Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலகின் மிகப்பெரிய வேலி

Featured Replies

சீனப்பெருஞ்சுவர் இன்றளவும் வரலாற்றின் சாதனையாக நின்றுகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட அதனுடன் ஒப்பிடத்தக்க ஒன்று பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்திருக்கிறது. மகாராஷ்டிராவில் பர்ஹான்பூரில் இருந்து தொடங்கி மத்தியப்பிரதேசம் வழியாக உத்தரப்பிரதேசம் வழியாக ஹரியானா வழியாக பஞ்சாப் வழியாக பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணம் வழியாகக் கிட்டத்தட்ட காஷ்மீரின் எல்லை வரை சென்று முடியும் ஒரு மாபெரும் வேலி.

Roywebsite.jpg

ராய் மாக்ஸ்ஹாம்

இது உயிர்வேலி. முள்மரங்கள் வளர்த்து அவற்றை இணைத்துக்கட்டி எவரும் கடந்து போகமுடியாதபடி அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 12 அடி உயரம் உடையது இது. உலகவரலாற்றின் மிகப்பெரிய வேலி இதுதான். கிட்டத்தட்ட வட இந்தியாவை இரு நேர்பாதிகளாக இது பிளந்தது. 4000 கிமீ மைல் நீளத்துக்கு பெரும் பொட்டல்களை, விளைநிலங்களை, கிராமங்களை, நகரங்களை, பாலைவனங்களை, குன்றுகளைப் பகுத்தபடி ஓடியது இது. இதன் உச்சகாலகட்டத்தில் 1872ல் கிட்டத்தட்ட 14000 முழுநேர பிரிட்டிஷ் அரசூழியர்கள் இதை காவல்காத்துப் பராமரித்தார்கள். கிட்டத்தட்ட முக்கால்நூற்றாண்டுக்காலம் இது பிரிட்டிஷ் -இந்திய அரசின் அதிகாரத்தின் சின்னமாக நீடித்திருந்தது.

இந்த மாபெரும் அமைப்பைப்பற்றி இந்தியாவின் வரலாற்றாசிரியர்கள் எவருமே எழுதியதில்லை. இந்தியாவைப்பற்றிய எந்த நூலிலும் இது குறிப்பிடப்பட்டதில்லை. இதைப்பற்றி சுதந்திர இந்தியாவின் எந்த ஆவணத்திலும் ஒரு குறிப்பும் இல்லை. இந்தியாவில் உள்ள எந்த சமூக, பொருளாதார அறிஞரும் இதைப்பற்றி கேள்விப்பட்டதுகூட இல்லை. 1995 வரை.

பயணக்கட்டுரையாளரும் லண்டன் நூலக ஆவணப்பராமரிப்பாளருமான ராய் மாக்ஸ்ஹாம் 1995 இறுதியில் லண்டனில் ஒரு பழைய புத்தகக் கடையில் மேஜர் ஜெனரல் டபிள்யூ எச். ஸ்லீமான் என்ற பிரிட்டிஷ் வீரரின் நினைவுக்குறிப்புகளை வாங்கினார். 1893ல் பிரசுரிக்கப்பட்ட நூல் அது. ஸ்லீமான் 1850களில் பிரிட்டிஷ் இந்தியாவில் ராணுவ அதிகாரியாகப் பணியாற்றி அன்றைய இந்தியா முழுக்க பயணம் செய்திருக்கிறார். அவரது பயணக்குறிப்புகளில் மன்னர்கள், சிற்றரசர்கள், கொள்ளையர்கள், புனித நகரங்கள், கோயில்கள் பற்றிய சித்தரிப்புடன் அன்றைய பிரிட்டிஷ் இந்திய அரசின் வரிவசூல் முறைகளைப்பற்றிய குறிப்பும் இருந்தது. அதில் ஸ்லீமான் இந்த மாபெரும் உயிர்வேலியைப்பற்றிச் சொல்கிறார்

ராய் மாக்ஸ்ஹாம் ஆச்சரியம் கொள்கிறார். இது கற்பனையா என ஐயம் அடைகிறார். பிரிட்டிஷ் ஆவணங்களை ஆராய்கிறார். பெரும்பாலான குறிப்புகள் 1870களுக்குப் பின்னால் வந்தவை. அவற்றில் வேலியைப்பற்றிய தகவல்களே இல்லை. லண்டனில் முறையாகப் பராமரிக்கப்படும் பிரிட்டிஷ் ஆவணக்காப்பகங்களில் பொறுமையாகத் தேடுகிறார். ராய் மாக்ஸ்ஹாம் தொழில்முறையாக ஒரு அரிய ஆவணக்காப்பாளர் என்பது அவருக்கு உதவுகிறது. கடைசியில் அந்த வேலிபற்றிய சர்வே தகவல்களும் அதை நிறுவிப் பராமரித்ததைப்பற்றிய கணக்குவழக்குகளும் அவருக்குக் கிடைக்கின்றன.

இந்த வேலியை பிரிட்டிஷ்காரர்களின் ஒரு கிறுக்குத்தனம் என முதலில் நினைக்கும் ராம் மாக்ஸ்ஹாம் மெல்லமெல்ல அதன் பின்னால் உள்ள கொடூரமான சுரண்டலைக் கண்டுகொள்கிறார். மிக விரிவான ஆய்வுகள் வழியாக அதை அவரது இந்தியாவின் மாபெரும் வேலி என்ற பயண நூலில் சித்தரித்துக்காட்டுகிறார்.

Hedgemapweb.jpg

சுங்கவேலி 1870

இந்த வேலி முழுக்க முழுக்க உள்நாட்டு உப்புவணிகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது. இது சுங்கவேலி [Customs hedge] என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. அன்றைய பிரிட்டிஷ் இந்திய அரசின் முக்கியமான வருமானமே அவர்கள் உப்புக்கு போட்ட உள்நாட்டுச் சுங்க வரிதான். அதை வசூலிக்கும் பொருட்டு உள்நாட்டு உப்புப்பரிமாற்றத்தை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பிரிட்டிஷார் இந்தியாவில் அவர்கள் வேரூன்றிய 1803 முதல் இதை உருவாக்க ஆரம்பித்தனர். படிப்படியாக இதை நாற்பதாண்டுக்காலத்தில் கட்டி முடித்தார்கள். 1843ல் இந்த வேலி முழுமையடைந்து உள்நாட்டுச் சுங்கத் துறையின் கட்டுப்பாட்டிற்கு வந்தது.

இதைப் புரிந்துகொள்ள முதலில் இந்தியாவின் நில அமைப்பையும் அதில் உப்புக்கு உள்ள இடத்தையும் புரிந்துகொள்ளவேண்டும். இந்தியாவின் வட இந்தியப்பகுதி மிக அகலமானது. கடலை விட்டு மிகவும் தள்ளி இருக்கக்கூடிய பிரம்மாண்டமான நிலப்பகுதிகளைக் கொண்டது. வடகிழக்கு மாநிலங்கள், இமயமலைப் பகுதிகள், மக்கள் செறிந்த பிகார், உத்தரப்பிரதேசம்,மத்தியப்பிரதேசம் போன்ற பகுதிகள் அனைத்துமே உப்புக்குத் தென்பகுதிக் கடலோரங்களை நம்பி இருந்தன.

உப்பு பெருமளவுக்கு காய்ச்சப்பட்டது குஜராத்தில் கட்ஜ் வளைகுடா பகுதியில். இப்பகுதியில் கடலில் பெரிய ஆறுகள் கலப்பதில்லை. ஆகவே உப்புச்செறிவு அதிகம். வருடத்தில் பெரும்பாலான மாதங்களில் உக்கிரமான வெயிலும் அடிக்கும். சாம்பார் ஏரி போன்ற உப்பு ஏரிகள் கோடைகாலத்தில் தானாகவே வற்றி உப்புவயல்களாக ஆகும். ஆகவே பாரம்பரியமாக குஜராத்தில் இருந்து உப்பு வட மாநிலங்களுக்குச் சென்றது. அதற்காக நீண்ட உப்புப்பாதைகள் இருந்தன. மகாராஷ்டிரா ஒரிசா கடலோரங்களிலும் உப்பு பெருமளவுக்கு விளைந்தது. அவையும் கரைவழியாக வடமாநிலங்களுக்கும் இமய மலைப்பகுதிகளுக்கும் சென்றன.

சரி அப்படியென்றால் எதற்கு காஷ்மீர் வரை வேலி? இன்று பாகிஸ்தானில் இருக்கும் இமயமலைப்பகுதிகளில் உலகின் மிகப்பெரிய உப்புமலைகள் உள்ளன. மிகச்சுத்தமான இந்த உப்பு மிகமிக மலிவானதும்கூட. திபெத் உட்பட இமயமலைப்பகுதிகளுக்கு நூற்றாண்டுகளாக இந்த உப்புதான் சென்றுகொண்டிருந்தது. அதைத் தடுக்கவே அங்கே வேலி அமைக்கப்பட்டது.

உப்பு அவ்வளவு முக்கியமான வணிகப்பொருளா என்ன? ஆம் என்கிறார் ராய் மாக்ஸ்ஹாம். அன்றைய இந்தியாவில் பெரும்பாலான கிராமங்கள் தன்னிறைவு கொண்டவை. மக்களுக்குத் தேவையான தானியங்கள் காய்கறிகள் நெய் போன்ற நுகர்பொருட்கள் துணிகள் ஆயுதங்கள் எல்லாமே கிராமசமூகங்களுக்குள்ளாகவே உற்பத்திசெய்யப்படும். வெளியே இருந்து வந்து சேரக்கூடிய ஒரே உற்பத்திப்பொருள் என்பது உப்புதான். ஆகவே அதுவே அன்றைய இந்தியாவின் மிக முக்கியமான வணிகம்

உப்பு அந்த அளவுக்கு இன்றியமையாததா? இன்று உப்பு ஒரு முக்கியமான தேவையாகக் கருதப்படுவதில்லை. ஏனென்றால் இன்று பதப்படுத்தியும் சேமித்தும் உண்ணப்படும் பல்வேறு உணவுப்பொருட்களில் உப்பு நிறையவே இருக்கிறது. புலாலில் உப்பு உண்டு. ஆனால் அன்றைய இந்தியாவில் விவசாயியின் சாதாரண உணவு தானியமும் காய்கறிகளும் மட்டுமே. அவன் உப்பு சேர்த்துக்கொண்டே ஆகவேண்டும். மேலும் வியர்த்து வழிய வெயிலில் நின்று வேலைசெய்யும் இந்திய விவசாயி பெருமளவு உப்பை இழக்கிறான். அவன் உப்பு இழப்பை அவன் உணவு மூலம் ஈடு கட்டியாகவேண்டும். அத்துடன் வட இந்திய நிலங்களில் உப்பு குறைவு. ஆகவே மிருகங்கள் மண்ணைநக்கி உப்பை எடுத்துக்கொள்ளமுடியாது. அவற்றுக்கும் உப்பு கொடுக்கப்பட்டாகவேண்டும்.

வட இந்தியாவின் மக்கள்தொகையை வைத்துப்பார்த்தால் எந்த அளவுக்கு உப்பு தேவைப்படும் என்று பார்க்கலாம். அந்த அளவுக்கான உப்பு எவ்வளவு பெரிய வணிகம்! அந்த உப்பு குஜராத் அல்லது ஒரிசாவில் இருந்து மாட்டுவண்டிகளிலும் கோவேறு கழுதைகளிலும் தலைச்சுமைகளிலுமாக பல ஆயிரம் கிலோமீட்டர் தாண்டி வந்துசேரும்போது அதன் விலை எத்தனை மடங்கு பெருகியிருக்கும் என ஊகிக்கலாம். பிகாரில் ஒரு விவசாயி சராசரியாக ஒரு மாதம் ஈட்டும் வருமானம் ஒரு வருடத்து உப்புச்செலவு என்று பல குறிப்புகளைக் கொண்டு கணித்துச் சொல்கிறார் ராய் மாக்ஸ்ஹாம். மலைப்பகுதி மக்கள் தானியத்துக்குச் செலவழிக்கும் அதே அளவு பணத்தை உப்புக்குச் செலவிட்டிருக்கிறார்கள்!

உப்பு மிகமிக அருமையான பொருளாக இருந்திருக்கிறது. பல இடங்களில் அது நாணயமாகக் கூட புழங்கியது. உப்பு மழைக்காலம் முழுக்க சேமிக்கப்பட்டாகவேண்டும் என்பதனால் உப்பு கைமாற்றாக அளிக்கப்படுவது பெரும் உதவியாக இருந்திருக்கிறது. உப்புமேல் சத்தியம் செய்வது மிக அழுத்தமானதாகக் கருதப்பட்டிருக்கிறது.

உப்பு அத்தனை அவசியப்பொருளா என்ன? ஒருநாளைக்குக் குறைந்தது 1500 முதல் 2500 மில்லிகிராம் சோடியம் மனித உடலுக்குத் தேவை. அதிகமாக உப்பு உடலை விட்டு வெளியேறும் இந்தியா போன்ற கோடைநிலங்களில் வாழும் மனிதனுக்குக் குறைந்தது இரண்டு அவுன்ஸ் உப்பு தேவை என்று ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடுகிறார். அந்த உப்பு அவனால் உண்ணப்படாவிட்டால் Hyponatremia என்ற நோய்க்கு அவன் ஆளாகிறான். குழந்தைகள் மிக அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். உப்புக்குறைவு நோயின் அடிப்படையான கோளாறு என்னவென்றால் உப்புக்குறைவால்தான் அந்நோய் உருவாகிறது என்று நோயாளியோ மருத்துவனோ உணர முடிவதில்லை என்பதே

உப்பு உடலின் திரவச்சமநிலையை தக்கவைத்துக்கொள்ள இன்றியமையாதது. உப்பு குறையும்போது ரத்தம் கனமிழக்கிறது. ஆகவே உடல் நீரை வெளியேற்றுகிறது. ஆகவே ரத்த அழுத்தம் குறைகிறது. நோயாளிக்கு தலைச்சுற்றும் வாந்தியும் சமநிலை இழப்பும் ஏற்படுகிறது. மூச்சுத்திணறலும் மயக்கமும் உருவாகிறது. இந்நிலை தொடர்ந்தால் மரணம் நிகழ்கிறது. பட்டினியால் வாடிய இந்தியாவில் பெரும்பாலும் உப்புகுறைவு நோய் பட்டினியின் விளைவான பலமிழப்பாகவே கருதப்படுகிறது. ஆகவே அது எளிதாக உயிரைக்குடிக்கிறது

இந்த பிரம்மாண்டமான வணிகத்தை முகலாயர்களும் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். ஆனால் அவர்களின் வரி மேலோட்டமானது, குறைவானது. ஒட்டுமொத்தமாக உப்புப்பரிமாற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர அவர்கள் முயலவில்லை. பிரிட்டிஷார் அதை சுங்கவேலி வழியாக சாதித்தார்கள்

ராய் மாக்ஸ்ஹாம் இது உருவான வரலாற்றை சொல்கிறார். ஆரம்பத்தில் பிரிட்டிஷார் வங்காளத்தைத்தான் கைப்பற்றினார்கள். வங்காளத்தில் உப்புக்காய்ச்சுவது மிகக் கடினமானது. கங்கை கொண்டு வந்து கொட்டும் நல்ல நீரின் காரணமாக அங்கே நீரில் உப்பு குறைவு. ஆகவே நீரை வற்றச்செய்து மேலும் விறகால் எரித்து சுண்டச்செய்துதான் உப்பை எடுப்பார்கள். இந்த உப்பு மிக மிகக் கீழான நிலையில் வாழ்ந்த மக்களால் தயாரிக்கப்பட்டது. உப்பின் விலையும் அதிகம்.

இந்த உப்பு காய்ச்சப்பட்டதாகையால் வங்காள பிராமணர்கள் இதை உண்ண மாட்டார்கள். சமைக்கப்பட்ட உணவுக்குச் சமம் அது. ஆகவே சூரிய ஒளியில் சுண்டிய உப்பு ஒரிசாவில் இருந்து வந்தது. பிளாசி போரில் கிளைவ் வங்காள நவாபை வென்று வங்கத்தைப் பிடித்ததும் வங்காளம் முழுக்க விரிவான வரிவசூல் முறையை நிறுவினார். உப்புக் காய்ச்சும் ஆலைகளுக்கு வரியைப் பலமடங்காக ஆக்கினார். அது முக்கியமான வருமானமாக ஆகியது

இந்த உப்பு வரி உப்பின் விலையை அதிகரித்து ஒரிசாவில் இருந்து வரும் உப்பின் விலையை விட அதிகமாகியது. ஆகவே ஒரிசாவில் இருந்து வரும் உப்புக்குக் கடும் வரி போடவேண்டியிருந்தது. அவ்வாறுதான் ஒரிசா வங்க எல்லையில் மகாநதி ஓரமாக முதலில் சுங்கச்சாவடிகளை அமைக்க ஆரம்பித்தார்கள் பிரிட்டிஷார்.ஒரிசாவின் சோனாப்பூர் என்ற ஊரில் முதல் சாவடி அமைந்தது. அதில் இருந்து சந்திரபூர் வரை சுங்கத்தடுப்புக்கோடு உருவாக்கப்பட்டது.

மெல்லமெல்ல பிரிட்டிஷாரின் அதிகாரம் பிகாருக்கும் உத்தரபிரதேசத்துக்கும் மத்தியப்பிரதேசத்துக்கும் பரவியது. ஆகவே சுங்கச்சாவடிகளை பர்ஹான்பூர் வரை நீட்டித்தார்கள். உப்புச் சுங்கத்தின் பெரும் லாபத்தை பிரிட்டிஷார் கண்டுகொண்டார்கள். அதற்காகப் பெரும்பணத்தை முதலீடுசெய்ய முன்வந்தார்கள். மத்தியப்பிரதேசத்தின் விரிந்த பொட்டல்நிலத்தை சுங்கக் கண்காணிப்புக்குள் வைத்திருப்பது கடினமாக இருந்தது. ஆகவே ஒரு பெரிய வேலியை உருவாக்கும் எண்ணம் வந்தது. இவ்வாறுதான் பர்ஹான்பூர் முதல் சுங்க வேலி தோன்றியது.

இதே காலகட்டத்தில் 1823ல் ஆக்ரா சுங்க ஆணையர் ஜார்ஜ் சாண்டர்ஸ் என்பவர் கங்கை யமுனைக்கரையிலூடாக மிர்சாப்பூர் முதல் அலஹாபாத் வரை ஒரு பெரிய வேலியை அமைத்தார். அலஹாபாதில் இருந்து நேப்பாளம் வரையில் அங்கிருந்து சிந்து வரையில் 1834ல் ஜி.எச்.ஸ்மித் ஒரு வேலியை அமைத்தார். தொடந்து சாலைகளில் சுங்கச்சாவடிகளை அமைத்து அந்தச்சாவடிகளை வேலியால் இணைத்துக்கொண்டே சென்றார்கள். இவ்வ்வாறுதான் சுங்கவேலி படிப்படியாக உருவாகிவந்தது.

book24.jpg

ஆரம்பத்தில் காய்ந்தமரத்தாலும் மூங்கிலாலும் ஆன வேலியைத்தான் கட்டினார்கள். வேலிக்கு இருபக்கமும் ஆழமான கிடங்கு வெட்டப்பட்டது. ஆனால் அந்த வேலியைப் பாதுகாப்பது கடினமாக இருந்தது. வருடம்தோறும் அது சிதல்பிடித்தும் தீப்பிடித்தும் அழிந்தது. அதற்காக நிறைய பணம்செலவிட வேண்டியிருந்தது. அப்போதுதான் 1867ல் சுங்க ஆணையராகப் பதவிக்கு வந்தார் ஹ்யூம்.மூன்றாண்டுகள் அப்பதவியில் இருந்த அவர் இந்தவேலியைப் பராமரிப்பதற்கான செலவைக் கணக்கிட்டு ஆராய்ந்தார். ஹ்யூம் சுங்கவேலியை உயிர்வேலியாக அமைப்பது ஆரம்பத்தில் செலவேறியதென்றாலும் சில வருடங்களில் பராமரிப்பே தேவையற்ற ஒன்றாக அது ஆகிவிடுமெனக் கண்டுபிடித்தார். மிக எளிதில் உயரமாக வளரும் முள்மரங்களைக் கண்டுபிடித்து அவற்றை நட்டு அந்த உயிர்வேலியை அவர்தான் உருவாக்கினார்.

435px-A_O_Hume.jpg

ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம்

ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் இந்தியாவின் முதல் சுதந்திர எழுச்சியான சிப்பாய்க் கலகத்தை ஒடுக்குவதில் பெரும்பங்காற்றி முக்கியமானவராக ஆனவர். அவரே இந்தியா மீதான பிரிட்டிஷாரின் பிரம்மாண்டமான முதல் சுரண்டலமைப்பைக் கட்டி எழுப்பினார் என்பது மிக ஆச்சரியமான விஷயம். ஏனென்றால் அவர் பின்னாளில் இந்திய தத்துவ ஞானத்திலும் ஆன்மீகத்திலும் ஈடுபாடுகொண்டவராக ஆனார். இந்தியர்களுக்கு அதிகமான தன்னுரிமை தேவை என வலியுறுத்தினார். நிர்வாகத்தில் இந்தியர்களுக்கு அதிக இடம் அளிக்கவேண்டுமென வாதாடி அதற்காக ஓர் அமைப்பை உருவாக்க முன்கை எடுத்தார். காந்தியின் தலைமையில் பின்னாளில் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த காங்கிரஸ் 1885ல் அவ்வாறுதான் உருவானது.

ராய் மாக்ஸ்ஹாம் அளிக்கும் தகவல்கள் நம்மை ஆழமான மனச்சோர்வில் கொண்டுசென்று தள்ளுபவை. முதல் விஷயம் இந்தியாவில் உருவாகிவந்த பிரிட்டிஷ் ஆட்சி அதன் ஆரம்பகட்டம் முதல் உச்சகட்ட ஊழலையே நிர்வாகத்தின் இயல்பான வழிமுறையாகக் கொண்டிருந்தது என்பதை சித்தரித்துக் காட்டுகிறார் ராய் மாக்ஸ்ஹாம். கிளைவ் இந்தியாவை வென்றதே ஊழல் மூலம். சாதாரண அலுவலக குமாஸ்தாவாக இந்தியா வந்த அவர் அந்த ஊழலில் சம்பாதித்த பணத்தால் பிரிட்டனின் முதல் பத்துப் பணக்காரர்களில் ஒருவராக ஆனார். அன்றைய ஒவ்வொரு பிரிட்டிஷ் அதிகாரியும் மிகக்குறுகிய காலகட்டத்தில் உச்சகட்டமாக ஊழல் செய்து பணக்காரர்களாக ஆனார்கள்

அத்துடன் கீழ்மட்டத்தில் ஊழியர்களுக்கு மிகமிகக் குறைந்த ஊதியத்தை அளித்தோ அல்லது ஊதியமே இல்லாமலோ வேலைசெய்ய வைத்தது கம்பெனி. அவர்கள் ஊழல்மூலம் சம்பாதிக்க ஊக்குவித்தது.அதன் மூலம்தான் பல்லாயிரம் இந்தியர்கள் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் பணிபுரிய ஆர்வத்துடன் திரண்டு வந்தார்கள். மிகச்சில வருடங்களிலேயே பிரிட்டிஷார் தங்களுக்குரிய அதிகார வர்க்கத்தை இவ்வாறுதான் உருவாக்கிக்கொண்டார்கள். அதாவது இன்றும் நீடிக்கும் நம் அதிகார வர்க்கமானது ஊழலால் ஊழலுக்காகவே உருவாக்கப்பட்ட ஒன்று

இவ்வாறு ஊழலில் அதிகாரிகள் ஈடுபடும்போது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதுமே அடிமட்ட மக்கள்தான். பிரிட்டிஷாரை ஆதரித்த நிலப்பிரபுக்களுக்கு அதிக இழப்பு ஏற்படாமல் எந்த விதமான ஒருங்கிணைப்பு பலமும் இல்லாமல் இருந்த ஏழைகளுக்கே அதிக பாதிப்புவரும் வகையில் வரிகள் போடப்பட்டன. ஆகவேதான் உப்புவரிக்கு இத்தகைய முக்கியத்துவம் வந்தது. சிலர் இன்று எழுதுவதுபோல பிரிட்டிஷ் ஆட்சி அடித்தள, தலித் மக்களுக்கான விடிவாக இருக்கவில்லை. அவர்களை மிகக்கொடுமையாக ஒடுக்கிப் பேரழிவை நோக்கித் தள்ளக்கூடியதாகவே இருந்தது

பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவாக இந்தியாவில் உருவான மாபெரும் பஞ்சங்களில் இரண்டாவது பெரும் பஞ்சத்தில் 11876–78 ல் கிட்டத்தட்ட ஆறரைக்கோடிப் பேர் இந்தியாவெங்கும் பட்டினிகிடந்து செத்தார்கள். அதாவது அன்றைய இந்திய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட கால்வாசி. அதில் 30 லட்சம்பேர் அன்றைய ஒருங்கிணைந்த வங்க மாநிலத்தில் செத்தார்கள்.உலகவரலாற்றின் மாபெரும் பஞ்சம் இதுவே .இது பஞ்சம் என்பதைவிடப் பொருளியல் சுரண்டல் வழியாக நிகழ்ந்த ஒரு மாபெரும் படுகொலை என்பதை இந்நூல் மிக துல்லியமாகச் சித்தரிக்கிறது. வெள்ளையர்களின்தாசர்களான நம் ஆய்வாளர்கள் மழுப்பிச்செல்லும் இந்த இடத்தில் ஒரு ஆங்கிலேய ஆய்வாளர், பிரிட்டிஷ் இந்தியாவில் அதிகாரியாக இருந்த ஒருவரின் பேரன், இந்த அளவுக்குத் திட்டவட்டமாக எழுதியிருப்பதை ஆச்சரியமென்றே கொள்ளவேண்டும்.

பஞ்சத்தை உருவாக்கிய கூறுகள் என்ன? மாபெரும் வங்கப்பஞ்சம் தொடங்குவதற்கு முந்தைய ஆண்டு 1874, 1875களில் வடஇந்தியா முழுக்க மிகச்சிறந்த விளைச்சல் இருந்தது என பிரிட்டிஷ் ஆவணங்கள் சொல்கின்றன என்கிறார் ஆசிரியர். பொதுவாக இந்தியாவில் ஒரு நல்ல விளைச்சல் ஐந்தாண்டுவரை பஞ்சம்தாங்கும் தன்மை கொண்டது, காரணம் சராசரி இந்தியர்களின் நுகர்வு இன்றுபோலவே அன்றும் மிகமிகக் குறைவு. அப்படியானால் எப்படி பஞ்சம் வந்தது?

இந்தியாவில் போடப்பட்ட ரயில்பாதைகளினால்தான். அந்த ரயில்கள் அனைத்துமே மைய நிலங்களைத் துறைமுகங்களுடன் இணைப்பதற்காகப் போடப்பட்டவை. அவற்றின் வழியாக இந்தியாவின் விளைச்சல் முழுக்கத் திரட்டப்பட்டுக் கப்பல்களில் ஏற்றப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது. உலகமெங்கும் விரிவாக்கப்போர்களில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் முடிவிலாத உணவுத்தேவைக்காக அவை சென்றன. அதற்கு முன்னர் விளைச்சல்கள் அந்தந்த இடங்களிலேயே சேமிக்கப்படும், பஞ்சங்களில் பயன்படுத்தப்படும். ஆனால் ரயில்பாதை காரணமாக உபரியே இல்லாத நிலை வந்தது.

இரண்டாவதாக, பிரிட்டிஷாரின் இந்த மாபெரும் சுங்கவேலி. அந்த வருடங்களில் பஞ்சாபில் மிகச்சிறந்த விளைச்சல் இருந்தது. ஆந்திரம் மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் ஓரளவுக்கு நல்ல விளைச்சல் இருந்தது. அந்த நிலப்பகுதிகளில் இருந்து இந்த வேலி வங்கத்தை முழுமையாகவே துண்டித்துவிட்டது. வங்கத்தில் மக்கள் லட்சகணக்கில் செத்துக்கொண்டிருந்தபோது பம்பாயிலிருந்தும் சென்னையில் இருந்தும் கப்பல்கப்பலாக தானியம் வெளியேறிக்கொண்டிருந்தது

கடைசியாக, ராய் மாக்ஸ்ஹாம் உப்புவரியைச் சொல்கிறார். இந்த பெரும்பஞ்சங்களின்போதுகூட பிரிட்டிஷார் உப்புவரியை நீக்கவில்லை. ஒருங்கிணைந்த வங்கத்திலும் வடகிழக்கிலும் உப்பின் விலை அதிகமாகவே இருந்தது. ஆகவே தானியமே வாங்கமுடியாத மக்கள் உப்பை முழுக்கவே தவிர்த்தார்கள். உப்புக்குறைபாட்டால் கால்நடைகளும் குழந்தைகளும் ஏராளமாக இறந்தார்கள். பின்னாளில் அன்று இறந்தவர்களைப்பற்றிய அறிக்கைகளில் இருந்து பல லட்சம்பேர் உப்புக்குறைபாடு நோயால்தான் இறந்திருக்கிறார்கள் என மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்தார்கள்.

இவ்வாறு இந்த மாபெரும்வேலி இந்தியாவை ஒரு பிரம்மாண்டமான விலங்கால் கட்டிப்போட்டது. இந்தியாமீதான பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கான பொருண்மையான ஆதாரமாக இருந்தது. ஒரு புற்றுநோய்க்கட்டிபோல இந்தியாவின் உயிரைக்குடித்துக்கொண்டிருந்தது இது.

துறைமுகங்களும் ரயில்பாதைகளும் உருவாகி பிரிட்டிஷாருக்கு இந்தியாவின் மீது முழு பொருளியல் கட்டுப்பாடு வந்தபோது எல்லாப் பொருட்களிலும் வரிவிதிக்கமுடிந்தது. ஆகவே உப்புவரி முக்கியத்துவம் இழந்தது. மேலும் தென்னாட்டில் உப்பளங்களின் மீது போடப்பட்ட நேரடி வரிமூலம் சுங்கவேலி அளித்த வருமானத்தை விட அதிகமான வருமானம் வர ஆரம்பித்தது. ஆகவே வைஸ்ராய் லார்ட் லிட்டன் 1879ல் உள்நாட்டு சுங்கவரியை ரத்துசெய்தார். உப்பு மீதான கட்டுப்பாடு நீக்கப்பட்டது. உப்புக்காக உருவாக்கப்பட்ட சுங்கவேலி கைவிடப்பட்டு அழிந்தது.

காந்தியின் உப்புசத்தியாக்கிரகத்தைப்பற்றி நான் நினைவுதெரிந்த நாள் முதலாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். பலகோணங்களில் அது எழுதப்பட்டிருக்கிறது. இந்தியாவில் எரியும் பிரச்சினைகள் பல இருக்க, ஒடுக்குமுறைச் சட்டங்களே பல இருக்க, உப்புக்காய்ச்சுவதற்கு எதிரான சட்டத்தை மீறும் முடிவை எதற்காக காந்தி எடுத்தார்?

அதற்கான விளக்கமாக இன்றுவரை கொடுக்கப்பட்டுவந்ததுது இதுதான். ஆங்கிலேயர் கப்பல்களில் இந்தியாவிற்குத் துணிகளை இறக்குமதி செய்தபோது கப்பல்களின் அடித்தளத்தில் எடைக்காக உப்பு நிரப்பிக் கொண்டு வந்தார்கள். அந்த உப்பு விலை அதிகமானது. அதை விற்பதற்கு உள்ளூர் உப்புக்கு வரிபோட்டு விலையை ஏற்ற வேண்டியிருந்தது. காந்தி ஏன் உப்புசத்தியாக்கிரகத்தை முன்னெடுத்தாரென்றால் இந்தியாவின் எல்லா அடித்தள மக்களுக்கும் பாதிப்பை உருவாக்கக்கூடியதாக உப்புவரி இருந்தது.

அது ஓரளவே உண்மை, அதாவது வங்க அளவுக்கு. வங்காளத்தில் உப்பு ஏற்கனவே விலை அதிகம். தீயில் காய்ச்சப்படாத உப்பை வங்க பிராமணர் விரும்பினார்கள். அந்த இடத்தில் இந்த கப்பல் உப்பை பிரிட்டிஷார் விற்றார்கள். அதனுடன் நிகராக இருப்பதற்காக உள்ளூரில் காய்ச்சப்படும் உப்புக்கு அதிக வரி போட்டார்கள். ஆனால் இந்திய அளவில் இது உண்மை அல்ல.

ஒட்டுமொத்தமாக உப்புசத்தியாக்கிரகத்தின் சமூகவியல் உள்ளடக்கம் என்ன என்பதை சரேலெனத் திறந்து காட்டுகின்றன இந்த நூல் அளிக்கும் தகவல்கள். இந்தத் தகவல்கள் எவையும் இன்றுவரை இந்தியச்சூழலில் பேசப்பட்டதில்லை. உப்புசத்தியாக்கிரகம் காந்தியின் ஒரு காரியக்கிறுக்கு என்றே இங்கே சொல்லப்பட்டுவந்தது. மார்க்ஸிய சோஷலிச அறிஞர்கள் உப்புசத்தியாக்கிரகத்தை காந்தி வாழ்ந்த காலம் முதல் இன்றுவரை கிண்டல் செய்து ஏராளமாக எழுதியிருக்கிறார்கள்.

800px-Marche_sel.jpg

காந்தி தண்டி யாத்திரை

தன் சமகால அரசியல்வாதிகளில் இருந்தும், நம் சமகால ‘அறிஞர்களில்’ இருந்தும் காந்தி எப்படி உண்மையான வரலாற்றறிவால், விரிவான சமூகப்புரிதலால் அவர்கள் எட்டவே முடியாத அளவுக்கு மேலே நின்றார் என்பதைக் காட்டுகிறது இந்தத் தகவல்புலம். அவர்கள் எவருக்கும் அன்றும் இன்றும் இந்திய வரலாற்றில் உப்பு என்றால் என்ன என்று தெரிந்திருக்கவில்லை. பண்பாட்டிலும் சமூக உளவியலிலும் உப்பு வகிக்கும் இடம் புரிபட்டிருக்கவில்லை.

காரணம், அவர்கள் எவருமே அடித்தள மக்களை அறிந்தவர்கள் இல்லை. அடித்தள மக்களுக்காகப் போராடும்போதுகூட அவர்களின் தலைவர்களாகவும் வழிகாட்டிகளாகவும் தங்களை நினைத்துக்கொண்டார்களே ஒழிய அவர்களில் ஒருவராக எண்ணிக்கொள்ளவில்லை. உதாரணமாக மார்க்ஸிய முன்னோடி எம்.என்.ராய் உப்பு சத்தியாக்கிரகம் பற்றி எழுதிய நக்கலும் கிண்டலும் நிறைந்த கட்டுரைகளைச் சுட்டிக்காட்டலாம். எம்.என்.ராய் இந்தியாவில் பயணம்செய்து ஏழை இந்தியர்களை அறிந்தவர் அல்ல. காந்தி என்றும் அவர்களில் ஒருவராக இருந்தார். ஆகவே எம்.என்.ராய்க்குத் தென்படாத உண்மையான மக்கள் வரலாறு காந்திக்கு தெரிந்தது.

மிக நுட்பமான ஒரு விஷயத்தை ராய் மாக்ஸ்ஹாம் சுட்டிக்காட்டுகிறார். இந்தியாவில் எப்போதுமே நிலவரி x உப்புவரி என்ற இருமை இருந்திருக்கிறது. நிலவரி நில உடைமையாளர்களை பாதிப்பது, உப்புவரி அடித்தள மக்களைப் பாதிப்பது. பிரிட்டிஷ் அரசு எப்போதுமே உப்புவரியை அதிகரிக்க இந்திய உயர்குடிகளால் கட்டாயப்படுத்தப்பட்டது.

1930 மார்ச் 12ல் உப்புசத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டபோது அடுத்த தலைமுறை கிராமவாசிகளின் நினைவுகளில்கூட முந்தைய உப்பு ஒடுக்குமுறை இல்லாமலாகியது. அப்போது உப்புமீது இருந்த வரி ஒப்புநோக்க மிகச்சிறியதாக இருந்தது. தென் மாநிலங்களில் அது ஒரு பிரச்சினையாகவே இருக்கவில்லை

ஆனால் மொழியிலும் பண்பாட்டிலும் உப்பு ஆழமாக வேரோடியிருந்தது. உப்பு என்ற சொல்லே ஆழமான உணர்வெழுச்சியை உருவாக்கக்கூடியதாக இருந்தது. அதை காந்தி அம்மக்களிடையே மூன்றாம்வகுப்பு ரயில்பெட்டிகளில் பயணம் செய்து வாழ்ந்து அறிந்திருந்தார். அதை கோகலேயோ, திலகரோ, நேருவோ, சுபாஷ்சந்திரபோஸோ, அம்பேத்காரோ அறிந்திருக்கவில்லை. ஆகவே அவர்களால் உப்புசத்தியாக்கிரகத்தை ஒரு தவிர்க்கமுடியாத கிழவரின் கிறுக்குத்தனம் என்று மட்டுமே புரிந்துகொள்ள முடிந்தது. அது நம்பமுடியாத அளவுக்கு விளைவுகளை உருவாக்கியபோது அதற்கு விளக்கமளிக்கவும் முடியவில்லை

காந்தி உப்புசத்தியாக்கிரகத்தை அறிவித்தபோது அவரைச்சுற்றி இருந்த காங்கிரஸ் தலைவர்கள் நிலவரி அல்லது சுங்கவரிக்கு எதிராக போராடலாம் என்று ஆலோசனை சொல்லி வற்புறுத்தியதை ராய் மாக்ஸ்ஹாம் குறிப்பிடுகிறார். காந்தி அதை நிராகரித்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், உப்புசத்தியாக்கிரகத்தை ஆரம்பிக்கும்படி அவரிடம் சொன்னது அவரது அந்தராத்மா என்பதுதான். நிலம் உயர்சாதி உயர்குடியின் பிரச்சினை. உப்பு அடித்தள மக்களின், தலித் மக்களின் பிரச்சினை என காந்தி அறிந்திருந்தார். அவரது அந்தராத்மாவை அன்றும் இன்றும் கிண்டல்செய்யும் எந்த அறிஞனை விடவும் அந்த அந்தராத்மாவுக்கு வரலாறு தெரிந்திருந்தது.

இந்தியாவின் கடந்த அறுபதாண்டுக்கால அறிவுலகச் செயல்பாடுகளில் பல்லாயிரம் நூல்களை எழுதித்தள்ளிய நம் சமூகவியல் பேராசிரியர்களின் ஆய்வுகளின் அடித்தளமின்மையை அதிர்ச்சியளிக்கும்படி அம்பலப்படுத்துகிறது இந்நூல். 1996ல், இந்தியா சுதந்திரம் பெற்று கிட்டத்த அரைநூற்றாண்டு கழித்து, உப்புசத்தியாக்கிரகம் நிகழ்ந்து முக்கால்நூற்றாண்டு கழித்து, இந்தியா வரும் ராய் மாக்ஸ்ஹாம் இங்குள்ள வரலாற்று அறிஞர்களை ,சமூக ஆய்வாளர்களை, அரசியல் விமர்சகர்களை சந்தித்து இந்த வேலிபற்றிக் கேட்கிறார். எவருக்கும் எந்த அறிதலும் இல்லை என்பதைக் கண்டு ஆச்சரியமடைகிறார்.

எப்படி இருந்திருக்கும்? இங்கே நம் கல்விப்புலம் சார்ந்து ஆராய்ச்சி செய்பவர்களுக்கு மட்டுமே பயணங்கள்செய்யவும் ஆவணங்களை ஆராயவும் வசதி உள்ளது. அவர்களுக்கு மேலைநாட்டு ஆய்வுகளை மேற்கோள் காட்டுவது மட்டுமே உண்மையான நவீன ஆய்வு என்ற ஆழமான நம்பிக்கை இருக்கிறது. ஓரளவு முறைமையுடன் ஆராய்பவர்கள் மேலைநாட்டுப் பல்கலைகளில் ஆய்வுப்பட்டம் பெற்றவர்கள். அவர்கள் அனேகமாக அனைவருமே இந்தியா என்ற பிற்பட்ட நிலப்பரப்பை நவீன தேசமாகக் கட்டியவர்கள் ஆங்கிலேயர் என்ற கொள்கையைக் கிட்டதட்ட மதநம்பிக்கை போலப் பெற்றுக்கொண்டுதான் இங்கே வருகிறார்கள்.

ராய் மாக்ஸ்ஹாமின் நூல் மிகசுவாரசியமான வாசிப்புத்தன்மை கொண்டது. உண்மையில் இது ஒரு பயணநூல். சுங்கவேலியைத் தேடி இந்தியாவுக்கு வரும் ராய் மாக்ஸ்ஹாம் அதன் எச்சங்களைத் தேடி இந்தியாவுக்குள் பயணம்செய்கிறார். எருமையின் மூச்சு பிடரியில் பட யமுனைக்கரை கிராமத்தின் கயிற்றுக்கட்டிலில் படுத்துத் தூங்குகிறார். முன்பதிவில்லா ரயில் பெட்டிகளில் பிதுங்கி வழிந்து பயணம் செய்கிறார். ஓம்காரேஸ்வரிலும் காசியிலும் வேலியைக் காட்டித்தரும்படி சிவபெருமானிடம் வேண்டிக்கொள்கிறார். அது கொஞ்சம் அதிகமோ என எண்ணித் தன் குடும்பத்தைக் காக்கும்படி வேண்டிக்கொள்கிறார்.

பல விஷயங்கள் புன்னகை வரவழைக்கின்றன. ராய் மாக்ஸ்ஹாம் இந்தியாவில் முதல்வகுப்பு கூபேயில் பயணம்செய்பவர்களே நாகரீகமற்ற அகங்காரம்கொண்ட மக்கள் என நினைக்கிறார். செல்பேசியில் கத்திக்கொண்டே இருக்கிறார்கள். வெளியே வேடிக்கை பார்க்கவும் முடிவதில்லை. இரண்டாம் வகுப்பில் நட்பான சுமுகமான சூழல் உள்ளது, என் அனுபவமும் அதுவே. அவரது பயணப்பதிவுகளில் உள்ள மெல்லிய வேடிக்கை இந்நூலை சுவாரசியமான அனுபவமாக ஆக்குகிறது.

ராய் மாக்ஸ்ஹாம் கடைசியில் சம்பலில் அந்த வேலியின் எஞ்சிய பகுதியயைக் கண்டுகொள்கிறார். முன்னாள் கொள்ளையரும் இந்நாள் அனுமார்கோயில் பூசாரியுமான ஒருவரின் உதவியால். பிற எல்லா இடங்களிலும் நவீனமயமாக்கல் வேலியை அழித்துவிட்டது. அதற்குக் காரணம் மிக எளிது. இந்த வேலியை ஒட்டியே பெரும்பாலும் சாலைகள் உருவாகி வந்தன. சாலைகள் விரிந்து வேலியை விழுங்கிவிட்டன.

நம்மை நாமே ஆராயத்தூண்டும் முக்கியமான நூல் இது. சுங்கவேலி நம் முதுகின் ஒரு சாட்டைத்தழும்பு. அது மறைந்தாலும் நம் மொழியில் கனவில் மிஞ்சியிருக்கிறது

http://www.jeyamohan...5L9IpU.facebook

சிங்களவனுக்கும் எங்களுக்கும் இடையில் இப்படி ஒரு வேலி அமைக்கனும் முதலில்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வீணா இணைப்பிற்கு, பல தகவல்களை இன்றுதான் இந்த கட்டுரை மூலம் அறிய கூடியதாக இருந்திச்சு, அவர்களின் போர் வெறிக்காக ஆறு கோடி மக்களின் உயிர்

கிளியவன் - முள் வேலி போட்டால் இரண்டு பக்கத்தில் இருந்தும் ஜோடிகள் ஓதுங்கிவிடுவினம், முதலைகளுடன் கூடிய கணவாய் அமைத்தால் தான் நல்லது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.