Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஷ்மீர், ஈழப் போராட்டங்களை நாங்கள் (மாவோயிஸ்டுகள்) ஆதரிக்கிறோம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காஷ்மீர், ஈழப் போராட்டங்களை நாங்கள் (மாவோயிஸ்டுகள்) ஆதரிக்கிறோம்!

வரவர ராவ் ‐ இன்று இந்திய அரசும் மாநில அரசுகளும் அஞ்சி நடுங்கும்

மாவோயிஸ்டு இயக்கத்திற்காக கருத்துத் தளத்தில் சமரசமின்றி போராடும் போராளி. அரசுக்கும் மாவோயிஸ்டுகளுக்குமான பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றுபவர். ஆந்திர புரட்சிகர எழுத்தாளர் இயக்கத்தின் தலைவர். இவரின் எழுத்துகளும் பேச்சுகளும் ஆளும் வர்க்கத்தை தூக்கமிழக்கச் செய்பவை. ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்திருந்தவரை, ஒரு மாலை வேளையில் நேர்காணலுக்காக சந்தித்தேன். நடுத்தர வர்க்க மக்களிடம் மாவோயிஸ்டுகள் குறித்து இருக்கும் எண்ணங்களை கேள்விகளாக முன்வைத்தேன். பொருட்செறிவான பதில்கள் அவரிடமிருந்து வந்தன.

கே: மாவோயிஸ்டுகளால் போலீசார் கடத்தப்படுவதும் கொல்லப்படுவதும் தொடர்கதையாகி விட்டதே, போலீசாரும் சம்பளத்திற்கு வேலைபார்ப்பவர்கள் தானே, அவர்கள் ஒன்றும் வர்க்க எதிரிகள் இல்லையே?

ப: கடத்தல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறவில்லை. அரிதாகத்தான் நடைபெறுகின்றன. அரசு சொந்த மக்களின் மீதே பன்னாட்டு நிறுவங்களுக்காக ‘பசுமை வேட்டை’ என்ற பெயரில் கொடூரமான போரை நடத்தி வருகிறது. இந்த நிலையில், போலீசாரை போர்க் கைதிகளாகத்தான் பார்க்க வேண்டும். அவர்கள் போர்க் கைதிகளுக்குரிய மதிப்புடன் நடத்தப்பட்டனர். பீகாரில் நான்கு போலீசார் கடத்தப்பட்டனர். பின் அனைத்துத் தரப்பினரின் வேண்டுகோளை ஏற்று ஜனநாயகத் தன்மையுடன் அவர்களில் மூவர் விடுவிக்கப்பட்டனர். ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். அதற்காக வருந்துகிறேன். ஆனால், ‘பழங்குடி மக்களுக்கு எதிரான போர் நிறுத்தப்படவேண்டும், அரச படையினர் திரும்ப அழைக்கப்பட வேண்டும்’ என்ற மாவோயிஸ்டுகளின் வேண்டுகோள்கள் நிறைவேற்றப்படவில்லை.

இவ்விஷயத்தில் எனக்கு நன்றி சொல்வதற்கு அழைத்த சத்தீஸ்கர் முதல்வர் ராமன்சிங்கிடம், ‘மாவோயிஸ்டுகள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும்போது நீங்கள் ஏன் அவர்கள் கோரிக்கையை ஏற்று, குறைந்தது அப்பாவி பொதுமக்களையாவது விடுவிக்கக் கூடாது? மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ‘இது மாநில அரசின் பிரச்சனை’ என்று கூறும்போது, நீங்கள் இந்தப் போரை நிறுத்தக்கூடாது?’ என்று கேட்டேன். அவரும் பரிசீலிப்பதாகக் கூறினார். ஆனால் அதன் பின்தான் இரண்டு பெரிய போலி மோதல்களில் அப்பாவி பழங்குடி மக்கள் கொல்லப்பட்டனர். தோழர் மகேஸ், தாராபாய் இருவரும் போலிமோதல்களில் கொல்லப்பட்டனர். ஆக, அரசு தன் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

கே: ஆசாத் என்கவுண்டரில் நடந்தது என்ன?

ப: கடந்த மே மாதத்தில் மாவோயிஸ்ட் மைய புலனாய்வு பிரிவைச் சேர்ந்த தோழர் அப்பாராவும் தோழர் ஆசாத்தும் மும்பையில் சந்தித்து தாண்டேவாடா வருவது குறித்து திட்டமிட்டிருந்தனர். ஆனால் வரும் வழியில் அப்பாராவ் ஆந்திர புலனாய்வுப் போலீசாரால் தமிழக போலீஸ் உதவியுடன் கைது செய்யப்பட்டு நல்லமலையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதை அறிந்த ஆசாத் மூன்று மாதங்கள் தலைமறைவாக இருந்தார். இச்சூழ்நிலையில் தான் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தைக்கு வருமாறு சுவாமி அக்னிவேஸ் மூலமாக அழைத்தார். 72 மணிநேரம் போர்நிறுத்தம் செய்யுமாறு வலியுறுத்தினார்.

அதற்கு ஆசாத், ‘இருவரும் ஒரே சமயத்தில் போர்நிறுத்தத்தை மூன்று மாதத்திற்கு செய்தால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்’ எனத் தெரிவித்தார். ஆனால் ப.சிதம்பரம், ஆசாத் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளத்தான் இப்பேச்சுவார்த்தை நாடகத்தை நடத்தியிருக்கிறார். புலனாய்வுப் பிரிவினர் ஆசாத்துக்கும் அக்னிவேஸ்க்கும் இடையிலான கடிதப் போக்குவரத்தை பின்தொடர்ந்து அவரின் இருப்பிடத்தை அறிந்து கொண்டனர். இச்சமயத்தில் ஆசாத், நாக்பூரில் ஹேமச்சந்திர பாண்டேவை சந்தித்து விட்டு தண்டகாரண்யாவிற்கு பேச்சுவார்த்தை தொடர்பான கடிதங்களை எடுத்து செல்லத் தயாராகியிருந்தார். இச்சூழ்நிலையில்தான் இருவரும் கைது செய்யப்பட்டு, பின் ஆந்திரக் காடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு கொல்லப்பட்டனர்.

கே: இவ்வளவு உறுதியாக இது ஒரு போலி மோதல் என்கிறீர்களே எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூறுகிறீர்கள்?

ப: ஜூலை 1ம் தேதி ஆசாத் தண்டகாரண்யா வருவதாக செய்தித் தொடர்பாளர் உசன்டிக்கு தகவல் அனுப்புகிறார். அவரும் ஆசாத்தை சீதாமண்டியில் சந்தித்து அழைத்து வருவதற்காக ஒரு பழங்குடித் தோழரை ஏற்பாடு செய்கிறார். 10.30 அல்லது 1.30க்கு சந்திப்பது என முடிவானது. ஆனால் 1.30 ஆகியும் ஆசாத் வரவில்லை. ஹேமச்சந்திர பான்டே விஷயத்தில் அதிக ஆதாரங்கள் உள்ளன. அவர் ஜூலை 30ல் நிஜாமுதீனில் கிளம்புகிறார். இரயில் தாமதமானதால் 3.15க்கு தன் மனைவி பபிதாவைத் தொலைபேசியில் அழைக்கிறார். 5.15க்கு இரயில் கிளம்பும்போது மீண்டும் ஒருமுறை அழைக்கிறார். இதை அவர் பத்திரிக்கைகளுக்கும் தெரிவித்துள்ளார். இவற்றை இணைத்துப் பார்க்கும்போது இவர்கள் போலீஸ் கூறுவது போல் ஆந்திரக் காடுகளில் இல்லை என்பது தெரியவரும். தொலைதொடர்புத்துறை இந்தப் பதிவுகளை அழிக்காமல் இருந்தால் உண்மை தெரியவரும்.

முதல் தகவல் அறிக்கையில் நக்சல்கள் மலை உச்சியில் இருந்ததாகவும் போலீஸ் கீழே இருந்ததாகவும் பதிவாகியிருக்கிறது. ஆனால் ஆசாத்தின் உடலில் குண்டு கீழிருந்து மேலாக துளைக்காமல் நேராகப் பாய்ந்திருக்கிறது. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் ஆசாத் 7.30 செ.மீ. இடைவெளியில் பாயின்ட் பிளாங்கில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கிறது. இதை இந்தியாவின் தலைசிறந்த தடயவியல் அறிஞர்கள் உறுதி செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையில் 1.30 மணி நேரம் சண்டை நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் எஸ்.பி. 4.30 மணிநேரம் சண்டை என்கிறார். ஜோடிப்பதில் அவர்களுக்கிடையிலேயே முரண்பாடு உள்ளது. சொராபுதீன் போலிமோதலைப் போன்று நீதிவிசாரணை நடத்தப்பட்டால் உண்மை வெளிவரும். ஆனால் அரசு மறுக்கிறது. நாங்கள் போராடுகிறோம். அரசில் இருக்கும் மம்தா பானர்ஜி, ஆந்திர CPI(M), மேற்கு வங்க பார்வர்டு பிளாக் கூட நீதி விசாரணைக்கு வலியுறுத்துகிறார்கள்.

கே: மாவோஸ்டுகளில் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை வைத்திருக்கும் நபர் ஆசாத். அரசு ஏன் அவரைக் கொல்லவேண்டும்?

ப: ஆசாத் கொலை மூலம் அரசு பேச்சுவார்த்தைக்குத் தயாரில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. பத்திரிக்கைகள், அறிவுஜீவிகளிடம் அரசு பேச்சுவார்த்தைக்குத் தயார் என நாடகமாடுகிறது. உண்மையில் அரசுக்கு போர் தேவைப்படுகிறது. அது பன்னாட்டு நிறுவனங்களுடன் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கால வரையறை உள்ளவை. நீண்ட காலத்திற்கு ஒத்திவைக்க முடியாது. அதனால் சொந்த மக்களைக் கொன்றாவது முதலாளிகளின் நலனைப் பாதுகாக்க கொலை வெறியுடன் செயல்படுகிறது.

கே: பேச்சுவார்த்தை தொடர வாய்ப்பிருக்கிறதா?

ப: ஆசாத் படுகொலைக்குப் பின் நடைபெற்ற மாநில அரசுகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் இதற்கான பதில் உள்ளது. அதுவரை நக்சல் பிரச்சனைக்கு சட்டம் ஒழுங்கு, வளர்ச்சி, பேச்சுவார்த்தை என மூன்று அம்சத் திட்டம் வைத்திருந்த அரசு அதை இரண்டாக சுருக்கிக்கொண்டுள்ளது. ’பேச்சுவார்த்தை’ என்கிற அம்சம் திடீரென காணாமல் போயுள்ளது. இப்பொழுது காடுகளைக் கைப்பற்றுதல், வளர்ச்சித் திட்டம் செயல்படுத்துதல் என இரண்டு அம்சத் திட்டத்தை முன்வைத்துள்ளது. அதாவது மக்கள் எழுச்சியை நசுக்குவோம், பன்னாட்டு நிறுவனங்களை வளர்ப்போம் என்பது தான் இதன் சாரம்சம். வேதாந்தா, எஸ்ஸார், ஜிண்டால் முதலிய பன்னாட்டு நிறுவனங்களுடன் அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்கள் காலக்கெடுவை நெருங்குகின்றன. இதனால் அரசு பேச்சுவார்த்தைகளில் அக்கறை காட்ட மறுக்கிறது.

கே: ஆந்திராவில் தெலங்கானா கோரிக்கையை முன்வைத்து கத்தார் புதுக் கட்சியை துவக்கியுள்ளாரே?

ப: அவர் கட்சி ஆரம்பிக்கவில்லை. தெலங்கானா கோரிக்கையை ஆதரிக்கும் பல அரசியல் இயக்கங்கள் இணைந்து தனி தெலங்கானாவை முன்னிறுத்தி ஒரு முன்னணியை அமைத்துள்ளன.

கே: ராகுல் காந்தி பழங்குடி மக்களோடு நெருக்கம் காட்டுகிறாரே. சமீபத்தில் கூட வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராகப் போராடும் நியாம்கிரி மக்களோடு பேரணி நடத்தினாரே?

ப: அந்த நிறுவனத்திற்கு மக்களின் விருப்பத்தையும் மீறி காங்கிரஸ் அரசுதான் அனுமதியளித்தது. அவர் காங்கிரஸ் ஆளாத மாநிலங்களுக்கு மட்டுமே செல்லும் மர்மம் புரியவில்லை. உண்மையிலேயே பழங்குடி மக்கள் மீது அக்கறையிருந்தால் ஆந்திரா வரவேண்டியது தானே? ஆந்திரா, மஹாராஸ்டிரா, சத்தீஸ்கர் மாநிலங்களில் தான் அதிக சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உள்ளன. இவை எல்லாம் தன்னுடைய இமேஜை வளர்த்துக்கொள்ள ராகுல் செய்யும் நாடகங்கள். இத்தகைய நாடகங்கள் நேரு குடும்பத்திற்குப் புதிதல்ல.

கே: காஷ்மீரில் சமீபகாலமாக இந்திய அரசுக்கு எதிராக எழுந்துள்ள மக்கள் எழுச்சியை எவ்வாறு பார்க்கிறீர்கள். மாவோயிஸ்டுகள் சுதந்திர காஷ்மீரை ஆதரிக்கிறீர்களா?

ப: காஷ்மீரும், வடகிழக்கு மாகாணங்களும் வரலாற்று ரீதியில் எப்பொழுதும் இந்தியாவோடு இருந்ததில்லை. தற்பொழுது ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி வரவேற்கத்தக்கது. காஷ்மீர் மக்களின் உண்மையான சுதந்திர உணர்ச்சி (AZADI) வெளிவந்துள்ளது. இனி சுதந்திர காஷ்மீர் கோரிக்கையை யாரும் வெளிநாட்டு சதி எனக் கூறமுடியாது. நாங்கள் முழுமனதுடன் இந்தப் போராட்டத்தை ஆதரிக்கிறோம்.

சாரு மஜீம்தார் தலைமையில் CPI(ML) உருவான காலகட்டத்திலேயிருந்து அனைத்து புரட்சிகர இயக்கங்களும் காஷ்மீரிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்து வருகிறோம்.

புரட்சிகர எழுத்தாளர் சங்கம் 1970ல் உருவாகியபோது அதன் திட்டங்களில் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாகாணங்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

கே: தாண்டேவாடாவில் நடப்பது பழங்குடி மக்களின் பிரச்சனையா மாவோயிஸ்டுகளின் பிரச்சனையா?

ப: நிச்சயமாக, போர் மாவோயிஸ்டுகளுக்கும் அரசுக்கும் தான். ஆனால் இது பழங்குடி மக்களுக்கான போர். ஆகவே இது பழங்குடி மக்களுக்கான மாவோயிஸ்டு போர் என்பதே சரி. பழங்குடி மக்களின் நிலங்களும் அவர்களின் இயற்கை வளங்களும் பன்னாட்டு நிறுவனங்களால் அரசு உதவியுடன் பறிக்கப்படுகின்றன. நிலங்களும் இயற்கை வளங்களும் பழங்குடி மக்களுடையைவை; மாவோயிஸ்டுகளுடையவை அல்ல. தங்கள் நிலத்திற்காகப் போராடும் பழங்குடி மக்களுக்கு மாவோயிஸ்டுகள் ஒரு கவசமாக உள்ளனர்.

கே: மாவோயிஸ்டுகளின் இந்தப் போர் பன்னாட்டு நிறுவனங்களை எதிர்ப்பதற்கா அல்லது பழங்குடி மக்களின் காடுகளின் மீதான உரிமைக்காகவா?

ப: இரண்டுக்கும் தான்.

கே: அப்படியானால் நாளை மாவோயிஸ்டுகள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அமைத்தால் காடுகளில் சுரங்கம் அமைக்க மாட்டீர்களா? அப்பொழுது காடுகளின் மீதான பழங்குடி மக்களின் உரிமை என்னவாகும்?

ப: ஒட்டுமொத்த பழங்குடி மக்களின் சுதந்திர முடிவுகளின் (COMMAN AND COLLECTIVE WILL) அடிப்படையிலேயே நிறுவனங்களின் கொள்கையும், சுரங்கக் கொள்கையும் முடிவுசெய்யப்படும். அது மட்டுமல்லாமல் சுரங்கத் தொழில், விவசாயத்திற்கு உதவும்படி அமையுமே தவிர அழிக்காது. மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எதிரான எந்த செயலும் செய்யப்படாது. இது முடியாதது அல்ல இதை நாங்கள் தண்டகாரண்யாவில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

தற்போதைய அரசுக்கும் நாங்கள் அமைக்கப்போகும் அரசுக்கும் வேறுபாடு உள்ளது. தற்போதைய அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து லாபம் சம்பாதிக்க முதலாளிகளுக்கு சுரங்கத்தை அனுமதிக்கிறது. ஆனால் நாங்கள் அமைக்கும் சுரங்கமானாலும் தொழிற்சாலைகளானாலும் உள்ளூர் மக்களுக்காக நடைபெறும். மீதமிருப்பவை மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். ஆதிவாசி மக்களின் ஒன்றுபட்ட நலன்களின் அடிப்படையிலேயே சுரங்கக் கொள்கை முடிவு செய்யப்படும்.

கே: புத்ததேவ் பட்டாச்சார்யா

‘மாவோயிஸ்டுகள் பயங்கரவாதிகள்’ என்றும், ‘அவர்கள் மாவோவின் பெயரை சொல்லத் தகுதியற்றவர்கள்’ என்றும் கூறியுள்ளாரே?

ப: நக்சல்களை பயங்கரவாதிகள் என்பது பிரிட்டிஷார் பகத்சிங்கை பயங்கரவாதி என்று அழைத்ததைப் போன்றது. ஆக பிரிட்டிஷாருக்கும் புத்ததேவுக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஹர்மத்வாணியும் மார்க்சிஸ்ட் கட்சியும் தான் லால்கரில் பயங்கரவாதப் படுகொலைகளை நடத்தியது. அவருக்கு மாவோவின் ஒரு மேற்கோளை நினைவுபடுத்த விரும்புகிறேன்

“விவசாயமும் தொழிற்சாலையும் மனிதனின் இரு கால்களைப் போன்றவை. தொழிற்சாலை விவசாயத்திற்கு உதவவேண்டும்”. இது தான் மாவோயிசம். இதற்கு அவர் எதிராக உள்ளார். அனேகமாக அவர் மாவோவைப் படிப்பதை மறந்துவிட்டார் என நினைக்கிறேன்.

கே: ‘மாவோயிஸ்டுகளை ஆதரித்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் துரோகிகள்’ என அரசு அறிவித்துள்ளது பற்றி?

ப: மாவோயிஸ்டுகளை ஆதரித்தால் பத்தாண்டு சிறை என அரசு அறிவித்துள்ளது. உண்மையைக் கூறினால் துரோகிகள் என்றால், நாங்கள் துரோகிகள் அல்ல இராஜ துரோகிகள். இதுவே மகிழ்ச்சியானது. இவர்கள் தான் தடா, பொடா போன்ற சட்டங்களைக் கொண்டு வந்தார்கள். அவை மக்கள் ஆதரவுடன் தூக்கியெறியப்பட்டன. இதுவும் தூக்கியெறியப்படும்.

கே: சமீபகாலமாக மம்தா லால்கரில் ஆர்வம் காட்டுகிறாரே. ஆசாத் கொலைக்கு நீதி விசாரணை நடத்தவேண்டும் என்கிறாரே?

ப: அவருக்கு தன்னை மாற்றிக்கொள்ளவேண்டிய தேவையிருக்கிறது. அவர் முதல்வராக விரும்புகிறார். விரைவில் தேர்தல் வரப்போகிறது. இது மாவோயிஸ்டுகளுக்கு நன்றாகத் தெரியும்.

கே: ஆனால் மாவோயிஸ்டுகள் மம்தாவை ஆதரிப்பதாகக் கூறப்படுகிறதே?

ப: நிச்சயமாக இல்லை. இச்செய்திகள் ஊடகங்களாலும், சிபிஎம் கட்சியாலும் உருவாக்கப்பட்டவை. மாவோயிஸ்டுகள் மக்களை மட்டுமே ஆதரிக்கிறார்கள். எந்த தேர்தல் அரசியல்வாதிகளையும் ஆதரிப்பதில்லை.

கே: வளர்ச்சி விகிதத்தைப் பொருத்தவரை இந்தியா இரண்டாவது வேகமாக வளரும் நாடு என புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் நீங்கள் இந்தியா வளரவில்லை என்கிறீர்கள்?

ப: இந்த வளர்ச்சி யானைக்கும் எலிக்குமான வளர்ச்சியைப் போன்றது. அம்பானி பல லட்சம் கோடியில் வீடு கட்டியிருப்பதையும், ஆயிரக்கணக்கானோர் வீடில்லாமல் இருப்பதையும் இணைத்துப் பார்க்கும்போது இது வளர்ச்சியாகத் தோன்றுமா? ஆக, இங்கு வளர்ச்சி விகிதமோ, உற்பத்தியோ கேள்வியல்ல. அவை எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகின்றன என்பது தான் முக்கியம். அனைவருக்கும் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகிறதா என்பது தான் கேள்வி.

அனைவருக்கும் உணவு, உடை, உறைவிட வசதி செய்யப்பட்டால், அனைவருக்கும் அடிப்படை உரிமைகள் அளிக்கப்பட்டால் அதை வளர்ச்சியாகக் கொள்ளலாம்.

நாங்கள் வளர்ச்சியை கீழிருந்து பார்க்கிறோம். அதாவது ஆந்திராவில் 1.3 லட்சம் ஏக்கர் நிலங்கள் உபரியாக உள்ளன. அதை நிலமற்ற தலித் மக்களுக்கு பிரித்துக் கொடுக்கச் சொல்கிறோம். ஆனால் அரசு வளர்ச்சியை மேலிருந்து பார்க்கிறது. அது வேதாந்தாவிற்கு பல்லாயிரக்கணக்கான நிலத்தைக் கொடுக்கிறது. வேதாந்தாவின் வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சியாகக் கூறுகிறது. அதை நாங்கள் மறுக்கிறோம்.

கே: ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாக மாவோயிஸ்டுகள் குரல் கொடுக்கவில்லை என தமிழகத்தில் பேசப்படுகிறதே?

ப: ஆந்திராவில் சட்டசபை முன்பு பெருந்திரளாக ஆர்ப்பாட்டம் நடத்தினோம். டில்லியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஈழப் போராட்டத்தை ஆதரித்தும் பிரபாகரனை ஆதரித்தும் நானே கவிதை பாடினேன். பிரபாகரன் கொல்லப்பட்ட பிறகு அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக எங்கள் இதழின் அட்டைப் படத்தில் அவர் படமே இடம்பெற்றிருந்தது.

கே: அக்டோபர் 2‐ல் சல்வா ஜுடும் படையின் தலைவர்கள் இணைந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் புதிய அமைப்பை ஆரம்பித்திருக்கிறார்களே. முந்தைய சல்வா ஜுடும் வன்முறைக்கு மாவோயிஸ்டுகள் ஊடுருவியதுதான் காரணம் என்கிறார்களே?

ப: அரசு பழங்குடி மக்களைப் பிரித்து அவர்களுக்குள்ளாகவே சட்டவிரோதமான படையைக் கட்டி பழங்குடி மக்களுக்கு எதிராக திருப்பி விட்டுள்ளது. இது குறித்து பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. உச்சநீதிமன்றமும் தன் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது. இந்த சல்வா ஜுடும் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆட்படுத்தி சித்ரவதை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் மக்கள் ஊரை காலிசெய்வார்கள் என நம்புகிறது. நாடு முழுவதும் இந்த அரச ஆதரவு கூலிப்படையின் அட்டூழியங்களை எதிர்த்து குரல் எழும்பியபின் இப்பொழுது வேறு பெயரில் இயங்க முயற்சிக்கிறது.

கே: இந்த உலகமய சூழலில் விவசாயிகள் தங்கள் நிலங்களையும் விவசாயத்தையும் விட்டுவிட்டு நகரங்களுக்கு கூலிகளாக துரத்தப்படுகிறார்கள். இச்சூழ்நிலையில் உழுபவனுக்கே நிலம் என்கிற முழக்கம் எப்படி கைகூடும் என நினைக்கிறீர்கள்?

ப: நக்சல்பாரி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டபோது பண்ணையார்களிடமிருந்து நிலங்களை மீட்டு உழுபவனுக்குத் தருவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால் குறிப்பாக 1991க்குப் பிறகு பன்னாட்டு நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைத் தன்வசப்படுத்தியிருக்கின்றன. இதனால் நிலம் வைத்திருந்த சற்று வசதியான விவசாயிகளும் விவசாயத்தை விட்டு துரத்தப்பட்டு கூலிகளாக்கப்பட்டுள்ளனர். ஆக எதிரிகள் மாறியுள்ளனர் நோக்கம் மாறவில்லை. மாறாக நிலப் பகிர்ந்தளிப்பு என்பது விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் இன்று தேவையான ஒன்றாக உள்ளது.

கே: நேபாள மாவோயிஸ்டுகள் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு வந்ததுபோல் எதிர்காலத்தில் இந்திய மாவோயிஸ்டுகள் வர வாய்ப்பிருக்கிறதா?

ப :நிச்சயமாக இல்லை.

கே: அறிவுஜீவிகளும் அரசும் நக்சல் பிரச்சனை என்பது பொருளாதாரப் பிரச்சனை என்று கூறுகிறார்கள். அரசு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தினால் நக்சல் பிரச்சனையைத் தீர்க்கலாம் என்கிறார்களே?

ப: முதலில் அரசையும், அறிவுஜீவிகளையும் ஒன்றாகப் பார்ப்பதை மறுக்கிறேன். அரசு நக்சல்களை அழிக்க முயல்கிறது. ஆனால் அறிவுஜீவிகள் அவ்வாறு இல்லை என நினைக்கிறேன். குறைந்தபட்சம் அறிவுஜீவிகள் நக்சல்களை சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வின் விளைவாகப் பார்க்கிறார்கள். அறிவுஜீவிகள் நக்சல்களை பிரச்சனையாகப் பார்க்காமல் தீர்வாகப் பார்க்கிறார்கள். நீதிபதி M.N.ராவ் “நாம் எப்பொழுதும் நக்சலிசத்தைப் பிரச்சனையாகத்தான் பார்க்கிறோம். சிலர் அது சட்ட ஒழுங்குப் பிரச்சனை என்றும், சிலர் சமூக பொருளாதாரப் பிரச்சனை என்றும் புரிந்து கொள்கிறோம். ஆனால் மக்கள் அதை பிரச்சனையாகப் பார்க்காமல் தீர்வாகப் பார்க்கிறார்கள்.” என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் உண்மையில் இது பாட்டாளி வர்க்க அரசியல் அதிகாரத்திற்கான போராட்டம். நிலப்பகிர்வு என்பது மக்களுக்கு குறுகிய காலத்திற்கு பயன்படும் ஒரு பொருளாதாரத் திட்டம் மட்டுமே. அது மட்டுமே தீர்வாகாது. அரசியல் அதிகாரம் மக்களிடம் இருப்பது மட்டுமே சரியான தீர்வு.

கே: பசுமை வேட்டைக்கு எதிராக அறிவுஜீவிகள் அளவுக்கு பொதுமக்கள் திரளாக பங்கேற்கவில்லையே. இது மாவோயிஸ்டு இயக்கம் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு விட்டதைக் குறிக்குமா?

ப: இது தவறான தகவல். பசுமை வேட்டையை எதிர்த்து மக்கள் திரளாகப் போராடினார்கள். ஆந்திரா, மேற்கு வங்கம், ஜார்கண்ட் முதலிய மாநிலங்களில் வெகுஜன மக்கள் போராடினார்கள். போராடவில்லை என்பது தவறான தகவல்.

கே: மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு கிராமப்புறங்களில் இருப்பதைப் போன்று நகரங்களில் ஆதரவு இருப்பது இல்லையே, ஏன்?

ப: இல்லை. நக்சல்பாரி இயக்க ஆரம்பகாலகட்டங்களை விட அதிகமாக வளர்ந்திருக்கிறோம். இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் இது வர்க்கப் போராட்டம் என்பதோடல்லாமல் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமாக உள்ளதால் தேசியவாதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், காந்தியவாதிகளின் ஆதரவைப் பெற்றுள்ளோம். நிலமற்ற தொழிலாளர்கள் மட்டுமல்ல தேசிய முதலாளிகளும் ஆதரவு தருகிறார்கள். இது தான் உண்மை.

கே: பெரும்பாலும் நிலமற்ற விவசாயக் கூலிகள் தலித்துகளாக இருக்கிறார்கள். இவர்களுடைய உரிமைக்கு என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?

ப: சுயமரியாதை, நிலம், தீண்டாமை ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. தலித் அமைப்புகள் சுயமரியாதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். கோவில் நுழைவுப் போராட்டம் நடத்துவதை விட கோவில், மடங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலங்களைக் கைப்பற்றி அதை மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். ஏனென்றால் சுயமரியாதை தானாக வருவதில்லை. அது நிலத்தோடுதான் வருகிறது.

கே: செப்.11க்குப் பிறகு அனைத்து ஆயுதப் போராட்டங்களும் பயங்கரவாதமாக சித்தரிக்கப்படுகின்றன. இதை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

ப: இதற்கு என் கவிதையை பதிலாக்குகிறேன்.

“நேற்று வெள்ளை மனிதன் பகத்சிங்கை பயங்கரவாதி என்றான்

இன்று கருப்பு மனிதன் நக்சல்பாரியை பயங்கரவாதி என்கிறான்

நாளை உலகம் இவர்களை இருண்ட வானின் சிவப்பு நட்சத்திரம் என்பார்கள்”.

உலகமய சூழலில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்படுவார்கள். எதிரிகள் எங்களுக்குக் கொடுக்கும் பெயர் பற்றி கவலையில்லை.

கே: ஆனால் பகத்சிங் காலத்திற்கும் தற்போதைய உலகமய காலத்திற்கும் வேறுபாடு உள்ளது. உதாரணமாக, நடுத்தர மக்கள் உலகமய சூழலில் சிறு அளவில் பயனடைந்துள்ளனர் அவர்கள் நடுத்தர வர்க்க பாதுகாப்பை, அமைதியை, நிம்மதியை வேண்டுகின்றனர். நீங்கள் பயங்கரவாதிகளாக காட்டப்பட்டுள்ளீர்கள். அவர்களை எவ்வாறு வெல்வீர்கள்?

ப: உண்மையில் நடுத்தர மக்கள் மாவோயிஸ்டுகளை தீவிரவாதிகள் எனக் கருதவில்லை. உலகமயமாக்கலில் சிறிய அளவில் நன்மை அனுபவித்த பிறகு அவர்கள் அந்நியப்பட முயற்சித்தார்கள். ஆனால் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு அவர்கள் நெருங்கி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் மக்களின் வெறுப்பு அதிகமாகி 1930 இருந்தது போல் திரும்பிக் கொண்டிருக்கிறது. மற்றொரு புறம் அரசு பாசிச மயமாகி வருகிறது. அது இந்திய அரசானாலும் அமெரிக்க அரசானாலும் சரி. பெரும்பான்மையான மக்கள் அரசுகளின் இந்தப் போக்கை எதிர்க்கின்றனர்.

நன்றி: கீற்று

இந்திய பயங்கரவாதத்துக்கு எதிராக அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.