Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வல்வை புளூஸ் பொன்விழா மலர் வெளியீட்டில்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தை எங்கு இணைப்பது என்று மிகவும் நீண்ட சர்ச்சையை மனம் எழுப்பிக் கொண்டிருந்தது.. இறுதியில் இதை விளையாட்டுத்துறையுடன் இணைப்பதைக்காட்டிலும் வரலாற்றுப்பகுதியில் இணைப்பதே சாலப்பொருத்தமானது என்பதால் இங்கு இணைக்கிறேன்.

இது ஒரு ஊர் சார்ந்த விளையாட்டுத்துறையுடன் சம்பந்தப்பட்டது.. 50 ஆண்டு காலத்தின் பதிவுகள். இதை இங்கு இணைப்பதற்கான காரணம் ஒவ்வொரு ஊர்களுக்கும் பின்னால் வரலாறுகள் பற்பல முடங்கிக் கிடக்கும் அவற்றை வெளிக் கொணருவது அவ்வூரவர்களாலேயே முடியும். இது ஒரு விளையாட்டுத்துறையின் 50 ஆண்டுகால வரலாற்றை ஆவணப்படுத்திய நிகழ்வு. இங்கு நான் இணைப்பது எனக்கு தரம் 7 இல் சமூகவியல் கற்பித்த ஆசிரியரின் அரங்க உரை

என்னால் என் ஊர் சார்ந்த விடயங்களைத்தான் இலகுவாகத் தரமுடியும் மற்றைய ஊர்கள் சார்ந்த விடயங்களை அவ்வவ்வூரவர்கள் அவை பற்றி இணைக்கும்போதுதான் அறிய முடியும்.

இங்கு நான் இணைக்கும் விடயம் விளையாட்டுத்துறை என்பதற்கு அப்பால் தமிழரின் வரலாற்று குறிப்புகளில் ஒன்றாகவும் அமையக்கூடியது. நான் இங்கு இணைப்பதை வாசித்துப்பார்க்கும்போது உங்களுக்கும் புரியும்

இதில் இன்னொரு விடயம்

வல்வை புளூஸ் மகளிர் அணியில் உதைப்பந்தாட்ட வீராங்கனையாக இருந்திருக்கிறேன். இந்த வரலாற்று ஏட்டில் ஒரு விளையாட்டு வீராங்கனையாக எனது அறிமுகம் உண்டு. :rolleyes: :rolleyes: :rolleyes:

வல்வை புளுஸ் பொன்விழா மலர் வெளியீட்டில் கி.செ.துரை ஆற்றிய உரை…

.

வல்வை புளுஸ் பொன்விழா மலரின் முற்பகுதி இப்படி ஆரம்பிக்கிறது..

அலைகள் என்ற இணையத்தில் கி.செ.துரை அவர்கள் எழுதிவரும் கரபந்தாட்ட நினைவுக் குறிப்புக்களை படித்த பின்னர், வல்வை புளுஸ் கழகத்தினது ஐம்பது வருட வரலாற்றையும் அவ்வாறே நாங்கள் எழுதினால் என்ன என்று கட்டியண்ணாவின் மகன் சங்கர் ஒரு நாள் கேட்டார். இப்போது நீங்கள் கையில் வைத்திருக்கும் இந்த ஐம்பது ஆண்டுகால ஆவணத்தைத் தயாரிப்பதற்கான முதற்பொறியும் அதுதான்.. மலர் ஆக்கக் குழுவின் சார்பில் திரு.ச.ச.முத்து அவர்கள் எழுதிய முகவுரை இப்படிக் கூறுகிறது.

அலைகளில் வெளியாகிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் பொன்னான வரலாற்றுப் பதிவு ஒன்றை செய்வதற்கான பொறியாக அமைந்திருக்கிறது என்பது மகிழ்வு தருகிறது. மேலும் இத்தொடருக்கு அலைகள் வாசகர்கள் தரும் பேராதரவும் இதன் வெற்றிக்குக் காரணம் என்பதை மறுக்க முடியாது.

வல்வை புளுஸ் என்ற ஆலமரத்தை ஐம்பது வருடங்களுக்கு முன்னர் வேரூன்றியவர்கள் ஆறு பேர். அது உலகம் முழுவதும் கிளைவிட்டு பரவி இன்று அகில உலகத்தையே ஆட்சி செய்த பிரிட்டனின் தலைநகரில் தனது பொன்விழா மலர்களை பூத்து சொரிந்திருக்கிறது.

அன்று ஆரம்பித்தவர்கள் ஆறு பேராக இருந்தாலும் இன்று அதன் பொன்விழாவை காணும் பேறு பெற்றவர்கள் நீங்கள்தான். உங்கள் அனைவருடைய மலர்ந்த முகங்களிலும் அன்று விதையிட்ட, நீரூற்றி வளர்த்த அனைத்து வீரர்களுடைய முகங்களையும் கண்டு மகிழ்வடைகிறேன்.

பொதுவாக மேலை நாடுகளில் கோடையில்தான் மலர்கள் பூக்கும், ஆனால் இன்றோ குளிர்கால ஒன்றுகூடலில் பொன்விழா மலர் பூத்திருக்கிறது. அதை பூக்க வைக்கும் வல்லமை கொண்ட இங்கிலாந்து வல்வை நலன்புரிச் சங்கத்தினர்க்கு வணக்கம்.

அன்று ஆறு பேர் ஆரம்பித்தார்கள் இன்று அவர்கள் புகழை அகிலமெல்லாம் எடுத்துச் செல்ல பாடுபட்டுள்ள ஆறுபேர் கொண்ட மலர்க்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வணக்கங்கள்.

இந்த நூலுக்கு ஓர் உலக முக்கியத்துவம் உண்டு. உலகம் முழுவதும் சாதனை படைத்தவர்களை தொகுத்து எழுதப்படுவது கின்னஸ் சாதனை ஏடு. ஆனால் ஓர் ஊரில் பிறந்தவர்களின் சாதனையை கின்னஸ் புத்தகமாக வடிப்பது இலகுவான காரியமல்ல. அதற்கேற்ப அங்குள்ளவர்கள் சாதனை படைத்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட சாதனையாளர்கள் நிறைந்த ஓர் ஊர் வல்வை என்பதால் இப்படியோர் பதிவை இலகுவாக உருவாக்க முடிந்திருக்கிறது. இது சாதாரண நூல் அல்ல வல்வையின் கின்னஸ் ஏடு. வருங்காலத்தில் இந்த சாதனை ஏட்டில் தம்மை பதிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தை இன்றுள்ள இளைஞர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கடந்த ஐந்தாயிரம் ஆண்டுகால வரலாற்றில் பல்லாயிரக்கணக்கான சிறு சிறு போர்களும் 600 மாபெரும் போர்களும் நடைபெற்றதாகக் கூறுகிறார்கள். அந்தப் போர்க்களங்களில் போரிட்ட போர் வீரர்களின் வரலாற்றை தொகுத்ததுதான் உலக வரலாறாகும். காலகாலமாக போர் வீரர்களுக்காக வரலாறு எழுதப்படும் வழமையில் இருந்து மாறுபட்டு, விளையாட்டு வீரர்களை வரலாறாக்கி ஒரு நூல் வந்துள்ளது. ஆகையால்தான் இதை வரலாற்று எழுதுகையில் புதியதோர் பரிமாணம் என்கிறேன்.

thu-2.jpg

சங்க காலம் முதல் இன்றுவரை எழுதப்பட்ட தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு புகழ் பெற்ற விளையாட்டு வீரனின் வரலாற்றை காண முடியவில்லை. சீவகசிந்தாமணியில் எட்டுப் பெண்களை மணமுடித்த சீவகன் கதாநாயகனாக போற்றப்படுகிறான். சிலப்பதிகாரத்தில் இரண்டு பெண்களை மணமுடித்த கோவலன் முக்கிய தலைவனாகப் போற்றப்படுகிறான். பெரிய புராணத்தின் கதாநாயகனாக இரு பெண்களை மணமுடித்த சுந்தரர் வருகிறார். ஆக மண்ணுக்காகவும், பெண்ணுக்காகவும் அடிபட்டவர்களின் கதைகளை தொகுத்தே இரண்டாயிரம் வருட தமிழ் இலக்கிய வரலாறு பதியப்பட்டுள்ளது. ஆனால் விளையாட்டு வீரர்களை காவிய நாயகனாக்கி இலக்கியம் செய்ய வேண்டும் என்ற இலக்கை இருபதாம் நூற்றாண்டுவரை தமிழ் படைப்பிலக்கியத்தால் தொட்டுவிட முடியவில்லை. ஆனால் இதோ நாம் வெளியிடும் இந்த பொன்விழா மலர் விளையாட்டு வீரர்களை காவிய நாயகர்களாக, பாட்டுடைத் தலைவர்களாக போற்றிய தமிழ் பெரும் நூலாக வெளி வந்துள்ளது.

இதுவரை காலமும் இலங்கையின் வரலாற்றை சிங்களவர்களே பதிவு செய்துள்ளார்கள். சிங்களவர்களை மட்டுமல்ல, தமிழர்களின் வரலாற்றையும் அவர்களே பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். சிங்கள வரலாற்று நூலான மகாவம்சத்தின் முதல் பிரிவின் காவிய நாயகன் துட்டகைமுனு. தமிழனான எல்லாளனை வெற்றி கொண்ட காரணத்தினால் இவன் காவிய நாயகனாக்கப்பட்டான். அடுத்த பிரிவின் காவிய நாயகன் முதலாம் விஜயபாகு. இவன் இலங்கையை கைப்பற்றி 77 வருடங்கள் ஆட்சி செய்த சோழர்களை தோற்கடித்த காரணத்தால் காவிய நாயகனாக்கப்பட்டுள்ளான். அவ்வளவுடன் இனவாதம் நின்றுபோனதா இல்லை… இப்போது தமிழர்களை தோற்கடித்தவன் என்ற புகழுடன் மகிந்த ராஜபக்ஷவரை மகாவம்சம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அன்று முதல் இன்றுவரை தமிழர்களை இரண்டாந்தர பிரஜைகளாகவும், தோற்கடிக்கப்படும் இனமாகவும் அடையாளம் காட்டும் உளவியலை கையிலெடுத்தே சிங்கள வரலாறு எழுதப்பட்டுள்ளது. சிங்களவர்கள் இப்படியான பக்கச்சார்பான வரலாற்றை எழுதியபோது நம் தமிழர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கோபம் சென்ற ஆண்டுவரை எனக்கும் இருந்தது. தமிழர்கள் தமது சொந்த வரலாற்றை பதிவு செய்ய மறந்த இனம் என்றே நானும் கருதி வந்தேன். ஆனால் இப்போது இலங்கையில் உள்ள மாவீரர் சமாதிகள் அழிக்கப்பட்டு ஒரு வரலாறு புதைக்கப்பட்டதை நமது கண்களாலேயே பார்க்கிறோம். பிரபாகரன் பிறந்த வீடே இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட காட்சியையும் பார்த்தோம். எனவே எமது வரலாற்றை அழித்து, தமது வரலாற்றை பதிவு செய்கிறது சிங்களம் என்ற உண்மையையும் புரிந்து கொள்ள முடிந்தது.

நமது முன்னோர்கள் தவறிழைக்கவில்லை அவர்கள் நமது வரலாற்றை ஒழுங்காக பதிவு செய்துள்ளார்கள். ஆனால் ஒரு வேலையை அவர்கள் செய்யவில்லை, சிங்கள வரலாற்றை அழிக்கும் வேலையை செய்யவில்லை. சிங்களவர்களின் வரலாறு எழுதப்பட்ட அபயகிரி விகாரையை எல்லாளனின் தேர் மோதி உடைந்தபோது அவன் அக்கணமே அதை திருத்திக் கொடுத்தான். ஆனால் சிங்கள ஆட்சியாளளோ அதுபோல எமது வரலாற்றை மதித்து நடந்தவர்கள் அல்ல. அதற்கு இடிந்து கிடக்கும் மாவீரர் சமாதிகளும், எழுந்து நிற்கும் புதிய புத்த விகாரைகளுமே சாட்சி. ஆகவேதான் நமது வரலாற்றை ஒழுங்குபட பதிவு செய்ய வேண்டிய கடப்பாடு நமக்கு முன் எப்போதுமே உயிர்ப்புடன் இருக்கிறது. நாம் வரலாற்றை பதிவதில் என்றுமே விழிப்புடன் இருப்பது அவசியம்.

நம்மால் எழுதப்பட்ட இந்த நூல் தமிழர்களை தோற்றுப்போன இனமாக பதிவு செய்யவில்லை. சிங்கள அணிகளுடன் மோதி வல்வை புளுஸ் வெற்றிபெற்ற வரலாறு இதில் இருக்கிறது. நூறு கோடி மக்களில் இருந்து உருவான சீன நாட்டு உதைபந்தாட்ட அணிக்கே நமது வீரர்கள் கோல்களை போட்ட கதை இதில் இருக்கிறது. கம்பகாவில் வைத்து சிங்கள கரபந்தாட்ட அணியை வென்ற நம் தமிழ் வீரர்களின் கதை இருக்கிறது. இலங்கைக் கரபந்தாட்ட அணிக்கே தலைமை தாங்கி பாகிஸ்தான் சென்று, பாகிஸ்தான் அணியுடன் மோதிய கதிர்காமலிங்கத்தின் வரலாறு இருக்கிறது. அது மட்டுமா பாக்கு நீரிணையை நீந்திக்கடந்த நீச்சல் வீரன் நவரத்தினசாமி, ஆழிக்குமரன் ஆனந்தன் பதித்த கின்னஸ் சாதனைகள் என்று சாதனைப் பட்டியல்கள் நீண்டு செல்கின்றன. படிக்கப்படிக்க உணர்ச்சியூட்டுகிறது, தமிழன் தன்மானத்திற்கு ஒரு தலை நிமிர்வு தருகிறது இந்த நூல்.

கடந்த ஐம்பது ஆண்டு கால வரலாற்றில் வல்வை புளுஸ் பல மைதானங்களில் சிங்கள இராணுவத்தை சந்தித்துள்ளது, போலீசை சந்தித்துள்ளது, கடற்படை, ஆகாயப்படை என்று சிறீலங்காவின் அத்தனை படைகளுடனும் மோதியிருக்கிறது. வல்வையுடன் விளையாடுவதென்றால் அகில இலங்கையில் இருந்தும் இராணுவத்தின் தரமான வீரர்களை களம் இறக்குவார்கள். வல்வை புளுசின் ஒரு சில வீரர்கள் தமக்கிருந்த ஆற்றலாலும், ஆளுமையாலும் சிங்கள இனத்தின் நாடளாவிய திறமைகளுடன் மைதானத்தில் மோதினார்கள். வென்றார்கள், சரித்திரம் படைத்தார்கள், அந்த சரித்திரத்தின் பதிவுகளை சுமந்து வருகிறது இந்த நூல்.

நாம் படிக்கும் நூல்களில் எல்லாம் ஒரு வீட்டின் கதை இருக்கும் அதை உங்கள் வீடுகளில் எல்லாம் வையுங்கள் என்றும் வெளியீட்டாளர்கள் சொல்வார்கள். ஆனால் இந்த நூலிலோ உங்கள் ஒவ்வொருவர் வீட்டின் கதையும் இருக்கிறது. வீட்டுக்கு விளக்கு எப்படி முக்கியமோ அதுபோல உங்கள் வீட்டிற்கு இது விளக்காக அமைகிறது. நமது முன்னோர்களின் வரலாறு தெரியாமல் இருளடைந்து கிடக்கும் புலம் பெயர் இளையோர் வாழ்வில் புது விளக்கேற்ற இந்த நூலை பயன்படுத்த முடியும்.

இதுபோல அனைத்து கழகங்களுமே தமது பதிவுகளை வண்ணப்படங்களுடன் வரலாற்று ஆவணமாக வெளியிட்டால் இலங்கை தமிழினத்தின் வரலாற்றை செப்பமாகப் பதிவு செய்யும் பணி இலகுவாக முடிவடைந்துவிடும். வரலாற்றை படிக்கும்போதுதான் பிள்ளைகளின் நினைவாற்றல் பெருகும். இங்கே உதைபந்தாட்ட வரலாற்றை மறந்துவிடாமல் சொன்ன நண்பர் பிருதிவிராஜன் சிறந்த வரலாற்று மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலைகளுக்காக பூக்களை பிடுங்கினாலும் அவை பூத்தபடிதான் இருக்கும். அதுபோல நமது வரலாற்றை பதிவு செய்யும் பணிகளும் பூத்தபடியே இருக்க வேண்டும். தமிழனின் அழிவில்லாத எழுச்சிக்கு அதுவே ஆதாரமாக அமையும். இந்தப் பொன்விழா பூ பூத்தது போல மேலும் பல பொன்விழாப் பூக்கள் பூத்து தமிழினத்தின் பெருமைக்கும் வரலாற்றுக்கும் அணி சேர்க்க வேண்டும். அதற்கு ஆதார சுருதியாக இருக்கும் இந்த நூலை அனைத்து ஊர் மக்களும் படிக்க வேண்டும், தமது ஊர்களுக்கும் இதுபோன்ற தலை சிறந்த ஆவணங்களை உருவாக்க வேண்டும். அனைத்தும் தமிழன்னையின் வரலாற்று முகத்திற்கு புதுமை கொடுக்க வேண்டும்.

வாழ்க வல்வை புளுஸ்..!

வணக்கம்.

கி.செ.துரை 14.12.2011

நன்றி

மூலம் - http://www.alaikal.c...0636#more-90636

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

வல்வையைப் பற்றிக் கூறும்போது எனது நினைவில் வருபவர்கள், இருவர்!

ஒருவர் பிரபாகரன்! மற்றவர் ஆழிக்குமரன், ஆனந்தன்!

வரலாறுகளைப் பதிவது, வருங்காலத் தலைமுறைக்கு ஒரு அடையாளத்தைக் கொடுக்கும்!

தேர் மோதி உடைந்து போன விகாரையைத் திரும்ப, எல்லாளன் கட்டிக் கொடுத்ததில் நான் எந்தத் தவறையும் காணவில்லை.தான் செய்த தவறுக்காக, அவனது 'பிராயசித்தமே அதுவாகும்! மகாவம்சத்தின் பிறப்பை, அது நிறுத்தியுமிருக்காது என்பது எனது எண்ணம்!

வரலாறுகள் நிரந்தரமானவை அல்ல!

அவை மாறக் கூடியவை!

எங்கள் வரலாறும் திரும்பவும் எழுதப் படும்!

நல்லதோர் பகிர்வுக்கு, நன்றிகள், சகோதரி!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.