பதினொன்று
எங்கள் ஊர் முழுதும் மாடிவீடுகள் பல இந்த நான்கு ஆண்டுகளில் முளைத்திருந்தன. பல வீடுகளில் ஆட்கள் இல்லை என்பது வேறு. ஒரு நாள் நயினாதீவுப் பயணம். காலையில் எழு மணிக்கே புறப்பட்டு யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்து குறிக்கட்டுவான் செல்லும் பஸ்சில் நானும் மகளும் ஒவ்வொரு இருக்கையில் அமர ஒரு அரைமணி நேரம் கணவர் நின்றபடியே பயணம் செய்ய பின் இருக்கை கிடைத்துவிட்டது. பஸ் குறிக்கட்டுவானில் நின்றவுடன் முன்னர் நேரே படகில் ஏறமுடியும். இப்போது ஒரு சிறிய கட்டடம்போல் வரிசையாக இருந்து இருந்து நகர்வதற்கு வாங்கு போன்றும் கட்டியுள்ளனர். அன்று பார்த்து எக்கச்சக்கமான சிங்களச் சனம். பஸ் நின்றவுடன் பலரும் அடித்துப் பிடித்து ஓட நானும் விரைவாகச் செல்ல ஏனம்மா அவசரப்படுகிறீர்கள் என்கிறாள் மகள்.
அந்தக் கட்டடத்தில் முக்கால்வாசி நிரம்பியிருக்கு. நாம் போய் கடைசி வரிசையில் அமர்கிறோம். சிங்கள மக்களுக்கு விகாரைகளிலேயே இலவச பேருந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டு நயினாதீவு, கீரிமலை போன்ற இடங்களைப் பார்வையிட ஒரு டூர் போல் ஒழுங்கு செய்கிறார்கள். எங்கள் கோவில்கள் ஏதாவது இப்பிடி எங்களுக்குச் செய்யுமா என்று ஒருவர் அங்கலாய்த்துக் கொண்டு இருந்தார். எம்மை விலத்திக்கொண்டு சிங்களப் பெண்கள் முன்னே செல்கின்றனர். எல்லோரும் எதுவும் பேசாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஒருபத்து நிமிடமாக நானும் பொறுமையாகப் பார்த்துக்கொண்டிருக்க இன்னும் மூன்று பேர் வர நான் காலை நீட்டி அவர்கள் செல்லாதவாறு மறித்தபடி நாமும் வரிசையில் காத்திருக்கிறோம் என்கிறேன்.
அம்மா பேசாமல் இருங்கோ என்கிறாள் மகள். அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் முன்னால் பார்த்து ஏதோ சிங்களத்தில் சொல்கிறார்கள். ஒரு பெண் என்னைப் பார்த்து மன்னித்துவிடுங்கள், அவர்களுக்கு எதுவும் தெரியாது. நாம் குழுவாக வந்தோம் என்றவுடன் ஓகே என்று நான் காலை எடுக்கிறேன். ஆனாலும் மனம் குமைக்கிறது. குழுவாக வந்தாலும் ஒழுங்காகப் போகலாம் தானே. தமிழர்களின் நிலை எதுவும் பேசாமல் பார்த்துக்கொண்டு இருக்கும்படி ஆகிவிட்டாதே என்று எண்ணுகிறேன். 20 நிமிடத்தில் நாம் முன் வரிசையின் தொங்கலுக்குச் சென்றுவிட சரி இன்னும் ஒரு பத்து நிமிடம் ஆகும் என சலிப்புடன் எண்ணியிருக்க நாம் இருந்த பக்கத்துக் கதவு திறந்து தமிழ் ஆட்களெல்லாம் அந்தக் கதவால் இடித்துக்கொண்டு செல்ல குழுவாக வந்தவர்கள் எந்தப் பக்கம் போவது எனக் குழம்பி நிற்க நாமும் கடகடவென சென்று லைஃப் ஜக்கற் எடுத்து அணிந்துகொண்டு கடைசி ஆட்களாக இயந்திரப்படக்கில் ஏறுகிறோம். அவர்கள் நிற்கஎம்மவர்கள் வந்து எறிவிட்டார்கள் என்று மனதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது.
நாம் கடைசியாக ஏறியபடியால் முன்பக்க இருக்கை இருக்கும் பக்கம் நிற்கிறோம். நடுவில் ஒரு சிங்கள மதகுரு இருக்கிறார். அவரின் இரு பக்கமும் இரு இருக்கைகள் வெறுமையாக இருக்கின்றன. எனக்குப் பக்கத்தில் இருப்பவரை தள்ளி இருக்கும்படி கூற அவரோ பிக்குவையும் என்னையும் மாறி மாறிப் பரிதாபப் பார்வை பார்க்கிறார். நான் மீண்டும் கூற பிக்குவுக்கு விளங்கியதோ என்னவோ தன்பக்கம் வரும்படி கையால் அவருக்கு சைகை செய்ய அவர் தள்ளி இருக்க நான் அமர்கிறேன். படகு நகர கணவரும் மகளும் நின்று வீடியோ எடுக்கின்றனர். மகளுக்கு அந்தப் பயணம் நன்கு பிடித்துப்போகிறது. நாம் சென்றபோது நேரம் 11.15. 12.30 இக்குத்தான் பூசை. நாம் கால்களைக் கழுவி கோவிலைச் சுற்றிக் கும்பிட்டு அர்ச்சனைத் தட்டும் வாங்கி வந்து அரிச்சனைத் தட்டைக் கொடுப்பதற்காகக் காத்திருக்க எனக்கு முன்னால் உள்ளவரின் தட்டுவரை வாங்கி கிட்டத்தட்ட முப்பது தட்டுகளை ஒன்றாகப் பக்கம்பக்கம் அடுக்கி வைத்துவிட்டு தேங்காய்களை எடுத்துவிட்டு பாதித் தேங்காய்களை வைத்து விபூதி சந்தனச் சரையையும் வைக்கின்றனர் இருவர். தீபம் காட்டி மந்திரம்ஓதிவிட்டு ஐயர் தீபத்தைக் கொண்டுவர முண்டியடித்து எல்லோரும் வணக்குகின்றனர். அதன்பின் எல்லோரும் அரிச்சனைத் தட்டுகளை மறுபுறத்தால் சென்று எடுக்கின்றனர். எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தட்டுகள் தானே. தாம் கொடுத்த தட்டுத்தான் அது என எண்ணாமல் எடுத்துப் போகின்றனர்.
ஒரு ஐயர் வந்து முதலாவதாக எனது தட்டை வாங்க, கொடுத்துவிட்டு அடுத்த பக்கம் போய் நிற்கிறேன். எனக்குப் பின்னர் வந்தவர்கள் என் பின்னால் போய் நிற்க என கணவரும் மகளும் அருகில் நிற்கின்றனர். ஐந்தோ ஆறாவதாய் ஒரு பெண் வந்து என் மகளை இடித்துக்கொண்டு எனக்கு முன்னால் வரப் பார்க்கிறார். நான் மெதுவாக தங்கச்சி இவ்வளவு பேர் நிக்கிறம். இடிக்காமல் பின்னால போய் நில்லுங்கோ. ஐயர் அங்கையும் தீபம் கொண்டு வருவார் என்றதும் என்னை எரிக்கும் பார்வை பார்த்துவிட்டு அப்பெண் அங்காலே போகிறது. மனிசன் நக்கலாய் ஆரிட்டை என்றுவிட்டு நமட்டுச் சிரிப்பு சிரிக்க, நான் ஏதோ இடையில வந்தது போலயல்லோ நீங்கள் சிரிக்கிறீர்கள் என்கிறேன்.
தீபம் கொண்டு ஐயர் வந்து எல்லாருக்கும் காட்டிவிட்டு நாம் கொடுக்கும் தட்சணையை வாங்கிக்கொண்டு அரிச்சனைத் தட்டுகளுக்குத் தண்ணீர் தெளித்துவிட்டுப் போக நான் சென்று நான் வைத்த அரிச்சனைத்தட்டை எடுக்கிறேன். முதலாவதாகக் கொடுத்து முதலாவதாகப் போய் எடுத்தது எனக்கு ஓட்டப்போட்டியில் முதலாம் இடம் கிடைத்ததுபோல் மகிழ்ச்சி ஏற்படுகிறது.
வெளியே வந்து நாகதம்பிரானுக்கு நாகமும் பாலும் வாங்கி வைத்துக்கொண்டு நான்காவதாக நிற்க அந்தப் பக்கத்தாலும் சிலர் வந்து நிற்கின்றனர். இங்கு இவர்களும் எதற்காக நிற்கிறார்கள் எனும் யோசனையின்றி தாம் முதலில் போகவேண்டும்போல் முன்னே நகர, கலோ கியூ இந்தப் பக்கம் என்று அவர்களைக் கூப்பிடுகிறேன். கோயிலுக்கு வந்தாலும் உனக்குச் சண்டை தானோ என்கிறார் இந்தாள். அப்ப எல்லாரையும் போக விட்டிட்டு எப்ப ஒருத்தருமில்லையோ அப்ப போவமோ என்கிறேன். பிள்ளைகளின் நட்சத்திரங்களைச் சொல்லி மூவரும் பாலூற்றிவிட்டு வர, அன்னதானம் உண்டுவிட்டுப் போவோம் என்கிறார் மனிசன். சிறுவயதில் வரும்போது உண்டதுண்டு. வெளிநாடு வந்தபின் மூன்று தடவைகள் அங்கு சென்றிருந்தாலும் ஒருநாளும் அன்னதானம் செய்யுமிடத்தில் உண்டதில்லை. இம்முறை சம்மதித்து சென்று அமர்ந்து உணவு உண்ண மனதில் ஒரு நின்மதி எழுகிறது. அம்மா அங்க எப்பிடி சாப்பிட்டவா என்கிறாள் மகள். உவளுக்குப் பசி என்கிறார் மனிசன். உண்டபின் நயினாதீவைச் சுற்றிப் பார்க்கிறோம் என்று நடந்து சென்று விட்டு வர நேரம் போய்விடுகிறது. இன்னும் பத்து நிமிடத்தில் படகு புறப்பட்டுவிடும். எல்லோருக்கும் பதட்டம் தொற்றிககொள்கிறது.
உடனே அங்கு நின்ற ஓட்டோ ஒன்றைப் பிடித்து விபரத்தைக் கூற அவர் விரைவாகக் கொண்டுவர இடையில் மறித்து வைத்துள்ளனர். அதற்கு அப்பால் வாகனங்கள் செல்ல முடியாது. நடந்துதான் செல்ல வேண்டும். ஓட்டோக்காரர் விடயத்தைக் கூற அவர் போகும்படி கூறி கயிற்றை மேலே இழுத்து தடியை உயர்த்தி அனுமதிக்க ஓட்டோ படகுக்குக் கிட்டச்சென்று எம்மையும் ஏற்றும்படி கையைக் காட்டுகிறார். நாம் முன்னே ஓட கணவர் ஓட்டோ காறருக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ஓடிவருகிறார். எம்மைக் கண்டுவிட்டு நிறுத்தி எம்மையும் ஏற்றிச் செல்கிறது படகு. படபடப்பு நீங்கி எமக்கு நின்மதி ஏற்படுகிறது.
பின் பஸ் பிடிக்க ஓடிப் போனால் இரண்டு பஸ்கள் நிற்கின்றன. ஒன்று சிவப்பு அரச பஸ். மற்றது பச்சை தனியார் பஸ். எதில் ஏறுவது என்று நாம் குழம்பியபடி நிற்க, தனியார் வண்டி வேகமாகப் போவாங்கள். சிவப்பில போங்கோ என்கிறார் ஒருவர்.அதில் போய் ஏற கடைசி சீற்றில் தான் இடம் கிடைக்கிறது. பஸ்ஸும் கடைசி என்பதனால் வேறு எங்கோ இருந்து வரும் படக்குக்காகவும் காத்திருந்து அரை மணி நேரத்தின் பின்னர் புறப்படுகிறது. அவ்வளவு சனம். கால்கள் மிதிபட்டும் நெருக்கியடித்தும் தூங்கி வழிந்தும் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தால் இன்னும் அரை மணித்தியாலத்தில் தான் கடைசி பஸ் வெளிக்கிடும் என்கின்றனர். அதுவரை காத்திருக்க முடியாது என்று ஓட்டோ பிடித்து வீடு வருக்கிறோம். மின்வெட்டு வேறு. வீதிகள் இருண்டு சனநடமாட்டம் அற்று இருக்கு. மனதில் ஒரு பயமும் ஏற்படுகிறதுதான்.
அடுத்த நாள் காலை எழுந்து குளித்து முடித்து காலை உணவு உண்ண வந்து மேசையில் அமர்கிறோம். இடியப்பம், சம்பல், உருளைக்கிழங்குப் பிரட்டல், சொதி. தற்செயலாக என் விரலைப் பார்த்த நான் அதிசயிக்கிறேன். என் நடுவிரலில் இருபது ஆண்டுகளாக இருந்து வளர்வதும் நான் வெட்டுவதுமாக என்னைத் தொல்லை செய்த சாம்பல் நிறக் காய்(உண்ணி) காணாமல் போயிருந்தது. நாகபூசணி அம்மனின் அருள்தான் என்கிறார் என் மச்சாள்.