சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம்! 1 Jan 2026, 8:53 PM மூன்றாம் உலகப் போர் எப்போது வரும் எப்போது வரும் என்று இன்னும் முட்டாள்தனமாகப் பேசிக் கொண்டு இருக்கிறோம். உண்மையில் மூன்றாம் உலகப் போர் வந்து நடந்து முடிந்து பதினாறு வருடம் ஆகி விட்டது. அந்தப் போரில்தான் ஈழம் அழிக்கப்பட்டது. தமிழினத்துக்கு எதிராக திராவிடம், தேசியம், கம்யூனிசம் எல்லாம் கரம் கோர்த்தன. அண்டை மாநில அரசியல்கள் வஞ்சகம் செய்தன. வட இந்தியா தமிழனை விட சிங்களனே தனக்கு சொந்தம் என்று, இறையாண்மை இல்லாத குறையாண்மையோடு செயல்பட்டது. இந்தியாவும் பாகிஸ்தானும், இந்தியாவும் சீனாவும் எதிரி நாடுகள். ஆனால் ஈழத்தை அழிக்கும் விஷயத்தில் இவை எல்லாம் ஒன்றுக்கு ஒன்று ‘தொடுப்பு’ நாடுகளாக மாறி ஈழத்தை அழித்தன. ஐ நா சபையிலும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத் துறை செயலர் பதவிகளிலும் , இலங்கை ராணுவ ஆலோசனை பதவிகளிலும் மலையாளிகள் உட்கார்ந்து , ஒரு பக்கம் தமிழ் நாட்டில் மாய்மாலம் செய்து பிழைத்துக் கொண்டே . தமிழினத்துக்கு எதிராக அவிழ்த்துப் போட்டார்கள். ஏகாதிபத்தியத்துக்கு எதிராக எப்போதும் இருப்போம் என்று வரலாற்றுப் புத்தகங்களை வழித்து நக்கிக் கொண்டிருக்கும் கியூபா, இலங்கைக்கு உதவி செய்ததன் மூலம் நியாயம் துறந்து அம்மணமாக நின்றது . பிரபாகரன் முன்பு பிச்சைக்காரன் ஆனான் பிடல் காஸ்ட்ரோ. இத்தனை ஈன தேசங்கள், ஈனப் பிறவிகள் தமிழினத்தின் மானத்தோடு விளையாடிய அதுதான் மூன்றாம் உலகப்போர். இனி ஒரு போர் வந்தால் அது நான்காம் உலகப் போர். உலகமே எதிர்த்து நின்றாலும் அஞ்சாமல் மானத்தோடு மனசாட்சியோடு போர் அறத்தோடு களமாடி தோற்றாலும், வரலாற்றில் வென்று, அந்த அநியாயத்துக்கு துணை போன தேசங்கள் ஒவ்வொன்றும் தனக்கு முகத்தில் தாங்களே காறி உமிழ்ந்து கொள்ளும் நிலைமையை உருவாக்கி வரலாற்றில் நிலைத்தது விடுதலைப் புலிகள் அமைப்பு. குறைகளே இல்லாத அமைப்பு அல்ல அது. ஆனால் அதை விட சிறப்பான ஓர் இனப் போராளிகள் குழுவை இந்த உலகம் கண்டதில்லை. இனி காணப் போவதும் இல்லை. தனது படையில் இருந்த கடைசி வீரனின் உயிரும் தனது மனைவி மகன்களின் உயிரும் ஒன்று என்று எண்ணிய ஒரு போராளி (வஞ்சகர்கள் பார்வையில் தீவிரவாதி; பயங்கரவாதி) இந்த உலகத்தில் இருந்தான் என்ற உண்மையை, இனி நீங்கள் கற்பனையில் சொன்னாலும் இந்த உலகம் நம்பாது. லாஜிக்கா இல்லையே என்று சொல்லி விட்டு நகர்ந்து விடும். ஒரு நாடே ஓர் பெரும்பான்மை இனமே, சுற்றி வளைத்து நிராயுதபாணிகளை ஆயுதத்தால் கொன்று பெண்களை எல்லாம் சீரழித்து அழிக்கும் வன்முறையில் வெறியாட்டம் ஆடிய நிலையில், அண்டை நாடுகள் எல்லாம் வக்கிரத்தோடு வேடிக்கை பார்த்த சூழலில், புலிகள் படையில் காயம்பட்ட போராளிகளை மீட்டு, எந்த வசதிகளும் இல்லாத நிலையில், தரையில் தோண்டப்பட்டு உருவாக்கப்பட்ட – பங்கர்கள் எனும் – அடிப்படை வசதிகள் கூட இல்லாத, சிறிய, மண் சுரங்க அறைகளில், உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடும் அந்த போராளிகளை மீட்க, உயிரைப் பணயம் வைத்து, பசி பட்டினி கிடந்து, குடும்பத்தை இழந்து வாழ்வை இழந்து, போராளிகளைக் காப்பாற்றிய, விடுதலைப் புலிகள் மருத்துவ அணியின் பணி எப்படிப்பட்டது என்பதை சொல்லும் படம் இது. ஆம். விடுதலைப் புலிகள் அமைப்பின் மருத்துவ அணியின் பெயர் சல்லியர்கள். சிங்கள மிருகங்களால் அம்மா, அப்பா, உறவுகள், காதல், பாசம் வீடு, வாசல், சொத்து சுகம் இழந்து, எங்கெங்கோ போய் ஒரு வழியாக மருத்துவம் படித்து… அயல்நாட்டுக்கு போய் மருத்துவம் பார்த்தால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என்ற சூழலில் அதை விட்டு விட்டு… தாய் மண்ணை மீட்கும் போராளிகளைக் காப்பற்ற ஈழம் வந்து…. ஒவ்வொரு நொடியும் மரணத்தை எதிர்பார்த்து வாழ்ந்து… தங்கள் மேல் அதிக ஆத்திரத்தோடு குறி வைக்கும் சிங்களப் படையினரை சமாளித்து, பணியாற்றிய மாவீர மருத்துவர்கள் இந்த சல்லியர்கள். எத்தனை சிலுவைகளைப் போட்டாலும் இந்த சல்லியர்கள் சுமந்த சிலுவைகளை செஞ்சிலுவைச் சங்கம் கூட சுமந்தது இல்லை. எனினும் ஒருவன் அடிபட்டு உயிருக்கு ஆபத்து என்று வந்தால் அவன் யாராக இருந்தாலும் ஒரு மருத்துவர் என்ன செய்ய வேண்டும்? அதில் இந்த சல்லியர்கள் எவ்வளவு தெய்வத்தன்மையோடு இருந்தார்கள்… அதன் விளைவு என்ன? என்பதே இந்தப் படம். இன உணர்வு இல்லாவிட்டாலும் கூட, மனசாட்சி உள்ள, சாப்பாட்டில் கிரிஸ்டல் சேர்த்துக் கொள்கிற எல்லோரும் கூட, இந்த படத்தைப் பார்த்தால் நெகிழ்ந்து போவார்கள். அப்படி ஒரு கதை. அப்படி ஒரு களம். ஓர் இயக்குனராக மேக்கிங்கில் அசத்தி இருக்கிறார் கிட்டு. தன்னை மேதகு முதல் பாகத்திலேயே நிரூபித்தவர் அவர். கதை நிகழும் பின்புலம், லொகேஷன்கள், ஷாட்கள், ஃபிரேம்கள், படத்துக்கு அவர் கொடுத்து இருக்கும் டோன் எல்லாம் அபாரம். நடிக நடிகையர் தேர்வு, அவர்களுக்கான கெட்டப் எல்லாம் அபாரம். சின்னச் சின்ன நடிகையர்களைக் கூட பொருத்தமாக தேர்ந்தெடுத்து சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். ஒரு போராளியின் உயிரைக் காப்பாற்ற, ஒரு சல்லியர் மருத்துவர் ரத்தம் கொடுத்து விட்டு பட்டினியோடு அந்தப் போராளிக்கு, அறுவை சிகிச்சை செய்யும் பணியில், அந்த குண்டுக் காயம் பட்ட இடத்தைச் சுற்றி அந்த மருத்துவர் ஆட்காட்டி விரலால் அழுத்திச் சுழற்ற, அதே நேரம் சிங்கள ராணுவ முகாம் அதிகாரி ஒருவர், தான் சுகமாக அருந்தும் கோப்பைக்குள் விரலை விட்டு ஆள்காட்டி விரலால் சுழற்றும் காட்சியை, டிரான்சிஷன் செய்து ஒப்புமைப்படுத்திக் காட்டும் இடம், இயக்குனருக்கு மகுடம். ரிக்ஷாக்காரன் படத்தில் ”அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்…” பாட்டில் எம் ஜி ஆர் பாதிக்கப்பட்ட குழந்தையின் புன் சிரிப்பை ரசித்துக் கொண்டிருக்க, அயோக்கியக் கூட்டம் ஆடிப் பாடிக் குடித்துக் கொண்டு ஆபாச நடனம் பார்த்துக் கொண்டு ஆணவச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கும். அதற்கு இணையான காட்சி, சல்லியர்கள் படத்தில் வரும் இந்தக் காட்சி. சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு ஒரு படிம ஓவியம் போல படத்துக்கு உயிர் கூட்டுகிறது. கென் மற்றும் ஈஸ்வரின் இசை, இளங்கோவனின் படத் தொகுப்பு இரண்டும் நேர்த்தியான பங்களிப்பை செய்துள்ளன. முஜிபுர் ரஹ்மானின் கலை இயக்கம், பூங்குயில் கிட்டுவின் ஆடை வடிவமைப்பு இரண்டுக்கும் நூற்றுக்கு நூறு மார்க். சிகையலங்காரமும் சிறப்பு. சற்றே துருத்திக் கொண்டு தெரிந்தாலும் அப்துலின் மேக்கப்பும் பல இடங்களில் அசத்துகிறது. நாயகியாக பெண் மருத்துவராக நடித்திருக்கும் சத்யா தேவியிடம் எல்லோரும் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும்.கேட்காமல் விட்டு விடாதீர்கள். “உண்மையை சொல்லுங்கள். நீங்கள் விடுதலைப் புலிகள் படையில் எத்தனை நாள் பயிற்சி எடுத்தீர்கள். எத்தனை நாள் சல்லியர்கள் அமைப்பில் பணியாற்றினீர்கள். இல்லவே இல்லை என்று எல்லாம் பொய் சொல்லக் கூடாது” அப்படி ஒரு அட்டகாசமான நடிப்பு.. இல்லை இல்லை.. இருத்தல்.. இல்லை இல்லை அதுவாகவே ஆதல். அற்புதம் சத்ய தேவி. வாழ்க. வளர்க, சக மருத்துவராக வரும் மகேந்திரனும் அப்படியே சிறப்பாக நடித்துள்ளார். படமாக்கல் அளவுக்கு திரைக்கதை பலமாக இல்லை. சல்லியர்கள் வாழ்வு, இலங்கை ராணுவத்தின் கொடுமைகள், போராளிகளின் தனிப்பட்ட வாழ்வு இழப்புகள் இவற்றில் எதற்கு முதன்மை முக்கியத்துவம் கொடுத்து, எதை எந்த அளவில் சொல்வது என்பதில் தெளிவின்மை காரணமாக, ஒன்றை இடித்துக் கொண்டு வந்து இன்னொரு விஷயம் நிற்கிறது. அதேபோல இந்தப் படத்தில் முக்கியமாக வலியுறுத்தப்படும் விஷயம் சிங்கள ராணுவத்தில் யாருக்கு நடக்கிறது என்ற விஷயத்தைக் கூட இன்னும் தீவிரமாக யோசித்து இருக்கலாம். அப்படி சொன்னால் அதில் தவறும் இருக்காது. சிங்கள அரசியல் தலைவர் ஒருவரின் மகன் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க யாழ்ப்பாணம் வருகிறான். ”சுட்டு விடுவோமா?” என்று கேட்கப்பட்ட போது,” நல்ல விசயத்துக்கு வருகிறான். இப்போது சுட்டால், நாம் விளையாட்டுக்கு எதிரான இயக்கம் என்று ஆகிவிடும். வேண்டாம் “என்றார் பிரபாகரன். ஆனால் அவன்தான் பிரபாகரன் இறந்த பிறகு யாழ்ப்பாணம் முழுக்க சாராயக் கடைகளைத் திறந்து போதை ஆற்றை ஓட விட்டான். எனவே அந்த சிங்கள கதாபாத்திரம் எது என்பதில் இன்னும் இறங்கி அடித்திருக்கலாம். அதே போல ரத்தம் சேகரிக்கப்பட்டு இருக்கும் பைகளை, சிங்கள ராணுவ அதிகாரி காலால் மிதித்து உடைப்பதை பெண் மருத்துவர் நேரில் பார்க்கவில்லை. ஆனால் அவர் யோசிக்கும் போது,அந்தக் காட்சி அவருக்கு விஷுவலாக வருகிறது. அது பொருத்தமாக இல்லையே. ‘இல்லை இல்லை.. நடந்த விஷயத்தை அவர் இமாஜினேஷன் செய்கிறார்..’ என்று ஒரு வாதத்துக்கு எடுத்துக் கொண்டால் கூட, நடந்த சம்பவத்தில் மருத்துவர் இமாஜின் செய்து பார்க்க, அம்மா அப்பா கொல்லப்படுவது முதல் இதை விட முக்கிய சம்பவங்கள் அந்தக் காட்சியிலேயே இருக்கு, எனவே அப்போதும் பொருத்தமாக இல்லை. இப்படி சில குறைகள் இருந்தாலும், எடுத்துக் கொண்ட கதை, சூழல், படமாக்கல், நடிப்பு, கருத்தியல், போன்ற வகைகளில் உயர்ந்து நிற்கிறது படம். ஒவ்வொருவரும் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம் சல்லியர்கள்.. கண்ணீரும் ரத்தமும்.. மகுடம் சூடும் கலைஞர்கள் சத்ய தேவி, கிட்டு. https://minnambalam.com/salliyargal-tamil-film-review-2026/
By
கிருபன் · 1 hour ago 1 hr
Archived
This topic is now archived and is closed to further replies.