தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண அரசியல்த்துறைப் பொறுப்பாளர் கெளசல்யனின் படுகொலை
2005 ஆம் ஆண்டு மாசி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் கெளசல்யன் கிழக்கு மாகாணத்தின் நாமல்கம எனும் பகுதியினை ஊடறுத்துச் செல்லும் ஏ 11 நெடுஞ்சாலையில் கருணா குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மாசி மாதம் 7 ஆம் திகதி ஒரு திங்கட்கிழமையாகும். 57 - 1020 எனும் இலக்கத்தகட்டினையுடைய டொயோடா ஹயேஸ் ரக பயணிகள் வாகனம் மரதங்கடவல - திருக்கொண்டாட்சிமடு ஆகிய பகுதிகளை இணைக்கும் ஏ 11 நெடுஞ்சாலையூடாகப் பயணித்துக்கொண்டிருந்தது. வீதியில் இந்த வாகனத்திற்கு முன்னால், ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இன்னொரு வாகனத்தைக் கண்டதும், இந்த வாகனத்தை ஓட்டிச் சென்ற சாரதி வேகத்தைக் குறைக்கத் தொடங்கினார். ஆனால், வீதியோரத்தில் நிறுத்தப்பட்டு, அபாய விளக்குகள் எரிந்துகொன்டிருந்த அந்த வெண்ணிற வாகனத்திலிருந்தவர்கள் கெள்சல்யன் சென்றுகொண்டிருந்த வாகனத்தை நிறுத்துமாறு சைகை செய்யவே, அவர்கள் வாகனத்தை ஓய்வுக்குக் கொண்டுவரத் தொடங்கினார்கள். அப்போது நேரம் இரவு 7 மணி 45 நிமிடம்.
கெளசல்யன் பயணித்த ஹயேஸ் வாகனத்தில் 9 பேர் இருந்தனர். முன்னிருக்கையில், சாரதி விநாயகமூர்த்தியும், அருகில் முன்னாள் அம்பாறை மாவட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனும், அவருக்கு அருகில் திருக்கோயிலைச் சேர்ந்த பொலீஸ் காவலர் சந்திரசேகரனும் அமர்ந்திருந்தனர். நடுவரிசை இருக்கையில் புலிகளின் கிழக்கு மாவட்டங்களின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் கெளசல்யனும், இன்னொரு அரசியல்த்துறைப் போராளி புகழனும், அவர்களுக்கருகில் இன்னொரு பொலீஸ் காவலர் நாகராஜாவும் அமர்ந்திருந்தனர்.
பின்னிருக்கையில் புலிகளின் அரசியல்த்துறைப் போராளிகளான செந்தமிழன், நிதிமாறன், விநோதன் ஆகியோரும் அமர்ந்திருந்தனர்.
இவர்களின் வாகனம் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வெள்ளைநிற ஹயேஸ் வாகனத்தைக் கடந்து செல்லும் தறுவாயில், அவ்வாகனத்தின் முன்னால் வீதியில் சீருடை தரித்த மூவர் நின்றுகொண்டிருப்பதை வாகனத்திலிருந்தவர்கள் அவதானித்திருக்கின்றனர். அவ்விடத்தில் நின்றவர்களின் ஒருவர் இவர்களின் வாகனத்தை நோக்கி கையசைக்கவே, மெதுவான கதியில் சென்றுகொன்டிருந்த இவர்களின் வாகனம், தனது வேகத்தை இன்னும் வெகுவாகக் குறைத்துக்கொண்டது.
கெலசல்யன் பயணித்த வாகனம் ஓய்வுக்கு வரவும் அதனை நோக்கி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திலிருந்தும், வீதியில் நின்றவர்களும் சேர்ந்து சரமாரியான துப்பாக்கித் தாக்குதலை ஆரம்பித்தார்கள். பின்னிருக்கையில் அமர்ந்திருந்த விநோதன், கெளசல்யனும், சாரதியும் குண்டடிபட்டு முன்னோக்கிச் சாய்வதை அவதானிக்கிறார்.
கெளசல்யனின் வாகனத்தில் பயணித்த இரு பொலீஸ்காரரும் சந்திரநேருவின் காவலுக்கு வந்தவர்கள். அவர்கள் இருவரிடமும் டி - 56 ரக தானியங்கித் துப்பாக்கிகள் இருந்தன. இதை விடவும் சந்திரநேருவிடம் அவரின் பாவனைக்கென்று 9 மி மீ கைத்துப்பாக்கியொன்றும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தம்மீது தாக்குதலை நடத்தும் கொலைகாரர்கள் மீது திருப்பித் தாக்கவோ, மறைவாக ஒளிந்துகொள்ளவோ அவர்களுக்குச் சந்தர்ப்பம் கொடுக்காது தொடர்ச்சியாகத் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டது. வாகனத்தில் இருந்தவர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடந்தபோது, ஒரு பொலீஸ்காரர் வாகனத்திலிருந்து வெளியே குத்தித்து தப்பிக்க முயன்றார். வாகனத்தில் பயணித்த ஐந்து புலிகளின் செயற்பாட்டாளர்கள் எவரிடமும் எதுவித ஆயுதங்களும் இருக்கவில்லை. இரண்டு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் இந்த படுகொலையினைச் செய்துவிட்டு அந்த வெள்லைவான் கொலைகாரர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்ரார்கள்.
வாகனத்தில் பயணம் செய்த 9 பேரில் கெளசல்யன், புகழன், நிதிமாறன், செந்தமிழன் ஆகிய விடுதலைப் புலிகளும், வாகனச் சாரதியான விநாயகமூர்த்தியும் அவ்விடத்திலேயே இரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டனர். காவலுக்கு வந்த இரு பொலீஸ்காரர்கள், சந்திரநேரு மற்றும் வினோதன் ஆகியோர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். இந்த துப்பாக்கித் தாக்குதல் நடந்து பத்து நிமிடங்களின் பின்னர் அருகிலிருந்த வெலிக்கந்தை முகாமிலிருந்து தாக்குதல் நடந்த இடத்திற்கு ராணுவத்தினர் வந்து சேர்ந்தனர்.
இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களையும், காயமடைந்தவர்களையும் முதலில் வெலிக்கந்தை வைத்தியசாலைக்கும், பின்னர் பொலொன்னறுவை வைத்தியசாலைக்கும் கொன்டு சென்றனர். பின்னர் காயப்பட்டவர்கள் உலங்கு வானூர்திமூலம் கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அவசர சத்திரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சந்திரநேருவின் உடல்நிலை ஆரம்பத்தில் தேறினாலும், இறுதியில் அதிகப்படியான இரத்தப் பெருக்கினால் மரணமடைந்தார். தாக்குதலில் உயிர் தப்பிய விநோதன் எனும் போராளியும், இன்னொரு பொலீஸ்காரரும் நடந்த படுகொலைபற்றிய விபரங்களை வெளிக்கொணர்ந்தனர்.