Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழம்: சின்னச் சின்னக் கதைகள்: தீபச் செல்வன்

Featured Replies

தீபச்செல்வன்

dheepa%20selvan.jpg

கிரிஸ் மனிதர்கள் என்கிற இரத்த பூதங்கள்

இலங்கையின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் சிறுபான்மை இன மக்களை அச்சுறுத்தும் கிரிஸ் மனிதர்கள் எனப்படும் அரச பூதங்கள் நடமாடி மக்களின் இயல்பு வாழ்வைத் தின்று வருகின்றன. முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர் இந்த பூதங்கள் இரத்தம் குடிக்கும் நோக்குடன் அப்பாவி மக்களை இலக்கு வைத்துள்ளன. யுத்தம் மூலம் லட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்களைக் கடித்துக் குதறி சனங்களின் இரத்தத்தை இந்தப் பூதங்கள்தான் குடித்தன என்பதை நிரூபிக்கும் விதமாகத் தொடர்ந்து இரத்தப்பசியுடன் அலைகின்றன. உலகம் மிக நவீன கண்டுபிடிப்புகளால் வளர்ந்துள்ள நிலையில் அதன் செல்வாக்குடன் ஈடுகொடுக்கத்தக்க நிலையில் நகரும் இலங்கை நாட்டில் மனிதர்களைக் கடித்து இரத்தம் குடிக்கும் பூதங்கள் இருக்கின்றன என்பதை மிகப் பகிரங்கமாக இவை வெளிப்படுத்துகின்றன. மனித உயிருக்கும் இரத்தத்திற்கும் எந்த மதிப்புமில்லாத நாடு என்பதையும் அதை இப்படியும் பலி எடுப்பார்கள் என்பதையும் கிரிஸ் மனிதன் என்கிற இரத்த பூதங்களின் நடமாட்டங்கள் வெளிப்படுத்துகின்றன.

முள்ளிவாய்க்காலில் ஈழத்து மக்களைப் பலியெடுத்த மகிந்தராஜபக்சவுக்கு இரண்டாயிரம் பெண்களின் மார்புகள் அறுத்து சிந்தப்படும் இரத்தம் பரிகாரமாகத் தேவை என்ற அடிப்படையில் மகிந்தவின் ஆலோசனைக்கு இணங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச இராணுவத்தினரை கிரிஸ் மனிதர்களாக இறக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. இரத்தப் பூதங்கள் விவகாரத்தை திருடர்கள் என்றும், பல்வேறு தேவையுடையோர் என்றும் வதந்திகள் என்றும், அரசத் தரப்பால் கூறி மழுப்பப்பட்டது. மக்கள் வெவ்வேறு பாகங்களில் கிரிஸ் மனிதர்களைப் பிடித்து அடித்துள்ளார்கள். சிறைப்பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்கள். சிலர் மக்களால் கொல்லப்பட்டுமுள்ளனர். கிரிஸ் மனிதர்கள் ஏன் இறக்கி உலாவவிடப்படுகிறார்கள் என்று பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. ஜனாதிபதிக்கு இரண்டாயிரம் பெண்களின் மார்புகள் அறுத்து இரத்தம் சிந்த வேண்டும் என்று ஜோதிடரால் சொல்லப்பட்ட கருத்தை நிரூபிக்கும் விதமாக அரச அமைச்சர் பௌசி ஜனாதிபதிக்காகப் பெண்கள் இரண்டாயிரம் மார்புகளை மட்டுமல்ல, இலட்சக்கணக்கான மார்புகளையும் தியாகம் செய்வார்கள் என்றும், அப்படித் தியாகம் செய்யவேண்டும் என்றும் கிழக்கில் நடந்த ஒரு கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் சிறுபான்மை இன மக்களை ஒடுக்கி அவர்களின் சுதந்திரத்தை ஒழித்துள்ள அவசரகாலச் சட்டத்தைப் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக அடுத்த மாதம் முதல் நிறுத்தப் போவதாக அரசு அறிவித்திருந்தது. அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவது நாட்டின் ஜனநாயகப் போராட்டங்களுக்கும் சிறுபான்மை இன மக்களின் உரிமை தொடர்பான செயற்பாடுகளுக்கும் இடமளிக்கப் போகிறது என்ற பயம் அரசுக்கு இருக்கிறது. இலங்கை நாட்டில் மக்களுக்கு அச்சுறுத்தல்களும் பாதுகாப்பின்மையும் இருக்கிறது என்பதையும் கலவரங்களும் முரண்பாடுகளும் ஏற்படுகின்றன என்பதையும் காட்டி அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்து நீடிக்கவும் மர்மமான இந்த நடவடிக்கைகளை அரசு திட்டமிட்டு மேற்கொள்ளலாம் என்ற சந்தேகங்களும் கிளம்பியுள்ளன. எப்படியிருப்பினும் இரத்தம் குடிக்கிற பூதங்களுக்குப் பஞ்சமில்லாத நாடு என்பதையும் சிறுபான்மை இனங்களை எல்லா விதத்திலும் ஒடுக்கி அழித்து அச்சுறுத்தும் அரசு என்பதையும் கிரிஸ் மனிதர்கள் என்கிற அரசின் பூதங்கள் மிக வெளிப்படையாக காட்டித் திரிகின்றன. இப்பொழுது வடக்கிலும் கிரிஸ் மனித பூதங்கள் நுழைந்துள்ளன. இதனால் முழத்திற்கு முழம் காவலரண்களும் இராணுவத்தினரின் பாதுகாப்பு நடவடிக்கைகளும் அவசியமானது என்று அரசாங்கம் சொல்லப் போகிறது.

கடலில் மிதக்கும் கால்களில்லாத மனிதர்

DSC08924.jpgயுத்தத்தில் கால் இழந்தவர்களின் கதைகள் மிகவும் துன்பம் நிறைந்தவை. கால் இருந்தபொழுது துள்ளித் திரிந்த பலர் யுத்தத்தில் கால் இழந்து முடங்கி வாழ்கையில் அதனால் ஏற்படும் மனநெருக்கடி மிகக் கொடுமையானது. பொய்க்கால்களை மாட்டிக் கொண்டு கால்களை இழுத்து இழுத்து நடப்பவர்களைத் தினமும் ஈழத்து நிலத்தில் பார்க்க முடியும். யுத்தத்தில் பலர் இரண்டு கால்களையும் இழந்திருக்கிறார்கள். இரண்டு கால்களையும் இழந்தவர்களில் இரண்டு தங்கராசாக்களும் என்னை அதிகம் பாதித்தவர்கள். முரசுமோட்டையில் வசிக்கும், இரண்டு கால்களையும் இழந்த தங்கராசாவுக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். உருத்திரபுரம் எள்ளுக்காட்டில் வசிக்கும் தங்கராசாவும் இரண்டு கால்களையும் இழந்து விட்டார். முதலில் முரசுமோட்டை தங்கராசாவைப் பார்த்தேன். பின்னர் இன்னொரு நாளில் எதேச்சையாக ரிப்போர்ட்டுக்காக உருத்திரபுரம் சென்ற வேளை அதே பெயரைக் கொண்டு இரண்டு கால்களையும் இழந்த இன்னொரு தங்கராசாவைப் பார்த்தேன். இருவரது முக ஜாடைகளும் ஒரேவிதமாகவே இருந்தன. எள்ளுக்காட்டு தங்கராசாவுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். இரு தங்கராசாக்களும் செல் தாக்குதலில் கால்களை இழந்திருக்கிறார்கள். எள்ளுக்காட்டு தங்கராசாவின் மனைவி செல்தாக்குதலில் கணவர் தங்கராசா கால்களை இழந்தபொழுது கை விரல்களை இழந்திருக்கிறார்.

முல்லைத்தீவில் பார்த்த இரண்டு கால்களையும் இழந்த மணியம் கடலில் மிதந்து பறப்பது முல்லைத்தீவு நகரத்தில் மக்களால் ஒரு சாதனைக் கதையாகப் பேசப்படுகிறது. கடல் பயணம் என்பது சாதாரணமானதல்ல. இரண்டு கால்களும் யுத்தத்தில் முற்றாகத் துண்டிக்கப்பட்ட நிலையில் அவர் மீன்பிடித் தொழிலுக்காக படகில் பயணம் செய்வதைப் பலரும் சாதனையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். கால் துண்டாடி இருப்பது என்பது வேரறுந்த நிலையைப் போலானது. நிலத்தில் எத்தனை கனவுகளுடன் கால்களை ஊன்றி ஓடி ஆடித் திரிந்த அவர் இன்று ஒரு அடி எடுத்து வைத்து நடமாட முடியாத நிலையில் வேர் அறுத்து தூக்கி எறியப்பட்டிருக்கிறார். நடப்பது என்பது அவர்களின் ஒரு கனவாக மாறி விடுகிறது. ஆனாலும் அவரது பயணத்தை யாராலும் நிறுத்திவிட முடியவில்லை. மணியம் தரையைவிட கடலில் நடப்பதிலேயே தன் காலத்தைச் செலவிட்டவர். அவர் இப்பொழுதும் வேகம் குறையாமல் கடலில் மிதந்து செல்கிறார். இழந்தவைகளை உழைத்துப் பெற முடியும் என்ற நம்பிக்கை அவரது முகத்தில் தெரிகிறது. நம்பிக்கையையும் மனதையும் எப்பொழுதும் கொல்ல முடியாது. இரண்டு கால்களை இழந்த பிறகும் பொய்க்கால்களை அணிந்து ஈழ நிலத்தில் நடந்து பயணிப்பவர்களும் இருக்கிறார்கள்.

ஹெகலிய கொண்டு வந்த இளநீர்

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘உதயன்’ பத்திரிகையின் செய்தியாசிரியர் ஊடகவியலாளர் குகநாதன் மர்ம நபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தார். மிகவும் பாதிப்படைந்த நிலையில் யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். வடக்கு, கிழக்கிலும் இலங்கையிலும் ஊடக சுதந்திரம் தொடர்ந்து மறுக்கப்பட்ட பொழுதும் ஊடகங்கள் எதிர் நீச்சல் போட்டுப் போராடி இயங்கிக் கொண்டுதானிருக்கின்றன. அதிலும் யாழ்ப்பாணப் பத்திரிகைகள் மிக இக்கட்டான கால கட்டங்களையும் நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் தாக்குதல்களையும் எதிர்கொண்டிருக்கின்றன. உதயன் பத்திரிகை பல ஊடகவியலாளர்களையும் ஊழியர்களையும் இழந்து தாக்குதலுக்குள்ளான பத்திரிகை. ஆனால் தொடர்ந்தும் ஈழத்து மக்களின் போராட்டத்தை வெளிப்படுத்தி வந்திருக்கிறது. உதயன் பத்திரிகையின் இக்கால கட்டங்களில் ஊடகவியலாளர் குகநாதன் மிகுந்த அர்ப்பணிப்போடு உழைத்துச் செயற்பட்டவர்.

ஊடகவியலாளர் குகநாதன் தாக்கப்பட்டபொழுது பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல குறிப்பிட்ட கருத்துக்கள், ஊடகவியலாளர்களைக் கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. "ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டால் நான் என்ன செய்வது? வேண்டுமானால் ஒரு இளநீருடன் வைத்தியசாலைக்குச் சென்று அவர்களைப் பார்வையிட முடியும்" என்று ஹெகலிய குறிப்பிட்டார்.

ஊடகச் சுதந்திரம் தொடர்பில் பொறுப்பற்ற விதமாகவும் அடக்குமுறைத்தனமாகவும் எச்சரிக்கைத்தனமானதாகவும் ஹெகலியவால் தெரிவிக்கப்பட்ட இந்தப் பேச்சு அனைத்து ஊடகவியலாளர்களையும் கோபத்திற்கு உள்ளாக்கியது. அத்தோடு பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச ஊடகவியலாளர் குகநாதன் தாக்கப்பட்டது ஒரு அற்ப விடயம் என்று சாதாரணமாக மதிப்பிட்டுப் பேசியிருந்தார். கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் ஊடகம் ஒன்று ஹெகலியவின் இந்தப் பேச்சுக் குறித்து ஒரு கேலிச்சித்திரத்தை வரைந்திருந்தது. தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குகநாதனைப் பார்த்து பரிவோடு முகத்தை வைத்துக் கொண்டு இளநீரை ஹெகலிய நீட்டுகிறார். படத்தில் வரையப்பட்டிருந்த இளநீரும் ஹெகலியவின் முகத்தில் காணப்பட்ட பரிவுணர்வும் அந்தக் கேலிச்சித்திரத்தில் மாத்திரமே பார்க்கக்கூடியது.

ஆளில்லாத கிராமத்தில் தேர்தல் சுவரொட்டி

மக்களின் மீள்குடியேற்றத்தை தடுப்பவர்களும் மக்களை முகாம்களில் அடைப்பவர்களும் அந்த மக்கள் இல்லாத கிராமங்களில் தேர்தல்காலச் சுவரொட்டிகளை ஒட்டி விடுகிறார்கள். மீள்குடியேற்றம் செய்யாமல் கிராமங்களை ஆக்கிரமிக்க காரணங்களைத் தேடியலைபவர்கள் இந்தக் கிராமங்களைத் தேடியலைந்து சுவரொட்டிகளை ஒட்டி விடுகிறார்கள். அண்மையில் பல்லவராயன்கட்டு என்கிற கிராமத்திற்குச் சென்றிருந்தேன். அந்தக் கிராமத்தில் பலர் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த நிலையில் இன்னும் திரும்பவில்லை. அவர்களின் வீடுகள் உருக்குலைந்து கிடக்கின்றன.

DSC07980.jpgஉருக்குலைந்த அந்த சுவர்களில் தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. சனங்கள் இல்லாது துயர முகத்தோடு இருக்கிற அந்தக் கிராமத்தைப்போல பல கிராமங்களில், நகரங்களில் முதலில் இந்த சுவரொட்டிகள் வந்து விடுகின்றன. கிளிநொச்சி நகரத்தில் பெரும்பாலான இடங்களில் மீள்குடியேற்றம் நடைபெறுவதற்கு முன்பாகவே நாடாளுமன்றத் தேர்தல் வந்திருந்தபொழுது இந்தப் போலிச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் படத்துடன் கூடிய இந்தச் சுவரொட்டிகளில் "நான் உங்கள் நண்பன்" என்றும் "நீங்கள் என் செல்வங்கள்" என்றும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. மகிந்த ராஜபக்ச எங்களுக்கு நண்பரா? அவருக்கு நாங்கள் செல்வங்களா? இந்தச் சுவரொட்டிகள் வடக்கில் தேர்தல் நடந்த எல்லா இடங்களிலும் ஒட்டப்பட்டிருந்தன. மக்கள் இன்றிக் கைவிடப்பட்ட கிணறுகள், யுத்தத்தால் இடிந்து மக்கள் புலம்பெயர்ந்து சென்ற வீடுகள், உருக்குலைந்த தூண்களின் துண்டுகள் என்று ஒன்றையும் சுவரொட்டிகள் விட்டு வைக்கவில்லை. இப்படி ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளில் சிலவற்றில் சுதந்திரத்தை தந்தோம், மகிழ்ச்சியைத் தந்தோம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தன. ஜனாதிபதி அவர்களும் அவரது படைகளும் எங்களுக்கு என்ன செய்தார்கள் என்பதையும், எதைத் தந்தார்கள் என்பதையும் மக்கள் அறிவார்கள். தேர்தல் காலத்திற்காக சோடிக்கப்பட்ட இந்தப் போலி வார்த்தை களுக்குத் தமிழ் மக்கள் உரிய பதிலை அளித்திருக்கிறார்கள். ஆளில்லாத கிராமத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், அவலங்களை உருவாக்கி அதன்மீது போலி அரசியலை நடத்தும் அநியாயத்தைத்தான் காட்டுகின்றன.

பாதுகாப்பு வலயத்தில் சிறையிடப்பட்ட முருகன்

கிளிநொச்சி நகரத்தில் கந்தசுவாமி கோயில் இருக்கிறது. கிளிநொச்சி நகரத்தில் விடுதலைப்-புலிகளின் முக்கிய அலுவலகங்கள் பலவும் அமைந்திருந்த பரவிப்பாஞ்சான் பகுதியில்தான் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. அந்தப் பகுதியில் விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம், அரசியல் துறைச் செயலகம், மாணவர் அமைப்பு, கல்விக் கழகம், தமிழீழ வைப்பகத்தின் தலைமை அலுவலகம், அரசியல் துறை மகளிர் அமைப்புச் செயலகம் உட்பட பல முக்கிய அலுவல-கங்கள் இயங்கி வந்தன. புலம்பெயர்ந்த, இடம்பெயர்ந்த மக்களின் காணிகளில் அந்த அலுவலகங்கள் இயங்கியதோடு, அந்தப் பகுதியில் பல மக்களும் வசித்து வந்தார்கள். கிளி-நொச்சியில் அது ஒரு வளமான பகுதி. வயல்களும் பயன்தரு மரங்களும் செல்வச் செழிப்பு மிக்க வீடுகளும் என்று மக்களின் உழைப்பில் அந்தப் பகுதி வளமாக இருந்தது. சமாதானக் காலத்தில் வெளிநாட்டுப் பிரதிகளும் அரசத் தரப்பினர் பலரும் வந்து விடுதலைப்புலிகளுடன் அந்தப் பகுதியில் உள்ள சமாதானச் செயலகத்தில்தான் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்கள்.

இப்பொழுது அந்தப் பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக இராணுவத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் இருப்பிடங்களை இழந்து பல்வேறு இடங்களிலும் தஞ்சமடைந்திருக்கிறார்கள். மக்கள் இருப்பிடங்களுக்குச் செல்ல அனுமதிக்கவும் அவர்களின் காணிகளைக் கையளிக்கவும் படைத்தரப்பு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதற்குள் கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலும் மாட்டிக்கொண்டுள்ளது. படைத்தரப்பின் முட்கம்பி வேலிக்குள் சிறைவைக்கப்பட்டுள்ள கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலின் வளாகத்தையும் மடப்பள்ளி அமைந்துள்ள பகுதியையுமாவது தாருங்கள் என்று ஆலயசபை கேட்டுக் கொண்டேயிருந்தது.

நாம் இரத்தம் சிந்தி மீட்ட இடம் எங்களுக்குச் சொந்தம். அது எங்களுக்குத் தேவை என்று படைத்தரப்பு தொடர்ந்து மறுத்துக் கொண்டு வருகிறது. கிளிநொச்சி நகர மக்களில் பெரும்பாலானவர்களால் அந்த ஆலயம் நம்பிக்கையுடன் வணங்கப்பட்டு வருகிறது. கிளிநொச்சி நகரத்தில் உள்ள பெரிய ஆலயமும் அதுதான். படைத்தரப்பினர் முருகனை முட்கம்பி வேலிக்குள் சிறைவைத்துள்ளனர் என்று தொடர்ந்து மக்களால் விமர்சிக்கப்படுகிறது.

வெடிப்பொருட்களைப் படிக்கும் குழந்தைகள்

DSC09956.jpgஈழத்துக் குழந்தைகள் வெடிப்பொருட்கள் பற்றியும் படிக்கிறார்கள். அவர்கள் வெடிப்பொருட்களைக் கண்டவுடன் பெற்றோருக்குக் காட்டு-வார்கள். அங்கே செல்லாதே! அங்கு வெடிப்பொருள் இருக்கலாம்!! அது வெடிப்பொருளாகவும் இருக்கலாம்!!! என்று குழந்தைகளைக் கண்ட திசைகளுக்குச் செல்ல விடாமல் தடுக்கும் பாதுகாப்புச் சுவரொட்டிகளைத் தொண்டு நிறுவனங்கள் ஈழம் எங்கும் ஒட்டியிருக்கின்றன. சில தொண்டு நிறுவனங்கள் வெடிப்பொருட்களைக் கண்டால் என்ன செய்ய வேண்டும் என்று நாடகங்களை நடத்துகின்றன. 1996ல் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டு சில காலத்தில் மக்கள் மீள் குடியேறத் தொடங்கிய யாழ்ப்பாண நகரத்திலேயே மீட்கப்படாத வெடிப்பொருட்கள் இருக்கையில் மற்றபகுதியில் அவை எப்படி விதைக்கப்பட்டிருக்கும்? வெடிப்பொருட்களைத் தவிர எல்லாம் மீட்டழிக்கப்படுகிறது.

சாந்தபுரம் கலைமகள் வித்யாலயத்திற்குச் சென்றிருந்த பொழுது வகுப்பறையின் சுவரில் வெடிப்பொருட்களைக் கண்டால் என்ன செய்வது என்று எழுதப்பட்டுள்ள விளக்கப்படத்தைக் குழந்தைகள் பார்த்துப் படித்துக் கொண்டிருந்தார்கள். இது அவர்களுக்கு மிக அவசியமான பாடமாகியிருக்கிறது. படங்களிலும் நேரிலுமாக இந்த வெடிப்பொருட்களைப் பார்ப்பதன் மூலம் அவைகளைக் குறித்து அவர்கள் படித்துக் கொள்கிறார்கள். வெடிப்பொருட்கள் குறித்து சில குழந்தைகளிடம் அச்சமும் சில குழந்தைகளிடம் குறும்புத்தனமும் இருக்கின்றன. வெடித்த வெடிப்பொருட்களின் பாகங்களோடு சிலவேளையில் வெடிக்காத வெடிப்பொருட்களையும் எடுத்து வந்து குழந்தைகள் விளையாடுகிறார்கள்.

deebachelvan@gmail.com

நன்றி: உயிர்மை

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிழலி இணைப்பிற்கு, குமுதத்தில் தான் இப்படி குட்டிக் குட்டி கதைகள் நல்ல கருவுடன் வாறது, இதை வாசிக்கும் போது அதைவிட அருமையாக யதார்த்தத்தை கூறி நிற்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.