கேள்வி : தி மு க பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன ?
கே பி : வைக்கோ முன்னர் தி மு க வின் முக்கிய பொறுப்பில் இருந்தார். தி மு க வின் சில பாராளுமன்ற உறுப்பினர்களும், எம் எல் ஏக்களும் எம்முடன் நெருக்கமாக இருந்தனர். உங்களுக்குக் கருனாநிதிபற்றித் தெரியாதது இல்லை, அவர்கூட புலிகள் எனும் துரும்புச் சீட்டை அவ்வப்போது தனது அரசியல் ஆதாயத்திற்காகப் பாவித்துக்கொண்டார். பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று தன்னைக் காட்டிக்கொள்வதன் மூலம் வாக்குகளை அள்ளலாம் என்று வைக்கோ நம்பினார். தமிழ்நாட்டு அரசியல்த் தலைவர்களில் பெரும்பாலானோ இந்த "புலிகள்" துரும்புச்சீட்டை தமது அரசியல் ஆதாயத்திற்காகப் பாவித்தார்கள்.
கேள்வி : அப்படியானால் ஜெயலலிதா ஏன்ன செய்தார்?
கே பி : அவர் ஒரு மிகவும் சாதுரியமான அரசியல்வாதி. நன்றாகப் படித்தவர். இவ்வாறான விடயங்களை எப்படிக் கையாள்வது என்பதுபற்றி அவர் நன்கு புரிந்து வைத்திருந்தார். அவர் இப்போது முதலமைச்சராக வந்திருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்தவர் என்கிற வகையில் அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
கேள்வி : புலிகளின் கொலைப்பட்டியலில் ஜெயலலிதாவும் இருந்தாரா?
கே பி : அவர் அப்படித்தான் எப்போதுமே நம்பிவந்தார். புலிகளுக்கு எதிராக அவர் தொடர்ந்தும் பேசிவந்ததால், அவரையும் கொல்லவே புலிகள் திட்டமிட்டிருந்தார்கள் என்று நான் நம்புகிறேன். புலிகளின் உண்மையான முகத்தையும், அவர்களின் பயங்கரவாத வழிமுறைகளையும் அறிந்தவர்களுக்கு ஜெயலலிதாவைக்கொல்ல புலிகள் தருணம் பார்த்திருந்தார்கள் என்பதை நம்புவது கடிணமாக இருக்காது என்று எண்ணுகிறேன். தமக்கெதிராக ஜெயலலிதா தொடர்ச்சியாகப் பேசியும், செயற்பட்டும் வந்ததினால் அவரைக் கொல்ல பலமுறை புலிகள் முயன்றார்கள், ஆனால், இறுதிவரை அவர்களால் அவரைக் கொல்ல முடியவில்லை.
கேள்வி : நீங்கள் இன்று வீட்டுக் காவலில் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் கூட நீங்கள் தொடர்ச்சியாக செயற்பட்டுத்தான் வருகிறீர்கள். புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும், தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியிலும் மாறுபட்ட சிந்தனைகளை வளர்க்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். இலங்கையில் வாழும் தமிழர்கள் சிங்களவர்களுடன் சமரசமாக, ஜனநாயக அரசியலில் ஈடுபட வேண்டும், அவர்களுடன் இணையவேண்டும், எதிர்காலத்தினை ஒற்றுமையாகக் கட்டியெழுப்ப வேண்டும் என்று கூறுகிறீர்கள். அப்படியிருக்க, ஐ நா அறிக்கையில் இலங்கையின் அரசியல், ராணுவத் தலைவர்கள் போர்க்குற்ரங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளதுபற்றி ஜெயலலிதா அண்மையில் வெளியிட்டிருக்கும் கடுமையான கருத்துக்கள் பற்றி உங்களின் நிலைப்பாடு என்ன ?
கே பி : அவர் ஒரு சாதுரியமான அரசியல்த் தலைவர் என்று முன்னரே கூறியிருந்தேன். அவருக்கு நிறைந்த அனுபவம் இருக்கிறது. அவர் பந்தினை இப்போது மத்தியை நோக்கி அடித்திருக்கிறார். சிலருக்கு அவர் என்ன செய்யர் விழைகிறார் என்பதுபற்றி நன்றாகத் தெரியும். ஆனால், எப்போதுமே உணர்ச்சிவயப்படும் அப்பாவித் தமிழ்நாட்டு மக்கள் "எமது அம்மா ஏதோ செய்யப்போகிறார்" என்று நம்புகிறார்கள். தமது "அம்மா", மகிந்த ராஜபக்ஷவையும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவையும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றுக்கு இழுத்துச் செல்லப்போகிறார் என்றும் நம்புகிறார்கள். ஆனால், ஜெயலலிதா இதனை ஏன் கூறுகிறார் என்பது தெரியவேண்டியவர்களுக்கு நன்கு தெரிந்தே இருக்கிறது. இதனால் இலங்கை அரசுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்பது அவருக்குத் தெரியும்.
இந்திய மத்திய அரசு இலங்கையின் அரச, ராணுவ தலைமைக்கு மிகவும் நெருக்கமானது என்பது உலகறிந்த விடயம், இது ஒன்றும் ரகசியமல்ல. அரசியல், ராணுவ, ராஜதந்திர ரீதியில் இரு நாடுகளும் தற்போது மிக நெருக்கமாகச் செயற்பட்டு வருகின்றன. இவ்விரு நாடுகளும் 1000 வருடங்களுக்கும் மேலான மத, கலாசாரத் தொடர்பினைக் கொண்டிருக்கின்றன. இந்த நெருங்கிய பிணைப்பினை எவராலும் உடைப்பதென்பது சாத்தியமா? காங்கிரஸ் கட்சியினால்க் கூட இந்த நெருங்கிய பிணைப்பை உடைப்பது சாத்தியமாகவில்லையே?
கேள்வி : தமிழர் பிரச்சினையில் ஜெயலலிதா எவ்வாறான பாத்திரத்தினை வகிக்கலாம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
கே பி : அவர் தமிழகத்தின் முதலமைச்சர். திறமையானவர், புத்திசாலி, நிறைந்த அனுபவம் உள்ளவர். தமிழர்கள் தொடர்பாக சாதகமான முடிவுகளை அவரால் எடுக்க முடியும்.
எமது மக்கள் இன்று அல்லற்பட்டுக்கொன்டிருக்கிறார்கள், உணவு, உறையுள், கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு என்று சகல வழிகளிலும் அவர்களுக்கு உதவி தேவைப்படுகிரது. ஜெயலலிதா இதுதொடர்பாக நிச்சயமாக ஏதாவது செய்யமுடியும், தமிழர்களுக்கு உதவப்போவதாக அவர் கூறியிருக்கும் நிலையில், இது சாத்தியமானது என்றே எனக்குப் படுகிறது.
நான் சொல்ல விரும்புவது இதைத்தான். கஷ்ட்டப்படும் எமது மக்களுக்கு உதவவேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. அவருக்கு உதவும் நோக்கமிருந்தால், அவர் இங்கு வந்து அதனைத் தாராளமாகச் செய்ய முடியும். அல்லது வேறு வழிகளில்க் கூட அதனைச் செய்யமுடியும். முதலுதவி, மருத்துவ வசதிகள் என்பவற்றிலிருந்து இதனை அவர் ஆரம்பிக்கலாம். சாகும் நிலையில் இருப்பவனுக்கு முதலுதவி கொடுப்பீர்களா அல்லது அவனுக்கு அரசியல் தீர்வு குறித்து பாடம் எடுக்கப்போகிறீர்களா என்பதுபற்றி நீங்கள் இப்போது முடிவுசெய்ய வேண்டும். எமது மக்களுக்கு இப்போது தேவையானது உணவும், மருத்துவ வசதிகளும், வேலை வாய்ப்பும் மாத்திரமே. அரசியல்த் தீர்வுகுறித்தோ அல்லது உரிமைகள் குறித்தோ எமது மக்கள் எதனையும் கேட்கவில்லையே ?
எமது மக்களுக்குச் சார்பாகக் கதைப்பதாகப் பாசாங்கு செய்யும் புலம்பெயர் தமிழர்களோ அல்லது தமிழக அரசியல்வாதிகளோ, முதலில் எம்மக்களுக்கான உணவையும், மருத்துவ வசதிகளையும், வேலை வாய்ப்பையும் கொடுக்கட்டும். அரசியல் உரிமைகள் பற்றியோ அல்லது தீர்வுபற்றியோ இப்போது பேசத்தேவையில்லை.
கேள்வி : தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக தொழிலதிபர்களை ஒருங்கிணைத்து இலங்கையில் மனிதாபிமான திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று நீங்கள் கூறுகிறீர்களா?
கே பி : நிச்சயமாக. வன்னியில் பல தொழிற்சாலைகளை அவர் நிறுவ முடியும். தமிழகத்தில் இருக்கும் தொழிலதிபர்களை இலங்கை அரசாங்கத்துடன் பேச அனுப்புவதன் மூலம், இங்கு அபிவிருத்திகளை அவர் ஆரம்பிக்க முடியும். இங்கே தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பினை அவரால் உருவாக்கித் தரமுடியும்.
கேள்வி : நீங்கள் புலிகளியக்கத்தின் பிரதான ஆயுதக் கொள்வனவாளராக பல காலம் கடமையாற்றியவர். இந்தியாவின் மாவோயிஸ்ட்டு கெரில்லாக்களான நக்ஸலைட் போராளிகளுக்குப் புலிகள் பயிற்சியளித்ததாக பல செய்திகள் வெளிவந்தனவே? இதுபற்றி சற்று விளக்கமாகக் கூறமுடியுமா?
கே பி : 2002 வரைக்கும் எந்தவொரு வெளிநாட்டுக் கிளர்ச்சியமைப்புடனும் அவர்கள் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கவில்லை என்று என்னால் கூறமுடியும். அரசியல் ரீதியிலான தொடர்புகள் இருந்தாலும்கூட, ஆயுத ரீதியில் தொடர்புகளிருக்கவில்லை. 2002 வரை நான் பொறுப்பில் இருந்த காலத்தில் இவ்வாறான எந்த ஆயுதத் தொடர்பும் இருக்காதவாறு நான் பார்த்துக்கொண்டேன். ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதை நான் முற்றாக நிராகரித்தே வந்தேன். ஒவ்வொரு போராட்டமும், ஒவ்வொரு கிளர்ச்சியமைப்பும் தனித்துவமானவை, ஆகவே இவற்றில் தலையிட நாம் விரும்பியிருக்கவில்லை. ஆகவே, மாவோயிஸ்ட்டுக்களுடன் நாம் எதுவித தொடர்பையும் பேணவில்லை. 1984 முதல் 2002 வரையான காலப்பகுதியில் நான் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்தபொழுது , போராட்டம் இலட்சியம் நோக்கிச் செல்வதையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு நாம் இயங்கினோம்.