Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க-இந்திய உறவுக்குள் உடையும் சீனாவின் முத்துமாலை

Featured Replies

அமெரிக்க-இந்திய உறவுக்குள்

உடையும் சீனாவின் முத்துமாலை

-இதயச்சந்திரன்

சீன அரசின் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட தகவல்களின் பிரகாரம், இலங்கையுடனான பொருளாதார வர்த்தகமானது 2.1 பில்லியன் டொலர்களை கடந்த வருடம் எட்டியுள்ளதெனக் கூறப்படுகிறது.

அதாவது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நிதி நெருக்கடிக்குள் சிக்குண்டு இருப்பதால், சீனாவின் முதலீடுகள் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் அதிகரிக்கிறது. ஆகவே, ஆசியாவிலுள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை, மியன்மார், பங்களாதேஷ் போன்ற நாடுகளைக் குறிவைத்தே சீனாவின் நகர்வுகள் அமைகிறதெனலாம்.

இருப்பினும் துறைமுக அபிவிருத்தி என்கிற போர்வையில் இந்தியாவைச் சுற்றி முத்துமாலை தொடுக்கும் சீனாவின் வியூகத்தை உடைக்கும் முயற்சியினை, இந்தியாவும் அமெரிக்காவும் மேற்கொள்வதனை கடந்த சில மாதங்களாகக் காணக்கூடியதாகவிருக்கிறது.

ஆகவே, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையைச் சூழ அமைந்துள்ள நாடுகளில், அமெரிக்க - இந்திய அணிக்கும், சீனாவிற்குமிடையே ஆரம்பித்திருக்கும் பனிப்போரில் இலங்கை எங்கே தள்ளப்படப் போகிறது அல்லது பலவீனமானதொரு புள்ளியாக மாறப்போகிறது என்பதனை தமிழ் மக்கள் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.

அமெரிக்க -இந்திய கூட்டு, மியன்மார் மற்றும் பங்காளதேஷத்துடன் இணக்கப்பாட்டு அரசியலையும், பாகிஸ்தானுடன் முரண்நிலை அரசியலையும் கையாள்கிறது.

அடுத்ததாக பாகிஸ்தான், சீன எல்லையோடு அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் குறித்து, இந்திய -அமெரிக்காவின் பார்வையையும், முதலீட்டு ஆதிக்க நகர்வுகளையும் நோக்கலாம். நவம்பர் 26ஆம் திகதி அமெரிக்க விமானப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 26 பாகிஸ்தான் இராணுவத்தினர் கொல்லப்பட்டதால், இருநாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.

அபோதாபாத்தில் அல்கொய்தா தலைவர் ஓசாமா பின்லாடன் அமெரிக்க கொமாண்டோக்களினால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து உருவான நெருக்கடிகள், அமெரிக்க எதிர்ப்புணர்வை பாகிஸ்தானில் அதிகரிக்க உதவின. 26 இராணுவத்தினர் கொல்லப்பட்டவுடன், ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராகப் போரிடும் அமெரிக்கப் படைகளுக்கான ஆயுத வழங்கல் பாதையை பாகிஸ்தான் அரசு மூடி, தனது எதிர்ப்பினைத் தெரிவித்தது.

அத்தோடு கடந்த 5ஆம் திகதி ஜேர்மனி பொன் நகரில் (BONN) நடைபெற்ற சர்வதேச ஆப்கானிஸ்தான் மாநாட்டில் கலந்துகொள்ள பாகிஸ்தான் அதிபர் சர்தாரி மறுத்துவிட்டார்.

அண்மைக்காலமாக அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டுகளினால் பாகிஸ்தான் அரசு சினமடைந்ததைக் கவனிக்கலாம். தலிபான்களுக்கு ஆயுத உதவிகளையும், பயிற்சியையும் பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. வழங்குவதாக அமெரிக்காவும், இந்தியாவும் தொடர்ச்சியாகக் கூறிவரும் நிலையில், 26 இராணுவத்தினரின் கொலையோடு முறுகல் நிலை உச்ச நிலையைத் தொட்டிருக்கிறது.

இந் நிலையில் தலிபான்களுக்கு எதிரான போரில் அதிபர் ஹமிட் கர்சாய்க்கு பொருண்மிய மற்றும் இராணுவ ரீதியிலான உதவிகளை அமெரிக்கா வழங்கிவரும் அதேவேளை, ஆப்கானிஸ்தானின் உட்கட்டுமான அபிவிருத்தியிலும், கனிமங்களை அகழ்வு செய்யும் வேலையிலும் பலகோடி டொலர் முதலீடுகளை இந்தியா உட்செலுத்தியுள்ளது. அத்தோடு சீனாவின் முதலீட்டு ஆதிக்க நகர்வினை முறியடிக்கும் வகையில், இரும்புத்தாதினை (IRON ORE) அகழ்ந்தெடுக்கும் ஒப்பந்தத்திலும் இந்தியா கைச்சாத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காபூலிலிருந்து மேற்கே 130 கி.மீற்றர் தொலைவிலுள்ள பம்யன் மாகாணத்தின் மலைப் பிரதேசமான ஹஜிகக் (Hajigak) இல் காணப்படும் இரும்புத்தாது படிமத்தை அகழ்ந்தெடுக்கும் ஒப்பந்தத்தில், ஆப்கான் இரும்பு மற்றும் உருக்கிரும்பு கூட்டமைப்பில் (AFISCO) இணைந்துள்ள செயில் (Steel Authority India Ltd), மொனே இஸ்பட் எனர்ஜி லிமிட்டட், ராஷ்ட்ரீய இஸ்பட் நிக்காம் லிமிட்டெட், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் லிமிட்டெட் மற்றும் ஜே.எஸ் டபிள்யூ ஸ்டீல் லிமிட்டட், ஜின்ரால் ஸ்டில் பவர் லிமிட்டெட் மற்றும் கே.எஸ்.டபிள்யூ ஸ்பட் ஸ்டீல் லிமிட்டெட் என்கிற இந்திய நிறுவனங்கள் கைச்சாத்திட்டுள்ளன. இதில் "பி', "சி', "டி' என்கிற பகுதிகளை இந்திய நிறுவனமும், "ஏ' பகுதியை கனேடிய நிறுவனமான கிலோ கோல்ட் கம்பனியும் பெற்றுள்ளது.

60களில் மேற்கொண்ட ஆய்வுகளில், 1.8 பில்லியன் தொன் இரும்புத்தாது இந்த ஹஜிகக் இல் இருப்பதாகவும், இதிலிருந்து சராசரியாக 64 சதவீத இரும்பினை பெறலாமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வொப்பந்தத்தின் பிரகாரம், சுரங்கங்களை நிர்மாணிப்பதோடு, உருக்கிரும்பினை (STEEL) உருவாக்கும் தொழிற்சாலையையும் இந்நிறுவனங்கள் நிறுவ வேண்டும்.

ஆப்கான் சுரங்க கைத்தொழில் அமைச்சின் திட்டப் பணிப்பாளர் அப்துல் ஜலீல் யும்ரியானியின் எதிர்பார்ப்பானது, அடுத்த 30 வருடங்களில் 14.6 பில்லியன் டொலர்களை வெளிநாட்டு முதலீடுகளாக கொண்டுவர வேண்டும் என்பதில், 10.7 பில்லியன் டொலர் முதலீடு இந்தியாவிலிருந்து கிடைக்குமென்கிற நம்பிக்கையைக் கொண்டிருக்கிறது.

இருப்பினும் அமெரிக்க புவியியல் ஆய்வுத் திணைக்களம், சென்ற வருடம் வெளியிட்ட அறிக்கையில், ஏறத்தாழ ஒரு ரில்லியன் டொலர் பெறுமதியான அகழ்ந்தெடுக்கப்படாத கனிம வளங்கள் ஆப்கானில் புதைந்து கிடக்கிறதென குறிப்பிட்டுள்ளது. ஆகவே அடுத்த 30 வருடங்களில், வெளிநாட்டு முதலீடாக 14.6 பில்லியன் டொலர்களையே ஆப்கானிஸ்தான் எதிர்பார்ப்பதாகக் கூறப்படுவது பணிப்பாளரின் முதிர்ச்சியற்ற எதிர்கூறலைக் காட்டுவதாகவே அமைகிறது.

இவைதவிர, சீன அரசால் நடாத்தப்படும், தாதுக்களிலிருந்து உலோகங்களைத் தயாரிக்கும் கூட்டுத்தாபனமானது, ஆப்கானின் அய்னக் (AYNAK) செப்புச் சுரங்கத்தில் தனது அகழ்வுப் பணியை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது. இருப்பினும் இந்த இரும்புத்தாது அகழ்வு ஒப்பந்தத்தை, கையிருப்பில் 3 ரில்லியன் வெளிநாட்டு நாணயத்தை வைத்திருக்கும் சீனாவால் பெறமுடியாமல் போனது ஏன் என்கிற கேள்வி எழுகிறது.

இங்குதான் சீனாவுடனான அமெரிக்க பனிப்போரின் பரிமாணங்களைப் பார்க்கலாம்.

2002இலிருந்து இதுவரை ஒரு பில்லியன் டொலர்களை, அபிவிருத்தித் திட்டங்களுக்கும் உட்கட்டு நிர்மாண வேலைகளுக்கும் இந்தியா வழங்கி வந்தது.ஆகவே 2014இல் அமெரிக்கப்படைகள் ஆப்கானிலிருந்து முற்றாக வெளியேறு முன்பாக, சீனா, பாகிஸ்தானிற்கு எதிரான சக்திகளின் முதலீடுகளை அங்கு குவித்துவிட வேண்டுமென்கிற தந்திரோபாயத் திட்டத்தோடு அமெரிக்கா செயற்படுவது போலுள்ளது.

அதேவேளை, சீனாவுடன் நீண்ட எல்லைக்கோட்டினைக் கொண்டிருக்கும் மியன்மாருடனான (பர்மா) அமெரிக்க, இந்திய உறவுகள் குறித்தும் நோக்க வேண்டும். ஒக்டோபர் 12 முதல் 15 வரை இந்தியாவிற்கான பயணமொன்றினை மேற்கொண்டார் மியன்மாரின் அதிபரும் முன்னாள் இராணுவ ஜெனரலுமான தெயின் செயின். விடுபட்டுப்போன உறவினை மீளவும் புதுப்பித்துக் கொள்வதற்கான தருணமாக தெயின் செயினின் விஜயத்தை இந்திய சாதகமாகப் பார்த்தது.

ஏற்கெனவே அரகன் (ARAKAN) மாநிலத்திலுள்ள சிவே எரிவாயு வயல்களிலிருந்து, வாயுவைக் கொண்டு செல்லும் நீண்ட பாரிய குழாய்களை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவிற்கு கிடைக்கவில்லை என்பது பெரும் பின்னடைவாகவே முன்பு நோக்கப்பட்டது. 2009 இல் இவ்வொப்பந்தத்தை பெற்றோசைனா நிறுவனம் கைச்சாத்திட்டது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் ஒக்டோபர் விஜயத்தின் போது இருதரப்பு உறவுகளும் சீராகக்கூடிய வகையில் பல உடன்பாடுகள் எட்டப்பட்டதை கவனிக்கலாம்.

மியன்மாரின் ரயில் பாதை, வீதி மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பிற்கென கடந்த வருடம் இந்தியா வழங்கிய 300 மில்லியன் டொலர் கடனிற்கு மேலதிகமாக, 500 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் முன்வந்ததை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

2010-2011 ஆண்டிற்கான இருதரப்பு வர்த்தகம் 1.077 பில்லியன் டொலர்களை எட்டினாலும், இந்தியாவிற்கான மியன்மாரின் ஏற்றுமதி 876.91 மில்லியனாகவும், இந்தியாவிலிருந்து மியன்மாரின் இறக்குமதி வர்த்தகம் 194.92 மில்லியன் டொலர்களாக வும் இருப்பது, வர்த்தகப் பற்றாக்குறை இந்தியா பக்கம் இருப்பதை சுட்டிக் காட்டுகிறது. மியன்மாரிலிருந்து எரிவாயுவை இறக்குமதி செய்தல் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை இன்னமும் அதிகரிக்கும் என்பது உண்மை. ஆனால் சீனாவின் பொருண்மிய ஆதிக்கத்தை எப்பாடுபட்டாவது குறைக்க வேண்டுமென்ற கோணத்தில் அணுகும் போது, வர்த்தக பற்றாக்குறையை வேறொரு வகையில் சமப்படுத்தி விட இந்தியா முயலும்.

அதே வேளை, எரிவாயு மற்றும் எண்ணெய் அகழ்விற்கான நீண்ட கால ஒப்பந்தமொன்றினை சீனாவுடன் மியன்மார் செய்து கொண்டதை இங்கு நினைவுப்படுத்த வேண்டும். இவற்றினைக் கொண்டு செல்வதற்கான கியாக்குறுமி (kyaukryu) துறைமுகத்திலிருந்து சீனாவின் யுனான் வரை 1100 கி.மீற்றர் நீளமான குழாய்களை தரைக்கு மேல் அமைக்கும் பணியினை சீன நிறுவனம் ஆரம்பித்தது.

இந்தக் குழாய் நிர்மாணிப்பானது, மலாக்கா நீரிணையூடான செல்லும் தூரத்தை விட 1200 கி.மீற்றர் குறைவானதோடு அப்பிராந்தியத்தின் தேவையை நிராகரிக்கும் என்று சீனா கணிப்பிட்டது.

தென்சீனக்கடலில் அமெரிக்கக் கடற்படையின் நட மாட்டம் அதிகரிப்பதால், பங்காளதேஷின் சிட்ட கோங் மற்றும் மியன்மாரின் சிட்வே போன்ற துறைமுகங்களிலிருந்து தரைவழிப் பாதையை அமைப்பதிலும், எண்ணெய்யை காவிச் செல்ல பாரிய குழாய்களை நிர்மாணிப்பதிலும் ஏன் அதிக முதலீடுகளை சீனா செய்கின்றது என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

அத்தோடு உட்கட்டுமான நிர்மாணிப்பு மற்றும் கனிமவளத் தேவைக்கான முதலீடுகளில் ஈடுபடும் சீனா, ஆயுத வர்த்தகத்திலும் அதிகளவில் இறங்கியுள்ளது. வட கொரியாவிலிருந்து ஆட்டிலெறிகளை வாங்கி அதற்கு பண்ட மாற்றாக அரிசியை அனுப்பலாமென்ற அறிவுரையையும் சீனா கூறியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, பாகிஸ்தான் மற்றும் சீனாவின் உதவியுடன், வட கொரியாவிலிருந்து அணு ஆயுதங்களை அல்லது அதற்கான தொழில்நுட்பங்களையும் பெற, மியன்மார் ஆசைப்படுவதாகவும் ஒரு செய்தி உண்டு.

இவை தவிர மியன்மாரின் மேற்குக் கரையில் சீனா நிறுவியுள்ள ராடர்கள், இந்தியாவின் ஏவுகணைப் பரிசோதனைகளைக் கண்காணிக்கிறது என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது.

ஆகவே, எவ்விதத்திலாவது மியன்மாரைத் தம் வசப்படுத்தும் நகர்வினை விடுத்து, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு, பொருளாதாரத் தடை என்கிற நெருக்குவாரங்களைப் பிரயோகித்தால் ஆசியாவில் இன்னொரு வட கொரியா உருவாகி விடுமென்று அமெரிக்க-இந்தியத் தரப்பினர் கவலையடைந்து தமது நிலைப்பாட்டினை மாற்றிக் கொள்வதில் அர்த்தமுண்டு.

செப்டம்பர் 30 ஆம் திகதியன்று மியன்மார் அதிபர் தெயின் செயின் அவர்கள் விடுத்த செய்தியொன்று அமெரிக்கத் தரப்பினருக்கு ஒரு முக்கிய செய்தியைச் சொன்னது. அதாவது சீனாவின் அனுசரணையோடு முன்னெடுக்கப்பட்ட மையிஸ் ரோன் (MYITSTONE) அணைக்கட்டு நிர்மாணத்தை நிறுத்துகிறோம் என அதிபர் செயின் பிரகடனம் செய்தார். இறாவடி (IRRAWADDY) ஆற்றினைக் குறுக்கறுத்து உருவாக்கப்படவிருந்த இந்த அணை மூலம், நீர் மின் உற்பத்தியை பெறலாமென்பதே அத் திட்டம். இதனை ஒரு சாதகமான சமிக்ஞையாகப் பார்த்த ஒபாமா, ஆங்சாங் சூகியின் விடுதலையையும் அதனோடு இணைத்து, ஜனநாயக வழிக்கு மியன்மார் திரும்புகிறது என்கிற முழக்கத்தோடு, நவம்பர் 30 ஆம் திகதியன்று இராஜாங்க செயலர் கிளாரி கிளின்டன் அம்மையாரை சமாதானப்புறாவாக அங்கு அனுப்பி வைத்தார்.

அத்தோடு அமெரிக்க ஆதரவு நாடுகளை உள்ளடக்கிய ஆசியான் (ASEAN) மாநாட்டிற்கு, 2014 இல் தலைமை வகிப்பதற்கு பாலியில் நடைபெற்ற மாநாட்டில், மியன்மார் தெரிவாகிய விடயத்தையும் கவனிக்க வேண்டும். அணைக்கட்டு விவகாரத்தில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்ததால், சீனா சினமடைந்திருக்கும் என்பதனை விளக்கத் தேவையில்லை. இந்த அணைக்கட்டு திட்டத்தினூடாக பெறப்படும் 90 வீதமான மின்சாரம், தென் சீனாவிற்கு கடத்தப்படுமென்பதே இம் முதலீட்டுக்கான முக்கிய காரணி.

இது போன்ற மாற்றங்கள் வட கொரியா, திபேத் மற்றும் உய்குர் போன்ற இடங்களில் சங்கிலித் தொடராக நடைபெறலாமென சீனா அஞ்சுகிறது.

ஆகவே, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவுடன் நெருக்கமான உறவு கொள்ளும் நாடுகளிடையே பெரும் மாறுதல்கள் நிகழ்த்தப்படுவதைக் காணக்கூடியதாகவிருக்கின்றது.

இயற்கை அழிவுகளை தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் பாகிஸ்தானும் மேற்குலம் மீதான தனது இறுக்கமான நிலைப்பாட்டினை எத்தனை காலத்திற்கு தொடருமென எதிர்வு கூற முடியாது.

ஆதலால் அமெரிக்கா- இந்தியா- பாகிஸ்தான் என்கிற இணக்கப்பாட்டு அச்சில், பாகிஸ்தான் இணையும் வரை மேற்குலகின் பொருளாதார அழுத்தங்கள் அதன் மீது தொடர்ச்சியாக இருக்கும்.

அதேவேளை, யூரோ வலய நாடுகளில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடிகளால், சீனாவின் ஏற்றுமதி வர்த்தகம் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. யூரோ நாணயம் தக்க வைக்கப்பட வேண்டுமென ஆறுதல் கூறும் சீனா, அந் நாடுகளின் அரச முறிகளை வாங்குவதற்குத் தயங்குகிறது.

பொருண்மிய வளர்ச்சி மந்தமடைவதால் நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான,மக்களுக்கு, எவ்வாறு தொழில் வாய்ப்பினை வழங்குவதென சீனா திண்டாடுகிறது.

ஸ்டான்டாட் அன்ட் புவர் (Standard & Poor] என்கிற அமெரிக்க கடன் மதிப்பீட்டு முகவரமைப்பு, யூரோ வலய நாடுகளின் கடன் பெறும் தகைமையைக் குறைக்கப் போவதாக அச்சுறுத்துகிறது. போதாக்குறைக்கு சீனாவில் மிகப்பெரிய கடன் மதிப்பீட்டு முகவரமைப்பான டாகொங் குளோபல் ரேட்டிங் கம்பனியானது, பிரான்ஸின் கடன் பெறும் தகைமை குறையுமென்று சில புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது.

அதாவது 2011 இல் 1.7% மாக இருந்த பிரான்ஸின் பொருளாதார வளர்ச்சி 2012 இல் 0.3% மாக குறைவடையுமென டாகொங் கணிப்பிடுகிறது. வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை நிமிர்த்தி விடுவோமென ஜேர்மனிய அஞ்செலா மேர்க்கல் அம்மையாரும், பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சார்க்கோசியும் சவால் விட்டவாறு, யூரோ வலய நாடுகளுக்கிடையே நடைபெறும் நிதிப் பரிவத்தனைக்கு வரி விதிக்கும் (Tax on Financial Transaction) திட்டமொன்றினை முன் வைக்கிறார்கள்.

இதனை மிகக் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்துள்ளது பிரித்தானியா.

இந் நிலையில் ஆசியாவின் பாரிய பொருளாதாரம் யூரோ சிக்கலால் பாதிப்படையும் என்பதை சீனாவாலும் நிராகரிக்க முடியாது.

ஆகவே, ஏற்றுமதி வர்த்தகத்தில் பெரிதும் தங்கியுள்ள சீனா போன்ற நாடுகள் உள்நாட்டிலும் எல்லையோர நாடுகளிலும் பெரும் சவால்களை எதிர்க்கொள்ளப்போகிறது

.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அதற்கான எதிர்வினைகள் நிகழ ஆரம்பித்து விட்டன. ஆகவே சீனா சார்பாக தமது வெளியுறவுக் கொள்கையை திடமாக வகுத்திருக்கும் இலங்கை அரசானது, இப் பிராந்தியத்தில் ஒரு சிறு புள்ளியாக மாறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்தாளை இன்னுமா உலகம் நம்புது? வன்னியில் மாண்டு போன பல மக்களில் இந்த பிறப்பும் அனாதைப் பிணமாக போய் இருகலாம்,.

  • தொடங்கியவர்

ஆசியாவில் பல மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளது. எமது தாயக நலன்களும் சர்வதேச நகர்வுகளை வைத்தே ஒரு தீர்வை நோக்கி செல்லும். அதனால், அவை பற்றிய நிகழ்வுகளை உள்வாங்குவது நன்மையே.

  • கருத்துக்கள உறவுகள்

பர்மாவில் கிளின்டன்: சீனாவிற்கு எதிரான மற்றொரு அமெரிக்க நடவடிக்கை

By Peter Symonds

இந்த வாரம் அமெரிக்க வெளிவிவகாரகச் செயலர் ஹில்லாரி கிளின்டனின் மூன்று நாள் பர்மிய (மியன்மர்) பயணம் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூ கியி உடன் முக்கியப் பேச்சுக்களை நடத்தியது, “ஜனநாயக உரிமைகளுக்கு” அமெரிக்க ஆதரவு குறித்த பெரும் பாசாங்குத்தனப்பிரச்சாரதன்மையை கொண்டிருந்தது. ஆனால் கிளின்டன் வருகையின் உண்மையான நோக்கம ஆசியா முழுவதும் உள்ள சீனாவின் செல்வாக்கைக் குழிபறிக்கும் ஒபாமா நிர்வாகத்தின் ஒருமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கையை அதிகரிப்பதுதான்.

50 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் அமெரிக்க வெளிவிவகாரகச் செயலரின் இந்த பர்மா வருகை ஒபாமா தென் சீனக்கடல் பகுதி பூசல்கள் குறித்து சீனா மீதான அழுத்தங்களைத் தீவிரப்படுத்தி இருந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் அறிவிக்கப்பட்டது. அம்மாநாட்டில் பர்மாவின் இராணுவக் குழு அமெரிக்காவுடன் இணக்கமாக நடந்து கொள்ளவும், பெய்ஜிங்கின் இறுக்கமான பொருளாதார மூலோபாய உறவுகளைத் தளர்த்திக் கொள்ளுவதற்கும் தயாராக உள்ளது என்ற அடையாளங்களை ஒபாமா பற்றி எடுத்துக் கொள்ளுவதில் உறுதியாக இருந்தார்.

பர்மாவிற்கு வருமுன் தெரிவித்த கருத்துக்களில், கிளின்டன் ஓர் உதவியளிப்பு மாநாட்டில் வளர்ச்சி பெற்றுவரும் நாடுகள் “திறமையான வாங்குபவர்களாக” இருக்க வேண்டும், நன்கொடை அளிப்போரிடம் இருந்து—சீனாவைப் போன்றவை—உதவி பெறுவதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறினார்; “நன்கொடை கொடுப்பவர்கள் உங்கள் தகமையைக் கட்டுமானம் செய்வதைவிட உங்கள் மூலவளங்களை எடுத்துக் கொள்ளுவதில்தான் அதிக அக்கறை உடையவர்கள்” என்றும் கூறினார். இச்செய்தி மற்ற நாடுகளுடன் பர்மாவிற்கும் கூறப்பட்டது; அது மிக அதிகமாகச் சீனப் பொருளாதர உதவி மற்றும் முதலீட்டை நம்பியுள்ளது.

இராணுவ ஆட்சிக்குழுவின் “உண்மையான நோக்கங்களைச் சோதிக்க” தான் வந்துள்ளதாக கிளின்டன் விளக்கினார்; வாஷிங்டனிடம் இருந்து கணிசமான சலுகைகளும் கிடைக்காது என்றார். பர்மிய ஜனாதிபதி தீன் சீனை வியாழன் அன்று அவர் நாட்டின் புதிய செயற்கைத் தலைநகரான நேபியடாவ் இல் சந்தித்து, சமீபத்திய அரசியல் நடவடிக்கைகள் வரவேற்கப்பட்டாலும், இவை“ஒரு ஆரம்பம்தான்” என்று எச்சரித்தார். கடந்த ஆண்டில் அரசு சூ கியியை இல்லக்காவலில் இருந்து விடுதலை செய்தது, ஒரு பொது ஜனாதிபதிக்குப் பெயரளவிலான அதிகாரத்தைக் கொடுத்துள்ளது, சூ கியி மற்றும் அவருடைய எதிர்க்கட்சியான NLD எனப்படும் தேசிய ஜனநாயகத்திற்கான குழுவை வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் நிற்பதற்கு அனுமதித்துள்ளது.

பர்மிய அரசாங்கம் வாஷிங்டனுடன் மீண்டும் சுமுக உறவுகளை அடைய ஆர்வம் கொண்டுள்ளது. அது நாடு பெய்ஜிங்கிடம் கொண்டுள்ள பெரும் நம்பக நிலைப்பட்டைக் குறைத்து, மேலை நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு முடிவு கண்டு, நாட்டை மற்றொரு புதிய குறைவூதியத் தொழிலாளர் அரங்காக ஆக்கும். கிளின்டனின் வருகை “ஒரு வரலாற்று மைல்கல்” என்று விவரித்த தீன் சீன் இது உறவுகளில் “ஒரு புதிய அத்தியாயத்தைத் ஆரம்பிக்கும்” என்று தான் நம்புவதாகவும் கூறினார்.

ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகர் நே ஜின் லட் இராணுவ ஆட்சியின் உந்துதல்கள் குறித்த சிலவற்றை டைம் சுட்டிக் காட்டியுள்ளது: “முன்பு நாங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், சீனா கொடுப்பதை ஏற்க வேண்டி இருந்தது. பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டால், மியன்மரில் உள்ள அனைவருக்கும் சிறப்பு ஏற்படும்.”

“நேபிடாவை மிக வலுவாக சீனா தழுவுகின்றது” என்ற தலைப்பில் ஆசியா டைம்ஸில் வந்துள்ள கட்டுரை ஆட்சிக்குழு 2004 ல் நடந்த அதிகாரப் போராட்டத்திற்கு மீண்டும் செல்லும் போக்கை விவரிக்கிறது; அப்பொழுது பிரதம மந்திரி கின் ந்யுன்ட் “சீனாவின் மனிதன்” என்று கருதப்பட்டவர் ஊழல் குற்றங்களை ஒட்டி அகற்றப்பட்டார். இது 2009 இல் பர்மிய இராணுவம் சீனக் குடிமக்களை வடக்கு பர்மாவிற்குள் நடத்திய முறை பற்றிய சீனாவின் கோபத்தைச் சுட்டிக் காட்டுகிறது; அதேபோல் ஒரு முக்கிய சீன நிதி அளித்தல் மூலம் வரவிருந்த அணைத்திட்டம் ஒத்திவைக்கப்பட்ட முடிவு பற்றியும் கூறுகிறது.

இந்த அழுத்தங்கள் இருந்தபோதிலும்கூட, பர்மிய ஆட்சி பெய்ஜிங்கிடம் நட்பாகத்தான் இருக்க விரும்புகிறது. திங்களன்று கிளின்டன் வருகைக்கு முன்னதாக, நாட்டின் உயர்மட்டத் தளபதி மின் ஆங் ஹ்லைங் பெய்ஜிங்கிற்குச் சென்று உயர்மட்ட சீன அரசியல், இராணுவத் தலைவர்களுக்குத் தங்கள் நாட்டு இராணுவ ஆட்சிக்குழுவின் தொடர்ந்த ஒத்துழைப்பு குறித்து உறுதியளித்தார். பெய்ஜிங் மியன்மரில் கணிசமாக இருப்புக்களை முதலீடு செய்துள்ளது, பொருளாதார, மூலோபாய உறவுகளை வளர்ப்பதில் நாட்டம் கொண்டுள்ளது; அவை சீனாவிற்குத் தேவையான மூலப் பொருட்கள் மற்றும் இந்தியப் பெருங்கடலுக்கு நேரடியாக அணுகும் பாதை ஆகியவற்றை அளிக்கின்றன.

பர்மாவில் இருந்து தென்சீனாவிற்குச் செல்லும் எரிசக்தி குழாய்த்திட்டத்தை சீன ஆரம்பித்துள்ளது. இது மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணை மலாக்கா ஜலசந்தியின் மூலம்தான் வரவேண்டும் என்பதைக் குறைக்கும் பெய்ஜிங் முயற்சிகளில் ஒரு பகுதியாகும் இந்த மூலோபாயம் பென்டனின் திட்டமான மலாக்கா ஜலசந்தி போன்ற முக்கிய “நெரிக்கும் புள்ளிகளை” -“choke points”- கட்டுப்படுத்தி, அதையொட்டி சீனா மீது கடற்படை முற்றுகை நடத்தக்கூடிய திறனை எதிர்க்கும் நோக்கத்தில் உள்ளது.

சீனாவின் மத்தியத் தொலைக்காட்சியில் பேசிய உயர்கல்வியாளர் காவோ ஜுகி, பெய்ஜிங்கின் அச்சங்களை எடுத்துக்காட்டிய வகையில், “அமெரிக்கா கீழ் மெகோங் நாடுகளான மியன்மர், கம்போடியா, லாவோஸ் ஆகியவற்றுடன் உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறது. நாம் இந்த நோக்கம் வலுவாக உள்ளது என்பதைக் காணமுடியும், இது சீனாவை இலக்குக் கொள்ளுவதற்கு என்பது மிகத் தெளிவு” என்றார்.

பர்மிய ஜனாதிபதியின் ஆலோசகர் நே ஜின் லாட்டும் மத்திய கிழக்கில் நடக்கும் நிகழ்ச்சிகளைச் சுட்டிக்கட்டி, அவை அமெரிக்காவுடன் உறவுகளை முன்னேற்றுவதற்கு மற்றொரு உந்துதல் என்றார். “நாம் ஒன்றும் இங்கு அரபு வசந்தத்தை விரும்பவில்லை” என்றார் அவர். பரந்த அளவில் அரசாங்க எதிர்ப்புக்களைப் பற்றி மட்டும் ஆட்சி கவலைப்படவில்லை; கடந்த காலத்தில் அது அவற்றை இரக்கமின்றி நசுக்கியுள்ளது; ஆனால் லிபியாவில் இருந்த சமூக அமைதியின்மையை அமெரிக்கா பயன்படுத்தி அமெரிக்கச் சார்புபான ஆட்சியை நிறுவியது குறித்துக் கவலைப் படுகிறது.

கிளின்டன் பர்மாவிற்கு பல கோரிக்கைகள் அடங்கிய பட்டியலுடன் வந்தார். இதில் சூ கியி தலைமையில் உள்ள முதலாளித்துவ எதிர்த்தரப்பினருக்கு கூடுதல் சுதந்திரம் அடங்கியிருந்தது. இதைத்தவிர நாட்டின் இனவழிச் சிறுபான்மையினரிடையே உள்ள நீடித்த மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும், சர்வதேச அணுசக்தி அமைப்பு நாட்டின் மட்டுப்படுத்தப்பட்ட அணுச்சக்தித் திட்டத்தை ஆய்வு செய்யவேண்டும் ஆகியவையும் இருந்தன.

இதற்கு ஈடாக கிளின்டன் அதிகம் கொடுக்கவில்லை. : “சீர்திருத்தங்களில் நல்ல வேகம் இருந்தால், நாங்கள் இன்னும் கொடுக்கத் தயார். ஆனால் வரலாறு எங்களை எச்சரிக்கையுடன் இருக்குமோறு கற்பித்துள்ளது.” என்றார் அவர். “பொருளாதாரத் தடைகளை” நீக்குவது குறித்து விவாதிக்க நாங்கள் தயாராக இல்லை என்றும் அவர் சேர்த்துக் கொண்டார். அதேபோல் பர்மாவுடன் முழு இராஜதந்திர உறவுகளையும் நிறுவ அமெரிக்கா திட்டத்தை முன்வைக்கவில்லை. சர்வதேச நிதிய அமைப்புக்களான உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவை நிதியளிப்பதை அமெரிக்க இனித் தடுப்பிற்கு உட்படாது, ஐ.நா. சுகாதாரப் பாதுகாப்பு, சிறு வணிகங்கள் ஆகியவற்றிற்குக் கொடுக்கும் வளர்ச்சி நிதியம் விரிவாக்கப்படுவதற்கு ஆதரவு கொடுக்கும் என்று மட்டுமே கிளின்டன் குறிப்பைக் காட்டியுள்ளார்.

Lower Mekong முயற்சியில் சேருமாறு கிளின்டன் பர்மாவிற்கு அழைப்பு கொடுத்தது குறிப்பிடத் தக்கது ஆகும்; இது பெய்ஜிங்குடன் உறவுகளை இன்னும் தளர்த்த ஒரு வழிவகை ஆகும். இக்குழு 2009ல் வாஷிங்டனால் தோற்றுவிக்கப்பட்டது பிராந்தியத்தில் கூடுதலான செல்வாக்கைச் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தை உடையது. இதில் கம்போடியா, லாவோஸ்,தாய்லாந்து, வியட்நாம் ஆகியவை உள்ளன. இப்பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது வேண்டுமென்றே செய்யப்பட்டது—“கீழ்” மெகோக் பகுதி என்பது “மேல் மெகோங்” என்று சீனப்பகுதிக்குள் இருக்கும் நிலப்பகுதியை விலத்திவைக்கும். மெகோங் ஆற்றில் சீன அணைத்திட்டங்களின் பாதிப்பு உட்பட சீனா குறித்த புகார்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் நோக்கத்தை அமெரிக்கா கொண்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் பர்மா ஆகியவை இரண்டாம் உலகப் போரின்போது இறந்த 600 படையினரின் எஞ்சிய சடலப் பகுதிகளை மீட்பதிலும் ஒத்துழைக்கலாம் என்று கிளின்டன் கூறினார். இத்திட்டம் வியட்நாமில் கூட்டு அமெரிக்க நடவடிக்கைகளைப் போன்றதே ஆகும். அதில் காணாமற்போன அமெரிக்க படையினரை கண்டுபிடத்தல் நோக்கமாக இருந்தது. இது பர்மிய, அமெரிக்க இராணுவத்திற்கும் இடையே நேரடித் தொடர்பை நிறுவ வசதியான போலிக்காரணத்தை அளிக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் சூ கியியை கிளின்டன் வியாழன் மற்றும் வெள்ளி என இரு நாட்களில் இருமுறை சந்தித்தர். அமெரிக்க நலன்களுடன் இன்னும் கூடுதாக பிணைந்திருக்கும் ஆட்சியை அமைப்பதில் தீவிரமாக உள்ள பர்மிய எதிர்த்தரப்புடன் ஒபாமா நிர்வாகம் நெருக்கமாக ஒத்துழைக்கிறது. கிளின்டன் வருகை அறிவிக்கப்படுவதற்கு முன்பு இரண்டு வாரங்களுக்கு முன்பு சூ கியி உடன் பாலியில் இருந்து ஒபாமா தொலைபேசியில் உரையாடினார்.

சூ கியி அமெரிக்க மூலோபாயத்தை முழுமையாக ஒப்புக் கொண்டார்; இது பர்மிய எதிர்த்தரப்பு சாதாரணத் தொழிலாளர் வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் குறித்த கவலைகளினால் உந்துதல் பெறவில்லை என்பதை மீணடும் நிரூபிக்கிறது. மாறாக சூ கியி பல தசாப்தங்கள் இராணுவ ஆட்சியினால் ஓரங்கட்டப்பட்டுள்ள பர்மிய ஆளும் உயரடுக்கின் பிரிவுகளைத்தான் பிரதிபலிக்கிறார். அப்பிரிவுகள் வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகள் மற்றும் நாட்டை வெளி முதலீட்டிற்காகத் திறந்துவிடுதல் ஆகியவற்றிற்கு அழுத்தம் கொடுக்கின்றன.

கடந்த ஆண்டு இராணுவ ஆட்சிக்குழுவின் போலித் தேர்தல்களைப் புறக்கணித்த பின், சூ கியி இப்பொழுது தானும் தேசிய ஜனநாயகத்திற்கான குழுவும், தேர்தல்களின் ஜனநாயக விரோதப் போக்கு இருந்தாலும், இடைத்தேர்தல்களில் தேசிய ஜனநாயகத்திற்கான குழு வேட்பாளர்களை நிறுத்த உள்ளதாக இப்பொழுது குறிப்புக் காட்டியுள்ளார். வெளியுறவுக்குழுவுடன் நடத்திய வீடியோ பேட்டி ஒன்றில், முன்னாள் தளபதியும் நீண்டகாலமாக இராணுவ ஆட்சி அதிகாரத்துவத்தின் உறுப்பினருமான ஜனாதிபதி தீன் சீனைத் தான் நம்புவதாகவும் சூ கியி தெரிவித்தார்.

இராணுவ ஆட்சியுடன் உடன்பாடு காண அமெரிக்க உதவியைப் பெற முடியும் என்று சூ கியி நம்புகிறார்; இது தேசிய ஜனநாயகத்திற்கான குழுவிற்கு கூடுதல் அரசியல் செல்வாக்கை அளித்து, எதிர்த்தரப்பிற்கு ஆதரவு கொடுக்கும் வகையில் வணிகத் தட்டுக்களுக்குப் புதிய பொருளாதார வாய்ப்புக்களையும் கொடுக்கும். இராணுவ ஆட்சிக்குழுவைப் போலவே சூ கியிவும் பர்மாவில் ஒரு “அரபு வசந்தம்” கூடாது என்பது குறித்துக் கவலையை வெளிப்படுத்தினார்—அதாவது தொழிலாளர் வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்கள் வெகுஜ எதிர்ப்புக்களில் ஈடுபடக்கூடாது என்பதை.

“மியன்மாரை அடுத்த எல்லைப்பிரதேசமாக நிறுவனங்கள் காண்கின்றன”என்ற தலைப்பில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கட்டுரை ஒன்று பர்மியப் பொருளாதாரம் திறக்கப்படுவதால் பெருநிறுவனங்கள் எதிர்பார்க்கும் நலன்களைச் சுட்டிக்காட்டியுள்ளது. வணிகத் தூதுகுழுக்கள் ஏற்கனவே பர்மாவின் சந்தைகள் திறனைப் பயன்படுத்த, எரிவாயு, எண்ணெய் உட்பட,அதன் இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் தீவிர நோக்கத்தில் பர்மாவிற்கு வருகின்றன. குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பு அரங்கு, “மிகக் குறைந்த உற்பத்திச் செலவுகளைக் கொடுக்கும் ஊதியங்கள்” என்ற முறையில் பர்மாவின் நலன்களையும் கட்டுரை குறிப்பிடுகிறது; இதைத்தவிர ஆங்கிலம் பேசும் அறிவுஜீவி வர்க்கமும் பிரிட்டிஷ் பொதுச்சட்டத்தில் வேர்களைக் கொண்டுள்ள சட்ட முறையும் உள்ளது என்றும் கட்டுரை குறிப்பிடுகிறது.

பொருளாதார தேவைகள் தெளிவான ஒரு உந்துதல் என்றாலும், ஒபாமா நிர்வாகம் இப்பிராந்தியம் முழுவதும் சீன எதிர்ப்புக் கூட்டுக்களை வளர்க்க முற்படுகையில், அதன் முக்கிய நோக்கம் பர்மாவுடனான சீன உறவுகளைக் குழிபறிப்பதாகவே உள்ளது.

WSWS .org

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.