Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகாம் தமிழர்கள் நிலை: குழு அறிக்கை சொல்வது என்ன?

Featured Replies

முகாம் தமிழர்கள் நிலை: குழு அறிக்கை சொல்வது என்ன?

சென்னை: முள் வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் பெரும் அவதியில் உள்ளனர். மழைக்காலத்திற்கு முன்பு அவர்களை இடம் பெயரச் செய்யாவிட்டால் பெரும் சீரழிவு ஏற்படும் என்று திமுக - காங்கிரஸ் -விடுதலைச் சிறுத்தைகள் எம்.பிக்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சென்று திரும்பிய இக்குழுவினர் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து தங்களது பயணம் குறித்த 9 பக்க அறிக்கையை சமர்ப்பித்தனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது...

வேதனை தாங்க முடியவில்லை...

இலங்கையில் முள்வேலி முகாம்களில் உள்ள தமிழ் மக்களைப் பார்க்கும்போது வேதனை தாங்க முடியவில்லை. அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும்.

அப்படி இல்லாமல் முகாம்களிலேயே தொடர்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படுமானால் சில நாட்களில் பெருமழை அந்த பகுதியில் பெய்யக்கூடும் என்ற நிலைமை இருப்பதால், ஏற்கனவே வசதி இல்லாத இடங்களில் அடைக்கப்பட்டிருக்கும் அந்த மக்கள் மழையினால் மேலும் துன்பப்படுவார்கள்.

மழையினால் ஏற்படும் சேறு, சகதிகளில் குடியிருக்கவும், படுத்து தூங்க வேண்டிய நிலைமை ஏற்படும்பொழுது எவ்வளவு கஷ்டங்களை அனுபவிப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்க முடியவில்லை. அவற்றை எல்லாம் இலங்கை அரசுக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறோம்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை நாங்கள் சந்தித்தபோதும் இந்த நிலைமைகளை ஒவ்வொன்றாக அவரிடத்திலே தொகுத்துக் கூறிஇருக்கிறோம். இதை மனிதாபிமான உணர்ச்சியோடு அணுகி ஆவண செய்வதாக எங்களுக்கு உறுதி அளித்திருக்கிறார். அந்த மனிதாபிமான உணர்ச்சிக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறார்கள் என்பதை அல்லலுக்கு மத்தியிலே அவஸ்தைபட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களை எல்லாம் அங்கிருந்து விடுவித்து அவர்களை சொந்த இடங்களில் கொண்டுபோய் சேர்ப்பதில்தான் தெரிந்து கொள்ள முடியும்.

சொல்லொணா துயரம் ஏற்படும்...

அவர்களை வெளியே அனுப்புவதற்கான ஒரு ஆரம்பத்தை தொடங்கி படிப்படியாக அவர்களது சொந்த இடங்களில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் எங்களிடம் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படுகிறது என்ற நம்பிக்கை எங்கள் உள்ளங்களில் துளிர்க்க முடியும். இதில் தாமதம் ஏற்பட்டால் ஏற்கெனவே இந்த முகாம்களில் அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு மேலும் சொல்லெண்ணா துயரத்தைத்தான் ஏற்படுத்தும்.

இலங்கையில் உள்ள தமிழர்களை மீண்டும் குடியமர்த்த கண்ணிவெடிகளைக் கண்டுபிடிப்பதற்கான உதவிகளை தற்போது செய்துகொண்டிருப்பதை விட மேலும் அதிகமாக இந்திய அரசு செய்ய வேண்டும் என்றும், அந்த பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் கலந்து பேசப்பட்டது. தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு அந்த வேண்டுகோள் விடவும் தயாராக இருப்பதாக தெரிவித்தோம்.

அடிப்படை தேவைகளான உணவு, விவசாயத்திற்கு தேவையான உபகரணங்கள், வீடு கட்டுவதற்கான உதவிகள், கல்வி வசதி அளித்தல் போன்றவற்றை இந்திய அரசிடமிருந்து உடனடியாகப் பெற்றுத்தர வேண்டும் என்றும் இலங்கை அரசு தரப்பில் கூறப்பட்டது. அதையும் முதல்வர் கருணாநிதி மூலமாக மத்திய அரசிடம் வலியுறுத்துவதாக தெரிவித்தோம்.

தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்கு ஆளாகும் நிலையையும் விளக்கிக் கூறினோம். அந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

இலங்கைக்கான இந்திய தூதர் ஆலோக் பிரசாத்துடைய அணியினருடன் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து விவாதித்தோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், ஸ்ரீகாந்த், பத்மினி சிதம்பரநாதன், சேனாதிராஜா, சிவசக்தி, ஆனந்தன், முகமது இமாம், பிரேமசந்திரன், பொன்னம்பலம், ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடினோம்.

பின்னர் ஆனந்த் சங்கரி தலைமையிலான டி.டி.என்.ஏ. அமைப்பைச் சேர்ந்த சித்தார்த்தன், ஸ்ரீதரன் ஆகியோரைச் சந்தித்தோம். முகாம்களில் உள்ளவர்களை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். போர் முடிந்த பிறகு சகஜ நிலை திரும்பிட இந்தியாவின் முயற்சிதான் ஒரே நம்பிக்கை என்றும் அவர்கள் கூறினார்கள்.

வவுனியாவில் `மணிக் பண்ணை' என்ற இடத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த 8 முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களை சந்தித்தோம். அந்த பண்ணை ஏறத்தாழ 2,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த பகுதியை 8 முகாம்களாக பிரித்து ஒவ்வொரு முகாமையும் முள்கம்பி வேலிகளால் தடுத்து வீதிகளின் இருபுறமும் கழிவுநீர் சாக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே குழாய்கள் மூலமாக குடிநீர் வசதிகள் செய்து கொடுத்துள்ளனர். சில இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரம் பேர் தங்கள் இருப்பிடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

உணவு, தண்ணீர், பால் இல்லை...

அந்த மக்களை நாங்கள் நேரில் சந்தித்துப் பேசினோம். ஒவ்வொரு முகாமிலும் நாங்கள் சென்றபோது ஏராளமான மக்கள் எங்களை சூழ்ந்துகொண்டு தங்கள் குறைகளைச் சொன்னார்கள். உணவு சரியாக வழங்கப்படவில்லை என்றும், தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும், குழந்தைகளுக்கு பால் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்கள். எங்களை எப்படியாவது முகாம்களில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள் என்று அவர்கள் கெஞ்சிக் கேட்டுக்கொண்டனர்.

மலம் கழிக்கக் கூட சிரமம்...

பொதுவாக, அவர்களில் பலபேர் மாற்று உடை இல்லாமல் ஒரே உடையைப் பல நாட்களாக அணிந்திருந்தது தெரிய வந்தது. தண்ணீர் இல்லாமல் குளிக்கவும் மலம் கழிக்கவும் அவர்கள் மிகவும் சிரமப்படுவதாக தெரிவித்தார்கள். ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் குழாய்களுக்கு எதிராக மிக நீண்ட வரிசையாக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பாத்திரங்களை வழியெங்கும் நாங்கள் பார்த்தோம்.

மேலும், ஓரிரு மாதங்கள் அந்த மக்கள் அங்கே தங்க வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் மிக மோசமான நிலையை சந்திக்க வேண்டியது இருக்கும். சதுப்பு நிலக்காடுகள் என்பதால் பருவமழை தொடங்கிவிட்டால் அவர்கள் பாடு மிகவும் கொடுமையாக இருக்கும். உட்காருவதற்கு கூட வசதிகள் இல்லாமல் போய்விடும். தொற்றுநோய் தாக்குதல் பரவக்கூடிய நிலை ஏற்படும்.

குழந்தைகள், சிறுவர்கள், வயதானவர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உயிரிழக்க நேரிடும். அரசு சில கட்டமைப்பு வசதிகளை செய்து தந்திருந்தாலும் இதுபோன்ற முகாம்கள் மிகக்குறைந்த காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மாதக்கணக்கில் லட்சக்கணக்கான மக்கள் அங்கு தங்குவது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்.

இலங்கை அரசின் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தாபாய ராஜபக்சேவை சந்தித்து அவரிடம் வன்னித் தமிழ் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த தமிழர்கள் படும் கொடுமைகளை விவரித்தோம். பருவமழை தொடங்கும் முன்பாக அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

தமிழக மீனவர் பிரச்சினை...

அதுபோல, தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் நிலையை விளக்கிக் கூறினோம். அந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம். எங்கள் கோரிக்கைகளுக்கு அவர் மிக விளக்கமாக பதில் அளித்தார். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் மீண்டும் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும், ஆனால் ஆங்காங்கே கண்ணி வெடிகள் புதைத்து இருப்பதால் அவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

அதன்பின்னர், இலங்கை அரசின் மறுகுடியமர்த்தும் அமைச்சர் ரிஷாத் பதுர்தீனை சந்தித்துப் பேசினோம். மாலை 3 மணிக்கு இலங்கை அதிபரின் அரசியல் ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முகாம்களில் நிவாரணப் பணிகளையும் மறுகுடியமர்த்தும் பணிகளையும் மேற்கொள்ளும் சிறப்புக்குழுவின் தலைவருமான பசில் ராஜபக்சேவை சந்தித்து, முகாம்களில் உள்ள மக்கள் தங்கள் ஊருக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினோம்.

தற்போது முகாம்களில் உள்ள மக்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் இதுவரை ஏறத்தாழ ஒரு லட்சத்து 57 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளின் எல்லை மற்றும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த எல்லைப் பகுதிகளில் இரு தரப்பினரும் கண்ணி வெடிகளை புதைத்து வைத்திருப்பதாகவும், அவற்றை நீக்கும் பணியில் இலங்கை ராணுவம் இந்தியா, டென்மார்க், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் ராணுவத்தினர் உதவியோடு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மறுகுடியமர்த்தும் பணிகளில் நில ஆவணங்களை பரிசீலித்து சரியான நபர்களைத்தான் குடியமர்த்தப் போவதாகவும் எனவே, சிங்களர்களையோ ஏனைய சமூகத்தினர்களையோ குடியமர்த்தும் வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளையும் ஆவணங்கள், படங்கள் மூலம் விளக்கிய பசில் ராஜபக்சே, ஓரிரு நாட்களில் மறுகுடியமர்த்தும் பணிகளைத் தொடங்கி தங்கள் வீடுகளுக்கு அனுப்ப இருப்பதாகவும் கூறினார்.

இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவை சந்தித்து, முகாம்களில் உள்ள தமிழர்களை மறுகுடியமர்த்தும் கோரிக்கையை முன்வைத்தோம். தொடர்ந்து அவர்கள் முகாம்களிலேயே இருக்க நேர்ந்தால் ஏற்படக்கூடிய விளைவுகளை எடுத்துரைத்தோம். அவர் எங்களுடைய கோரிக்கைகளை விரிவாக கேட்டு உரிய விளக்கங்களை தந்தார்.

இலங்கை அரசு 2 வாரத்தில் நம்பிக்கை தரும்...

மொத்தத்தில், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அவதிகளை சந்தித்து வந்தபோதிலும் இலங்கை அரசு அவர்களை மீண்டும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் நம்பிக்கையை இலங்கை அரசு இன்னும் 2 வாரத்தில் ஏற்படுத்தும் என்று தோன்றுகிறது.

கடைசியாக, இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகேவை சந்தித்து இதே பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம். இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித் போகுலகாமாவை சந்தித்தபோது அவர் இலங்கை-இந்திய கப்பல் போக்குவரத்து தொடங்குவதாக கூறினார். எதிர்க்கட்சி தலைவர் ரனில் விக்ர சிங்கேவையும் சந்தித்துப் பேசினோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

thatstamil.com

Edited by Vasampu

அறிக்கையில் இருந்து உடனடியாக தெரிந்தவை 3 விடயங்கள்

1. இலங்கை அரசுக்கு நல்ல பிள்ளையாக காட்டியதும், (இவர்களின் கருத்துகள் பற்றிய சிறி லங்காவின் அரசின் அறிக்கை, (அதனை இவர்கள் இன்றுவரை மறுக்கவில்லை), இலங்கை அரசு இதனை தன் பேரினவாத நலனுக்காக மிக நன்கு பயன்படுத்திக் கொள்ள சந்தர்ப்பம் தந்தமையும்.

2. தமிழக மக்களுக்கு ஈழ மக்களின் துயரத்தை கண்டு தாம் விம்மி, ததும்பி, குலுங்கி அழுதமையாக (வெறும் 3 மணி நேர அகதி முகாம் சுற்றுலாவில்) நடித்து தி.மு.க அரசின் மேல் இருக்கும் ஈழ மக்கள் துயரத்தி்ன் பங்கு தொடர்பான அனைத்து விமர்சங்களையும் இல்லாமாக்க முனைவது

3. ஈழத்தமிழர்களுக்கு, தமிழகத்தின் தலைவர்களாலும், தமிழக தமிழர்களாலும் சல்லிக்காசு அளவுக்கு கூட ஒரு நன்மையும் ஏற்படபோவதில்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்தமை

:நிழலி

  • தொடங்கியவர்

நிழலி,

தமிழ்நாட்டிலிருந்து வந்து சென்ற இக்குழுவினர் என்ன செய்திருக்க வேண்டும் என்று, நீங்கள் நினைக்கும் கருத்தை முன் வையுங்களேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.