வெளியே வந்த புலிகள்
பொலீஸ் வலையமப்பை அழித்தல்
அல்பிர்டெ துரையப்பாவின் கொலை தனக்கு விடுக்கப்பட்ட சவாலாக சிறிமாவின் அரசாங்கம் கருதியது. துரையப்பாவின் மரணச் சடங்கிற்கு முன்னதாக கொலையாளிகள் கைதுசெய்யப்படவேண்டும் என்று சிறிமாவின் அரசு பொலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்தப் பொறுப்பு பொலீஸ் அதிகாரிகளான பஸ்டியாம்பிள்ளை - பதமநாதன் தலைமையிலான பொலீஸ் குழுவினரிடம் வழங்கப்பட்டது. சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் இந்த இரு தமிழ் பொலீஸ் அதிகாரிகளும் அவர்களது திறமைக்காகவும், குரூரத்திற்காகவும் பேர்பெற்றிருந்தார்கள். துரையப்பா கொலையுடன் சம்பந்தப்பட்ட நால்வரில் இருவரை அவர்கள் கைதுசெய்திருந்தார்கள். கைதுசெய்யப்பட்டவர்கள் கலபதியும் கிருபைராஜாவும் ஆகும். கொலை நடந்து மூன்று மாதங்களின் பின்னர் அவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள். மீதி இருவரான பிரபாகரனையும், பற்குணராஜாவையும் பொலீஸாரால் கைதுசெய்ய முடிந்திருக்கவில்லை.
ஆனால், பொலீஸார் இவர்கள் இருவரையும் தொடர்ச்சியாகத் தேடியே வந்தனர். இவர்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்ட பொலீஸ் குழுவில் கொன்ஸ்டபிள் ஏ. கருநாநிதியும் இருந்தார். இவர் காங்கேசந்துறை பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்தவர். 1977 ஆம் ஆண்டு, மாசி 14 ஆம் திகதி மாவிட்டபுரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கருநாநிதியே தமிழ் ஆயுத அமைப்புக்களால் முதன் முதல் சுட்டுக்கொள்ளப்பட்ட பொலீஸ் உத்தியோகத்தர் ஆவார். அவரது கொலை பொலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய்ருந்தது.
மேலும் தேடுதல்களில் பங்கெடுத்த இரு கொன்ஸ்டபிள்களான ஒரே பெயரைக் கொண்ட சண்முகநாதன், சண்முகநாதன் ஆகியோர் 1977 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 18 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களுள் ஒருவர் காங்கேசந்துறை பொலீஸ் நிலையத்தையும், மற்றையவர் வல்வெட்டித்துறைப் பொலீஸ் நிலையத்தையும் சேர்ந்தவர்கள். தமக்கு கிடைக்கப்பற்ற நம்பகமான தகவல் ஒன்றினையடுத்து இவர்கள் இருவரும் இனுவில் நோக்கி சிவில் உடையில் பஸ்ஸில் பயணித்திருக்கிறார்கள். உந்துருளியொன்றில் இவர்களைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டு வந்த இரு இளைஞர்களில் ஒருவரான பாலா, காங்கேசந்துறை வீதி, இணுவில் சந்தியின் அருகில் இவர்களை சுட்டுக் கொன்றார்.
பிரபாகரன் எதிர்பார்த்திருந்த தாக்கத்தினை இந்த இரு பொலீஸாரின் கொலையும் ஏற்படுத்திக் கொடுத்தது. இக்கொலைகளின் பின்னர் தமிழ் ஆயுத அமைப்புக்களைக் கண்காணிக்கவும், தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் தமிழ்ப் பொலீஸ் அதிகாரிகளை அமர்த்துவதென்பது அரசிற்குக் கடிணமாகிப் போனது. அப்படி அமர்த்தப்பட்ட தமிழ் அதிகாரிகளும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியிடங்களுக்கு மாற்றல்களை கேட்டுச் சென்றனர்.
பிரபாகரனின் போராளிகள் பொலீஸாரைக் கொன்றதன் மூலம் ஏற்பட்ட தைரியம் மற்றும் மக்களிடையே அக்கொலைகளுக்குக் கிடைத்த வரவேற்பினையடுத்து தங்கத்துரையின் அமைப்பும் செயற்பாட்டில் இறங்கியது. அவ்வருடம் ஆவணியில் தெற்கில் தமிழர் மீது நடத்தப்பட்ட வன்முறைகளையடுத்து இவ்விரு குழுக்களும் செயலில் இறங்கின. ஆவணி 31 ஆம் திகதி, நீலநிற மொறிஸ் மைனர் காரில் மானிப்பாயில் இயங்கிவந்த மக்கள் வங்கிக்குச் சென்ற நான்கு இளைஞர் அணியொன்று அங்கிருந்த ஊழியர்களை பயமுறுத்தி 26,000 ரூபாய்களை கொள்ளையிட்டுச் சென்றது. அதே நாள் வேறு இளைஞர் அணியொன்று யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த சுங்கத்திணைக்கள அலுவலகத்திற்குச் சென்று 8 ரைபிள்களை எடுத்துச் சென்றது. பல பாடசாலைகளிலிருந்து இரசாயணங்கள் களவாடப்பட்ட சம்பவங்களும் இக்காலப்பகுதியில் நடந்தேறின. தொழிற்சாலைகளில் சேமித்து வைக்கப்பட்ட டைனமைட் குச்சிகளும் காணாமற்போயின.
திருநாவுக்கரசர்
தங்கத்துறை மிகுந்த இறைபக்தி கொண்டவர். தனது அமைப்பின் உறுப்பினர்களுடன் பேசு முன் திருநாவுக்கரசரின் "நாம் யார்க்கும் குடியல்லோம்" என்கிற மந்திரத்தை ஓதியபின் பேச ஆரம்பித்தார். நாம் சுமார் பத்து வருடங்களாக ஒழுங்கான கட்டமைப்பின்றி இயங்கி வருகிறோம். ஆனால், அதனை உருவாக்கவேண்டிய தேவை இப்போது வந்துவிட்டது. அவருக்கு ஆதரவாக சிறி சபாரட்ணம், சின்ன சோதி, பெரிய சோதி ஆகியோரும் கருத்துத் தெரிவித்தனர்.
அரசியல் விடயங்களைக் கவனிப்பதற்கு அரசியல்ப் பிரிவும், இராணுவ விடயங்களைப் பார்த்துக்கொள்வதற்கு ராணுவப் பிரிவுமாக ஐரிஸ் விடுதலை இராணுவத்தை ஒத்த கட்டமைப்பொன்றினை உருவாக்கவேண்டும் என்று தங்கத்துரை விரும்பியிருந்தார். அதன்படி தனது இராணுவப் பிரிவிற்கு தமிழ் ஈழ விடுதலை இராணுவம் ( டெலா) என்றும், அரசியல்ப் பிரிவிற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ( டெலோ) என்று பெயரிடலாம் என்று யோசனையினை அவர் முன்வைத்தார். சிறி சபாரட்ணம் அதனை வழிமொழிந்தார்
சிறி சபாரட்ணம்
டெலோ அமைப்பின் சில உறுப்பினர்கள் தமது அமைப்பே முதலில் உருவாக்கப்பட்ட அமைப்பென்று உரிமை கோருகிறார்கள். டெலோ அமைப்பின் பாடல்களில் ஒன்றும் இதனையே சொல்கிறது. ஆனால், இது உண்மையல்ல. 1973 இல் தமிழ் இளைஞர் பேரவையினை விட்டு வெளியேறிய முத்துக்குமாரசாமி ஈழம் விடுதலை இயக்கம் (எலோ) எனும் அமைப்பினை உருவாக்கினார் என்றும், அவ்வமைப்பே காலப்போக்கில் டெலோவாக மாற்றம்பெற்றதென்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், 1976 ஆம் ஆண்டு புலோலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கொள்ளையின் பின்னர் எலோ அமைப்பு முற்றாக அழிந்து போய்விட்டது. ஆகவே, அதன் தொடர்ச்சியாக டெலோ இருக்கிறதென்பது உண்மையில் தவறான கருத்தாகும்.
கனகரட்ணம் மீதான கொலைமுயற்சி
1978 ஆம் ஆண்டு தமிழ் இளைஞர்களின் அதிகரித்த ராணுவச் செயற்பாட்டினக் கண்ட ஆண்டாகும். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளும் (அப்போதுவரை பிரபாகரன் அமைப்பு என்றே அறியப்பட்டு வந்தது) டெலோ அமைப்பும் செயற்படத் தொடங்கியிருந்த காலம் அது.
அவ்வருடம் சித்திரை மாதத்தில் கனகரட்ணம் மீதான கொலை முயற்சி மற்றும் பொலீஸ் பரிசோதகர் பஸ்டியாம்பிள்ளை கொலை ஆகியவற்றின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புப் பற்றிய செய்திகள் பரவலாக அடிபடத் தொடங்கின. பின்னர், எயர் சிலோன் என்றழைக்கப்பட்ட விமானச் சேவையின் அவ்ரோ 748 விமானத்தைத் தகர்த்தெறிந்தது மற்றும் திருநெல்வேலி மக்கள் வங்கிக் கொள்ளை ஆகிய நடவடிக்கைகளையும் புலிகள் செய்திருந்தனர். டெலோ அமைப்பும் தன் பங்கிற்கு பொலீஸ் பரிசோதகர் பத்மநாதனையும், பொலீஸ் உளவாளி "தடி" தங்கராஜாவையும் கொன்றிருந்தனர். அரசாங்கம் உடனடியாக தமிழ் ஈழ விடுதலைப் புலிகளையும் அவர்களையொத்த ஏனைய அமைப்புக்களையும் தடைசெய்வதாக அறிவித்தது.
1978 ஆம் ஆண்டு தை மாதம் 26 ஆம் திகதி சனநெரிசல் மிக்க இரவு தொடரூந்தொன்றில் பிரபாகரன் கொழும்பிற்குச் சென்றார். அவரை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் உமாமகேஸ்வரன் வரவேற்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும், இராணுவத் தளபதியும் புகையிரத நிலையத்திற்கு முன்னாலிருந்த ஆனந்த பவன் எனும் விடுதிக்குச் சென்றனர். பிரபாகரன் அங்கு குளித்தவுடன் அவ்விடுதியிலேயே காலையுணவையும் உட்கொண்டனர். அங்கிருந்து பொத்துவில் தொகுதியில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினரான எம்.கனகரட்ணம் வசித்துவந்த கொல்லுப்பிட்டி நோக்கி பேரூந்தில் பயணமானார்கள்.
1977 ஆம் ஆண்டுப் பாராளுமன்றத் தேர்தல்களில், இரு ஆசனங்களைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் தொகுதியில் எம். கனகரட்ணம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி சார்பாகப் போட்டியிட்டிருந்தார். சுயேட்சை வேட்பாளரின் மரணத்தையடுத்து அத்தொகுதிக்கான தேர்தல் புரட்டாதி 12 ஆம் திகதியே நடைபெற்றிருந்தது. இத்தேர்தலில் கனகரட்ணம், ஐ.தே. க உறுப்பினர் ஜலால்தீனுக்கு அடுத்ததாக அடுத்ததாக தெரிவுசெய்யப்பட்டார். ஜலால்தீனின் 30,315 வாக்குகளுக்குப் பதிலாக கனகரட்ணம் 23,990 வாக்குகளைப் பெற்றிருந்தார். தனிநாட்டிற்கான ஆணையினை முன்வைத்தே கனகரட்ணம் தேர்தலில் வாக்குக் கேட்டிருந்ததால் பெரும்பான்மையான தமிழர்கள் அவருக்கு வாக்களித்திருந்தனர்.
கனகரட்ணம் நிலச்சுவாந்தராக இருந்ததுடன், நெடுங்காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளராகவும் இருந்தார். கிழக்கு மாகாணத் தமிழர்களும் தனிநாட்டிற்கே தமது விருப்பைத் தெரிவித்திருக்கிறார்கள் எனும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் கருத்தினை உடைத்து அதனைத் தவறென்று நிறுவ, கனகரட்ணத்தை எப்படியாவது தனது கட்சிக்குள் இழுத்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டியிருந்தார் ஜெயவர்த்தனா. கனகரட்ணத்தின் கட்சித் தாவல் செய்தி எனது காதுக்கு எட்டியபோது மார்கழி 18 ஆம் திகதி காலை அவரை பழைய பாராளுமன்றக் கட்டிடத்தில் சந்தித்துப் பேசினேன். அதனை உறுதிப்படுத்திய கனகரட்ணம் தான் நாளையே கட்சி தாவப்போவதாகவும், அதற்கான காரணத்தை தான் விளக்கி அறிக்கையொன்றினை வெளியிடவிருப்பதாகவும் என்னிடம் கூறினார்.
"நீங்கள் என்ன விளக்கத்தைக் கொடுக்கப் போகிறீர்கள் ?" என்று அவரிடன் வினவினேன்.
"நான் பிரேமதாசவின் உதவியாளர் சண்முகலிங்கத்திடம் இதுபற்றிக் கூறிவிட்டேன், நீங்கள் அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்" என்று கூறினார்.
சண்முகலிங்கத்தை எனக்குத் தெரிந்திருந்தது. அவர் அதிபரின் அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். பிரேமதாசாவே அந்த அலுவலகத்திற்குப் பொறுப்பாகவிருந்தார். நான் அவரின் அலுவலகத்திற்குச் சென்றபோது, தயாரிக்கப்பட்ட அறிக்கையின் நகல் ஒன்றினை எனக்குக் காட்டினார். மறுநாள் காலை, 19 ஆம் திகதி டெயிலிநியூஸ் பத்திரிக்கை இச்செய்தியைப் பிரசுரித்தது.
கனகரட்ணம் தனது அறிக்கையில் தான் கட்சி தாவுவதற்கான இரு காரணங்களைத் தெரிவித்திருந்தார். முதலாவது காரணம், ஜெயவர்த்தனா தமிழர் பிரச்சினைக்கு முடிவொன்றினைத் தருவார் என்று தான் பூரணமாக நம்புவதாகத் தெரிவித்தார். இரண்டாவது, கிழக்கு மாகாணத் தமிழர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வக்களித்திருந்தாலும்கூட, தனிநாட்டினை உருவாக்க அவர்கள் ஆதரவு வழங்கவில்லை என்று அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் கனகரட்ணம் சமூகமளித்தவேளை அவரைத் துரோகி என்று அமிர்தலிங்கமும் ஏனையோரும் எள்ளி நகையாடினர்.
மார்கழி 22 அன்று கூடிய தமிழீழ விடுதலைப் புலிகள் மத்தியகுழு கனகரட்ணம் ஒரு துரோகியென்று பிரகடனம் செய்ததுடன், துரோகிகளுக்குப் பாடம் கற்பிக்கப்படவேண்டும் என்றும் கூறியது. அதுவரையில் புலிகள் அமைப்பு பொலீஸ் உளவாளிகள், பொலீஸார் மற்றும் அரசியல்வாதிகளுக்கே மரண தண்டனையை நிறைவேற்றி இருந்தது. அதுவரையில் அல்பிரெட் துரையப்பாவே மரண தண்டனை கொடுக்கப்பட்ட ஒரே அரசியல்வாதியாகும். அவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும், கொல்லப்படும்போது யாழ்நகர மேயராகவே இருந்தார். தியாகராஜாவின் மீதான கொலைமுயற்சி தமிழ் மாணவர் பேரவையாலும், அருளம்பலம் மீதான கொலை முயற்சி தங்கத்துரை அமைப்பாலும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இவர்கள் எல்லோருமே வடமாகாணத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள். கனகரட்ணமே புலிகளின் மத்திய குழுவினரால் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். கிழக்கு மாகாணத்திலிருந்து வந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் முதலாமவரும் அவரே.
கனகரட்ணத்தின் நடமாட்டங்களை உமா மகேஸ்வரன் இருவாரங்கள் தொடர்ச்சியாக அவதானித்து வந்தார். கனகரட்ணம் ஒவ்வொரு நாள் காலையும் 9 மணிக்கு வீட்டிலிருந்து காரில் புறப்பட்டுச் செல்வது வழமை. ஒருகாலை, பிரபாகரனும், உமா மகேஸ்வரனும் கனகரட்ணத்தின் வீட்டிற்கு அருகில் இருந்த பற்றைக்குள் அவருக்காகக் காத்திருந்தனர். கனகரட்ணம் தனது காரை நோக்கி நடந்துவருகையில் அவர்களில் ஒருவர் கனகரட்ணம் மீது சுட்டார். குண்டுபட்டு கீழே விழுந்த கனகரட்ணத்தை உதவியாளர்கள் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். அவர் தப்பிவிட்டார். அவருக்கு நெஞ்சிலும், கழுத்திலும், விலாப் பகுதியிலும் குண்டு பாய்ந்திருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். இரு இளைஞர்கள் தன்னை நோக்கிச் சுட்டுவிட்டு தப்பியோடுவதைக் கண்டதாக கனகரட்ணம் பொலீஸாரிடம் கூறினார். அவர்களில் ஒருவர் உயரமானவர், மற்றையவர் சற்று உயரம் குறைந்தவர் என்றும் அவர் கூறினார். விசாரணகளின்போது அந்த உயரம் குறைந்தவர் பிரபாகரன் என்பதையும், உயரமானவர் உமாமகேஸ்வரன் என்பதையும் பொலீஸார் அறிந்துகொண்டனர். பிரபாகரன் அன்றே கோட்டை புகையிரத் நிலையத்தினூடாக யாழ்ப்பாணத்திற்குச் சென்றுவிட, உமாமகேஸ்வரன் கொழும்பிலேயே தங்கிவிட்டார்.
பிரபாகரனின் புகைப்படத்தினை பொலீஸார் அதுவரை கொண்டிருக்காமையால், அவர் கடுமையாகத் தேடப்பட்டு வந்தபோதும், அவரால் இயல்பாக கொழும்புவரை வந்து செல்ல முடிந்தது. தனது வீட்டை விட்டுப் புறப்படும்பொழுது, வீட்டிலிருந்த தனது அனைத்துப் புகைப்படங்களையும் அழித்துவிட்டே அவர் சென்றிருந்தார். குழுவாக எடுத்த புகைப்படங்களில் இருந்தும் தனது படத்தை அவர் வெட்டி அகற்றியிருந்தார்.
சிறுநீரக வியாதியால் அவதிப்பட்ட கனகரட்ணம் சுடப்பட்ட அன்று உயிர் பிழைத்திருந்தாலும், அச்சம்பவத்தின் தாக்கத்தினால் மூன்று மாதங்களில் இறந்துவிட்டார். இச்சூட்டுச் சம்பவம் இரு சர்ச்சைகளைக் கிளப்பி விட்டிருந்ததுடன் இரு வேடிக்கையான பொலீஸாரின் தவறுகளையும் உருவாக்கியிருந்தது.
முதலாவது சிக்கல், கனகரட்ணத்தைச் சுட்டது யாரென்பது. பிரபாகரன் குறிபார்த்துச் சுடுவதில் நிபுணர் என்பது பலரும் அறிந்த விடயம். ஆனால், கனகரட்ணம் மேல் நடத்தப்பட்ட தாக்குதல் இலக்குத் தவறியிருந்தது. ஆகவே, கனகரட்ணத்தைச் சுட்டது உமா மகேஸ்வரன் தான் என்று பேசப்பட்டது. இரண்டாவது வாதம், பிரபாகரனே தாக்குதலை மேற்கொண்டார், ஆனால் உமா மகேஸ்வரன் ஒத்துழைக்காததால் பிரபாவின் குறி தப்பி விட்டது என்பது.
ஆனால், எவர் சுட்டிருந்தாலும், நடத்தப்பட்ட தாக்குதல் மிகக்கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது. புலிகள் கொழும்பிற்கு வந்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டார்கள். இத்தாக்குதலையடுத்து கடும் கோபமுற்றிருந்த ஜெயவர்த்தனாவின் கேள்விகளுக்குப் பொலீஸாரால் பதிலளிக்க முடியவில்லை.
இத்தாக்குதலையடுத்து சினமும், ஏமாற்றமும் ஒருங்கே ஜெயவர்த்தனாவை ஆட்கொள்ள, கடுமையான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார். தனது கட்டுப்பாட்டிலிருந்த ஊடத்துறையைப் பாவித்து தான் எதிரியென்று கருதியவர்கள் மீது விஷமப் பிரச்சாரத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டார். தனது ஊடகத்துறைப் பொறுப்பாளரையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் இந்த நடவடிக்கைக்குப் பாவித்தார். அவரது நெருங்கிய ஆதரவாளரான வீரவன்னி சமரவீர எனும் பாராளுமன்ற உறுப்பினரை பாராளுமன்றத்தில் கனகரட்ணம் மீதான கொலைமுயற்சிபற்றிப் பேசுமாறு அவர் ஏவிவிட்டார். வைகாசி 2 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசிய வீர்வன்னி அமிர்தலிங்கமே இக்கொலை முயற்சியின் பின்னாலிருப்பதாகவும், ஏனென்றால் கனகரட்ணத்தைத் துரோகி என்று அமிர்தலிங்கம் அழைத்து ஒரு மாத காலத்தின் பின் இது நடத்தப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.
அமிர்தலிங்கம் இந்த விஷமத்தனமான கருத்துப்பற்றி சபாநாயகர் ஆனந்த திஸ்ஸ் டி அல்விஸிடம் முறையிட, வீரவன்னியின் கூற்று பாராளுமன்றப் பதிவிலிருந்து நீக்கப்பட்டது. சபாநாயகரின் கட்டளைப் பணிந்த வீரவன்னி, கனகரட்ணம் மீதான கொலையினை அமிர்தலிங்கமும் கண்டிக்க வேண்டும் என்று சவால் விட்டார்.
எதிர்க்கட்சித் தலைவரின் செயற்பாடுகளை கூறும்படி கேட்டதன் மூலம் வீரவன்னி பாராளுமன்றத்தில் சரித்திரம் ஒன்றை உருவாக்கிவிட்டுள்ளதாகக் கூறினார் அமிர்தலிங்கம். உடனேயே ஆளுந்தரப்பும் உறுப்பினர்கள் அமிரை நோக்கி கூக்குரலிடத் தொடங்கவே, "உங்கள் கூச்சல்களுக்கு நானோ எனது கட்சியோ அஞ்சப்போவதில்லை" என்று பதிலுக்குக் கூச்சலிட்டார். ஆனால், அடக்கத்துடன் வீரவன்னியின் கோரிக்கைக்குச் சம்மதித்த அமிர்தலிங்கம் கனகரட்ணம் மீதான தாக்குதலை தானும் தனது கட்சியும் வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறினார்.
இக்கொலையின் பின்னால் இருப்பவர்களைத் தேடிக் கைதுசெய்ய பொலீஸார் அதிகாரி பஸ்டியாம்பிள்ளை தலைமையில் பொலீஸ் குழுவொன்றினை உருவாக்கினார்கள். தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் உயரமானவர் என்பதை வைத்துக்கொண்டு தமிழ் மாணவர் பேரவையின் உறுப்பினரான மாவை சேனாதிராஜாவே அது என்று எண்ணிக்கொண்டு அவரைக் கைதுசெய்யுமாறு பஸ்டியாம்பிள்ளை பொலீஸாருக்கு உத்தரவிட்டார்.
மேலும் நான்கு தேடப்பட்ட இளைஞர்களின் புகைப்படங்களுடன் சுவரொட்டிகளையும் ஒட்டினார் பஸ்டியாம்பிள்ளை . அந்த நால்வரும் உமா மகேஸ்வரன், நாகராஜா, வாமதேவன் மற்றும் கண்ணாடி ஆகியோராகும். ஆனால் 1973 இல் கண்ணாடி கொல்லப்பட்டது அப்போது பஸ்டியாம்பிள்ளைக்குத் தெரிந்திருக்கவில்லை. தமிழர் வாழும் பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் சுவரொட்டிகளை ஒட்டிய பஸ்டியாம்பிள்ளை, இவர்களைக் காட்டித் தருவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானமும் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.