Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கா விரித்துள்ள வலை அச்சத்தில் இலங்கைத் தரப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா விரித்துள்ள வலை அச்சத்தில் இலங்கைத் தரப்பு

ஆக்கம்: இதயச்சந்திரன்

எது நடக்குமென்று நினைத்தோமே அது நடந்துவிட்டது. ஏற்கனவே ஊடகங்களில் கசிந்த அமெரிக்காவின் பிரேரணை, பல திருத்தங்களுடன் கடந்த புதனன்று ஐ.நா. சபை, மனித உரிமை சபையின் 19 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் சொல்லப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் அப்பிரேரணையின் மையப்பொருள்.

பலரும் எதிர்பார்த்தது போன்று ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை செயற்படுத்துமாறு இப்பிரேரணை கோரவில்லை. ஆகவே, இப்பிரேரணை அரசைப் பொறுத்தவரை சற்று ஆறுதலான விடயமே.

ஆனாலும் பரிந்துரைகளை நிறைவேற்றுங்களென்ற, ஆலோசனைபோல் இது அமைந்திருந்தால் இலங்கை அரசு கவலையடைந்திருக்காது. 22 ஆவது கூட்டத் தொடரில் இது பற்றிப் பேசுவோம் என்கிற வகையில் அமைந்திருப்பதுதான் வலையொன்று தம்மைச் சுற்றி பின்னப்படுகிறது என்கிற கலக்கத்தை அரசிற்கு ஏற்படுத்தியுள்ளது.

“இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறலையும் ஊக்குவித்தல் என்கிற தலைப்பிட்டு சமர்ப்பிக்கப்பட்ட இந்த நகல் பிரேரணை, விவாதத்திற்கு வரும்போது மாற்றத்திற்கு உள்ளாக்கப்படலாம்.

பயங்கரவாத முறியடிப்பில் ஈடுபடும் ஒரு அரசானது அனைத்துலக மனித உரிமைகள் மனிதாபிமானச் சட்டங்கள் மற்றும் அகதிகள் குறித்த விடயங்களில் சர்வதேச சட்ட விதிகளை மீள் உறுதி செய்ய வேண்டும் எனச் சுட்டிக் காட்டும் இப்பிரேரணை, நல்லிணக்க ஆணைக்குழுவினால் கூறப்பட்ட பரிந்துரைகள் சாத்தியமான பங்களிப்பினை வழங்குமெனக் குறிப்பிடுகிறது.

இருப்பினும் பரவலாகக் குற்றஞ்சாட்டப்படும் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் அத்தோடு வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுதல், காணித் தகராறு தொடர்பான பிரச்சினைக்கு நடு நிலையான பொறிமுறையொன்றை நிறுவுதல் என நீண்டு செல்லும் இப் பிரேரணை, அரசியல் தீர்வு குறித்து பேசும்போது, மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் தேவை என்கிறது. ஆனாலும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சர்வதேச சட்ட விதிகள் மோசமாக மீறப்பட்ட விவகாரம் தொடர்பாக போதுமான அளவு கவனம் செலுத்தப்படவில்லையெனக் குறிப்பிடப்படுவது கவனிக்கத்தக்கது.

அதேவேளை, மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் மனித உரிமைப் பேரவையின் உயர் ஆணையாளர் அலுவலகமானது பொருத்தமான விசேட செயல் முறைகளை அரசுக்கு வழங்குவதோடு அதனை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள விவகாரமே நெருக்கடி நிலையைத் தோற்றுவிக்கப்போகின்றது.

அத்தோடு 22ஆவது கூட்டத் தொடரில் அது குறித்தான அறிக்கையை ஆணையாளர் அலுவலகம் சமர்ப்பிக்க வேண்டும் என்கிற வேண்டுகோள் இலங்கைத் தரப்பால் ஏற்றுக் கொள்ளப்படுமா? என்பதுதான் இங்குள்ள முதன்மையான பிரச்சினை.

போர் நிறுத்த கண்காணிப்புக் குழு இலங்கையில் செயற்பட்ட காலத்தில் ஐ.நா. சபையின் கண்காணிப்பகம் ஒன்றினை கொழும்பில் நிறுவிட அன்று முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் இலங்கை அரசு அதனை முற்றாக நிராகரித்தது.

உள்நாட்டுப் பிரச்சினையில் எந்தவொரு சர்வதேச அமைப்பினது தலையீடு தேவையற்றதெனவும் அதன் இறைமையைக் கேள்விக்குள்ளாக்கும் நகர்வாக அது அமையுமென்றும் ஆட்சியாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆகவே, பிரேரணை குறித்து அமெரிக்காவால் வியாழனன்று வெளிக்கள விவாதமொன்றினை மேற்கொண்டபோது அங்கு பேசிய முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், இப்பிரேரணையானது இலங்கையின் இறைமைக்கு விடப்படும் சவால் என்று குறிப்பிட்ட விடயம் பழைய நிலைப்பாட்டினை மீளவும் உறுதிப்படுத்துகிறதெனலாம்.

இவை தவிர ஜெனீவாவின் ஐக்கிய நாடுகளிற்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தமரா குணநாயகம் வழங்கும் மரதன் ஓட்ட நேர்காணல்கள் இறைமை குறித்துப் பேசுவதோடு வல்லரசு நாடுகள் மனித உரிமைப் பேரவையை வளர்முக நாடுகளை துன்புறுத்தும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன என்கிற புவிசார் அரசியலையும் இணைத்துக் கூறுவதைக் காணக் கூடியதாகவுள்ளது. இதில் இலங்கை என்பது வளர்முக நாடா? என்கிற கேள்விக்கு அப்பால் அமெரிக்க எதிர்ப்பு அணிகளை தமக்குச் சார்பாகத் திருப்பும் தந்திரோபாயம் அவர் உரைகளில் தென்படுவதையே காண முடிகிறது.

ஆகவே, பிளவுபட்ட முகாம்களுக்கிடையிலான முரண்பாடுகளை பயன்படுத்தி இறைமை, உள்நாட்டுப் பிரச்சினை என்கிற சொல்லாடல்களுக்கூடாக இன அழிப்புக் குற்றச்சாட்டிலிருந்து தப்பித்து விடலாமென்கிற வகையிலேயே தனது இராஜதந்திர காய்நகர்த்தல்களை மேற்கொள்கிறது இலங்கை அரசு.

இருப்பினும் ஐ.நா. சபையில் அங்கத்துவம் வகித்தாலும் தானொரு விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட நாடெனக் கூற முற்படும் இலங்கை, ஐக்கிய நாடுகள் சபையின் சமவாரியத்தில் கைச் சாத்திட்டது ஏன் என்பது புரியவில்லை.

அதேவேளை, வருகிற 14 ஆம் திகதி சனல் 4 தொலைக்காட்சி வெளியிடவுள்ள இலங்கைக் கொலைக் களத்தின் இரண்டாம் பாகமான “தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்” என்கிற ஆவணம் வெளிவரும் போது இலங்கை அரசின் ஆவேச வெளிப்பாடு இன்னும் அதிகமாகலாம். ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுங்கள் எனக் கூறும் அமெரிக்கப் பிரேரணையும் பல சவால்களை எதிர்நோக்கலாம்.

அதேவேளை, பிரேரணையினை மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றுவதனூடாக எதனைச் சாதிக்க முற்படுகிறது அமெரிக்கா என்பது குறித்துப் பார்க்க வேண்டும்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதனடிப்படையில் இப்பிரேரணை நகர்வு முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே பரவலாக உரையாடப்படும் “முத்துமாலைத் திட்டம்” ஊடாக, துறைமுக அபிவிருத்திப் பணி என்கிற போர்வையில் பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மியன்மார் போன்ற இந்தியாவைச் சூழவுள்ள தென் கிழக்காசிய நாடுகளில் கால் பதித்துள்ளது சீனா.

இதன் அடுத்த கட்டமாக, படைத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கும் சீனா, அணு ஆயுத ஏவுகணைகளைத் தாங்கி நிற்கும் நீர் மூழ்கிக் கப்பல்களுக்கான தளங்களை மேற்குறிப்பிடப்பட்ட நாடுகளின் துறைமுகங்களில் நிறுவி விடலாம் என்கிற எச்சரிக்கைச் செய்தி, இந்திய “ரோ' விற்கும் அமெக்காவின் சி.ஐ.ஏ.இற்கும் எட்டுகிறது.

ஆகவே மலாக்கா நீரிணைக்கு அப்பாலும் இந்து சமுத்திர பிராந்தியக் கடல் பரப்பிலும் சீனாவின் நடமாட்டத்தை இல்லாதொழிப்பதற்கு இப்போதே தனது இறுக்கமான நகர்வுகளை முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை சீன உறவுத் தளம் வலுடைவதை அவதானிக்கும் மேற்குலகம், இதனை முறியடிக்கும் வகையில் பாரிய அழுத்தங்களை இலங்கை மீது ஒரேயடியாகப் பிரயோகிக்க தற்போது விரும்பவில்லை.

இலங்கை குறித்தான இந்தியாவின் மென் போக்கும் அதற்கொரு காரணியாக அமைகிறதெனலாம்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்ற விசாரணை என்கிற பாதைகள் ஊடாகவே முதற்கட்டமாக இலங்கையை அணுக முற்படுவதைப் பார்க்க வேண்டும்.

இதனை வரவேற்று பல புலம்பெயர் தமிழ் அமைப்புகள் அறிக்கை விடுகின்றன.

அமெக்காவின் நிகழ்ச்சி நிரலைப் புரிந்து கொண்டு இவ்வாறான வாழ்த்துச் செய்திகளைத் தெரிவிக்கின்றார்களா? அல்லது மாற்று வழியின்றி அதனையே தமது இராஜதந்திரமென்று ஏற்றுக் கொள்கிறார்களா என்று புரியவில்லை.

பிரேரணையில் கிழக்கைப் பற்றிக் குறிப்பிடுவது தவிர்க்கப்பட்டு வடக்கில் இராணுவ பிரசன்னத்தை அகற்ற வேண்டுமெனவும் வட கிழக்கு இணைப்புக் குறித்து பேசாமல் மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட வேண்டுமென்று கூறுவதை இவர்கள் வர வேற்கின்றார்களா என்கிற கேள்வி எழுகின்றது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய நடைமுறை சார்ந்த விடயங்கள், தமிழ் மக்களுக்கு சாதகமாக இருப்பதுபோல் தென்பட்டாலும் பிறப்புரிமையான தாயகக் கோட்பாடு மற்றும் இறைமையோடு கூடிய அதிகாரம் என்கிற முக்கிய விவகாரங்களை இப் பிரேரணை உள்வாங்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

அவர்கள் இதனை ஏற்றுக் கொள்கிறார்கள் இல்லை என்பதற்காக, நிரந்தரத் தீர்வொன்றிற்கான எமது கோரிக்கையை நாம் தொடர்ச்சியாக முன் வைப்பதே பொருத்தமானதாகும்.

சர்வதேச வல்லரசாளர்களின் நலன் வேறு தமிழ் மக்களின் நலன் வேறு என்பதைப் புரிந்து கொள்வதில் சிக்கல் ஏதுமில்லை.

எது எவ்வாறு இருப்பினும் பரிந்துரைகள் நிறைவேற்றப்படுவதை கண்காணிக்கும் பங்காளிகளாக மனித உரிமைப் பேரவையை இணைத்துக் கொள்ள வேண்டுமென குறிபிடப்பட்ட செய்தியே முறுகல் நிலையை தோற்றுவித்து அடுத்த 22 ஆவது கூட்டத் தொடரில் பல விவாதங்களை உருவாக்க வழிசமைக்கும் போல் தெரிகிறது.

எதற்கும் அசைந்து கொடுக்காத நிலைப்பாட்டினை இலங்கை அரசு மேற்கொண்டால், அடுத்த கட்டத்தில் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படக் கூடிய சாத்தியப்பாடுகளுண்டு.

ஆனாலும் இப் பிரேரணை விவாதத்திற்கு வரும்போது, பரிந்துரைகளை நிறைவேற்ற மனித உரிமைப் பேரவையின் ஆலோசனைகள் தேவையில்லை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டால் இலங்கை அரசின் மேற்குலகிற்கு எதிரான போக்கு தணிவடையும்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தாய்நாட்டிற்கு எதிராக செயற்படும் “வெளி நாட்டுச் சக்திகளைத் தோற்கடிப்போம்” என்கிற கையெழுத்துப் போராட்டம் ஓய்ந்துபோகும். அமெரிக்கா வழங்கவுள்ள ஒரு வருட கால தவணை என்பது அரசிற்கெதிராக மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களை வலுப்படுத்த உதவும் போல் தெரிகிறது.

மூலம்: வீரகேசரி - பங்குனி 11, 2012

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.