்கு முன்னால குந்தி இருந்து ஒரு சவுண்டுவிட்டு (ஒரு சின்னக் கத்தல்..) ஒரு அறிவுரையும் எடுத்துவிட திரும்பவும் படக் எண்டு இஞ்சால channelக்கு மாத்திவிட்டா. நிகழ்ச்சியை நாங்கள் எல்லாரும் முழுமையாய் பார்த்தம். எங்கட வாழ்க்கைக்கு பிரயோசனமான நிகழ்ச்சியாய் திகழ்ந்திச்சிது.

தமிழ் வன் தொலைக்காட்சியில இண்டைக்கு ஒரு நிகழ்ச்சி பார்த்தம். இதுவும் நிகழ்ச்சியிண்ட பெயர் தெரிய இல்லை. ஓர் வயதுமுதிர்ந்த அம்மா படத்தில கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கேட்டு 'மெய்யே ஆடு' விளம்பரத்தில வாற அண்ணையோட உரையாடுற நகைச்சுவையான நிகழ்ச்சி. சூப்பராய் இருந்திச்சிது. எங்கள் மத்தியில இருக்கிற வயதுமுதிர்ந்த கலைஞர்களுக்கு இப்பிடி எல்லாம் திறமை இருக்கிதோ எண்டு வியப்பாய் இருந்திச்சிது. இந்த அம்மாவுக்கு நான் நினைக்கிறன் சுமார் எழுவத்தைஞ்சு வயசு சொச்சம் இருக்கும். இந்த அம்மாவிண்ட நடிப்புக்கு முன்னால இருபத்து அஞ்சு வயசு குமரிகள் தோற்றுப்போய் விடுவீனம் எண்டு சொல்லலாம். வயசு முதிர்ந்து இருந்திச்சே ஒழிய அந்த அம்மாவிண்ட நடிப்பு பார்க்கிறதுக்கு அற்புதமாய் இருந்திச்சிது. வயது முதிர்ந்த ஒரு நடிகையால இப்பிடி நகைச்சுவையாக ஒரு நிகழ்ச்சியை செய்யமுடியும் எண்டு நான் நினைச்சு இருக்க இல்லை. அதுவும் சிரிக்க வைக்கக்கூடிய அளவுக்கு இயல்பாக நகைச்சுவையை ஏற்படுத்தி எங்கட கலைஞர் ஒருவர் நடிச்சதை - அதுவும் பெண் ஒருவர் நடிச்சதை நான் இப்பத்தான் அதுவும் தமிழ்வன் தொலைக்காட்சி மூலம்தான் முதன்முதலாக பார்த்து இருக்கிறன்.

இந்த நிகழ்ச்சியில அந்த அம்மா தான் முந்தி அரிச்சந்திரா நாடகத்தில நடிச்சதுகள் பற்றி எல்லாம் சொல்லி இருந்தா. தான், தனது துணைவர் எல்லாரும் முந்தி ஆமியில இருந்தவேளாம். ஆடல், பாடல் எண்டு அந்தக்காலத்தில தங்கட வாழ்க்கை ஒரே கொண்டாட்டமாய் இருந்திச்சிதாம். அதுகள் எல்லாம் உண்மையோ இல்லாட்டிக்கு குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சிக்காக அவ அப்பிடி நிறைய தகவல்கள் எல்லாம் சொன்னாவோ தெரியாது. ஆனால்.. அவவிண்ட நடிப்பை பார்த்தபோது பழுத்த அனுபவம் உள்ள நடிகை எண்டு மட்டும் விளங்கிச்சிது. இந்த நிகழ்ச்சியை தயாரிச்ச தமிழ்வன் தொலைக்காட்சிக்கு கட்டாயம் பாராட்டு தெரிவிக்க வேணும். இந்த அம்மாவினை வைத்து ஏனைய பல நல்ல நிகழ்ச்சிகளையும் செய்யுறதோட... இப்படி எங்களுக்கு தெரியாத ஆற்றல்கள் மிகுந்த இன்னும் பலப்பல கலைஞர்களை தமிழ்வன் தொலைக்காட்சி அறிமுகம் செய்துவைக்கவேணும் எண்டு கூறிக்கொள்ள விரும்புகிறன்.

இந்த நிகழ்ச்சியில நடந்த பகிடி ஒண்டு என்ன எண்டால் வழமையாக பகிடிவிட்டு ஆக்களை கடிச்சு குதறுகிற 'மெய்யே ஆடு' அண்ணையரையே அந்த அம்மா அந்தமாதிரி கேள்விகள் கேட்டு அவர் வாயை கொஞ்சநேரம் சாத்தவைச்சு, அவரை நல்லாய் குழப்பியும் போட்டா. அதை பார்கேக்க சரியான சிரிப்பாய் இருந்திச்சிது. இவர் அம்மா கட்டி இருந்த புடவை பற்றி ஏதோ கேட்க வெளிக்கிட அம்மாவுக்கு அவரில சரியான கோவம் வந்து அவர் நாக்கை புடுங்கிறமாதிரி கேள்விகள் கேட்டு அவரை நல்லாய் மடக்கிப்போட்டா. இந்தமாதிரி நிகழ்ச்சிகள் செய்யேக்க சிலவேளைகளில இப்பிடி எக்கச்சக்கமாய் மாட்டுப்படவேண்டி வருகிற ஆபத்து எல்லாருக்கும் இருக்கிது. சிலவேளைகளில உண்மையிலயே முகத்தில சாத்தலும் - தர்ம அடியும் வாங்கவேண்டி வரும். இதற்கு 'மெய்யே ஆடு' அண்ணா விதிவிலக்காக இருக்கமுடிய இல்லை. நல்லகாலம் அந்தஅம்மா அவருக்கு கைநீட்டுகிற அளவுக்கு போக இல்லை.

மேல சொன்ன இந்த நிகழ்ச்சியை பற்றி கதைக்கேக இப்ப எனக்கு ஒரு பழைய விசயம் நினைவுக்கு வந்திட்டிது. நான் முந்தி ஊருல இருக்கேக்க எனது நண்பன் ஒருவன் காரணமாக நாடகக்குழு ஒண்டோட தொடர்பு ஏற்பட்டு நானும் கொஞ்சக்காலம் அவர்களோட சுத்தித்திரியவேண்டி வந்திட்டிது. அப்ப ஒருக்கால் ஒரு நாடகம் செய்யுறதுக்கு எல்லாரும் கொக்குவிலில இருந்து வாகனத்தில ஏறி வடமராட்சிக்கு போனம். நான் நினைக்கிறன் அது நெல்லியடியாய் இருக்கவேணும். வாகனத்தில போகேக்க நாடகம் நடிக்கிற ரெண்டுபேருக்க ஒரு சின்ன முறுகல் - மனஸ்தாபம். அதில சுவாரசியமான விசயம் என்ன எண்டால் ரெண்டுபேரும் நாடகத்தில நடிக்கேக்க ஒருவரிண்ட முகத்தில இன்னொருத்தர் அறைகிற காட்சியும் இருந்திச்சிது. அப்ப என்ன நடந்திச்சிது எண்டால் அங்க நாடகம் நடக்கேக்க அவர் மற்றவருக்கு வாகனத்தில வரேக்க வந்த மனஸ்தாபம் காரணமாய் நாடகத்தோடு நாடகமாய் முகத்தில நல்லாய் இழுத்து சளார் எண்டு விலாசி கன்னத்தில பலமாய் அடிச்சுபோட்டார். எங்களுக்கு இஞ்சால மேடையிண்ட அருகில இதப்பார்க்க சரியான சிரிப்பாய் போச்சிது. அவர் நாடகத்தில மெல்லமாய் தட்டாமல் நல்ல பலமாய் முகத்தில அடிச்சுப்போட்டார். அடி வாங்கினவரும் ஒண்டும் செய்ய ஏலாமல் போச்சிது. நூற்றுக்கணக்கில சனம் முன்னால குந்தி இருந்து ஆர்வத்தோட நாடகத்தை பார்கேக்க அவர் உண்மையில நல்லாய் நோகும்படி அடிச்சாலும் இவர் என்ன செய்யுறது?

தமிழ்வன் தொலைக்காட்சி பற்றி மிச்சம் சொல்லிறது எண்டால் அவர்களிண்ட செய்திகளும் பரவாயில்லை. பலவிதமான தகவல்களை அறிஞ்சுகொள்ளக்கூடியதாய் இருக்கிது. கலைஞர் தொலைக்காட்சியில இருந்து பலதும் பத்துமான விசயங்களை - இஞ்ச யாழ் இணையத்தில ஆக்கள் வெட்டி ஒட்டுறது மாதிரி - அங்கையும் இதேகூத்து நடக்கிது. தமிழ்விசன், தமிழ்வன் எண்டு எல்லாம் இந்திய தமிழ் தொலைக்காட்சிகள் தயவில தங்கட காலத்தை ஓட்டவேண்டி இருக்கிறது கவலைக்குரிய ஓர் விசயம். அவர்களையே அப்படியே ஈயடிச்சான் கொப்பி எண்டு அதேமாதிரி பாணியில பிரதிபண்ணுறதும் ஆரோக்கியமான விசயம் இல்லை.

இப்ப உதாரணத்துக்கு சொன்னால்... தமிழ் சினிமா பாடல்கள் எண்டு பார்க்கேக்க... அங்க தமிழ்நாட்டில இருக்கிறவங்களே என்ன செய்யுறாங்கள் எண்டால் குறிப்பிட்ட சினிமா பாடல்களுக்கு நடனப்போட்டிகளில நடனம் ஆடேக்க திரையில வாறமாதிரியான அதேபாணியில ஆடாமல்.. கொஞ்சம் வித்தியாசமாக மேடைக்கு ஏற்றமாதிரி அதில பல மாற்றங்கள் செய்து ஆடுறாங்கள். ஆனால் எங்கட ஆக்கள் நடனப்போட்டிகளில என்ன செய்யப்பார்க்கிறது எண்டால் திரையில வாறமாதிரியான அதே ஆடல் அசைவுகளை - பாணியை பாவிச்சு மேடையில ஆடுறது. இஞ்ச கவனிக்கவேண்டிய விசயம் என்ன எண்டால் திரையுக்கு அழகாக இருக்கிற ஒரு விசயம் மேடையில அழகாக இருக்காது. திரையுக்கு ஏற்றமாதிரி செய்யப்பட்ட ஒரு விசயத்தை மாற்றங்கள் இல்லாது மேடைக்கு முன்னால இல்லாட்டிக்கு சின்னத்திரையுக்க கொண்டுவரேக்க நிறைய வித்தியாசங்கள் ஏற்படும். சிலது ஒரே விசயத்தை மேடை ரசிகர்களாக இருப்பவர்கள் விரும்பக்கூட மாட்டார்கள். இந்தவகையில..

தமிழ்நாட்டு சீரியலோ... படமோ... என்ன இழவோ... அதை பிரதி செய்து போட்டாலும்... எம்மவருக்கு - கனடா தமிழருக்கு ஏற்றவகையில பல மாற்றங்களை குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில ஏற்படுத்தினால் நல்லாய் இருக்கும் எண்டு நினைக்கிறன். தமிழ்நாட்டு விசயங்களை இஞ்ச அறிமுகம் செய்யேக்க அவர்கள் அங்க செய்யுற அதேபாணியில செய்யாமல் எம்மவருக்கு ஏற்றவகையில பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தி எங்கட தொலைக்காட்சிகள் - தமிழ்வன், தமிழ்விசன் நிகழ்ச்சிகள் செய்தால் அது எங்கட ஆக்களுக்கு நீண்டகால நோக்கில பலவிதமான பயன்களை கொண்டுவரும். அப்பிடி இல்லாமல் ஈயடிச்சான் கொப்பி எண்டு போனால் இது எதிர்காலத்தில தெரிஞ்சோ தெரியாமலோ பலவிதமான குழப்பங்களை - இன்னும் கேவலமான கலாச்சார அழிவுகளை ஏற்படுத்தும்.

தமிழ்வன் நிறைய தென் இந்திய தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை போடுறது. நான் அதுகளை பார்க்கிறது மிகவும் குறைவு. இதனால அவைகள்பற்றி வேற ஒண்டும் சொல்ல முடிய இல்லை. தமிழ்விசன் தொலைக்காட்சியை நீண்டகாலம் பார்த்து வருகிறதால அதில போற பலவிதமான நிகழ்ச்சிகளையும், கலைஞர்களையும் பற்றி தமிழ்வன் தொலைக்காட்சியை விட கொஞ்சம் அதிக அளவில எனக்கு தெரிஞ்சு இருந்திச்சிது. இதனால தமிழ்வன் தொலைக்காட்சியிண்ட கலைஞர்கள், நிகழ்ச்சிகள் பற்றி விரிவாக வேற ஒண்டும் என்னால சொல்ல முடிய இல்லை. மன்னிச்சுக்கொள்ளுங்கோ. இங்கு நீங்கள் யாராச்சும் தமிழ்வன் தொலைக்காட்சி பார்வையாளர்களாக இருந்தால் உங்கள் அனுபவங்களையும் இஞ்ச பகிர்ந்து கொள்ளுங்கோ.

கனடா தமிழ்வன் தொலைக்காட்சி வெற்றிகரமாக தனது பயணத்தை தொடர, கனடா தமிழருக்கு பலவித சேவைகளை வழங்கி மகிழ்விக்க, தாயக மக்கள், போராட்டத்துக்கு இன்னும் பல ஆதரவுகளை வழங்க வாழ்த்துகள்! நன்றி! வணக்கம்!

பி/கு:

1. கனடா தமிழ்விசன் தொலைக்காட்சி பற்றிய பழைய பதிவை பார்க்க இஞ்ச அழுத்துங்கோ

2. கனடா தமிழ்விசன் தொலைக்காட்சி செய்த ஒளிக்கீற்று 2008 விருதுகள் நிகழ்ச்சியை பார்க்க இஞ்ச அழுத்துங்கோ

3. கனடா தமிழ்வன் தொலைக்காட்சி வலைத்தளத்துக்கு போக இஞ்ச அழுத்துங்கோ

Edited by முரளி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடா தமிழ்வன் தொலைக்காட்சி வெற்றிகரமாக தனது பயணத்தை தொடர, தாயக மக்கள், போராட்டத்துக்கு இன்னும் பல ஆதரவுகளை வழங்க வாழ்த்துகள்! நன்றி! வணக்கம்!

நானும் கேள்விப்பட்டிருக்கிறன் ரிவிஜ யோட சேவைகளை வாழ்த்துக்கள் இன்னும் தாயகத்துக்கும் பல வழிகளில் ஆதரவு வழங்கவும் என்னோட வாழ்த்துக்கள். இதொட நம்மட நாட்டு கலைஞ்ஞர்களோட படைப்புக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது பாராட்டுக்கள்

நன்றி முரளி

சின்ன ஒருவேண்டுகோள் தாயகத்தில இப்ப இருக்கிற சூழ்நிலையில் நமது தாயக போராட்டத்தை வளப்படுத்திறதா அமைந்தால் இன்னும் நல்லாயிருக்கும் அத விட மக்கள் மத்தியில வர வர போராட்டத்தில இருக்கிற நம்பிக்கையேயில்ல அத உடைச்செறிற மாதிரி அமையவேண்டும் அதுதான் என் வேண்டுகோள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியத்தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோடு நிச்சயமாய் நம்முடையது ஒப்பீடு செய்ய இயலாது. அவர்களுக்கு அது முழுநேரத்தொழில் நம்மவர்களுக்கு தொழிலுக்கு மத்தியில் கலையையும் வளர்க்கவேண்டுமென்கின்ற ஆர்வம்.

முரளி,

எப்படி இவ்வளவையும் பொறுமையா எழுதினீங்களோ தெரியேல்லை. எனக்கு தமிழ் விஷன் தொலைக்காட்சி செய்தியை விட தமிழ்வண் செய்திதான் பிடிக்குது

நீங்க சொன்ன இதுதாண்டா இம்சை" நிகழ்ச்சியை நானும் பார்த்தனான் 'அப்பாவாக வாறவர் 'கணபதி ரவீந்திரன்" அவர்கள். நல்ல உச்சரிப்பு அவருடையது. மிகச்சிறந்த நடிகரும் கூட.

ஜெயாத்தொலைக்காட்சியில் ஒன்பது முப்பதுக்கு ஒலிபரப்பாகும் 20/20 நிகழ்ச்சி, ஜாக்பொட், என்னோடு பாட்டு பாடுங்கள் இவையெல்லாம் பிடிக்கும். அடுத்து குழந்தைப்பிள்ளைகளின் நடனம்/ பாட்டு..

நேரம் கிடைப்பது மிகக் குறைவு. உங்களின் ஆக்கபூர்வமான ஆராய்ச்சிக்கட்டுரை மிக நன்றாக இருக்கிறது.

தமிழ்வண் தொலைக்காட்சி குறித்தான உங்ளுடைய விமர்சனங்களோடு நானும் இணைந்துகொள்கிறேன், பார்வையாளர்களில் ஒருவனாக அல்ல.. அந்த நிறுவனத்தில் ஒருவனாக. முதலாவதாக, முரளி, புஸ்பாவிஜி, தமிழ்த்தங்கை.. உங்கள் விமர்சனங்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி. அடுத்து, சில கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் என்னால் பதில் சொல்லக்கூடியதாக இருக்கும் என நினைக்கிறேன்.

மிகமிகக் குறைந்த வளங்களோடும் தேவையற்ற பல நெருக்கடிகளோடும் போராடிக்கொண்டிருக்கும் தமிழ்வண் தொலைக்காட்சியின் முழுநேரப் பணியாளர்களாக இருப்பது (அடியேன் உட்பட) 4 பேர் மட்டும்தான். முதலீட்டு வளம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பதால் ஒவ்வொருவரும் எங்களால் முடிந்த அளவில் நிகழ்ச்சிகளைத் தர முயற்சிக்கிறோம்.

அண்மையில் சன் தொலைக்காட்சியின் வருகையோடு வியாபார ரீதியில் ஏற்பட்ட தாக்கத்தையடுத்து, கலைஞர் தொலைக்காட்சியுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை முழுமையாகப் பெற்றுக்கொண்டோம். அதன் காரணமாகவே கலைஞர் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் அதிகமாக இடம்பெறுகின்றன. சரியான முறையில் அந்த நிகழ்ச்சிகளுக்கான நேர ஒழுங்கமைப்பு இன்னமும் நிறைவுபெறாத நிலையில், எம்மவர் தயாரிப்புக்களை தற்காலிகமாக மட்டுப்படுத்தியிருக்கிறோம். விரைவில் சில புதிய நிகழ்ச்சிகளோடு எம்மவர் படைப்புக்கள் வலம்வரும்.

நேரடி ஒளிபரப்புக்கான வாகனம் தமிழ்வண் நிர்வாகத்திடம் இருப்பது ஒரு பலமாக இருக்கிறது. அதேபோல எங்களோடு இணைந்திருக்கும் கணபதி ரவீந்திரன் போன்ற அனுபவமும் திறமையும் மிக்க கலைஞர்களின் பங்களிப்பையும் கூறவேண்டும். இந்த இடத்தில் 'இதுதான்டா இம்சை" நிகழ்ச்சியைப்பற்றி ஒரு தகவல்-

நிகழ்ச்சிக்கான கருப்பொருள் என்னவென்பதும் அதில் பேசப்போகும் முக்கியமான விடயங்களும் மட்டுமே முற்கூட்டியே தீர்மானிக்கப்படும். ஆனால் வசனங்கள் இடையிடையே வரும் கடிகள் எல்லாம் அந்த நேரத்திலேயே எடுத்து விடுவதுதான். வயது முதிர்ந்த ஆச்சியின் அட்டகாசமும் 'இதுதான்டா இம்சை" நிகழ்ச்சியில் ஒன்றுதான்.

செய்திகளைப் பொறுத்தவரை அடியேனுடைய பொறுப்பில் கடந்த ஒரு வருடமாக தமிழ்வண் செய்திப்பிரிவு இருக்கிறது. அதற்காக ஒரு பெரிய குழுவை வைத்து நிர்வகிக்கிறேன் என்று அர்த்தப்படுத்திவிடாதீர்கள். கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல், இயக்கம் டி.ராஜேந்தர் என்று போடுவதுமாதிரி செய்தியில் அனைத்தும் நான்தான். முடிந்தவரை சரியான செய்திகளை நிறைவாகவே தர முயற்சிக்கிறேன். தனிமனிதனாக 7 நாட்களும் தலையை உடைக்கின்ற நிலைமாறி, குறைந்தது 03 பேராவது செய்திப்பிரிவுக்குக் கிடைத்தால் கலைஞர் தொலைக்காட்சிச் செய்திகளின் தயவைக் குறைத்து இன்னும் தரமாகத் தர முயற்சிக்கிறேன்.

அடுத்ததாக எங்களுக்குக் கொடுக்கப்பட்டுவரும் தேவையற்ற நெருக்கடிகள் குறித்தும் வேதனையுடன் குறிப்பிட்டாக வேண்டும். ஆரம்பகாலத்தில் தமிழ்வண் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்குச் சார்பானது என்றும், ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிதியுதவியில் செயற்படுவதாகவும் பல அவதூறுகள் பரப்பப்பட்டிருந்தன. பின்னர் தமிழ்த் தேசியம் சார்பான நிகழ்வுகளில் ஒருசில ஊடகங்களுக்குச் சார்பான செயற்பாட்டாளர்களே பங்குபற்றுவதால் நாங்கள் மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்டோம். பல இடங்களில் தமிழ்வண் உள்நுழைய அனுமதிக்கக்கூடாது என்ற கடுமையான உத்தரவுகளால் விரட்டியடிக்கப்பட்டதும் உண்டு. செய்திகளுக்காக தாயகத்திலிருந்து வரும் காணொளிகளை எங்களுக்குக் கிடைக்கவிடாமல் தடுக்கும் தீவிரசெயற்பாட்டாளர்களால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறேன். இப்போது எனக்கு ஏற்கனவே தெரிந்த சிலர் மூலமாகவும், இணையத்தளங்களில் கிடைக்கும் காணொளிகளைப் பதிவுசெய்தும் (வேறுவழியின்றி) செய்திகளிலும் 'பார்வைகள்" என்ற பெயரில் வழங்கும் செய்தித் தொகுப்பிலும் பயன்படுத்தி வருகிறேன். பொங்கு தமிழ் போன்ற நிகழ்வுகளைக்கூட நேரடி ஒளிபரப்பாக எல்லோர் மத்தியிலும் கொண்டுசெல்ல நாங்கள் எடுத்த முயற்சியும் அரை மணிநேரத்துக்குப் பின்னர் பலாத்காரமாக நிறுத்தப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக அண்மையில் ஸ்ரீலங்கா அணி கனடாவில் பங்குபற்றிய துடுப்பாட்டப் போட்டியை நேரடி ஒளிபரப்புச் செய்ய தமிழ்வண் நிறுவனத்தின் வாகனம் பயன்படுத்தப்பட்டதால் தமிழினத் துரோகிகள் என்று பட்டமளிக்கப்பட்டு எங்கள் கமராக்களும் சேதமாக்கப்பட்டன.

(தமிழ்வண் நிறுவன உரிமையாளரின் இன்னொரு நிறுவனமான SV Production சார்பில் ஏற்கனவே இன்னொரு நிறுவனத்தோடு செய்யப்பட்ட ஒப்பந்தப்படியே அந்த நேரடி ஒளிபரப்புக்கான வாகனம் வழங்கப்பட்டிருந்தது. கனடாவில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இவ்வாறான வாகனங்கள் இருப்பதால் அவ்வாறான சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் தமக்குள் இப்படியான ஒப்பந்தங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இப்படியாக CTV போன்ற நிறுவனங்களின் சில நேரடி ஒளிபரப்புக்களிலும் தமிழ்வண் வாகனம் பயன்படுத்தப்படுவதுண்டு)

இப்படியான வேதனை தரும் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்கினாலும் எங்களால் முடிந்ததைச் செய்துகொண்டிருக்கிறோம். இன்னும் வளங்களும் வாய்ப்புக்களும் வரும்போது அதிகமாக தேசியம் சார் நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கவும் தயாராக இருக்கிறோம். உண்மையில் கனடாவில் இருக்கின்ற சில இலட்சம் தமிழ் மக்களுக்காக ஒரு ஊடகத்தை ஆரம்பித்துக் கொண்டுநடத்துவது என்பதே சாதனைக்குரிய ஒன்று. இவ்வாறான நிலையில் அந்த ஊடகங்களோ அல்லது ஊடகம் சார்ந்தவர்களோ தமக்குள் ஒருவரையொருவர் காலை வார நினைப்பதும், கவிழ்த்துவிடுவதும் வேதனைக்குரியது. புரிந்துணர்வோடு ஒற்றுமையாகச் செயற்பட்டால் சாதிக்கக்கூடியது எவ்வளவோ இருக்கிறது. அப்படியான ஒருநிலை வரவேண்டும் என்பதே என்னுடைய தனிப்பட்ட விருப்பம். தொடர்ந்தும் உங்கள் விமர்சனங்களையும் கருத்துக்களையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். இந்த விமர்சனத்தை ஆரம்பித்து என்னுடைய எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள வழியேற்படுத்திய நண்பர் முரளிக்கு மீண்டும் என்னுடைய நன்றிகள்.

முரளியின் இனிமையான ஒரு கண்ணோட்டம் கனடா நாட்டு தொலைக்காட்சிகள் இரண்டு குறித்த ஒரு பார்வையைத் தந்திருக்கின்றன.

அடுத்து நக்கீரனின் வேதனையான எண்ணப் பகிர்வு பல உண்மைகளை நமக்கு எடுத்தியம்புகிறது.

ஈழத்தமிழன் தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிறானா? இல்லை

எவன் வந்தாலும் பரவாயில்லை : நம்மில் உள்ளவன் வரக்கூடாது என்று நினைக்கிறானா?

சம்பைக் கட்டுக் கட்டுபவர்கள் ஒட்டிக் கொள்கிறார்கள். உண்மையானவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள் என்பதே நிதர்சனம்.

அதனால் நல்ல நோக்கம் கொண்டவர்கள் விட்டுச் செல்கிறார்கள்.

இணைவுகளை உருவாக்க வேண்டியவர்களே பிரிவுகளை உருவாக்குகிறார்கள்.

அவை நமக்கும் நமது சமுதாயத்துக்கும் பெரும் தீங்குகளை விளைவிக்கும்.

அதை அந்த தகுதி படைத்தவர்கள் உணராமை பல கேடுகளுக்கே வித்திடும்.

அது காலத்தால் கூட திருப்பித் தரமுடியாததாகிவிடும்.

சிங்கள அடக்குமுறையாளர்கள் கிளிநொச்சியைக் கைப்பற்றிக் கொண்டாட்டங்கள் நடத்தியதை தங்கள் செய்தியில் 5 நிமிடங்களிற்கு மேல் காட்சிப்படுத்தி அவ்வெற்றியைக் கொண்டாடியவர்கள் தமிழ்வண் தொலைக்காட்சி நிறுவனத்தினர் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

சிங்கள அடக்குமுறையாளர்கள் கிளிநொச்சியைக் கைப்பற்றிக் கொண்டாட்டங்கள் நடத்தியதை தங்கள் செய்தியில் 5 நிமிடங்களிற்கு மேல் காட்சிப்படுத்தி அவ்வெற்றியைக் கொண்டாடியவர்கள் தமிழ்வண் தொலைக்காட்சி நிறுவனத்தினர் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி புஸ்ஸுக்கு வீசிய சப்பாத்து காட்சி அமெரிக்க தொலைக் காட்சிகளில் தொடர்ந்து வந்தது.

அது என்ன நடந்தது என்பதை சொல்லும் செய்தி.

அதுபோல இதை ஏன் செய்தியாக நாம் பார்க்க கூடாது?

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து ஊடகங்கள் மேல் காழ்ப்புணர்ச்சிகளைக் கொட்டாதீர்கள். செய்திகளைச் செய்திகளாகப் பாருங்கள். மட்டுப்படுத்தப்பட்ட குறுகிய பார்வைகளில் இருந்து விடுபடுங்கள். இரண்டு இடங்களில் தமிழ் வண் தொலைக்காட்சி ஊடகத்தை சரியான தெளிவில்லாமல் சிலர் சங்கடப்படுத்தியதை கண்ணால்க் கண்டிருக்கிறேன். எங்களுடைய ஊடகங்களை நாங்களே வெறுத்து பிளவுகளையும் பிரிவுகளையும் உருவாக்கி நாம் எந்த வெற்றியையும் பெற்றுவிட முடியாது.

நன்றி தலைவன், சுடர்..

சிங்கள அடக்குமுறையாளர்கள் கிளிநொச்சியைக் கைப்பற்றிக் கொண்டாட்டங்கள் நடத்தியதை தங்கள் செய்தியில் 5 நிமிடங்களிற்கு மேல் காட்சிப்படுத்தி அவ்வெற்றியைக் கொண்டாடியவர்கள் தமிழ்வண் தொலைக்காட்சி நிறுவனத்தினர் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

நண்பரே! சில விடயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். செய்தியென்பது விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பாற்பட்டது. கிளிநொச்சி ஸ்ரீலங்கா படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டது என்பதை யாருக்கும் ஒளித்து மறைத்து வைப்பதில் எந்தப் பயனுமில்லை. கிளிநொச்சி ஆக்கிரமிக்கப்பட்டது குறித்தான செய்தியில் பயன்படுத்தப்பட்ட காணொளி ஸ்ரீலங்கா அரசாங்கத் தரப்பால் வெளியிடப்பட்டதாயிருக்கலாம். (தாயகத்தின் காணொளி எங்களுக்குத் தடை செய்யப்பட்ட ஒன்று) ஆனால் செய்தியின் உள்ளடக்கம் என்னவென்பதைப் பார்ப்பவர்கள் தீர்மானித்திருப்பார்கள். தொடர்ச்சியாக செய்திகளை அவதானித்து வருபவர்களுக்கு கிளிநொச்சி ஆக்கிரமிக்கப்பட்டது தமிழ்வண் செய்தியில் கொண்டாடப்பட்டதா இல்லையா என்பதும், கிளிநொச்சி ஆக்கிரமிக்கப்பட்டது மட்டுந்தான் செய்தியில் இடம்பெற்றதா என்பதும் புரியும். நீங்கள் செய்ததைப்போல விதண்டாவாத விமர்சிப்புச் செய்யும் மனநிலை இங்கே பலரிடம் இருப்பதால்தான் எனக்குத் தெரிந்த ஊடகத்துறை விற்பன்னர்கள் பலர் கனடாவில் வந்து ஒதுங்கியே இருக்கிறார்கள்.

என்னுடைய தனிப்பட்ட பொறுப்பில் எந்தத் தலையீடுமின்றி தமிழ்வண் செய்திப்பிரிவு இருக்கிறது. ஸ்ரீலங்கா அரசை ஆதரிக்கவேண்டிய தேவை எதுவும் எம்மிடமில்லை. அதேநேரம் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு சார்பாகச் செயற்பட்டால் 04 பேரை மட்டும் வைத்துக்கொண்டு நாய்படாத பாடு படவேண்டியதில்லை. அவர்களிடம் தேவையானதை வாங்கிக்கொண்டு சுகபோகமாக இருந்திருக்கலாம்.

நானறிந்தவரை புலம்பெயர் நாடுகளில் தமிழ்த் தேசியத்துக்கு எதிராகச் செல்லும் பலர் தமிழ்த் தேசியத்தை குத்தகைக்கு எடுத்து வளர்ப்பதாகச் சொல்லிக்கொள்ளும் பெரியமனிதர்களால் உருவாக்கப்பட்டவர்களாகத் தான் இருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் எங்களையும் சேர்க்காதீர்கள். முயன்றாலும் முடியாது.

குறிப்பு - பொதுவாக இப்படியான விமர்சனங்களுக்குப் பதில் வழங்குவதைத் தவிர்த்தே வருகிறேன். ஆனாலும் ஆயிரக்கணக்கானவர்கள் பார்க்கும் யாழ் இணையத்தில் தவறான கருத்துக்கள் பரவக்கூடாது என்பதால் பதிலளித்தேன்.

செய்தி சொல்லப்படும் விதத்தில் இருக்கிறது!

......(தாயகத்தின் காணொளி எங்களுக்குத் தடை செய்யப்பட்ட ஒன்று) ...

நானறிந்தவரை புலம்பெயர் நாடுகளில் தமிழ்த் தேசியத்துக்கு எதிராகச் செல்லும் பலர் தமிழ்த் தேசியத்தை குத்தகைக்கு எடுத்து வளர்ப்பதாகச் சொல்லிக்கொள்ளும் பெரியமனிதர்களால் உருவாக்கப்பட்டவர்களாகத் தான் இருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் எங்களையும் சேர்க்காதீர்கள். முயன்றாலும் முடியாது.

தாயகத்தின் காணொளிகள் தடைசெய்யப்பட்டுள்ளது என்று சப்பை கொட்டுவதைத் தவிர்த்து அவற்றை சரியான வழிகளில் பெற முயற்சிக்கலாம். பிபிஸி செய்திச் சேவைக்குக் கூடக் கிடைக்கும் தாயக ஒளிப்படங்கள் தமிழர்களின் ஊடகம் என்று கூறிக்கொள்ளும் நீங்கள் பெற்றுக்கொள்வதற்கு தடையுள்ளது என்று கூறினால் அது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. அவ்வாறு இருப்பினும் ஈரோதொலைக்காட்சியினர் இலசவமாகவே தமது இணையத்தளத்தில் ஒளித் தொகுப்புக்களை தரவேற்றிக்கொள்கிறார்கள். அவர்களது இணையத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். அல்லது அவர்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு பெறமுயற்சிக்கலாம்.

மற்றைய தமிழ் ஊடகம் ஒன்றின் பெயர் உங்கள் திரைகளில் வரக்கூடாது என்று பிடிவாதம் பிடிப்பதை விடுத்து மற்றைய ஊடகங்களுடன் உறவை வளர்த்துக் கொள்ளலாம். அதுவே தமிழர் நலனிற்கு உகந்தது.

தமிழர் நலன் சார்ந்து சிந்திக்க முடியாதவர்கள் தாங்கள் தான் முதலாளிகளாக மாறவேண்டும் என்ற மனநிலையுடன் இருப்பவர்கள் அவை முடியாது போகுமிடத்து கூறிக்கொள்ளும் நொண்டிச்சாட்டு, தமிழ்த் தேசியத்தைக் குத்தகைக்கு வைத்துக்கொண்டு எங்களை தேசியத்துக்கு எதிரானவர்களாகக் காட்ட முனைகிறார்கள் என்பது.

மிகஅண்மையில் கூட, ஆழிப்பேரலையின் நான்காம் ஆண்டின் நிறைவையொட்டி ஓர் பொது அமைப்பினால் வெளியிடப்பட்ட ஆவண ஒளித்தொகுப்பினை அவர்களது அடையாளங்களை அகற்றி மூன்று தடவைகளிற்கு மேல் தமிழ்வண் தொலைக்காட்சி ஒளிபரப்பியிருந்தது. ஆவணப்படம் வெளிக்கொணரப்படவேண்டும் என்றே தயாரிக்கப்பட்டிருந்தாலும் அதில் அவ்வமைப்பின் முகவரியினை ஏன் திட்டமிட்டு மறைக்கவேண்டும். அதே ஆவணப்படம் ஏனைய ஊடகங்களில் அவ்வமைப்பின் முகவரியுடனேயே வெளிவந்திருந்தது. யூரியூப் இணையத்தளத்திலும் அவ்வொளித்தொகுப்பு இணைக்கபட்டிருந்தது.

நன்றி முரளி தரமான தங்கள் விமர்சனத்திற்கு. இந்த தொலைக்காட்சியை சுவிசிலிருக்கும் எனக்கு பார்க்கச் சந்தர்ப்பமில்லை. ஆனால் உங்கள் விமர்சனமும், நக்கீரனின் ஆதங்கமும் தொலைக்காட்சியைப் பார்த்தது போல் ஒரு உணர்வை உருவாக்கியுள்ளது.

நானறிந்தவரை புலம்பெயர் நாடுகளில் தமிழ்த் தேசியத்துக்கு எதிராகச் செல்லும் பலர் தமிழ்த் தேசியத்தை குத்தகைக்கு எடுத்து வளர்ப்பதாகச் சொல்லிக்கொள்ளும் பெரியமனிதர்களால் உருவாக்கப்பட்டவர்களாகத் தான் இருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் எங்களையும் சேர்க்காதீர்கள். முயன்றாலும் முடியாது.

மிகச் சரியாகச் சொன்னீர்கள். காய்க்கிற மரத்திற்கு தான் கல்லடி படும் என்று சொல்வார்கள். அதற்காக நீங்கள் துவண்டு விட வேண்டியதில்லை. துணிந்து நில்லுங்கள், தொடர்ந்து செல்லுங்கள். தோல்வி கிடையாது என்றும்.

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் ஊடகம் மூலம் தமிழ் உணர்வும் , தமிழ் மொழியும் வளர்க்க படுமாயின் ......அதுவே நீங்கள் நம் மண்ணுக்கு செய்யும் தொண்டு.

தோல்விகள் கண்டு துவளாமல் முன்னெடுத்து செல்லுங்கள். வளர்க உங்கள் பணி .

Edited by nillamathy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னுடைய தமிழவன் பற்றிய பதிவு நிக்கபட்டுள்ளது, மிகவும் வேதனைக்குரிய விடயம். யாழ் இணைய நடத்துனர்கள் ஏன் என்னுடைய பதிவை நீகினர்கள் என்று விளக்கம் தரவும்

தமிழ்வான் பத்தி எனக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே தெரியும். செந்தியினால் rogers channel 20 இல் sunday ஆரம்பிக்கபட்ட அரை மணித்தியால தமிழ் நிகழ்ச்சி( அந்த நிகழ்ச்சி இன் பெயர் மறந்து விட்டேன்) தமிழவன் ஆக மலரியது. செந்திக்கு விளம்பரமில்லாமல் தனியே நடத்த எப்படி முடியும்

நான் பல ஆண்டுகள் கனடாவில் வசிக்கிறேன், தமிழவன் உள்னுலயவிடமல் என்னுடைய சிநேகர்கள் தடுப்பதை நேரில் பார்த்தவன் நான்.

நெருப்பிலாமல் புகையாது, பல புல்லுரிவிகள் தமிழ் தேசியத்துக்கு எதிராக கனடாவில் செயட்படுகிரர்கள்.ஏன் எமக்கு இரண்டு தொலைக்காட்சி, எமது பிளவுகள் தான் எம்மினத்தை அழிவு பாதைக்கு இட்டு செல்கின்றன. பல வானொலிகள், பல சங்கங்கள்.

http://www.tamilone.ca/html/about_us.html

இதில் யார் நடத்துகிறார்கள் என்பது பட்டி போடவில்லை.

என்னுடைய பதிவுகள் நீக்கப்படுமானால் நான் இந்த பக்கம் வரமாட்டேன். இப்படியான குறிகிய சிந்தனையால் தான் எம்மினம் அழிந்து போகிறது. பேச்சு சுகந்திரத்து அனுமதியளியுங்கள்

http://www.tamilone.ca/html/about_us.html

இதில் யார் நடத்துகிறார்கள் என்பது பட்டி போடவில்லை.

:lol:சிலவேளை ஆடு, மாடுகள் தொலைக்காட்சி நடாத்தியிருந்தால் பட்டி போட்டிருப்பார்கள். இது ஆட்கள் நடாத்திற தொலைக்காட்சி என்றபடியால் பட்டி போடாமல் விட்டிருப்பார்கள். :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

:lol:சிலவேளை ஆடு, மாடுகள் தொலைக்காட்சி நடாத்தியிருந்தால் பட்டி போட்டிருப்பார்கள். இது ஆட்கள் நடாத்திற தொலைக்காட்சி என்றபடியால் பட்டி போடாமல் விட்டிருப்பார்கள். :lol::lol:

அதனால்தான் வசம்பண்ணா நான் இங்கு குட்டி போடாமல் விலகுகிறேன்

என்னுடைய தமிழவன் பற்றிய பதிவு நிக்கபட்டுள்ளது, மிகவும் வேதனைக்குரிய விடயம். யாழ் இணைய நடத்துனர்கள் ஏன் என்னுடைய பதிவை நீகினர்கள் என்று விளக்கம் தரவும்

தமிழ்வான் பத்தி எனக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே தெரியும். செந்தியினால் rogers channel 20 இல் sunday ஆரம்பிக்கபட்ட அரை மணித்தியால தமிழ் நிகழ்ச்சி( அந்த நிகழ்ச்சி இன் பெயர் மறந்து விட்டேன்) தமிழவன் ஆக மலரியது. செந்திக்கு விளம்பரமில்லாமல் தனியே நடத்த எப்படி முடியும்

நான் பல ஆண்டுகள் கனடாவில் வசிக்கிறேன், தமிழவன் உள்னுலயவிடமல் என்னுடைய சிநேகர்கள் தடுப்பதை நேரில் பார்த்தவன் நான்.

நெருப்பிலாமல் புகையாது, பல புல்லுரிவிகள் தமிழ் தேசியத்துக்கு எதிராக கனடாவில் செயட்படுகிரர்கள்.ஏன் எமக்கு இரண்டு தொலைக்காட்சி, எமது பிளவுகள் தான் எம்மினத்தை அழிவு பாதைக்கு இட்டு செல்கின்றன. பல வானொலிகள், பல சங்கங்கள்.

http://www.tamilone.ca/html/about_us.html

இதில் யார் நடத்துகிறார்கள் என்பது பட்டி போடவில்லை.

என்னுடைய பதிவுகள் நீக்கப்படுமானால் நான் இந்த பக்கம் வரமாட்டேன். இப்படியான குறிகிய சிந்தனையால் தான் எம்மினம் அழிந்து போகிறது. பேச்சு சுகந்திரத்து அனுமதியளியுங்கள்

மாருதி தொலைக்காட்சி என்றுஇயங்கிக் கொண்டிருந்த தொலைக்காட்சியே தமிழ்வண் என்னும் பெயர் மாற்றத்துடன் இயங்கத் தொடங்கியது. ஆரம்ப நாட்களில் இளையபாரதியின் ஆதரவுடன் இயங்கியதாக ஒரு தகவல் வலம் வந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.