பாகம் IV ஐ தவிர்த்து பாகம் III இருந்து நேரடியாக பாகம் V ஐ வாசிக்கவும்.
பாகம் V
ஹைபோகிளைசீமியா ஒரு பொல்லாத விசயம். சாதாரணமாக இருப்பது போல் இருக்கும், ஆனால் உணவையும் மருந்தையும் கிரமமாக எடுக்காது போனால் குருதியில் குளுகோசின் அளவு திடீரென்று, ஹிடின்பேர்க்கின் அறிக்கைக்கு பின்னான அதானியின் நிகர மதிப்பு போல கிடுகிடு என இறங்க தொடங்கி விடும்.
உடல் வியர்க்கும், நடுங்கும், கடும் கோபம் வரும், ஏன் ஆக ரத்த குளுகோசின் அளவு குறைந்தால் கொலை வெறி கூட வரும். இன்னும் குறைந்தால் கோமாக்கு கொண்டுபோய் ஆளின் கதையையே முடித்து விடும்.
இதை எல்லாம் தவிர்க்கவேண்டும் என்றுதான் அவன் கோப்பி கடைக்குள் நுழைகிறான். ஆனால் அவனின் லக் அப்படி, கோப்பி கடையில் ஒரு கூட்டம் சனமாக இருந்தது. அந்த நெரிசலில் நிற்க தலையை சுத்தி கொண்டு வந்தது அவனுக்கு.
பிரித்தானியரில் என்ன கெட்ட பழக்கம் இருந்தாலும் வரிசையில் நிற்கும் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. ஆனால் இப்போ அந்த நல்ல பழக்கமே அவனுக்கு எமனாக வந்து விடும் போல் இருந்தது. ஒரு வழியாக வரிசையில் முன்னுக்கு நின்றவனிடம் தன் நிலையை சொல்லி, அனுமதி பெற்று இரெண்டு சீனி தூவிய டோநட்களையும் ஒரு கோக் கானையும் வாங்கி கொண்டு மேசையில் போய் அமர்ந்தான் அவன்.
கோக் குடியாதேங்கோ எண்டு சொல்லுறது இதுக்குத்தான். குளுகோஸ் தண்ணிக்கு அடுத்து ரத்தத்தில் சீனியின் அளவை உடனடியாக கூட்ட கோக்கை விட்டால் வேறு பானம் இல்லை.
….இதைதான் வருத்தம் ஏதும் இல்லாத பிள்ளையள் கூட வாங்கி குடிக்குதுகள். பின்ன ஏன் டயபிடிஸ் வராது…..
நினைத்தபடியே…கோக் கானை “டொப்” என மூடி உடைத்து பருக தொடங்கினான் அவன்.
கோப்பி கடையில் கல்லாவில் நின்றவனை நினைக்க நினைக்க அவனுக்கு கோவம் பற்றி கொண்டு வந்தது. என்ன அசிரத்தை இது? ஏதோ இலவசமாக தருவது போல் இருந்தது அவனின் பாவனையும் நடந்து கொண்ட முறையும். முந்தி எல்லாம் இந்த நாட்டில் இப்படி இல்லை. முன்பு யூகேயில் கஸ்டமர் சேர்விஸ் நன்றாக இருக்கும். இப்போ?…பச்….
அவனை பார்த்தால் உக்ரேன் காரன் போல இருந்ததது. உக்ரேன்காரர் உக்கல் சனம், நிறவெறி பிடித்தவர் என யாழ்களத்தில் முருகர்சாமி அண்ணை எழுதியது ஏனோ அவனுக்கு நியாபகம் வந்தது.
கிட்டதட்ட ஒரு இருபது நிமிடம் ஆகி இருக்கும். கோக் கான் முக்கால்வாசி தீர்ந்து விட்டிருந்தது. ஆனாலும் ஓடர் பண்ணிய டோநட்டை இன்னும் காணவில்லை.
“ஹலோ ஆம் ஐ கெட்டிங் மை டோ நட் டுடே, ஓர் டுமோரோ”?
கொஞ்சம் சத்தமாகவே உக்ரேன்காரனை டோநட் இன்றா அல்லது நாளையா கிடைக்கும்? கேட்டான் அவன்.
ஆனால் அந்த உக்ரேனியனோ (முடிவே கட்டிவிட்டான்) கோப்பி மெசின் அருகில் எதையும் கேளாதவன் போல் நின்று எதையோ கழுவிக்கொண்டிருந்தான்.
திடீரென திரும்பி பார்த்தால் அந்த உக்ரேனியன் அவனை நோக்கி ஒரு பெரிய கத்தியோடு ஓடி வந்து கொண்டிருந்தான்…….. கண்களில் நிறவெறி ஜொலி ஜொலித்தது……..
”என்ர பிள்ளையாரே, முருகர்சாமி அண்ணை உவங்களை உக்கல் எண்டு சொன்னது சரிதான்”
என ஒரு கணம் அவன் திகைத்து நின்றாலும்…….
மறுகணமே அவனின் உடலில் அதிரீனலீனின் “தப்பியோடு அல்லது சண்டையிடு” பொறிமுறை வேலை செய்ய தொடங்கி இருந்தது.
உக்ரேனியன் கொண்டு வரும் கத்தியோ பெரிது…வேறு வழியில்லை, ஒரு நல்ல கனமான மரக்கதிரையை தூக்கி கொண்டு அந்த உக்ரேனியனை நோக்கி பாய்ந்தான் அவன்.
——————————————
அப்போதுதான் டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் பிலிப்ஸ், அவனின் பிரான்சில் இருந்து வருவிக்கபட்டிருந்த தம்பிக்கும், டாக்டர் பிரணவணுக்கும் சீசீடிவி படங்களை போட்டு காட்டி முடித்திருந்தார்.
தம்பிக்கு ஏதோ விளங்கியது போலவும் இருந்தது ஆனால் விளங்காதது போலவும் இருந்தது.
கேள்வி குறியோடு டாக்டரின் முகத்தை பார்த்தான் தம்பி.
மொழி பிரச்சனையை விளங்கி கொண்ட டாக்டர்,
”ஐ வில் எக்ஸ்பிளைன் டு ஹிம் இன் ஹிஸ் ஓன் லாங்குவேஜ்”……..
என பிலிப்சுக்கு சொல்லியபடி தம்பியிடம் தனது புலம்பெயர் கொச்சை தமிழில் பேச தொடங்கினார்.
சீசீடிவி பார்தனிங்கள்தானே…சும்மா டோநட் எடுத்து கொண்டிருந்த அவர போட்டு நல்லா அடிச்சு வச்சிருக்கிறார். இதுக்கு ஒரு ரீசனும் இல்லை.
பொலிஸ் அன் புரொவோக்ட் அட்டாக் எண்டு சொல்லினம்…..
அதுக்கு முதல் மூண்டு அவர்ஸ் காரில இருந்து…போனில கதைச்சிருக்கிறார்….
ஆனால் போனை செக் பண்ணி பார்த்தா அந்த மூண்டு அவர்ஸ்சும் எந்த ஒரு கோலும் கூட வரலேல்ல உங்கட அண்ணாக்கு….
அதுமாரி….சில மாசமா…. ஒவ்வொரு நாள் காலமையிலும், பின்னேரமும் ஒப்பசிட்டா இருக்கிறா ஸ்கூல் வாசலில் வந்து நிண்டிருக்கிறார்…..
ஆனா நாங்கள் செக் பண்ணி பார்த்தா உங்கட அண்ணாக்கு பிள்ளையோ, வைவ்வோ கூட இல்லை.
எல்லாம் சேர்த்து பார்த்தா எனக்கு இது ஒரு மனசு சரியில்லாத வருத்தம் எண்டுதான் விளங்குது….
இத நான், தொடர்ந்து வெளிநாட்டில தனியாவே இருந்ததால வந்த ஒரு மெண்டல் ஹெல்த் பிரச்சனை என சஸ்பெட்க் பண்ணுறன்….
அதால… உங்கட அண்ணையை செக்சன் பண்ணுற முடிவை எடுக்கப்போறம்….
செக்சன் எண்டால்…? புரியாதவனாக கேட்டான் தம்பி.
செக்சன் எண்டால்…. வந்த வருத்தம் மாறும் வரைக்கும் அவரை ஒரு சைகியாடிரிக் கொஸ்பிடலை தடுத்து வச்சிருப்பம். உங்களுக்கு விருப்பம் இல்லாட்டி நீங்கள் அப்பீல் பண்ணலாம். நாளைக்கு ஒரு இண்டர்பிரிட்டரை வச்சு எல்லாத்தையும் வடிவா சொல்லுறன்.
அவன் இப்போதைக்கு வெளியில் வர வாய்ப்பில்லை என்பதை முடிந்தளவு தன்மையாக சொன்னார் டாக்டர் பிரணவன்.
என்ன செய்தாலும்….. அண்ணையை பழையபடி மாத்தி தாங்கோ டொக்டர்….
எங்களை எல்லாம் வெளிநாட்டுக்கு எடுத்து ஆளாக்கினது அவர்தான்….
கண்ணீர் புரண்டோட…கை கூப்பினான் அவனின் தம்பி.
அப்ப கூட்டத்தை முடிக்கலாம்……
என்ற தோரணையில்……. கையை திருப்பி…..
மணிக்கூட்டை வெறித்துப்பார்த்தார் இன்ஸ்பெக்டர் பிலிப்ஸ்.
(யாவும் கற்பனை)
முற்றும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபா.
ஐந்தாம் பாகம் பற்றிய பார்வையையும் எழுதுங்கள்.🙏🏾
நன்றி சுவை அண்ணா. இப்ப எழுதியதை வாசிதால் சேது விக்ரம் நியாபகம் வருவாரோ?😀