கருணாவும் கே டி ராஜசிங்கமும் : இரு பாம்புகளின் இணைவு
கருணாவுக்கான "அன்டன் பாலசிங்கம்" ஆக கே டி ராஜசிங்கமே தன்னை முன்னிலைப்படுத்தியிருந்தார். ஆனால் இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணி சில வருடங்களிலேயெ கசத்துப்போனது. வடமாகாணத்தானை எதிர்த்து, கிழக்கு மாகாண மக்களுக்கான விடுதலையினைப் பெறப் போராடுவதாகக தன்னை வரிந்துகொண்டிருந்த கருணாவுக்கு வடக்கு மாகாணத்தான் ஒருவனே அரசியல் ஆலோசகராக செயற்படுவதென்பது நிச்சயமாக ஒரு தர்மசங்கடமான நிலையினை ஏற்படுத்தியிருக்கும் என்பது ரகசியமல்ல.
ஆனால், அதுமட்டுமே காரணமாக இருந்திருக்காது. ஏசியன் ட்ரிபியூன் எனும் சஞ்சிகையில் 2007 கார்த்திகையில் எழுதிய வோல்ட்டர் ஜயவர்தன பின்வருமாறு கூறுகிறார்,
"கருணா ராஜசிங்கத்தைத் தொடர்ச்சியாக பயமுறுத்தி வந்திருந்தார். வடமாகாணத்திலிருந்து வந்த கே டி ராஜசிங்கம் தனது நண்பர் ஒருவரிடம் பேசும்போது, அடிக்கடி கருணாவின் உதவியாளர் ஒருவர் தன்னைத் தொடர்புகொண்டு மிரட்டி வருவதாகக் கூறியிருக்கிறார். கருணாவின் நெருங்கிய சகாவான ஒருவர் கே டி ராஜசிங்கத்திற்கு விடுத்த அச்சுருத்தலில், ராஜசிங்கத்தின் ஏசியன் ட்ரிபியூன் இதழில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் துணைராணுவக் குழுவுக்கெதிரான செய்திகளை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று எச்சரித்திருக்கிறார். அத்துடன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழுவிற்குள் ஏற்பட்ட பிளவுகளைப் பற்றியோ, அல்லது இக்குழுக்களுக்கிடையிலான படுகொலைகள் பற்றியோ ராஜசிங்கம் எதுவும் எழுதக்கூடாதென்றும் அச்சுருத்தப்பட்டிருக்கிறார். இதே காலப்பகுதியில்த்தான் கருணா வெளிப்படையாகவே பிள்ளையான் குழு ஆயுததாரிகளையும், முக்கியஸ்த்தர்களையும் இலக்குவைத்துக் கொன்றுவந்தார் என்பது குறிப்பிடத் தக்கது".
கே டி ராஜசிங்கம் என்பவர் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் என்பதுடன், தற்போது செயலற்றூப்போயிருக்கும் தெவச எனும் சுயாதீனப் பத்திரிக்கையாளர்கள் அமைப்பிலேயே தனது ஊடகவியலாளர் பணியை ஆரம்பித்திருந்தார். தற்போது ஐரோப்பாவில் வாழ்ந்துவரும் ராஜசிங்கத்துக்கு புலிகளாலும் அச்சுருத்தல் இருந்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ் மக்களின் இருப்பிற்கெதிராகவும், புலிகளின் தலைமைக்கெதிராகவும் அவர் எடுத்திருக்கும் நிலைப்பாடு இதற்குக் காரணமாக இருக்கலாம். இதேவேளை, ராஜசிங்கத்தை தொலைபேசியில் மிரட்டிய கருணா குழு முக்கியஸ்த்தர்," உன்னை ஐரோப்பாவில் வைத்துப் போடுவதற்கும் எம்மால் முடியும், அதனால் எம்மைப்பற்றி எழுதுவதை நிறுத்து" என்று கூறியதாகத் தெரிகிறது.
ஆரம்பத்தில், கருணா புலிகளிடமிருந்து பிரிந்து சென்று, ஜனநாயக நீரோட்டத்தில் கலக்கப் போவதாக கூறியிருந்தபோது, ராஜசிங்கம் அதனை வரவேற்றிருந்தார். ஆனால், பிற்காலத்தில் கருணா பற்றிப் பேசிய ராஜசிங்கம், "கருணாவும் புலிகள் போன்றே செயற்படுவதால், நான் அவரில் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.
2007 கார்த்திகையில் சண்டே லீடர் பத்திரிக்கையில் சொனாலி சமரசிங்க எனும் ஊடகவியலாளர் எழுதிய கட்டுரையொன்றில், கருணாவை ஓரங்கட்ட அல்லது கொன்றுவிடுவதற்கான ரகசியப் பேச்சுவார்த்தைகள் ஐ நா மன்ற இலங்கை ஜனாதிபதிக்கான உத்தியோகபூர்வ அறையிலேயே நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. மகிந்தவின் உத்தியோக பூர்வ அறையான 1727 இலக்க இன்டர் கொன்டினென்ட்டல் உல்லாச விடுதியில் அவரை 15 ஆம் திகதி, ஜூன் 2007 சந்தித்த கே டி ராஜசிங்கம் கருணாவுக்கான சரியான பாடம் புகட்டப்படவேண்டும் என்றும், பிள்ளையான் முன்னிலைப்படுத்தப்படவேண்டும் என்றும் ஆலோசனை கூறியதாகக் கூறப்படுகிறது. மகிந்த அப்போது ஐ நா வில் சர்வதேச தொழில் அமைப்பின் கலந்துரையாடல்களில் பங்குபற்ற வந்திருந்தார்.
2007, கார்த்திகை 2 ஆம் திகதி கருணா லண்டனில் கடவுச் சீட்டு மோசடிக்காகக் கைதுசெய்யப்பட்டபோது முன்னர் அவரை வானளவப் புகழ்ந்து கிலாகித்து எழுதிய பி பி ஸி இப்படிக் கூறியது, " அவர் கிழக்கு மாகாணத்திற்கான புலிகளின் பெருந்தளபதியாக இருந்தவேளையில் அவர் பல்லாயிரக்கணக்கான போராளிகளின் தளபதியாக வலம் வந்தார், ஆனால் இன்றோ அவரின் கீழ் வெகு சிலரே இன்னமும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது" என்கிற கொசுறுச் செய்தியுடன் அவரது கைதுபற்றி செய்தி வெளியிட்டிருந்தது. லண்டனில் பல மாதங்கள் சிறைவாசம் அனுபவித்து கருணா மீண்டும் நாட்டிற்கு திருப்பியனுப்பப்பட்டிருந்தார். வந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தனது இச்சைகளுக்காக துரோகமிழைத்து, அதனை மறைக்க அரசியல் வேடம் பூண்டு, கிழக்கு மாகாண மக்களுக்கான விடிவெள்ளியென்று தன்னை முன்னிலைப்படுத்தி, தனது அவலட்சணங்களை மறைக்க அவர் ஆரம்பித்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அவரிடமிருந்து முற்றாகக் கைமாற்றப்பட்டிருந்ததுடன், அவருடைய முன்னாள் அடியாளும், இந்நாள் விரோதியுமான பிள்ளையானின் கைக்குள் சென்றிருந்தது.
மகிந்த ராஜபக்ஷ எனும் தந்திரச் சிங்கள ஜனாதிபதி, தனது நெடுங்கால நண்பனான கே டி ராஜசிங்கத்தின் வேண்டுதல்களைப் புறக்கணித்திருப்பது தெரிகிறது. ராஜசிங்கமும், மகிந்த ராஜபக்ஷவும் 1970 களிலிருந்து மிக நெருங்கிய சிநேகிதர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்ட செய்தி. ராஜசிங்கம் வடமாகாணத்தின் சுதந்திரக் கட்சி ஒருங்கிணைப்பாளராக இருந்த காலத்தில் அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மகிந்த ராஜபக்ஷவை தனது ஊரான பருத்தித்துறைக்கு அழைத்து விருந்துபசாரம் நிகழ்த்தியது நடந்திருக்கிறது. இக்காலர்த்தில் கருணா கட்டைக் காற்சட்டை போட்டுக்கொண்டு விரல் சூப்பும் பாலகனாக இருந்திருக்கலாம். ஆனால், 2009 இல் மகிந்தவைப் பொறுத்தவரையில் கருணா எனும் பெயர் தனது அரசியல் ஆதாயத்திற்கு உதவுவதுபோல, தனது பால்ய நண்பனான ராஜசிங்கத்தின் ஆலோசனைகள் உதவாது என்பதை நன்கே புரிந்துவைத்திருந்தார். அதனாலேயே, ஐரோப்பாவின் ஏதோ ஒரு மூலையில் இருந்துகொண்டு தன் இனத்திற்கெதிராகத் தொடர்ந்து வக்கிரம் கக்கும் பந்திகளை அவர் சிங்கள இனவாதிகளை மகிழ்விக்க எழுதிவந்தபோதும்கூட, அவரைப் புறந்தள்ளி கருணாவை தனது கோமாளிகள் அமைச்சரவையில் ஒரு பிரதியமைச்சராக மகிந்த அமர்த்திக்கொண்டார்.
ஆங்கிலமூலம் : சச்சி சிறிகாந்தா
தமிழில் : ரஞ்சித்