உயிர்மின்னல்களின் வெடியில் அதிர்ந்த காலித் தட்சின துறைமுகம் 'தட்சின துறைமுகத்தின் கடலில் இருந்ததான பார்வை | படிமப்புரவு: தமிழ்நெற்' அது 18.10.2006 இன் இராவிருள் அகன்று புலரும் காலை வேளை. போர் வலயத்திலிருந்து வெகுதொலைவில் அமைந்திருந்த "கொட்டி"யால் நெருங்கமுடியாதென்ற திமிரோடிருந்த சிங்களத்தின் 'தட்சின துறைமுகம்' அதிர்ந்துகொண்டிருந்தது, கடலின் 'ஐந்தெழுத்து மனிதர்கள்' ஒன்மரின் உயிர்வெடிகளால்! காரிருட்டைப் பயன்படுத்தி மீனவர்கள் வேடமிட்டு காலியில் அமைந்திருந்த சிறிலங்காக் கடற்படையின் தட்சின துறைமுகத்தினுள் 5 கட்டைப்படகுகளில் (Dinghy) நுழைந்த கடற்கரும்புலிகள், கடற்புலிகள் மற்றும் படையப் புலனாய்வுப்பிரிவினரைக் கொண்ட 15 பேர் அடங்கிய தவிபுவின் சிறப்பு அணியினால் காலை 7:45 மணிக்கு இவ் வெற்றிகர வலிதாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ் வலிதாக்குதலுக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் முன்னின்று செய்த கடற்புலிகளின் அப்போதைய தாக்குதல் கட்டளையாளர்களில் ஒருவரான லெப். கேணல் விடுதலை அத்தோடு நின்று விடாமல் தாக்குதல் அணிகளை துறைமுகத்திற்கு அருகில் வரை கூட்டிச் சென்று வழியனுப்பிவிட்டும் வந்தார். இவ் வலிதாக்குதலின் போது ஆகக்குறைந்தது மூன்று சக்கை வண்டிகளாவது மோதியிடித்தன. அதால் சிங்களக் கடற்படைக்குச் சொந்தமான 3 கடற்கலங்கள் மூழ்கடிக்கப்பட்டன என்று கொழும்பு பாதுகாப்புச் செய்தியாளர்கள் தமிழ்நெற்றிற்கு தெரிவித்திருந்தனர். இத்தாக்குதலின் போது மூழ்கடிக்கப்பட்டனவோடு மேலும் 3 கடற்கலங்கள் முற்றாக இழக்க/ சேதப்பட (மூண்ட தீயால்) செய்யப்பட்டிருந்தன என்று விடுதலைப்புலிகளின் போர்க்காலப் பாடல்களூடாக அறியக்கூடியதாக உள்ளது. "கடற்கரும்புலிகளின் வீரத்திலே - ஆறு கப்பல்கள் எரிந்தன ஈரத்திலே!" - கடற்கரும்புலிகள் பாகம் 12இல் உள்ள "காலித் துறைமுகம் மீதில் புகுந்தவர்" பாடலிலிருந்து ஒரு டோறா விரைவுத் தாக்குதல் கலம் மற்றும் இரு 'வோட்டர் ஜெட்' வகுப்பு உட்கரை சுற்றுக்காவல் படகுகள் என மொத்தம் மூன்று கடற்கலங்கள் முற்றாக மூழ்கடிக்கப்பட்டன. சிங்களம் இழந்தவற்றுள் முதன்மையானது "பராக்கிரமபாகு" என்ற கைகுயிங்கு வகுப்பைச் சேர்ந்த சேமமானம்(Corvette) ஆகும். இக்கடற்கலமானது 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையால் மூழ்கடிக்கப்பட்டாலும் மீட்டெடுக்கப்பட்டு சரிசெய்யப்பட்ட நிலையில் தட்சின துறைமுகத்தில் தரிபெற்றிருந்த போதே தமிழரின் தாக்குதலிற்குள்ளாகி மீளப் பயன்படுத்த முடியாத நிலைக்கு செயலிழக்கச் செய்யப்பட்டது. இது 1995 ஆம் ஆண்டு சீனாவிடமிருந்து வாங்கப்பட்டு அடுத்த ஆண்டே சிறிலங்கா கடற்படையின் தாய்க்கப்பலாக ஆணைபெற்று தமிழீழ நடைமுறையரசின் கடற்படையான கடற்புலிகளுக்கு எதிரான பல கடற்சமர்களிலும் சிங்களத்தின் தமிழர் தாயக வல்வளைப்புகளுக்கும் துணை நின்ற ஒரு நீர்மூழ்கி துரத்தல் கடற்கலமாகும். இவற்றோடு அங்கு நின்றிருந்த ஒரு எரிவாயு காவி கப்பலும் இனந்தெரியாத ஒரு கடற்கலமும் சேதமடைந்தன. நுழைந்த சதளத்தின்(sqd.) ஏனைய இரு படகுகளிலும் வந்தவர்கள் துறைமுகத்தினுள் தரையிறங்கி அங்கிருந்த கடற்படை நிலையங்கள் மீது சுடுகலன்களாலும் உந்துகணைகளாலும் தாக்குதல் நடத்தி சேதங்களை ஏற்படுத்தினர். தாக்குதல் தொடர்ந்து இரு மணிநேரம் நீடித்தது. கடற்கரும்புலிகளின் தாக்குதலால் அப்பரப்பின் வானில் கரும்புகை எழுந்தது. தாக்குதல் நடத்தியவர்கள் அருகிலிருந்த நகரத்தினுள் தப்பிச் சென்றதாக செய்திகள் கசிந்து பரபரப்பினை அப்பரப்பில் ஏற்படுத்தின. இவ்வெற்றிகர வலிதாக்குதலின் போது சிறிலங்காக் கடற்படையின் கடற்கலவர்களில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் காணாமல்போயுள்ளனர் என்றும் மேலும் 14 பேரும் 15 பொதுமக்களும் காயமடைந்துள்ளனர் என்று சிங்களக் காவல்துறை செய்தி வெளியிட்டது. காயமடைந்தவர்கள் காலி கரைப்பிட்டி (கரபிட்டிய) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தமிழர் தரப்பில் நடவடிக்கைக்குச் சென்றோரில் 8 கடற்கரும்புலிகள் வெடியாகி காற்றோடு கரைந்து போயினர். அன்னவர்களின் பெயர் விரிப்பு பின்வருமாறு: கடற்கரும்புலி லெப்.கேணல் அரவிந்தா கடற்கரும்புலி மேஜர் தமிழ்வேந்தன் கடற்கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் கடற்கரும்புலி மேஜர் கடலவன் கடற்கரும்புலி மேஜர் முகிலன் கடற்கரும்புலி மேஜர் வன்னிமன்னன் கடற்கரும்புலி கப்டன் இசையின்பன் கடற்கரும்புலி கப்டன் கண்ணாளன் இவ்வதிரடித் தாக்குதலின் தோல்வியை செமிக்கவியலாத சிங்களக் காடையர்கள் காலியில் இருந்த தமிழரின் கடைகள் மீது வன்முறையினைக் கட்டவிழ்த்துவிட்டனர். இதில் தமிழரின் 20 கடைகள் சூறையாடப்பட்டதுடன் மேலும் 8 கடைகள் மோசமாக சேதப்படுத்தப்பட்டன. கொழும்பு காலி வீதி மூடப்பட்டது. காலி மாவட்டம் முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை மூத்த காவல்துறை அத்தியட்சகர் கீர்த்தி டி சில்வா நடைமுறைப்படுத்தினார். ''எரியும் கடற்கலத்திலிருந்து புகை எழுகிறது. | படிமப்புரவு: தமிழ்நெற்'' 'காயமடைந்த ஒருவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார் | படிமப்புரவு: தமிழ்நெற்' 'முற்றாகச் செயலிழக்கச் செய்யப்பட்ட P-351 என்ற தொடரிலக்கமுடைய 'பராக்கிரமபாகு' என்ற பெயருடைய நீர்மூழ்கி துரத்தல் கடற்கலம்| படிமப்புரவு: lankanavy | படிமக் காலம்: 1995' 'புலிவீரர்களால் அழிக்கப்பட்ட படகு ஒன்று | படிமப்புரவு: Shutterstock' 'காலித் துறைமுக அழிபாடுகள் | படிமப்புரவு: NYT'
உசாத்துணை: உதயன்: 19/10/2006 tamilnet.com: (Naval base in Galle attacked, mob riots in port city) - 18/10/2006 போர்க்காலப் பாடல்: காலித் துறைமுகம் மீதில் புகுந்தவர் | இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 12. கரும்புலிகளின் பெயர் மட்டும் இங்கிருந்து எடுக்கப்பட்டது: https://m.facebook.com/media/set/?set=a.501228966718627.1073741859.497660243742166&type=3 navypedia.org (srl_cf_parakramabahu) கட்டுரை: yarl.com (கடற்புலிகளின் துணைக் கட்டளையாளர் (தரநிலை அறியில்லை) விடுதலை) ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்