Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா இராணுவத்திற்கு வடக்கில் முகாம்கள் அமைக்கும் சீனா

Featured Replies

சிறிலங்கா இராணுவத்திற்கு வடக்கில் முகாம்கள் அமைக்கும் சீனா

அனலை நிதிஸ் ச. குமாரன்

சிறிலங்காவின் அயல்நாடான இந்தியாவின் பல எதிர்ப்புக்களையும் மீறி சீனாவுடன் இராணுவ மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்த கங்கணம் கட்டி செயல்படுகின்றது சிறிலங்கா. பல பொருளாதார உதவிகளை சிறிலங்காவிற்கு கொடுத்துவரும் சீனா, யாழ் நகரப் பகுதிகளில் தனியார் கட்டடங்களில் நிலை கொண்டுள்ள சிறிலங்காவின் படையினரை வெளியேற்றி சீனாவின் உதவியுடன் நவீன படைமுகாம்களை அமைத்து தங்க வைக்க சிறிலங்கா சீனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. சீனாவின் தலையீட்டை இந்தியா தொடர்ந்தும் அசட்டை செய்யப்போகின்றதா அல்லது சீனாவின் நடவடிக்கைகளை ஒடுக்க இந்தியா உருப்படியான காரியம் எதனையும் செய்யப்போகின்றதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

யாழ். நகரப் பகுதியில் தனியார் கட்டடங்களில் நிலை கொண்டுள்ள படையினரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் வருகின்றன. இதன் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட இடங்களில் சீன உதவியுடன் புதிய இராணுவ முகாம்களை அமைக்கும் பணிகள் முனைப்புப் பெற்றுள்ளன. இராணுவப் பலத்தை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தொடர்ந்தும் வைத்திருக்கவே சிறிலங்கா விரும்புகின்றது. இதன் வெளிப்பாடுதான் பல புதிய நவீன இராணுவ முகாம்களை அமைக்க எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள்.

பலாலி இராணுவத் தலைமையக ஊடகப்பிரிவு சீனாவின் உதவியுடன் நிர்மானிக்கவிருக்கும் இராணுவ முகாம்கள் பற்றிய செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது. பலாலி இராணுவ ஊடகப்பிரிவு கூறியுள்ளதாவதுஇ “குடாநாட்டில் படையினர் தமது நிலைகளை வேறு இடங்களுக்கு இடம் மாற்றவிருக்கின்றனர். அவ்வாறு இடம்மாற்றப்படும் இடங்களில் தயார் நிலையில் உள்ள கட்டடங்களை அமைக்க சீனா உதவி வழங்குகின்றது...நகரில் உள்ள படைத்தலைமை முகாம்களும் விரைவில் மாற்றப்படவுள்ளன. இதற்கென புதிய முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. புதிய இடங்களில் முகாம்களையும் இராணுவக்குடியிருப்புக்களையும் அமைக்க சீனா உதவிகளை வழங்க முன்வந்துள்ளது."

பலாலி ஊடகப் பிரிவு மேலும் தெரிவிக்கையில், “வன்னியில் இராணுவத்தினருக்காக அமைக்கப்பட்டுள்ளது போன்ற ஆயத்த நிலைக் கட்டடங்களை புதிய முகாமில் அமைப்பதற்கு தேவையான மூலப் பொருள்களை சீனா வழங்கும். எனினும் எத்தனை புதிய முகாம்கள் அவ்வாறு அமைக்கப்படும் என்று இதுவரை முடிவு செய்யப்படவில்லை." சீனாவின் பங்களிப்பின் மூலமாக இராணுவ முகாம்களை அமைக்கும் செயல்பாடுகள் நிச்சயம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு உகந்ததாக இருக்கப்போவதில்லை.

தனியார் இடங்களில் இருந்து வெளியேற்றப்படும் படையினரினால் யாருக்கு என்ன பலன்

பாதுகாப்பு வலையம் என்ற பெயரில் தமிழ் மக்களின் சொத்துக்களை முடக்கி இன்று உரிமையாளர்கள் யார் என்று கேட்குமளவு நிலை தமிழர் பிரதேசத்தில் உருவாகியுள்ளது. உரிமையாளர்களின் சட்டப் பத்திரங்கள் புலிகளால் எரியூட்டப்பட்டுவிட்டது என்றும் பல உரிமையாளர்கள் நாட்டை விட்டு ஓடி விட்டார்கள் என்றும் கூறி தம் வசம் இருக்கும் நிலங்களை சிங்களவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்க இருக்கின்றது சிங்கள இனவெறி அரசு.

சிங்களவர்களைக் குடியேற்றுவதனூடாக அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையானதே சிங்கள இராணுவத்தினரின் இருப்பு. புலிகளை அழித்து தமிழர்களுக்கு விடிவை பெற்றுத் தந்துவிட்டதாக தம்பட்டம் அடிக்கும் மகிந்த அரசு எதற்காக இராணுவத்தினரை மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் தங்கவைத்து இரவு பகல் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும். இந்நூற்றாண்டில் மனித நாகரிகமே கண்டிருக்க முடியாத பாரிய பேரவலத்தை தமிழர் தேசத்தின் மீது கொடுத்து, உலக நாடுகளின் வேண்டுதலை புறம்தள்ளிவிட்டு பல ஆயிரம் தமிழர்களை கொன்று அரக்க நிகழ்வையே நிகழ்த்திய அரசிடமிருந்தா தர்மத்தை எதிர்பார்க்க முடியும். அப்படி எதிர்பார்ப்பதும் மூட நம்பிக்கையே.

நவீன இராணுவ முகாம்களை அமைப்பதற்கும் மற்றும் சிங்களவர்களை குடியேற்றுவதற்கும் தேவையான கருவியே தனியார் நிலங்களில் இருந்து விலகுவதென்ற நாடகம். இப்படியான நிகழ்வுக்காகவேதான் கடந்த மாதங்களில் சிங்கள அரச படைகளின் பண பல உதவியுடன் யாழ் அனுப்பிவைக்கப்பட்ட சிங்களவர்கள். துரையப்பா விளையாட்டரங்கம் மற்றும் யாழ் புகையிரத நிலையத்தில் தங்கி மாபெரும் நாடகத்தயே இந்த சிங்கள குடியேற்றவாசிகள் நடத்தினார்கள். இங்கு தங்கியுள்ள சிங்களக் குடும்பங்களை தென்னிலங்கை அரசியல்வாதிகள் மற்றும் தென்னிலங்கை பௌத்த குருமாரும் பார்வையிட்டு அவர்களுக்கான உதவிகளைச் செய்துவந்துள்ள நிலையில் இவர்களைச் சந்தித்த மீள் குடியேற்ற அமைச்சர் மில்றோய் பெனான்டோ இவர்களைத் தங்கவைப்பதற்கான இடங்கள் ஆராயப்பட்டு வருவதாகவும் அதுவரை மூன்று மாதங்கள் அல்லது அதற்கு மேல் நிவாரண உதவிகள் வழங்கப்படுமென தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ் புகையிரத நிலையத்தில் தங்கியிருந்த சிங்களக் குடும்பங்களில் சுமார் 32 குடும்பங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில் இராணுவப் பாதுகாப்புடன் நாவற்குழி குடியேற்றத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். மீள் குடியேற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் யாழ் அரசாங்க அதிபருக்கோ யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேச செயலகங்களுக்கு எதுவித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லையென தெரிவித்துள்ளனர்.

சிங்களக் குடும்பங்கள் யாழ் புகையிரத நிலையத்தில் தங்கியிருந்தமை தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் முதற்கொண்டு புத்திஜீவிகள்வரை பல விசனங்களைத் தெரிவித்துள்ள நிலையில் இந்த மீள் குடியேற்றமானது திட்டமிட்டு செய்யப்பட்டதாக அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீள் குடியேற்றம் செய்யப்பட்ட சிங்கள மக்கள் இப்பகுதியில் கொட்டகைகள் போடுவதில் மும்முரமாக செயற்பட்டு வருவதுடன் ஏற்கனவே இருந்த மக்களின் கொட்டகைக்கான மூலப்பொருட்களைப் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிங்களக் குடும்பங்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக யாழ் அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரிடம் கேட்டபோது இக்காணி வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான காணி எனவும் தனக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது எனவும் அவர் தெரிவித்தார். ஆக சிங்கள அரசின் திட்டமிட்ட தமிழர்களின் தாயக பூமியில் சிங்களவர்களை குடியேற்றுவதனூடாக தமிழர்களின் நிலங்களை அபகரிக்க எடுக்கப்படும் நடவடிக்கை இது என்பதே உண்மை.

இதற்கிடையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வந்த செய்திகளின்படி பாதுகாப்பு வலயப்பிரதேசங்களில் குடியிருப்பு மனைகள் கட்டும் பொருட்கள் குவிக்கப்பட்டு இருப்பதாகவும், சிங்கள மக்களை இப்பகுதிகளில் குடியேற்றுமுகமாகவே இப்பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.

தனியார் கட்டடங்களில் இருந்தோ அல்லது தனியார் காணிகளில் இருந்தோ படையினர் வெளியேற்றப்பட்டு நவீனமுறையில் அமைக்கப்படும் புதிய இராணுவ தளங்களில் தங்கவைக்கப்படுவதான செய்திகளினால் நிச்சயம் தமிழர்கள் அதீத மகிழ்ச்சியடையத் தேவையில்லை. இச்செயற்பாடுகளின் மூலமாக சிங்கள குடியேற்றவாசிகளே பல அனுகூலங்களை அடைவார்கள்.

தொடந்தும் வேடிக்கை பார்க்குமா இந்தியா?

சீனாவிடம் இராணுவ யுத்தத்தின் மூலமாக படுதோல்வியை தழுவிக்கொண்ட இந்தியா ஏறத்தாள நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டாலும் இந்தியாவின் இராணுவ வரலாற்றில் இவ் யுத்தத்தின் படுதோல்வியின் தாக்கம் பெரிதாகவே இருக்கின்றது. அத்துடன் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இன்னும் தீர்க்கப்படாமல் பல பிரச்சனைகள் நிலுவையிலேயே உள்ளது குறிப்பாக எல்லை மற்றும் திபெத்திய பிரச்சனைகள்.

இரண்டு நாடுகளும் பலப்பரீச்சையில் ஈடுபடும் நிலையில் இருந்தாலும், இரண்டு நாடுகளுக்கும் தற்போது இருக்கும் பிரச்சனை என்னவென்றால் இரு நாடுகளும் இணைந்து பொருளாதாரத்தில் வளர்வதன் மூலமாக மேற்கத்தைய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை சமப்படுத்துவதன் ஊடாக மறைமுக பொருளாதார புரட்சியை ஆசியாவில் உண்டுபண்ணுவதே தற்போது இரு நாடுகளுக்கும் இருக்கும் ஒற்றுமை.

பல முரண்பாடுகள் இருந்தாலும் ஒரு சில ஒற்றுமைகள் இருப்பதனால் காலத்தின் தேவை கருதி இரு நாடுகளும் செயலாற்றுகின்றன. சீனாவை புறம்தள்ளிவிட்டு பொருளாதார வளர்ச்சியை இந்தியா எட்ட முடியாது. இதை நன்கே புரிந்துள்ள இந்தியா, சீனா எது செய்தாலும் வாய்மூடி மௌனியாக இருக்கவே விரும்புகின்றது. சீனாவை பகைக்க இந்தியாவுக்கு விருப்பமில்லாததற்கு பல காரணங்கள் இருக்கின்றது குறிப்பாக சீனாவை உதறிவிட்டு இந்தியா ஒருபோதும் பொருளாதார மேன்பாட்டை காணமுடியாது. சீனாவை புறம் தள்ளிவிட்டு இந்தியாவினால் உலக அரங்கில் வலம் வரமுடியாது. அத்துடன் இந்தியாவின் பல கால கனவான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவையில் எப்படியேனும் நிரந்தர உறுப்பு நாடாகி விடவேண்டும் என்கின்ற இலக்கு சீனாவின் உதவியின்றி ஒருபோதும் நடைமுறைச் சாத்தியமில்லை. ஆகவே பல காரணங்களுக்காக இந்தியா சீனாவுடன் நட்பை பேணவே விரும்புகின்றது.

இந்தியாவின் பலயீனத்தை நன்கே அறிந்துகொண்ட சீனா எப்படியேனும் இந்தியாவின் அண்டை நாடுகளில் தனது செல்வாக்கை அதிகரிப்பதுடன் கடற்படை மற்றும் இராணுவ முகாம்களை அமைப்பதுடன் புலனாய்வுத்துறையினரை நிரந்தரமாக வைத்திருக்க சீனா விரும்புகின்றது. இராணுவ முகாம்களை சிறிய நாடுகளுக்கு அமைத்துக்கொடுப்பதுடன் சீனாவின் வேலை முடிந்து விடாது என்பது இராணுவ ஆய்வாளர்களின் கூற்று. நிர்மாணித்த இராணுவ நிலைகளின் ஊடாக நிச்சயமாக சீனா பல நவீன தொழில்நுட்ப கருவிகளை நிறுவி இந்தியாவின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் அவதானிக்கும்.

இந்தியாவின் இராணுவ மற்றும் கடற்படையினரின் செயற்பாடுகளை இந்தியாவை அண்டிய நாடுகளின் கரையோரங்களில் இருந்துகொண்டே அறிய சீனா முயல்கின்றது. பசிபிக் சமுத்திரம் மற்றும் சீனாவை அண்டிய தென் சீன கடற்பகுதியை தனது பிரதான கோட்டையாக பேணிவந்த சீனாவிற்கு அகண்டு விரிந்து கிடக்கும் இந்திய சமுத்திரத்தின் முடிசூடா மன்னனாக வருவதற்கு தளம் அமைக்கப்பட்டுவிட்டது என்றால் மிகையாகாது. சீனாவிற்கு இந்திய சமுத்திரம் முக்கிய அனுகூலமாக இருக்கும். இந்தியாவை கண்காணிக்க உதவும் அதேவேளை எண்ணைக்காக ஏங்கித்தவிக்கும் சீனா, மேற்காசியாவில் இருந்து வரும் எண்ணைக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் உலகின் பிற நாடுகளில் சீனாவின் இருப்பு பெருகி வருவதனால் நிச்சயம் இந்தியச் சமுத்திரம் மிக முக்கிய மையமாகவே சீனாவிற்கு இருக்கும்.

இந்தியா என்னதான் செய்யப்போகிறது என்பது தான் தற்போது எழும் கேள்வி. சில அற்ப சொற்ப காரியங்களுக்காக தனது பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் எழும் நிலையிலும் மௌனம் காக்கப்போகின்றதா இந்தியா அல்லது மீண்டும் போரை சீனாவுடன் சந்திக்கப்போகின்றதா? தனது அண்டை நாடுகளுக்கு தலையிடியை கொடுப்பதன் மூலமாக இந்தியாவின் ஆதரவை தேடிவரும் நிலையை இந்த நாடுகள் மீது இந்தியா கொடுக்குமா? 1980-ஆம் ஆண்டுகளில் தமிழ்ப் போராளி அமைப்புக்களை இந்தியா வளர்த்து சிறிலங்காவுடன் போராட தூண்டியது. இதைப்போன்றதொரு சம்பவத்தை மீண்டும் உருவாக்கி சீனாவின் செயற்பாடுகளை இந்தியா செய்யப்போகின்றதா? இப்படியாக பல கேள்விகள் எழுகின்றது. ஆனால், இந்தியாவின் நடுவன் அரசு இவைகளை உள்வாங்கி செயற்படுமா என்பது சந்தேகமே.

இந்தியாவின் நடுவன் அரசின் நிலை என்னவெனில் எது எப்படி நடந்தாலும் பரவாயில்லை பொருளாதாரமே இந்தியாவின் விடுதலை என்பதை மனதில் வைத்து செயல்படுகின்றது. பாவம், பல நூறு ஆண்டுகள் சென்றாலும் இந்தியாவின் பொருளாதார நிலையை மாற்றவே முடியாது...மன்னிக்கவும்....பல கோடீஸ்வரர்;கள் உருவாகுவார்கள் ஆனால் அதற்கு மேலாக பல கோடி ஏழைகளும் ஆளாக்கப்படுவார்கள் என்பது தான் உண்மை. ஆக, கூழுக்கும் ஆசைப்பட்டு மீசைக்கும் ஆசைப்பட்டு இரண்டும் கெட்டான் நிலையிலேயே இந்தியாவின் எதிர்காலம்.

சிறிலங்காவின் உள்விவகாரங்களில் தலையிடப் போவதில்லை என்ற கொள்கையில் இருந்த இந்தியாவுக்கு சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் நேரடி இராணுவ தலையீடுகள் மூலமாக பெரும் மன உளைச்சலை உண்டுபண்ணியுள்ளது என்பதை யாரும் மறக்க முடியாது. சீனாவின் நேரடி பங்களிப்பின் மூலமாக இந்தியாவை வேண்டாத விருந்தாளியாகவே சிறிலங்கா பார்க்கின்றது. இந்தியாவோ அறிந்தும் அறியாமல் காலத்தை வீணடித்துக்கொண்டு இருக்கின்றது. சீனாவின் நேரடி தலையீட்டினால் இந்திய உபகண்டத்திலே மாபெரும் அரசியல் மற்றும் இராணுவ இஷ்திரத்தன்மை இல்லாமல் வந்துவிடுமோ என்கிற ஐயம் பலரிடம் எழுகின்றது.

இந்தியாவின் மௌனம் தொடர்ந்தால் சீனாவின் ஆதிக்கம் இந்திய உபகண்டத்திலேயே வளர்ந்து எந்தவொரு சக்தியினாலும் அதனை சமாளிக்க முடியாததொரு நிலை உருவாகும் என்பது மட்டும் திண்ணம். இதனை உணர்ந்து முளையிலேயே அகற்றிவிட்டால் தென்னாசியாவின் பெரியண்ணனாக தொடர்ந்தும் இந்தியா தன்னை தக்கவைத்து கொள்ள முடியும். தமிழர் பிரதேசங்களில் இராணுவ முகாம்களை அமைத்து சிறிலங்காவின் இராணுவத்திடம் கொடுப்பதென்பது சீனா நேரடியாகவே இந்தியாவை கண்காணிக்க எடுக்கும் நடவடிக்கையாகவேதான் கருத வேண்டியுள்ளது. இதனை அறிந்து செயல்படுமா இந்தியா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.