Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்துப்படைப்பாளி இரவியுடன் நேர்காணல் -குமுதம் தீராத நதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

74650783.jpg

தற்கால உலகில் வாழ்வுரிமைகள் மறுக்கப்பட்டு,மறைந்து வாழும் மக்கள் கோடானுகோடி. அகதிகளாக, போர்க் குற்றவாளிகளாக, தங்கள் அடையாளங்களை இழந்தவர்களாக,தனக்கும் தாய்மண் இருக்கிறது என்பதையே வெளியே சொல்ல முடியாதவர்களாக,அபலைகளாக, ஆதரவற்றவர்களாக,விளிம்புநிலை மக்களாக,சர்வதேச அளவில் தீண்டப்-படாதவர்களாக,பிச்சைக்காரர்களாக ரகசிய வாழ்க்கை வாழ்பவர்கள் அவர்கள்.

அம்மக்களில் கணிசமானவர்கள் தமிழ் மக்கள் என்பது தமிழர் தம் வரலாறே சாட்சியமாகக் கொள்ளும் அவலம்.இருந்தும் அவர்கள்தம் நினைவுகளை யார் தான் அழித்துவிட முடியும்.தற்கால அரசியலிலும், எதிர்கால அரசியலிலும் அவர்தம் நினைவுகள்தாம் அவர்களின் கூராயுதமாக விளங்க உள்ளது.அவை தற்கால உலக இலக்கியத்துக்கு அளிக்கும் கொடை.அப்படி லட்சோப லட்சம் தமிழ் அகதிகளில் ஒருவர் இரவி. தன்னால் இனியும் தனது நினைவுகளை மறைத்து வைக்க ஏலாது, அவர் எழுதிய ஒரே ஒரு புத்தகம் ‘காலம் ஆகி வந்த கதை’.ஆனால், தமிழ் இலக்கியத்துக்கு அது வேறு ஒரு ஒளியைப் பாய்ச்சியுள்ளது.

‘மரணத்தின் முன், விடுபட்டுச் சென்று, திரும்பத் திரும்ப வரும் குழந்தையாக,ஒலிகளுடனும் காற்றுடனும் மனத்துடனும், மனிதர்-களுடனும் எழுத்தில் அலையும் நினைவுகள்’ என்று எம். கண்ணன் இப்புத்தகத்துக்கு எழுதிய முன்னுரையில் சரியாகச் சொல்லும் நினைவுகள்.வவுனியாவில் வீசிய சூறைச் சாவகத்தால் தான் கூட அந்நினைவுகளைத் துடைக்க இயலவில்லை.பனை மரங்களையே பேயாட்டம் போட வைத்த பெரும் காற்றை அம்மக்கள் மிகவும் நம்பி வாழ்ந்த வாழ்க்கை காலம் ஆகி இலக்கியத்தில் பதிவு பெற்றுள்ளது. அதனால் வவுனியாவில் காடுகளும் சுடுகின்றன என இலங்கை பாராளுமன்றம் அதிர்ச்சி அடைந்தது.

இரவி என்கிற தனி மனிதர், அவரது மனிதர்கள், அவரது கிராமம், கிராமத்தின் அம்மன் கோயில், சாமியாடிகள், சுழன்றடித்துக் காலத்தைச் சிதறடித்துக் கொண்டே இருக்கும் சாவகம் காற்று என பெயர் மாற்றாமல், வயது மாற்றாமல், குணம் மாற்றாமல் அப்படியே பதிவு செய்துள்ளார். அதனால்தான் “தொலைந்து போன நம் உலகின் சித்திரிப்பு பற்றிய மேலும் ஒரு காலடி...’’ என்று பேராசிரியர் கா. சிவத்தம்பி தனது பாயிரத்தில் கூறியுள்ளார்.

புனைவெழுத்து இதழியல் தரவுகள் போன்ற ஆதாரக்கூறுகளை அப்படியே படைப்பாக்கும் போது அப்படைப்புகள் சமூக வரலாற்றுக்கான தள ஆவணங்களாகவும், நிலை ஆதாரங்களாகவும் எவ்வாறு மாறுகின்றன என்பதற்கு இக்கதைகள் ஒரு ஆவணமாகத் திகழ்கின்றன.

அண்மையில் இரவியைச் சந்தித்தபோது அவருடன் ஒரு நீண்ட உரையாடல் நடந்தது.அவரது பேச்சைக் கேட்டபோது தொண்டைக் கரகரப்பும், சினமும், எதிர்காலம் குறித்த கவலையும் மேலெழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை. இனி அவ் உரையாடலின் தொகுப்பு.

தீராநதி: ஒட்டுமொத்த இலக்கியத்தில் தற்கால, குறிப்பாக இலங்கையின் பேரினவாதம் இரண்டு தலைமுறைகளாகத் தொடுத்து வரும் போர் மற்றும் புலம்பெயர் சூழலால் உருவாகி வரும் ஈழத்துத் தமிழ் இலக்கியம் காத்திரமான பங்களிப்பினை ஆற்றியுள்ளது. தமிழிலக்கியத்துக்குப் புதிய தன்மைகளை, பரிமாணங்களைக் கொண்டு சேர்த்துள்ளது. ஈழத்துப் பெண்ணியக் கவிதைகள் தமிழுக்கான பெண்மொழியை மீட்டுத் தந்துள்ளதைக் கூறலாம். தமிழுக்குப் போர்ச்சூழல் குறித்த இலக்கியங்கள் புதுசு. தற்காலப் போர்களுமே புதிய தன்மை கொண்டதாக இருக்கின்றன.

நாட்டுக்கு நாடு என்பதைவிட இனத்துக்கு இனம் போர்கள் தூண்டப்படுகின்றன.தற்காலப் போர்முறைகளின் பாதிப்பு குறித்த பதிவுகளாகப் பார்க்கும்போது உலக அளவில், ஈழத்து இலக்கியம்தான் போரின் வலியைக் காத்திரமாகப் பதிவு செய்துள்ளது;பன்முகத் தன்மைகள் கொண்ட படைப்புகளை,படைப்பாளிகளை அதிகமாகப் பார்க்க முடிகிறது என்று நினைக்கிறேன். இது சரியா?

இரவி: வியத்நாம் ஆக்கிரமிப்புப் போர், கியூபா மீதான ஆக்கிரமிப்புப் போர் ஆகியவற்றைப் பொருத்தவரை குறிப்பிடத்தக்க கலை இலக்கியப் பதிவுகள் உள்ளன.சம காலத்தைப் பொருத்தவரை பாலஸ்தீன ஆக்கிரமிப்பு, ஈராக்ஆக்கிரமிப்பு மற்றும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் நடந்து வரும் இனப்படுகொலைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளைக் கூறலாம். ஈழத்தைப் பொருத்தவரை,அப்போது வாழ்ந்த ஜனத்தொகையைப் பொருத்தவரை 50 இலட்சத்துக்கு உட்பட்டவர்கள்தாம். அதில் 98 வீதமானவர்கள் கல்வியறிவு பெற்றவர்கள்.அதே சமயத்தில் ஈழத்தில் கலை இலக்கியப் பாரம்பரியமும் இருந்தது. இலக்கியவாதி, எழுத்தாளர் என்று யாராக இருந்தாலும் அவர்கள் தனது மனசாட்சிக்குத் துரோகம் செய்யாமல் இருக்கும் பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாய, தார்மீகச்சூழல் இருந்தது. 1980களில் இப்பிரச்சனை உச்சத்தில் இருந்த காலத்தில் நாங்கள் ‘புதுசு’ என்ற சஞ்சிகை நடத்துகிறோம். அதில் ஒருவர் எழுதுகிறார்:

‘ஒருநாள் வரும்

எழுதுகோல் நிற்கும்

கைகள் ஆயுதம் ஏந்தும்

இலக்கியம் இயல்பாகவே யுத்தத்துக்கு

இட்டுச் செல்லும்‘

சமகாலத்தில் ஈழத்தின் அத்தனை படைப்பாளிகளையும் பார்த்தீர்கள் என்றால்,அனவரும் ஈழப் போரில் ஏதோ ஒருவகையில் சம்பந்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அது தவிர்க்க முடியாத ஒரு விடயமாக இருந்தது. அவர்கள் ஏகே 47ஐத் தூக்காமல் சஞ்சிகைகளைத் தூக்குகிறார்கள். வெடிகுண்டைத் தூக்காமல் பேனையைத் தூக்குகிறார்கள். யுத்தத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் படைப்பாளிகளாகவும் இருந்தபாடியால் அதையும் ஆயுதமாக்கினர். படைப்புக்கு அங்கு தேவையும் இருந்தது. சுத்த ராணுவக் கண்ணோட்டத்தோடு எந்த விடுதலை அமைப்பும் இருக்கவேயில்லை. அங்கே அவர்களுக்குள் பிரிவுகள் இருந்தன. கலை இலக்கியப் பிரிவு,பிரச்சாரப் பிரிவு இப்படியெல்லாம் ஒவ்வொரு விடுதலை அமைப்புக்குள்ளும் இருந்தது. விடுதலை அமைப்புகளின் மேன்மட்டத் தலைவர்கள் ஓரளவுக்கு இலக்கியம் தெரிந்தவர்களாக இருந்தார்கள்.

01alk.jpg

தீராநதி: உதாரணமாக?..

இரவி:உதாரணமாகச் சொல்ல வேண்டுமெண்டால் எமது தேசியத் தலைவர் பிரபாகரனைச் சொல்லலாம்.அவர் மிகுந்த வாசிப்புக் கொண்டிருந்தார். ஒரு நாளைக்கு ரெண்டு புத்தகங்கள், மூன்று புத்தகங்கள் வாசிக்கிறவராக இருந்தார்.பொட்டு அம்மான் படைப்பாளியாகவே இருந்தார். அம்புலி, வானதி, கேப்டன் பால் போன்றவர்கள் கவிஞர்களாக இருந்தார்கள். பல பெண்கள், பெண்ணியக் கவிஞர்களாக இருந்தார்கள். விடுதலைப்புலிகள் மட்டுமல்லாமல் ஏனைய இயக்கங்களிலும், உதாரணமாக,பிளாட் அமைப்பில் செல்வி என்பவர் பெண்கள் அமைப்புக்குத் தலைவராக இருந்தவர். அவர் ஈழத்தில் பேசப்படும் நல்ல கவிஞருமாவார்.ஈ.பி.ஆர்.எல்.எப்ஐ எடுத்துக் கொண்டால் அதன் மத்தியக்குழு உறுப்பினர் செழியன் நல்ல கவிதைகள் எழுதியுள்ளவர். அங்கு 20, 30க்கும் மேற்பட்ட விடுதலை இயக்கங்கள் தோன்றியது போல 40, 50க்கும் அதிகமான புதிய சஞ்சிகைகள் இந்த இயக்கங்களுக்கு ஆதரவாகத் தோன்றின.

தீராநதி:விடுதலை இயக்கங்களின் தலைவர்களுக்கு இலக்கியத்தோடு பரிச்சயம் இருந்தது என்றால், நவீன இலக்கியங்களோடு புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் முதலான படைப்பாளிகளின் படைப்புகளோடு பரிச்சயம் இருந்ததா?

இரவி: அவர்கள் வாசிப்பது கல்கி, சாண்டில்யன்கள் அல்ல. ஒருவருமே அவர்களை வாசித்தவர்கள் அல்ல. ஜெயகாந்தன், அசோகமித்திரன் போன்றோரைத்தான் வாசித்தார்கள்.

தீராநதி: இங்குள்ள தலைவர்கள் வாசிப்பு என்பது சங்க இலக்கியம், தொல்காப்பியம்னு ஆரம்பிச்சு நவீன காலத்துக்கு வரும்போது சட்டென்று கல்கி,சாண்டில்யனுக்குத் தாவி விடுகிறார்கள்.அவர்களைப் பொருத்தவரை பாரதிதாசனுக்குப் பிறகு,அவர்கள் அறிந்த கவிஞர் கண்ணதாசன்தான். அவர்களைப் பொருத்தவரை தமிழ்மரபு வளைக்கப்பட்டதாக உள்ளது. நவீன இலக்கியம் குறித்த உரையாடல் என்பது குறிப்பாக,திராவிட இயக்கத் தலைவர்களிடம் காணப்படுவதில்லை. இந்தக் கண்ணோட்டத்தில் கேட்கிறேன்.

இரவி: நாங்கள் ‘புதுசு’ நடத்தறோம். 1983இல் இனக்கலவரம் வருகுது. அப்ப ‘இனி மரணத்தில் வாழ்வோம்‘ என்று தலைப்பில் போடுகிறோம். உள்ளுக்குள் எழுதுவது எண்டு சொன்னால்,‘நாம் குட்டக் குட்டக் குனிந்தோம், எல்லாம் முடிந்தது’ என்ற வசனங்கள் எழுதிவிட்டு, ‘தயாள நாட்கள் முடிந்தன, இனி உங்களுக்கான செய்தி என்ன?’ என்று எழுதுகிறோம். அப்போ கும்பள்கச்சத்துறையைச் சேர்ந்த ‘புதுசு’ சிவக்குமார் என்கிற கிறித்துவ வாசகர் எழுதுகிறார்: ‘இச்செய்தி எமக்குமானது. இனி கடிதம் எழுதமாட்டேன். மீண்டும் சந்திக்க இயலும் எண்டால் சந்திப்போம்‘ எண்டு வாசகர் கடிதம் எழுதுகிறார். போராளிகளாக மாறுகிறவர்கள் கூட வாசிப்பு அனுபவங்களினூடாகக் கூர்மை அடைவதாக எங்கட சூழல் இருந்தது. பெரும்பாலும் வாசிப்பு என்பது ஈழத்தில் அதிகமாக இருந்தது. வைரமுத்து போன்றோரையெல்லாம் படைப்பாளியாகக் கொள்ளும் நிலைமை ஈழத்தில் இருக்க இல்லை.

தீராநதி: நீங்கள் சொல்வது குறித்துச் சிந்திக்கும்போது, தமிழ்நாட்டில் சமகாலப் பிரச்சனைகள்,போராட்டத்தில் முகிழ்த்து கலாபூர்வமாக வெற்றிபெற்ற படைப்புகள் ஒப்பீட்டளவில் இன்றுவரை மிக மிகக் குறைவாக உள்ளன.

இரவி: இந்த வகையில் சேரன், ஜெயபாலன் ஆகியோர் முக்கியமான கவிஞர்கள். இவர்கள் ஏதோ ஒரு வகையில் அரசியலோடு தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள்.இன்னும் சொல்லப் போனால் இப்படியானவர்களைத் தங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்வதில் இயக்கங்கள் பெருமைப்பட்டுக் கொண்டன. அந்த அளவுக்கு இயக்கங்கள் இருந்தன. குறிப்பாக, தேசியத் தலைவர் பிரபாகரன் நாளுக்கு இரண்டு, மூன்டு புத்தகங்கள் வாசிப்பவர். தமிழில் என்ன புதுப் புத்தகம் வந்தாலும் உடனே வாசித்துப் பார்க்க வேணுமென்டு விரும்புபவர். அதைவிட இயக்கத்தவர்கள் எழுதிய புத்தகங்கள் மிக அதிகம். எல்லாம், இயக்கத்துக்கு எதிரான விமர்சனம் ஒவ்வொண்டுக்கும் பதில் சொல்லி எழுதப்பட்ட புத்தகங்கள்.அது பொது வாசிப்புக்குக் கிடைக்கவில்லை என்பது துரதிர்ஷ்டம்.அப்புத்தகங்கள் எல்லாம் பொது வாசிப்புக்குக் கிடைத்திருக்கச் செய்ய வேண்டும். அதில் அவர்கள் தோல்வியடைந்து விட்டார்கள் எண்டுதான் நினைக்கிறேன். ஆனால், அவர்களை விமர்சித்து எழுதிய புத்தகங்களைக் காட்டிலும் மூன்டு மடங்கு புத்தகங்களை இயக்கத்தவர்கள் எழுதியுள்ளார்கள்.

அதைவிட தமிழீழ அரசில் பதிப்புத்துறை இருந்தது.அதில் தொடர்ந்து பொது வாசிப்புக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டு வந்தன.நான் காலம் ஆகி வந்த கதைகளை ஈழ முரசில் தொடர்ந்ததை வாசித்து அவர்கள் விரும்பி வெளியிட்டது என் பேரதிருஷ்டம் எண்டு நினைக்கிறேன்.அதன் வெளியீட்டுக்குப் போனேன். கிளிநொச்சியில் மரங்கள் அடர்ந்த பகுதியில், எதிரிகளின் கண்ணுக்குப் படாமல் மூடாக்கிடப்பட்டு பிரபாகரனின் நேரடி மேற்பார்வையில் ரகசியமாக அச்சகம் இயங்கிக் கொண்டே இருந்ததைப் பார்த்தேன்.என் புத்தகங்கள் அச்சிட்டு அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்-ததைப் பார்த்துப் புளகாங்கிதமடைந்தேன்.

தீராநதி:இருந்தபோதும் பெண் சமத்துவம்,அனைத்து மத உணர்வுகளுக்கும் மரியாதை, சாதி போன்ற கருத்துருக்களில் இயக்கத் தலைவர்களின் பண்பாட்டுக் கொள்கையில் இத்தகைய வாசிப்புகளின் செல்வாக்கு இல்லாமல்தானே இருந்தது?

இரவி: இயக்கத்தில் சாதிப் பாகுபாடு கிடையாது. சில பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால், தலைமை மட்டத்தில், கொள்கை மட்டத்தில் ஒட்டுமொத்தத் தேசிய இனம் என்ற அடையாளம்தான் இருந்தது. சிறுபான்மை மதத்தினரைப் பொருத்தவரை தொடக்கம் முதலே அவர்களிடம் ஊசலாட்டம் இருந்து வந்துள்ளது. மொழி வழி தேசிய இன உணர்வு என்பது மிகவும் முக்கியம். இயக்கத்தைப் பொருத்தவரை இந்தக் கண்ணோட்டத்தில்தான் அணுகி அணைத்து வந்துள்ளது. சில நேரங்களில் இது அவர்களுக்கு ஒவ்வாமல் போயிருக்கலாம். அவர்களின் தலைமை எப்போதுமே ஊசலாட்டத்துடன் இருந்து வருகிறது. சிங்களப் பேரினவாத ஆதரவாளர்களாகவும்,சிங்கள ஆட்சியில் பங்கேற்பவர்களாகவும் உள்ளனர். இயக்கத்தைப் பொருத்தவரை ஈழ விடுதலை என்ற இலக்கில் அவர்கள் எப்போதுமே நீக்கி வைக்கப்படவில்லை. பெண் சமத்துவத்தைப் பொருத்தவரையில் பாலினப் பாகுபாடு அகற்றுதல் இன்னமும் எட்டாக்கனியாகவே உள்ளது.

தீராநதி: புஷ்பராஜன் முதல் ஷோபா சக்தி வரை விடுதலைப்புலிகள் மீது நேர்மையான விமர்சனங்களை முன் வைத்துள்ளனரே?

இரவி: புஷ்பராஜனுக்குப் புற்றுநோய் இருப்பதும், தாம் விரைவில் இறந்து விடுவோம் என்பதும் தெரியும். ஆனால் இறப்பதற்கு முன் விகடனுக்கு அளித்த பேட்டியில் தமிழீழ விடுதலைப்புலிகள் தனி ஈழம் அமைப்பர் என்று கூறி இருந்தார்.இன்னும் சில நாட்களில் இறந்து விடுவோம் என்பது அவருக்குத் தெரியுமாதலால் அவர் யாருக்கும் பயந்து இதைக் கூறியிருப்பார் என்று கூற முடியாது. புலிகள் மீது நம்பிக்கையோடுதான் இருந்தார்.ஆனால் அவர் இறந்த பிறகு வெளிவந்த ‘ஈழப் போராட்டம் எனது சாட்சியம்‘என்ற புத்தகம் புலிகளை அவர் விமர்சிப்பது போல் வந்துள்ளது. இது சந்தேகத்துக்கு இடமளிப்பதாக உள்ளது. ஷோபா சக்தி என்னை விடச் சிறந்த எழுத்தாளர். மிகச் சிறந்த படைப்பாளி. அவரைப் போல் என்னால் எழுத முடியாது. ஆனால் அரசியலில் அவர் சிறியவர்.

தீராநதி: இயக்கத் தலைவர்களிடம் வாசிக்கும் பழக்கம் இருக்கிறது என்றால் போராளிகளையும் ஊக்குவித்தார்களா?

இரவி: அப்படி ஊக்குவித்தார்களா என்று தெரியாது. புத்தகம் வாசிக்கும் நேரத்தில் துவக்குகளைக் கழற்றி மாற்றப் பழகலாம் என்று இயக்கத் தலைவர்கள் கூறுவதும் உண்டு.

தீராநதி: நீங்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவரா?

இரவி: இல்லை. நான் 1980களில் தமிழ் தேசிய விடுதலை முன்னணி (என்.எல்.எஃப்.டி.எல்) என்ற அமைப்பில் செயல்பட்டு வந்தேன். அது மாவோயிஸ்ட் சிந்தனையில் செயல்பட்ட இடதுசாரி இயக்கம். தற்காப்புக்கான ஆயுதப் பயிற்சி பெற்றேன்.மற்றபடி ஆயுதப் போராட்டத்திலோ, புலிகள் அமைப்புடனோ எனக்குத் தொடர்பு கிடையாது. ஆர்மி செய்த வன்செயல்களுக்கு எதிராகப் பிரசாரம் செய்ததால் என்னைப் புலிகள் எண்டு ஆர்மி சந்தேகித்தது. அதனால்தான் தாயகத்தை விட்டுப் புலம் பெயர நேர்ந்தது.

தீராநதி: உங்களது ‘காலம் ஆகி வந்த கதை’ ஈழ வாழ்க்கையைப் பதிவு செய்ததில் பரவலான கவனத்தைப் பெற்றது.தலைப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. இந்தக் கதைகள் எதையோ சொல்ல வருவது போன்றும் தோன்றுகிறது?

இரவி: 1995 வாக்கில் என்னை ஆர்மி தேடியது. நான் அப்போது என்.டி.எல்.எப்.அமைப்பில் இருந்தேன்.நான் புலி என்று ஆர்மி நினைத்தது. அதனால் நான் புகலிடம் தேடி வெளியேறினேன்.இனியும் அலைச்சல் ஏலாது என்று உக்ரைன் வந்தேன்.அங்குதான் நான் அழுவதை நிறுத்தினேன். நண்பர்கள் என்னை மீட்டனர். ஜெர்மனியில் ஒரு வருடம் இருந்துவிட்டு இங்கிலாந்து போனேன்.அங்கு ஐ.பி.சி. தமிழ் வானொலியில் சேர்ந்தேன். அங்குதான் இந்தக் கதைகள் எனக்கு வந்து சேர்ந்தன. ‘புலம்‘ சஞ்சிகையைத் தொடங்கி என்னை ஆசிரியராக்கினார் தாசீசியஸ். இதில்தான் ‘காலம் ஆகி வந்த கதை’களை எழுதினேன்.

இவை புனைவு என்றும் சொல்ல முடியாது. இனியும் என்னால் உள்ளே இருத்தி வைக்க ஏலாது என்ற கொந்தளிப்பு ஒரு பக்கம். மறுபக்கத்தில் எங்கள் நிலமெல்லாம் தூர்ந்து போய் நாங்கள் 20, 30 ஆண்டுகளாகப் புலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் நான் வாழ்ந்த வாழ்க்கையை, போர்க்காலச் சூழலை அப்படியே எந்த ஒரு பெயரும் மாற்றாமல் பதிவு செய்தால்தான் தீரும் என்பதால் எழுதினேன். அப்படி எழுதினால்தான் கொந்தளிப்பு அடங்கும் என்று எழுதினேன்.

1980களின் இறுதியில் பண்டிதமணி காலமான அன்று, அவர் பற்றிய சிறப்புப் பாயிரம் ஒண்டு கலாநிதி கா. சிவத்தம்பி எழுதினார். அதற்கு ‘பண்டிதமணி காலம் ஆனார்’ என்று பிரித்து எழுதினார். அது என்ன எண்டால் பண்டிதமணியுடன் நாவலர் பரம்பரை முடிவுக்கு வந்தது என்பதைக் குறிப்பதற்காக அப்படிக்க எழுதினார்.எனக்கு அது பிடித்திருந்தது. நான் இன்று முழுக்கவும் புலம் பெயர்ந்து வாழும் சூழலில் ஈழத்தின் எனது வாழ்க்கை காலம் ஆகியது என்பதை உணர்த்துவதாக எண்ணி, பேராசிரியர் அனுமதியுடன் ‘காலம் ஆகி வந்த கதை’ என்று தலைப்பிட்டேன். ‘புலம்’ இதழில் 7 கதைகள் வந்தன. ‘புலம்’ இதழிலிருந்தும், ஐ.பி.சி. வானொலியிலிருந்தும் விலகினேன். 2000 ஆம் ஆண்டில் மிகவும் மனச் சோர்வுற்றிருந்தேன். அப்போதும் நண்பர்கள், ‘எழுது, எழுது, எழுதுவதுதான் மனச்சோர்வைப் போக்கும்’ என்றார்கள். அப்போதுதான் மீதி இருபது கதைகளை எழுதினேன். அக்கதைகளை நான் எழுதவில்லையானால் எனக்கு மீண்டும் உயிர் வந்திருக்காது. பின்னர் 27 கதைகளும் ஈழ முரசில் வெளியானது.இக்கதைகளைப் புத்தகமாக வெளியிட்டு இயக்கம் என்னைச் சிறப்பித்தது.

தீராநதி:இடதுசாரிச் சிந்தனையாளர் போலத் தோன்றும் உங்கள் கதைகளில் சாமியாடிகள், அம்மன் வழிபாடு போன்றவற்றின் மீது ஒரு மயக்கம் இருப்பது போல் தோன்றுகிறதே?

இரவி: 12 ஆம் நூற்றாண்டில் சோழ இளவரசி ஒருவள் இலங்கைக்கு வந்தவளாம். அவள் இங்கு வந்து ஆட்சி பரிபாலனம் செய்தபோது மூன்று குலங்களைத் தமிழ்நாட்டிலிருந்து கொண்டு வந்தவள்.அவர்கள் பிராமணர்கள், வீரசைவர்கள், இசை வேளாளர்கள். பிராமணர்களின் பிழைப்புக்காக யாழ்ப்பாணம் பகுதியில் சில கோயில்கள் தானமாகக் கொடுக்கப்பட்டன. ஏழு விநாயகர் கோயில்களும், முருகன் கோயிலும் இவ்வாறு தானமாகக் கொடுக்கப்பட்டிருந்தன. வேறு எந்தக் கோயிலிலும் பிராமணர்களைப் பூசாரியாகக் கூடக் காண முடியாது. இவ்வாறு 12 ஆம் நூற்றாண்டில் பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட கோயில்கள் சார்ந்த இடங்களில் கும்பகோணம் பகுதியைப் போன்ற வாழ்க்கையை அப்படியே இங்கு காணலாம். அந்தக் கலாசாரத்தைப் பராமரிப்பதற்காகத்தான் இசை வேளாளர்களையும் அழைத்து வந்தார்கள் போலும். மற்ற கோயில்கள் அனைத்திலும் சைவ வேளாளர்கள்தாம் பூசாரிகள்.

வீர சைவர்களும் கோயில் சார்ந்த பணியில் ஈடுபட்டவர்கள்தாம். உடுக்கு அடிப்பது, கோடாங்கி அடிப்பது, குறி சொல்வது ஆகிய தொழில்களில் இவர்கள் ஈடுபட்டு வந்தவர்கள். நாங்கள் அந்த மரபிலிருந்து வந்தவர்கள் என்பதால் என் உறவினர்கள் அம்மன் கோயில்களில் குறி சொல்லி வருகிறார்கள். இதன் பலனாக எங்களுக்குக் கோயில் நில பாத்தியதை பாரம்பரியமாக உள்ளது.இலங்கையில் எங்கள் வீடுகளில் மட்டும் அதிகாலையில் வீடு பெருக்குவது, சாணி மெழுகுவது, கோலம் போடுவது போன்ற கலாசாரப் பழக்கங்களைக் காணலாம். கோயில்களில் இன்றும் சாமியாடிகளாக உள்ளோம்.இதனால் என் கதைகளில் இந்த மரபுப் பழக்கங்களின் தாக்கங்களை அதிகமாகக் காணலாம். சாமியாடிகள் வந்து கொண்டே இருப்பார்கள். மேலும், எங்களைப் போன்ற விடலைகள் அக்காலத்தில் கடவுள் நம்பிக்கை பெரிதும் இல்லாதவர்களாகவே இருந்தோம். ஆனால் சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக அவர்களை வெறுத்து ஒதுக்குவதுக்கு எதிராக நாங்களும் விபூதி பூசித் திரிந்தோம். சிங்களப் பேரினவாதத்துடன் இனி வாழ முடியாது. 1995க்குப் பிந்தைய காலகட்டம். நானும் நண்பன் சேரன் போன்றவர்களும் சாராய பாருக்குச் சென்று குடித்தோம். சிங்களர் கடை. சிங்கள பேரர். பில் வந்தது. 220. 300 கொடுத்துவிட்டு பேசிக் கொண்டிருந்தோம். மீதிப் பணம் வரவில்லை. காத்திருந்து கவுண்ட்டர் சென்று மீதிப் பணம் கேட்டோம். எங்களிடம் ஐடண்டி கார்டு இருக்கிறதா என்றான். மீதிப் பணம் வாங்குவதற்கு ஏன் ஐ.டி கார்டு என்றோம்.உடனே எங்களைக் கட்டையால் அடித்து விரட்டினார்கள். எங்கள் நாட்டில், எங்கள் பிரதேசத்தில் இதுதான் நிலை. பார் எண்டு இல்லை.சிங்களவர் கவுண்ட்டரில் இருந்தால் போதும். பார்த்தவுடன் நாங்கள் புலத்தில் இருந்து வந்தவர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறான். அதனால் ஐ.டி எதுவும் இருக்காது எண்டு தெரியும். அவன் சொல்வதைக் கேக்கலையெண்டால் இப்படித்தான் அவமானப்பட வேணும். இந்நிலையில் எப்படி அவர்களோடு வாழ்வது?

தீராநதி:சிங்களரும்,தமிழரும் என்றுமே இணக்கமாக இருந்தது இல்லையா?இன்றிருப்பது போல்தான் எப்போதும் பகையுள்ளம் கொண்டிருந்தனரா?

இரவி: நாங்கள் வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்டிருந்தாலும் அப்பா படிச்சு ஆசிரியராகி தென் இலங்கையில் சிங்களர்களும், முஸ்லிம்களும் அதிகமாக வாழ்ந்த மினுவாங்கொடை கல்லுலுவ கிராமத்தில் வாழ்ந்தார்கள். அந்தக் கதைகளை நான் எப்படிச் சொல்வேன்? நான் அப்போது பிறந்திலன். என் வாழ்வுக்கு முந்தைய வாழ்வு அது. 1958 எண்டு எனக்குச் சொன்னார்கள். இக்கதைகளை ஆயிரம், ஆயிரமாய் நான் பிறந்த பிறகு அம்மாவும், அப்பாவும் சொன்னார்கள். மூன்று வயதிலிருந்து அந்தக் கதைகளைக் கேட்டு வளர்ந்தேன்.கல்லுலுவவில் அவர் படிப்பிக்கிறார்.அப்பா அம்மாவுக்கு அழகுக் குழந்தையா அக்கா இருக்கிறா. பெரிய வால்.பக்கத்து வீட்டில் உள்ள ஹாஜியார் குடும்பத்துக்கும் செல்லப்பெட்டை.இந்த மோள் எனக்குத்தான் என்று கடிச்சுக் கொஞ்சுவார். ஹாஜியார் ஆரிஃபும்,அவர் மனைவி ஃபாத்திமாவும் எங்கள் மீது அன்பைப் பொழிந்தனராம்.

01bs.jpg

கல்லுலுவவில் அப்பாவிடம் படித்தவர்கள் மாஸ்ரர் என்று அப்பாவை அழைத்தார்கள். அவர்கள் மட்டுமல்ல அவர்களின் அன்னையர், அப்பாமார் ஊரில் அனைவருக்கும் அப்பா மாஸ்ரர்தான். கொத்த வந்த நாகத்தையும் சாது...சாது என்று பற்றைக்குள் அனுப்பிவைத்த பன்சாலை புத்த பிக்குவிற்கும் அப்பா மாஸ்ரர். ஆருக்கும் அக்காவின் பேரைச் சொல்லி அவளது அம்மா என்றுதான் அழைத்துப் பழக்கம்.அக்கா அனைவருக்குமே மோள் தான்.அங்கு நான் பிறக்கயில்லை.அதுபற்றி அம்மாவிலும் ஹாஜியாரின் உம்மாவுக்குத்தான் கவலை அதிகம்.

நோன்புக் காலத்தில் உம்மா வேண்டிக் கொண்டதில் அம்மாவுக்கு ஒரு ஆம்பிளைப் பிள்ளை பிறக்க வேண்டும் என்பதும் முக்கியமானது.

ஹாஜியாரின் மகன் ஒரு வெடிபாக்றரி (பட்டாசு ஆலை) வைத்திருந்தார். தைப்பொங்கல் வந்தால் அப்பாவுக்குக் கட்டுக் கட்டாய் வெடி கிடைக்கும். அப்பாவுக்குப் படார் என வெடிக்கும் வெடிகள்தாம் பிடிக்கும். பொங்கலுக்கு வெடி கொளுத்தும்போது அம்மாவுக்குச் சினமா வரும். ‘உந்தக் கோதாரி மனுசன் இப்பவும் குழந்தைப் பிள்ளைகள் வெடி கொளுத்தி விளையாடுது’ என்று சலிப்பாள். தமிழனின் தனித்துவம் பொங்கல் என்று அப்பா கல்லுலுவவின் ஒற்றைத்தமிழனாக ஊருக்கு அறிவித்தார். அது அப்போது முடிந்தது. அம்மாவும் அதைத்தான் செய்தா. அவ்வளவு வடையும், அவ்வளவு மோதகமும், அவ்வளவு சக்கரைப் புக்கையும் தின்ன வீட்டில் யார் இருக்கினம். ஆனால் ஊரில் ஆக்கல் இருந்தினம். பொங்கல் முடிய, பெட்டி, சருவச்சட்டி, வாழை இலை, தாமரை இலை, பேசின், கும்பா, சட்டி, கோப்பை, தட்டு எண்டு எல்லா ஏனங்களிலும் மோதகமும், வடையும், சக்கரைப் புக்கையும் கல்லுலுவவின் ஒழுங்கைகளில் திரிந்தன. எல்லா வீடுகளுக்கும் போயின. புத்த பிக்கு அதை அமிர்தமாய் உண்டார். ஹாஜியார் தேறல் உண்ட தித்திப்பில் ஆழ்ந்தார். நந்தா கூட்டி அள்ளிக் கொண்டை போட்டு நாக்கு கண்டுணர்ந்த ருசியில் மயங்கினா.

அதே அக்கிராமத்தில் ரமலான் நோன்பும் எல்லோருக்குமானது என்றார்கள். கல்லுலுவ விழாக்கோலம் பூண்டது. எல்லார் வீடுகளிலும் ‘வெசாக்‘ கூடு ஒளிர்ந்தது. கொண்டைப் பணியாரம், கொக்கீஸ், களுகொதல், அரிதாரம், பால் ரொட்டி, ,கிரிபத் எல்லாவற்றையும் எல்லாரும் இனிக்க இனிக்க உண்டார்கள். பகலை விட இரவுக்கு நல்ல ஊர். ஆரிலும் அதிகம் பேதம் தெரியவில்லை. சிங்களப்பெண்கள் அம்மாவை நங்கி என்று அழைத்தனர். பண்டார நாயகவா, ஜீ. ஜீ.பொன்னம்பலமா என்பதில்தான் சிறு அரசியல் பேதம்.தனது செல்வரத்தினக் குருக்களிடம் என்ன பக்தி வைத்திருந்தாரோ அதே பக்தி பிக்குவிடமும் வைத்திருந்தார் அப்பா.

ஆயினும் எல்லாரும் எல்லாமும் உள்ளேயோ கனன்றதோ என்னமோ? பிக்கு சாது, சாது என்று பற்றைக்குள் அனுப்பிய நாகப்பாம்புகள் படம் எடுத்துத் திரண்டு வந்தன. “நங்கி எண்ட தங்கையை முல்லைத்தீவில் எரித்துப் போட்டார்கள்’’ எண்டு அழுதழுது சொன்னார் ஃபெரைரா. ஆனால் அவர்தாம் எங்களைப் பாதுகாத்தார்.“எண்ட உயிர் போனாலும் உங்களுக்கு ஒண்டும் நடக்க விடேன்’’ என்றார். ஆனாலும் காலம் மோசமாகியது. ஃபெரிராவின் ஆதரவில் அவர் வீட்டில் ஒளிந்திருந்தனர்.பிக்கு காலமையும், பின்னேரமுமாக வந்து பார்த்தார். “சிறீலங்காவுக்கு என்ன கேடு? பற்றி எரிகிறது’’ என்றார்.

எங்கும் கலவரம். கொலைகள் விழுகின்றன. உருகுகிற தாரினால் தமிழர்கள் உடலில் சிங்கள சிறி எழுத்து எழுதினார்கள்.ஹாஜியார் வீட்டில் தங்கியிருப்பதுதான் பாதுகாப்பு என்று பிக்கு சொன்னார். ஆனால் அம்மாவின் கவலையோ அது அல்ல.‘ஒரு ஆம்பிளைப் பிள்ளை வேண்டும். ஊரார் மலடி எண்டு சொல்லு முன் ஒரு ஆம்பிளைப் பிள்ளை கொடு தாயே’ என்று அம்மனை உருண்டு புரண்டு வேண்டினா. ஹாஜியார் இருக்க,பிக்கு இருக்க எங்களுக்கு ஒண்டும் பயமில்லைதான். இருந்தாலும் எத்தனை நாள் எண்டு தெரியவில்லை. கல்லுலுவை இனி காண மாட்டோம் எண்டு அம்மாவுக்கு நிச்சயமாத் தெரிந்தது. உம்மாவைக் காண மாட்டம். நந்தாவைக் காண மாட்டம். வாய்க்கால் நீரில் நெளிகிற பூரணை (நிலா) இனி இல்லை. பஞ்சி பாராமல் நிறையத் தேங்காய்ப்பால் விட்டுக் காய்ச்சுகிற மீன் சொதி இனி இல்லை. மாசிக் கருவாட்டுச் சம்பல் இனி இல்லை. பஸ் ஒரு குளக்கட்டில் நின்றது. இரவில் முதலைகள் தண்ணீரில் வாலால் அடித்த சத்தம் குழந்தைகளைப் பயமுறுத்தின. சலசலக்கிற சனத்தைப் பொலிஸ் அதட்டியது. “சத்தம் போட்டு ஒங்களைக் காட்டிக் கொடுக்காதியுங்கோ.அனுராதபுரம் ரவுனுக்கை (டவுண்) பெரிய குழப்பம் (கலவரம்) நடக்குது. ஆர்மி வருமட்டும் நாங்கள் இங்கை நிக்கிறது எவைக்கும் தெரியக்கூடாது’’ என்று இன்ஸ்பெக்டர் கூறினார்.

அனுராதபுரம் தாண்டி மதவாச்சி ஏறி வவுனியா போக வேண்டும். வவுனியா எங்கள் தேசம்.பிறகு எவன் எங்களை என்ன செய்துவிட முடியும்?ஆனால் அதற்கிடையில் குரும்பை வெட்டுகிற கத்திகள் வைத்திருக்கிறார்கள் தமிழர் தலைகளை வெட்டுவதற்கு.

தமிழர் ராசதானியாக இருந்து பிறகு சிங்களவர் இராசதானியாக மாறிய அனுராதபுரம் தமிழர்களைக் கொல்வதில் முன்னுக்கு நிற்கிறது. தமிழர்கள் நிணங்களைக் குடிக்கவும்,சதைகளைத் தின்னவும் சிங்கங்கள் அலைகின்றன.அவற்றின் வாயிலிருந்து எங்களை எப்படிக் காப்பாற்றி அங்கிட்டு அனுப்புவது என்ற கவலை இன்ஸ்பெக்டருக்கு.தூரத்தில் வெளிச்சம் தெரிந்தது. ‘ராணுவம் வந்துவிட்டது’ என்றார் இன்ஸ்பெக்டர். அப்பாவும் நம்பினார். அம்மாதான் முதலில் சந்தேகப்பட்டா. அது பேய்கள் கடலில் இருந்து வருகின்றன என்று.இன்ஸ்பெக்டருக்கும் புரிந்தது. நாங்கள் இங்க நிக்கிறது குறித்து ஆர்மிக்கு ரகசியமாத்தான் இன்ஸ்பெக்டர் தகவல் அனுப்பியிருந்தார்.ஆனால் இப்போது எல்லாம் புரிந்து விட்டது.வெளிச்சம் வெறி கொண்டு முன்னேறியது. இன்ஸ்பெக்டர் சுதாரித்தார். கை நடுங்கியது. அவரது ரிவால்வரால் முதல் வெடி வெடித்தார். பின்னும் சில வெடிகள். கூட்டம் பின்னுக்கு ஓடியது. நாங்கள் காலை வவுனியா சேர்ந்து விட்டோம். ‘எங்கடை நாட்டுக்கு வந்தினம்‘ என்று சனங்க விம்மினர். அம்மா இன்ஸ்பெக்டருக்குக் கையெடுத்துக் கும்பிட்டா. பின்னர் சேதி தெரிந்த சிங்களக் காடைகள் குலத்தை அழிக்க வந்த கோடரிக் காம்பு எண்ட விசனத்தில் அன்று இரவே இன்ஸ்பெக்டரைச் சுட்டுக் கொன்றன. யாரும் பேதமற்ற அந்தக் காலம் அத்துடன் முடிந்தது. வவுனியா வந்துதான் நான் பிறந்தேன்.

தீராநதி: யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது சிறுவனாக இருந்திருப்பீர்கள்.அந்தச் சம்பவங்களைப் பற்றி அப்போது ஏதும் கேள்விப்பட்டிருந்தீர்களா?

இரவி: 1968 ஆம் ஆண்டு சென்னையில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தது. அப்போது இன்னும் பெடியன்கள் நாங்கள். அம்மாநாட்டின் திரைப்படக் காட்சி சிவாஜி நடித்த ‘ஊட்டி வரை உறவு’படத்துடன் காட்டப்பட்டது.அதற்காக சங்கானை மணிமகால் தியேட்டரில் ‘ஊட்டி வரை உறவு’ படம் பார்த்தோம். அவ்வளவு வெறி இருந்தது, நம் நாட்டில் அவ்விழா நடந்தால் சும்மா இருப்பமா? அப்பாவை இழுத்தேன். அம்மா வரமாட்டேன் என்றா. அப்பாவும், நானும், சிவமும் அப்பாவின் கையைப் பிடித்துப் போனோம். விழாவைப் பார்த்தோம். முதல் நாள் ஊர்வலத்தை ஓடி, ஓடிச் சென்றுபார்த்தோம். புளகித்திருந்தோம். அடுத்த நாளும் அப்பாவை விடவில்லை. வில்லங்கப்படுத்தினேன். நெருக்குவாரம் கொடுத்தேன். கடைசி நாளும் போக வேண்டுமென்றேன். கடைசி நாள்தான் விழாவின் உச்சம் என்று எனக்குத் தெரியும்.அப்பாவை நான் விடவில்லை. கடைசியில் அப்பாவும் ‘ஓம்’ என்றார்.

இரவில் யாழ்ப்பாணத்தில் நின்றோம். வாழைகள், தோரணங்கள், சிகரங்கள், சப்பரங்கள்,மூங்கில் மரங்கள்,சவுக்கு மரங்களில் கலர் பல்புகள் தொங்கின. எங்கட ஊர்த் திருவிழாக்களை விட பெரிய திருவிழா. பெரிய சப்பரங்கள். பெரிய அலங்காரங்கள். பெரிய கொண்டாட்டங்கள். எல்லாம் எனக்குப் பிடித்திருந்தது. எல்லாருமே அப்போது மகிழ்ச்சியாக இருந்தனர். வீரசிங்கம் மண்டபத்தின் முன் வருகிறோம். மண்டபத்தின் வெளியே நிற்கிறோம். முன் கூட்டத்தால் என்னால் பார்க்க முடியவில்லை. என் உயரம் ஒருவரையும் காட்ட முடியாதிருந்தது. கால் நுனியில் நின்று கால் வலித்தது. அப்பாவாலும் என்னைத் தூக்கிக் காட்ட ஏலாது. ஒலிப்பெருக்கி வழியாக வந்த சவுண்ற்தான் ஒரே உதவி.திடீரென ஒலிப்பெருக்கி நின்றது. பண்ணைக் கடல் பக்கம் பொலிஸ் நிலையம் இருந்தது. அதன் பிறகு வேறொண்டும் எனக்கு நினைவில்லை. லைற்றுகள் திடீரென்று நின்றன. லைற் போஸ்றுகளில் வயர்கள் அறுந்து விழுந்தன. நெருப்புத் தணல்கள் பறந்தன. அப்பா ‘ராசா ராசா’ எண்டு என் கையை இறுகப் பிடித்தார். இழுத்துக் கொண்டு ஓடினார். துவக்கு (துப்பாக்கி) வெடிச்சத்தங்கள் கேட்டன. வெடிச்சத்தம் தொடர்ந்து கேட்கிறது. கண் எரிந்தது. கண் எரிய, எரிய அப்பா இழுத்துக் கொண்டு ஓடுகிறார்.கால் தடுக்கப்பட்டு விழுகிறேன். விழுந்து எழுந்து ஓடிக்கொண்டே இருக்கிறேன். திடீரென அப்பா ஒரு குழிக்குள் விழுகிறார். நானும் தலைகுப்புற விழுகிறேன். சேறு அப்பியது. மேலும் பொத்து பொத்தென்று ஆக்கள் விழுகிறார்கள். அப்பா முதுகைத் தடவுகிறார். ‘ராசா.. ராசா’ எண்டு முணுமுணுக்கிறார். கண்களைத் தடவிப் பார்க்கிறார். ‘அப்பா நான் அழேல்லை’ என்று முணு முணுக்கிறேன். தமிழைப் பேசுவதன்றி வேறு தவறென்ன செய்தோம் என்று கேட்கிற அளவுக்குச் சம்பவங்கள் நடந்தன.

இக்கதைகளைத்தான் ‘காலம் ஆகி வந்த கதை’ எண்டு எழுதினன். கதை முடிவிலும் ‘ஊரும் நாடும் ஐயோ என்று குமுறுகின்ற நாட்கள் அன்றிலிருந்து தொடங்கின’ எண்டும், ‘இப்போது அப்பாவும் இல்லை. அம்மாளும் இல்லை. அரசமரம் இருக்குமா? இருக்கலாம். சில வேளை அதனடியில் இப்போ புத்தர் சிலையும் இருக்கலாம்‘எண்டும், ‘அன்றிலிருந்து அண்ணாக்கள் சில பேரைப் போர்க்களத்தில் கண்டேன்’ எண்டும், ‘எங்கள் சிரிப்புகளைப் பறித்தவர் யார்?’ எண்டும், ‘அப்போது தஞ்சம் கோர யாழ்ப்பாணமாவது இருந்தது’ எண்டும், ‘நாடு காண் காலம் வரைக்கும் காடுகள் சுடுகின்ற காலம் ஆகி விட்டது’ எண்டும், ‘தமிழுக்காக அழுதால் அதிலை என்ன பிழையிருக்கு?’எண்டும் வார்த்தைகளைப் போட்டனம்.

தீராநதி:போர்ச்சூழல் குறித்த இலக்கியப் பதிவுகளில் ஷோபா சக்தி, நீங்கள்,கருணாகரன் போன்றோர் புதிய பரிமாணங்களைச் சேர்த்துள்ளதாகக் கவனிக்கப்படுகிறது. அதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

இரவி: ஆனால் அது காணாது எண்டுதான் நினைக்கிறேன். எனக்குக் கிடைத்திருக்கும் அனுபவங்கள் இங்கு தமிழ்நாட்டில் உள்ள சிறந்த எழுத்தாளருக்குக் கிடைத்திருக்குமெண்டால் அதை வைத்துக்கொண்டு ஒரு நல்ல நாவல் எழுதியிருப்பர். என்னால் அது ஏலல்ல. இங்குள்ள ஜெயமோகனோ, எஸ்.ராமகிருஷ்ணனோ இப்புலத்தை வைத்துக்கொண்டு எழுதினால் அது ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’. அது மாதிரியான எழுத்தாளர்கள் ஈழத்தில் போதாது எண்டுதான் நான் நினைக்கிறேன். இப்போ அ.முத்துலிங்கம், உமா வரதராஜன், சத்யநாதன், கனகவிஜய ரத்னம், நந்தினி, ரஞ்ச குல, ஷோபா சக்தி போன்றோர் சிறப்பாக எழுதினாலும் அது போதாது எண்டுதான் நினைக்கிறேன். ஈழ வாழ்க்கை ஒரு நாவலாகப் பெரும் படைப்பாக வரவில்லை.

தீராநதி:தற்போதைய,மே 17க்குப் பிந்தைய சூழல்,ஈழத்திலும், வெளியிலும் எந்தளவுக்கு நம்பிக்கைக்குரியதாக இருக்கிறது.

இரவி:மே17இல் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் அதற்குப் பிறகான தோல்விகள் தமிழீழ விடுதலைப்புலிகளின் தவறு காரணமாக ஏற்பட்ட வீழ்ச்சி எண்டு நான் பார்க்கயில்லை. அது சர்வதேச சதி. முக்கியமாக இந்தியாவுக்கு இரண்டு தேவையிருந்தது. இந்தியாவுக்கு ஈழத்தைச் சுரண்ட வேண்டும். இரண்டாவது முக்கியமான விஷயம் ராகுல் காந்தி பிரதமராக வருவதற்கு முன் அச்சுறுத்தல்களை அகற்ற வேண்டும். சீனாவுக்கும் இலங்கை அமைதியாக இருக்க வேண்டும் எண்ட தேவையிருக்கு. அதால இந்தியாவும், சீனாவும் இப்பிரச்சனையில் ஒத்துப் போனது. இதுல தமிழீழ விடுதலைப்புலிகள் காரணமாக இருந்தாலும் அது தோல்விக்குப் பிரதான காரணமல்ல.இப்ப இந்த அழிவுகளில் இருந்து எப்படி மீளுவது என்பதுதான்.ஈழத்துத் தமிழனைப் பொருத்தவரையில் விழுந்தால் விழுந்தபடி கிடப்பான். மே17 நடந்து ஒரு மாசத்துக்குள்ளயே நாடு கடந்த தமிழ் ஈழம் குறித்து சிந்திக்கத் தொடங்கி விட்டோம்.ஒரு நண்பர், கவிஞர். பேர் இங்கு தேவையில்லை.தமிழீழ விடுதலைப்புலிகள் இருக்கும் வரைக்கும் விடுதலைப்புலிகள் நிர்வாகத்தில் பங்கு வகித்தவர். தொலைக்காட்சியில் மேனேஜராகவே இருந்தவர். இப்ப புலிகள் எல்லாம் அழிந்த பிற்பாடு அவர் மகிந்த ராஜபக்சே தெய்வம் என்கிறவர். இப்படி சில பேர் இருக்குவம். இப்படியான சில பேர்தாம் இண்டைக்கு முன்னுக்கு வந்து புலிகள் மீது விமர்சனம் வைக்குவம். அதுக்காக புலிகளோ, பிரபாகரனோ விமர்சனத்துக்கு உட்படாதவர்கள் அல்ல. விமர்சனத்த நான் வைக்கத்தான் வேணும். விமர்சனம் வேற. குற்றம் சாட்டுதல் வேற. விமர்சனத்த நாம ஏன் வைக்கோணுமெண்டால் அது கற்பவை. விமர்சனத்திலிருந்து கற்கோணும். இங்கால இலங்கைத் தீவுல நாங்க சிங்களவரோட சேர்ந்து வாழ ஏலாது. தமிழர்களுக்கு ஒரு விலை இருக்கு. சிங்களர்களுக்கு இரு விலை இருக்கு. தமிழரிண்ட விலையை சிங்களர் மதிக்கணும். சிங்களவரை தமிழர் மதிக்கணும் எண்டு எதிர்பார்க்க அங்க மகிழ்ச்சியா ஒண்டுமேயில்லை. இங்க ரெண்டு தேசம் இருக்குது.

தீராநதி: சேர்ந்து வாழ முடியாது என்றால் என்னதான் தீர்வு?

இரவி: எங்கட தாயகம். எங்கட சீவிதத்தை நாங்க ஆள வேண்டும். அதுக்கான வாய்ப்புகளை முன்னிறுத்துபவர்களை அழித்தாச்சு. ஆனாலும், அதுக்கான தேவை இருக்கு. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து எல்லாத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள்தாம் பிரச்சனையாக இருந்தாங்க. இப்ப பிரச்சனை இல்லை. ஆனால் தமிழர் பிரச்சனையை உலகறியச் செய்தாச்சு. ரெண்டு தேசங்களும் சேர்ந்து கூட்டாட்சி செய்யலாம். இப்ப கொஞ்சம் தயங்கி நிண்டாலும், விழுந்து கிடந்தாலும், காலத்துல அதுக்கான தீர்வு ஒண்டு வரும்.

தீராநதி: இனி இயக்கங்கள், அமைப்புகள் உருவாவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?

இரவி: அதற்கான வேலைகளத்தான் நாடு கடந்த தமிழீழம் செய்யணும். ஆனா அதப் பூரணமா நம்ப ஏலாது.அல்லது வேற எதும் இருக்கோ தெரியேல்ல.

தீராநதி: இப்ப உள்ள நிலைமையில் மேலும் ஜனநாயகத் தன்மைகளுடன் கூடிய கொள்கைகளை வகுத்துக்கொண்டு புதிய அரசியல் இயக்கங்களை உருவாக்கி எழுச்சியுறச் செய்வதற்கான வாய்ப்புகள் எங்கு உள்ளன? புலம் பெயர்ந்த சூழலிலா? தாயகத்திலா?

01cuy.jpg

இரவி: ஈழத்துக்குள்ள இல்ல. புலம் பெயர்ந்த சூழல்லதான் இருக்கு. புலம் பெயர்ந்த தமிழர்கள ஈழத்துல இருக்கற தமிழர்களோட இணைக்காம முடியாது. ஏனெண்டு சொன்னா ஈழத்துல குண்டு போடும்போது புலத்தில வலிக்கும். மற்றொரு முக்கியமான விசயம் நீங்க சொன்ன ஜனநாயகம்.

தீராநதி:இயக்கங்களில் ஜனநாயகம் குறைவாக இருந்தது என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?

இரவி: இயக்கங்களில் கொஞ்சம் ஜனநாயகம் குறைவுதான். ஆனால் அவர்கள் ஒட்டுமொத்த தேச விடுதலைக்காகச் சிந்தித்தார்கள்; முடிவுகளை எடுத்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. அந்த நேர்மையைச் சந்தேகிக்க முடியாது. ஆனால் அதில் ஜனநாயகம் இருந்தது எண்டு கூற முடியாது. அதனால இப்ப நீங்க சொன்ன ஜனநாயகம் முக்கியமா படுது. நாங்க இனி மூன்று விடயத்துலதான் இயங்க முடியுமெண்டு நான் கருதுறன். ஒண்டு சட்டத்துக்கு உட்பட்டு இயங்கறது. தமிழ்நாட்டிலயோ, பிரிட்டன்லயோ,அமெரிக்காவிலயோ அந்தந்த நாட்டின் சட்டத்துக்கு உட்பட்டு இயங்கறது.சட்டம் சரி,பிழை என்பதைப் பொறுத்துப் போராடலாம்.அடுத்து ஜனநாயகப் பூர்வமாக இயங்குவது.‘நான் சொல்றேன் நீ செய்’ எண்டு இனி இயங்க முடியாது. மற்றது முக்கியமா அரசியல் வேணும்.ஏன் தமிழீழம் கேட்கிறோம் என்பதில் தெளிவு இருக்கோணும். அரசியல் இல்லாமல் அதிகாரப் பரவலாக்கம் பற்றிக் கதைக்கிறது யாரோ சொல்லறதக் கேட்டுக் கதைப்பதுதான்.அதால அரசியலாகச் சிந்திக்க வேண்டும். இந்த மூன்று விடயங்களும் முக்கியமானவை.

தீராநதி:நீங்கள் சொல்கிற மாதிரியான அம்சங்களுடன் இலங்கைக்குள்ளும் விடுதலைப்புலிகள் போன்ற அமைப்புகள் எதிர்காலத்தில் செயல்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா?

இரவி: விடுதலைப்புலிகள் மத்தியில் ஒரு குழப்பமான நிலை நிலவுது எண்டு நினைக்கிறேன்.விடுதலைப்புலிகளில் அகப்பட்டுக் கொண்டவர்-களில் பாதிப்பேர் கொல்லப்பட்டு விட்டனர். மற்றது, பாதுகாப்பு தேடி ஓடியவர்கள் இருக்கிறார்கள்.சில சமயங்களில் தமிழீழத்துக்குள்ளயே ஒளிந்து வாழ்கின்றனவம்.அவர்கள் இப்ப வெளிக்கிடுவர் என நம்ப ஏலாது. அதனாலதான் சிங்களப் படைகளுக்குச் சந்தேகம். ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் தென்படும்போது அவர்கள் புலிகளோ என சந்தேகிக்கின்றனர். அதனால் தாக்குகிறார்கள்.அதால ஐ.நா அவை போன்ற சர்வதேச சமூகத்தின் பாதுகாப்பு வேண்டும்.அகப்பட்ட விடுதலைப்-புலிகளை ஏன் கொன்றார்கள் என்று நாளை அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தும்படி சர்வதேச சமூகத்திடமிருந்து நெருக்குதல் வரலாம் என்பதால்தான். எனவே, மீதமிருக்கிற போராளிகளுக்குச் சர்வதேச சமூகம் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவர்களும் இல்லாவிட்டால் யார் கூட பேசுவது? இந்த இடத்துலதான் நாடு கடந்த அரசாங்கம் என்பது வருகுது. அவர்களோடு பேசலாம். அமெரிக்க அரசாங்கத்திடம் இலங்கை என்ன கேட்டது எண்டால், ‘நாடு கடந்த அரசாங்கத்தைச் சேர்ந்தவங்கள பிடிச்சுத் தரும்படி’. அதுக்கு அமெரிக்கத் தூதர் என்ன சொன்னார் எண்டால், ‘ஏன் அவர்கள் சட்டபூர்வமாகத்தான இருக்கிறார்கள். அவர்களை ஏன் நிந்திக்க வேணும்?’ எண்டு கேட்டுவிட்டு, என்ன அட்வைஸ் செய்தார்கள் எண்டால் ‘நீங்கள் அவங்களோடு பேசிப் பாத்தாலென்ன?’ என்று ஸ்ரீலங்கா கவர்மெண்டிடம் சொன்னார்கள்.

தீராநதி: இந்த நிலையில் கே.பி.யைப் பற்றி இரு வேறுபட்ட கருத்துகள் நிலவுது. ராஜபக்சேவுக்கு அடி பணிந்துவிட்டார் என்றும், நாடு கடந்த ஜனநாயகப்பூர்வ அமைப்பை உருவாக்க உதவுகிறார் என்றும்....

இரவி: இந்த இடத்தில் நான் கே.பி.யைப் புரிந்து கொள்ள முயல்கிறேன். அவர் மிக, மிகப் பெரிய ஆள். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவன் பிரபாகரன் எண்டால்,அடுத்த சக்திகளில் மகா சக்தியாக இருந்தவர் கே.பி.. அப்படிப்பட்ட ஒருவர் துரோகியாக மாறுவதற்குச் சந்தர்ப்பமில்லை. அவர் கைது செய்யப்பட்டுப் பிடித்துக்கொண்டு வந்ததில் மூன்று சக்திகள் தீர்மானகரமாக இருக்கு. ஒண்டு அவரது வயது; இரண்டாவது அனுபவம்; மூன்றாவது ஸ்ரீலங்கா அரசாங்கத்தினுடைய களவாடித்தனம். மற்றது இன்னொரு விசயம் வெளியில என்ன இருக்குது. யார் இருக்கா. அப்ப இதுக்குள்ள இருந்து கொண்டுதான் ஒரு முடிவு எடுக்க வேண்டிக் கிடக்கு.அத என்னால புரிஞ்சு கொள்ள முடியுது.அப்புறம் மீடியா எல்லாமும் ஸ்ரீலங்கா அரசாங்கம் கையிலதான் இருக்கு.அவங்க சொல்றத எந்த அளவுக்கு நம்பறது? உதாரணமாக, கனகரத்தினம் என்பவர் செல்லக்கிளியின்ற அண்ணன். செல்லக்கிளி யார் எண்டால் பிரபாகரன் மெய்க்காப்பாளர். பிரபாகரன் உயிர் காப்பாற்றியவர். அவரோட அண்ணன். அவர் இப்ப எம்.பி.அவர் வெளிய வந்த பிறகு மகிந்த ராசபக்ச அரசாங்கத்துக்கு ஆதரவா பிரச்சாரம் செய்தார்.அவர் கட்சியில் போட்டியிட்டு வென்றார். ஏன் எண்டு சொன்னால் அவரது மகள் உள்ளுக்க இருக்கிறா. அவரால தெளிவா இருக்க முடியல.அத மாதிரிதான் கே.பி.யப் பாக்கறன். அதனால துரோகி எண்டு சொல்லக்கூடாது. முதல்ல துரோகி எண்ட சொல்ல எங்கள்ட்ட இருந்து எடுக்க வேணும்.

தீராநதி: நான் கேட்க விரும்பியது மே 18 க்கு முன்னும், பின்னும் அங்கு நடந்தவை குறித்து அங்குள்ள மலையகம்,இஸ்லாமியத் தமிழர்கள் மற்றும் கொழும்பு மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? அங்கு உடனடியாக மறு குடியேற்றம் போன்றவற்றுக்கும், அவர்களது வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கும் ஜனநாயகப் பூர்வமான விழிப்புணர்வு தேவையாயிருக்கு. அதற்கான ஒற்றுமை அனைத்துத் தரப்பு தமிழர் மக்களிடம் உள்ளதா? எதிர்காலத்திலும் எந்த இயக்கமாக இருந்தாலும் இலங்கையின் அனைத்துத் தரப்பு தமிழர் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஒரு பரந்த தமிழர் இயக்கமாக உருவாக வேண்டும் என்பது தேவையாக இருக்கிறது. இலங்கையின் உடனடி அரசியல் அதுவாகத்தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதற்கான வாய்ப்பு உள்ளதா?

இரவி: இலங்கைத் தீவில் இது ஒரு சிக்கலான நிலைமை. இஸ்லாமியத் தமிழருக்கு யார் தலைமை?மலையகத் தமிழருக்கு யார் தலைமை என்பது எல்லாம் குழப்பமா இருக்கு.

தீராநதி: இந்த நிலையில் கே.பி.யைப் பற்றி இரு வேறுபட்ட கருத்துகள் நிலவுது. ராஜபக்சேவுக்கு அடி பணிந்துவிட்டார் என்றும், நாடு கடந்த ஜனநாயகப்பூர்வ அமைப்பை உருவாக்க உதவுகிறார் என்றும்....

இரவி: இந்த இடத்தில் நான் கே.பி.யைப் புரிந்து கொள்ள முயல்கிறேன். அவர் மிக, மிகப் பெரிய ஆள். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவன் பிரபாகரன் எண்டால்,அடுத்த சக்திகளில் மகா சக்தியாக இருந்தவர் கே.பி.. அப்படிப்பட்ட ஒருவர் துரோகியாக மாறுவதற்குச் சந்தர்ப்பமில்லை. அவர் கைது செய்யப்பட்டுப் பிடித்துக்கொண்டு வந்ததில் மூன்று சக்திகள் தீர்மானகரமாக இருக்கு. ஒண்டு அவரது வயது; இரண்டாவது அனுபவம்; மூன்றாவது ஸ்ரீலங்கா அரசாங்கத்தினுடைய களவாடித்தனம். மற்றது இன்னொரு விசயம் வெளியில என்ன இருக்குது. யார் இருக்கா. அப்ப இதுக்குள்ள இருந்து கொண்டுதான் ஒரு முடிவு எடுக்க வேண்டிக் கிடக்கு.அத என்னால புரிஞ்சு கொள்ள முடியுது.அப்புறம் மீடியா எல்லாமும் ஸ்ரீலங்கா அரசாங்கம் கையிலதான் இருக்கு.அவங்க சொல்றத எந்த அளவுக்கு நம்பறது? உதாரணமாக, கனகரத்தினம் என்பவர் செல்லக்கிளியின்ற அண்ணன். செல்லக்கிளி யார் எண்டால் பிரபாகரன் மெய்க்காப்பாளர். பிரபாகரன் உயிர் காப்பாற்றியவர். அவரோட அண்ணன். அவர் இப்ப எம்.பி.அவர் வெளிய வந்த பிறகு மகிந்த ராசபக்ச அரசாங்கத்துக்கு ஆதரவா பிரச்சாரம் செய்தார்.அவர் கட்சியில் போட்டியிட்டு வென்றார். ஏன் எண்டு சொன்னால் அவரது மகள் உள்ளுக்க இருக்கிறா. அவரால தெளிவா இருக்க முடியல.அத மாதிரிதான் கே.பி.யப் பாக்கறன். அதனால துரோகி எண்டு சொல்லக்கூடாது. முதல்ல துரோகி எண்ட சொல்ல எங்கள்ட்ட இருந்து எடுக்க வேணும்.

இரவிக்கு கே.பி பங்கு குடத்துவிட்டாரோ :D

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு பேப்பரில் எழுதுபவரா?

ஒண்டும் தெரியாத பேப்பரில் எழுதுபவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.