Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலையும் வாழையும்* : பின்நவீனத்துவ அடையாளம் - மாற்று அரசியல் - மனித உரிமை -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலையும் வாழையும்* : பின்நவீனத்துவ அடையாளம் - மாற்று அரசியல் - மனித உரிமை -

19 ஜூலை 2011

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்- புலிகள் பிழையா? அனைத்து விடுதலை இயக்கங்களும் பிழையா?

ஜனநாயகம், மனித உரிமை, சமத்துவம் போன்ற கருத்தாக்கங்கள் பிரபஞ்சமயமானவை. வர்க்கம், பால்நிலை, சாதி, இனம், மதம் என எதனை வைத்துப் பேசினாலும் ஜனநாயகம், மனித உரிமை மற்றும் சமத்துவம் என்பது அனைவருக்கும் பொதுவானவை. வர்க்கத்தின் பெயராலோ அல்லது பால்நிலை, இனம், மதம், சாதி என்பதன் பெயராலே ஒரு சமூகப்பிரிவினர் பிறிதொரு சமூகப்பிரிவினருக்கு ஜனநாயகம், மனித உரிமை, சமத்துவம் போன்றவற்றை மறுத்துவிட முடியாது.

ஓரு விமோசனத் தத்துவம் எனும் அளவில் மாரக்சியம் இதனைக் கோட்பாடாகவும் நடைமுறையாகவும் கொண்டிருக்கிறது. நடைமுறை என அல்லாவிட்டாலும் முதலாளித்துவ தாராளவாத அரசியல் என்பதுவும் கோட்டபாட்டளவில், தனிமனிதர்கள் எனும் அளவில் அனைவருக்கும் சமவாய்ப்பு எனும் அளவில் இதனை முன்மொழிகிறது. அறிவொளிக்காலம் அல்லது நவீனத்துவக் காலம் முன்வைத்த விமோசனத் திட்டம் (emanicipatroy project) இவைதான்.

பின்நவீனத்துவக் காலம் என்பது எந்த வகையில் இதனின்று முறிவினை மேற்கொள்கிறது?

ஜனநாயகம்,மனித உரிமை,சமத்துவம் என்ற விமோசனக் கோட்பாடுகள் என்பது வர்க்கம் (மார்க்சியம்), தனிநபர் உரிமை (தாராளவாத முதலாளித்துவம்) போன்றவற்றுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தினை பால்நிலை, இனம், சாதி, மதம் போன்றவற்றுக்கு அடிப்படையான ஜனநாயகம் என்பதற்குக் கொடுக்கவில்லை என்று சொன்னது என்பதனை (இந்திய-இலங்கை-தமிழகச் சூழலை முன்வைத்து) நாம் புரிந்து கொள்ள முடியும். பால்நிலை என்பதனை எவ்வாறு ஓருபாலுறவு, இடைநிலைப்பாலுறவு, இருபால் உறவு என உட்கூறுகளாகப் பிரிக்க முடியுமோ, அதே அளவில் சாதி என்பதனை உபசாதிகள் எனும் உட்கூறுகளாகவும், இனம் (ethnicity) என்பதனை இனக்குழக்கள் (ethnic groups) எனும் உட்கூறுகளாகவும், மதம் என்பதனை பிரதான மதம் எனும் சிறுநம்பிக்கை வழிபாடுகள் (religious sects like sufiism and scientology) எனும் உட் கூறுகளாகவும் நாம் பிரிக்க முடியும். நவீனத்துவத் திட்டம் என்பது இவ்வகையில் நடைமுறைசார்ந்து இரண்டு விதமான ஒதுக்குதல்களைக் கொண்டிருந்தது எனும் நிலைபாட்டுக்கு நாம் வரமுடியும். சோசலிசம் வர்க்கம் என்பதனை மையப்படுத்த, தாராளவாத முதலாளித்துவம் தனிநபர் உரிமை என்பதனை மையப்படுத்தி, மனித விடுதலைக்கான பிறகூறுகளான பால்நிலை, இனம், மதம், சாதி என்கிற பிரச்சினைகளை மறுதலித்து வந்தது. இரண்டாவதான இதனது கூறுகளான உபபிரிவுகளின் குறிப்பிட்ட அடையாளங்களின் முக்கியத்துவத்தினையும் மறுதலித்துவந்தது.

கோட்பாடு எனும் அளவில் இரண்டுவிதமான அரசியல் பகுப்புக்களை நாம் இங்கு செய்யவேண்டி இருக்கிறது.

முதலாவதாக, விமோசன அரசியலின் போதாமைகள் எனும் அளவில் பால்நிலை,சாதி,மதம்,இனம் போன்ற விடயங்களையும் விமோசன அரசியல் எடுத்துக் கொண்டு இவற்றிலுள்ள அனைத்துவிதமான ஒடுக்குமறைகளையும் களைந்து நவீனத்துவத் திட்டத்தை, ஜனநாயகம்,மனித உரிமை,சமத்துவம் என்பதனை அனைத்து மனிதர்களுக்குமானதாக ஆக்குவது. இந்த வகையில்தான் மார்க்சியர்கள் மார்க்சியப் பெண்நிலைவாதம் எனப் பேசவேண்டியுள்ளது. இவ்வகையில்தான் இனத்தேசிய விடுதலைக் கருத்தியலை மார்க்சியத்தோடு இணைக்கவேண்டிய தேவை அமில்கார் கேப்ரலுக்குத் தோன்றகிறது. இலத்தீனமெரிக்கச் சூழலில் கிறித்தவர்கள் மாரக்சியத்துடன் இணைந்து விடுதலை இறையியல் எனப் பேசநேர்கிறது. அம்பேத்கார் தலித்திய விமோசனத்துக்கான தேடலில் மார்க்சியம்-பௌத்தம்-தலித்தியம் எனும் விமர்சன அரசியலைத் தேற வேண்டி இருக்கிறது. காலஞ்சென்ற தெரிதாவும், இன்றும் வாழும் கரீபியக் கோட்பாட்டாளர் ஸ்ரூவர்ட் ஹாலும் இதனைத்தான் மார்க்சியத்துடன் உரையாடாமல் எந்த விடுதலைக் கோட்பாடும் முழுமையடையாது எனக் குறிப்பிடுகிறார்கள். தெரிதா பன்மைத்துவ மார்க்சியம் என இதனையே குறிப்பிடுகிறார் எனவும் நாம் சொல்ல முடியும்.

இரண்டாவதாக. பின்நவீனத்துவ உலக நிலையில், விமோசன அரசியலை அல்லது மனிதவிடுதலை எனும் பொதுக்கருத்தாக்கத்தை முற்றிலும் நிராகரிக்கிற ஒரு கோட்பாட்டு நிலைபாடும், அவர்களுக்கான ஒரு அரசியலும் தோன்றுகிறது. கோட்பாட்டு நிலைபாட்டை நாம் கலாச்சாரச் சார்புவாதம் (cultural relativism) எனவும் அரசியலை நாம் அடையாள அரசியல் (identity politics) எனவும் வரையறுக்கலாம்.

அம்பேத்கரின் தலித்திய அரசியலை முழு தலித்திய சமூகத்திற்குமான விமோசனக் கோட்பாடாக நாம் கருதுவோமானால், திருமாவளவன், பா.கிருஷ்ணசாமி, ஆதித்தமிழர் பேரவை போன்ற தலிக்கிய உப சாதிகளின் அரசியலை நாம் அடையாள அரசியல் எனலாம். உப சாதிகளின் அரசியல் என்பது தத்தமது கலாச்சாரச் சார்பு நிலைகளில், அல்லது அவரவரது கலாச்சாரப் பிரபஞ்சத்தை (cultural universe) முன்னிறுத்தி தமது குறிப்பிட்ட சாதிய அடையாளம் என்பதனை மட்டுமே முன்னிறுத்துவதால் அது எந்த சமூக அமைப்பாயினும் தமது சொந்த சாதிக்கான பாராளுமன்ற அதிகாரச் சலுகை என்பதற்கு மாறாக, முழு தலித் சமூகத்திற்கான விமோசன அரசியலை இவர்கள் முன்னெடுக்க முடியாது.

இந்திய வடமாநிலத்தில் மாயாவதியின் அரசியல் ஊழல் அரசியலாகவும், தமிழகத்தில் திருமாவளவன், பா.கிருஷ்ணசாமி போன்றவர்களின் அரசியல் தத்தமது சாதிய அடையாள அரசியலாகவும் மிஞ்சி நிற்கிறது. இந்த மிகக் குறுகிய, விலகிய, பிற ஒடுக்குமுறைகளை நிராகரிக்கிற, அடையாள அரசியலிருந்து மீளும் நடவடிக்கைகளுக்காகவே ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு எதிரான இவர்களது நடவடிக்கைகளை நாம் பார்க்க முடியும். அடையாள அரசியல் என்பது பிற ஒடுக்குமுறைகளையும், ஜனநாயகம், மனித உரிமை மற்றும் சமத்துவம் என்கிற பிறருக்கும் உரிய பிரபஞ்ச உரிமைகளையும் ஏற்கிறபோதுதான் அது தனது தோழமைகளைக் கண்டுகொள்வது மட்டுமல்ல, ஹேபமர்மாஸ் சொல்கிற முற்றுப்பெறாத நவீனத்துவத் திட்டமான விமோசன அரசியலையும் நோக்கி நகரமுடியும்.

நாம் விவரித்த, உலக மற்றும் இந்திய-தமிழகச் சூழலில்தான் இலங்கைத் தமிழர்களது ஜனநாயக அரசியல்-மாற்று அரசியல்-புகலிட அரசியல்-தலித்திய அரசியல்- மனித உரிமை அரசியலில் நாம் நுழைகிறோம். தமிழக தலித்திய உரையாடல்களிலும், உலக அளவிலான பின்நவீனத்துவ சொல்லாடல்களில் இருந்தும்தான் மாற்று அரசியல் எனும் பேச்சுக்கள் தோன்றுகின்றன.

எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் ஆரம்பத்திலும் ஈழ ஆயத விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெற்றது. 1983 கொழும்பு கலவரத்தையும்; தமிழர்மீதான படுகொலைச் சம்பவங்களையும் அடுத்து போராட்டம் உக்கிரம் பெற்றது. ஈழம் என்றாலும் அது தமிழீழம் என்றாலும் தனிநாடு என்பது அனைத்து இயக்கங்களதும் அறிவிக்கப்டட இலட்சியமாக இருந்தது. அக்காலகட்டத்தில் இலங்கை அரசின் தன்மை, தென்னிலங்கை அரசியல் கட்சிகள் குறித்த பகுப்பாய்வுகளோடு, இலங்கைச் சமூகம் குறித்த பகுப்பாய்வுகளையும் அனைத்து இயக்கத்தினரும் வைத்தனர்.

இவர்களது தந்திரோபாபாயங்களிலும் அரசியல் கூட்டுக்களிலும் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தாலும், இலங்கை அரசும், சிவில் சமூகமும் பேரினவாதத்தன்மை வாய்ந்தது என்பதிலும் அதற்கு எதிரான தனிநாடு கோரிய போராட்டம் அவசியம் என்பதிலும் எவரும் முரண்பாடு கொண்டிருக்கவில்லை.

விடுதலைப் புலிகளின் சகோதரப் படுகொலைகள், அவர்கள் போராட்டத்தைக் கொண்டு செலுத்திய முறை என்பன ஈழவிடுதலைப் போராட்டத்தைப் பின்தள்ளியது. ஜனநாயக மறுப்பும் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களை மறுப்பது என்பதுவும் படுகொலைகளும் அன்றாட நிகழ்வுகள் ஆகின. இதற்கான அவர்களுக்கான முன்னுதாரணங்களாக ஸ்டாலினினும் போல்பாட்டும், குறிப்பிட்ட அளவில் இந்திய மாவோயிஸ்ட்டுகளும் கூட இருந்தார்கள். ஏன், பெரு சைனிங்பாத் கொரில்லா இயக்கமும் தமக்கு வெளியிலான அனைத்து இடதுசாரிகளையும்

கொன்றொழித்தது. இவர்களது அரசியல் விளக்கங்களைப் போலவே விடுதலைப் புலிகளும் விளக்கங்களும் சொன்னார்கள். முள்ளிவாய்க்கால் பேரழிவு வரையிலும் இது நீண்டிருந்தது.

விடுதலைப் புலிகள் போராட்டத்தைக் கொண்டு செலுத்திய முறைகளும் அவர்களது அரசியல் புரிதலும் தந்திரோபாயங்களும் பிழையா? அல்லது 35 ஆண்டுகால விடுதலைப் போராட்டத்தை உந்திய இலங்கைச் சமூக அமைப்பு குறித்த அனைத்து விடுதலை இயக்கங்களதும் பகுப்பாய்வுகள் பிழையா? விடுதலைப் போராட்டத்தினைத் தேர்ந்து கொண்டதே பிழைதான் என்றால், அது எவ்வாறு பிழை என்பதனையும், இலங்கைச் சமூக அமைப்பை அவர்கள் எவ்வாறு பிழையாகப் புரிந்துகொண்டிருந்தார்கள் என்ற தரவை தமிழ்மக்களின் முன்பு வைக்க வேண்டிய பொறுப்பு அனைத்து இயக்கத்தவருக்கும் உண்டு. போராட்டதிற்கு முன்பும் போராட்டத்தின் போதும் எழுதிக் குவித்தவர்கள், இப்போதும் அதனைச் செய்திருக்க வேண்டும். விடுதலைப் புலிகள் அல்லாதவர்கள், விடுதலைப் புலிகளிடம் மட்டும் இத்தகைய விமர்சனத்தைக் கோருவதோடு, தாமும் இத்தகைய விமர்சனங்களை முன்வைத்திருக்க வேண்டும். அல்லாது, இத்தனை பேரழிவுகளுக்கும் விடுதலைப்புலிகள் மட்டுமே காரணம் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் எள்ளளவும் நியாயம் இல்லை.

இப்படியில்லை, நாங்கள் 35 வருடகாலம் செய்தது முழுமையிலும் பிழை என்றால், ஏன் பிழை, இலங்கை சமூகத்தைப் பகுப்பாய்வதில் என்ன பிழைவிட்டோம், இலங்கையில் இன்று நாங்கள் எமது கடந்த காலத்தை முற்றிலும் நிராகரிப்பதற்கு என்னவிதமான காரணங்களைக் கண்டுவிட்டோம் என்பதனை அவர்கள் தெளிவாக முன்வைக்க வேண்டும்.

மாற்றுக் கருத்து என்பது மாற்று அரசியலை நோக்கிய திட்டம். புலிகளுக்குப் பிறத்தியாராக இருப்பது என்பது மட்டுமே இதுவரை மாற்றுக் கருத்தாளர்கள் எனும் குறியீட்டுப் பெயராக இருந்தது. அந்த மாற்றுக் கருத்து என்பது புகலிடத்தில் ஜனநாயகம், மனிதஉரிமை, கருத்தை முன்வைப்பதற்கான கூட்டம்கூடும் உரிமை என்னும் தளத்தில்தான் இருந்ததேயொழிய மாற்று அரசியலை உருவாக்கும் போக்கு என்பது மாற்றுக் கருத்தாளர்கள் என்று கோரிக் கொள்பவர்களிடம் இருந்திருக்கவில்லை.

இன்று திரும்பிப் பார்க்கிறபோது, முள்ளிவாயக்கால் பேரழிவின் பின், மாற்றுக் கருத்தாளர்கள் என ஒரு போது அறியப்பட்டவர்களை நாம் இலங்கை அரச எதிர்ப்பு மாற்றுக் கருத்தாளர்கள் எனவும், இலங்கை அரச ஆதரவு மாற்றுக் கருத்தாளர்கள் எனவும் வகைப்படுத்த முடியும். மாற்றுக் கருத்தை முன்னெடுத்தவர்களில் பெரும்பாலுமானவர்கள் வெளிப்படையாகவே இன்று இலங்கை அரசின் ஆதரவாளர்களாகத் தம்மைப் பிரகனடப்படுத்திக் கொண்டவர்கள்.

ஈழத்தில் கல்வியாளர்களையும் எழுத்தாளர்களையும் மனித உரிமையாளர்களையும் விடுதலைப் புலிகள் கொலை செய்தபோதும், புகலிடத்தில் சபாலிங்கம் கொல்லப்பட்டபோதும் இணைந்து குரல் கொடுத்தவர்களாகவே இன்றைய அரசு ஆதரவாளர்களும், அரசு எதிர்ப்பாளர்களும், மாற்றுக் கருத்தாளர்கள் எனும் பொதுவான அடையாளம் கொண்டிருந்தனர்.

இன்று நிலைமை முற்றிலும் மாறானது. வெறுமனே விடுதலைப் புலிகள் எதிர்ப்பு அரசியலை மட்டுமே கொண்டிருந்தவர்கள் இன்று இலங்கை அரசின் ஆதரவாளர்களாகவும், விடுதலைப் புலிகள் குறித்த எதிர்ப்பரசியலோடு இலங்கை அரசினது இனக்கொலைத் தன்மையையும் புரிந்து கொண்டிருந்தவர்கள் இன்றும் அதே விடுதலைப் புலிகளின் மீதான விமர்சனம்-அரசு எதிர்ப்பு எனும் நிலைபாட்டிலும் இருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளதும், இலங்கை அரசினதும் மனித உரிமை மீறல்களையும், வெகு மக்கள் படுகொலைகளையும், எழுத்தாளர்கள், மனித உரிமையாளர்கள், கல்வியாளர்கள் போன்றோரது படுகொலைகளையும் எதிர்த்துத்தான் மாற்றுக் கருத்தாளர்கள் பேசிவந்தார்கள். யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. விடுதலைப் புலிகள் யுத்தத்தின் தோல்வி சார்ந்த படிப்பினைகளை வெளிப்படையாக சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டிய தருணம். அது போலவே அனைத்து புலிஎதிர்ப்பு இயக்கத்தவரும் சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டிய தருணம் இது.

மாற்றுக் கருத்தாளர்கள் முன்பாக எந்த அம்னஸ்டி இன்டர்நேசனல், மனித உரிமை கண்காணிப்பகம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை போன்றவற்றின் அறிக்கைகளை முன்வைத்து விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்களை உரக்கப் பேசிவந்தார்களோ, அதே அமைப்புக்கள் இப்போது அவர்கள் பேசிவந்த வெகுமக்கள் படுகொலைகள், மனித உரிமை மீறல்களை முன்வைத்து விடுதலைப் புலிகளையும் இலங்கை அரசையும் சர்வதேச விசாரணைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

இச்சூழலில், மாற்றுக் கருத்தாளர்கள் இலங்கை அரசின் மீது இனப்படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோருகிற டப்ளின் அறிக்கை குறித்து என்ன சொல்கிறார்கள்? மாற்றுக் கருத்தாளர்கள் 40,000 தமிழ் பொதுமக்கள் இலங்கை அரசினால் கொல்லப்பட்டார்கள் என ஐநா நிபுணர் குழு அறிக்கை சொல்வது பற்றி என்ன அறிக்கை வெளியிட்டார்கள்? இவர்கள் இதுவரை குரல் கொடுத்து வந்த கல்வியாளர்களதும், மனித உரிமையாளர்களதும், எழுத்தாளர்களதும் உயிருக்கும் இருக்கிற பெறுமதி, இந்தத் தகுதிகளற்ற, அடையாளமற்ற, 40,000 தமிழ் பொதுமக்களின் உயிர்களுக்கு இல்லையா? இவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்கள் குறித்து, எதுவுமே நடக்காதது மாதிரி மௌனம் காக்கிற மாற்றுக் கருத்தாளர்கள் என்னவிதமான மாற்று அரசியலை முன்வைத்து இயங்குகிறார்கள்?

விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறலின் போது, அம்னஸ்டி இன்டர்நேஷனல், ஐக்கிய நாடுகள் மனித உரிமை அறிக்கை போன்றவற்றை முன்வைத்து மனித உரிமை அரசியலை மிகமிக உரக்கப் பேசிவந்த இவர்கள், இப்போது வெகுசாதுர்யமாக இலங்கை ஜனநாயகம் என்பதனையும், தலித் மேம்பாடு என்பதனை மட்டுமே முன்வைத்துப் பேசிவருகிறார்கள். இவர்களது சொல்லாடல்களில் மனித உரிமை எனும் அம்சம் முற்றிலும் காணாமல் போய்விட்டது.

மாற்றுக் கருத்தாளர்கள் பேசும் மாற்று அரசியலின் நடைமுறைத்தளம் இன்று எவ்வாறு இருக்கிறது?

விடுதலைப் புலிகளினதும், தமிழ்தேசியக் கூட்டமைப்பினதும் தேசியம் வலுதுசாரி, சாதீய தேசியம் என்பது இவர்களது நிலைபாடு. எனில் இவர்களது மாற்று அரசியல் என்பது சாதீய நீக்கம் கொண்ட, இடதுசாரி சமூகத்திட்டமாக அல்லவா இருந்திருக்க வேண்டும்;? இவர்கள் இதுவரை பேசிவந்த ஜனநாயகம், மனித உரிமை போன்றவற்றுக்கு உகந்ததாக அல்லவா இவர்களது மாற்று அரசியல் இருந்திருக்க வேண்டும்?

இவர்கள் இதுவரை எதிர்த்துப் பேசிவந்த அதே இந்துத்துவ மரபைத்தான் வடக்கின் அமைச்சரும் கிழக்கின் அமைச்சரும் மத்தியின் நியமன அமைச்சரும் காத்து நிற்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு அப்புறமும் இவர்கள் இந்துத்துவத்திற்கு எதிராக எதுவும் பேசவில்லை. தலித்தியம்தான் போகட்டும், ஜனநாயகமும் மனித உரிமையும் இலங்கையில் வாழ்கிறதா? வாசுதேவ நாணயக்காரா கூட இனம்வாதம் பீடித்திருக்கிற காவல்துறையும், ராணுவமும் பற்றிப் பேசுகிறபோது இலங்கை நிலைமையின் கடினத்தை ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது.

கொல்லப்பட்ட லசந்தாவின் நண்பர்களால் நடத்தப்படும் லங்கா இண்டிபென்டன்ட் தளத்தில் எழுதுகிற சிங்கள மனித உரிமையாளர்கள், ஊடகவியலாளர்கள் தம் மீது தொடுக்கப்படும் அடக்குமுறைகள் பொய்யெனவா இவர்கள் சொல்கிறார்கள்? தமிழ் தேசியக் கூட்டமைப்பை விடுங்கள். வடக்கில் ராணுவ ஆட்சிதான் நடக்கிறது என ஜேவிபியே சொல்கிறது. இவர்களது இலங்கை ஜனநாயகம், மனித உரிமைகள் போன்ற கோஷங்களுக்கு இப்போது என்ன ஆனது?

மேற்கத்திய நாடுகளிலும் அடையாள அரசியல் என்பதனை தமது அரசதிகாரத்தினை நிலைநாட்டிக் கொள்வதற்கான தந்திரோபாயமாகப் பாவிப்பதனை அரசதிகாரத்தினர் பயின்றிருக்கிறார்கள். இலங்கையைப் பொறுத்தும் தமிழ்மக்களது சுயநிர்ணய அரசியலுக்கு எதிரான தமிழ் தனிநபர்களோடு உறவுகளைப் பேணுவதன் மூலமும், அவர்களுக்கு அமைச்சர் நியமனப் பதவிகளையும், விசேஷ அந்தஸ்தினைக் கொடுப்பதன் மூலமும் மகிந்த அரசு பயன்படுத்தி வருகிறது. இப்படியானவர்கள் அனைவரும் எதிரும் புதிருமானவர்கள் என்பதுதான் பின்நவீனத்துவ நிலை.

ஓரு புறம் ஜாதிக ஹெல உறுமய, மறுபுறம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, பிறிதொரு புறம் டிராட்ஸக்கிஸ்ட்கள், நியமன தமிழ் அமைச்சர்கள், முன்னாள் விடுதலைப்புலித் தோழமைகள் என பின்நவீனத்துவ அரசு என்றால் அது மகிந்தாவின் அரசுதான். இலங்கை அரசியலைப் பொறுத்து ஒரு பகுதி மாற்றுக் கருத்தாளர்கள் இப்படித்தான், பின்நவீனத்துவ அரசியல்வாதியான மகிந்தாவுடன் தமது அடையாள அரசியலை வைத்து இப்போது சேர்ந்திருக்கிறார்கள். என்ன நேர்ந்தது இவர்களுக்கு? தலித் விமோசன அரசியலை அல்ல, அசதிகார சலுகைகள் சார்ந்த அடையாள அரசியலாக இவர்கள் தலித் மேம்பாட்டைப் புரிந்து கொண்டார்கள். மக்கள் திரள் அரசியலாக இவர்கள் தலித் அரசியலைப் புரிந்துகொள்ளவில்லை.

இவர்களது அடையாள அரசியலால், பிற ஒடுக்குமுறைகளை எதிர்கொள்கிற இன, பால்நிலை மற்றும் மதம் சார்ந்த ஒடுக்கப்பட்டோருக்கான அரசியலையும் இவர்கள் முன்னெடுக்க முடியாது. ஜனநாயகம், மனித உரிமை, சமத்துவம் போன்ற பிரபஞ்சமயமான கருத்தாக்கங்களை இவர்கள் இயல்பாகவே உதறிவிடுவார்கள். இவ்வகையில் பிற ஒடுக்கப்பட்ட பகுதியினரிடமிருந்து தம்மைத் தாமே இவர்கள் விலக்கிக் கொள்வது மட்டுமல்ல, நிலவும் ஒடுக்குமுறைச் சமூக அமைப்பில் இவர்களது அடையாள அரசியலையும், அதிகாரச் சலுகைகளையும் அங்கீகரிப்பதன் மூலம் ஒரு ஒடுக்குமுறைச் சமூகமும், அதனது பிற அதிகார அமைப்புக்களும் இருக்கிறவாறே அந்த அமைப்பைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். மகிந்த அரசு நீண்ட காலத்திற்கு இந்த அணுகுமுறையை வெற்றிகரமாகத் தொடரும் என்பது மட்டுமே இன்றைக்குத் தெளிவாக இருக்கிறது. அதனோடு மாற்றுக் கருத்து என்கிற புகலிடத்தின் கடந்தகாலக் குறியீடு, ஆழ்ந்த தத்துவ, வரலாற்று மற்றும் அரசியல் தேடல்களற்ற வெற்றிடமாவே இருந்திருக்கிறது என்பதும் இப்போது தெளிவாகத் தெரிகிறது. இனியேனும் அந்த இடம் துளிர்க்குமா என்பதுதான் இன்று நமக்கு முன் பிரம்மாணடமாக எழுந்து நிற்கும் ஒற்றைக் கேள்வி.

--------------------------------------------------------------------------------------------------------------

* பாலையும் வாழையும் எனும் பெயரில் இலக்கிய விமர்சகர் வெங்கட்சாமிநாதன் வெளியிட்ட நூல் எண்பதுகளில் மிகப்பெரும் விவாதத்தைத் தமிழகத்தில் தோற்றுவித்தது. சமகால தமிழ்க் கலாச்சாரச் சூழலைப் பாலையாக உருவகித்திருந்தது அவரது நூல். வாழை எனும் சொல் மரபையும் அதனது தொடர்ச்சியையும் குறிப்பது. இன்று திரும்பிப் பார்க்க எண்பதுகளின் பின்னான உலக அரசியல் மாற்றங்கள் மற்றும் விவாதங்களைத் தொடர்ந்த, ஒரு காத்திரமான விவாதம் புகலிட மாற்றுக் கருத்தாளர்களிடம் இருந்திருக்கவில்லை என்பதனைக் குறிப்பிடவே இச்சொல்லை நான் இங்கு பாவிக்கிறேன்.

முக்கிய குறிப்பு : குளோபல் தமிழ் நியூஸ் நெட்வொர்க்குக்காக பிரத்யேகமாக எழுதப்படும் கட்டுரைகள் மிகுந்த உழைப்பின் பின் எழுதப்படுகின்றன. இக்கட்டுரைகளை மறுபிரசுரம் செய்பவர்கள் ஆதாரமாகக் கட்டாயம் globaltamilnews.netஐ குறிப்பிட வேண்டும்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64292/language/ta-IN/article.aspx

இச்சூழலில், மாற்றுக் கருத்தாளர்கள் இலங்கை அரசின் மீது இனப்படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோருகிற டப்ளின் அறிக்கை குறித்து என்ன சொல்கிறார்கள்? மாற்றுக் கருத்தாளர்கள் 40,000 தமிழ் பொதுமக்கள் இலங்கை அரசினால் கொல்லப்பட்டார்கள் என ஐநா நிபுணர் குழு அறிக்கை சொல்வது பற்றி என்ன அறிக்கை வெளியிட்டார்கள்? இவர்கள் இதுவரை குரல் கொடுத்து வந்த கல்வியாளர்களதும், மனித உரிமையாளர்களதும், எழுத்தாளர்களதும் உயிருக்கும் இருக்கிற பெறுமதி, இந்தத் தகுதிகளற்ற, அடையாளமற்ற, 40,000 தமிழ் பொதுமக்களின் உயிர்களுக்கு இல்லையா? இவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்கள் குறித்து, எதுவுமே நடக்காதது மாதிரி மௌனம் காக்கிற மாற்றுக் கருத்தாளர்கள் என்னவிதமான மாற்று அரசியலை முன்வைத்து இயங்குகிறார்கள்?

இது எல்லாம் மாற்று கருத்து மாணிக்கங்கள் வாசிப்பது எப்போ??????????????????????????????????????????????????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.