பார்வை ஒன்றே போதுமே..........(14).
அப்போது நிர்மலாவும் தனது கைப்கையில் இருந்து காசோலை புத்தகத்தை எடுத்து நீங்கள் குறை நினைக்கக் கூடாது உங்களுக்கு தேவையான அளவு நிரப்பிக் கொள்ளுங்கள் என்று ஒரு வெற்றுக் காசோலையை ஒப்பமிட்டுக் குடுக்க உடனே முத்து அதை மறுத்து வேண்டாம் தங்கச்சி அது உங்களிடமே இருக்கட்டும். அப்பாவே எங்களுக்கு எவ்வளவோ செய்து விட்டார். சித்ராவும் ஓம் நிர்மலா நான் அவர் மானம் காக்க ஒரு தாவணித்துண்டுதான் குடுத்தேன், நிர்மலா இடைமறித்து அண்ணா இவளின் தாவணியைக் கட்டிக்கொண்டு அப்பா எப்படி இருந்திருப்பார் என்று நினைத்துப் பார் செமையாய் இருக்குதில்ல அவனுக்கும் சிரிப்பு வருது அதை மறைத்து கொண்டு உனக்கு நேரங்காலம் தெரியாமல் எப்போதும் குறும்புதான் என்று சொல்லி அவள் தலையில் குட்டுகிறான். போ அண்ணா வலிக்குது என்று சினுங்க, சித்ராவும் தொடர்ந்து அப்பா எங்களுக்கு கல்வி மட்டுமல்ல நிரந்தர வருமானத்துக்குரிய வழிகளும் செய்து, கடைத்தெருவில் பெரிய கடை ஒன்றை வாங்கவும் ஆலோசனைகள், வங்கியில் கடன் வாங்க என்று எல்லா உதவிகளையும் செய்திருக்கிறார்.இவை யாவும் அவர் செய்திரா விட்டால் எங்களால் முடிந்திராது. இதுவே எங்கள் ஆயுளுக்கும் போதும். இந்த அயலில் எங்கள் குடும்பத்தை ஒரு கௌரவமான நிலைக்கு உயர்த்தி விட்டுள்ளார். அதைவிட எந்நிலையிலும் தாழாத தன்னம்பிக்கையை எங்களுக்கு ஊட்டி இருக்கிறார். இதைவிட எங்களுக்கு வேறென்ன வேண்டும். ரவிதாசும் உடனே நீங்கள் இருவரும் இன்றிலிருந்து எங்களுடைய சகோதரர்கள், இது வெறும் வார்த்தையல்ல என் இதயத்திலிருந்து சொல்கிறேன் என்று சொல்ல, நிர்மலா இடைமறித்து வேண்டாம் சித்ரா இவனுக்கு தங்கையாய் இருந்தால் குட்டி குட்டியே உன் மூளையை கூழாக்கி விடுவான். நீ விரும்பினால் எனக்கு அண்ணியாக வாயேன் நான் அப்பாவிடமும் அம்மாவிடமும் கதைக்கிறேன் என்று சொல்ல சித்ராவின் முகம் மலர்ந்தாலும் உடனே சிறிது வாட்டமடைகிறது. ஏன் சித்ரா நான் சொல்வது உனக்குப் பிடிக்கவில்லையா அல்லது அண்ணாவைப் பிடிக்கவில்லையா வேறு யாரையாவது விரும்புகிறாயா எதுவானாலும் தைரியமாகச் சொல்லு என்கிறாள்.
முத்துவும் கொஞ்சம் யோசிக்க, அப்படியல்ல நிர்மலா உங்கள் குடும்பத்தில் வாழ்க்கைப் படுவதென்றால் அது எங்களுக்கு மிகப்பெரும் பாக்கியமாகத்தான் இருக்கும். ஆனால் என்று இழுக்க, ஆனால் என்ன சொல்லு நிர்மலாவும் முத்துவும் கேட்க, ரவிதாசுக்கு மனம் நிம்மதியாய் இருக்கு, அவன் இப்பொழுதுதான் வெளியூர் பயணமாக லண்டன் போகும் போதெல்லாம் அங்கு ஒரு தமிழ் யுவதியை காதலிக்க ஆரம்பித்திருந்தான். அது இன்னும் நிர்மலாவுக்கு தெரியாது. சித்ராவும் ஆனால் நீங்கள் யாரும் குறை நினைக்க வேண்டாம். சில நாளாக நான் கவனித்துக்கொண்டு வருகின்றேன், இவ்வளவு காலமும் இல்லாமல் எங்கள் அம்மா மனம் சலனமடைகின்றா போல் இருக்கிறது. அப்பாவிடமும் அது தெரிந்தாலும் எதுவோ தடுப்பதுபோல் அம்மாவைத் தவிர்த்து அவர் விட்டேற்றியாக செல்வதையும் பார்க்கிறேன். ஆனால் இப்போதுதான் அவர் வீட்டை விட்டு வெளியேறியதற்கும் அம்மாவின் விருப்பத்தை ஏற்கத் தயங்குவதுமாக "இருதலைக் கொள்ளி எறும்பு போல்" தவிப்பதையும் உணரமுடிகிறது. நாங்கள் அறிய எனது அம்மாவையும் சிறுவயதிலேயே அப்பாவுக்கு கலியாணம் செய்து வைத்து விட்டார்கள். உடனேயே அடுத்தடுத்து பிள்ளைகள் என்றும் குடிக்கும் அப்பாவோடு எப்போதும் சண்டை என்றும் ......அவ வாழ்க்கையில் எந்த ஒரு சுகமும் கண்டதில்லை. இப்ப சமீபகாலமாகத்தான் அம்மா முகத்தில் ஒரு மலர்ச்சியையும் மந்தகாசத்தையும் பார்க்கிறேன். அதுதான் நான் யோசிக்கிறேன்.
இது ஒன்றும் எனக்குத் தெரியாதே அக்கா என்று முத்து சொல்ல உனக்கு என்னதான் தெரியும் முன்பெல்லாம் அம்மா என்கூட அறையில்தான் படுப்பது வழக்கம்.இப்போ உள்ளே குசினிக்குள்தான் படுக்கிறா. அதன் வரிச்சு மட்டைகளினூடாக அப்பாவைப் பார்ப்பதுபோல், பழைய காதல் பாட்டுக்களை ரேடியோவில் ரசித்துக் கேட்கிறா, என்னுடைய பவுடர் கியூடெக்ஸ் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் பாவிக்கிறா. இதெல்லாம் நான் பார்க்காத புது அம்மாவாக இருக்கு. சொல்லும்போதே அவள் குரல் கரகரக்கிறது, கண்களில் நீர் கோர்க்கிறது. ஓம்...சித்ரா சொல்வது சரிதான், இன்று நானும் அதைப் பார்த்தேன் என்கிறான் ரவிதாஸ் . எது வேலியால் எட்டி எட்டி பார்த்தீங்களே அப்போதா. என்கிறான் முத்து. தனக்குள் மாட்டைத்தவிர மற்றதெல்லாத்தையும் பார்த்திருக்கிறார் அண்ணர். ஆமாம் அப்போது அப்பாவின் முதுகுதான் தெரிந்தது அம்மாவ நன்றாகவே பார்த்தேன் ரொமான்ஸ் முகத்தில் தெரிந்தது. அப்போது அவர்கள் உங்களின் பெற்றோர் என்றுதான் நினைத்தேன். நினைத்துப் பார்த்தால் அப்பாவின் வாழ்க்கையும் அப்படித்தான் போய் இருக்கிறது எந்நேரமும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருந்தார்........!
பார்ப்போம் இனி ...........! ✍️