Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்மாவும் நாங்களும் அம்மாவின் பிள்ளையைத் தேடுகிறோம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவும் நாங்களும் அம்மாவின் பிள்ளையைத் தேடுகிறோம்.

அம்மா அழுது கொண்டேயிருந்தாள். யுகங்களுக்கும் ஆறாத துரங்களும் வலிகளும் அம்மாவின் நெஞ்சுக்குளிருந்து வெளியேறிக் கொண்டிருந்தது.

மூத்தவன் பற்றி இளையவன் பற்றி நடுவிலான் பற்றி அம்மா ஆயிரம் கதைகளைத் தனது ஞாகபச்சேமிப்பிலிருந்து மீட்டுக் கண்ணீரால் வெளியேற்றிக் கொண்டிருந்தாள்.

ஒண்டெண்டாலும் மிஞ்சியிருந்தா நான் எப்பன் நிம்மதியா இருந்தருப்பனெல்லோம்மா….? உழைக்கிற வயதுப்பிள்ளையளை சாகக்குடுத்திட்டு நானிப்ப தனிச்சுப் போனன் தாயே….! என்ரை சின்னப்பிள்ளையும் நானும் கடைசியானெண்டாலும் வருவனெண்டுதான் காத்திருந்தமம்மா….! என்ர குஞ்சு அவனும் வரேல்ல….! நானென்ன செய்வன் இந்தப்பிள்ளைக்கும் நஞ்சைக்குடுத்து நானும் சாவமெண்டு கூட ஒருதரம் நினைச்சனான். ஆனால் இந்தப் பிஞ்சின்ரை முகத்தைப் பாக்க அதுவும் ஏலேல்ல…..

ஒரு சமுத்திரத்தின் அலைகள் குமுறுமாப்போல அம்மா குமுறிக்கொண்டிருந்தாள். அவளது நம்பிக்கைகள் பொய்யாகி அவள் தனித்துப் போன துயரம் அவளை ஆறவிடாமல் அழ வைத்துக் கொண்டிருந்தது.

அம்மாவின் திருமணம் கூட அம்மாவுக்கு விருப்பமாயில்லாமல் கட்டாயமாகத்தான் நடந்தது. குடிகாரக்கணவன் குடும்பத்தைப் பற்றிச் சிந்திக்காத சோம்பேறிக் கணவனுக்காகவும் அம்மாதான் உழைக்க வேண்டிய நிலமையில் திருமண முடிச்சு அம்மாவுக்கு இயமனின் கயிறாக முடிச்சிடப்பட்டது.

மூத்தவன் பிறந்த நேரம் ஒரு நேரப்பத்தியச்சோற்றுக்காகவும் அம்மாதான் உறவினர்களை நாடியிருந்தாள். தனது விதி இதுதானென்று தனக்குள் சமாதானமாகி 4 பிள்ளைகளையும் பெற்றுக் கொண்டாள். மூத்த 3பேரும் ஆண்பிள்ளைகளாகவும் கடைசிச் செல்லம் இன்று மிஞ்சிய 9வயதுப் பெண் குழந்தையாகவும் போக அம்மாவின் நம்பிக்கை பிள்ளைகள் தான். ஊரில் உள்ள வீடுகளில் வேலை செய்து கிடைக்கிற மீத நேரங்களில் எல்லாம் பலகாரம் சுட்டு விற்று பிள்ளைகளைப் படிப்பித்து குடிகாரனுக்கும் சோறு போட்டுக் கொண்டிருந்தாள்.

பிள்ளைகள் தன்னிலும் பெரியவர்களாய் வளர்ந்த பின்னும் பிள்ளைகளை அடிப்பது வாயில் வரும் தூசணங்களால் திட்டுவது அம்மாவின் குடிகாரக் கணவனுக்கு மாற்ற முடியாத குணங்களாகிப் போனது. அப்படித்தான் ஒருநாள் மூத்தவன் ஏ.எல் வரை படித்து பல்கலைக்கழகம் தெரிவாகியிருந்த நேரம் குடிச்சுப்போட்டு மகனை அடித்தான். இரவிரவாய் அழுத பிள்ளை சில நாட்களில் காணாமல் போய்விட்டான்.

அம்மாவின் முதல் நம்பிக்கை அவளை விட்டுப்போனது. தனது சுமைகள் நீங்கப்போகிறதென்ற கனவில் இருந்தவளின் கனவுகள் நொருங்கி அவள் கூலிக்காரியாய் தொடர்ந்தும் அலையத் தொடங்கினாள்.

சற்றுக்காலம் கழித்து வீடு திரும்பிய மகன் அம்மா அறிந்திராத பல கதைகளைச் சொன்னான். இலட்சியம் வெற்றியென்றெல்லாம் புதிதுபுதிதாய் ஒரு ஞானிபோல் அம்மா முன் வந்திருந்தான். உன்னைப்போல ஆயிரமாயிரம் அம்மாக்கள் எனக்கு இருக்கின்றார்களென்றான். என்னைப்போல் ஆயிரமாயிரம் மகன்கள் அம்மாவுக்கு இருக்கின்றனர் என்றான். இனத்தைக் காக்கும் அடையாளம் இதுவென தன்னோடு கொண்டு வந்திருந்த ஆயுதத்தைக் காட்டினான். தனது சகோதரர்களுக்கும் தனது வழியில் அவர்களும் பயணப்பட வேண்டுமென்று கதைகள் சொன்னான். ஏதோவொரு பாடலை அடிக்கடி தனக்குள் உச்சரித்துக் கொண்டேயிருந்தான். ஒரு வாரம் கழிய விடைபெற்றுக் கொண்டு போனான்.

சிலவருடங்கள் கழித்து மீண்டும் வந்தான். சீருடையில்லாமல் சாதாரண உடையோடு வந்தான். ஊரில் தான் இயக்கத்திலிருந்து விலகிவந்திருப்பாகச் சொன்னான். ஊருக்குள் பழையபடி உலவித்திரிந்தான். ஊரில் தொல்லை கொடுத்த அதிரடிப்படையினர்கள் பலர் அழிந்து போக அவன் காரணமாயிருந்தான். யாருக்கும் அவன் மீது சந்தேகம் வரவில்லை.

அவன் அம்மாவின் மகனாக அம்மாவுக்காக உழைக்கக் கடையொன்றில் வேலைக்குச் சேர்ந்தான். தனது உழைப்பில் சேமித்து அம்மாவுக்குச் சங்கிலி வாங்கிக் கொடுத்தான் தங்கைக்கு சட்டைகள் வாங்கிக் கொடுத்தான் தம்பிகளுக்கு சயிக்கிள் வாங்கிக் கொடுத்தான். மாதம் முடிய அம்மாவிடம் தான் வேலைக்குச் சென்று வந்து சம்பளத்தைக் கொடுத்தான். அம்மாவின் கையால் சாப்பாடு சாப்பிட்டான். மாலை நேரங்களில் அம்மாவின் மடியில் கிடந்து தம்பிகளுடன் சண்டையிடுவான்.

அம்மாவுக்குள் இன்னும் மறக்க முடியாத அவனது பல்கலைக்கழகக்கல்வியை அவன் தொடர விரும்பினாள். அதை அவனிடமும் தெரிவித்தாள். இனி அம்மாவை தான் உழைத்துப் பார்க்கப்போவதாகச் சொல்லி அந்தக் கதைக்கு முற்று வைத்தான். பிள்ளை திரும்பி வந்ததில் மகிழ்ந்தாலும் அவனுக்கு காலம் முழுவதும் நன்மை கொடுக்கக்கூடிய கல்வியை அவன் தொடராமை அம்மாவுக்கு வருத்தம்தான்.

ஒரு விடுமுறை நாள். அவன் நெடுநேரம் நித்திரையில் கிடந்தான். திடீரென வீட்டுக்குள் புகுந்த அதிரடிப்படையினருடன் அவனது குடிகார அப்பாவும் வந்திருந்தார். அவன் படுத்திருந்த அறையை அவனது தந்தையே திறந்துவிட்டு அவன் தான் அது என அடையாளமும் காட்டப்பட்டான்.

நெடுநேரம் நித்திரை கொள்கிற பிள்ளைக்காகவும் மற்றைய பிள்ளைகளுக்காகவும் சமைத்துக் கொண்டிருந்த அம்மாவை அவன் கூப்பிட்டான். அம்மாவின் மகன் அம்மாவுக்கு முன்னால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டான்.

கையில் விலங்கிடப்பட்டு அவன் அவர்களால் அம்மாவின் முன்னால் அடித்து உதைக்கப்பட்டு இறுதியில் விலங்கிடப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனுக்காகச் சமைக்கப்பட்ட உணவு அவனது குருதித்துளிகளால் சிவந்தது. அம்மாவின் நம்பிக்கை அவன், அம்மா முன்னே துடித்துத் துடித்து இறந்து போனான்.

கண்முன்னால் அம்மாவின் பிள்ளை கொல்லப்பட அவளது கணவன் நிறைவெறியில் கூத்தாடினான். சொந்தப்பிள்ளைக் கொலைஞர்கள் கொல்ல குடியில் மட்டும் கவனமாயிருந்தவனுடன் அன்றோடு அம்மா உறவை அறுத்துக் கொண்டு தனித்து வாழத் தொடங்கினாள்.

மூத்தவனை இழந்த வீட்டில் தொடர்ந்து வாழ முடியாது போனது. அவன் துடித்துத் துடித்து இறந்த காட்சி அம்மாவை அவனது சகோதரர்களை அங்கே வாழ விடவில்லை. மிஞ்சிய பிள்ளைகளுக்காக அம்மா வன்னிக்குக் குடிபெயர்ந்தாள். தனது பிள்ளையுடன் வாழ்ந்த பிள்ளைகளையெல்லாம் தேடித்தேடிச் சந்தித்தாள். அவன் சொன்னது போல அவர்களுக்குள் அவன் வாழ்வதாக நம்பினாள்.

அண்ணாவை அழிச்சவையை விடப்படாதம்மா….அடிக்கடி சொல்லிக்கொள்வான் இரண்டாவது மகன். அவனுக்கு நிகராக கடைசியும் சொல்லுவான். அம்மாவால் அவர்களை இழக்க முடியாது. அவர்கள் தன்னைவிட்டுப் போகக்கூடாதென்பதில் அதிகம் அக்கறை செலுத்தினாள். ஆனால் ஒருநாள் அம்மாவின் இரண்டாவதும் மூன்றாவதும் மகன்களும் போராடப்போனார்கள். அம்மாவிற்காக மிஞ்சியது மகள் மட்டும் தான்.

இரண்டாவது மகன் கடற்புலியாகி களத்தில் நின்றான். நீலவரியுடுத்தி அம்மாவைப் பார்க்க வந்தான். கடைசிமகன் பச்சைவரியுடுத்தி வந்தான். தமிழீழம் பிடிச்சு வருவமெண்டு சொல்லிக் கொண்டே போவார்கள். அம்மாவும் நம்பினாள்.

யுத்தம் அகோரமடையத் தொடங்கியது. அம்மாவின் பிள்ளைகள் அம்மாவிடம் வருவதேயில்லை. அம்மா நம்பிய சாமிகளிடம்தான் தனது பிள்ளைகளுக்காக இறைஞ்சிக் கொண்டிருந்தாள்.

2008இன் இறுதிப்பகுதியது. அம்மாவுக்கும் மகன்களுக்கும் இடையிலான தொடர்பாக வானொலி மட்டும்தான். அயலவர்கள் வாங்கும் ஈழநாதம் பத்திரிகையையும் விடாமல் பார்ப்பாள். ஊருக்குள் வாழ்ந்த பிள்ளைகள் வீரச்சாவாகி வீடுகளுக்கு வருகின்றதை அறிந்தால் அம்மா ஓடிப்போய் பார்த்துவிடுவாள். தனது மகன்களும் அப்படி வந்துவிடுவார்களோ என்ற பயத்தில். இரவுகளில் நிம்தியற்ற தூக்கம் எப்போது எங்கே யாரை எறிகணை எடுக்குமோ என்ற அச்சம் அத்தனைக்குள்ளும் தனது மிஞ்சிய மகளை பதுங்குகுளிக்குள்ளேயே பாதுகாத்து வந்தாள்.

ஒருநாள் பதுங்குகுளிக்குள்ளிருந்த மகள் அம்மா என அழுது கொண்டு எழும்பி வந்தாள். அம்மா அண்ணா வீரச்சாவடைஞ்சி…..அவள் தொண்டைக்குள்ளால் சொற்கள் வெளிவராமல் அந்தரித்தாள். எங்கம்மா கேட்டனீ….அம்மா மகளை உலுக்கினாள். அவள் கையிலிருந்து வானொலிப்பெட்டியைக் காட்டி அழுதாள்.

அம்மாவின் இரண்டாவது நம்பிக்கை சரிந்தது. எந்தச் செய்தியைக் கேட்கக்கூடாதென்று இருந்தாளோ அந்தச் செய்தியை அம்மா கேட்டாயிற்று. அம்மாவின் பிள்ளை வீட்டுக்குக் கொண்டு வரப்படவில்லை. கடலில் அவன் காவியமாய் போனான்.

2009 வருட ஆரம்பத்தில் அண்ணனின் செய்தியறிந்து 3வது மகன் அம்மாவிடம் வந்தான். தனது கண்ணீரால் தனது கடைசி மகனைக் கட்டியழுதாள். அழுவதற்காகக் இனி ஈரமில்லாதவரை அவனைக் கண்ணீரால் நனைத்தாள். அவனைத் தங்களோடு வந்துவிடும்படி கெஞ்சினாள் அவனது ஒற்றைத் தங்கை. தனக்கு நிறைய வேலைகள் இருப்பதாய் சொன்னான். வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு வருவதாய் விடைபெற்றுக் கொண்டு அவனும் போனான்.

அம்மா நொந்து போனாள். இழப்பதற்கு எதுவும் அவளிடம் இல்லாது போனது. இருந்த இடங்களை விட்டு ஒவ்வொரு இடமாய் அம்மாவும் அம்மாவின் ஒற்றை மகளும் இடம்பெயரத் தொடங்கினர். புதுமாத்தளன் வரை போனவர்களை ஒருநாள் மீட்பர்கள் என அழைத்தவர்கள் சுற்றிக் கொண்டனர்.

அம்மா தனது மூன்றாவது மகன் புதுமாத்தளனில் காயமடைந்து இருப்பதாக யாரோ சொன்னதை நம்பி அந்த இடத்தை விட்டுப் போகமாட்டேனென அடம்பிடித்துக் குழறினாள். அம்மாவின் பிள்ளையை அவர்கள் காப்பாற்றியிருப்பதாகச் சொன்னார்கள். அந்த வார்த்தைகளை நம்ப முடியாமல் அம்மா புதுமாத்தளனில் மனிதர்களின் தலைதெரிந்த எல்லோருக்குள்ளும் தனது மகனைத் தேடினாள்.

இறுதியில் அம்மாவும் அவளது மகளும் முகாமில் சென்று சேர்ந்தனர். தனது கடைசி நம்பிக்கை தனது கடைசிகால நம்பிக்கையாக தனது மகனைத் தேடத் தொடங்கினாள். எல்லோரிடமும் தனது மகனைப்பற்றி விசாரித்தாள் பதிவுகள் கொடுத்தாள். எதுவித பதிலும் கிட்டவில்லை.

முகாமில் உள்ளவர்கள் மனநலப் பாதிப்புகளிலிருந்து மீட்கவென நிகழ்த்தப்பட்ட கலை நிகழ்வுகளில் அம்மாவின் ஒற்றை மகள் பாடல்கள் பாடினாள் , நடனங்கள் ஆடினாள். எங்கே நிகழ்வுகள் நடக்கிறதோ அங்கெல்லாம் அம்மாவையும் கூட்டிக் கொண்டு போய்விடுவாள். அந்த நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்வோரிடமெல்லாம் சொல்லுவாள் எங்கடை அண்ணா இதைப்பாக்கக் காட்டுங்கோ….நாங்கள் இருக்கிறம் அண்ணாவை எங்களிட்டை வரச்சொல்லுங்கோ…என்ற கோரிக்கைகளை வைப்பாள். அவளது வேண்டுதல்களைக் கேட்டு அழுகின்ற அம்மாவுக்கு அவளே ஆறுதல் சொல்வாள்.

எங்கையும் தடுப்பில அண்ணா இருப்பான் என்னைப் பாப்பான் எங்களிட்டை வருவானம்மா…..அந்தச் சின்னவளின் நம்பிக்கை அம்மாவின் நம்பிக்கை எல்லாம் பொய்யாகும்படி ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையில் அம்மாவின் மகன் பற்றி எதுவித தகவலும் இல்லை.

நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் மனிதவுரிமைகள் ஆணையகம் தொண்டர் நிறுவனங்கள் என எல்லாரிடமும் தனது மகனைத்தேடி விண்ணப்பங்கள் அனுப்புகிறாள் அம்மா. சாட்சியங்களை வழங்கிக் கொண்டிருக்கிறாள். அம்மாவின் பிள்ளை இன்னும் வரவில்லை. எங்கும் இருப்பதற்கான அடையாளங்களும் இல்லை. ஆனாலும் அம்மா காத்திருக்கிறாள்.

தனது மகன் வருவான் தன்னையும் தனது மகளையும் உழைத்துக் காப்பாற்றுவான். என்ற நம்பிக்கையை இன்னும் கைவிடவில்லை. காணாமற்போன பிள்ளைகள் வருவார்கள் என்று நம்புகிற அம்மாக்களின் வரிசையில் அம்மாவும் காத்திருக்கிறாள்.

மரணித்த தனது இரண்டு பிள்ளைகள் போல் தனது கடைசி மகன் மரணித்துப் போகவில்லையென நம்புகிற அம்மா எங்களிடமும் தனது கடைசி மகனின் விபரங்களைத் தந்து வைத்திருக்கிறாள். தனது மகன்கள் வாழ்ந்த மண்ணில் மீண்டும் குடியேறியிருக்கிற அம்மா தனது பிள்ளைகளின் கனவுகள் பற்றிக் கதைகள் சொல்கிறாள். ஆயிரமாயிரமாய் புதைக்கப்பட்ட பிள்ளைகள் வாழ்ந்த மண்ணுக்குள் மிஞ்சிய வரலாறுகளாக வாழும் அம்மா போன்ற ஆயிரக்கணக்கான உறவுகளின் துயரங்களால் நிறைந்து கிடக்கிறது நிலம்.

அம்மாவின் வேண்டுகைக்காக நாங்களும் அம்மாவின் மகனைத் தேடுகிறோம். அவன் வரமாட்டான் அல்லது அவன் இல்லையென்று சொல்லும் தைரியமில்லை. அம்மாவின் பிள்ளைகள் வரமாட்டார்கள் இப்போதல்ல இனி எப்போதுமே வரப்போவதில்லை…ஆனாலும் அம்மாவும் நாங்களும் அம்மாவின் பிள்ளையைத் தேடுகிறோம்.

24.12.10

இப்படி எத்தினையோ அம்மாக்கள் ஈழத்திலே... அந்த மகன் கண்டிப்பாக கிடைக்கவேண்டும், அவர்களுக்கு உதவிகள் தேவைப்பட்டால் நேசக்கரம் மூலம் உதவலாமே!

நிஜத்துக்கு பதில் இடம் முடியவில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

வலிக்கிறது.....எங்கள் வலிகளை எல்லாம் எங்கு கொண்டுபோய் தீர்க்கப்போகிறோம்..? ஆயிரம் ஆயிரம் சோகக்கதைகள் வன்னியில் ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கிறது..அவர்கள் யார் யாருக்கு ஆறுதல் சொல்வார்கள்..?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தினையோ அம்மாக்கள் ஈழத்திலே... அந்த மகன் கண்டிப்பாக கிடைக்கவேண்டும், அவர்களுக்கு உதவிகள் தேவைப்பட்டால் நேசக்கரம் மூலம் உதவலாமே!

இந்த அம்மாவுக்கு கட்டார் நாட்டிலிருந்து தமிழகத்து உறவு சுவாமிநாதன் சுயதொழிலுக்கு உதவியுள்ளார். இலங்கை ரூபா 30000. அத்தோடு இந்த அம்மாவின் மகளின் கல்விக்கும் உதவியுள்ளார். அம்மாவின் ஒன்பது வயது மகளை அவளது எதிர்காலம் கொஸ்டலில் இருந்து படித்தால் ஒளிபெறும் என அம்மா விரும்புவதால் கொஸ்டலில் சேர்க்க ஏற்பாடு செய்துள்ளோம். அந்த மகளைத் தனது மகளாக ஏற்று அவளுக்கான கல்விச் செலவுக்கான பொறுப்பினை டென்மார்க்க் கேர்ணிங்கிலிருந்து திரு.திருமதி.குமரன் குடும்பத்தினர் பொறுப்பேற்றுள்ளனர். குமரன் ஏற்கனவே கடந்த ஒருவருடமாக இரண்டு மாவீரர்களின் தாயார் ஒருவருக்கு மாதாந்து உதவியை வழங்கி வருகிறார். குமரன் குடும்பம் , கட்டார் சுவாமிநாதன் குடும்பத்தினருக்கு இதயம் நிறைந்த நன்றிகள்.

ஒண்டிபுலி ,

நிறைய அம்மாக்களும் அக்காக்களும் தங்கள் மகன்களை மகள்களை கணவர்களை களத்திலும் எறிகணைகளுக்கும் கொடுத்துவிட்டு தமது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஒளியேற்ற உதவிகளுக்காக காத்திருக்கின்றனர். அத்தகைய ஒரு அம்மாவுக்கு அல்லது அக்காவுக்கு அல்லது ஒரு மகளுக்கு உங்களாலும் உதவ முடியும். தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கான தொடர்புகளை ஏற்படுத்தித் தருகிறோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிஜத்துக்கு பதில் இடம் முடியவில்லை...

உண்மைதான். :mellow:

வலிக்கிறது.....எங்கள் வலிகளை எல்லாம் எங்கு கொண்டுபோய் தீர்க்கப்போகிறோம்..? ஆயிரம் ஆயிரம் சோகக்கதைகள் வன்னியில் ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கிறது..அவர்கள் யார் யாருக்கு ஆறுதல் சொல்வார்கள்..?

எங்களால் இப்போது இயன்றது எல்லோராலும் செய்யக்கூடியது ஒன்றுதான் சுபேஸ் அந்த உறவுகளுக்கு உதவுவது. யாரின் துயருக்க யார் ஆறுதல் சொல்வதெனத் தெரியாத நிலமையில் பல குரல்கள் வருகிறது.

பலர் உயிருடன் வாழ்வதாய் நம்பும் உறவுகள் ஒன்றரை வருடம் கடந்தும் எதுவித தகவலும் இல்லாதிருக்கும் நிலமையில் என்றாவது வருவார்கள் என நம்புவோருக்கு நாமும் அதை நம்புவதாக ஒற்றை ஆறுதலைத்தான் சொல்ல முடிகிறது.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் தேடுகின்றோம்.............................................................................................................................................................................................................................

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ அம்மாக்கள் தாயகத்தில் பிள்ளைகள் வருவார்கள் என்று காத்திருக்கிறார்கள். இதே போல எத்தனையோ பிள்ளைகள் அம்மாக்கள், அப்பாக்கள் வருவார்கள் என்றும் காத்திருக்கிறார்கள். இவர்கள் செய்த குற்றம் ஈழத்தமிழனாகப் பிறந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.