எம்மவர்கள் இப்படியான கலைகளுக்குப் பெரிதும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என நினைக்கிறேன். நம்மூரிலும் பல நல்ல கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கான உரிய மதிப்புக்கொடுக்கப்படுகிறதா எனத் தெரியவில்லை. நல்ல இசைக்கான பரந்துபட்ட ரசிகர்கள் கூட்டம் அங்கு இல்லை என நினைக்கிறேன்.
ஒரு காரணம், நாம் வைத்தியர், பொறியாளர், கணக்காளர், தகவல் தொழிநுட்ப வேலையில் உள்ளோர், அரசாங்க வேலையில் உள்ளோர் இப்படியானவர்களையே மதிக்கிறோம்; அப்படியான வேலைகளைத் தேடியே ஓடுகிறோம். ஒருவர் கலைத்துறை சார்ந்த கல்வியைத் தொடர விரும்பினால், Artஆ என ஏளனமாகப் பார்த்தும், அது உனக்குச் சோறு போடாது எனவும் கூறி அந்தக் கனவை வீணடித்துவிடுகிறோம்.
கலைத்துறை சார்ந்தோர் பொதுவாகவே வேலைக்காகத் திண்டாடுபவர்கள் என்பது உண்மை தான். கர்நாடக இசை போன்ற பாரம்பரிய இசைக்கு மதிப்பு பெரிதாக இல்லை; மக்களின் ரசனையும் குறைந்துவிட்டது. இதனால் தான் கலைஞர்களுக்கான தேவை மற்றய துறைகளை விட மிக மிகக் குறைவு.
இருந்தாலும், வேலைவாய்ப்புக்காக ஓடுவது என்பதை மட்டும் வாழ்வின் இலட்சியமாக் கொள்ளாது, இசை போன்ற நல்ல கலைகளையும் பயிலுதல், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் கலை நிகழ்வுகளில் பங்கு பெறுதல் இவை மூலம் நம்மவர்களும் தம் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும். மிக முக்கியமான ஒன்று பெற்றோர் தம் குழந்தைகளை சிறு வயதிலேயே இதற்காகத் தயார் பண்ணுவது; பல இந்தியர்கள் இதைச் செய்து தான் நல்ல பல இசைக் கலைஞர்களை உருவாக்குகிறார்கள். குழந்தைக்கு ஆர்வம் இருந்தால் அதை ஊக்குவித்து, நல்ல ஆசிரியர் ஒருவரிடம் முறையாகப் பயிற்றுவித்து, பிள்ளையும் அதை மிகுந்த ஈடுபாட்டுடன் இடைவிடாது பயின்று கிடைத்த வாய்ப்புக்களை பயன்படுத்தினால் அதுவும் வளர்ந்து பெரிய கலைஞனாகலாம். ஆனால் புலமைபரிசில் பரீட்சை, சா/த, உ/த பரீட்சை, பல்கலைக்கழகம், தொழில், திருமணம், குழந்தை பெறுதல் என முடிவில்லாத வாழ்க்கை ஓட்டத்தில் பலரின் கலையார்வம் குன்றுகுறது/ முடக்கப்படுகிறது/ முற்றிலும் மறக்கடிக்கப்படுகிறது.
இந்தியர்களுக்குள்ள இன்னொரு அனுகூலம், இசைப்பரம்பரையில் காலம்காலமாக ஊறி வந்த குழந்தைக்கு சங்கீதஞானம் இயற்கையாகவே வந்துவிடுகிறது. எனவே இசைக்கல்வி மூலம் அதனை வளர்த்து மெருகூட்டுவது எளிது. கூடவே அவர்களின் வாழ்க்கை முறையோடு கலந்தது இசை; திருமண விழாக்களில் இசைக்கச்சேரி முக்கிய அம்சமாக இருக்கும்போதும், சுப தினங்களில் இசை மூலம் இறைவனை வழிபடும்போதும், மற்றும் பிற சந்தர்ப்பங்களிலும் இசை பெரிதாகக் கொண்டாடப்படும்போதும் அச்சூழலில் வாழும் குழந்தையும் இசையை நோக்கி இயல்பாக ஈர்க்கப்படுகிறது. அது இசையைப் பயில சமூகம் ஊக்குவிக்கிறது; அது இசை நிகழ்ச்சி வைக்கும்போது சமூகம் கொண்டாடுகிறது. இதனால் இசைக்கலைஞர்கள் பலர் இந்தியாவில் உருவாவதும், கொண்டாடப்படுவதும் அதிசயமல்ல. அத்துடன் இன்று வளர்ந்துவரும் / புதிய கலைஞர்கள் கைவசம் வேறு தொழிலையும் வைத்திருக்கின்றனர். பலர் பகுதி நேரகமாக இசை நிகழ்வுகளை வழங்குகின்றனர்.
எனவே நம்மவர்கள் இசை போன்ற கலைகளை மதித்துப், பரந்த அளவில் கொண்டாடினால், அவற்றைப் பயில்வது ஊக்குவிக்கப்பட்டால், கலைஞர்களுக்கான வாய்ப்புக்களும் பெருமளவில் பல்வேறு நிகழ்வுகளில் வழங்கப்பட்டால் நம்மிலும் நல்ல பல கலைஞர்கள் உலக அரங்கில் பிரகாசிக்கமுடியும்.
இன்றைய இயந்திர வாழ்வில் மனிதத்தை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தக் கலைகள் மிகவும் உதவும் என்பதும் என் அசைக்கமுடியாத நம்பிக்கை. எனவே கலைகளை இயன்றால் பயில்க, ஆற்றுகை செய்க! இல்லாவிட்டால் ரசித்தலுடன், ஊக்கமும் தருக!