இளைஞர்களின் கோபம்
தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வேண்டுமென்றே பொலீஸார் நடத்திய தாக்குதலில் அப்பாவிகள் 9 பேர் கொல்லப்பட்டது குறித்து இளைஞர்கள் மிகுந்த கவலையும், ஆத்திரமும் கொண்டிருந்தனர். இதற்கு எப்படியாவது பழிவாங்கிவிட வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். சிவகுமாரன் யாழ்ப்பாணத்திலும், பிரபாகரன் தமிழ்நாட்டில் இருந்தபடியும் இளைஞர்களை உணர்வூட்டிக்கொண்டிருந்தார்கள், பழிவாங்குதல் அவசியம் என்று உரைத்தார்கள். தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் அப்பாவிகள் மேல் கண்மூடித்தனமாக சிங்கள அரசின் காவல்த்துறை நடத்தியிருக்கும் தாக்குதல் தமக்குக் கூறும் ஒரே செய்தி தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தினைக் கையிலெடுக்க வேண்டும் என்பதைத்தான் என்று அவர்கள் வாதிட்டார்கள். அவர்களால் மூன்று தனிநபர்கள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டார்கள். அவர்களின் இலக்குகளாக அமைச்சர் செல்லையா குமாரசூரியர், யாழ் மேயர் அல்பிரெட் துரையப்பா மற்றும் யாழ்ப்பாண உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் சந்திரசேகர ஆகியோர் அடையாளம் காணப்பட்டனர். சிவகுமாரனின் நண்பர்கள் கூறுகையில், அப்பாவிகளின் கொலையோடு நேரடியாகத் தொடர்புபட்டிருந்த சந்திரசேகரவையே முதலில் கொல்லவேண்டும் என்று அவர் தம்மிடம் கூறியிருந்ததாகக் கூறுகிறார்கள்.
தமிழ் இளைஞர் பேரவை இத்தாக்குதலைக் கண்டித்து பொலீஸாருக்கெதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஒழுங்குசெய்திருந்தது. இலங்கையின் சுதந்திர தினமான மாசி 4 ஆம் திகதியினை தமிழர்கள் நினைவு வணக்க நாளாகவும், இறைவனைப் பிராத்திக்கும் நாளாகவும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். ஒன்பது அப்பாவிகள் கொல்லப்பட்ட பகுதிக்கு முன்னால் அமைந்திருந்த முனியப்பர் கோயிலில் உண்ணாவிரத நிகழ்வொன்றினை ஆரம்பித்த அவர்கள், தமிழர்கள் அனைத்து இந்து கோயில்கள் மற்றும் தேவாலயங்களிலும் கொல்லப்பட்ட ஒன்பது அப்பாவிகளுக்காக நினைவு பூஜைகளை நடத்துமாறு கேட்டுக்கொண்டார்கள். மேலும், மாசி 3 ஆம் திகதி மாணவர்கள் அனைவரும் பாடசாலைகளைப் பகிஷ்கரிப்புச் செய்யவேண்டும் என்றும் இளைஞர் பேரவையினர் கேட்டுக்கொண்டனர்.
பொலீஸாரின் அச்சுருத்தல்களுக்கு மத்தியிலும் மாணவர்கள் மாசி 3 ஆம் திகதியன்று பாடசாலைகளைப் புறக்கணித்திருந்தனர். சுதந்திர நாளான மாசி 4 ஆம் திகதி யாழ்ப்பாணம் எங்கும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டன. யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுரத்தின் உச்சியிலும் இளைஞர்களால் கறுப்புக் கொடியொன்று பறக்கவிடப்பட்டது. கறுப்புக்கொடிகள் தம் கண்முன்னே பறப்பதைக் கண்ணுற்ற பொலீஸார் வீதியால் சென்றோரைத் தாக்கியதோடு, மணிக்கூட்டுக் கோபுரத்தில் கட்டப்பட்ட கொடியினை பொதுமக்களை வற்புறுத்திக் கழற்றி எறிந்தனர். அதன்பின்னர் யாழ்நகரிற்குள் சென்ற பொலீஸார் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்ட கடை உரிமையாளர்களை நையைப் புடைத்ததுடன், கட்டப்பட்டிருந்த கறுப்புக்கொடிகளையும் அறுத்தெறிந்தனர். அசெளகரியமான சூழல் ஒன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுக்கொண்டிருந்தது.
அன்றிலிருந்து யாழ்ப்பாண வர்த்தகர்களும், சாதாரணம் மக்களும் இருவேறு பிரிவினரிடமிருந்து முரணான அறிவுருத்தல்களைப் பெறவேண்டியதாயிற்று. முதலாவது தமிழ் இளைஞர்கள் மற்றும் ஆயுதஅமைப்புக்கள். மற்றைய பிரிவினர் இலங்கையின் பொலீஸார். இளைஞர்கள் வர்த்தக நிலையங்களிப் பூட்டுமாறு அறிவித்தல் விடுத்தபின்னர், பொலீஸார் அவ்வர்த்தக நிலையங்களுக்குச் சென்று வர்த்தகர்களை மிரட்டி மீண்டும் அவற்றினை திறக்கச் செய்தார்கள். அப்போது யாழ்ப்பாணத்தில் நிலவிய சூழ்நிலையினை வர்த்தகரான மயில்வாகனம் இவ்வாறு பகிர்ந்துகொண்டார், "நாம் எமது இளைஞர்களை நேசிக்கிறோம். அவர்கள் எமக்குத் தரும் அறிவித்தல்களில் எமக்குப் பிரச்சினை இருந்ததில்லை, அதனை விரும்பியே நாம் செய்துவந்தோம். ஆனால், பொலீஸார் வந்து எம்மை அச்சுருத்தி கடைகளைத் திறக்கப்பண்ணினார்கள். அவர்களை நாம் முற்றாக வெறுத்தோம்". இந்தச் சூழ்நிலை இரட்டை நிர்வாகம் ஒன்று யாழ்ப்பாணத்தில் உருவாகிவருவதைக் காட்டியது. இளைஞர்களுக்கும், பொலீஸாருக்குமிடையிலான முறுகல்நிலை யாழ்ப்பாணத்தில் மோசமடையத் தொடங்கியது.
தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளின் பின்னர் சிவகுமாரன் இரு கொலைமுயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவரது முதலாவது முயற்சி பொலீஸ் அத்தியட்சகர் சந்திரசேகரவைக் கொல்வதாக அமைந்தது. சிவகுமாரனும் அவரது சில நண்பர்களும் சந்திரசேகரவைக் கொல்வதற்கு கைலாசநாதர் ஆலயத்திற்கு அருகில் பதுங்கியிருந்தனர். சந்திரசேகர பயணித்த ஜீப் வண்டி அவர்களை நெருங்கியதும், அதனை மறித்த சிவகுமாரன், கதவினைத் திறந்து சந்திரசேகர மீது தனது சுழல்த்துப்பாக்கியினால் சுட்டார். ஆனால் துப்பாக்கி சுடவில்லை. அது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி. சந்திரசேகர வாகனத்தை விட்டு வெளியே பாயவும், சிவகுமாரனும் நண்பர்களும் அங்கிருந்து ஓடிவிட்டார்கள். அவரது இரண்டாவது முயற்சி பொன்னாலைப் பாலத்தருகில் துரையப்பாவின் வாகனத்தை வழிமறித்து, அவரைச் சுடுவதாகவிருந்தது, ஆனால் அதுவும் தோல்வியிலேயே முடிவடைந்திருந்தது.
கூட்டுச் சத்தியம்
இதனையடுத்து சிவகுமாரனை எப்படியாவது கைதுசெய்துவிடவேண்டும் என்று பொலீஸார் தமது தேடுதல்களை முடுக்கிவிட்டிருந்தனர். தனது நடமாட்டங்களும், செயற்பாடுகளும் சிறிது சிறிதாக முடக்கப்பட்டு வருவதை சிவகுமாரன் உணரத் தொடங்கினார். அதனால் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்று சிறிதுகாலம் அங்கு தங்கியிருக்கலாம் என்று நினைத்தார். அதற்கு அவருக்குப் பணம் தேவைப்பட்டது. அதனால் இரு தமிழ் அரசியல்வாதிகளை அவர் அணுகியிருந்தார். ஆரம்பத்தில் உதவிசெய்வதாக உறுதியளித்துவிட்டு, இறுதியில் கையை விரித்துவிட்டார்கள். இதனால் கடும் விரதியடைந்த சிவகுமாரன் தனது நண்பர்களிடம் இதுகுறித்துப் பேசும்போது, "அவர்களுக்கு பேசுவதற்கு மட்டுமே நன்கு தெரிந்திருக்கிறது. அவர்கள் ஒருபோதும் காரியத்தில் இறங்குவதில்லை" என்று கூறியிருக்கிறார்.
சிவகுமாரன் தானே செயலில் இறங்கத் தீர்மானித்தார். அதன்படி கோப்பாய் மக்கள் வங்கியினைத் திருடுவது என்று அவர் முடிவெடுத்தார். 1974 ஆம் ஆண்டு ஆனி 5 ஆம் திகதி காலை, வங்கி தனது வேலைகளை ஆரம்பித்திருந்த வேளை சிவகுமாரனும் இன்னும் ஐந்து தோழர்களும் வங்கிக்குச் சென்றனர். வங்கிக்குச் சென்றவுடன் வாசலில் காவலில் இருக்கும் பொலீஸாரைச் சுடுவது, பின் உள்ளே நுழைந்து வங்கி ஊழியர்களை ஒரு அறைக்குள் அடைப்பது, பணத்தைத் திருடுவது என்பதே அவர்களது திட்டம். அதன்படி, சிவகுமாரன் காவலுக்கு நின்ற பொலீஸார் மீது இருமுறை சுட்டார், ஆனால் குறி தவறிவிட்டது. பொலீஸார் சுதாரிப்பதற்குள் சிவகுமாரன் செம்மண் தோட்டவெளிகளுக்கூடாக ஓடத் தொடங்கினார், பின்னால் பொலீஸார் திரத்திக்கொண்டே வந்தனர். ஒருகட்டத்தில் பொலீஸார் தன்னை எட்டிப் பிடிக்கும் தூரத்திற்குள் வந்துவிட்டதை உணர்ந்தார் சிவகுமாரன். இனித் தப்பிக்க முடியாது என்கிற நிலையினை உணர்ந்தவுடன், தான் கூடவே வைத்திருந்த சயனைட் வில்லையினை விழுங்கினார்.
நினைவிழந்து வீழ்ந்துகிடந்த சிவகுமாரனை பொலீஸார் யாழ்ப்பாண வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றனர். சிவகுமாரன் சயனைட் அருந்தி நினைவின்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த செய்தி காட்டுத்தீப் போல் நகரெங்கும் பரவியது. உரும்பிராய் இந்துக் கல்லூரியில் உயர்தரம் கற்றுக்கொண்டிருந்த மாணவர் ஒருவர் இந்தச் சம்பவத்தைப் பின்வருமாறு விபரித்தார்,
"அந்தச் செய்தி எமது செவிக்கு எட்டியபோது நாம் வகுப்பில் இருந்தோம். ஒருவிதத்தில் அச்செய்தி எமக்கு உற்சாகத்தினை அளித்தது. எமது பாடசாலையினைச் சேர்ந்த முன்னாள் மாணவன் ஒருவன் தமிழ்த்தாய்க்காக தனது உயிரைத் தியாகம் செய்திருக்கிறான் என்று நாம் பரவசப்பட்டோம். பாடசாலை முடிந்தவுடன் சைக்கிள்களில் ஏறி வேகமாக யாழ்ப்பாண வைத்தியசாலை நோக்கி விரைந்தோம். நாம் அங்கே சென்றபோது பெரும் திரளான மக்கள் வைத்தியசாலையில் குழுமியிருந்தனர். அவர்களுள் அநேகமானவர்கள் மாணவர்கள். அன்று மாலை அவர் இறந்துவிட்டதாக நாம் அறிந்தபோது துக்கம் எம்மை ஆட்கொள்ள அழத் தொடங்கினோம்".
யாழ்ப்பாணம் அழுதது, ஒட்டுமொத்த யாழ்க்குடா நாடே அழுதது. அனைத்து இலங்கைத் தமிழர்களும் அழுதார்கள். ஒருவர் செய்யக்கூடிய உச்ச தியாகம் அது. தாங்கொணாத் துயரம் ஒன்றினுள் தமிழ்ச் சமூகம் மூழ்கிக்கொண்டிருந்தது.
யாழ்க்குடாநாட்டின் பல வீடுகளில் கறுப்புக் கொடிகள் தொங்கவிடப்பட்டன. கடைகளின் கதவுகள் இழுத்து மூடப்பட்டன. சிவகுமாரனின் உயிர்த்தியாகத்தைப் போற்றிப் பதாதைகளும், துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. சிவகுமாரனின் இறுதிக் கிரியைகள் ஆனி 7 ஆம் திகதி நடைபெற்றது. மிகப்பெருந்திரளான மக்கள் அவரின் வீட்டின் முன்னால் வரிசைகளில் நின்று அவருக்கான தமது இறுதி வணக்கத்தினைச் செலுத்தினர். அவர்களில் 7 இளைஞர்கள் தமது கைகளை அறுத்து இரத்தத்தில் சிவகுமாரனின் நெற்றியில் திலகமிட்டு தாய்த் தமிழுக்காக தமது உயிரைக் கொடுப்போம் என்று சத்தியம் செய்தனர். பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அவரைத் தொடர்ந்து போயினர். உயிர்த் தியாகம் எனும் கருத்தியலை உருவாக்கியவர் தியாகி சிவகுமாரனே!
சிவகுமாரனின் இறுதிக் கிரியைகளை மாணவர்களே பொறுப்பெடுத்துக்கொண்டனர். சிவாகுமாரன் உயர்தரம் பயின்ற யாழ் இந்துக் கல்லூரிக்கு அவரது பூதவுடலை எடுத்துச் சென்று அங்கே மாணவர்களின் அஞ்சலிக்காக வைக்க விரும்பினர். பொலீஸார் இதற்கு அனுமதி மறுக்கவே பொலீஸாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கிய மாணவர்கள், பொலீஸ் தடையினையும் மீறி சிவகுமாரனைன் பூதவுடலை எடுத்துச் செல்வோம் என்று கோஷமிட்டனர். சமூகத்தின் மூத்தவர்கள் தலையிட்டு, மாணவர்களுக்கும் பொலீஸாருக்கும் இடையே பிணக்கு மேலும் மோசமடையாதவாறு தவிர்த்துவிட்டனர்.
சுயாதீனமான கணிப்பீடுகளின்படி சிவகுமாரனின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை குறைந்தது 15,000 ஆவது இருக்கலாம் என்று தெரிவித்தன. யாழ்ப்பாணத்தில் அதுவரை இடம்பெற்ற இறுதி ஊர்வலங்களில் சிவகுமாரனின் இறுதி ஊர்வலத்திலேயே அதிகளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
சமஷ்ட்டிக் கட்சியின் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் சிவகுமாரனின் மறைவினையொட்டு மிகவும் இரக்கமான அறிக்கையொன்றினை வெளியிட்டார்,
"தமிழ் மக்களுக்காகன மிக உச்ச தியாகத்தினை தம்பி சிவகுமாரன் புரிந்திருக்கிறார். அது ஒரு வீரம் மிக்க செயலாகும். தமிழ் மக்களின் பிறப்புரிமையினை மீட்டெடுக்க அவர் தேர்வுசெய்த ஆயுத தாங்கிய வன்முறைப் போராட்டத்தினை நான் ஏற்றுக்கொள்ளவில்லையென்றாலும் கூட, அவரது இலட்சிய உறுதிக்கும், அர்ப்பணிப்பிற்கும் நான் தலைவணங்குகிறேன்" என்று அந்த அறிக்கை கூறியது.
இளைஞர்கள் உணர்ச்சிப் பெருக்கால் உந்தப்பட்டுக் காணப்பட்டார்கள். அவரது உடல் தகனம் செய்யப்படுவதற்கு மேடையில் வைக்கப்படுகையில் வரிசையாக நின்ற இளைஞர்கள் கூட்டுச் சத்தியம் ஒன்றினை மேற்கொண்டனர்.
"சிவகுமாரனின் பெயரால், அவரது ஆன்மாவின் பெயரால், அவரது வித்துடலின் பெயரால் அவர் முன்னெடுத்த தமிழர்களின் சுதந்திரப்போராட்டத்தினை, நாம் எமது இலட்சியத்தினை அடையும்வரை தொடர்ந்து முன்னெடுப்போம் என்றும், அதுவரையில் நாம் ஓய்வெடுக்கவோ பின்வாங்கவோ மாட்டோம் என்றும் இத்தால் உறுதியெடுக்கிறோம்" என்று சிவகுமாரனின் உடல்மீது சத்தியம் செய்துகொண்டார்கள்.
தமிழர்களால் மிகவும் நேசிக்கப்பட்ட, உயர்வாக மதிக்கப்பட்ட விடுதலைப் போராளியாக சிவகுமாரனுக்கு தமிழர்கள் புகழஞ்சலி செலுத்தியதுடன், ஈழத்தின் "பகத் சிங்" என்றும் அவரை அழைக்கத் தலைப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது நாளந்த போர் நாளேட்டில் சிவகுமாரனின் உயிர்த் தியாகம் பற்றி 1984 இல் இவ்வாறு கூறியிருந்தது.
"சிவகுமாரன் ஒரு மிகச் சிறந்த விடுதலைப் போராளியாகவும், ஆயுதப் போராட்டத்தின் முன்னோடியாகவும் திகழந்தார்" என்று பதிவிட்டிருந்தது.