Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆனந்தவிகடன் 'வீழ்வேனென நினைத்தாயோ' கட்டுரைக்கு சிறிலங்காவில் தடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

AV.article.jpg

தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் ஆனந்த விகடன் வார இதழில் 'வீழ்வேனென நினைத்தாயோ' என்ற தொடர், இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச்செயலாளரும், தாமரை இலக்கிய இதழின் ஆசிரியருமான தோழர் சி. மகேந்திரன் அவர்களால் எழுதப்படுகின்றது. இதன் முதல் பகுதி 12.08.2011 நாள் இதழில் வெளியாகியது.

இத்தொடர் ஈழத்தமிழ் மக்களின் துயரங்களையும், சமகால நிகழ்வுகளையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

இத்தொடர் சி.மகேந்திரன் அவர்களால் எழுதபட்ட ஒரே காரணத்திற்காக சிறிலங்கா அரசால் தடைசெய்யபட்டு இவ்விதழின் பக்கம் 30-34 வரையிலான 5 பக்கங்கள் நீக்கப்பட்டே சிறிலங்காவில் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட அப்பகுதி இங்கே தரப்படுகின்றது.

AV.article01.jpg

உயிரை விலையாகக் கொடுப்பது எளிதானதா என்ன?

இதற்கு இணை என எதுவுமே இல்லை. தன் சொந்த மண்ணைவிட்டுப் பிரிய மாட்டேன் என்று, வைராக்கியமாக அந்த மண்ணுக்குள்ளே கடைசிக் கணம் வரை போரிட்டு நின்று மூச்சை அடக்கி, உயிரை நிறுத்திக்கொள்கிறது மாவீரம்.

மண் மீதான உரிமைக்காக, உயிரையும் விலையாகக் கொடுப்பேன் என்பவர்களுக்கு மட்டுமே, இந்த மாவீரம் சாத்தியம்!

இதற்கு உலகில் எத்தனையோ முன் உதாரணங்கள் உண்டு என்றாலும், இந்த 21-ம் நூற்றாண்டில் மண்ணுக்காக உயிர்ஆயுதம் ஏந்திய வீரர் நிலம் முள்ளி வாய்க் கால் என்பதில் உடல் சிலிர்க்கிறது.

இலங்கையின் கடற்கரைக் கிராமங்களில் ஒன்றாக இருந்த முள்ளி வாய்க்கால், 2008- மே 17-க்குப் பின், ஒரு தனித்த வரலாறாக நிமிர்ந்து நிற்கிறது. அதன் புவியியல் இருப்பை அறிந்துகொள்வதில் அனைவரும் ஆர்வம் காட்டுகிறார்கள். இன்றும் ராணுவத்தின் கண்காணிப்பில் உள்ள அந்த நிலம், மிகவும் எழில் நிறைந்தது.

கிளிநொச்சியில் இருந்து ஒருவர் முள்ளி வாய்க்கால் செல்ல வேண்டும் எனில், இதற்கு இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பரந்தன் சந்திக்கு முதலில் செல்ல வேண்டும். முல்லைத் தீவுக்கும் இந்த பரந்தன் சந்திக்கும் இடையில்நெடுஞ் சாலை ஒன்று உள்ளது. இந்த நெடுஞ்சாலைக்கு ஏ 35 என்று பெயர். பரந்தன் சந்தியில் தொடங்கி, முரசு மோட்டை, தரும புரம், விஸ்வமடு, மூங்கிலாறு, உடையார் கட்டு, புதுக் குடியிருப்பு என்று நீண்டு செல்லும் இந்தச் சாலையின் இரு மருங்கும் தொன்மையான பல ஊர்கள் உள்ளன. இதில் புதுக் குடியிருப்பு, முக்கியமான நகரம்.

புதுக் குடியிருப்பைத் தாண்டியவுடன், புது உலகம் ஒன்று தோற்றம் தரும். அழகிய நெய்தல் நிலம் அது. கடலும் கடல் சார்ந்த வாழ்க்கையும் இங்கே இருந்தே ஆரம்பமாகிறது. இன்று உலகமே அறிந்துவைத்துள்ள, மழைக் கால ஆறுகளின் நன்னீர்த் தொகுப்பான நந்திக் கடல் இங்கே தான் இருக்கிறது. நந்திக் கடல் ஒரு கடல் அல்ல. உப்பற்ற நீரைச் சேமித்து வைத்துக்கொள்ளும் காயல் அது. நத்தைகள் மிகுந்த கடல் என்பதால்தான், நந்திக் கடல் என்ப தாகவும் சிலர் விளக்கம் தருகிறார்கள். கடல் உப்பு நீரிலும், காயல் நன்னீரிலும் வாழ்ந்து பழகிய நத்தைகள், அளவில் பெரிதாகவும் எண்ணிக்கையில் அதிகமாக வும் காணப்படுகின்றன. ஆற்று நீரால் கொண்டுவரப்பட்ட வண்டல் மண் படிவு களைச் சுமந்து நிற்பவை காயல்கள். மாங்குரோஸ் என்னும் அலையாத்திக் காடுகள் வளர்வதற்குக் காயல்கள்தான் அடிப்படை.

நந்திக் கடலை இயற்கை வரைந்துவைத்த ஓவியம் என்பார்கள் ஈழத்துக் கவிஞர்கள். வானத்து நீலமும் கடல் நீலமும் சங்கமித்துக்கொள்ளும் புள்ளியில், பூமித் தாய் வளர்த்துவைத்துள்ள அரிய தாவர இனங்கள், உலகின் அபூர்வங்களில் ஒன்று. 8 கிலோ மீட்டர் நீளம், சில இடங்களில் 1 கிலோ மீட்டர் அகலம்கொண்டது நந்திக் கடல். சிறு குழந்தை ஒன்று, பேரலையைத் தன் சிறு கையால் தொட்டுப் பார்க்க முயற்சிப் பதுபோல நந்திக் கடல், பெருங்கடலைத் தொட்டுப் பார்க்க ஆசைப்படுகிறது. இடையில் ஒரு நிலப் பகுதி இதைத் தடுத்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலப் பகுதியில்தான் முள்ளி வாய்க்கால் அமைந்து உள்ளது.

இந்தியப் பெருங்கடலுக்கும் நந்திக் கடலுக்கும் இடைப்பட்ட பரப்பு, பனை மரக் கூட்டத்தால் பந்தல் போடப்பட்டது. இந்த நிலப் பரப்பு 2 கிலோ மீட்டர் அகலம் இருக்கும். பனை ஓலையால் வேயப்பட்ட சிறு குடில்களே இங்கு அதிகம். பனைத் தொழிலையும் மீன்பிடித் தொழிலையும் தவிர, வேறு எதையும் அறிந்திராத மக்கள் இவர்கள். அயலார் யாருமே எதற்காகவும், வந்து போகாத பூமி என்பது இதன் சிறப்பு. வலையர் மடம், கரையான் முள்ளி வாய்க் கால், வெள்ளை முள்ளி வாய்க்கால் ஆகிய கடற்கரைக் கிராமங்கள் முள்ளி வாய்க்காலை ஒட்டி அமைந்தவை.

AV.article02.jpg

ஈழ மண்ணில் வன்னி, முல்லைத் தீவுப் பிரதேசங்கள் தனித்துவம் மிக்கவை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நால் வகை நிலங்களைக்கொண்டு, இவை மக்களின் வாழ்க்கைக்கான முழுத் தன்னிறைவையும் வழங்கியவை. ஆதி காலம் தொட்டே அந்தக் கிராமங்கள் உணவுக்காக அடுத்தவர்களிடம் கையேந்தும் நிலையில் இருந்தது இல்லை. பசியால் பிச்சை எடுப்பதைப் பார்ப்பதுகூட அங்கு அரிது. அந்த அளவுக்குப் பசி அறியாத மண் அது. இன்று எல்லாம் பழங்கதை. எதுவும் மிச்சம் இல்லை. அத்தனையும் அழிந்துகிடக்கின்றன. வீடுகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை, ஆலயங்கள் என்று எதையும் விட்டுவைக்கவில்லை இன வெறி சிங்கள ராணுவம்.

போர் உச்சகட்டம் அடைந்தபோது, மக்கள் கிளிநொச்சியில் இருந்து ராணுவத்தால் விரட்டப்பட்டார்கள். ஆண்டு முழுவதும் ஓடிக்கொண்டே இருந்தார்கள். கடைசியில் களைத்துப்போய், முள்ளி வாய்க்கால் வந்து விழுந்தார்கள். இடப் பெயர்வுக் காலங்களில் அவர்கள் அடைந்த துன்பங்களுக்கு எல்லை உண்டா?

வீடுகள் முழுவதும் நெல் மூட்டைகள் அடுக்கிக்கிடக்க, அவன் குடும்பமே பதுங்கிப் பதுங்கி ஒருவேளை உணவுக்காகக் கையேந்தி நின்றது. அவன் வீட்டைச் சுற்றி தோட்டத்தில் பழுத்துக் கனிந்த, மா, பலா, கொய்யா, வாழை போன்றவற்றை, அணில் கூட்டமும் பறவைக் கூட்டமும் கொத்தியதில் சிந்தியவை சிதறிக்கிடக்க, அவன் வீட்டுப் பிள்ளைகள் தின்பதற்கு எதுவுமற்று ஏங்கிக்கிடந்தார்கள். கடந்த ஓர் ஆண்டில் அவர்கள் வாழ்ந்தது மனித வாழ்க்கை அல்ல.

பல மாதங்கள் பசியால் துடித்தவர்கள், கடைசியில் உயிரையும் துடிதுடித்து இழந்ததுதான் மிச்சம். எந்தக் கறையும் படியாத முள்ளி வாய்க்கால் மண்ணில், மானுடத்தின் ரத்தக் கறை படிந்துவிட்டது. அன்னை மடியில் சுமக்கவைத்தே, அவள் பெற்ற பிள்ளைகள் கொல்லப்பட்டனர். இலங்கையின் இன வெறி அரசு, குண்டுகள் போட்டுத் துடிக்கத் துடிக்கக் கொன்று முடித்தது. இவர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல. தேவையான ஆயுதங்களைக் கொடுத்து இந்தியா செய்ததும் பெரும் குற்றம். 'முள்ளி வாய்க்கால் வந்து சேருங்கள், அனைவரையும் காப்பாற்றுகிறோம்’ என்று வாக்குறுதி தந்தன வல்லரசுகள். கடைசி நேரத்தில், பிறருக்குத் தெரியாமல் ஈரத் துணியைப் போட்டு, கழுத்தை அறுத்து முடித்துவிட்டது இலங்கை அரசு. அதற்கு திரை கட்டிப் பாதுகாப்பைத் தந்தவைதான் இந்த வல்லரசுகள். வஞ்சகம், துரோகம், காட்டிக்கொடுத்தல் என்று எந்தப் பாதகம்தான், அந்த மண்ணில் நடக்கவில்லை? இன்று எல்லாம் முடிந்த நிலை.

உலக வரலாற்றில் மானுடத்தின் ரத்தம் பெருக்கெடுத்து வழிந்தோடிய நிலப் பகுதி கள் எத்தனையோ உண்டு. ஆனாலும், முள்ளி வாய்க்காலில் நடைபெற்றதைப்போல உலகில் வேறு எங்கும் கொடுமைகள் நடந்து இருக்குமா? பூமி பிளந்து பூகம்பம் வராதா? கடல் கோபம்கொண்டு, இந்தக் கயவர்களுக்குத் தண்டனை தராதா என்ற அளவுக்கு அங்கு கொடுமைகள் நடந்தன.

வரலாற்றுக் காலம் தொட்டு நெஞ்சில் வளர்த்துவைத்திருந்த பகைத் தீயைப் பயன்படுத்தி, அனைத்தையும் எரித்து முடித்துவிட்டது இனப் பகை. எரித்து முடித்ததோடு எல்லாமும் முடிந்துவிட்டது என்று, முன்னரே கணக்கும் போட்டுவைத்து இருந்தனர்.

கொலை செய்து முடிப்பதற்குத் தேவையான எச்சரிக்கை வளையங்கள் முதலில் அமைக்கப்பட்டன. பின்னர், மனித உரிமை அமைப்புகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டன. இலங்கை அரசுக்கு ஆதரவான ஊடகங்கள்கூட நுழைவதற்கு அங்கு அனுமதி இல்லை. அனைத்தும் ரகசியமாகவே நடந்தன. செய்யும் கொடுமைகள் யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்று மிகுந்த எச்சரிக்கையோடு சாட்சிகள் எதுவுமே இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள்.

கடல் அன்னையைவிட, பூமித் தாயைவிட சாட்சி வேறு உண்டா? யாருக்குமே தெரியாமல் நந்திக் கடல் கொந்தளித்து அலை எழுப்பியது. முள்ளி வாய்க்கால் மண்ணில் புதை குழிகள் அதிர்ந்து வெடித்தன.

ரத்தச் சிவப்பேறிய ஆயிரமாயிரம் கண்களுடன் உலகத்தை இன்று அண்ணாந்து பார்க்கிறது முள்ளி வாய்க்கால். அதன் கோபக் கனல் அகிலத்தையே திடுக்கிடவைத்துவிட்டது. மாபெரும் மரணத்துக்குப் பின் இது பெற்றெடுத்த ஜனனம், உண்மைகளாய் உயிர் பெற்று விண்ணில் எழுந்துவிட்டன. இருள் கவிந்த வான் பரப்பெங்கும் இந்த உண்மைகள், நட்சத்திரங்கள்போல சுடர்விட்டு நிற்கின்றன. வஞ்சிக்கப்பட்ட தனக்கான நீதியைக் கேட்க, சிறகுகளை விரித்துத் தேசங்கள் தோறும் பறந்து செல்கின்றன. இணையதளங்கள் அனைத்திலும் தலை காட்டி, நியாயம் கேட்டு நிற்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட நீதி பேசும் அனைவரும் இன்று தலை குனிந்து நிற்கிறார்கள்.

மக்கள் தொகையின் ஒரு பெரும் பகுதி இணையதளங்களில் மட்டுமே வசித்துவரும் காலம் இது. கணினிப் பெட்டிகளில் தலைகாட்டி நிற்கும் இந்த வஞ்சிக்கப்பட்ட மானுடம் எது என்று பலரால் புரிந்துகொள்ள முடியவில்லை. முள்ளி வாய்க்காலில் மக்கள் கூட்டம் திரண்டு, அங்கு நுழைந்துவிட்டது. தொலைக்காட்சிப் பெட்டிகள், வானொலிகள், அச்சு ஊடகங்கள் என்று எதையும் முள்ளி வாய்க்கால் மனிதர் கள் விட்டுவைக்கவில்லை. தன் வீடே தன் உலகம் என்று தனித் தனி அறைகளில் வாழும் நிம்மதி மனிதர்களால், இனிமேல் நிம்மதியோடு தூங்க முடியாது. எது வரை தெரியுமா? முள்ளி வாய்க்கால் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை!

ஆனால், இலங்கையின் இன வெறி அரசு, ஒன்றுமே நடக்கவில்லை என்று மாய வேடம் அணிந்து நிற்கிறது. அனைத்தையும் மறப்போம். மன்னிப்போம் என்று வசனம் வேறு பேசுகிறது.

எதை மறைப்பது?

யாரை மன்னிப்பது?

தோழர் சி.மகேந்திரன் எழுதிய கட்டுரை இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.

http://www.puthinappalakai.com/view.php?20110817104494

  • கருத்துக்கள உறவுகள்

வீழ்வே னென்று நினைத் தாயோ?

சி.மகேந்திரன்

ஓவியங்கள் : ராஜ்குமார் ஸ்தபதி

து ஒரு முள்வேலி முகாம். கவச வாகனங்களும் ஹெலிகாப்டர்களும் முகாமைச் சுற்றி, வானத்திலும் பூமியிலும் வளையமிட்டு உறுமிக்கொண்டு இருக்கின்றன. காட்டு மரம், செடி, கொடிகளின் நிறங்கள், இந்த இயந்திர உறுமல்களின் உடலில் வரையப்பட்டுள்ளன. அச்சமும் அதிர்ச்சியும் தரக் கூடிய, இன்றையஉலகில் பெரும் எண்ணிக்கையிலான மக்களை அடைத்துவைக்கும் கொட்டிலான மெனிக்ஃபார்ம் இவ்வாறாகத்தான் தோற்றம் தருகிறது. என்னதான் இலங்கைஅரசு மூடி மறைத்துவைக்க முயற்சி செய்தாலும், இது இன அழிப்பை மறைவிடத் தந்திரமாகக்கொண்ட சித்ரவதை முகாம் என்பதை இன்று உலகம் அறியும்.

p36.jpgஅடர்ந்த காடு ஒன்றின்மையப் பகுதியைத்தான் தேர்வு செய்து இருக்கிறார்கள். மரங்கள் வெட்டப் பட்டு, அவசர கதியில் அமைக்கப் பட்டமுகாம். இலங்கைத் தீவின் வடக்குப் பகுதியில், தலைநகர் கொழும்பில் இருந்து 250 கி.மீ. தூரம்... வவுனியாவில் இருந்து 35 கி.மீ. தொலைவு. மொத்தம் 13 பகுதிகளில் முகாம்கள் அமைத்து, முள்ளி வாய்க்கால் பேரழிவில் சிக்கிச் சிதைந்த மக்களுக்கு, இடைக் காலத்தில் தங்கும் வசதியை உருவாக்கித் தர வேண்டும் என்று, ஐக்கிய நாடுகள் சபையின்அகதி கள் மற்றும் மறுவாழ்வுத் துறை வழிகாட்டி இருந்தது. ஆனால், இலங்கை அரசு, தந்திரமாக 5 முகாம்களை மட்டுமே அமைத்தது. இதுவும் இன அழிப்புக்கான மிக மோசமான தந்திரம்!

முகாமின் பரப்பளவு 0.8 சதுர கி.மீ. யாழ்ப்பாணத்தில், ஒரு சதுர கி.மீ-க்கு 2,000 மக்கள் வசிக் கிறார்கள். மக்கள் நெருக்கம் மிகுந்த தலைநகர் கொழும்பில், சராசரி யாக ஒவ்வொரு கி.மீ-க்கும் 14,000 மக்கள் வசிக்கிறார்கள். ஆனால், ஒரு கி.மீ-க்கும் குறைவான பரப்பளவைக்கொண்ட மெனிக் ஃபார்ம் முகாமில் 2,84,000 மக்கள் அடைத்துவைக்கப்பட்டு உள்ள னர். இது சர்வதேச விதிமுறைகள் அனைத்தையும் நிராகரிக்கும் பாசிச நடைமுறை.

முகாமின் ஐந்து பகுதிகளும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்று இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் தனித் தனியான முள்வேலி அடுக்குகள். ராணுவ வீரர்களின் 24 மணி நேரக் கண்காணிப்பு. நவீனத் தொழில்நுட்பங்கள் அனைத்தும்கொண்டு, உருவாக்கப்பட்டு இருக்கிறது. யாரும் தப்பித்துவிடக் கூடாது என்பதைவிட, நடப்பது எதுவுமே வெளி உலகுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையுடன் அமைக்கப்பட்ட முகாம் கள். தங்கும் கூடாரங்களைப் பொறுத்தவரை, மாட்டுக் கொட்டில்களைப்போன்ற, மனிதக் கொட்டடிகள் என்றே கூற வேண்டும். குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, குளியல் அறை வசதி, தொற்றுநோய்கள் பரவாமல் இருக்கும் சுற்றுப்புறச் சுகாதார வசதி என்று சகல மனித உரிமைகளும் மறுக்கப்பட்ட முகாம்கள்.

p36a.jpgபோர் நடந்த பெருந் துயரை மார்பில் சுமந்த பெண்ணின் மனத் துயர் ஆழத்தை, இதுவரை யாருமே கண்டு அறிந்தது இல்லை. இதிகாசங்களி லும் காப்பியங்களிலும் தேங்கி நின்று, இவை இன்று வரை நம்மை அதிர வைத்துக்கொண்டு இருக்கி றது. கணவனை இழந்த மகளிரின் விரக்தி, பெரும் மூச்சால் வெந்து வெந்து தணியும் வெப்ப மண்டல மாகிக்கொண்டு இருக்கி றது மெனிக்ஃபார்ம் சித்ர வதை முகாம். இன்று போர் நடந்துமுடிந்து உள்ள இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டும், 1,20,000 இளம் தமிழ் விதவைகள் இருப்பதாகக் கூறப்படுகி றது. இதில் உடல் ஊனமுற்றவர்கள் 30,000 பேர்.

பெண் ஒருத்தியின் கதை ஒன்று நம்மை வந்து அடைகிறது. வானில் இருந்து விழுந் தும் பூமியில் இருந்து வெடித்தும் சிதறிய குண்டுகள் எழுப்பிய புகைப் போர்வையில் அவள் கணவன் காணாமல் போய்விட்டான். கையில் மிச்சமாகக் குழந்தை மட்டும்தான் இருக்கிறது. ஓர் ஆண் குழந்தை. உயிர் பிழைக்க, பெருங்கூட்டம் ஒன்று ஓடிக்கொண்டு இருக்கிறது. கூட்டத்தோடு கூட்டமாக நகர்கிறாள். சிதறிய உடல்கள், உயிர் பிரிந் தும் பிரியாமலும் அரற்றிக்கிடக்கும் அவலங்கள் என்று அவள் காலடி எடுத்து வைத்த இடங்களில் கண்ட கொடுங்காட்சி களால், அவளுக்கு எந்தவிதமான பதற்றமும் ஏற்படவில்லை. அவளது உணர்வுகள் அனைத்தும் மரத்துப்போய்விட்டன. தோளில் குழந்தையைச் சுமந்துகொண்டு, கைப்பை ஒன்றுடன், ஓர் இயந்திரத்தைப் போல அவள் நடக்கத்தொடங்கிவிடுகிறாள்.

முள்ளி வாய்க்காலில் இருந்து 8 கி.மீ. நடந்திருக்க வேண்டும். அங்குதான் ராணுவத் தின் சோதனைக் கூடம். அருவருப்பு மிகுந்த பரிசோதனை. பெண் பிள்ளைகள் அவமானத் தால், கூசிக் குறுகிப் போய்விடுகிறார்கள். அவள் பஸ் ஒன்றில் ராணுவத்தால் ஏற்றி அனுப்பிவைக்கப்படுகிறாள். மெனிக் ஃபார்ம் முகாம், அங்கு இருந்து 120 கி.மீ. தூரத்தில் உள்ளது. முகாம் வந்து சேருகி றாள். குழந்தையை அணைத்த படி முகாமைச் சுற்றி அவளது கண்கள் வட்டமிட்டுப் பார்க் கின்றன. வட்ட வட்டமாகச் சுற்றப்பட்ட முள் கம்பிகள், மாலை நேர வெயில் பளிச் சிட்டு மின்னுகின்றன. குத்திக் கிழிப்பதைப்போன்ற அதன் முள் கம்பிகள், அவளது உடலை நடுங்கவைத்துவிடுகிறது. இயந்திரத் துப்பாக்கிகளைக் கையில்வைத்து உள்ள ராணுவக்காரர்கள்,அவளது கண்களுக்கு முள் கம்பிகளைவிட குரூர மாகத் தெரிகிறார்கள். ராணுவக்காரன் ஒருவனின் வெறி மிகுந்த பார்வையில் அவளது உடல் நடுக்கம் மேலும் கூடுதல் ஆகிறது.

கூடாரங்கள் ஒவ்வொன்றிலும் 10 அல்லது 12 பேர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். முதல் மூன்று நாட்கள் குடிப்ப தற்குத் தண்ணீர் மட்டுமே முகாமில்கிடைத் தது. குழந்தை மட்டும்தான் அவளுக்கான ஒரே ஊக்க சக்தி. அதன் உயிரை அவள் எப்படியும் காப்பாற்றி ஆக வேண்டும். உயிரைப் பாதுகாத்து வருவதைப்போலவே கைப் பையையும் பாதுகாத்து வருகிறாள். அதில்தான், குழந்தைக்கான பால் பவுடர் p36b.jpgமாவு பத்திரப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளது. பால் பவுடர் மாவை, கொஞ்சமாக எடுத்துக் கரைத்து குழந்தையின் பசிக்கு ஊட்டுகிறாள். கவனமாக மீண்டும் அதைப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்கிறாள். தன்னுடைய உணவைப்பற்றி அவள் அக்கறைகொள்வது இல்லை. மூன்று நாட்களுக்குப் பின், உணவுப் பொட்டலங்கள் முகாமில் கொடுக்கப்படுகின்றன. நெடுநாள் பட்டினியால் வாடிய மக்கள், முதல் உணவுப் பொட்டலத்தைப் பார்த்த உடன், முட்டி மோதிக் கூட்டமாக ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.

லாரியில் இருந்து உணவுப் பொட்டலங்களை சிங்கள சிப்பாய் ஒருவன் வீசிஎறிந்து கொண்டு இருக்கிறான். முகாம்வாசிகள் முயற்சிசெய்து கைகளால் பிடித்துக்கொள் கிறார்கள். சிலர் முகத்தில் மோதி, பொட்டலம் கிழிந்து, சோற்றுப் பருக்கைகள் சிதறி மண்ணில் விழுகின்றன. முகத்தில் ஒட்டிய சோற்றுப் பருக்கைகளைத் துடைத்துக்கொள்ளும்போது, அவமானத்தால் சம்பந்தப்பட்டவரின் முகம் சிவந்துவிடுகிறது.

பொட்டலத்தை வீசிய சிப்பாய் ஓரக் கண்ணால் பார்த்து, ஏளனத்துடன்ரசித்துக் கொள்கிறான். ஒரு பிணம் தின்னிக் கழுகைப் போல, இந்த அவமானம் கொத்திக் கிளற, இதைத் தூரத்தில் இருந்து கவனித்த முகாம் வாசிகளில் ஒருவர், 'இந்தக் கொடுமைகளை நேரில் பார்ப்பதைவிட, முள்ளி வாய்க்கால் அக்னியில் சாம்பலாகி இருக்கக் கூடாதா?’ என்று வேதனைப்பட்டுக்கொள்கிறார்.

அந்தப் பெண் அனைத்தையும் எதிர்கொண்டாள். இயல்பாகவே அவளிடம் அமைந்த மன உறுதி அவளை அத்தனை இக்கட்டுகளிலும் பாதுகாத்து வந்தது. இந்த முகாம் வாழ்க்கைக்கு அவள் தன்னைப் பழக்கிக்கொண்டு இருந்த நேரத்தில்தான், அந்தப் பெரும் வேதனை அவளுக்கு நேர்ந்தது.

அந்தப் பெண்ணின் கைக்குழந்தைக்குக் கடுமையான வயிற்றுப்போக்கு. குழந்தை வாடித் துவண்டுபோனான். கடந்த ஒன்பது மாதங்களாக, சத்தான உணவு எதுவும் குழந்தைக்கு அவளால் கொடுக்க முடிய வில்லை. குழந்தை, எலும்பும் தோலுமாகத் தான் இருந்தான். நைந்த உடலால் வயிற்றுப்போக்கை எதிர்கொள்ள முடியவில்லை. மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லலாம் என்று முயற்சி செய்து பார்த்தாள். மருத்துவ மனையில் எந்தப் பயனும் கிடைக்காது என்று முகாம் வாசிகள் கூறியது அவளுக் குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துவிட்டது. உண்மையில் சொல்லப்போனால், அங்கு உள்ள மருத்துவமனைகள் மருத்துவமனை களாகவே இல்லை.

கருணையையும் ஆறுதலையும் வழங்க வேண்டிய அவை, மனிதவதைக் கூடங்களாகவே செயல்பட்டன. ராணுவத்தின் கொடுமைகளைவிட, இங்கு நடைபெறும் கொடுமைகள் மக்கள் உணர்வுகளை வெகு வாகப் பாதித்து, மனதில் ரத்தக் கசிவை ஏற்படுத்தின.

முகாமின் பெருங்கூட்டத்தை மருத்துவமனை ஊழியர்களால் சமாளிக்க முடியவில்லை என்றாலும், முகாம்வாசிகளின் வேதனை எல்லாம், தாங்கள் இத்தனை கேவலமாக நடத்தப்படுகிறோமே என்பதில் இருந்தது. குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் என்று தரம் பிரித்துப் பார்த்து, ஆறுதல் அளிக்கும் மனிதநேயக்கண்ணோட் டம் மருத்துவமனைகளில் இல்லை.

தமிழ் மக்கள் அனைவருமே பயங்கர வாதிகள். பயங்கரவாதிகளுக்கு மரணம்தான் தண்டனை என்றும் அதை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்களாக அவர்கள் காணப்பட்டார்கள். ராணுவத்தினர் தங்கள் தோள்களில் இயந்திரத் துப்பாக்கிகளைச் சுமந்து திரிந்தைப்போலவே மருத் துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என்று அனைவரின் மனங்களும், தனித்தனியாக ஓர் இயந்திரத் துப்பாக்கியைச் சுமந்து திரிந்துகொண்டு இருந்தன. அவர்களிடம் அமைந்த இன வெறுப்பின் ஆழம் எத்தகையது என்பதை மகப்பேறு பகுதிகளுக்குச் சென்றால் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

மரண பயமும் அச்சமும் நிறைந்த மெனிக் ஃபார்ம் முகாமில் குறிப்பிடத்தக்க மற்றொன்றும் நிகழ்ந்துகொண்டு இருந்தது. இதற்காக அந்த மக்கள், மகிழ்ச்சி அடைந்தார்களா? அல்லது வேதனைப்பட்டார்களா? என்பது நமக்குத் தெரியவில்லை.

இங்கு மாதம் ஒன்றுக்கு 400 குழந்தைகள் பிறந்தன. பிரசவம் மறுபிறப்புக்கு ஒப்பாகக் கூறப்படுகிறது. குழந்தை ஒன்றைப் பெற்று எடுக்கும்போது, எந்த ஒரு பெண்ணுக்கும் தாயின் அரவணைப்பு தேவைப்படுகிறது. செவிலியரின் ஆறுதல் மொழி, சில நேரங் களில் இந்தத் தாய்ப் பாசத்துக்கு ஈடாக அமைந்துவிடுகிறது. ஆனால், முகாம் மருத் துவமனைகள் முற்றிலும் மாறுபட்டவை.

பிரசவம் ஒருபுறம், மறுபுறத்தில் இறுகிய முகத்துடன் வெறுப்பை உமிழ்ந்து கொண்டே புரியாத மொழியில் வேண்டா வெறுப்புடன் மகப்பேறு செய்தலை, பிரசவ வலியால் துடிக்கும் எந்தத் தாயாலும் பொறுத்துக்கொள்ள முடியாது. தன்னை அநாதையாக்கிவிட்ட, ஆறுதல் அற்ற உலகில் வக்கான மருந்துகளும் மருத்துவ உதவிகளும் இல்லாமல், அந்தத் தமிழ்ப் பெண்கள் தங்கள் குழந்தைகளைப் பெற்று எடுக்கும் போராட்டத்தை நடத்திப் பார்க்கிறார்கள். அனைத்து வேதனைகளை யும் ஓர் அழுகுரலுக்காகப் பொறுத்துக்கொள்கிறார்கள். இதைத் தவிர, அவர் களுக்கு எதிர்கால ஆறுதல் வேறு என்ன இருக்க முடியும்?

குழந்தையின் வயிற்றுப்போக்கு நிற்கவில்லை. அந்த இளம் பெண்ணால் என்ன செய்ய முடியும்? எத்தனையோ வேதனைகளைச் சந்தித்துவிட்ட அவளால், இந்த வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எப்படியும் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிவிட முடிவு எடுக்கிறாள். ராணுவத்திடம் கெஞ்சிக் கதறி அவர்களின் உதவியைப் பெற்றுவிட முயற்சி செய்கிறாள். ராணுவ அதிகாரி ஒருவர் ஆலோசனையும் வழங்கினார்.

குழந்தையை ராணுவத்திடம் ஒப்படைத் தால், மருத்துவச் சிகிச்சை அளித்து மீண்டும் குழந்தையை அவளிடமே ஒப்படைத்துவிடுகிறோம் என்பதுதான் அந்த ஆலோசனை. இதனை ஏற்றுக்கொள்ளலாமா என்று யோசித்துக்கொண்டு இருந்தபோது கிடைத்த மற்றொரு தகவல், அவளைப் பெரிதும் திடுக்கிட வைத்துவிட்டது. அச்ச உணர்வு அவள் உடல் முழுவதும் பரவிக்கொண்டது!

- விதைப்போம்...

thanks-vikatan.com

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி கந்தப்பு & புலவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.