Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் அரசியலில் நடந்தேறும் கட்சித்தாவல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட 4 ஐ.தே.க.வினர் அமைச்சர்களாக இணைந்தனர்!

[புதன்கிழமை, 25 சனவரி 2006,

ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட 4 மூத்த தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி நாடாளுமன்ற உறுப்பினர் கேலிய ரம்புக்வெல்ல, சிறிலங்கா நாடாளுமன்ற எதிர்க்கட்சிக் கொறாடாவும் களுத்துறை நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த சமரசிங்க, ஐக்கிய தேசியக் கட்சிப் பேச்சாளர் ஜி.எல்.பீரிஸ், சுசாதந்த புஞ்சிநிலமே ஆகியோர் இன்று இணைந்தனர்.

இவர்களில் கேலிய ரம்புக்வெல்ல இன்று பிற்பகல் அமைச்சரவை அந்தஸ்துள்ள கொள்கைத் திட்டமிடல் மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சராக பதவியேற்றார். மகிந்தவின் செயலகத்தில் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் இன்று பிற்பகல் ஒருமணியளவில் அவர் பதவி ஏற்றார்.

வெளிவிவிவகாரத் துறை உதவி அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் பொறுப்பேற்கக் கூடும் என்று தெரிகிறது. சுசாதந்த புஞ்சிநிலமஇ துறை ஒதுக்கீடு இல்லாத அமைச்சராககக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் நவீன் திசநாயக்கவும் அரசாங்கம் பக்கம் தாவக் கூடும் என்று கூறப்படுகிறது.

13 தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்த போதும் அக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்து நீடிக்க முடிவு செய்ததையடுத்து அக்கட்சியின் மூத்த தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியிலிருந்து விலகத் தொடங்கியுள்ளனர்.

தகவல் மூலம்-புதினம்.கொம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐ.தே.க.வின் 7 மாவட்டத் தலைவர்கள், 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கம் பக்கம் தாவுகின்றனர்!

ஐக்கிய தேசியக் கட்சியின் 7 மாவட்டத் தலைவர்கள் மற்றும் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்தவின் அரச பக்கம் தாவக்கூடும் என்று தெரிகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியினர் இத்தகைய நிலைப்பாட்டைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மையுடன் கூடிய எதிர்க்கட்சி என்ற தகுதியை இழப்பதோடு எதிர்க்கட்சித் தலைவர் என்ற தகுதியையும் ரணில் விக்கிரமசிங்க இழக்கக் கூடிய நிலை ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கண்டி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேகலிய ரம்புக்வெல, மற்றும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க ஆகியோர் திட்டமிடல் மற்றும் இயற்கைப் பேரழிவு மேலாண்மை அமைச்சர்களாக நேற்றுப் பொறுப்பேற்றனர்.

மேலும் 5 ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைவது உறுதிப்படுத்தப்பட்டு நிலையில் 20 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இணைய உள்ளனர் என்று நேற்று இரவு கொழும்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் மகிந்தவை ஆதரிப்பதற்காக தாம் அரசாங்கத்தின் அமைச்சராகப் பொறுப்பேற்றதாக அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்குத் தாவுவோர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐ.தே.கவின் பிரதிப் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளமை குறித்து கருத்துத் தெரிவித்த ரம்புக்வெல, அவர் விருப்பப்படி நடவடிக்கை எடுக்கட்டும் என்றார்.

கட்சியின் மூத்த தலைவர்களாக இருந்த லலித் அதுலத் முதலி மற்றும் காமினி திசநாயக்க ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி மற்றொரு தனிக் கட்சியைத்தான் துவக்கினார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சராகப் பொறுப்பேற்றதும் அரச தலைவர் செயலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த மகிந்த சமரசிங்க, தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராகத் தொடர்ந்து நீடிப்பதாகத் தெரிவித்தார்.

தகவல் மூலம்-புதினம்.கொம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐ.தே.க.வினரை இணைத்தால் அரசாங்கத்துடனான நல்லுறவு பாதிக்கும்: கரு ஜயசூர்ய எச்சரிக்கை

[புதன்கிழமை, 25 சனவரி 2006

ஐக்கிய தேசியக் கட்சியினரை சிறிலங்கா அரசாங்கத்தில் இணைத்தால் அரசாங்கத்துடனான நல்லுறவு பாதிக்கும் என்று அக்கட்சியின் பிரதிச் செயலாளர் கரு ஜயசூர்ய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் கரு ஜயசூர்ய தெரிவித்துள்ளதாவது:

சமாதான செயற்பாடுகள் உட்பட அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளுக்கும் அரசியல் ரீதியாக உடன்பாட்டை எட்டி செயற்படுவதாயின் அரசாங்கம் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டியது ஐக்கிய தேசியக் கட்சியுடன்தான்.

அதைவிடுத்து கட்சியின் உறுப்பினர்களுடன் செயற்பாடுகளை மேற்கொள்வதானது வெற்றியளிக்காது.

சமாதான செயற்பாடுகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு கட்சி என்ற அடிப்படையில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளது. நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படுவதைக் காண்பதற்கே ஐக்கிய தேசியக் கட்சி விரும்புகிறது.

குறுகிய அரசியல் இலாபங்களைத் தவிர்த்து கட்சியுடனே அரசாங்கம் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை அரசாங்கம் பக்கம் இழுத்துக் கொள்வதனூடாக இத்தகைய நல்லுறவை ஏற்படுத்த முடியாது என்றார் கரு ஜயசூர்ய.

தகவல் மூலம்-புதினம்.கொம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசாங்கத்தில் இணைந்த இரு அமைச்சர்கள் மீது நடவடிக்கை: ஐ.தே.க. முடிவு

சிறிலங்கா அரசாங்கத்தில் அமைச்சர்களாக இணைந்த இரு ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஓழுக்காற்று விசாரணை நடத்துவதற்கு அக்கட்சி முடிவு செய்துள்ளது.

அவர்களிடம் விளக்கம் கோருவதற்கும் ஐக்கிய தேசியக் கட்சி முடிவுசெய்துள்ளது.

கட்சி யாப்பின் 3 வது மற்றும் 4வது பிரிவிற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கட்சியின் செயற்குழுவைக் கேட்காது அரசாங்கத்தினதோ வேறு கட்சியினதோ பொறுப்பினை ஏற்பது சட்டவிரோதமானது என்றும் அதனால் அவர்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கொழும்பு ஊடகவியலாளர்களிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப்பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கட்சி செயற்குழுவின் அனுமதியைப் பெறாது அரசாங்கப் பதவியை வகிப்பதனூடாக கட்சி அங்கத்துவம் தானாகவே இரத்தாகிவிடும் என்றும் அவர் கூறினார்.

தகவல் மூலம்-புதினம்.கொம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்திரிகா ஆதரவாளர்களுக்காக காத்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்தவின் அரசாங்கம் பக்கம் தாவி வரும் நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள சந்திரிகா குமாரதுங்கவின் ஆதரவாளர்களை தங்கள் கட்சிப் பக்கம் இணைக்க ஐக்கிய தேசியக் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.

மேலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் அதிருப்தியாளர்களையும் தமது கட்சிப் பக்கம் இழுத்துக் கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டு வருகிறது.

சுதந்திரக் கட்சியில் உள்ள மகிந்தவின் அதிருப்தியாளர்களும் சந்திரிகாவின் ஆதரவாளர்களுமாகிய டிலான் பெரேரா, மகிந்தானந்த அளுதகமகே, லசந்த அலகியவன்ன, மேர்வின் சில்வா ஆகியோருடன் ஐக்கிய தேசியக் கட்சி பேச்சுக்களை நடத்திவருவதாக தெரிகிறது.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அமைதி முயற்சிகளில் அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளும் தீர்மானத்தை மாத்தறை நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த விஜயசேகர முன்மொழிந்துள்ளார்.

எஸ்.பி. திசநாயக்க விடுதலை செய்யப்படாமை, ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மீதான சித்திரவதை, ஐக்கிய தேசியக் கட்சியினரை அரசாங்கம் பக்கம் இழுத்துக் கொண்டமை ஆகிய காரணங்களுக்காக அரசுக்கான ஆதரவை விலக்குவதாக அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் எஸ்.பி. திசநாயக்கவை விடுதலை செய்ய வலியுறுத்தி எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் நாள் முதல் ஜாதிக ஹெல உறுமயவின் அதிருப்தியாளர் உடுவே தம்மலோக்க தேரர் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்த உள்ளதாகவும் மகிந்த விஜயசேகர தெரிவித்தார்.

இருப்பினும் மகிந்த விஜயசேகரவின் தீர்மானம் மீது மேலும் விவாதிக்கப்பட வேண்டியதிருப்பதாகவும் இந்த கோரிக்கைகளை அரசுக்கு நிபந்தனையாக முன்வைப்போம் என்றும் அக்கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்ததையடுத்து அத்தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தகவல் மூலம்-புதினம்.கொம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசாங்கத்தில் ஜி.எல்.பீரிஸ் இணைய ஜே.வி.பி. கடும் எதிர்ப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளரும் மூத்த தலைவருமான ஜி.எல்.பீரிஸ், மகிந்தவின் அரசாங்கத்தில் இணைய ஜே.வி.பி.கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

கொழும்பில் கடந்த செவ்வாய்க்கிழமை மகிந்தவுக்கும் ஜே.வி.பி.யினருக்கும் இடையேயான சந்திப்பில் இந்த எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, டல்லஸ் அலகப் பெருமா, பசில் ராஜபக்ச மற்றும் ஜே.வி.பி.யின் சோமவன்ச, டில்வின் சில்வா, விமல் வீரவன்ச, அனுரகுமார திசநாயக்க ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலில் அமைதிப் பேச்சுகளுக்கு விடுதலைப் புலிகள் ஒப்புக் கொள்வார்களா என்ற விவாதம் நடத்தப்பட்டுள்ளது.

"எரிக் சொல்ஹெய்மின் வருகையால் எதுவும் நடக்கப் போவதில்லை" என்று மங்கள சமரவீர கூறியுள்ளார். அதற்கு மறுப்புத் தெரிவித்த மகிந்த ராஜபக்ச "பொறுத்திருந்து பாருங்கள் அவர்கள் ஒப்புக்கொள்வார்கள். எனக்கு நம்பிக்கை இருக்கு. இதே நம்பிக்கைதான் தேர்தலின் போதும் நான் வெற்றிபெறுவதில் இருந்தது. விடுதலைப் புலிகள் பேச்சுக்கு வருவார்கள்" என்று பதிலளித்துள்ளார்.

இதற்கு பதில்கூறிய மங்கள சமரவீர, "அவர்கள் மறுத்துவிட்டால் நாம் யுத்தத்திற்குச் செல்ல வேண்டியது இருக்கும்" என்று கூறியுள்ளார். அவர் யுத்தம் என்று கூறியது விடுதலைப் புலிகளுடன் அல்லவாம். ஜே.வி.பி.யுடன்தான் என்று மங்கள சமரவீர மறைமுகமாகக் கூறியுள்ளார்.

இதன் பின்னர் ஜே.வி.பி.யினரைப் பார்த்து,"நான் நிறைய பிரச்சனைகளுகு முகம் கொடுத்து வருகிறன். அவைகள் தனிப்பட்ட பிரச்சனைகள் அல்ல. நாட்டுக்கு சவாலான பிரச்சனைகள். நீங்களும் அரசாங்கத்தில் இணைந்து என்னை வலுப்படுத்தினால் நாட்டை எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு நாம் கடுமையாக முகம் கொடுக்கலாம்" என்று உணர்ச்சிவயப்பட்ட நிலையில் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேபோல் இருதரப்பினருக்கும் இடையேயான பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்றும் மகிந்த கூறியுள்ளார்.

முதலாவதாக அமைச்சரவை மாற்றத்தை இருதரப்பினரும் விவாதித்துள்ளனர். ஜே.வி.பி.யினர் அரசாங்கத்தில் இணையும் நிலையில் முக்கிய அமைச்சுப் பொறுப்புகளை கையளிக்க தான் தயார் என்றும் அரசாங்கம் பக்கம் வருகிற ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் ஏதேனும் அமைச்சுகள் கொடுக்க வேண்டியிருக்கிறது என்றும் மகிந்த தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த ஜே.வி.பி.யின் அனுரகுமார திசநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியினர் சிலர் அரசாங்கத்தில் இணைவதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் குறிப்பிட்ட சிலர் இணைவதை நாம் எதிர்க்கிறோம்" என்றார்.

ஜி.எல். பீரிஸை குறிவைத்து அனுரகுமார திசநாயக்க கருத்துத் தெரிவிக்க அதன் பின்னர் ஜி.எல். பீரிஸ் விவாதப் பொருளாகிவிட்டார்.

"தேர்தலின் போதும் அதற்கும் முன்பும் ரணில் விக்கிரமசிங்க, மிலிந்த மொரகொட, ஜி.எல்.பீரீஸ் ஆகியோரைத்தான் இலக்கு வைத்து ஜே.வி.பி. பிரச்சாரம் செய்தது. ஜி.எல்.பீரிஸ் போன்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளும்போது அப்படியான அரசாங்கத்தை ஜே.வி.பி. பாதுகாக்காது" என்றும் அனுரகுமார திசநாயக்க கடிந்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த மகிந்த "ஆனால்.. ஜி.எல்.பீரீஸை அரசாங்கத்தில் இணைத்துக் கொள்வதாக வாக்குறுதி அளித்துவிட்டேன்" என்று கூறியுள்ளார். "நாங்கள் இதை ஏற்க முடியாது" என்று அனுரகுமார திசநாயக்க கடுமையாகக் கூறியுள்ளார்.

அனுரகுமாரவின் கடுமைக்கு மகிந்தவும் எதிர்க்குரலில்,"நான் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஒருவரைக் கூட அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளாமல் இருக்கிறேன். ஆனால் நீங்கள் அனைவரும் அரசாங்கத்தில் இணைய வேண்டும். ஏன் அதைச் செய்ய மறுக்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையடுத்து அந்தக் கூட்ட அரங்கம் நிசப்தமாகியிருக்கிறது.

ஜி.எல்.பீரிஸ், பந்துல குணவர்த்தன, சுசந்த புஞ்சிநிலமே, மனோ விஜரட்ண, எர்லெ குணசேகர, சந்திரசிறி அரியவன்ச சூரியராச்சி, ரஞ்சித் அலுவிகர, சரத் ரணவக்க, நியோமெல் பெரேரா ஆகிய ஐக்கிய தேசியக் கட்சியின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா அரசாங்கம் பக்கம் தாவக் கூடியவர்களாக இருப்பதாகவும் அலரி மாளிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலை இருகட்சியினரும் இணைந்து எதிர்கொள்வது தொடர்பாகவும் ஜே.வி.பி.யுடனான கூட்டணிக்கு சந்திரிகா எப்படி முட்டுக்கட்டை போடுவார் என்பது குறித்தும் இருதரப்பினரும் விவாதித்துள்ளனர்.

தகவல் மூலம்-புதினம்.கொம்

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் எங்களுக்கு வேணும். ஒரு முட்டாளை பேச்சுவார்த்தைக்கு அனுப்பினால் தான் சிங்கள அரசின் முகம் கிழிக்கப்படும்.

தலைநகரில் இப்படியும் அரசியல் வியூகங்கள்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் ஐ.தே.கட்சியை முழுமையாக இணையச் செய்து ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கும் முயற்சிகளில் பௌத்த மதகுரு ஒருவர் ஈடுபட்டு வருவதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.

இந்தப் பிக்கு ஜே.வி.பி. யுடன் இணைந்து அமைப்பொன்றை ஆரம்பிக்க முன்னின்று செயற்பட்டவராவார்.

மறைந்த ஜனாதிபதி பிரேமதாஸ காலத்தில் அவருக்கு நெருங்கியவராக செயற்பட்ட இந்த பௌத்த மதகுரு பின்னர் ஐ.தே.கட்சியுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு வெளியேறியவர்.

ஜனாதிபதிக்கும் ஐ.தே.கட்சிக்குமிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காகத் தற்போது அவுஸ்திரேலியா சென்றிருக்கும் முன்னாள் கொழும்பு மாநகர முதல்வரும் அமைச்சருமான சிறிசேன குரேயை உடனடியாக இலங்கைக்கு வருமாறு இந்த பௌத்த மதகுரு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்திருப்பதாகவும் தெரிய வருகிறது.

இரண்டு பிரதான கட்சிகள் ஒன்றிணைவதன் மூலமே தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதோடு வெளிநாட்டுத் தலையீடுகளிலிருந்து மீள முடியுமென்றும் ஜே.வி.பி. யின் நிலைப்பாடுகளில் ஸ்திரத்தன்மை இல்லை என்றும் வெறும் சுலோகங்களே இருப்பதாகவும் எனவேதான் அவர்களின் அமைப்புகளிலிருந்து வெளியேறியதாகவும் பௌத்த மதகுரு தனது நெருங்கியவரொருவரிடம் தெரிவித்திருப்பதாகவும் அறிய வருகிறது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் இரண்டு முறை இத்தேரரின் விகாரைக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதன்போது ஐ.தே.கட்சியிலிருந்து தனிநபர்களை இணைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளாது முழுமையான இணைப்பை ஏற்படுத்திக் கொண்டு பிரச்சினைகளைத் தீர்க்குமாறும் தேரரால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இது இவ்வாறிருக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தொலைபேசி மூலம் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக அறியவருகிறது.

இந்த வாரத்தில் ஐ.தே.கட்சியிலிருந்து மேலும் இருபத்தோரு எம்.பி. க்கள் அரசாங்கத்திற்கு தாவ உள்ளதாகவும் ஆனால் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட மாட்டாதென ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாகவும் மேலும் தெரியவருகிறது.

தினக்குரல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசாங்கத்தில் இணைந்தார் இ.தொ.கா. அதிருப்தியாளர் பைசர் முஸ்தாபா

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தாபா, சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.

எதுவித நிபந்தனையுமின்றி, எதுவித அமைச்சுப் பொறுப்புமின்றி தாம் மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பதாகவும் பைசர் முஸ்தாபா கூறியுள்ளார்.

அராசாங்கத்தில் இணைய விரும்புகிறவர்கள் தம்மை முன்னுதாரணமாகக் கொண்டு இணையலாம் என்றும் முஸ்தாபா தெரிவித்துள்ளார்.

மேலும் தம்மை கண்டி மாவட்ட முஸ்லிம் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளராக மகிந்த ராஜபக்ச நியமித்துள்ளதாகவும் முஸ்தாபா கூறினார்.

தகவல் மூலம்-புதினம்.கொம்

அரசில் இணையும் திட்டத்தை கைவிட்டார் பீரிஸ்

ரணிலின் கரத்தை பலப்படுத்த போவதாக கூறுகிறார்

அரசுடன் இணையலாமென எதிர்பார்க்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும்இ முன்னாள் அமைச்சருமான போராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தமது திட்டத்தை கைவிட்டுள்ளார் எனத் தெரிய வருகிறது.

பேராசிரியர் பீரிஸை அரசுடன் இணைத்துக் கொள்ள ஆளும் தரப்பில் பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்திருந்த போதிலும் இது தொடர்பில் இடம்பெற்ற பேச்சுக்களின் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை முழுமையாக ஏற்றுக் கொள்வதில் உருவான தடைகள் காரணமாக முதலில் தமது திட்டத்தை பின்போட்டிருந்த பேராசிரியர் பீரிஸ் நேற்று பாராளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற ஐ.தே.க. பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தான் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு போகப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் முதலில் காணப்பட்ட போதிலும் இப்போது அவை சுமுகமாகத் தீர்க்கப்பட்டிருப்பதால் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் முன்னரை விட வேகமாக செயற்படத் தீர்மானித்திருப்பதாக பேராசிரியர் பீரிஸ் கூட்டத்தில் தெரிவித்திருக்கின்றார்.

thinakkural

cartoon_010.jpg

lankatruth

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.