பார்வை ஒன்றே போதுமே.......(15).
வீட்டுக்கு வருகின்றார்கள். தூரத்தில் வரும்போதே கோழிக்கறியின் வாசனை மூக்கைத் துளைக்கிறது. முற்றத்தில் நின்ற சேவல் சட்டிக்குள் கொதித்துக் கொண்டிருக்கு. மகேஸ்வரியின் பழகிய கை பக்குவமாய் சட்டியை கிளறுகின்றது.அவள் மனசும் அதுபோல் கொதித்துக் கொண்டிருக்க நினைவுகள் உள்ளே பிராண்டிக் கொண்டிருக்கின்றன. கடவுளே எதோ ஒரு எண்ணம் என்னையும் அறியாமல் என்னை அலைக்கழித்து இந்த மனுஷன் என் மனசுக்குள் புகுந்து விட்டார். அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் என்ற திருப்தி. அது கூட உனக்குப் பொறுக்கவில்லையா. மனம் ரணமாய் வலிக்கிறது. யோசித்துப் பார்க்கிறாள், இது எப்படி......சில கோவில் தீர்த்தக்கிணறுகளில் ஒரு சான் அளவு தண்ணீர்தான் இருக்கும்.அபிஷேகத்தின் பொழுது பத்து குடமா, நூறு குடமா, ஆயிரம், லட்ஷம் குடமா நீர் சுரந்து கொண்டு இருக்கும் வற்றாது, அதுபோல் இப்பொழுது அவர்மீதுள்ள அன்பு பிரவாகித்து வருகிறதே, நான் என்ன செய்வேன். குழம்புபோல் மனமும் கொதிக்கிறது.
அவளின் நிலையில்தான் சாமிநாதனும் இருந்தார். சமீபகாலமாக அவளின் நடவடிக்கையில் மாற்றங்களை அவர் பார்த்துக் கொண்டுதான் வருகிறார். இப்போது திண்ணையில் இருந்து மகேஸ்வரியைப் பார்க்க அவளின் பரிதவிப்பு அவரை என்னமோ செய்கிறது. இதற்கெல்லாம் தானும் காரணமாகி விட்ட குற்றவுணர்வு மேலோங்கி அவரை என்னமோ செய்கிறது. கண்கள் பனிக்கின்றன. பிள்ளைகள் வந்து விட்டதால் மறுபுறம் திரும்பிப் புறங்கையால் கண்களைத் துடைத்துக் கொள்கிறார். ஆனால் அவர்கள் அதைக் கவனித்து விடுகிறார்கள். மகேஸ்வரி வெளியில் வந்து வாங்கோ பிள்ளைகள் சாப்பாடு தயார். எல்லோரும் சாப்பிட்டு விட்டுத்தான் போகவேணும். தம்பி முத்து ஓடிப்போய் எல்லோருக்கும் வாழையிலைகள் வெட்டிக் கொண்டு வா அப்பு. பிள்ளை பாய்களை எடுத்து வந்து போடனை என்று சொல்லிக்கொண்டு பம்பரமாய் சுழல்கிறாள்.
எல்லோரும் சாப்பிடும்போது சாமிநாதனும் பேருக்கு சாப்பிட்டு விட்டு எழும்புகிறார், மகேஸ்வரிக்கு சாப்பிடவே மனமில்லை வெறும் தண்ணியைக் குடித்துவிட்டு எழும்புகிறாள். அம்மா சாப்பாடு ரொம்ப நல்லா இருந்தது, இப்படி ஒரு விருந்து சாப்பிட்டு ரொம்ப காலமாச்சுது என்று ரவிதாஸ் சொல்ல நிர்மலாவும் ஓம் அம்மா என்று சொல்கிறாள். கிளம்புகிற நேரம் எல்லோருக்கும் ஒரு தயக்கமாய் இருக்கு. சாமிநாதனுக்கும் தான் எப்படி இனியும் இங்கிருப்பது என்ற தயக்கம் ஆனாலும் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டு முன்வந்து "முத்தம்மா" ஆம் இதுவரை அவளை அவர் அப்படித்தான் கூப்பிட்டு வந்திருக்கிறார். நீங்கள் விரும்பினால் என் பிள்ளைகளில் ஒருவரையும் உங்களின் பிள்ளைகளில் ஒருவரையும் மணமுடித்து வைக்கலாமே என்று சொல்கிறார். அதற்கு அவளும் அதென்ன புதிதாக இன்றைக்கு உங்க பிள்ளை , என் பிள்ளை என்று பிரித்துப் பேசுகிறீர்கள். ஆனாலும் நீங்கள் எது சொன்னாலும் எனக்கு சம்மதம். இவ்வளவு நாளும் இந்தப் பிள்ளைகளுக்கும் எனக்கும் ஒரு அரணாக இருந்து அதுகளை சொந்தக்காலில் நிக்குமளவு ஆளாக்கி விட்டது நீங்கள்தான். அன்று நீங்கள் சொல்லவில்லை யென்றால் முத்துவால் படித்திருக்கவே முடியாது. அந்த நன்றியை நாங்கள் ஒருகாலமும் மறக்க மாட்டோம்.எதுக்கும் பிள்ளைகளையும் ஒரு வார்த்தை கேளுங்கள்.அவர்கள் முடிவெடுக்கட்டும் என்று சொல்லும்போதும் அவலறியாமல் குரல் கம்முகிறது கண்களில் நீர் தளும்புகிறது.
சாமிநாதனும் பிள்ளைகள் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கோ என்று சொல்ல ரவிதாஸ் முன்வந்து அப்பா நீங்களும் இவ்வளவுகாலமாய் வேலை வேலை என்று வீட்டையும் மறந்து எங்களுக்காக உழைத்தீர்கள். அதனாலோ என்னவோ எங்கள் அம்மாவையும் இழக்க வேண்டி வந்து விட்டது. பின் வந்த இடத்தில் இவர்களின் குடும்பத்தையும் ஒரு மேல் நிலைக்குக் கொண்டுவந்து விட்டிருக்கிறீங்கள். அதுபோல்தான் இந்த அம்மாவும் தன் பிள்ளைகளின் நலனுக்காகவே இவ்வளவு காலமும் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். இனி நீங்கள் இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்றுதான் நாங்கள் எல்லோரும் ஆசைப்படுகின்றோம் என்று சொல்ல, சித்ரா முன்வந்து ஓமம்மா அண்ணா சொல்வதுதான் சரி என்கிறாள். சற்றுமுன் நாங்கள் தோட்டத்தில் இதை பற்றித்தான் கதைத்தோம் என நிர்மலாவும் சொல்லிவிட்டு ஓம்....நீங்கள் "பார்வை ஒன்றே போதுமே" என்று பார்வையால் வாழ்ந்தது போதும் மகேஸ்வரியின் கையைப் பிடித்து நீங்கள் எங்களுக்கும் அம்மாவாக வேணும் இதை நீங்கள் மறுக்கக் கூடாது என்கிறாள். மகேஸ்வரி வெட்கத்துடன் சாமிநாதனைப் பார்க்க அவரும் மௌனமாக ஓம் என்று தலையசைக்கிறார்.
கொஞ்ச நேரத்தில் ஆடைகள் மாற்றிக்கொண்டு வந்த முத்துவும் சித்ராவும் அம்மா இன்று நாங்கள் அண்ணாத்தை படம் பார்த்துவிட்டு அண்ணாவின் பங்களாவில்தான் இரவு தங்கப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டே ஆடி காரில் ஓடிப்போய் ஏற அது கோர்ன் அடித்துக் கொண்டு சீறிச் செல்கின்றது.
திண்ணைத் தூணைப் பிடித்தபடி ஒருக்களித்து நின்று கொண்டு மகேஸ்வரி வெட்கமும் காதலும் கலந்து காலால் நிலத்தை கீறிக்கொண்டு நிக்கிறாள். "காணாத உறவொன்று கண்முன் நிற்க வாழாத பெண் ஒன்று வழி கண்டதுபோல்" தலை தாழ்திருக்க விழிகளை அசைத்து மேற்கண்ணால் அவரைப் பார்க்கிறாள். சாமிநாதனும் மெல்ல நெருங்கி வந்து அவள் தோளைத் தொட்டு முத்தம்மா என்று மெல்ல சொல்ல .....
ம்.....என்கிறாள். சற்று மௌனம்..... பின் ஏன் நீங்கள் ரஜினி படம் பார்க்க போகவில்லையா......
இல்லை......
ஏனாம் .....
நாங்கள் வலிமை பார்க்கலாம் என்று ......
அப்படியா எனக்கு அஜித் படமும் பிடிக்கும்.
அப்படியென்றால் இருவரும் சேர்ந்தே பார்க்கலாம். தோள் மீதிருந்த கையை மெதுவாக அழுத்துகின்றார். அவளறியாமலே உடல் இசைவாக குழைகிறது.கூடவே மேனியெங்கும் சிறு நடுக்கமும்......இவ்வளவு காலமும் இருவருக்குள்ளும் தூங்கிக் கிடந்த ஹார்மோன்கள் சலனமடைந்து கிளர்ச்சியுற்று ஹார்மோனியம் வாசிக்கத் தயாராகின்றன. இதற்கு மேலும் தாங்க முடியாமல் "அரங்கனின் தோளில் ஆண்டாள் மாலைபோல்" கைகளை அவர் கழுத்தில் போட்டு மார்பில் மலர்கிறாள். துவளும் அவளது இடையை தன் இரு கைகளால் இறுக்கி அந்த மலரை தன்னுடன் சேர்த்தணைத்தபடி திண்ணையில் அமர்கிறார் சாமிநாதன்......!
யாவும் கற்பனை......!
யாழ் 24 அகவைக்காக
அன்புடன் சுவி......!