Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் அறிவுச்சொத்து - ஆட்டைப் பெரிய திருவிழா’

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

‘ஆட்டைப் பெரிய திருவிழா’

(பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்)

‘ஆட்டை’ என்ற சொல்லுக்கு விளையாட்டின் திருப்பம் (turn in a game) என்று சென்னைப் பல்கலைக்கழக தமிழ் களஞ்சியம் (Tamil Lexicon – Madras University 1982) பொருள் கூறுகிறது. ‘ஆட்டைத் திருவிழா’ எனில் வருசத்  திருவிழா (Annual Festival) என்றும் விளக்குகிறது. மேலும், ஆட்டைக்கோள், ஆட்டைக் காணிக்கை, ஆட்டைப் பாழ், ஆட்டை வாரியம், ஆட்டைப் பிறாயம் பொன்ற சொற்களும் ஒத்த பொருள் உடையனவாக கல்வெட்டுக் கலைச்சொல் அகராதிகளில் குறிப்பிடப்படுகிறது.  ஆட்டை என்ற சொல் அதன் நேர்பொருளில் விளங்கிக் கொள்ளப்பட்டு கடைபிடிக்கப்பட்ட காலம் மாறி, இன்று ‘திருடுவது’ என்ற பொருளில் உலக வழக்காகத் திரிந்து வழங்குவது உற்று  நோக்கத்தக்கது. வியப்பு என்னவெனில் ‘ஆட்டை’ என்ற நல்ல தமிழ்ச்சொல்லை நமது செவ்வியல் இலக்கியங்களும் ஆட்டையைப் போட்டிருக்கின்றன என்று தெரிய வருகிறது.

 

            தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டுகளில் ‘ஆட்டை’ என்ற சொல் பல இடங்களில் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ‘ஓராட்டை’ எனில்  ஓராண்டு என்றும் ‘ஆட்டாண்டு’ எனில் ஆண்டுதோறும் என்றும் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

 

தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டி முடித்து அதன் தொடர் செயல்பாட்டிற்காக ஏராளமான காணிகளையும் காசுகளையும் நிவந்தங்களாக ஏற்படுத்திய மன்னன், அவற்றின் விளைச்சலை ஆண்டு வட்டியாக ஓர் ஆட்டைக்கு ஒரு முறை எட்டில் ஒரு பங்காகத் தரவேண்டும் என்று குறிப்பிடுகிறான்.

காசின் வாய் அரைகாற் காசு பொலிசையூட்டாக

உடையார் பண்டாரத்தே இடக்கடவ…

 

இவ்வாறாகக் கல்வெட்டுச் செய்திகள் உள்ளமையால், ஆட்டை நாட்களை மிகச் சரியாக வரையறுத்தே ஆண்டு நாட்கள் கணக்கிடப் பட்டிருப்பதாகக் கருத இடம் இருக்கிறது. ஓர் ஆண்டின் நாட்கள் 360 என்றும், அவற்றுக்கு ஒவ்வொரு நாளும் தரவேண்டிய வட்டியை ‘நிசதம் இடக்கடவ’ என்றும் தெளிவாகக் குறிப்பிடுகின்றான்.

 

--- தொடரும்

  • கருத்துக்கள உறவுகள்

ஏமாற்றிவிட்டான் என்பதற்கு ஆட்டையைப் போட்டுட்டான் என்று தமிழகத்தில் சொல்லுவார்கள்.. :unsure::D

  • கருத்துக்கள உறவுகள்

சென்னைத் தமிழ் கிளம்பி நல்ல தமிழை ஆட்டையைப் போட்டுட்டுது !!  :)

 

‘ஆட்டைப் பெரிய திருவிழா’

(பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்)

‘ஆட்டை’ என்ற சொல்லுக்கு விளையாட்டின் திருப்பம் (turn in a game) என்று சென்னைப் பல்கலைக்கழக தமிழ் களஞ்சியம் (Tamil Lexicon – Madras University 1982) பொருள் கூறுகிறது. ‘ஆட்டைத் திருவிழா’ எனில் வருசத்  திருவிழா (Annual Festival) என்றும் விளக்குகிறது. மேலும், ஆட்டைக்கோள், ஆட்டைக் காணிக்கை, ஆட்டைப் பாழ், ஆட்டை வாரியம், ஆட்டைப் பிறாயம் பொன்ற சொற்களும் ஒத்த பொருள் உடையனவாக கல்வெட்டுக் கலைச்சொல் அகராதிகளில் குறிப்பிடப்படுகிறது.  ஆட்டை என்ற சொல் அதன் நேர்பொருளில் விளங்கிக் கொள்ளப்பட்டு கடைபிடிக்கப்பட்ட காலம் மாறி, இன்று ‘திருடுவது’ என்ற பொருளில் உலக வழக்காகத் திரிந்து வழங்குவது உற்று  நோக்கத்தக்கது. வியப்பு என்னவெனில் ‘ஆட்டை’ என்ற நல்ல தமிழ்ச்சொல்லை நமது செவ்வியல் இலக்கியங்களும் ஆட்டையைப் போட்டிருக்கின்றன என்று தெரிய வருகிறது.

 

            தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டுகளில் ‘ஆட்டை’ என்ற சொல் பல இடங்களில் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ‘ஓராட்டை’ எனில்  ஓராண்டு என்றும் ‘ஆட்டாண்டு’ எனில் ஆண்டுதோறும் என்றும் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

 

தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டி முடித்து அதன் தொடர் செயல்பாட்டிற்காக ஏராளமான காணிகளையும் காசுகளையும் நிவந்தங்களாக ஏற்படுத்திய மன்னன், அவற்றின் விளைச்சலை ஆண்டு வட்டியாக ஓர் ஆட்டைக்கு ஒரு முறை எட்டில் ஒரு பங்காகத் தரவேண்டும் என்று குறிப்பிடுகிறான்.

காசின் வாய் அரைகாற் காசு பொலிசையூட்டாக

உடையார் பண்டாரத்தே இடக்கடவ…

 

இவ்வாறாகக் கல்வெட்டுச் செய்திகள் உள்ளமையால், ஆட்டை நாட்களை மிகச் சரியாக வரையறுத்தே ஆண்டு நாட்கள் கணக்கிடப் பட்டிருப்பதாகக் கருத இடம் இருக்கிறது. ஓர் ஆண்டின் நாட்கள் 360 என்றும், அவற்றுக்கு ஒவ்வொரு நாளும் தரவேண்டிய வட்டியை ‘நிசதம் இடக்கடவ’ என்றும் தெளிவாகக் குறிப்பிடுகின்றான்.

 

--- தொடரும்

 

 

பேச்சு வழக்கு எப்படியெல்லாம் ஒரு சொல்லின் பொருளை காலப்போக்கில் மாற்றியமைத்து விடுகின்றன என்பதற்கு இந்த ஆட்டை ஒரு உதாரணம் .ஆட்டைக்குப் பொருள் தந்த உங்களுக்கு மிக்க நன்றிகள் .

 

  • கருத்துக்கள உறவுகள்

நாற்றம் என்பது நறுமணம் என்பது மாறி துர்மணம் என்று இன்று பொருள்படுவது போல இதுவும் மாறிவிட்டது. கற்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ? மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளாம் இன்று இப்படி முதல்வரியோடு திருப்பாவை பாடிய ஆண்டாளின் இன்னொரு பாடலைப்பார்க்கலாமா? ’கற்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ, திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமே விருப்புற்று கேட்கின்றேன் சொல்லாழி வெண் சங்கே!’ கற்பூரம் என்றால் மகா விஷ்ணுவுக்கு உகந்த பச்சை கற்பூரம். கமலப்பூஎன்றால் கமலப்பூ தான்.கமலம் என்றால் தாமரை. பவளச் செவ்வாய் தித்திப்பாக இருக்குமோ? என்று சங்கிடம்சந்தேகம் கேட்கிறாள். மாதவனின் வாய்ச்சுவைச் பற்றியும், வாசனை பற்றியும் ஆசைஆசையாக கேட்கிறேன், சொல்லேன் வெண்சங்கே என்று சங்கிடம் கேட்கிறாள் ஆண்டாள்! இதைவிட சுவையான ஒரு காதல் பாட்டை எந்தக் கவிஞர் தரமுடியும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துக்களுக்கு நன்றி!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர்ச்சி-1

 

குறிப்பாக ‘இலாவச்சவேர்’ 8 நாட்களுக்கு ஒரு முறை தரப்படவேண்டும் என்பதனை ‘அக்கப்பொலிசை’ என்று குறிப்பிடுகிறான். 8-ஆம் நாளினை அக்கம் என்றும் 15 நாட்களைப் பக்கம் என்றும் புரிந்து கொள்ளும் வகையில் 6 திங்கள் கொண்ட ‘கால அளவை’ ஒரு ‘பசான்’ என்று குறிப்பிடப்படுவதாகத் தெரிகிறது. பசான் என்ற சொல், வசம் என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம். வடசெலவு, தென் செலவு முறையே உத்தராயண வசம், தட்சிணாயணவசம் என்று அழைக்கப்பட்டுப் பின்னாளில் அரையாட்டை ஒரு பசான் ஆகியிருக்கலாம்.

 

‘பத்தாவது பசான் முதற்கொண்டு இடக்கடவ பொலிசையூட்டு’ என்று கல்வெட்டுகள் பல இடங்களில் குறிப்பிடும் செய்தியானது, தரப்பட்ட நிலங்களைப் பண்படுத்தி சீரான விளைச்சலைப் பெற ஐந்தாண்டுகள் பிடிக்கும் என்ற பரிவின் அடிப்படையிலான கால இடைவெளியாக இருக்கலாம். அக்காலத்தில் ஓராட்டைக்கு இரண்டு போகம் குறைவின்றி விளைந்திருக்கும் எனினும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் மன்னன் பொலிசையூட்டுப் பெற்றிருக்கிறான் என்று தெரிகிறது.

 

‘ஆட்டை வட்டம் பொலிசையூட்டு’ என்று பல இடங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறபடியால் ஆட்டை நாட்கள் தெளிவாக வரையறுக்கப் பட்டிருக்கின்றன என்று கொள்ளலாம். ஏராளமான வைப்புத்தொகைக் கணக்கு முறைகளில் இருந்து ஆண்டு நாட்களின் எண்ணிக்கை 360 என்று உறுதியாகக் கணக்கிடலாம். அரசாணைகள் அனைத்தும் தொடர் நாட்களில் குறிப்பிடப்படுவதும் ஒரு கூடுதல் தரவாகக் கிடைக்கிறது.

 

மெய்கீர்த்தியில் ஆண்டு:-

கல்வெட்டு வரலாற்றில் தனது போர் வெற்றிகளைக் குறிப்பிடும் மெய்கீர்த்தி முறையை முதலில் அறிமுகம் செய்தவன் மாமன்னன் இராஜராஜன் ஆவான்.

 

‘திருமகள் போல பெருநிலச் செல்விய்ம் …. என்று தொடங்கும் தனது அனைத்து மெய்கீர்த்திகளிலும் ஒரு செய்தி தவறாமல் குறிப்பிடப்படுகிறது.

‘திண்டிறல் வென்றி தண்டாற் கொண்ட தன்னெழில் வளர்

ஊழியுள் எல்லா யாண்டும் தொழுதக விளங்கும் யாண்டேய்!’.

இராஜராஜனின் மெய்கீர்த்தியில் மட்டுமே இடம்பெறும் இச்செய்தி என்ன சொல்கிறது என்பதனை, இதுவரை யாரும் ஆண்டு நாட்களை வரையறை செய்யும் பார்வையில் ஆய்வு செய்தது இல்லை.

 

தன்னுடைய ஆட்சித் திறத்தால் ஆண்டு நாட்கள் 360 ஆகத் தனது கட்டுப்பாட்டுக்குள் அகவிளங்குகின்றன என்று சொல்ல வருகிறார? என்ற வினா எழுகிறது. ‘அகவயின்’ விளங்குதல் என்ற சொல்லாட்சி பழந்தமிழ் இலக்கியங்களில் வானவியலோடு தொடர்புடையைதாக இருக்கிறது. இதனைத் தனது போர் வெற்றிகளின் வரிசையில் பட்டியலிடுவதால் , தவறித் தோல்விய்ம் நேரலாம் என்றும் புரிந்து கொள்ளலாம்.

 

ஆண்டு நாட்களை வரையறை செய்யும் தொழில் நுட்ப அறிவையும், உரிய வல்லுநர் குழுக்களையும், ஒன்றுக்கும் மேற்பட்ட சரிபார்பு உத்திகளையும் வரலாற்றில் கடைசியாகக் கையாண்ட மன்னன் இராஜராஜன் என்றே தெரிகிறது.

 

தொடரும் - 2

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர்ச்சி - 2

 

தமிழர் மரபில் இது புதிது அல்ல:

பழந்தமிழ் இலக்கியங்கள் தரும் அரிய செய்திகளில் இருந்து இம் முயற்சியினைப் பாண்டியர், சேரர், முற்காலச் சோழர் ஆகிய மன்னர்கள் முயன்று வெற்றி பெற்றனர் என்று அறியமுடிகிறது. அந்த வகையில் மன்னன் இராஜராஜன் தஞ்சைப் பெரிய கோயிலில் மேற்கொண்ட முயற்சியும் அதன் வெற்றியும் பின்னடைவும் அரிய படிப்பினையாகக் கல்வெட்டுகளின் வழியே கிடைக்கிறது.

 

நாம் எடுப்பிச்ச திருக்கற்றனி

நாம் எடுப்பிச்ச திருக்கற்றனி என்று மன்னன் பெருமையோடு குறிப்பிடும் ‘ராஜராஜேஸ்வரம்’ என்பது பெரிய கோயிலின் கருவறையும் மேற்கட்டு விமானமும் ஆகும். அதன் முன்பு ஒரு நீண்ட மேடை மட்டுமெ அக்காலத்தில் மன்னன் இராஜராஜனால் எழுப்பப்பட்டது என்று பேராசிரிர் இராசு பவுன் துறை (மேனாள் கட்டடக் கலைத்துறை தலைவர், தமிழ்ப்பல்கலைக்கழகம்) அவர்கள் கள ஆய்வு செய்து, தனது நூல் தஞ்சை இராஜஇராஜேஸ்வரம் விமானத் திருக்கற்றளி கட்டடக்கலை மரபு – பக்கம் 240-ல் குறிப்பிடுகிறார் (வெளியீடு மெய்யப்பன் பதிப்பகம் 2010)

 

அது ஒரு மேடையாக மட்டுமே இருந்து  அதில் 400 தளிகைப் ப்ண்டுகள் இசைக் கரணங்களால் வடசெலவு தென்செலவின் விலகலுக்கு இணங்க அச்சுக் கோட்டை ஒட்டி ஆடினர் என்று அறிய முடிகிறது. வழிபாட்டின் ஒரு பகுதியாக இது இடம் பெற்றிருக்கலாம்.

 

மின்னெடும் புருவத்து இளமயில் அனையார்

விலங்கல் செய் நாடக சாலை

இன்னடம் பயிலும் இஞ்சி சூழ் தஞ்சை

இராசராசேச் சரத்திவர்க்கே (கருவூரார் – திருவிசைப்பா-8)

 

விலங்கல் என்ற சொல் வட தென் செலவினைக் குறிக்கும் ஒரு சொல்லாகப் பதிற்றுப் பத்தின் வழி (ப.ப. 31-46) அறிய புடிகிறது.

 

‘இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து

பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்து (சிலம்பு அரங்கேற்றுக்காதை -12,13)

………

………..

அசையா மரபின் இசையோன் தானும்

இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறியத்

தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி

வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்தின்

நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து (சிலம்பு அரங்கேற்றுக்காதை 36-40)

 

இங்கே குறிப்பிடப்படும் விலங்கல், விலங்கல் செய் நாடக சாலை, வேத்தியல் ஆகியனவும் பழந்தமிழ் இலக்கியங்களில் பல்வேறு இடங்களில் பதிவாகியிருக்கும் வேந்துறு தொழில், வேந்துவினை போன்றனவும் ஆட்டை வரையறை முயற்சியில் மன்னர்கள் மரபு வழியே செய்து வந்த தொழிலைக் குறிப்பதாகக் கருதலாம்.

 

தஞ்சைப் பெரிய கோயிலின் முதன்மையான வழிபாட்டு நோக்கமே ஆட்டை நாட்களை வகை தொகை செயது உரிய முறையில் திருத்தமாடுவது என்று தெரிகிறது.

 

ஆட்டை வாய்ப்பாடு

கோள் தலையாட்டும் அசைவின் எல்லை, ஆட்டையில் திரும்பும் போது அவ்வசைவைத் தோற்றும் மூலம் கண்டறியப் பட வேண்டும் அல்லவா?

 

உலகெலாம் தொழவந்த எழுகதிர்ப் பரிதி

ஒன்று நூறாயிரங் கோடி அலகெலாம்

பொதிந்த திருவுடம்பு அச்சோ அங்ஙனே அழகிதோ (கருவூரார் திருவிசைப்பா -1)

 

ஆட்டை அசைவின் மூலமே கருவறையின் மையப்பொருள் என்றல்லவா வியக்கப்படுகிறது?

 

ஒரு பாடலில் தோன்றும் அதிர்வுக்கும் அசைவுக்கும் மூலம் எது என்று பாவலர் பெருஞ்சித்திரனார் புரியும்படி ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறார்.

 

மூத்த உணர்வின் முதிர்வசைவால் உள்ளனுக்கள்

யாத்த வரியிசையே பாட்டு ( கனிச் சாறு – பாட்டுப்பத்து – 1)

 

ஒரு பாடலுக்கே முதிர்வசைவு மூலம் ஆகும்போது  ஆட்டைக்கும் அத்தகைய ஒரு முதிrவசைவு மூலம் ஆகலாம் அல்லவா? அப்படியோரு நுட்பத்தை வாய்ப்பாடாகக் கடைபிடித்த பல வல்லுநர் குழுக்களைப் போற்றிப் புரந்தவன் ‘அரும்பெறன் மரபினன் பெரும்பெயர்’ மருகன் ஆன மாமன்னன் இராஜராஜன் ஆவான்.

 

மேற்கண்ட செய்திகளின் தொடர்ச்சியாக ஒரு மாற்றுப் பார்வையோடு தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டுக்களை மீளப்பார்க்கும்போது ‘ஆட்டைப் பெரிய திருவிழா’ என்ற சொல் தட்டுப்படுவது ஆர்வத்தைத் தூண்டுகிறது.

 

கல்வெட்டு இடம் பெற்றுள்ள இடம்

 

தஞ்சைப் பெரிய கோயிலினுள் நுழையும்போது முதலில் எதிர்ப்படும் அரைவட்ட நுழைவாயில் மராட்டியர்களால் கட்டப்பட்டது. அதனை அடுத்து ஒரு கோபுரத் தோற்றத்தில் சற்று உயரமாக இரு பக்கமும் சுற்றுச் சுவர் முட்டாமல் உள்ள வாசல் ‘கேரளாந்தக வாசல்’ என்று அண்மைக் காலமாக ஆய்வாளர்களால் அழைக்கப்படுகிறது. கேரளாந்தக வாசல் மெய்காப்பர் எனக் கல்வெட்டுச் செய்தி கிடைத்திருப்பதால் இது அதுவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 

அதனையடுத்து சற்றுத் தொலைவில் அடக்கமாகத் தோன்றும் சற்றுக் குட்டையான கோபுரமே இராஜராஜன் திருவாசல் என்று கல்வெட்டாய்வாளர்களால் அழைக்கப்படுகிறது. இது கல்வெட்டுக்களில் உறுதி செய்யப்பட்ட செய்தி என்பதால் ஏற்றுக் கொள்ளலாம். இது மட்டுமே ‘திருவாசல்’ என்ற சிறப்பைப்பெறும் வாசல் ஆகும்.

 

இவ்வாசலில் நுழையும்போது இடது ஓரமாகக் கையை சுவரின் மீது உரசிக்கொண்டே சென்றால் நடுப் பகுதியைத் தாண்டி மூன்றாம் எட்டில் நின்று கையை எடுக்காமலேயே பார்த்தால் இடது கையானது ‘ஆட்டைப் பெருவிழா’ என்ற கல்வெட்டு எழுத்தின் மீதே படிந்திருப்பதை நன்கு உணரலாம். அனைவரும் படித்துப் பார்த்தும் மகிழலாம். அதன் அருகில் தற்போது காவல்துறையினர் கட்டாய சோதனை வழி (metal detector) தடுப்பு வைத்திருக்கிறபடியால் நெடுநேரம் நிற்க விடமாட்டார்கள். அவர்களிடம் ஒப்புதல் பெற்று தடுப்பின் மறுபுறத்தின் பாதையில்  நின்று இந்த அரிய கல்வெட்டினைப் படித்துப் பார்க்கலாம்.

 

அரிய கல்வெட்டு:-

இக்கல்வெட்டும் இது தொடர்பான் பல அரிய சொற்களும் அக்காலத்திலேயே மிகவும் திட்டமிடப்பட்டுக் கொத்தி எடுக்கப்பட்டுள்ளபடியால் மிச்சமிருக்கும் இக்கல்வெட்டு பெருமதிப்பைப் பெறுகிறது. தற்போதுள்ள கல்வெட்டு எச்சங்ககளைத் தொல்லியல் துறையினர் முறையாகப் படியெடுத்து ஆவணப் படுத்தியுள்ளனர். அவை முறையாக வெளியிடப் பட்டிருக்கின்றன என்பது மகிழ்ச்சியான செய்தி. ஆய்வாளர்கள் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அனைவருக்கும் ‘ஆட்டைப் பெரிய திருவிழா’ என்ற கல்வெட்டுச் சொற்கள் நன்றாகத் தெரியும். மறு அறிமுகம் தேவையில்லை.  ஆனால் அது ஆண்டின் எந்த நாளைக் குறிக்கிறது என்பதின் முயற்சியே இன்று தேவைப்படுகிறது.

 

ஆண்டு நாட்களை 360 என்று வரையறை செய்ததன் விளைவாக, ஓர் ஆட்டையின் நிழற் திருப்பமாக ஆண்டின் முதல் நாளைக் குறிக்கும் திருவிழாவாகக் கொண்டாடப்பட்ட நாளே ‘ஆட்டைப் பெரிய திருவிழா’ எனக் கருதுவதும், அது ‘அகவிளங்கியது’ என்று உறுதி செய்வதும் மன்னனது மெய்க்கீர்த்தியில் இடம் பெறும் செய்தியினை மெய்ப்பிப்பதாக அமைகிறது.

 

கோட்பாட்டு அடிப்படை:-

 

தமிழர்களின் மரபறிவு வழிப்பட்ட பல கோட்பாடுகளை நாம் பறிகொடுத்திருக்கிறோம். கோட்பாடு என்ற சொல் பதிற்றுப்பத்து பதிகத்திலும் மணிமேகலையிலும் நேரடியாகக் குறிப்பிடப்பட்டிருப்பினும், இவை இவையெல்லாம் கோட்பாடுகள் எனும்படியான பட்டியல் ஏதும் இன்று நம்மிடம் இல்லை. ‘ஆடு கோட்பாடு’ என்பது ஒரு கோட்பாடாக இருந்திருக்கலாம். அதுவே ‘ஆட்டை’ குறித்த உண்மையை நெடுங்காலமாக இழுத்து வந்திருக்கலாம். பல தொழில் மரபுகள் பலவகையான செயல்பாட்டு உத்திகளைக் கையாண்டிருக்கலாம்.

 

விசும்பாடு மரபு:-

விசும்பில்  ஊசலாகும் பருந்து ஓர் இரையைக் குறிவைத்துத் தாக்கும்போது, தான் தரையில் மோதிச் செத்து விடுவது இல்லை. வெற்றியோடு திரும்பும் ஆற்றலைத் தக்கவைத்துக் கொண்டே பாய்கிறது.

 

            விசும்பாடு மரபின் பருந்து ஊறு அளப்ப

          கருவில் எண்ணியல் முற்றி ஈரறிவு புரிந்து

          ………..

வீறுசால் புதல்வன் பெற்றனை (பதிற்றுப்பத்து -74)

போரில் எதிரியின் மீது மோதவிடப்படும் போர்க்குதிரையானது பருந்தைப் போல திரும்பும் திட்டத்தோடு மோதுவது இல்லை. அது சாவையே எதிர்கொள்கிறது.

 

            மாவே எறிபதத்தான் இடங்காட்டக்

          கறுழ் பொருத செவ்வாயான் எருத்து வவ்விய

          புலி போன்றன (புறநானூறு-4-7,9)

 

குதிரையின் மீது அமர்ந்திருக்கும் வீரனே ‘எறிபதம்’ ஆகிய மோதல் நேரத்தைக் கணக்கிட்டுத் தன் கைகளின் வலிமையாலும் மனக்கணக்கின் கூர்மையாலும் குதிரையின் கடிவாளத்தைத் திருப்பித் தன்னைக் காத்து, குதிரையையும் காத்து வெற்றி பெறுகிறான்.

 

வளிமண்டலம் சுழற்சியால் தலையாட்டும் நாம் வாழும் உலகமாகிய கோள், பருந்து போன்றது இல்லை. குதிரை போன்றதே என்பதனை விளங்கிக் கொண்ட பழந்தமிழ் மன்னர்கள், குதிரைவீரனின் நிலையில் இருந்து அதன் ஆட்டைத் திருப்பத்தை வென்றிருக்கின்றனர் என்று கருதலாம்.

 

ஆனால் இன்றைய மாந்த அறிவு, உலகமாகிய கோள் தானாகவே திரும்புகிறது பருந்தைப்போல என்று நம்புகிறது போலும்.

 

தஞ்சைப்பெரிய கோயில் கட்டமைப்பில் நேர்கிழக்கைப் பகுத்தறிந்து வடசெலவு தென்செலவுகளை நிழலின் வழியே அறிந்து, கருவறையின் மூலவடிவிலிருந்து வாசல், சாலை, திருவாசல் ஊடாகச் செல்லும் அச்சுக் கோட்டினை, திருப்பதியம், இசை, ஆடற் கரணங்கள் வழியே மிக நுட்பமாகக் கட்டுப்படுத்தினர் என்று கருதலாம்.

 

தஞ்சைப் பெரிய கோயிலின் வடிவமைப்புக் கொள்கை:-

 

பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம் என்று கருவூரார் தனது திருவிசைப் பாவில் குறிப்பிடும் கருங்கல் கட்டுமானம், அதன் முன்புறம் ஒரு நாடக சாலை, திருமுற்றம் திருவாசல் என்ற நேர்கிழக்கு அச்சுக்கோட்டு அமைப்பில் இராஜராஜன் திருவாசலும் கேரளாந்தக வாசலும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய அளவுகளால் திட்டமிடப்பட்டிருக்கின்றன.  உயரம், கால்புறவாய், பத்தி, சுவர்க் கால்கள் திண்ணை வரியின் உயரம் ஆகியவை ஒன்றன் நிழல் மற்றதனைச் சுட்டும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. சிறிய கோபுரத்தின் நடுக் கலசத்தின் நிழல் பெரிய கோபுரத்தின் சுவர்க்கால்களில் ஏறி மறைவது உற்று நோக்கத்தக்கது. நிழலின் வழியே வடசெலவு தென்செலவுத் திருப்பத்தின் எல்லையினை வரைவு செய்து ‘கிட்டிக்கல்’ அமைத்திருப்பதான நுட்பம் மேலாய்வுக்கு உரியது.

 

இரண்டு கோபுரங்களுக்கும் இடையில் ஒரு நிழல் காண் மண்டியம் அமைக்கப்பட்டு அதன் அருகில் இருந்தே ஆட்டைப் பெரிய திருவிழா அறிவிப்புச் செய்யப்பட்டிருப்பதாகக் கருத இடம் இருக்கிறது.

 

ஆட்டைப் பெரிய திருவிழாவின் முதல் மூன்று நாட்கள் ‘திருப்பறையளவு’ செய்யப்பட்டிருக்கிறது. இது புத்தாண்டு அறிவிப்பேயன்றி வேறில்லை என்று கருதலாம்.

 

மன்னன் இராஜராஜன் தனது மெய்கீர்த்தியில் குறிப்பிடும் ‘அகவிளங்கும் யாண்டு’ பற்றிய வெற்றிச் செய்தியினை யாரும் சரிபார்த்துக் கொள்ளலாம் என்று பெருமையுடன் குறிப்பிடவே மன்னனின் பெருந்தச்சுக் குழுவினர் இத்தகு கட்டுமான வடிவமைப்பைத் திட்டமிட்டு உருவாக்கினரோ என்று ஐயப்படவைக்கிறது.

 

கொள்கைத் தேவர்:-

 

உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர் என்பது மன்னனைக் குறிக்கிறது.

உடையார் ஸ்ரீ ராஜராஜீஸ்வரம் உடையார் என்பது இறைவனைக் குறிக்கிறது.

இவ்வகையில் ‘திருப்பலிகொள்ளும் பொன்னின் கொற்கைத் தேவர்’ படிமை ஒன்று கருவறையின் இரண்டாவது மடிப்பான திருமஞ்சன சாலையில் இருந்ததாகத் தெரிகிறது. 800 கழஞ்சுக்கும் மிகுதியான எடையில் தங்கத்தால் செய்யப்பட்ட அந்த சிலை இப்போது இல்லை. அது கொள்கைத்தேவர் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. அந்தக் கொள்கைத்தேவர் கண்டிப்பாக இறைப்பழமை இல்லை. இராஜராஜ தேவரா அல்லது கருவூராரா என்பது ஆய்வுக்குரியது. எப்படியாயினும் உடையார் ஸ்ரீராஜராஜீஸ்வரம் உடையார் என்று போற்றப்படும் பரமஸ்வாமியே மதிப்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய ‘உச்சநிலை ஆற்றவர்’ ஆக வியக்கப்படுகிறார். அட்டைப் பெரிய திருவிழாவும், உடையார் ஸ்ரீராஜராஜீஸ்வரம் உடையார் ஆட்டைப் பெரிய திருவிழா என்றுதான் குறிப்பிடப் படுகிறது.

 

மன்னன் இராஜராஜனின் முயற்சியில் பெருந்தச்சர், பெருங்கணி, கடிகையர் மற்றும் சிவயோகியர் ஆகியோர் பொறுப்பில் பிடாரர் தளிகைப் பெண்டுகள், உடுக்கை வாசிப்பான், முத்திரைச் சங்கு ஊதுவான், சகடை கொட்டுவான் இவர்களோடு கோல் இனமை செய்வான் ஒருவனின் வழிகாட்டுதலில் ஒவ்வொரு நாளும் வளிமண்டல நாள் சூழ் திறம் அன்றைய நாளின் நட்சத்திரப் பண்பிற்கேற்ப கரண முயற்சிகளால் திருத்தமாடப் பெற்றது என்று கருதலாம். இதுவே தஞ்சைப் பெரிய கோயிலின் முதன்மையான வழிபாட்டுக் கொள்கையாகவும் இருந்திருக்க வேண்டும்.

 

செப்புத் திருமேனிகளைக் கூட ஒன்று, இரண்டு என்று குறிப்பிடாமல் ஒருவர், இருவர் என்று அழைக்கும் மன்னன், சிவலிங்கம் என்று எங்கும் குறிப்பிடாமல் அவர், இவர் என்று அழைப்பது, மாமன்னன் இராஜராஜனை ஒரு மாபெரும் ‘இறை நம்மிக்கையாளன்’ என்ற மதிப்பீட்டில் நிற்கவைக்கிறது. மற்றபடி தமிழை முதன்மைப்படுத்துவதிலும் தமிழரின் மரபறிவை முதன்மைப் படுத்துவதிலும் மன்னனின் கொள்கை போற்றுதலுக்குரியது என்பதில் ஐயமில்லை. ஆனால் மன்னன் நம்பிய இறைவன் மன்னனின் கொள்கையைக் காப்பாற்றினாரா என்பது ஆய்வுக்குரியது.

 

இராஜராஜனின் தனிச்சிறப்பு:-

 

போர் வெற்றிகளால் பிறநாட்டுக் கருவூலங்களைக் கொள்ளை கொண்டு தனது அரச வலிமையை ஊக்கப்படுத்திக் கொண்ட மன்னன், தமிழர் மரபின் பல அறிவுத்துறைகளை அவ்வவற்றின் படைத் தகமை வழிநின்று மீட்டெடுத்தான். அந்தந்தத் துறை சார்ந்த பல வல்லுநர் குழுக்களின் நம்பிக்கையைப் பெற்றான். வல்லுநர்களின் கொள்கை முடிவுகளில் மன்னன் தலையிட்டதே இல்லை.

 

குஞ்சரமல்லன் உள்ளிட்ட மூவர் குழுவினரிடம் கோயிலின் கட்டுமான வடிவமைப்புப் பொறுப்பை ஒப்படைத்ததோடு அவர்களின் குடிவழியினரும் தொடர்ந்து ஊதியம் பெற்றுப் பணியாற்றக் காணிகளை நிவந்தங்களாக ஏற்படுத்தினான்.

 

பெருந்தச்சுக் குழுவினரைப் போல ‘கடிகையார்’ என்றொரு குழுவினரை ஏற்படுத்தி ‘ஆட்டைப் பெரிய திருவிழா’வை உரிய நாளில் அறிவிப்பு செய்யும் பொறுப்பையும் ஒப்படைத்தான் என்று தெரிகிறது. ஆட்டைப் பெரிய திருவிழாவின் முதல் மூன்று நாட்கள் ‘திருப்பறையறைவு’ செய்யப்பட்டது என்றும் அதனைத் தொடர்ந்து ‘9’ நாட்கள் திருமேனி எழுந்தருளுநாள் விழாக்கள் கடைப்பிடிக்கப்பட்டன என்று தெரிகிறது.

 

யான் பெற்ற குயில்:-

 

கருவூர்த் தேவரால் நன் மாணாக்கனாக வளர்க்கப்பெற்ற மன்னன் இராஜராஜனே கருவூர்த்  தேவரால் கடவுளாகவும் கற்பிக்கப்பட்டான் என்றே கருதலாம்.

            இருண்நிற முந்நீர் வளை இய உலகத்து

          ஒரு நீ யாகித் தோன்ற விழுமிய பெறலரும்

          பரிசில் நல்குமதி …… (திருமுருகாற்றுப்படை …293-295)

 

தனி ஒருவனை இவ்வுலகின் முதன்மையானவனாக முருகன் மாற்றுவான் என்று நக்கீரர் குறிப்பிடுகிறார். அந்த மரபின் மறு உருவாக்கமாகவே கருவூரார் மன்னன் இராஜராஜனை உருவாக்கினார் என்று தெரிகிறது.

 

            அருளுமாறு அருளி ஆளுமாறு ஆள

          அடிகள் தம் அழகிய விழியும் குருளும் வார்காதும் காட்டி

          யான் பெற்ற குயிலினை மயல் செய்வது அழகோ?

                                                                                    (கருவூரார் திருவிசைப்பா -6)

 

மகனாக, மாணாக்கனாக, அரசனாக, ஆசானாக, அருள்புரிய்ம் கடவுளாக கருவூரார் எனும் மூத்த தமிழ் யோகியர் ஒருவரால் போற்றப்பட்ட மன்னன் இராஜராஜனின் நோக்கத்தை, முயற்சியை, ஈகத்தை, எழுச்சியை மயல் செய்வதும் மறைப்பதும் அழகும் இல்லை அறிவு நேர்மையும் இல்லை!.

 

தஞ்சைப் பெரிய கோயில் என்பது தமிழ் மரபில் வாழும் ஓர் அரசாங்கம். மிகவும் பாதுகாக்கப்படவேண்டிய தமிழர் சொத்து. நாளும் படித்துப் பார்க்கவேண்டிய  பாடப்புத்தகம். என்றும் பின்பற்றப் படவேண்டிய பெருநோக்கம்  போன்ற மதிப்புகளை வரிசைப்படுத்தி ‘ஆட்டைப் பெரிய திருவிழா’விற்குப் புத்துயிர் ஊட்ட வேண்டியது தமிழர்களின் தலையாய கடமை.

 

---முற்றும்---

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த முழுக்கட்டுரையை விக்கிபீடியா-தமிழில் "தமிழ் புத்தாண்டு என்னும் ஆட்டைப் பெரிய திருவிழா"

என்னும் தலைப்பில் நீங்கள் பார்க்கலாம். பதிப்புரிமை ஆசிரியருக்கு 'லிவி' என்பவருக்கு வழங்கப்படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.