Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருநங்கைகளின் உலகம்

Featured Replies

திருநங்கைகளின் உலகம்

அன்றைய 'கோடான கோழி கூவுற வேளை...’ முதல் இன்றைய 'ஊரோரம் புளிய மரம்...’ வரை தமிழ் சினிமாவுக்கும் அதன் கோடானு கோடி ரசிகக் கண்மணிகளுக்கும் திருநங்கைகள் என்றால், அரை குறையாகச் சேலை கட்டி, கரகரக் குரலில் 'மாமா... மாமா...’ என்று பாலியல் இச்சையோடு கும்மி அடிக்கும் கோமாளிகள்!

திருநங்கைகள் / திருநம்பிகள் யார் என்றும், அடிப்படையில் அவர்கள் ஏன் இப்படி மாறினர் என்பதன் காரணம் பலருக்குத் தெரியாது என்பதுதான் நாங்கள் கேலியாகப் பார்க்கப்படுவதன் காரணம். 'கருவறையில் ஓர் உயிர் ஜனிக்கும்போது முதலில் அது பெண் குழந்தையாகவே உருவாகிறது. ஆறு வாரங்கள் கழித்தே, அதன் நிரந்தரப் பாலின அடையாளத்தை இயற்கை தீர்மானிக்கிறது. அந்தக் குழந்தை நிரந்தரமாகப் பெண்ணாகவே இருக்கும்பட்சத்தில், அதன் உடற்கூறுகளும் மனக்கூறுகளும் அப்படியே எந்த மாற்றமும் இன்றித் தொடரும். அந்தக் குழந்தையும் பெண்ணாகப் பிறக்கும். அதன் உடற்கூறும் மனக்கூறும் ஆணாக மாற்றம் அடையும் பட்சத்தில், அது ஆண் குழந்தை ஆகிறது. எதிர்காலத்தில் ஆண் தன் குழந்தைக்குப் பாலூட்டப்போவது இல்லை என்றாலும், அவனுக்குப் பயன்படாத, முதிர்ச்சியடையாத மார்புக் காம்புகள் இருப்பதே அவன் ஒரு காலத்தில் பெண்ணாகவே இருந்தான் என்பதற்கு ஆதாரம்.

பெண்ணில் இருந்து ஆணாக உடற்கூறு மாற்றம்கொள்ளும் வேளையில், மனக்கூறும் அதேபோல ஆணாக மாற வேண்டும். பெரும்பான்மையான ஆண் குழந்தைகளுக்கு இப்படியான மாற்றம் நிகழ்ந்துவிடும். ஆனால்,இயற்கையின் விளையாட்டை யார் அறிவார்? ஒரு சில ஆண் குழந்தைகளுக்கு மட்டும் மனரீதியான மாற்றம் நிகழாமல், உடல் மட்டுமே மாற்றம் அடைந்துவிடுவது உண்டு. முறையான மாற்றம் இன்றிப் பிறக்கும் குழந்தை, உடலால் ஆணாகவும் மனதால் பெண்ணாகவுமே பிறக்கிறது. உலகம் இவர்களின் தோற்றத்தை வைத்து ஆணாகப் பார்க்க, இந்தக் குழந்தை களோ, தங்களைப் பெண்ணாகவே உணர்வார் கள். இவர்களே... திருநங்கைகள். இதன் நேர் எதிர்த் தன்மையோடு பிறக்கும் குழந்தைகள்... திருநம்பிகள். (நன்றி: டாக்டர் ஷாலினி)

தான் யார், என்ன என்பதை நிதானித்து உணர்ந்துகொள்ளும் வயதில், அந்தக் குழந்தையின் மனதில் தோன்றும் குழப்பங்களையும், சக மனிதர்களிடம் இருந்து எதிர்கொள்ளும் வசைமொழிகள் தரும் வலியையும் உங்களால் உணரவே முடியாது.

வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த திருநங்கையை ஒருமுறை வகுப்பில் உலோகம், அலோகம் பற்றி பாடம் நடத்திய ஆசிரியர், 'இவனைப் பாருங்க, இவன் உலோகமும் இல்ல... அலோகமும் இல்ல. ரெண்டும் கெட்டான்!’ என்று கிண்டலடிக்க, அதைத் தொடர்ந்து சக மாணவர்களின் கேலிப் பேச்சு கூடியதில், பத்தாம் வகுப்போடு அன்று அந்தத் திருநங்கையின் கல்வி முடிந்துபோன துயரத்தை உங்களில் எத்தனை பேரால் புரிந்துகொள்ள முடியும்?

இப்படி வெவ்வேறு கசப்பான அனுபவங்களால் பெரும்பாலான திருநங்கைகளின் வாழ்க்கையில் இருந்து கல்வி தூர எறியப்பட்டதை எந்த சினிமா வித்தகர்களும் உங்களுக்குக் காட்டப்போவது இல்லை.

வீதிகளைப்போலவே, சொந்த வீட்டுக்குள்ளும் தன் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாத பெற்றோருக்கும், உடன்பிறந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும்... திருநங்கைகள் வேண்டாத பிள்ளையாக, குடும்பத்துக்கு அவமானச் சின்னமாக வெறுத்து ஒதுக்கப் படுகிறார்கள். படிப்பு இல்லை என்றான பிறகு, வேலைக்குச் செல்லும் இடத்தில் முதலாளி முதல் வாடிக்கையாளர் வரை பலரது வசைக்கும் கேலிக்கும் ஆளாகிறார்கள். அதோடு, பாலியல் துன்புறுத்தலுக்கும் பலியாகிறார்கள். நாளடைவில் இறுகிப் போகும் மனது, இனி வேலைக்குப்போய் சம்பாதிக்க நினைப் பது முட்டாள்தனம் என்ற முடிவுக்கு வருகிறது.

வீட்டில், பள்ளியில், பணியிடத்தில் எனத் தான் புழங்கும் இடங்கள் எங்கும், அன்பு, மனிதம், மாண்பு என்ற பதங்கள் மறந்துபோன உலகத்தையே எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த உலகில் கேலி, வசை, வன்முறை போன்ற கொடூரங்களே இருக்கின்றன. அவளை அரவணைக்கும் ஒரே இடமாக இருப்பது மற்ற திருநங்கைகள் கூட்டமாக வாழும் பகுதி மட்டுமே. அவர் களோடு இந்த வெயில் தேசத்தில் நாசூக்காக மறைக்கப்பட்ட பனித் திரையில் அவள் மறைந்து கொள்கிறாள். குறைந்தபட்சம் திருநங்கைகளுக்குக் கிடைக்கும் இந்தக் கூடாரமும் திருநம்பிகளுக்கு வாய்ப்பது இல்லை!

இனி, இந்த உலகத்தில் உயிர் பிழைக்க நாகரிகமான வழிமுறை ஏதும் திருநங்கைகளுக்குக் கிடையாது. ஓர் ஆண் அல்லது பெண்... மருத்துவராகவோ, இன்ஜினீயராகவோ, ஆசிரியராகவோ, மாவட்ட ஆட்சித் தலைவராகவோ அல்லது குமாஸ்தாவாகவோ, அலுவலக உதவியாளராகவோ வாழ விரும்பினால்... அதற்கான அடிப்படை வாய்ப்புகள் இங்கு அனைவருக்கும் உண்டு. ஆனால், தன் வயிற்றைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு சராசரி குடிமகனுக்கு உள்ள அத்தனை நிகழ்தகவுச் சாத்தியங்களும் திருநங்கைகளுக்கு, அவர்களின் பாலியல் அடையாளத்தால் முழுவதுமாக மறுக்கப்படுவது என்ன நியாயம்?

விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடவும், பிச்சையெடுக்கவும் மட்டுமே வாய்ப்பு உள்ளது. இந்தச் சமூகமும் மறைமுகமாக அதையேதான் விரும்புகிறது என்பதுதான் கசப்பான நிதர்சனம்.

எனக்குத் தெரிந்த திருநங்கை ஒருவர், தினமும் ரயிலில் பிச்சையெடுத்து வந்தார். பிச்சையெடுப்பதை விட்டுவிட்டு நாமும் கௌரவமாக வாழலாம் என்று நினைத்து, கீ செயின், மொபைல் கவர், பிளாஸ்டிக் பொம்மைகள் விற்பனையில் இறங்கினார். அவர் பிச்சையெடுத்தபோது, பலரது ஏச்சுக்கும் சிரிப் புக்கும் மத்தியில், பயந்தோ, பரிதாபப்பட்டோ சிலர் பிச்சையிட்ட அதே ரயிலில்... 'குடுத்தா வெச்சிருக்கே? நீ கேட்டதும் எடுத்து நீட்டுறதுக்கு!’ எனப் பலர் சலித்துக்கொண்ட அதே ரயிலில்... 'கை கால் நல்லாத்தானே இருக்கு. உழைச்சுத் திங்க வேண்டியதுதானே!’ என எத்தனையோ முறை 'திடீர்’ மகான்களின் பொன்மொழிகள் உதிர்க்கப் பட்ட அதே ரயிலில்தான்... அன்று அவர்வியாபாரம் செய்தார். பிச்சையெடுத்தபோது கேலி கிண்டல்கள் கடந்து குறைந்தபட்சம் வருமானமாவது கிடைத்த அவருக்கு... நாள் முழுக்க வியாபாரம் செய்தபோது மிஞ்சியது வெறும் அருவருப்பான கேலிச் சிரிப்பு கள் மட்டுமே. ஒருவரும் அவரிடம் இருந்து சின்ன கீ செயின் வாங்கக்கூட முன்வரவில்லை.

ஆண் உடையில் வளைய வரும்போது அவளை மீறி எழும் பெண் தன்மையால் பலரோடு இணைந்து பணியாற்ற வேண்டிய சூழலில் அது முடியாதபோது, வெளிப்படையாகத் தன்னைத் திருநங்கை என்றே அறிவித்துப் பணியாற்ற விரும்பினாலும்... யாரும் வேலை தர முன்வருவது இல்லை. ஒரு சிலர், 'உங்களுக்கு வேலை தருவதில் எங்க ளுக்குப் பிரச்னை இல்லை. ஆனால், உடன் வேலை செய்யும் மத்த ஸ்டாஃப் எப்பிடி எடுத்துக்குவாங்கன்னு தெரியலை... ஸாரி!’ என்று மழுப்பி நழுவுவது உண்டு.

முதுகலை படிப்பு முடித்த திருநங்கை ஒருவர், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். ஆரம்பத்தில் ஆண் அடையாளத்தில் பணியாற்றிய அவர், பின்னர் தன்னைத் திருநங்கை என்று வெளிப்படையாகக் கூறி, பால் மாற்று சிகிச்சையும் மேற்கொண்டார். ஆனால், பெண்ணாக மாறிய பின், அதே நிறுவனத்தில் அவரால் பணியாற்ற முடியவில்லை. தனது வீட்டில் இருந்து பெண் உடையில் வெளிவரும் அவர், பேருந்தில் பயணித்து அலுவலக நிறுத்தம் வரை பெண்ணாகச் சென்று, அங்கே இருக்கும் கோயில் ஒன்றில் கைப்பையில் மறைத்துவைத்து இருக்கும் ஆண் உடைக்கு மாறி, ஆண் அடையாளத்துடன்தான் அலுவலகத்துக்குள் நுழைய முடியும். இதனால் ஏற்பட்ட பல நடைமுறைச் சிக்கல் களுக்குப் பிறகு, அவர் வேலையைவிட்டு விலக வேண்டிவந்தது!

ஆனால், அவர் அளவுக்குப் பொறுப்புடன் பணியாற்ற வேறு நபர் கிடைக்காத நிலையில், சில மாதங்களில் அவரையே மீண்டும் அங்கு பணியமர்த்தினர். அதன் பின் அவர் பெண்ணாக, பெண் அடையாளத்துடன் அலுவலகம் சென்று வருகிறார் இன்று வரை. ஆண், பெண்ணுக்கு உரிய அதே திறமையும் வல்லமையும் இருந்தாலும், திருநங்கைகளின் திறமையைக் கவனத்தில்கொள்ளாமல், அவர் திருநங்கை என்பதற்காகவே அவர்களை விலக்கிவைப்பது ஜனநாயக நாட்டில் நிலவும் இன்னொரு தீண்டாமைக் கொடுமை அல்லவா?

ஆனால், உங்களுக்கு அந்தக் கவலை எதுவும் கிடையாது. உங்களை நோக்கிக் கை தட்டி, சற்றுக் களேபரத்துடன் கை நீட்டி வரும் திருநங்கைகள் மட்டும் தான் அவமானமாகத் தெரிகிறார்கள். திருநங்கைகளைத் தவிர, இந்த நாடு முழுவதும் உள்ள எல்லா ஆணும் பெண்ணும்... புத்தன், இயேசு, காந்தி, அன்னை தெரசா என்று உங்களால் கூற முடியுமா? நல்ல படிப்பும், குடும்பச் சூழலும் இன்ன பிற சகல அங்கீகாரங்களும் கிடைத்தபோதும், ஊழல், லஞ்சம், கொள்ளை, கொலை, பாலியல் வல்லுறவு, தீண்டாமை, ஆள் கடத்தல் என சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் இவர்கள் எல்லாம் யார்?

என்றோ ஒருநாள் எதிர்ப்படும்போது, கை நீட்டி யாசகம் கேட்கும் திருநங்கைகளை நீங்கள் இவ்வளவு வெறுக்கிறீர்கள். ஆனால், அநீதியான இந்தச் சமூகம் புறக்கணித்ததன் விளைவால், காலந்தோறும் கை ஏந்தி நிற்க வேண்டிய அவலத்துக்காக, இந்தச் சமூகத்தை அவர்கள் எவ்வளவு வெறுக்க வேண்டும்?

சில நண்பர்கள் என்னிடம், 'திருநங்கைகள் பாவம்தான். அவர்கள் பிச்சையெடுப்பது இருக்கட்டும். ஆனால், அதைக் கொஞ்சம் கண்ணியமாகவாவது கேட்கலாமே! கலவரமூட்டும் தொனியில், அநாகரிகமான முறையில் பொது இடங்களில் அவர்கள் நடந்துகொள்வது அருவருப்பாக உள்ளதே!’ என்று ஆதங் கப்படுவது உண்டு. இது ஒரு பக்கம் இருக்கட்டும்... நாகரிகமானவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள்,பொது இடத்தில் நிஜமாகவே நாகரிகமாகத்தான் நடந்துகொள்கிறீர்களா? சாலை நெரிசலில் பொறுமையின்றி விதிகளை மீறுவதும், குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதும், ஓவர் டேக் செய்வதும் எப்படி நாகரிகமாக முடியும்? பொது இடத்தில், பொதுச் சொத்துக்கு மதிப்பு தரும் பக்குவம் இல்லாத ஒரு சமூகம், அந்தச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மனிதர்களிடம் மட்டும் நாகரிகம் எதிர்பார்ப்பது எவ்வளவு சுயநலமானது? இதற்காக, அவர்கள் அநாகரிகமாக நடக்கட்டுமே என்று நான் கூறவில்லை. ஏனெனில், இந்த அநாகரிகம்தான் ஒரு வகையில் அவர்களுக்குப் பொது இடத்தில் பாதுகாப்பு தருகிறது. பொதுப் புத்தியில் உறைந்துபோயுள்ள நாகரிக மதிப்பீடுகளுடன் உள்ளவர்கள் ஏவிவிடும் சொல் வன்முறையைக்கூட ஒரு திருநங்கையால் தாங்கிக்கொள்ள முடியும். உடல் வன்முறையைத் தாங்க முடியாது!

யாராலும் இப்படி வன்முறைக்கு ஆளாகக்கூடிய வாய்ப்பு திருநங்கைகளுக்கு இங்கு மிக அதிகம். அப்படி வன்முறைக்கு ஆளாகும்போது, யாரும் வேடிக்கை பார்ப்பார்களேயன்றி, தடுத்து நிறுத்தப்போவது இல்லை. ஆனால், அந்தத் திருநங்கையோ சற்று மிரட்டலான தொனியில் மற்றவருக்குப் பீதி ஏற்படும் வகையில் இருந்தால்தான், அவளுக்குப் பாதுகாப்பு! திருநங்கைகளை ஏதோ சமூகப் பொறுப்பற்ற விட்டேத்திகளாகவே சமூகம் புரிந்துகொண்டு இருக்கிறது. ஆனால், பெரும்பாலான திருநங்கைகள் சம்பாதிப்பதே தங்கள் குடும்பத்துக்காகத்தான் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? தான் பிச்சையெடுத்த வருமானத்தில், பாலியல் தொழில் செய்த வருமானத்தில், தன் குடும்பத்துக்கு வீடு கட்டித் தந்த, கடன் அடைத்த, தன் சகோதர - சகோதரி களுக்குத் திருமணம் செய்துவைத்த திருநங்கைகளை நீங்கள் அறிவீர்களா? தன் சகோதர-சகோதரிகளால் கை விடப்பட்ட தாய், தந்தையரை தன்னுடன் வைத்துப் பாதுகாக்கும் பல திருநங்கைகளை நான் அறிவேன்!

ஆரம்பத்தில் குடும்பம், திருநங்கைகளை ஏற்க மறுத்தாலும்... ஒரு கட்டத்துக்கு மேல் மனதளவில் அவர்களை ஏற்றுக்கொள்ளவே செய்கிறது. அதில் சிலர் அவ்வப்போது குடும்பத்தினரைப் பார்க்கச் சென்று வருவது உண்டு. சிலர் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வதும் உண்டு. எப்போதாவது குடும்பத்துடன் தங்கும் திருநங்கைகள், மாதா மாதம் தவறாமல் பெருந் தொகையை வீட்டுக்கு அளிக்கிறார்கள். மற்ற விசேஷ காலங்களில் ஏற்படும் பெரும் செலவையும் அவர்களே ஏற்கிறார்கள். குடும்பத்துடன் சேர்ந்து வாழும் திருநங்கைகளின் குடும்பம் பெரும்பாலும் 80-களில் வெளியான பாலசந்தர் படக் குடும்பங்களைப்போலவே இருக்கும். திருநங்கைகள், அந்தப் பட நாயகிகளைப்போல குடும்பத்தையே தாங்கும் தூண்களாக இருப்பர்.

அப்படி ஒரு நாயகியிடம் ஒருமுறை, 'எப்படி உன் அம்மா நீ பாலியல் தொழில் செய்வதை ஏற்றுக் கொள்கிறார்?’ என்று கேட்டபோது, 'நீ இப்படிக் கேட்கிறாய். ஆனால், என் அம்மாவோ தினம் இவ்வளவு ரூபா கொடுத்துத்தான் ஆகணும் என்கிறார்’ என்றாள் வெற்றுக் குரலில்! இன்று இப்படி ஒரு தாயை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. தனக்கென ஒரு குடும்பமோ, வாரிசோ இல்லாத திருநங்கைகளுக்குக் குறைந்த பட்சம் தன் தாய் வீட்டு உறவுகள் தேவைப்படுகிறது. அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை... பணம்!

இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட, தமிழகம் திருநங்கைகளிடம் சற்று கரிசனத்துடன் செயல்படுவது நிஜம். திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, இலவச பால் மாற்று அறுவை சிகிச்சை, இவற்றோடு தனி நல வாரியம் அமைத்தது எனப் பல முதல் கட்ட மாற்றங்கள் இங்கு நிகழ்ந்து உள்ளன.

ஆனால், கண்ணியமான முறையில் அவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லாத வரை, அவர்களால் சமூகத்தின் மைய நீரோட்டத்தில் இயல்பான சக மனிதர்களாக வாழ முடியாது. கணினியில் இளங்கலைப் பட்டமும் கூடுதல் பணித் தகுதியும்கொண்ட திருநங்கை ஒருவர், திருநங்கை நல வாரியத்தில் வேலைவாய்ப்பு வேண்டும் என்று விண்ணப்பித்தபோது, முறையான பதில் கிடைக்கவில்லை. 'வேலைக்குப் பதிலாக, ஒரு கணினி வேண்டும் என விண்ணப்பித்தால், அதனை நல வாரியம் பரிசீலிக்கும்’ என்றாராம் ஓர் அதிகாரி. தகுந்த ஆவணங்களைச் சமர்ப்பித்து, ஏழு மாதங்கள் அவர் காத்திருந்தார். ஆனால், 'அப்படி எல்லாம் தனி நபர்களுக்கு உதவ முடியாது’ என அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதுதான் மிச்சம். அவர் களைப் பொறுத்த வரை, தையல் கலை தெரியாத 10 திருநங்கைகளுக்கு தையல் மெஷின்கள் கொடுத்துப் பத்திரிகைகளில் செய்தி வருவதோடு, நல வாரியத் தின் பணி முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள். ஆக்கபூர்வமான நலத் திட்டங்கள் எதுவும் இன்றி, வெறும் கண் துடைப்புக்காகச் செய்யப்படும் எதுவும் திருநங்கைகளின் வாழ்க்கையை மாற்றாது.

திருநங்கைகளுக்கு சட்ட அங்கீகாரம், சமூகப் பாதுகாப்பு, சமூக அங்கீகாரம், கல்வி, வேலை வாய்ப்பு கிடைக்காத வரை... திருநங்கைகளை அச்சத்துடனும் அந்நியமாகவும் கண்ணில் விழுந்த துரும்புகளாகவுமே இந்தச் சமூகம் எதிர்கொள்ளும்! உங்கள் பக்கத்து இருக்கையில், ஓர் ஆணோ, பெண்ணோ அமர்ந்து இருந்தால், எப்படி உங்களுக்கு எந்தச் சலனத்தையும் பாதிப்பையும் அது ஏற்படுத்தாதோ, அப்படி ஒரு சக பயணியாக வாழ்க்கைப் பயணத்தில் திருநங்கைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தையேனும் இப்போதைக்குச் சமூகம் வளர்த்துக்கொள்ள வேண்டி இருக்கிறது

Vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, என்னுடன், படித்த ஒரு சக மாணவன் ஒருவன்(ள்) திருமங்கையாகப் போகும் மாற்றங்களில் பெரிதும் விரக்தி அடைந்திருந்தான். எனக்கு, அந்த நேரம் அறிவுரை கூறும் பக்குவம் இருக்கவில்லை. உங்கள் இணைப்பை வாசித்த பின், இப்ப எப்படியிருக்கிறானோ....

என்று யோசிக்க வைத்துவிட்டது.

Green%20Plus.GIF

இந்த இணைப்பிற்கு ஒரு பச்சைப் புள்ளி குத்துவம், என்று குத்தினால் என்னிடம் தற்போது பச்சை இல்லையாம்...

மீண்டும், பச்சை குத்த சான்ஸ் வரும் போது.... மறக்காமல் ஒன்று குத்துவேன். :)

Green%20Plus.GIF

Edited by தமிழ் சிறி

அவர்களும் சக மனிதர்களே என்று எம் சமூகம் உணருவதில்லை. தமிழ் சினிமா வேறு திருநங்கைகளை நகைச்சுவை காட்சிகளில் காட்டி கேலிபண்ணுவார்கள். அதுவும் பாலியல் சம்பந்தப்பட்டு அருவருக்கத்தக்கதாக இருக்கும். மேலை நாடுகளில் திருநங்கைகளை இழிவாகப் பார்ப்பதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.