Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

30 ஆண்டுகளுக்கு முன்பு உங்களின் யோசனை துளிர்த்து இருந்தால், 80 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்: கருணாநிதிக்கு பகிரங்க கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

30 ஆண்டுகளுக்கு முன்னால் உங்களின் யோசனை துளிர்த்து இருந்தால், 80 ஆயிரம் அப்பாவித் தமிழர்களை சிங்களவர்கள் கொன்று இருக்க மாட்டார்கள். புலிப் படையில் 30 ஆயிரம் பேர் உயிர் பலியாக வேண்டிய அவசியம் வந்து இருக்காதே! கொழும்பில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும், அன்றைய ஜெயவர்த்தனாவுக்குத் தந்தி அனுப்பி கோரிக்கை மட்டும் வைத்து இருந்தால், பௌத்தர்கள் கோபம் அதிகமாகி இருக்காது. இவ்வாறு தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'விகடன்' குழுமத்தின் 'ஆனந்த விகடன்' வார இதழில் கருணாநிதிக்கு பகிரங்க கடிதம் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பகிரங்க கடிதத்தின் முழு விபரம் வருமாறு:

தி.மு.க. தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிழல் தலைவர், முத்தமிழ் அறிஞர், முதல்வர் கலைஞர் அவர்களுக்கு வணக்கம்!

மூத்த தமிழ்க்குடியின் நலனுக்காக ஐந்து முறை 'முள் கிரீடம்' தாங்கி, முத்து விழா தாண்டிய பிறகும் உழைத்து வரும் உங்களுக்குத் தொடக்கத்திலேயே ஒரு தகவலைச் சொல்ல வேண்டும். கடைசியாக ஒரு கேள்வியை வைத்து இருக்கிறேன்.

'நீ இன்றி நான் இல்லை' படத்துக்குக் கதை வசனம் எழுதுவதில் மும்முரமாகிவிட்டீர்கள். அது, ஜெயலலிதா பல ஆண்டுகளுக்கு முன்னால் எழுதி வெளியிட்ட நெடுங்கதையின் தலைப்பு. ''கருணாநிதி என் புத்தகத் தலைப்பை திருடிவிட்டார்'' என்று அந்தம்மா அறிக்கை விடுவதற்கு முன்னால் உங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியது என் கடமை. அதிருக்கட்டும்...

''போரிலே கலந்து வாகை மாலை சூட வாரீர் தோழர்களே! பாண்டியன் பரம்பரையினரே! சேரன் சந்ததியினரே! சோழனின் சொந்தக்காரரே! வாரீர்! கறுத்த கழுதையே, அங்கே ஏன் கனைக்கிறாய் என்று கேட்டிட வாரீர்! பிரிவினை வேண்டாமெனும் பெரும் உபதேசம் செய்யும் நரிகளின் ஊளையை, கிலி பிடித்த மனிதர்களைக் கீறி எறியுங்கள்!'' என்று கோவில்பட்டியிலும்...

''உணர்ச்சியுடன் எழுதுபவர்களின் கட்டை விரலை வெட்டு என்று முழக்கமிடுகிறது ஒரு வாய். ஆட்சி பலத்தினால் கட்டை விரல்களைப் போக்கினால் போக்கட்டுமே! விரல் போனால் வாய் இருக்கிறது. அண்ணா சொன்னது போல் இயக்கப் பேச்சாளர் அத்தனை பேர் நாக்குகளையும் துண்டித்துக்கொள்ளட்டும். கரங்களை நறுக்கி, நாவினைத் துண்டித்து நிர்க்கதியாக விட்டாலும் எமது தன்மானம், இன முழக்கம் ஓயாது, ஒழியாது. இதைக் காமராஜர்கள் உணர வேண்டும்'' என்று கோவையிலும் ஒரு காலத்தில் கொந்தளித்த உங்களது நாக்கு கடந்த வாரம் சட்டசபையில் பேசியதைப் படித்ததும்தான் பதறிப் போனேன். உங்களுக்கு பகிரங்க மடல் எழுதத் தூண்டியது நீங்கள் பேசிய அந்த வரிகள்தான்.

சம்பத்தும் நெடுஞ்செழியனும் அன்பழகனும் கழக மேடைகளில் (உங்கள் மொழியில்) தத்துவத் தாலாட்டுப் பாடிக்கொண்டு இருந்தபோது... எரிமலையாக, இடி ஒலியாக, கரகர தொண்டையில் நீங்கள் கனல் கக்கியதால் ஆயிரக்கணக்கான தொண்டர்களின் கவனிப்பைப் பெற்றீர்கள், சரியா? இப்போது ஈழத் தமிழர் தொடர்பான விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசியதை திரும்பத் திரும்பப் படித்தேன். ''எதிலும் ஒரு நீக்குப்போக்கு வேண்டும் என்பார்கள். அங்கு இருக்கும் தமிழருக்கு நன்மை செய்ய வேண்டுமானால், இங்கே நாம் ஆத்திரத்தோடு அல்லது வெறுப்பு உணர்வோடு, அங்குள்ள சிங்கள இனத்தின் மீது ஒன்றைச் சொல்லி அது வேறுவிதமான விளைவுகளை உண்டாக்கினால்... அது நல்லதல்ல! பேசும்போது சுவையாக இருக்கும். வீரமாகப் பேசலாம். சூறாவளிப் பேச்சு, புயல் பேச்சு, கடல் அலைப் பேச்சு, எரிமலைப் பேச்சு என்று புகழாரம் சூட்டலாம். ஆனால், சிங்களவர்களுடைய கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் நீக்குப்போக்கு என்று சொன்னேன்'' என்று பேசி இருக்கிறீர்கள். என்னவொரு வளைவு, குழைவு, நெளிவு!

30 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த உங்களது யோசனை துளிர்த்து இருந்தால், 80 ஆயிரம் அப்பாவித் தமிழர்களை சிங்களவர்கள் கொன்று இருக்க மாட்டார்கள். புலிப் படையில் 30 ஆயிரம் பேர் உயிர் பலியாக வேண்டிய அவசியம் வந்து இருக்காதே! கொழும்பில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும், அன்றைய ஜெயவர்த்தனாவுக்குத் தந்தி அனுப்பி கோரிக்கை மட்டும்வைத்து இருந்தால், பௌத்தர்கள் கோபம் அதிகமாகி இருக்காது. ஆனால், நீங்கள்தான் 'தமிழனுக்கு ஒரு நாடு, தனித் தமிழீழ நாடு' என்று கரகரக் குரலால் நித்தமும் கர்ஜித்தீர்கள். இரத்தக் கறை படிந்த ஜெயவர்த்தனாவின் கொடூரத்தைத் தமிழ்நாட்டுத் தெருவெல்லாம் சொல்லி, மக்கள் கொடுத்த எம்.எல்.ஏ., பதவியை இராஜினாமா செய்து... பிறந்த நாளுக்குக் கிடைத்த பணத்தைப் போராளிகளுக்குத் தூக்கிக் கொடுத்து, விடிய விடிய டெசோ ஊர்வலங்கள் நடத்தி, மனிதச் சங்கிலி நடத்தி, கறுப்புச் சட்டை போட்டு, டெல்லிக்கு காவடி தூக்கி, ஆட்சியைப் பறிகொடுத்து... என பாழாய்ப் போன ஈழத் தமிழனுக்காகக் காலத்தை வீணாக்கிவிட்டீர்களே, தலைவரே!

எம்.ஜி.ஆர். நாலு கோடி ரூபாயைத் தூக்கிக் கொடுத்துப் பிரபாகரனைத் தட்டிக் கொடுத்தார். ''இந்தச் சண்டையை நடத்துவதே எம்.ஜி.ஆர்-தான்'' என்று ஜெயவர்த்தனா பேட்டி அளிக்கும் அளவுக்கு ஆர்வம் காட்டினார். கை நிறைய கரன்சியை அவரும் வாய் நிறைய வார்த்தைகளை நீங்களும் அள்ளி எறிந்ததால்தான் போராளி இயக்கங்கள் 'நம் பின்னால் தமிழ்நாடே இருக்கிறது' என்று திரிந்தன.

''கனக விசயர் தலையில் கல்லேந்திக் கொண்டு வந்தான் செங்குட்டுவன். காவிரிக்குக் கரை கட்ட பன்னீராயிரம் சிங்களவர்களைக் கைதிகளாகக் கொண்டுவந்தான் கரிகாலன். இதெல்லாம் சரித்திரம். ஆனால், அந்த சரித்திரத்தின் விழுதுகளாக நாம் இருக்கிறோமா? இனிப் பழங்கதை பேசிப் பயனில்லை. செயலில் இறங்க வேண்டும். ஆளுக்கு ஓர் ஆயுதத்தைத் தூக்குவதா என்று கேட்பீர்கள்? அப்படி ஒரு நிலை வந்தால் தட்டிக்கழிக்க முடியாது. ஆனால், அந்தக் காலம் இன்று வந்துவிடும் என்றும் என்னால் சொல்ல முடியவில்லை'' என்று நீக்குப்போக்கு தெரியாமல் எரிமலைப் பேச்சை நீங்கள் பேசியதால் கோபமான பௌத்தர்கள் கொழும்புத் தமிழர்களை வடக்குப் பக்கமாக விரட்டியதாகச் சொல்லலாமா?

''இலங்கையில் எங்கள் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, எங்களைப் பெற்றெடுக்காத தாய்-தந்தையர் எல்லாம் சிங்கள வெறியர்களால் கொல்லப்படுகிறார்கள். இதை எல்லாம் நாங்கள் சகித்துக்கொண்டு எத்தனை நாளைக்கு இருப்பது? நாங்கள் ஒட்டிக்கொண்டு இருக்க, இந்தியாவோடு இணைந்து இருக்க, இந்தியா வேறு... தமிழ்நாடு வேறு என்று இல்லாமல், இந்தியாதான் தமிழ்நாடு, தமிழ்நாடுதான் இந்தியா என்று கருதிக்கொண்டு இருக்க நீங்கள் தமிழருக்குச் செய்தது என்ன? உங்களுடைய தேசியம் தமிழ்நாட்டுக்கு வேகமாக வரத் தயக்கம் காட்டுவது ஏன்? உங்களுடைய தேசியம் தமிழக எல்லைக்கு அப்பால் நின்றுவிடுகிறதே, என்ன காரணம்? இவற்றைக் கேட்கக் கூடாதா? கேட்டால் பிரிவினையா?'' என்று அன்றைய பிரதமர் ராஜீவைக் கோபப்படுத்தாமல், புயல் பேச்சு பேசாமல் இருந்தால், அவராவது கோபப்படாமல் நல்லது ஏதாவது செய்திருப்பாரே?

இன்றைய வைகோ, நெடுமாறன், நாஞ்சில் சம்பத்தைவிட அதிகமாக அன்றைய அமைச்சர்கள் காளிமுத்துவும் எஸ்.டி.சோமசுந்தரமும் பேசினார்களே! 'இந்தியா படை எடுக்க வேண்டும்', 'ஜெயவர்த்தனாவைத் தூக்கிலிட வேண்டும்' என்றார்கள். காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையில் இதை முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் போட்டுக்கொடுத்தார்கள். புறநானூற்றுப் பாடல்களை ஒப்பிக்காத, கணைக்கால் இரும்பொறையின் மறம் அறியாத எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே சொன்னார், ''அவர்கள் பேசியது என்னுடைய கருத்துதான். அவர்கள் அளவுக்கு எனக்கு வீரமாகப் பேச வரவில்லை.''

பேச்சு என்பது வெறும் பேச்சுதானே என்பதை உணர்ந்தார் எம்.ஜி.ஆர். அதனால்தான் நீங்கள், ''மிசாவைக் காட்டி மிரட்டினால் தமிழகத்துக்குள் வர விசா வாங்க வேண்டி வரும்'' என்றபோதும் கவலைப்படாமல் இருந்தார். அன்று நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தீர்கள். இன்று அதிகார நாற்காலியில் அமர்ந்து இருக்கிறீர்கள். பிடிக்காததை யார் பேசினாலும் வேண்டாத வீரமாகத் தெரிகிறது.

பல்லாயிரம் அழிவுகள் ஆன பிறகு நீங்கள் சொல்கிறீர்கள், சிங்களவனைக் கோபப்படுத்த வேண்டாம் என்று! முதலில் இங்கு உள்ள மத்திய அரசைக் கோபப்படுத்த வேண்டாம் என்றீர்கள். அதுவாவது உங்களால் தவிர்க்க முடியாத கூட்டணி தர்மம். கூடவே, 'சிங்களர்களைக் கோபப்படுத்த வேண்டாம்' என்று இலங்கைத் தூதர் அம்சாவாக நீங்கள் பேசுவது எந்த ஊர் நியாயம்? வெள்ளை பொஸ்பரஸ் தூவுகிறான், கிளஸ்டர் போடுகிறான், கொத்துக்குண்டுகள் மொத்தமாக விழுந்து கொண்டு இருக்கும்போது, 'உங்கள் அதிகாரத்தை வைத்துத் தடுக்கக்கூடாதா?'' என்றால், 'என்னால் என்ன செய்ய முடியும், மத்திய அரசுதான் தடுக்க முடியும்'' என்று தட்டிக்கழித்தீர்கள். ''போர் நடத்துவதன் பின்னணியில் இந்தியாதான் இருக்கிறது'' என்றபோதும் மறுத்தீர்கள். அதை பிரதமர் மன்மோகன் ஒப்புக்கொண்டபோது காதை மூடிக் கொண்டீர்கள். இப்போது 'மத்திய அரசு என்ன செய்ய முடியும், சிங்கள அரசுதானே எதையும் செய்ய முடியும்' என்று பந்தை கடல் தாண்டித் தட்டிவிட்டீர்கள்.

நீதியரசர்கள் ஏழு பேரை வைத்து நீங்கள் ஆரம்பித்த இலங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்பு இயக்கத்துக்கு இன்னும் உயிர் இருக்கிறதா என்று தெரியவில்லை. இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், போர்க் குற்றத்தை உலக நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அவர்கள் டெல்லிக்கு பறந்து போய் ஜனாதிபதிக்கும் சொக்கத் தங்கம் சோனியாவுக்கும் கொடுத்தார்களே, நினைவிருக்கிறதா? இப்போதைய உங்கள் சித்தாந்தப்படி அதுகூட தப்பானதல்லவா? கோரிக்கைகளை யாருக்கும் தெரியாமல் வாபஸ் வாங்கிவிடுங்கள்!

இலங்கைப் பிரச்னையில் உங்கள் கருத்து என்ன?

''மத்திய அரசின் கருத்துதான் என் கருத்து.''

தமிழீழம் குறித்து உங்களது கருத்து என்ன?

''இந்த விஷயத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்து தான் என் கருத்து''.

பிரபாகரனை உயிரோடு பிடித்தால் எப்படி நடத்த வேண்டும்?

''ஜெயலலிதா தீர்மானம் போட்டபடி இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.''

உங்களுக்கு என்று இப்போதெல்லாம் எந்த சொந்தக் கருத்தும் கிடையாதா? 'தமிழீழம் கிடைத்தால் மகிழ்ச்சி அடையும் முதல் ஆள் நான்தான், இலங்கையில் தமிழர் அரசு அமைந்தால் சந்தோஷம்' என முற்றும் துறந்த முனிவர் போலத் தத்துவம் பேசுவது உதவுமா? நீங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டது முதல் மே இரண்டாவது வாரம் வரை, எட்டு மாதங்கள் நத்தை போல நகர்ந்ததில் நசுங்கிய உயிர்களின் எண்ணிக்கை 80 ஆயிரம். எட்டுத் தடவை தீர்மானம் போட்டு என்ன செய்ய முடிந்தது? 'நாங்கள் போரின் அன்றாடத் தகவல்களைத் தினமும் இந்தியாவுக்குச் சொல்லி வந்தோம்' என்று கோத்தபய ராஜபக்ச சொன்ன பிறகும், காங்கிரசைச் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்க முடியாமல், உங்களைப் பிடித்து இழுத்தது எது? அல்லது யார்?

''நாங்களே அடிமையாக இருக்கிறோம். ஓர் அடிமை இன்னோர் அடிமைக்கு எப்படி உதவி செய்ய முடியும்?'' என்று ஈழத் தந்தை செல்வாவிடம் இங்கிருந்த தந்தை பெரியார் சொன்னதாக நீங்களும் தப்பிக்கப் பார்க்கிறீர்கள். உடல் வலியெல்லாம் தாங்கிக்கொண்டு, மூத்திரப் பையைத் தூக்கிக்கொண்டு கடைசிக் காலத்திலும் கருவறைப் போராட்டம் நடத்திய 'தமிழின அடிமை' அவர். கடைசி வரை அதிகாரம் கொண்ட பதவி எதையும் திரும்பிக் கூடப் பார்க்காத அடிமை அவர். ஆனால், நீங்கள் ஐந்தாவது முறையாக முதலமைச்சர். 14 ஆண்டுகள் உங்களது ஆட்கள் மத்திய லகானைச் சுழற்றி வந்திருக்கிறார்கள். சோனியா உங்களைத் தகப்பன் ஸ்தானத்தில் வைத்து மதிக்கிறார். கேட்ட பதவிகள் கிடைக்கின்றன. மத்திய மந்திரிகள் யார் வந்தாலும், கோபாலபுரத்தில்தான் லாண்ட் ஆகிறார்கள். நீங்கள் அடிமை என்றால், கொத்தடிமைகளை என்னவென்று அழைக்கலாம்? அண்ணா, தனிநாடு கைவிட்ட கதையைச் சொல்லிச் சொல்லி அண்ணாவும் அப்படித்தான் என்று இன்றைய தலைமுறைக்குக் காட்டிக்கொடுக்கிறீர்கள். எதற்கெடுத்தாலும் பெரியார், அண்ணா பெயரைச் சொல்லி ஏன் பலியிடுகிறீர்கள்? கச்சத்தீவைத் தாரை வார்க்கும்போது கடிதம் மட்டும் அனுப்பியதால், இன்று கண்காணிப்புக் கோபுரம் வந்துவிட்டது. காவிரியில் தண்ணீர் விடுவதில் உச்ச நீதிமன்றம் தொடங்கி காவிரி ஆணையம் வரை தீர்ப்பளித்த பிறகும் 'விரும்பினால்தான் தண்ணீர் தருவோம்' என்று சொல்லும் நிலையே இன்னமும் தொடர்கிறது.

தெற்காசியாவின் அதிசயமாக பென்னி குக் அமைத்த முல்லைப் பெரியாறு அணையை மார்க்சிஸ்ட் மந்திரி குடைவைத்து தட்டிப் பார்க்கிறார், கீறல் விட்டு உள்ளதா இல்லையா என்று. முதலமைச்சர் அச்சுதானந்தனுக்கு ஆயிரம் தலைவலிகள் இருப்பதால், அவருக்கு கோபம் வருவது மாதிரி எதையாவது சொல்லிவிடாதீர்கள். பாலாறு பிரச்னையைக் கிளற வேண்டாம். மாவோயிஸ்ட்டுகளை ஆந்திர அரசு அடக்கி முடித்த பிறகு, ஆற அமரப் பேசலாம். எந்தத் திகதியில் எந்த ஒப்பந்தம் போட்டோம் என்று மனப்பாடமாக துரைமுருகன் ஒப்பிக்க மட்டும்தான் காவிரியும் பாலாறும் முல்லைப் பெரியாறும் பயன்படப் போகிறது.

''பஞ்சாப் பொஸ்பரஸ், காஷ்மீர் கற்பூரம், அசாம் அணையாவிளக்கு, ஈர விறகு இங்குள்ள தமிழினம்'' என்று புதுக் கல்லூரி விழாவில் 20 ஆண்டுகளுக்கு முன் புது விளக்கம் கொடுத்தவர் நீங்கள். விறகை ஈரமாகவே வைத்திருக்கலாம் என்று இப்போது நீங்களாகவே சொல்கிறீர்களே... அதை எதில் சேர்ப்பது? கடைசியாக இன்னொன்றும் நினைவுச்சரத்தில் நெருடுகிறது...

ஈழத்தில் இருந்து அகதியாக வெளியேறி நிர்க்கதியாக நின்ற ஒரு சிறுவனை, கால் நூற்றாண்டுக்கு முந்தைய ஒரு தி.மு.க. மாநாட்டின்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் 'நானே இவனை மகன் போல வளர்க்கப் போகிறேன். என்னுடனே இவன் இருப்பான்' என்று அறிவித்தீர்கள். அந்தக் கடல் அலைப் பேச்சில் மாநாட்டு மைதானமே கசிந்து மிதந்ததே! அந்த பரிதாப ஜீவன் இப்போது எங்கே, தலைவரே?

அன்புடன்,

ஈர விறகாக இருக்க முடியாத,

அரசியல் அறியாத் தமிழன்!

எல்லொருக்கும் ஒரு பணிவான வேண்டுகோள்.

இதே போல் எமது மண்ணில் பிறந்த அடிவருடிகள், தமிழர்களை விற்கும் ஈனப்பிறவிகள், பலர் இருந்தனர். இருக்கின்றனர், இருக்க போகின்றனர்.

அவர்களை இனங்கண்டு இளைய சமுதாயத்திற்கு அறியச் செய்ய வேண்டும். தெரியாமல் செய்வது மன்னிக்கலாம் ஆனால் தெரிந்து செய்வதை என்ன செய்வது

உதாரணமாக சந்தோச சக்கரியார் கூறலாம். ஈழம் வார்த்தையை ஊற்றி வளர்த்து இப்போ விற்கிறார்.

அதாவது 2% பார்ப்பனர்கள் இந்தியாவை ஆட்சி செய்வதுபோல், 2% தமிழர்கள் தமிழர்களின் சுதந்திரத்தை வைத்து விபச்சாரம் செய்கிறர்கள்.

ஆகவே தெரிந்தவர்கள் இங்கும் எழுதலாம்.

தெரிந்து சொல்லாமல் விடுவதும் குற்றமே.

யாரையும் நொந்து என்ன பலம்??? ..... கேட்கவே யாருமில்லாமல் அழிக்கப்பட்டோம் ... அழிந்து போனோம் ......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.