சங்கரின் மறைவு
கார்த்திகை 20 ஆம் திகதி நிர்மலா நித்தியானந்தனின் வீட்டிற்குச் செல்லும் பொழுதுவரை சங்கர் "ஒரு உண்மையான மனிதனின் கதை" எனும் ரஸ்ஸிய நாவலைப் படித்துக்கொண்டிருந்தார். சரியாக 7 நாட்களின் பின்னர், கார்த்திகை 27 ஆம் திகதி தமிழ்த்தேசத்தின் விடுதலைக்காக தனதுயிரை அவர் ஆகுதியாக்கியிருந்தார். இந்த நாளே வீரத்திற்கும், தியாகத்திற்குமான நாளாக நினைவுகூரப்பட்டு வருகிறது. தான் படித்து வந்த நாவலான "ஒரு உண்மையான மனிதனின் கதை" இல் வரும் நாயகனைப் போன்றே சங்கரும் தனதுயிரைத் தமிழ்த்தேசத்திற்காகக் கொடுத்திருந்தார்.
ஒரு உண்மையான மனிதனின் கதை - ரஸ்ஸிய நாவல்
மதுரையின் இடுகாடு ஒன்றில் சங்கரின் உடல் தீயுடன் சங்கமமானது. சங்கரின் இறுதிக் கிரியைக்குத் தானும் போகவேண்டும் என்று பிரபாகரன் விரும்பினார். ஆனால், அவரோடு இருந்தவர்கள் அவரைத் தடுத்து விட்டார்கள். பிரபாகரனின் பாதுகாப்பு அவர்களைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமாகக் கருதப்பட்டது. ஆனால், கிட்டு, பேபி சுப்பிரமணியம், பொன்னம்மான் ஆகியோர் உட்பட சிலர் சங்கரின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டனர். நெடுமாறனும் இந்த இறுதிநிகழ்வில் கலந்துகொண்டார். அது ஒரு மிக முக்கியமான நாளாகக் கருதப்பட்டது. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் துடிப்பான இளைஞர் ஒருவரின் உயிரினை முதன்முதலாக இழந்திருந்தது.
சங்கரின் மரணம் புலிகளால் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. இந்த இழப்பினை அறிவிப்பதனூடாக பொலீஸாரும், இராணுவத்தினரும் போராளிகள் மீதான தமது நடவடிக்கைகளை அதிகப்படுத்தலாம் என்று பிரபாகரன் எண்ணினார். மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்டிருந்த புலிகளின் எண்ணிக்கை அன்றைய காலத்தில் வெறும் 30 மட்டும் தான்.
மேலும், சங்கரின் மரணத்தை அறிவிப்பதனால் தமிழ் மக்களின் மனவுறுதி பாதிக்கப்படும் அதேவேளை புலிகளுடன் இணைந்துகொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கையினையும் பாதிக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால், சங்கரின் இழப்பு அவரது தந்தையாரான ஆசிரியர் செல்வச்சந்திரனுக்கு புலிகளால் அறிவிக்கப்பட்டது. ஒரு நாள் இரவு தனது வீட்டிற்கு வந்த இரு "புலிகளின் பொடியள்" சங்கரின் இறப்புப் பற்றி தன்னிடம் அறியத் தந்ததாக அவர் என்னிடம் பின்னர் கூறியிருந்தார்.
சங்கரின் முதலாம் ஆண்டு நிறைவின்போது புலிகள் அவரது மறைவினை யாழ்ப்பாணத்தில் வெளிப்படையாக அறிவித்திருந்தார்கள். யாழ்ப்பாணத்தின் சுவர்கள் சங்கரின் திரு உருவப்படத்துடன் அஞ்சலிச் செய்தியைக் காவிக்கொண்டிருந்தன.
சங்கரின் வாழ்க்கை, அவரது திறமைகள், துணிவான செயற்பாடுகள் பற்றிய தகவல்களைக் காவிய துண்டுப்பிரசுரங்கள் யாழ்ப்பாணத்தில் மக்களிடையே விநியோகிக்கப்பட்டன. சரத் முனசிங்க என்னுடன் பேசும்போது சங்கரின் மரணம் தொடர்பான விடயங்களை தாம் சில மாதங்களின் பின்னர் அறிந்துகொண்டதாகக் கூறினார். இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு சங்கரின் இறப்பினை முதலாவது தமிழ்ப் போராளியின் மரணம் என்று பதிவுசெய்திருந்தது.
சங்கர் மரணமடைந்து ஏழு வருடங்களின் பின்னர் அவரது நினைவுநாளினை மாவீரர் நாளாக அறிவித்தார் பிரபாகரன். வன்னிக் காட்டிற்குள் ஒதுக்கப்பட்டு, இந்திய அமைதிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டிருந்த தனது போராளிகளுக்கு முற்றுகையினை உடைக்கும் மனோதைரியத்தையும், உத்வேகத்தையும் கொடுக்கவும், தனது இயக்கத்திற்கு மேலும் இளைஞர்களை இணைத்துக்கொள்ளவும் ஊக்கப்படுத்த தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்த போராளிகளை நினைவுகூருவது அவசியம் என்று அவர் கருதினார். தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பது போன்று, தமிழரின் கலாசாராத்தில் ஊறிப்போயிருந்த, பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு வந்த தியாகங்களுக்கெல்லாம் சிகரமான தேசத்திற்காக உயிர்கொடுக்கும் நினைவேந்தலிற்கு மீண்டும் உயிர்கொடுத்தார். தமிழுக்காகவும், தமிழ்த் தேசத்திற்காகவும் உயிர்கொடுத்த வீர மறவர்களைக் கெளரவிக்கும் நடைமுறையான நடுகல் நிறுவி வழிபடும் முறையினை பிரபாகரன் மீளவும் கொண்டுவந்தார். தமிழ்ச் சங்க கால இலக்கியங்களில் மக்களையும், போர்வீரர்களையும் உணர்வெழுச்சியுடன் வைத்திருக்க அக்காலத்தில் நடைமுறையில் இருந்த நடுகல் வழிபாட்டினை பிரபாகரனும் பின்பற்றினார்.
பிரபாகரனின் நடுகல் வழிபாட்டு முறையின் மீள் உருவாக்கம் எதிர்ப்பர்த்ததுபோலவே மக்களிடையே அதீத ஈடுபாட்டினை ஏற்படுத்தியது. மாவீரர்களாகிப்போன போராளிகளின் பெற்றோர், மனைவி, கணவன், பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் உணர்வுகளை மாற்றிப்போட்டது. இழந்த தமது உறவுகளுக்காக இரங்குவது மட்டுமே தம்மால் செய்யக்கூடியது எனும் நிலையிலிருந்து, அவ்வீர மறவர்களின் கெளரவத்திலும், பெருமைகளிலும் பங்குகொள்ளும் மனநிலையினை இது உருவாக்கியது. மாவீரராகிப்போன குடும்பங்கள் புலிகள் இயக்கத்திடம் இருந்து விலகிச் செல்வதற்குப் பதிலாக அவர்களை நோக்கி நெருங்கிவர இந்த மாவீரர் நாட்களும், கெளரவித்தல்களும் வழிசமைத்துக் கொடுத்தன. ஆதி தமிழ்க் கலாசாரத்தில் நடைமுறையில் இருந்த மாவீரருக்கான வணக்கத்தினை ஒட்டுமொத்த மக்களின் உணர்வெழுச்சியுடன் மீட்டுவந்து நிறுத்தியது. இந்த மாவீரர் வழிபாட்டின் உச்ச நிகழ்வாக 2000 ஆம் ஆண்டில் மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வினைக் குறிப்பிட முடியும். மாவீரர் கெளரவம் தொடர்பான புலிகளின் பிரச்சாரத்தினைக் கேட்டுக்கொண்டிருந்த பல தாய்மார்கள் உணர்வுப் பெருக்கத்தால் ஆட்கொள்ளப்பட்டு, தமது பிள்ளைகளின் நெற்றியில் திலகமிட்டு, நாட்டிற்காகப் போராடும்படி கூறி புலிகளுடன் அனுப்பிவைத்திருந்தார்கள். ஆதித் தமிழ்க் கலாசாரத்தில் மாவீரராகிப் போன தமது கணவன்மாரின் நிகழ்வில் தமது ஆண்பிள்ளையின் நெற்றியில் சந்தனத்தால் வீரத் திலகமிட்டு போர்க்களத்திற்கு அனுப்பிவைக்கும் தாய்மாரின் செயலினை இது ஒத்திருந்தது.
சிங்களவர்களும், தமிழ்க் கலாசாரத்துடன் சம்பந்தப்பட்டிருக்காத இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் மாவீரர்களைக் கெளரவிக்கும் கலாசாரத்தினை விளங்கிக்கொள்ளவோ அல்லது மதிக்கவோ தவறிவிட்டனர். தமிழ்ச் சமூகத்தில் பரவிவந்த ஆரிய இந்துக் கலாசாரம் இந்த மாவீரர் வழிபாட்டு முறையினை சிறுகச் சிறுக மழுங்கடித்து விட்டிருந்தது. ஆனால், தமிழ்க் காலாசாரத்தின் வேரிற்குள் சென்று மீண்டும் மாவீரர் கெளரவிப்பினை பிரபாகரன் மீட்டு வெளியே எடுத்து வந்தார்.
முதலாவது மாவீரர் நாளில் தலைவர் பிரபாகரன் - 1989
1989 ஆம் ஆண்டு, சங்கல் மரணித்த நாளான கார்த்திகை 27 ஆம் திகதியினை மாவீரர் நாளாக அறிவித்தார் பிரபாகரன். முல்லைத்தீவு மாவட்டத்தின் காட்டுப்பகுதியான நித்திகைக்குளத்தில் ராணுவச் சீருடை அணிந்த 600 ஆண் மற்றும் பெண் போராளிகள் அணிவகுத்து நிற்க அதுவரை தாய்நாட்டின் விடுதலைக்காகவும், தமிழ் இனத்திற்காகவும் தமதுயிரை ஈந்த 1307 மாவீரகளுக்கான வணக்கம் செலுத்தப்பட்டது. போரில் காவியமான மாவீரர்களின் திரு உருவப் படங்கள் நடுகற்களில் வீற்றிருக்க, அவர்களின் பாதங்களின் மீது மலர்கள் தூவப்பட்டு, பிரபாகரன் முதலாவது விளக்கினை ஏற்ற, தொடர்ச்சியாக அனைத்து மாவீரர்களுக்கும் விளக்கேற்றப்பட்டது. ஈகைச் சுடர் ஏற்றல் எனும் மிகவும் இயல்பான இந்த நிகழ்வு இன்று விரிவான, உணர்வுபூர்வமான, ஒட்டுமொத்த மக்களின் உணர்வெழுச்சியுடனான சடங்காக மாறிப்போனது. தான் ஆரம்பித்த மாவீரர் வணக்க நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக போராளிகளால் அனுஷ்ட்டிக்கப்பட்டது கண்டு நெகிழ்ந்த பிரபாகரன் தனது முதலாவது மாவீரர் நாள் உரையினை தனது உணர்வுகளின் குவியலாக எடுத்துரைத்தார்.
மிகவும் சிறிய பேச்சாக அமைந்த பிரபாகரனின் முதலாவது மாவீரர் நாள் உரை மாவீரர்களை வணங்கும் நிகழ்வு ஏன் அவசியம் என்கிற விளக்கத்தோடு ஆரம்பித்திருந்தது. "எமது போராட்டத்தில் இன்றைய நாள் மிகவும் முக்கியமான நாள். தமிழ் ஈழம் எனும் உயரிய இலட்சியத்தை அடைய தமது இன்னுயிரை அர்ப்பணித்த 1307 மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் நாளாக இந்த மாவீரர் தினத்தினை நாம் உருவாக்கினோம். இன்றே இதனை முதன்முறையாகச் செய்ய ஆரம்பித்திருக்கிறோம். பல நாடுகளில் மரணித்த தமது விடுதலைப் போராளிகளுக்கான கெளரவத்தினை அவர்கள் வழங்கிவருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நாமும் எமது மாவீரர்களை மனதில் நிறுத்தி வணகுவதென்று முடிவெடுத்திருக்கிறோம். எமது இயக்கத்தில் முதலாவது மாவீரரான சங்கரின் நினைவுநாளினை, தாயக விடுதலையில் வித்தாகிப்போன அனைத்து மாவீரகளுக்குமான வணக்க நாளாக இன்றுமுதல் நாம் அனுஷ்ட்டிப்போமாக" என்று கூறினார்.