Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வ.ஐ.ச. ஜெயபாலன் கவிதைகள் - காலத்தின் துயர் எரியும் அம்மாவின் பாடல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

post-7111-12648454111484_thumb.jpg

01.

யுத்தம் எல்லா விதத்திலும் அம்மாவைத்தான் பாதிக்கிறது. ஜெயபாலனின் கவிதைகள் அநேகமாக யுத்தத்தினுள் அம்மா பற்றிய ஏக்கம் மற்றும் அதன் பாதிப்பிலிருந்துதான் உருவாயிருக்கின்றன. அம்மாவை நோயாளியாக்கி அலைச்சலையும் இழப்பையும் தோல்வியையையும் சுமத்திவிட்டிருக்கிறது. இந்தத்தொகுதியில் இடம்பெறுகிற கூடுதலான கவிதைகள் அம்மா பற்றிய ஏக்கங்களாகவே இருக்கின்றன. தீயில் எரியும் அம்மாவை முத்தமிட வரமுடியாத துயரத்தை ஜெயபாலன் எதிர்கொண்டவர். யுத்தம் நிறையப் போரை நோயாளியாக்கியிருக்கிறது. பிரித்திருக்கிறது. தொடர்புகளை துண்டித்திருக்கிறது. தோற்றுப்போனவர்களின் பாடல் என்ற கவிதையும் அம்மா கவிதைகளின் தொடர்ச்சியாகவும் எல்லா அம்மாக்களின் திரண்ட துயரமாகவும் எழுச்சியாகவும் எழுதப்பட்டிருக்கிறது.

ஈழத்து கவிதைகள் இரத்தமும் சதையுமான அனுபவங்களை கொண்டிருக்கின்றன. அவலமும் நெருக்கடியும் அச்சுறுத்தலும் என்று தொடர்ந்து கொண்டிருக்கிற வாழ்வில் மனத்துயர்களை வெளிப்படுத்தும் கவிதைகள் வெளிப்பிட்டன. மஹாகவி, நீலாவணணன் போன்றவர்களிடமிருந்து எழுபதுகளின் இறுதியில் எழுந்த கவிதைகள் இப்படித்தான் வேறுபட்டு நின்றன. அறுபதுகளில் மண்ணின் வாசனையை வாழ்வுத் தேவைகளையும் சித்திரிக்கிற தா.இராமலிங்கம் போன்றவர்களின் கவிதைப் போக்கு ஈழத்து நவீன கவிதைகளின் ஆரம்பமாக இருக்கிறது. பின்னர் வந்த எழுபதுகளின் தலை முறையில் வ.ஐ.ச.ஜெயபாலன், அ.யேசுராசா, மு.புஸ்பராஜன் போன்றவர்கள் ஈழ அரசியல் நெருக்கடிகளையும் வாழ்வுப்போராட்டத்தையும் அச்சத்தையும் எழுதியிருந்தார்கள்.

எண்பதுகளில் ஈழக் கவிதைகள் மிகுந்த கவனத்தை பெற்றிருக்கின்றன. ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் இயக்க முரண்பாடுகள் மக்களின் வாழ்வுத் துயரங்கள் மரணத்துள்ளான வாழ்வு என்பன எண்பதுகளின் கவிதைகளில் மிகுந்த எழுச்சியும் தீவிரமும் கொண்டிருந்தன. சேரன், சங்கரி, நிலாந்தன், நுஃமான், வ.ஐ.ச.ஜெயபாலன், சோலைக்களி, புதுவை இரத்தினதுரை, சண்முகம் சிவலிங்கம், அ.யேசுராசா, ஒளவை, ஊர்வசி, இளவாலை விஜயேந்திரன், கி.பி. அரவிந்தன், சிவசேகரம் போன்றவர்களின் கவிதைகள் முக்கியம் பெறுகின்றன. தொண்ணூறுகளில் மாறி மாறி நடைபெற்ற போரின் துயரங்களையும் போருக்கு எதிரான எழுச்சியையும் கருணாகரன், பா.அகிலன், முல்லை கோணேஷ், நிலாந்தன், சி.ஜெயசங்கர், சிவசேகரம், எஸ்.போஸ், அமரதாஸ், உமாஜிப்ரான், போராளிகளான கப்டன் கஸ்தூரி, மேஜர் பாரதி, அம்புலி, போனறவர்;களுடன் செல்வி., சிவரமணி, அனார், பஹீமஜஹான், றஷ்மி, சித்தாந்தன், தானா.விஷ்ணு, புதுவை இரத்தினதுரை வ.ஐ.ச.ஜெயபாலன், சிவசேகரம், சேரன் மஜித், ஓட்டமாவடி அறபாத், போன்றவர்களும் எழுதியிருக்கிறார்கள்.

இரண்டாயிரத்தின் பின்னரான கவிதை நிலவரத்தில் எஸ்.போஸ், சித்தாந்தன், கருணாகரன், அலறி, மலர்ச்செல்வன், பொன்காந்தன், த.அகிலன், அனார், பஹீமஜஹான், றஷ்மி, துவாரகன், தமிழ்நதி, மாதுமை, பிரதீபா, நிவேதா, திருமாவளவன், தீபச்செல்வன், பா.ஐ. ஜெயகரன், றஞ்சனி, போராளிகளான அம்புலி, உலமங்கை, சூரியநிலா, ஈரத்தீ, இளநிலா, தமிழினி, வெற்றிச்செல்வி வீரா, ராணிமைந்தன், செந்தோழன் போன்றவர்களின் கவிதைகள் முக்கியம் பெறுகின்றன. போராளிக் கவிஞர்களின் கவிதைகள் போர் தருகிற இழப்பையும் போருக்கு எதிரான எழுச்சியையும் விபரிக்கின்றன. கருணாகரன், அமரதாஸ், எஸ்.போஸ், சித்தாந்தன், தானா.விஷ்ணு, முல்லைக்கோணேஷ் முதலியவர்கள் போரை யார் தொடுத்தாலும் மனிதர்களுக்கு எதிராக அழிவு தருகிறதாகவே எழுதியிருக்கிறர்கள். நிலாந்தன், புதுவை இரத்தினதுரை மற்றும் போராளிக் கவிஞர்களின் கவிதைகள் முக்கியமாக போருக்கு எதிராக மக்களை அணிவகுக்க தூண்டியிருக்கின்றன.

02.

புதியவர்களின் கவிதை நிலவரங்களை அறிந்து கொள்ளுவதிலும் அவர்களை தொடர்பு கொண்டு உற்சாகப்படுத்துபவர்களிலும் ஜெயபாலன் முன் நிற்பவர். கருணாகரன், வ.ஐ.ச. ஜெயபாலன், சி.ஜெயசங்கர் போன்ற மிகச் சிலரே இப்படி புதியவர்களை தேடி உற்சாகப்படுத்துகிறார்கள் புதியவர்களை செம்மைப்படுத்துகிறார்கள் என நினைக்கிறேன். களத்தின் கவிதைகள் எப்படியிருக்கின்றன என எப்பொழுதும் ஜெயபாலன் என்னை கேட்டுக் கொண்டிருப்பார். எனது வாசிப்பின்படி ஈழத்தின் நான்காம் கட்டப் போரின் பொழுது இன்றைய நிலவரத்திலும் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலத்திலும் களத்தில் கவிதைகளை எழுதியவர்கள் மிகவும் குறைவு என்றே நினைக்கிறேன். கருணாகரன் யுத்தம் தீவிரம் அடைந்த தொடக்க நாட்களில் சில கவிதைகளை எழுதியிருந்தார். அவர் இராணுவத்தினரிடம் தனது குடும்பத்துடன் சரணடைகிற பொழுது எந்தக் குறிப்பையும் வைத்திருக்கவில்லை. இது கருணாகரனுடன் தானா.விஷ்ணு, அமரதாஸ், பொன்காந்தன், முல்லைக்கோணேஷ், மற்றும் போராளிக் கவிஞர்களுக்கும் நடந்த துயரம். அவர்கள் எல்லாவற்றையும் இழந்த பொழுது தங்கள் கவிதைகளையும் புகைப்படங்களையும் இழந்திருந்தார்கள். 2008 ஆண் ஆண்டில் கருணாகரன் எழுதிய கவிதை ஒன்றில்

“நிழலை விலக்க முடியாதபோது

தோற்றுப் போன போர் வீரன்

பாதுகாப்பில்லாத வெளியில்

தனித்து விடப்பட்டதாக உணர்ந்தான்

மூடியிருந்த கதவுகள்

அவனை அச்சமடையச் செய்தன

திறந்திருந்த கதவுகளும்

அபாயமாகவே தோன்றின

…”

என்று போர் மீதான வெறுப்பை எழுதியிருக்கிறார். கிளிநொச்சி நகரத்தில் வாழ்ந்து போரை தன் வாழ்வு முழுவதும் அனுபவித்தவர் மற்றொரு கவிஞர் பொன்காந்தன். கருணாகரனும் பொன்காந்தனும் எந்தக் குறிப்பையும் எழுதுகிற அவகாசத்தை போர் தரவில்;லை என்கிறார்கள். எதற்கும் அவகாசமற்று ஓடிக்கொண்டேயிருந்ததாக கூறுகிறார்கள். போராளிகளான வீரா, செந்தோழன், ராணிமைந்தன், வெற்றிச்செல்வி, இளநிலா, ஈரத்தீ போன்றவர்களும் எழுதிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய கவிதைகள் எதுவும் கைவசம் இப்பொழுது இல்லாதிருக்கின்றன. அவை முழுவதும் தொலைந்துபோயிருக்கலாம் என அச்சமடைகிறேன். 2007 ஆம் ஆண்டு பொன்காந்தன் எழுதிய ‘நமது கடன்’ என்ற இந்தக் கவிதை ஒருநாள் நிகழ்ந்த பதற்றமான விமானத் தாக்குதலில் பின்னர் எழுதப்பட்டிருந்தது.

“…

இன்று காலையும் அரசின் விமானங்கள்

எங்கள் கிராமத்தின் மேல் சுற்றின

சிலர் பதுங்கு குழிக்குள் போனார்கள்

பலர் வெளியில் நின்று வானைப்பார்த்தார்கள்

சிலர் தெருவிலே

வழமைபோலவே போய்க்கொண்டிருந்தார்கள்

குண்டுகள் வீசப்பட்டன

கிராமத்தின் ஒருதிசையில் புகைமண்டலம்

சிலர் காயப்பட்டு தெருவால் வேகமாக கொண்டுசெல்லப்பட்டார்கள்

எத்தனைபேர் செத்தார்கள்

பலருக்கு அந்தக் கணக்குத்தான் தேவையாய் இருந்தது.

…”

பொன்காந்தனின் கவிதைகள் குரூர நினைவுகளை அப்படியே திரட்டித் தருபவை. 2007 ஆம் ஆண்டு வரை வன்னிப் போருக்குள் வாழ்ந்துவிட்டு தமிழகத்துக்கு இடம்பெயர்ந்த த.அகிலன் வன்னியின் போர்த்துயரங்களை அழிவுகளை போர்க்காலத்தின் மீதான விமர்சனங்களை எழுதி வந்திருக்கிறார். வன்னி இறுதி யுத்தத்தில் அவரது சகோதரன் பலவந்தமாக போராளிகளால் கொண்டு சென்று மரணம் எய்திய பொழுது ‘மரணத்துக்கு முன்னும் பின்னுமான குறிப்புகள்’ என்ற இந்தக் கவிதையை எழுதியிருந்தார்.

“…

அவனுக்கு மூன்றாம் பெயரை

அவர்கள் வழங்கினர்

அந்த மூன்றாம் பெயர்

அவனது புன்னகையைப்

பிடுங்கிவைத்துக்கொண்டு

துவக்குகளைப் பரிசளித்தது.

அவனது விருப்புகளின்

மீதேறிநின்று பல்லிளித்தது.

அவனது தாயைப் பைத்தியமாயத்

தெருவில் அலைத்தது.

…’’

கிளிநொச்சியில் பிறந்த எனக்கு வன்னிப் போருக்குள்ளும் அதற்கு வெளியில் இராணுவ ஆட்சிக்குள்ளும் வாழ நேர்ந்தது. போர் குழந்தைகளின் உலகத்தை அழிப்பவை என்று கருகிற எனக்கு பதுக்குழியொன்றில் பிறந்த குழந்தை குறித்து எழுத நேர்ந்தது.

“…

குழந்தைகளின் விழிகளில்

மரணம் நிரந்தரமாக

குடிவாழ்கிறது

அவர்களுடன் ஓட்டிப்பிறந்த

கருணை வார்த்தைகளும்

விடுதலைப் பாதங்களும்

அவர்கள் அறியாமல்

பறிக்கப்பட்டுள்ளன

நான் கடும் யுத்தப்பேரழிவில்

பிறந்ததாய்

அம்மா சொன்னாள்.

எனது குழந்தையை

நான் இந்த பதுங்குகுழியில்

பிரசவித்திருக்கிறேன்

…”

‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ என்ற இந்தக் கவிதை 2007ஆம் ஆண்டு கிளிநொச்சியில் வாழும் பொழுது எழுதப்பட்டது. இராணுவ ஆட்சிக்குள்ளான வாழ்வு எவ்வளவு அச்சம் தரும் என்பதை நான் அறிவேன். துப்பாக்கிகள் எல்லாவற்றையும் மூடி எதையும் பேசாது தன் ஆளுகைக்குள் புதைத்துவிடும். உன்னை சுடுவோம் என்ற அப்படியான வாழ்விலிருந்து அதை எழுத வேண்டி நேர்ந்தது. ‘பாழ் நகரத்தின் பொழுது’ என்ற என்னுடைய கவிதையிலிருந்து பின்வரும் வரிகளை தருகிறேன்.

“…

பாழடைந்து போயிருக்கிற நகரத்தில்

மண் தின்கிற கால்களை

ஊடுருவி

ஒற்றை நாய் வந்து கால்களை நக்கிச் செல்லுகிறது.

வரிசையாக புன்னகைகளால்

துவக்கு

சோதனையிட்டு பிடுங்கிக்கொண்டிருக்கிறது

இயல்பான வாழ்வை.

கூர்மையான துவக்கு

எதை வேண்டுமானாலும் செய்யும்.

என்னை உருவி எடுத்துக்கொண்டு

அனுப்புகிற பழுதடைந்த பொழுதில்

தெருவிளக்குகள் அணைந்துபோய்விட்டன

…”

இந்தக் கவிதை 10.02.2009 அன்று எழுதப்பட்டது. ‘பாழடைந்த நகரம்’ என்று யாழ்ப்பாணம் எனக்கு படுவதைப்போல ‘மூடுண்ட நகரம்’ என்று சித்தாந்தன் எழுதியியுள்ளார். இந்த நகரம் அல்லது யாழ்குடா நாடு அச்சம் தருகிற ஆட்சியால் மூடுண்டிருந்ததால் எதிர்கொண்ட துயரங்கள் அச்சங்கள் அச்சுறுத்தல்கள் மரணங்கள் மிகவும் கொடுமையானவை.

இராணுவ அச்சுறுத்தல்கள் பல கவிஞர்களின் கவிதைகள் எழுவதை தடை செய்திருந்தன. அவர்கள் எதையும் எழுதாத நிலையில் அமர்த்தி கைகளை கட்டி வைத்திருந்தன. சித்தாந்தன், துவாரகன் போன்றவர்கள் அந்த அச்சுறுத்தலான வாழ்வைத்தான் கவிதைகளாக எழுதியிருக்கிறார்கள். சித்தாந்தனின் ‘தெருக்களை இழந்த குழந்தைகளின் துயர்’ என்ற கவிதையில்

“…

முகங்களை கறுப்புத்துணியால் கட்டிய இராணுவர்கள்

நடமாடத் தொடங்கிய பிறகு

குழந்தைகள் தெருக்களை இழந்தன

தாய்மார் இராணுவத்தைப் பயங்காட்டி

உணவூட்டத் தொடங்கிய பிறகு

தெருக்கள் குழந்தைகளை இழந்தன

....”

இப்படிக் குறிப்பிடுகிறார். துவாரகனின் ‘தூசி படிந்த சாய்மனைக் கதிரை நாட்கள்’ என்ற கவிதையில்

“...

வீதிகளும் வெளிகளும்

வெறுமையாகிப் போன

நம் கதைகளையே

மீண்டும் மீண்டும் சுமக்கின்றன

வரிசை கட்டிக் கொள்வதும்

நேரம் கடத்தும் காத்திருப்பும்

நரம்புகளும் எலும்புகளும் வெளித்தெரியும்

காற்றுப் பைகளாக்குகின்றன.

சொரசொரத்துப் போன கடதாசிப் பூக்களில்

இருக்கும் ஈர்ப்புக் கூட

இந்த நடைப்பிணங்களில் இல்லை

..”

என்று குறிப்பிடுகிறார். இந்தக் காலப்பகுதியியல் நா.சத்தியபாலன் எழுதிய ‘இருள் கவ்வ இரத்தமாய்க் கிடந்த ஒரு காலைப் பொழுது’ என்ற கவிதையில்

“…

ஒளியின் பாதை மூடிக் கொள்கிறது

பீடம் விட்டெழுந்து தடித்த இருளிடை

கொலைக் கருவிகளுடன் அலைகின்றன

தெய்வங்கள்

மெல்லப் பரவுகிறது இரத்த வாடை

ஊர் முழுதும்

திறந்து கிடந்த கதவை அவசரமாய்

அறைந்து மூடிப்போகிறது காற்று

…”

என்று எழுதுகிறார். த.அஜந்தகுமார் என்ற கவிஞர் தனது ‘ஈக்கள் கலந்த ஒரு கோப்பைத் தேநீh’; என்ற கவிதையில்

“நேற்று சுடப்பட்டு இறந்து போனவனின்

மூச்சின் இறுதி இழை

காற்றில் வருகிறது கலந்து.

ஈக்கள் அவன் மூக்கிலும் வாயிலும்

இரத்தம் கொட்டிய இடத்திலும்

மொய்த்துக்கிடந்து

அவனின் இறுதிச் சொற்களைத்

தம்மோடு எடுத்துச் சென்றன

…”

என்று மரணம் நிரம்பிய குடாநட்டு வாழ்வை எழுதுகிறார். யாழ்பபாணத்தைச் சேர்ந்த மருதம்கேதீஸ் என்ற கவிஞர்

“அழுகிய பிணத்தைத் தின்று நிணம் வழிய

ஐந்து மொட்டைகள் வந்தன

அதில் பேச்சிழந்த மொட்டைகளின் கைகளில் உருவகங்கள்

உருவகங்கள் நெளிகின்றன சர்ப்பங்களாக.”

என்று எழுதுகிறார். பள்ளி மாணவியான தேஜஸ்வினி யாழ்ப்பாணத்தில் நம்பிக்கை தரக்கூடிய வகையில் உருவாகி வருகிற பெண் கவிஞர் அவரது ‘கனாக்காலம்’ என்ற கலைமுகம் ஜூலை- செப்ரம்பர் 2008 இதழில் எழுதப்பட்டுள்ள கவிதையில் இப்படி எழுதுகிறார்.

“…

புன்னைச் சருகுகள்

இரத்தம் தோய்ந்து காய்ந்திருந்தன

அன்றொருநாள்

அக்குருதியின் நெடியில்

எங்கள் கனாக்காலத்தின

வசந்தங்கள் கரைந்திருந்தன

…”

என்று எழுதியவர் அதே இதழில் ‘நானும் நீயும’; என்ற கவிதையில் குறிப்பிகிற இரவு எதிர்பார்ப்பகுக்ளை நிரப்பி மிகவும் இருண்டதாயிருக்கிறது.

“…

ஆந்தைகளின் அலறல்களில

புதைந்து கொண்டிருந்த நடுநிசிப் பொழுதில

நீ வருவாய

சப்த நாடிகளையும் அழுத்திப் பிடித்து

ஒற்றை முத்தம் தருவாய்

…”

என்று குறிப்படுகிறார். மனமுரண்பாடுகளையும் பாலியல் முரண்பாடுகளையும் குருதி தோய்ந்த வாழ்வையும் இவரது கவிதைகள் பிரதிபலிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் வேல்நந்தன், கலியுகன், தபின் போன்றவர்களும் தங்கள் வாழ்வு குறித்து ஓரளவு எழுதியிருக்கிறார்கள். ஈழத்தின் கிழக்கில் பஹீமாஜஹான், அனார், அலறி, கலைச்செல்வி, சி.ஜெயசங்கர், அநுராதபுரத்தைச் சேர்ந்த இளையவரான வஸீம்அக்கரம் போன்றவர்கள் எழுதுகிறார்கள். கிழக்கில் நிகழும் ஆக்கிரமிப்பை வஸீம்அக்ரம் தனது கவிதைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். அண்மையில் அவர் வெளியி;ட ‘ஆக்கிரமிப்பின் கால்த்தடம்’ என்ற தொகுப்பில் உள்ள ‘சுதேச உரிமையை தொலைத்தல்;’ கவிதையில்

“…

வெறியின் கண்சுளைகள் நித்தமும்

பிதுங்கித் தெரியும் வீரமும்

அதிகாரம் தொடுத்த வில்லின் வரைபடமும்

குடைபோல் விரித்த எனது

மரங்களின் நிழற் பரப்பில்

போர்ப் பயிற்சி செய்கிறது

…”

என்று எழுதுகிறார். வவுனியா திருகோணமலை மண்ணின் கவிதைகள் குறித்து அறிய முடியவில்லை. போர்க் காலம் மற்றும் இராணுவ ஆட்சி எல்லாவற்றையும் துண்டித்தும் தணிக்கை செய்துமிருந்தபடியால் குறைநிலையான வாசிப்பையை செய்ய முடிகிறது.

03.

ஈழத்திற்குரிய புலம்பெயர் கவிதைகள் கொண்டிருக்கிற அனுபவ வெளிகள் மிகவும் விரிந்தவை. யுத்தத்திற்கும் அலைச்சலுக்கும் இடையிலான வாழ்வை நிலத்தின் கவிதைகள் சித்திரிக்க யுத்தத்தின் தாக்கத்துடன் நீண்ட அலைச்சல்களையும் பல்லின நெருக்கடிகளையும் புலம்பெயர் கவிதைகள் பேசுகின்றன. அந்நிய நாட்டு வாழ்வையும் சொந்த நாட்டு நினைவையும் இணைக்கின்றன. தொடர்ந்து கொண்டிருக்கின்ற இந்த கவிதை நிலவரத்தில் ஜெயபாலன் முக்கியமானவர். கி.பி.அரவிந்தன், சேரன், செழியன், திருமாவளவளன், இளவாலை விஜயேந்திரன், மைத்திரேயி, வாசுதேவன், நளாயினி, பாமினி, நிரூபா, செல்வம், ஆழியாள், தான்யா, போன்றவர்கள் முக்கியம் பெறுகிறார்கள். இன்றைய சூழலில் ஜெயபாலனுடன் இளங்கோ, திருமாவளவன், பிரதீபா, நிவேதா, பா.ஐ.ஜெயகரன், தமிழ்நதி, மாதுமை போன்றவர்கள் எழுதி வருகிறார்கள். புலம்பெயர் கவிதைகள் உள்ளடக்கி வைத்திருக்கிற உணர்வுகள் மிகவும் தீவிரமானவை. பாலியல் நெருக்கடி, ஜனநாயக மறுப்பு, மாற்றுக் கருத்து என்பன புலம்பெயர் கவிதைகளில் வலிமை கொண்டிருக்கின்றன.

புதிய தேசத்தில் எதிர்கொள்ளுகிற அனுபவங்கள்தான் புலம்பெயர் கவிதைகளுக்கு வலுவளிக்கின்றன. அந்நிய மொழி அந்நிய வாழ்வு கலாசாரம் என்பவற்றின் தாக்கத்தால் ஈழ வாழ்வு குறித்த ஏக்கம் ஈழக்கவிதைகளின் இன்னொரு குரல்களாக வெளிப்படுகின்றன. அவர்கள் அலையும் தெருக்களும் பேருந்துகளும் கடற்கரைகளும் படகுகளும் ஈழக்கவிதையில் இடம்பெறுகின்றன. எப்பொழுதும் தாக்கி;கொண்டிருக்கிற யுத்தம் நிலத்தின் நினைவுகள் என்பன குறித்து அவர்கள் பேச வேண்டியிருந்தது. மரண களங்களுக்குள் மக்கள் வாழ்ந்து கொண்டிருப்பதனால் அந்தப் பதற்றம் எப்பொழுதும் அவர்களை பின் தொடர்ந்து உலுப்பிக்கொண்டிருக்கிறது.

புலம்பெயர் கவிதைகள் நீணட அலைச்லையும் தாயகத்தலிருந்து பிரிந்து தொலைவிலிருத்தலையும்தான் அதிகம் சித்திரிக்கின்றன. வாசுதேவனின் ‘தொலைவிருத்தல்’ இதில் முக்கியமான தொகுப்புகளில் ஒன்று. ‘புலம்பெயர்ந்தோர் கவிதைகள்’ என்ற திருநாவுக்கரசு தொகுத்த கவிதைப் புத்தகத்தில் அநேகமான புலம்பெயர்நத கவிஞர்களின் கவிதைகள் இடம்பெறுகின்றன. புலம்பெயர் தேசத்தில் கிட்டத்தட்ட 63 இதழ்கள் வெளிவநதிருப்பதையும் அந்தத் தொகுப்பு பதிவு செய்திருக்கிறது. இதழ்களை வெளியிடுகிற வசதி அல்லது தேவை மற்றும் தேவைக்கு ஏற்ற வசதியான இணையத்தளப் பாவனை என்பன புலம்பெயர் கவிதைகள் வெளி வருவதற்கும் பரவலடைவதற்கும் உதவுகின்றன.

04.

வ.ஐ.ச. ஜெயபாலன், ஈழப்போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் நிலத்தில் வாழ்ந்து அந்த செழுமையான அனுபவங்களையும் குருதி தோய்ந்த வாழ்வையும் துப்பாக்கிகளின் அச்சுறுத்தல்களையும் பேராட்டத்தையும் எழுதியிருக்கிறார். எழுபதுகளின் பிற்பகுதியில் எழுத ஆரம்பித்த ஜெயபாலன் நான்காவது தலைமுறைக் காலத்திலும் அல்லது நான்காவது தசாப்தத்திலும் எழுதிக்கொண்டிருக்கிறார். 1988ஆம் ஆண்டில் ஈழத்தைவிட்டு புலம்பெயர்ந்த ஜெயபாலன் போர் ஓய்கிற நாட்களில் அதற்கு இடையில் 2006 ஆம் ஆண்டு யுத்தம் தீவிரம் அடையும் வரை தாயகத்திற்கு வந்து போயிருக்கிறார். யுத்தமும் அலைச்சலும் இனக்கொலைகளும் நான்காவது தலைமுறை வரை தொடருகிறது என்ற குரூரமான யதார்த்தம் இதில் வெளிப்பட்டுக் கிடக்கிறது.

ஈழத்து கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ஈழப்போராட்டம் ஒரு ஆயுதப்போராட்டமாக ஆரப்பிப்பதற்கு முன்பே ஈழ அரசியல் நிலையின் வரப்போகிற எழுச்சி பற்றிய முனைப்புக்களை கவிதைகளாக எழுதியிருக்கிறார். ‘பாலியாறு நகருகிறது’ என்ற அவரது கவிதை வன்னியின் ஆன்ம உண்ர்வையும் இன எழுச்சியையும் உள்ளடக்கியிருக்கிறது. இந்தக் கவிதைகள் பேசுகிற வெளிகள் விடுதலை பற்றியவானவாக இருக்கின்றன. இன்னும் நம்பிக்கையை தந்துகொண்டிருப்பதுதான் ஜெயபாலனின் கவிதைகளின் சாத்தியமாக இருக்கின்றன. ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு பல வகையில் பங்களித்திருக்கிற ஜெயபாலனால் போராளிகளையும் போராட்டத்தையும் காப்பதற்காய் கூறப்பட்ட ஆலோசனைகள் எவையும் உரிய காலத்தில் கவனத்தில் எடுக்கப்படவில்லை. இன்று நேர்ந்திருக்கிற ஈழ மக்களின் வீழ்ச்சி குறித்து காலத்திற்கு முன்பாகவே எச்சரிக்கை செய்திருந்ததை நான் அறிந்திருக்கிறேன்.

தீராத சோகத்தை தந்த யுத்தம் உலகம் எங்கிலும் சிதறிப்போயிருக்கிற ஈழத் தமிழ் மக்களை எல்லாம் வதைத்துப் போட்டிருக்கிறது. தாயகத்தை பிரிந்த துக்கமும் தாயக்கத்தில் நிகழும் இனக் கொலைகளும் புலம்பெயர்ந்த தமிழர்களை மிகக்கெடுமையாக பாதித்திருக்கின்றன. ஈழப் போராட்டத்திற்காகவும் ஈழ அபிவிருத்திக்காகவும் அவர்கள் செய்த உழைப்பு சிதறடிக்கப்பட்டிருக்கிறது. இந்த அலைச்சலும் அவலமும் ஏமாற்றமும் நிறைந்த மனிதர்களின் மனச்சொற்களை ஜெயபாலனின் கவிதைகளில் காண முடிகிறது. எமது இனத்திற்கு ஏற்பட்ட இந்த அவலம் அரசியல் இருள் நிலை என்பவற்றை தோற்றுப் போனவர்களின் பாடல்கள் சித்திரிக்கின்றன.

நம்பிக்கைகளையும் பண்பாட்டையும் நிலத்தின் வாசனையையும் முழு அளவில் பிரதிபலிக்கிற இந்தக் கவிதைகள் தாய் மண் குறித்து கனவாகவும் அதன் மீதான சொற்களாகவும் இருக்கின்றன. ஜெயபாலனின் அழைப்பு சிதைந்துபோன தாயகத்தை மீள கட்டி எழுப்புகிற நம்பிக்கையைக் கொண்டிருக்கிறது. தோற்றவர்களை அடுத்த கட்டத்திற்கு உற்சாகப்படுத்துகிறது. ஈழக்கவிதைகளில் தோல்வியை அதன் எல்லை வரை சொல்லும் கவிதைகள்தான் அதிகம் வருகின்றன. வரலாற்றின் மீதான இந்தப் பெரிய பாடல்கள் ஆச்சரியப்பட வைக்கிற நம்பிக்கை கொண்டிருக்கின்றன. ஆலயங்களையும் மசூதிகளையும் ஆறுகளையும் நிலத்தையும் இந்தச் சொற்கள் சுற்றி;கொண்டிருக்கின்றன. ஈழ மக்களின் புழங்கு பொருட்களையும் வளங்களையும் சித்திரிக்கின்றன. நாம் இழந்தபோயிருக்கிற வாழ்வை இந்தக் கவிதைகள் முழுமையாக கோருகின்றன.

பழைய கதைகளையும் முதிர்ந்த சொற்களையும் கொண்டு ஈழ மக்களுக்கான அரசியலை முன்வைக்கிற தோற்றுப் போனவர்களின் பாடல்கள் இந்திய மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளையும் கண்டிக்கின்றன. ஈழ மக்களின் வாழ்வுரிமையை பெற்றுக்கொள்ள இந்தியாவிடம் கோருகின்றன. வடக்கு முஸ்லீம்களின் வெளியேற்றம் தொடர்பாக பேசிய மிகச்சிலரில் ஜெயபாலனும் ஒருவர். வடக்கு முஸ்லீம் மக்களின் அகதித் துயரத்தையும் அலைச்சலும் தனது முன்னைய கவிதைகளில் பிரதிபலித்திருக்கிறார். கோயில்களும் மசூதிகளும் நிறைந்த ஊரில் தமிழ் பேசும் மக்கள் சேர்ந்து வாழுகிற வாழ்வையும் தனது தோற்றுப்போனவர்களின் பாடல்களில் பேசுவதன் வாயிலாக தமிழ் முஸ்லீம் சமூகங்களது இணைந்த வாழ்வை அவசியப்படுத்துகிறார்.

எந்த மனிதகர்ளுடன் நட்புடன் பழகுகிற இவர் எல்லோருடனும் தொடர்பு கொள்ள விரும்புகிறவர். தன்னை ஒரு சனங்களின் போராளி எனக் குறிப்பிடுகிற ஜெயபாலன் போராடுகிற மக்களின் சாடசியாக வாழ விரும்புகிறார். இவரது பிரகடனங்களில் சனங்களது குரல்கள் மட்டுமே அடங்கியிருக்கின்றன. போராளிகளை மிகவும் ஆழமாக நேசிக்கிற தாயாகவும், தாயகத்தின் குழந்தையாகவும் தன்னை வெளிப்படுத்துகிறார். அம்மாவின் பாடல்களை காலத்தில் எழுதுகிறேன் என்ற இவரின் பிரகடனமும் காலம் துயரெரித்து அம்மாவை தின்றது என்ற சோகமும் ‘தோற்றுப்போனவர்களின் பாடல்கள்’ கவிதைகளின் முதன்மையான உணர்வுகள் என்பதை உணர முடிகிறது.

கிளிநொச்சி,

22.11.2009

http://deebamvelekkalam.blogspot.com/2010/01/blog-post.html

Edited by தீபம்

வணக்கம் தீபன்,

இன்று உங்கள் விமர்சனத்தை வாசித்து பார்த்தேன். வாசிக்கும்போது உடனடியாக விளங்குகின்ற விசயம் நாங்கள் இருக்கின்ற உலகில் நீங்கள் இல்லை, இதுபோல் நீங்கள் இருக்கின்ற உலகில் நாங்கள் இல்லை.

நீங்கள் கவிஞர்களாக இனம்காட்டியுள்ளவர்களில் ஏராளம் புலம்பெயர் கவிஞர்களை தவறவிட்டு இருக்கின்றீர்கள். சேரன், தமிழ்வாணம், காந்தன், இளங்கவி, வல்வைசகாறா, பவித்திரா (யாழ் முற்றத்துக்கு போனால் பவித்திராவின் மிகநீண்ட சுவாரசியமான மரபுக்கவிதைகளை பார்க்கலாம்: http://www.yarl.com/articles/?q=taxonomy/term/4), கவிதா, நிழலி, விகடகவி.. இப்படி வலைத்தளம் ஊடாகவே மிக நீண்ட பட்டியல் ஒன்று இருக்கின்றது. நூல் உருவாக்கம் செய்பவர்கள் மாத்திரமே கவிஞர்களா? அல்லது அவலங்களை பற்றி எழுதுபவர்கள் மாத்திரமே கவிஞர்களா?

உங்கள் விமர்சனத்தில் நீங்கள் கவிஞர்கள் என்று குறிப்பிடுகின்றவர்களில் 90%பேரின் பெயரை நான் இப்போதுதான் அறிகின்றேன். நீங்கள் குறிப்பிடுகின்றவர்களில் ஏறக்குறைய அனைவருமே தாயகத்தில் வாழும் படைப்பாளிகள் என்பதால் இந்த இடைவெளி தோன்றி இருக்கின்றது என நினைக்கின்றேன்.

post-7111-12648454111484.jpg

Edited by மச்சான்

நீங்கள் கவிஞர்களாக இனம்காட்டியுள்ளவர்களில் ஏராளம் புலம்பெயர் கவிஞர்களை தவறவிட்டு இருக்கின்றீர்கள். , ,..,.,.நிழலி, இப்படி வலைத்தளம் ஊடாகவே மிக நீண்ட பட்டியல் ஒன்று இருக்கின்றது. நூல் உருவாக்கம் செய்பவர்கள் மாத்திரமே கவிஞர்களா? அல்லது அவலங்களை பற்றி எழுதுபவர்கள் மாத்திரமே கவிஞர்களா?

மச்சான்,

தீபச்செல்வன் குறிப்பிட்ட கவிஞர்களில் அநேகமானோரின் கவிதைகளை வாசித்த அனுபவத்தில் சொல்கின்றேன். என் கவிதைகள் அவர் குறிப்பிட்டவர்களின் கவிதைகளுடன் ஒப்பிட்டால், என் பெயரை சேர்க்காதது மிகச் சரி என்றே சொல்வேன். இது அவையடக்கம் அல்ல. அவர்களின் கவிதைகளில் இருக்கும் அனுபவத் தொற்றலும், மொழியும், படிமங்களும், வாசிக்கும் போது ஏற்படும் உணர்வுகளும் மிகுந்த உயர்வானவை என்பது என் கருத்து

தீபச்செல்வன்,

அஸ்வகோசையும், நட்சத்திரன் செவ்விந்தியனையும் (மாற்று கருத்தாளர் என்பது வேறு விடயம்) விட்டு விட்டீர்கள் என்று நினைக்கின்றேன். அதே போல் கிழக்கிலங்கையில் இருந்து எழுதிய தீவிர இஸ்லாமியரான 'ஆத்மா'வையும் விட்டு விட்டீர்கள். இவர்கள் 90 களில் எழுதியவர்கள். றஷ்மி இரண்டாயிரம்களில் எழுதியவர் அல்ல. அவரின் 90 களில் எழுதிய கவிதைகள் 2000 த்தில் தொகுப்பாக வெளிவந்தது (நிகரி பதிப்பகத்தால்). 90 களில் பெளசர் ஆசிரியராக இருந்து வெளிவந்த மூன்றாவது மனிதனிலும், சரிநிகர் பத்திரிகையிலும், காலச்சுவட்டிலும் இவர்களில் பலர் தொடர்ந்து எழுதி வந்தனர்.

Edited by நிழலி

நிழலி, அவர் தனது ரசனையின்படி விமர்சனம் செய்திருந்தால் சரி ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால்.. புலம்பெயர் படைப்பாளிகள் கவிதைகளின் தரம் உயர்வானது என்பதில ஐயம் ஏதும் இல்லை. வலைத்தளம் ஊடாக பலர் கவிதைகளை பிரசுரம் செய்வதால் ஆங்காங்கே எழுத்துப்பிழைகள் காணப்படலாம். அவலங்களையும், ஒப்பாரிகளையும் சொல்வன மாத்திரமே கவிதைகளா?

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு கவிஞர்கள் ஈழத்தில் இருந்திருக்கிறார்களா...அரைவாசி பேரைப் பற்றி நான் கேள்விப்படவேயில்லை...நன்றி பதிவுக்கு.

மச்சான்‍‍‍‍‍ அவர் சேரனின் பெயரை சேர்த்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, அவர் தனது ரசனையின்படி விமர்சனம் செய்திருந்தால் சரி ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால்.. புலம்பெயர் படைப்பாளிகள் கவிதைகளின் தரம் உயர்வானது என்பதில ஐயம் ஏதும் இல்லை. வலைத்தளம் ஊடாக பலர் கவிதைகளை பிரசுரம் செய்வதால் ஆங்காங்கே எழுத்துப்பிழைகள் காணப்படலாம். அவலங்களையும், ஒப்பாரிகளையும் சொல்வன மாத்திரமே கவிதைகளா?

எனக்கு கவிதை பற்றி அதிகம் தெரியாது கலைஞன் ஆனால் நான் நினைக்கிறேன் ஈழத்தில் இருந்து எழுதுபவர்களின் கவிதைக்கும் நீங்கள் குறிப்பிட்டவர்கள் அதாவது புலத்தில் இருந்து எழுதுபவர்களின் கவிதைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது...ஆனால் நிச்சயமாக அவலங்களையும், ஒப்பாரிகளையும் மாத்திரம் சொல்வது கவிதை இல்லை.

Edited by ரதி

பெரும் வித்தியாசம் இருக்கிது. ஆனால் படைப்புக்கள், கவிஞர்கள் என்று வரேக்க நாங்கள் புலம், தாயகம் என்று பிரிக்க ஏலாது ரதி. எல்லாரும் மனுசர்கள் தானே. மட்டுப்படுத்தப்பட்ட வசதிகள் காரணமாக வெளிநாடுகளில இருக்கிற ஆக்களிண்ட கைகளில போய்ச்சேருகிற படைப்புக்களும், தாயகத்தில இருக்கிற ஆக்களிண்ட கைகளில போய்ச்சேருகிற படைப்புக்களும் வெவ்வேறானதாக இருப்பது துரதிட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கவிதை பற்றி அதிகம் தெரியாது கலைஞன் ஆனால் நான் நினைக்கிறேன் ஈழத்தில் இருந்து எழுதுபவர்களின் கவிதைக்கும் நீங்கள் குறிப்பிட்டவர்கள் அதாவது புலத்தில் இருந்து எழுதுபவர்களின் கவிதைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது...ஆனால் நிச்சயமாக அவலங்களையும், ஒப்பாரிகளையும் மாத்திரம் சொல்வது கவிதை இல்லை.

ரதி உங்கள் சந்தேகத்தில் மன்னிக்கவும் கருத்தில் நிறையவே உண்மைகள் உள்ளன. அதாவது ஈழத்துக்கவிஞர்கள் பெரும்பாலும் அனுபவித்துத்தான் கவிதைகளை உருவாக்குகின்றார்கள் அது அவர்களுக்கு இலகுவாகவும் எங்களுக்கு அதிக உணர்வுகளையும் (ரசனையையும்)கொடுக்கின்றன.

புலம்பெயர் கவிஞர்கள் நல்ல வசதியான சூழ்நிலையில் இருந்துகொண்டு பெரும்பாலும் தங்களது கற்பனையையே நம்பி கவிதைகளை வடிக்கவேண்டியுள்ளது, ஆகவே இயற்கைக்கும், செயற்கைக்கும் இடையில் வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்யும்.

ஆனால் இந்த கட்டுரையில் இருந்து பல கவிஞர்களையும், அவர்களின் படைப்புக்களையும் அறியக்கூடியதாக உள்ளது.

இணைப்புக்கு நன்றி!

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சோலைக்கிளியின் கவிதைகளில் உள்ள படிமங்கள் மிகவும் பிடிக்கும். பிரமிள் (தருமு சிவராம்) இலங்கைக் கவிஞர்தானே!

கவிஞரின் கவிதை நூலைப் பெற்றுக்கொள்ள ஒரு வழியைச் சொல்லுங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.