மட்டக்களப்பு மக்களிடமிருந்து கருணா மாதா மாதம் எண்பது லட்சம் ரூபாய்களை கப்பமாகப் பறித்து வந்தார் - கருணா குழு முக்கியஸ்த்தர் செவ்வி
மூலம் : லங்கா கார்டியன்
காலம் : செப்டெம்பர் 29, 2007
"நாங்கள் கருணா அம்மானை ஒரு மக்கள் தலைவானகவே பார்த்துவந்தோம். ஆனால், அவர் அப்படியில்லை என்பது இப்போது தெளிவாகிறது"
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து பிரிந்து சென்று ராணுவத்துடன் சேர்ந்து, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் துணைராணுவக் குழுவை அமைத்து இயக்கிவரும் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் மட்டக்களப்பில் மக்களை அச்சுருத்தி பெருந்தொகைப் பணத்தினைக் கப்பமாகப் பெற்றுவருவதாக அவரது குழுவின் முக்கியஸ்த்தர் ஒருவர் லங்கா கார்டியன் பத்திரிகைக்குப் பேட்டியளித்திருக்கிறார். கடந்த இரவு வழங்கப்பட்ட இச்செவ்வியில், அந்த முக்கியஸ்த்தர் மேலும் கூறும்போது கருணாவால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாதம் ஒன்றிற்கு குறைந்தது எண்பது லட்சம் ரூபாய்கள் மக்களிடம் இருந்து கப்பமாக அறவிடப்பட்டு வருவதாகக் கூறுகிறார்.
மட்டக்களப்பு நகரிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இயங்கும் வியாபார நிலையங்கள், வீடியோக் கடைகள், மதுபான விற்பனை நிலையங்கள் மற்றும் ஏனைய தனியார் சில்லறை விற்பனை நிலையங்களிலிருந்து கருணா இக்கப்பங்களைப் பெற்றுவருவதாக அவர் கூறுகிறார்.
தமது குழுவிற்குள் அண்மையில் ஏற்பட்டிருக்கும் உள்வீட்டுப் பிணக்கினையடுத்து கருணா சில நாட்களுக்கு முன்னதாக நாட்டினை விட்டு பெருமளவு பணத்துடன் தப்பியோடிவிட்டதாகக் கூறும் இந்த முக்கியஸ்த்தர், அவரின் உயிருக்கு தமது குழுவிற்குள் இருந்தே பாரிய அச்சுருத்தலை எதிர்கொண்டுவந்த கருணாவுக்கு நாட்டை விட்டு தப்பியோடுவதைத்தவிர வேறு வழியிருக்கவில்லையென்றும் தெரிவித்தார்.
லங்கா கர்டியனுடனான கருணா குழு முக்கியஸ்த்தரின் பேட்டி கீழே :
"அவர் தப்பியோடிவிட்டார், ஆனால் அவரது தாக்கம் இன்னமும் இங்கே அப்படியே இருக்கிறது, நாங்கள் அவரை ஒரு நல்ல மக்கள் தலைவனாகவே எண்ணியிருந்தோம், ஆனால் அவர் அப்படியில்லை என்பது தெளிவாகிறது".
கடந்த வருட இறுதியில் பதியப்படாத அரசியல் கட்சியாக தனது குழுவை கருணா ஆரம்பித்திருந்தார். ஆனால், ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்தே பாரிய உள்வீட்டு குத்துவெட்டுக்களை அவரது கட்சி சந்தித்து வந்ததுடன், ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் ஒத்துழைத்துச் செயற்பட கருணா ஒருபோதும் விரும்பியிருக்கவில்லை. தனது கட்சிக்குள் நடைபெற்று வந்த பல படுகொலைகளைப் பற்றித் தன்னும் கருணா அக்கறை செலுத்தவில்லை. திலீபன் மற்றும் வீரா ஆகிய முக்கியஸ்த்தர்கள் உடபட பல கருணா உறுப்பினர்களின் படுகொலைகள் பற்றி கருணா அலட்டிக்கொள்ளவில்லை.
"பிள்ளையான் குழுவைப் பொறுத்தவரை திலீபன், வீரா ஆகியோரைக் கொல்வது அவசியாமனது என்று கருதப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த பிள்ளையான் இவர்களைக் கொல்வதன்மூலம் புலிகளின் புலநாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மானுக்கு தம்மைப்பற்றிய செய்திகள் செல்வதைத் தடுக்க முடியும் என்று நம்பினார். ஆகவே புலிகளுடன் தொடர்பிருக்கலாம் என்று கருதப்பட்ட பல உறுப்பினர்களை கட்சிக்குள்ளேயே அவர்கள் கொன்றுதள்ளினார்கள்" என்று அந்த முக்கியஸ்த்தர் கூறுகிறார்.
"கருணா குழு இரண்டாகப் பிளவுபட்டபின்னர் எம்மில் ஒருகுழுவினருக்கு இலங்கை ராணுவமும், மற்றைய குழுவுக்கு இலங்கைக் கடற்படையும் உதவிவந்தன. ஆயுதங்கள், அடைக்கலம் உள்ளிட்ட சகல வசதிகளும் இக்குழுக்களுக்கு இலங்கை அரசினால் வழங்கப்பட்டன".
"கருணா பிரபாகரனிடமிருந்து பிரிந்து வெளியே வந்தபோது, எமது மக்களுக்கான நல்லதொரு தலைவர் தோன்றிவிட்டார் என்றே நாம் நம்பினோம். ஆனால் நாளடைவில் எந்தப் பிரபாகரனின் கீழ் நாம் அல்லற்பட்டோம் என்று கருதினோமோ, அதைவிட அதிகமான இன்னல்களை நாம் கருணாவின் கீழ் அடைந்தோம், ஆனால் பெயர் மட்டுமே மாறியிருந்தது".
"புலிகளின் இலக்கு மாறிப்போனதைப் போன்றே, கருணாவின் இலக்கும் முளையிலேயே மாறிப்போனது. ஆனால், இலங்கை அரசுக்கும் ராணுவத்திற்கும் இது வரப்பிரசாதமாகவும், மிகச்சிறந்த சந்தர்ப்பமாகவும் மாறிப்போனது. எம்மைப் பாவித்தே புலிகளை அவர்களால் அழிக்க முடிகிறது" என்று அவர் மேலும் கூறினார்.