Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2 கனடா பயனக் கவிதைகள் வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2 Poems on Canada

ஒரு பயணியின் வாழ்வு பற்றிய பாடல்

- வ.ஐ.ச.ஜெயபாலன்

சீஎன் கோபுரத்தை அண்ணார்ந்து பார்க்கையில்

கண்ணாடிக் கோபுரத் தொடரின் மீது

வசந்தத்தின் வருகையை எழுதியபடி

ஒளிரும் காற்றுப் படிகளில் ஏறிச் சென்றது

ஒரு தனித்த காட்டு வாத்து.

சிறகுகளால் என்

கண்ணீர் துடைத்தபடி.

அம்மாவின் மரணத் துயரோடு

வெண்பனியையும் உருக்கிவிட்ட

காலம் வலியது.

ரொறன்ரோ அடி நகரின் இடுக்குகளில்

குனிந்துவந்த சூரியன்

ஒளி விரல்களால்

மிலாறுகளை வருடிவிடுகிறது.

மொட்டை மரங்களின்மீது

பசிய அறோரா துருவ ஒளியையும்

வானவில்லையும் உலுப்பி விடுகிறது சூரியன்.

எங்கும் பசுமையும் பூக்களும்

பட்டாம் பூச்சியுமாய்

வண்ண உயிர்ப்பும் வாழ்வின் சிரிப்பும்.

உலகம் சிருஸ்டி மூர்க்கத்தில் அதிர்கையில்

தனி ரக்கூன் கடுவனாய்

அடி நகரில் அலைந்து கொண்டிருந்தேன்.

என்னோடு படகில் ஒரு புதிய நாள்.

எனக்காக நடுத்தீவின் கரைகளில்

சுவர்க்கம் காத்திருந்தது.

ஒற்றைத் தமிழனாக அங்குபோய் இறங்கினேன்.

ஏனைய தமிழருக்கு

வசந்தம் வந்ததென்று யாராவது சொல்லுங்கள்.

பாவம் என் நண்பர்கள்

முன்னர் வந்திருந்தபோது

ரொறன்றோ அடிநகர் பொந்துகளில்

வாழ்வு இல்லை என்றார்கள்.

வாழ்வு நிறைந்த ஸ்காபறோ வீடுகளை மடக்க

மூன்று வேலை செய்தார்கள்.

இம்முறை வந்தபோது

வாழ்வு பற்றிய புதிய கண்டுபிடிப்புகளோடு

வரவேற்றார்கள்.

416 தொலைபேசி வட்டத்துள் அது இல்லை என்றார்கள்.

905 வட்டத்துள் அது இருக்கிறது என்றபடி

மூன்றாவது வேலை தேடிஅலைந்தார்கள்.

அவர்களது பெரிய வீடுகளும்

பெரிய கார்களும் பெருமூச்சுவிட்டபடி

வெறுமையாய்க் கிடந்தன.

ஊர் பார்க்கவந்த என்னை

எங்கும் வழிமறித்தது வாழ்வு.

அந்த வசந்தம் முழுக்க

அடி நகரின் பூத்த சதுக்கங்கள்

பாணர்களும் கூத்தர்களும் கைப்பற்றிய தெருக்கள்

மதுக்கடை

ஒன்ராறியோ ஏரித் தீவு என்று

வாழ்வின் மேச்சல் நிலங்களில்

வசந்ததின் பொற்காசுகளைக் கறந்தேன்.

இங்கும் வீட்டு முன்றலில்

பூஞ்செடிகள் சிரிக்கின்றன.

எங்கள் ஊர் வசந்தமோ

அகதிக் குடிசை முன்றில்களில்கூட

செவந்திக்கும் அவரைக்கும் மலர் சூடி

கூரைகளில்

பாகல் சுரைப் பூக்களின் மகரந்ததைச் சிந்திவிடுகிறது.

இடிபாடுகளூடும்

தன் பூவை நீட்டிவிடுகிற புல்லைப்போல

இறுதியில் வென்று விடுகிறது வாழ்வு.

மலர் அருந்தும் தேன்சிட்டின்

சிறகுகள் எனக்கு.

இலை பிடுங்கும்

மஞ்சள் காலத்தின் முன்னம்

நெடுந்தூரம் போகவேண்டும்.

2

வாசனை

--- வ.ஐ.ச.ஜெயபாலன்

அத்திலாந்திக் சமுத்திரத்தின்மேல் பறந்தபோது

அவளது வாசனையை உணர்ந்தேன்.

நாங்கள் பிரிந்தபோது

வசந்தத்தைக் கொண்டுவந்த பறவைகளும்

ரொறன்ரொவை நீங்கின.

ஒன்ராறியோ ஏரியின்மீது

தெற்கு நோக்கிப் பறந்த வாத்துக்களுள்

கண்ணீரை மறைத்தபடி

நாம் விடைபெற்றோம்.

அந்த வசந்தத்தில்

சினைப் பிடித்த சல்மன் மீன்கள் நீந்திய

ஒன்ராறியோ ஏரிக்கரையின்

எந்தச் செடிகளை விடவும்

பூத்துப்போயும்

வாசனையோடும் என் படகில் இருந்தாள்.

படகை விட்டு இறங்கும்போது

ஈழத் தமிழர் தலைவிதி என்றாள்.

நாங்கள் மட்டக்களப்பின் வாவிக் கரைகளில்

சந்தித்திருக்கலாமே என்று பெருமூச்செறிந்தாள்.

வானை வெண்பறவைகள் நிறைத்தன.

ஒருகணம் போர் ஓய்ந்தது.

வடமோடிக் கூத்தர்களின் மத்தளமும்

மங்களப் பாடலும்

பாங்கொலியும் கேட்டேன்.

மீன்பாடும் முழு நிலவில்

அவள் கமழும் ஒரு படகு

நெஞ்சுள் நுளைய நெடுமூச்செறிகின்றேன்.

எங்கள் பிள்ளைகளை அறிமுகப் படுத்தவேணும்

நாங்கள் இழந்த

விருந்துகளையும் கந்தூரிகளையும்

மட்டுநகர் வாவியையும்

அவர்களாவது மகிழட்டும் என்றாள்.

வெல்க பெடியள் என்றேன்.

வெல்க நம் பெட்டையள் என்றாள்.

கைகோர்த்தும் இருவேறுலகம்.

நாங்கள் பிரிந்தபோது

மேப்பிள் மரங்கள் பசுமை இழந்தது.

கறுப்பு அணில்கள்

எதிர்வரும் பஞ்சம் உணர்ந்து

ஓக் விதைகளை மண்ணுள் புதைத்தன.

ஒவ்வொரு தடவையும்

சுவர்க்கங்களைத் தாண்டி

நினைவுகளில் முடிந்த

வண்ணத்துப் பூச்சி வழிகள் எங்கும்

மேப்பிள் சருகுகள் மிதிபட

உரித்துக் கொண்டு காரில் ஏறினோம்.

ஸ்காபரோவில் பசித்திருந்த

கொங்கிரீட் டைனசோர்களின் முன்னம்

கைவிட்டுப் பேருந்துச் சாரதிபோல் போய்விட்டாள்.

உடைகளுள் தாழம்பூ வைப்பதுபோல

என் நினைவுகளின் அடுக்கில்

அவள் தனது

இறுதி அணைப்பின் வாசனையை

இப்படித்ததன் விட்டுச் சென்றாள்.

visjayapalan@gmail.com

Edited by poet

கவிஞ,

உலகம் தனக்கென ஒரு வாழ்வியல் வாய்ப்பாட்டை மனனம் செய்தபடியே செல்கையில் சில கவிமனங்களால் மட்டும் தேன் சிட்டின் இறகுடன் பயணிக்க முடிகிறது. "தேன் சிட்டின் இறகை" ஒரு தத்துவவியற் படிமானமாக உள்வாங்குகையில் கவிதையின் பரிமாணம் விசாலிக்கிறது. உலகின் "சிருஷ்டி மூர்க்கம்" கவிதையின் ஆத்மீக வியாபகத்துடன் ஒப்பிடப்படுகையில் அபத்தமாகத் தோன்றுகிறது.

"மூச்சடக்கலின்" இறுதி எல்லைவரை சென்று மூர்க்கம் கொண்டு எகிறிச் சுயத்தை மீட்டெடுத்து வாழ்விற்குள் மீண்டும் குதிப்பதைப்போலான புத்தம் புதிய தரிசனத்துடன் கவிமனம் முன்னேற முடிகிறது என்பதைத் தங்கள் கவிதை பறைசாற்றி நிற்கிறது.

வாழ்வின் மகத்துவத்தை ( அது சோகமானாலும், இன்பமானாலும்) கவிதையால் மட்டுமே வரையமுடியும் எனபோர் கூற்றுப் பொய்யென உணரேன்.

மறுபடியும் சந்திக்கும் வரை...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி கவிஞன் வாசுதேவன். உன்னைப்போல பல்மொழிக் கவிதை அறிந்தவர்களது வரவேற்பு உயிரூட்டுவது. உன்னோடு பிரான்சில் பயனம் செய்து இருவருமாக ஒரு புத்தகம் எழுதும் விருப்பம் நிறைவேறவேணும் என்கிற கனவுகளோடு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[கணடாவில் இருந்து இந்தக் கவிதையை வாசிக்கும் அன்பர்கள் வாசனை கவிதையையும்வாசித்து உங்கள் கருத்தை யாழில் அல்லது எனக்கு நேரில் (visjayapalan@gmail.com) எழுதுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். கனடா பற்றி ஒரு நாவல் எழுதிவருவதால் உங்கள் கருத்துக்கள் எனக்கு பயன்தரும்

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது படைப்புகளை மொழிபெயர்ப்பதில் ஈடுபாடுள்ளவர்களது தொடர்பை நாடுகிறேன். அன்புடன்

visjayapalan@gmail.com

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடிய தமிழர் பற்றிய தமிழ் ஆங்கில இலக்கியப் படைப்புகளை எங்கு வாசிக்கலாம் என்பதை யாராவது கூறுவீர்களா. உங்களிடம் கனடா பற்றிய கவிதை சிறுகதை நாவல் கட்டுரைகள் இருந்தால் எனக்கு பிரதி அனுப்புவீர்களா? கனடிய தமிழர் பற்றிய எனது ஆக்க இலக்கிய முயற்ச்சிகளுக்கு அவசியமாக இருப்பதால் கோருகிறேன்.

visjayapalan@gmail.com

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதை நன்று. கணடாச் சூழலையொட்டியே உங்கள் கவிதைகள் நகருகின்றன. வாழ்த்துகள். :D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதை நன்று. கணடாச் சூழலையொட்டியே உங்கள் கவிதைகள் நகருகின்றன. வாழ்த்துகள். :D:wub:

நன்றி சுவே, இக்கவிதைகள் என் கனடா பயண வாழ்வின் நினைவுகளாகும். நீங்கள் கனடாவா. கனடாவென்றால் இக்கவிதைகள் தொடர்பாய் உங்கள் பமனப் பதிவுகளை எழுதுங்கள். கனடாவைச் சேந்த வாசகர்களது கருத்துக்கள் யாழிலோ அல்லது நேரிலோ எழுதுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.