Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவை எங்கள் நிகழ்ச்சிநிரலுக்குள் கொண்டுவர முயல்கிறோம்

Featured Replies

இந்தியாவை எங்கள் நிகழ்ச்சிநிரலுக்குள் கொண்டுவர முயல்கிறோம்: சுரேஸ் பிரேமசந்திரன் <_<:lol:

எங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு வர வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான நிகழ்ச்சி நிரலுக்குள் அவர்களை கொண்டு வர வேண்டும். எங்களது அடிப்படை விடயங்களை விட்டுக்கொடுக்காமல் அவர்களை அந்த தீர்வுக்கு கொண்டு வரப் பார்க்கலாம். இந்தியாவுடன் பேசுவதால் அவர்களுடைய நிகழ்ச்சி நிரலுக்குள் போவதா? இலங்கை ஜனாதிபதியுடன் பேசுவதால் அவரது நிகழ்ச்சி நிரலுக்குள் போவதா? என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்மாவட்ட வேட்பாளர் சுரேஸ் பிரேமசந்திரன் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

நேர்காணலின் முழுமையான வடிவம் வருமாறு:

கேள்வி: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிளவிற்கு காரணமாக அமைந்த தீர்வுத் திட்டத்தின் நகல் ஒன்று கிடைத்திருப்பதாகக் கூறி பொங்குதமிழ் இணையத்தளம் அதனை கடந்த 14ம் திகதி வெளியிட்டிருந்தது. இந்த நகல் உண்மையில் கூட்டமைப்பினரால் வெளியிடப்பட்ட தீர்வுத் திட்டத்தினுடையதா? நீங்கள் வெளியிட்ட தீர்வுத்திட்டம்தான் தற்போதைய பிளவுக்கு வழிவகுத்ததா? தமிழ் மக்களின் கடந்த கால வாழ்வு, போராட்டங்களின் தொடர்ச்சியாக இந்த தீர்வுத் திட்டம் அமைகிறதா?

பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவு பட்டிருக்கிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்களது 22 பாராளுமன்ற உறுப்பினர்களில் சில பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தாங்களாகவே வெளியேறிச் சென்றவர்கள். சிலர் வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் புகுந்து அங்கு வசித்து வருகிறார்கள்.

இதில் பிளவு என்று நீங்கள் சொல்லுவது கஜேந்திரகுமார் மட்டுமே. இவர் கொள்கை முரண்பாடு என்று சொல்லிக்கொண்டு வெளியேறியுள்ளார். கஜேந்திரனுக்கும் பத்மினிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டு ஆசனங்களை கொடுத்திருக்குமாக இருந்தால் இந்தக் கொள்கை முரண்பாடு வந்திருக்குமா என்பது ஒரு கேள்வியாக இருக்கிறது. அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் தங்களை விலத்தியதாக கூறுகிறார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவர்களுக்கு இடம் கொடுத்திருக்குமாக இருந்தால் அவர்களுக்கு நிச்சயமாக இந்த கொள்கை முரண்பாடு வந்திருக்காது.

கூட்டமைப்பின் கொள்கையை ஏற்றுக்கொண்டிருந்தால் யாழ் மாவட்டத்தில் தன்னை முதன்மை வேட்பாளராக்கியிருக்கக்கூடும் என்று கஜேந்திரன் சொல்கிறார். அவரது அரசியல் அறிவு அவ்வளவுதான் என்றே நான் நினைக்கிறேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்களுக்கு இரண்டு ஆசனங்களை கொடுக்காமைக்கான காரணம் அவர்களது கடந்த கால நடவடிக்கைகள்தான்.

அரசியல் ரீதியாகவும் ஏனைய வழிகளிலும் அவர்கள் தங்கள் வேலைகளை குறுக்கிக் கொண்டார்கள். கஜேந்திரன் நோர்வேயிலும் பத்மினி லண்டனிலும் மிக நீண்ட காலமாக தங்கியிருந்தார்கள். இவர்கள் புலத்தில் சென்று மக்களைத் தட்டி எழுப்பினார்கள் என்று கூறுகிறார்கள். புலத்தில் இவர்கள் என்ன செய்தார்கள் என்று அங்குள்ளவர்களைக் கேட்டால் தெரியும்.

வன்னிப்போரின் இறுதிக் காலகட்டங்களில் அங்கு பல போராட்டங்கள் நடைபெற்றன. அந்தப் போராட்டங்களில் இவர்கள் தலை காட்டியிருக்கலாம். அந்தப் போராட்டங்களை அங்குள்ளவர்கள் நடத்திய பொழுது ஒரு சில நாட்கள் வெறும் நபர்களாக இவர்கள் கலந்து கொண்டார்களே தவிர அதை இவர்கள் நடத்தவில்லை. இவர்கள் புலத்தில் எதையும் செய்யவில்லை.

இதை யாரும் பிளவு என்று பார்க்கலாமா? இப்படியான இரண்டு பேர் பிரிந்திருக்கிறார்கள். நான் தினமும் தேர்தல் பிரச்சாரத்திற்காக வெளியில் சென்று வருகிறேன். தமிழ் தேசியத்திற்கான மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். அவர்கள் என்னிடம் கேட்டார்கள் ஏன் இவர்களை விலக்கினீர்கள் என்று. அவர்களுக்கு தெளிவாகப் பதிலளித்திருக்கிறேன். 22 பேரில் சிலர் இப்படி பிரிந்து செல்வதை நீங்கள் பிளவு என்று குறிப்பிடாதீர்கள். மக்கள், கூட்டமைப்புடன் இருக்கிறார்களா என்பது எதிர்வரும் தேர்தலின் பின்னர், அந்த உண்மை தெளிவாக வெளியில் வரும். தமது சொந்த பிரச்சாரத்திற்காக பிளவுபட்டதாக சொல்கிறார்கள்.

அடுத்து தீர்வுத் திட்டம் குறித்துக் கேட்டிருந்தீர்கள். இது இறுதி நகல் அல்ல. ஆனால் அந்த தீர்வுத்திட்டத்தில் முழுமையாக இல்லாவிட்டாலும் சில விடயங்கள் இதில் ஒத்துள்ளன. இந்தத் தீர்வுத் திட்டத்தை வாசிக்க கூடிய யாரும் சொல்லுங்கள், இது தமிழ் தேசியத்தை மறுதலிக்கிறதா? இது தமிழர் தாயகத்தை மறுதலிக்கிறதா? இது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுதலிக்கிறதா? என்பதை இதை வாசித்தவர்கள் சொல்ல வேண்டும். தமிழ் மக்களின் தேசியம், அவர்களின் தாயகம், அவர்களின் தன்னாட்சி உரிமை என்ற சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில்தான் இந்தத் தீர்வுதிட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையில் இராணுவ விடயங்களுடன் அரசியல் விடயங்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள்தான் கையாண்டிருந்தார்கள். அதற்கு பிற்பாடுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதைக் கையாளத் தொடங்கியது. எங்கள் கையில் அப்பொழுதுதான் பொறுப்பு வந்தது. அதற்கு முன்பு நாங்கள் பாராளுமன்றத்திலும் சர்வதேச மட்டங்களிலும் மனிதாபிமானப் பிரச்சினைகள், மனிதப் படுகொலைகள் என்று மனித உரிமை சார்ந்த விடயங்களை எடுத்துரைத்தோம். இனப்பிரச்சினைக்கு தீர்வு கொண்டுவரும் விடயங்கள் குறித்து பேசியிருந்தோம்.

விடுதலைப்புலிகள் ஒரு பலமான அமைப்பாக இருந்தார்கள். அவர்களை அழித்து விட்டார்கள். இன்று எங்களுக்கு இராணுவ பலம் இல்லை. பேரம் பேசுகிற ஆற்றல் இல்லை. மக்களை எப்படியான நிலைக்கு உள்ளாக்கியிருக்கின்றது என்றால் ஒருவரும் இல்லாமல், வேரோடும், வேரடி மண்ணோடும் இடம்பெயர்க்கப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டு அந்த மக்கள் யாருடனும் பேசமுடியாமல், பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் பார்க்க முடியாமல் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாக, வன்னி முழுக்க முழுக்க இராணுவ இடமாக்கப்பட்டிருக்கிறது. மக்கள் யாரும் இருக்கவில்லை. மக்களின் மனநிலைகளும், மனஉணர்வுகளும் தங்கள் வீடுகளுக்கு திரும்பி போகவேண்டும் என்பதும், கால்நடைகளுக்கு என்ன நடந்தது? வீட்டுக்கு என்ன நடந்தது? தங்கள் சொத்து, எதிர்காலம், வாழ்க்கை, பிள்ளைகள் என்ற நெருக்கடி மனஉணர்வு என்பது அவனவனுக்கு ஏற்படும் போதுதான் அதனை புரிந்து கொள்ள முடியும். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு பார்க்க மட்டும்தான் முடியும். வேதனையை அனுபவிக்க முடியாது. என்னுடைய வீடு அழிவடைந்தால்தான் எனக்கு அதன் வலி புரியும். எங்கள் எண்ணத்தின்படி அந்த மக்கள் குடியேற்றப்பட வேண்டும்.

எமது இனப்பிரச்சனைக்கான தீர்வு நோக்கியும் நாங்கள் போக வேண்டும். எங்கள் கைகளில் மக்களைக் குடியேற்றக் கூடிய அந்த அதிகாரம் இருக்குமென்றால் அந்த மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை கொழும்பிடம் கேட்டுக்கொண்டிருக்க தேவையில்லை. நாங்கள் வெளிநாடுகளுடன் பேசலாம். அல்லது வெளிநாட்டிலுள்ள தமிழ் மக்களுடன் பேசலாம்.

மூன்று இலட்சம் மக்கள் என்பது கிட்டத்தட்ட ஒரு இலட்சம் வரையான வீடுகளை உள்ளடக்கியது. இவற்றில் பெரும்பான்மையான வீடுகளுக்கு கூரைகள் மற்றும் கதவுகள் மாற்றினால் போதுமானது. சில வீடுகள் தரைமட்டமாக்கப் பட்டிருக்கும். ஆகவே இதனை பாகுபடுத்தி ஒவ்வொரு வீட்டிற்கும் எவ்வளவு வழங்குவது என்பதை சொல்வதற்கு எம்மிடம் அந்த அதிகாரம் இருக்க வேண்டும். இந்த அதிகாரம் இப்பொழுது கொழும்பிடம்தான் இருக்கிறது.

இந்த அதிகாரம் ஒரு தீர்வுக்கூடாகத்தான் எங்களிடம் வரலாம். அந்த தீர்வானது குறைந்த பட்சம் ஒரு இடைக்கால தீர்வாகவாவது இருக்கலாம். விடுதலைப் புலிகள் இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான தீர்வை முன்வைக்கும் பொழுது இனப்பிரச்சினை பற்றிய தீர்வுக்கு நீண்டகாலம் எடுக்கலாம், ஆனால் மக்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன அந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றார்கள்.

ஆகவேதான் மக்களை மீளக்குடியேற்ற, புனருத்தாரணம் செய்ய, அபிவிருத்தி வேலைகளைச் செய்ய, இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை என விடுதலைப்புலிகள் அதை முன் வைத்தார்கள். அன்று ஒரு இடைக்கால நிர்வாக சபை தேவையாக இருந்தது. அன்றைய மக்களின் பிரச்சினையை விட பத்து மடங்காக பிரச்சினைகள் இன்று கூடியிருக்கின்றன. இந்த நிலையில் குறைந்த பட்சம் அந்த அதிகாரங்களை கையிலெடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

இந்த தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டியதன் அடிப்படை- முதலாவது தமிழ் மக்களின் நிலமை. இதைக் கவனத்தில் எடுக்காமல் நாங்கள் தத்துவம் பேசிக்கொண்டிருக்க முடியாது. அதற்காக எதனையும் நாங்கள் விட்டுக்கொடுத்து அந்த தீர்வுத்திட்டத்தை கொண்டு வர முடியாது. தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினையை வைத்துக்கொண்டு, அதனை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுகின்றதோ என்னவோ, முதலில் அதற்கு சர்வதேச ஆதரவை திரட்ட வேண்டும்.

சர்வதேச சமூகம் இன்றுவரை தனிநாடு என்ற தீர்வை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வை நாங்கள் கேட்கிற பொழுது நிறைய நாடுகள் அதற்கு ஒத்துழைக்க சந்தர்ப்பம் இருக்கின்றது. உதாரணமாக சமஷ்டி அமைப்பு முறை. அது அமெரிக்காவில் இருக்கிறது. அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் உள்ளது. இந்தியாவில் அரைகுறை நிலையில் உள்ளது.

நாங்கள் சமஷ்டி முறையிலான தீர்வை முன்வைக்கும் பொழுது அதை யாரும் பிழை என்று குறிப்பிட முடியாது. அப்படியென்றால் அவர்களது நாட்டில் அது இருக்க முடியாது. அரசாங்கம் அதை தர மறுத்தால் அதன்மீது சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கும். நிர்ப்பந்திக்கப்படும். நாங்கள் தனி நாட்டுக்கு குறைவான ஒரு விடயத்தைதான் கேட்கிறோம். ஏற்கனவே விடுதலைப் புலிகள் பேசிய விடயங்களை எல்லாம் கவனத்தில் எடுத்து, 2005 இல் சந்திரிகா முன் வைத்த அறிக்கை. ஒஸ்லோவில் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் ஏற்பட்ட உடன்பாடு. இதை பிரபாகரன் எற்றுக்கொள்ளவில்லை என்று சொன்னாலும் அதற்கு முன் வந்த மூன்று மாவீரர் தின உரைகளில் அவர் இதைப்பற்றி பேசி ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

அந்த அடிப்படையிலேதான் இந்த தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்வுத்திட்டம் என்பது தீர்வை நோக்கி நாங்கள் இராணுவ ரீதியான ஆற்றல் எதுவும் இல்லாமல், பேரம் பேசக்கூடிய சக்தி எதுவும் இல்லாமல், முழு மக்களும் வீதியில் கொண்டு வந்து அடைக்கப்பட்ட சூழலில் சர்வதேச ஆதரவுகளை எடுக்க கூடிய வழிமுறைகள் ஆராயப்பட்டுத்தான் தயாரிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள சில வரிகளை மட்டும் வைத்துக்கொண்டு இது பற்றி பேச முடியாது. இந்தத் தீர்வுத் திட்டம் ஏன் வந்தது. எப்படியான காலத்தில் வந்தது. இவை எல்லாம் கவனத்தில் எடுத்தால்தான் அதற்கான கருத்தை ஒழுங்கான முறையில் கொடுக்க முடியும். கருப்பு வெள்ளைத் தாளில் வரும் பிரதிக்கு யாரும் வியாக்கியானம் சொல்லலாம். யாரும் தத்துவ விளக்கங்கள் சொல்லலாம். யாரும் சரி என்று சொல்லலாம். யாரும் பிழை என்று சொல்லலாம். அது அவர்களது ஜனநாயக உரிமை மாத்திரமல்ல. அதை விளக்கத்திற்கும் உட்படுத்தலாம். உண்மையில் அது அந்த கால கட்டத்துடனும் தேவைகளுடனும் இதைப் பொருத்தி பார்க்க வேண்டும்.

கேள்வி: உங்களுக்குள் ஏற்பட்ட பிளவு அல்லது முரண்பாட்டுக்கு வேறு என்ன காரணம் இருக்கிறது? அவர்கள் விலகினார்களா? அல்லது விலக்கப்பட்டார்களா?

பதில்: அதை முரண்பாடு என்று சொல்ல முடியாது. அதைப் பற்றி அவருடன் மணித்தியாலக் கணக்காக உரையாடியிருக்கிறோம். நாங்கள் அடிப்படையில் எதையும் விட்டுக் கொடுத்ததாக இல்லை. நாங்கள் விட்டுக்கொடுத்திருக்கிறோம் என்று அவர் கூறுகிறார். அதை நாங்கள் தொடர்ச்சியான விவாதத்திற்கு உட்படுத்தலாம். எங்களுடைய நிலைப்பாட்டையும் அவர்களுடைய நிலைப்பாட்டையும் விவாதத்திற்கு உள்ளாக்கலாம். அதற்கு மேலாக அவர்கள் சில சட்டத்தரணிகளை அழைத்துக் கொண்டு வந்தார்கள். ஒரு பொது இணக்கப்பாட்டை காண்பதற்காகவும் கூட்டை உடைக்கக் கூடாது என்பதற்காகவும் இந்த தீர்வுத் திட்டத்தை கூட நாங்கள் கைவிடுவதாக சொல்லியிருந்தோம்.

தேர்தலிற்கு பிற்பாடு எல்லோருடைய இணக்கப்பாட்டுடன் தீர்வுத்திட்டம் தயாரிக்க வேண்டும் என்றார். தனக்கு இணக்கப்பாடு இல்லை என்று கூறிவிட்டு லண்டன் போய்விடுவார். எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. இது ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவதுபோல. அப்படியொரு அதிகாரத்தை அவருக்கு தர முடியாது என்று நாங்கள் கூறினோம்.

எந்த விடயத்திலும் பெரும்பான்மை முடிவுகளை அங்கீகரிக்கப் பழக வேண்டும். நாங்கள் இயன்ற வரையில் ஏகமனதாக இணக்கப்பாடுகளை உருவாக்குவது சரி. விட்டுக் கொடுப்புக்கள் செய்யாமல் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றும் செய்ய முடியாது. இதைத்தான் அவருக்கு நாங்கள் சொன்னோம். அதை ஏற்றுக்கொண்டு எழுத்து மூலமாக புதிய தீர்வுத் திட்டம் ஒன்றை அடுத்த தேர்தலில் பின்னர் புதிய உறுப்பினர்களுடன் தயாரிக்கலாம் என்று கூறியிருந்தோம்.

அவரை நாங்கள் வெளியேற்றவில்லை. அவருக்கு வீட்டோ அதிகாரத்தை கொடுக்கவில்லை என்பதற்காக அவர் தானாக வெளியேறினார். இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்புதான் லண்டனிலிருந்து வந்தார். வந்தவுடன் விலத்திப் போவதற்கான சந்தர்ப்பத்தை பார்த்தாரே தவிர கூட்டமைப்பில் வேலை செய்வதற்கான சந்தர்ப்பத்தை பார்க்கவில்லை.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றபடி செயற்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. உங்களது நிகழ்ச்சி நிரல் என்ன?

பதில்: நூற்றுக்கு நூறு வீதம் இது பிழையான கருத்து. பதினெட்டு வருடத்திற்கு பிற்பாடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கைக்கு இணங்கத்தான் நாங்கள் டெல்லியை சந்தித்தோம். இந்திய பிரதமருடன் ஒரு சுற்றுப் பேச்சு வார்த்தையை நடத்தினோம். இந்த விஜயம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அறிவிக்கப்பட்டது. டெல்லியுடன் நெருக்கமான உறவை பேண வேண்டும் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் விருப்பமாக இருந்தது. அதற்கு ஏற்ப டெல்லியுடன் பேசுமாறு எங்களுக்கு சொல்லப்பட்டது. அதனால் நாங்கள் தொடர்ந்து பேசி வந்தோம்.

டெல்லிக்கு இலங்கை தொடர்பாகவோ, தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாகவோ, ஈழத் தமிழர் தொடர்பாகவோ வேறுபட்ட நிகழ்ச்சி நிரல் இருக்கலாம். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெளிவாக இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் பேரம் பேசும் ஆற்றல். தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் இல்லாமல் போகும் என்றால் எங்களுக்கு பேரம் பேசும் ஆற்றல் இல்லை. ஆகவே இராணுவ பலத்தை வைத்திருக்க வேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரே கருத்தைதான் கொண்டிருந்தது.

ஓவ்வொரு முறையும் பேசும் பொழுது விடுதலைப்புலிகளுடன் பேசுங்கள். அவர்களை ஜனநாயகப் பாதைக்கு கொண்டு வர முடியும் என்று எடுத்துச் சொன்னோம். புலிகளின் அழிவுக்கு, இலங்கை அரசுகூட சொல்கிறது இந்தியாவின் ஒப்புதலுடன்தான் யுத்தம் புரிந்தாக சொல்கிறது. இந்தியாவின் அனுசரணை இல்லாமல் இலங்கை இந்த யுத்தத்தில் வென்றிருக்க முடியாது. அதை இலங்கை ஜனாதிபதியும் சொல்கிறார்.

தங்களைப் பற்றி மோசமான கருத்தை தமிழ் மக்கள் கொண்டிருக்கிறார்கள் என்பது இந்தியாவுக்கு தெரியும். எங்களுக்கு ஒரு தீர்வு தேவை என்றால் யார் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் இந்தியாவின் பங்களிப்பு வந்தேயாகும். தனது நாட்டுக்கு குந்தகமான தீர்வென்றால் இந்தியாவுக்கு அதைக் குழப்பக் கூடிய வல்லமையும் உண்டு. அதுதான் இலங்கைக்கும் பிடிக்கும்.

அண்மைக்காலமாக இந்தியா எங்களுடைய எதிர் சக்தியாக நடவடிக்கைகளில் இறங்கயிருந்தாலும் எங்களுடைய நட்பு சக்தியாக அதை மாற்ற வேண்டும். அவர்களை வைத்துக்கொண்டுதான் இலங்கை அரசாங்கம் இந்த யுத்தத்தை நடத்தி முடித்திருக்கிறது. அதே இந்தியாவைத்தான், இந்திய இராணுவம் வருவதற்கு முன்பாக, ஐக்கிய நாடுகள் சபையிலும் வேறு பல இடங்களிலும் இலங்கையில் இன அழிப்பு நடக்கிறது என்று இந்திரா காந்தி பேச வைத்திருந்தார்.

இலங்கை இனப் பிரச்சினையை உலகம் முழுக்க கொண்டு போக இந்தியா பெரிய பங்கு வகித்தது. ராஜிவ் காந்தியின் கொலைக்கு பிறகு அதில் பெரிய மாற்றங்கள் வந்திருந்தன. பின்னர் இலங்கை அரசுக்கு சார்பாக இந்தியா மாறியிருந்தது. இலங்கை அரசாங்கம் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தியது. இந்த யுத்தத்தில்கூட இலங்கைக்கு சார்பாக இந்தியா நடந்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது.

ஆனால் இன்று இனப் பிரச்சனைக்குரிய தீர்வை காண்பதில் இந்தியாவை நட்பு சக்தியாக்க வேண்டிய தேவையுள்ளது. உலகத்தில் இன்று எங்கு பேசினாலும் அமெரிக்காவுடன் பேசினாலும் நோர்வேயுடன் பேசினாலும் அவர்கள் இந்தியாவுடன் பேசுங்கள் என்றே சொல்லுகிறார்கள். அவர்கள் 90 வீதமான பங்கை வகிக்கின்றார்கள். இந்தியாவிற்கு பின்னால் நாம் நிற்போம் என்கிறார்கள். இந்த நிலையில் இந்தியாவுடன் பேசக் கூடாது இந்தியாவுக்கு கிட்ட போகக்கூடாது என்றால் இந்த பிரச்சினைக்கு வேறு என்னதான் வழி?

இலங்கையிலிருந்து 18 கிலோ மீற்றர் தூரத்தில்தான் இந்தியா இருக்கிறது. இலங்கையில் நடக்கக்கூடிய விடயங்கள் இந்தியாவின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். இந்தியாவின் பொருளாதார நலன்களுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம். இன்று பருத்தித்துறையில் வீதிகளை திருத்த சீன அரசு வந்திருக்கிறது. இந்தியா இன்று சொல்லுகிறது, யாழ்ப்பாணத்தில் தான் ஒரு துணைத் தூதுவராலயம் போடப் போவதாக. அவர்கள் தமிழ் மக்களுக்கு விசாக் கொடுக்கும் ஆசையிலா திறக்கிறார்கள்?

இங்கு சீனாக்காரர்கள் வந்து விட்டார்கள். அவர்களை கண்காணிக்க அவர்களுக்கு ஒரு அலுவலகம் தேவைப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் துணைத் தூதுவராலயம் அமைக்க இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. அவர்கள் போடத்தான் போகிறார்கள். எங்களைக் கேட்டா போடப் போகிறார்கள்.

இதனால் அவர்களை எங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு வர வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான நிகழ்ச்சி நிரலுக்குள் அவர்களை கொண்டு வர வேண்டும். எங்களது அடிப்படை விடயங்களை விட்டுக்கொடுக்காமல் அவர்களை அந்த தீர்வுக்கு கொண்டு வரப் பார்க்கலாம். இந்தியாவுடன் பேசுவதால் அவர்களுடைய நிகழ்ச்சி நிரலுக்குள் போவதா? இலங்கை ஜனாதிபதியுடன் பேசுவதால் அவரது நிகழ்ச்சி நிரலுக்குள் போவதா? அது ஒரு சிறு பிள்ளைத்தனமான கருத்து அதில் எந்தவித அர்த்தமும் இல்லை.

கேள்வி: கடந்த காலத்தில் அரச தரப்பை குற்றம் சாட்டி அவர்களிடமிருந்து வாக்குகளை பாதுகாக்க வேண்டும் என்ற வகையில் தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்றன. கூட்டமைப்புக்குள் இருந்தவர்களின் மீதே சேறு பூசும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழ் மக்களை பொறுத்த வரையில் இது மிகுந்த துக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை என்றே நான் நினைக்கிறேன். இந்த நிலை உங்களுக்கு எப்படியுள்ளது.

பதில்: நீங்கள் குறிப்பிடும் விடயம் நிச்சயமாக நடைபெறுகிறது. அரசாங்கத்திற்கு ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்கிறது. விடுதலைப் புலிகளை இல்லாமல் செய்வது. அது முடிந்து விட்டது. இப்பொழுது இரண்டாவது பிரச்சினை இருக்கிறது. தமிழ் மக்களுக்காக பேசக் கூடிய ஆற்றல் யாருக்கு உண்டு, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாத்திரமே. தமிழ் தேசியக் கூட்டமைப்பை சின்னாபின்னப்படுத்த வேண்டும், சிதறடிக்க வேண்டும், தமிழ் மக்கள் மத்தியில் அதற்குள்ள மரியாதையை இல்லாமல் செய்ய வேண்டும் என்பது அரசாங்கம் விரும்புகிற விடயம். இந்த விடயத்தை நிறைவேற்றுவது யார்? ஒன்று இந்த தேர்;தலை பயன்படுத்தும் சுயேச்சை குழுக்கள் என்று நிறைய வந்துள்ளன. அத்துடன் ஆளும் கட்சி இருக்கின்றது. ஆளும் கட்சிக்கு சாதகமான சுயேச்சை கட்சிகள் இருக்கின்றன. எங்களில் இருந்து பிரிந்து சென்றவர்களும் அதே காரியத்தைதான் செய்கிறார்கள்.

திருகோணமலையிலிருந்து சம்பந்தரை தோற்கடிக்க வேண்டும். யாழ்பாணத்தில் சுரேஸையும் மாவையையும் தோற்கடிக்க வேண்டும் என்கிறார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து அரசு சார்பாக போனாலும்கூட யாராவது தமிழர்கள்தான் போக வேண்டும். ஆனால் திருகோணமலை மாவட்டத்தில் ஒரே ஒரு ஆசனம்தான் தமிழர்களுக்கு கிடைக்கும். கொஞ்ச வாக்கு அதிகமாக கிடைத்தால் ஒரு போனஸ் ஆசனம் கிடைக்கும். அங்கு ஒரே ஒரு தமிழ் பிரதிநிதிதான் வரப் போகிறார். அங்கு தமிழ் பிரதிநிதி வராவிட்டால் அங்கு சிங்களப் பிரதிநிதிதான் வரப்போகிறார். அப்படியானால் அங்கு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவமே இல்லாமல் போய்விடும்.

வடகிழக்கின் தலை நகரமாக கருதும் திருகோணமலையில் இருக்கும் ஒரு ஆசனத்தை இழக்கும் நிலமையை எங்களில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். உண்மையில் அவர்களுக்கு தேசியத்தைப் பற்றி என்ன தெரியும்? அல்லது வடகிழக்கு இணைப்பைப் பற்றி என்ன தெரியும்? நீங்கள் தாயகம் என்று எதைக் கூறுகிறீர்கள்? இது எல்லாவற்றுக்குமான சுயநிர்ணய உரிமை பற்றி நீங்கள் என்ன பேசுகிறீர்கள்?

இது வெறும் சேறடிப்பு மாத்திரமல்ல. அரசாங்கம் சம்பந்தரை அரசியலில் இருந்து இல்லாமல் செய்ய விரும்புகிறது. இதனால் தமிழ் தேசிய தலமையை முற்று முழுதாக அழித்து விடலாம் என்று அரசாங்கம் நினைக்கிறது. அந்த விருப்பத்தை இன்று ஈடேற்றுவது யார்? எங்களில் இருந்து பிரிந்து சென்ற கஜேந்;திரகுமார் பொன்னம்பலம். அவர்தான் சம்பந்தர் தோற்கடிக்கப்பட வேண்டும் என நூற்றுக்கு நூறு வீதம் ஈடுபாட்டுடன் இருக்கிறார்.

சம்பந்தர் தமிழ் தேசியத்தை கைவிட்டவர் என்ற அவருடைய வாதம் முதலில் பிழையானது என்பதற்கு அப்பால் வடக்கையும் கிழக்கையும் இணைக்கிற தலைநகர் திருகோணமலையின் பிரதிநிதித்துவத்தையே இல்லாமல் செய்ய வேண்டும் என சொல்லக் கூடிய ஒருவர் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கப் போகிறேன் என்று சொன்னால் எப்படி சரியாக இருக்கும்? இது எந்த விதத்தில் சரியாக இருக்கும்? அவர் தெரிந்தோ தெரியாமலோ அரசாங்கத்தினுடைய அந்த நிகழ்ச்சி நிரலுக்குள் ஆட்பட்டிருக்கிறார். இது சேறுபூசுதல் என்பதற்கப்பால் தமிழ் தேசியத்தை அழிக்கிற வேலையைதான் செய்கிறது.

கேள்வி: கடந்த காலத்தில் தமிழ் கட்சிகள் ஒன்று பட வேண்டும் என்பதை பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் வலியுறுத்தி வந்தார்கள். தமிழ் காங்கிரஸ் தலைவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி மற்றும் கூட்டமைப்பின் தலைவர் முதலியவர்கள் பிரிந்து சென்றவர்கள் வந்து இணைய வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்கள். நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறர்கள்?

பதில்: நிச்சயமாக, என்னைப் பொறுத்தவரை அடிப்படையில் முரண்பாடு என்பது பிழையானது. அவர்கள் தாங்கள் அறிந்த வகையில் தமது கருத்துக்களை கூறுகின்றார்கள். எல்லோரும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். இதற்காக சித்தார்தனைக்கூட நாங்கள் இணைத்துக் கொள்ள விரும்பினோம். சித்தார்த்தன் கடைசி வரை பார்க்கலாம் பார்க்கலாம் என கூறியிருந்தார். கடைசியில் அவர் வரவில்லை. ஆனந்தசங்கரியுடனும் பேசினோம். அவர் தனக்கு யாழ்ப்பாணத்தில் ஆறு ஆசனம் கேட்டார். அதனால்தான் எங்களுக்கு அவருடன் ஓர் இணக்கப்பாட்டிற்கு வர முடியவில்லை. நாங்கள் எல்லோருமே ஒர் அணியில் வருவதற்கான முயற்சியை மேற் கொண்டோம். அந்த வகையில் கஜேந்திரகுமாரை மீண்டும் வந்து இணைய நாங்கள் அழைப்பு விடுகிறோம்.

கேள்வி: தொடக்க காலத்தில் சாத்வீகப் போராட்டம் பிறகு ஆயுதப் போராட்டம் தற்பொழுது அரசியல் ரீதியான ஒரு போராட்டமென தமிழ் மக்களுக்கு முன்னால் விரிந்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதை எப்படி கையாளுகிறது? தமிழ் மக்களை இதற்காக எப்படி அணி திரட்ட முடியும்?

பதில்: ஆயுதப் போராட்டத்தையோ சாத்வீகபோராட்டத்தையோ நடத்த முயலும் பொழுது மக்களுடைய மன உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் பயந்து போயிருக்கிறார்கள். மக்கள் சுட்டு வீதிகளில் வீசப்பட்ட, இராணுவ ஆட்சிக்குள்தான் இன்னும் இருக்கிறார்கள். மக்களுக்கு முன்னாலும் பின்னாலும் இராணுவம்தான். மக்கள் கூட்டத்திற்கு வரப் பயப்பிடுகிறார்கள். மக்கள் வாக்களிக்க பயப்படுகிறார்;கள். இப்படியான நிலையில்தான் நாங்கள் இருக்கிறோம். இந்த நிலமையில் எங்களுக்கு இருக்கும் பலம் என்னவென்றால் இனப்பிரச்சினை தீர்வுக்கு சர்வதேச ரீதியாக ஒரு சாதகமான சூழல் ஏற்பட்டிருப்பதுதான்.

அந்த சாதகமான சூழலை மையப்படுத்தி அதன் ஊடாக ஒரு தீர்வை நோக்கி போவது எப்படி? அப்படியான தீர்வை நோக்கி செல்லும் பொழுது இலங்கை அரசாங்கம் அதற்கு ஒத்து வராமல் இருக்குமாக இருந்தால் நிச்சயமாக சர்வதேச சமூகம் எங்கள் பக்கம் இருக்கும். சர்வதேச சமூகம் எங்களுடன் நிற்கும் அந்தக் கால கட்டத்தில் மக்களை திரட்டி தீர்வுத் திட்டத்தை கொண்டு வர சாத்வீகமான போராட்டத்தை நடத்த முடியும். அதற்கு முன்பாக மக்களுக்கு தைரியம் அளித்து அவர்களை மீளக் குடியேற்றி அந்த மக்கள் தங்கள் கால்களில் நிற்கும் ஒரு நிலை வந்தால்தான் மக்கள் சிந்திப்பதற்கான சூழல் தோன்றும்.

சுற்றி வர இராணுவம். வெளியில் போவதற்கும் மலசலம் கழிப்பதற்கும் வழியில்லாமல் வேறு விடயங்களை பேச முடியாது. அந்த மக்களுக்கு பாதுகாப்பான வாழ்வு வேண்டும். அவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும். தொழிலை தொடங்க வேண்டும். எங்கள் சனம் பிச்சைக்காரராக இருந்த சமூகம் அல்ல. இன்று மிக மோசமான பிச்சைக்காரர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். அந்த வழி முறையில் போனால்தான் நிச்சயமாக இந்த பேராட்டத்தை கொண்டு செல்ல முடியும்.

http://www.puthinamnews.com/

  • கருத்துக்கள உறவுகள்

பிராந்தியத்தில் இந்தியாவும் சீனாவும் இணைந்து இப்போதைக்கு செயல்படுகின்றனவா என்று ஒரு சந்தேகம் இருக்கு. அப்படி இருந்தால் உப்பிடிப்பட்ட தந்திரம் ஒண்டும் சரிவராது.

அப்பிடியில்லாமல் சீனாவும், இந்தியாவும் போட்டிக்கு இலங்கையை கவனிப்பினமா இருந்தால், தமிழ் கட்சிகள் இந்தியாவுக்கு சோப்பு போடுவது நல்லது. இந்தியன் எதையும் வாங்கித்தரமாட்டான். அதேமாதிரி தமிழ்க்கட்சிகளாலயும் தமிழருக்கு ஒண்டும் செய்ய ஏலாது. ஆக, ரெண்டு வீணாப்போனதுகள் கூட்டுச் சேருவதில எந்தத் தவறும் இல்லை..! :D

கூட்டுச் சேருவதால இந்தியன் தனக்கு ஏதோ இலங்கையில பிடி இருக்கு எண்டு சந்தோசப் படட்டும். இதால சீனாக் காரன் கொஞ்சம் அரிச்சலடைவானா இருந்தால் அது கொஞ்சம் நல்லம். <_<

காலப்போக்கில சிங்களவனுக்கு சீனா தேவையில்லை என்கிற நிலையைக் கொண்டு வரவேணும். :lol:

//அவர்கள் போடத்தான் போகிறார்கள். எங்களைக் கேட்டா போடப் போகிறார்கள்.//

//இதனால் அவர்களை எங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு வர வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான நிகழ்ச்சி நிரலுக்குள் அவர்களை கொண்டு வர வேண்டும்.//

அவர்கள் எங்களைக் கேட்டா போடப் போகிறார்கள் என்று கூறி விட்டு அடுத்த வரியில் எங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்கு அவர்களைக் கொண்டு வரப் போவதாகாச் சொல்லும் சுரேசை என்ன என்று சொல்வது? இந்தியாவை என்றும் நீங்கள் உங்கள் நிகழ்ச்சி நிரலுக்குக் கொண்டு வர முடியாது.அதற்கான பலம் உங்களிடம் இல்லை.பலமான ஒருவனை எமது நிகழ்ச்சி நிரலுக்குக் கொண்டு வருவதானால் நாம் அதே பலத்துடன் இருக்க வேண்டும் அல்லது அதே பலமான ஒருவனுடன் இருக்க வேண்டும்.இரண்டும் இல்லாமால் இந்தியாவை விட்டால் எமக்கு யாரும் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தால் இந்தியா எம்மை தொடர்ந்தும் கொத்தடிமையாகவே வைத்திருக்கும்.சிங்களவ்ர் எவ்வாறு இந்தியாவைக் கையாளுகிறார்கள் என்று பாருங்கள்.அவன் சீனாவை வைத்து இந்தியாவைக் கையாளுகிறான்.இரானை இரசியாவை வைத்து மேற்குலகைக் கையாளுகிறான்.

உங்களோடு இருந்த எம்ம்பிக்களையே கையாள முடியாத நீங்கள் இந்தியாவைக் கையாளப் போகிறீர்கள்.முதலில் மாறி வரும் உலக ஒழுங்கைப்படியுங்கள்.எவ்வாறு எலோரையும் அரவணைத்துச் செல்வது என்று பாருங்கள்.

இந்திய இராணுவத்தோடை நிண்டு தமிழ் மக்களை காத்த அழகைதான் பார்த்தோமே... இனியும் ஒருக்கா இந்தியாவா...??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.