தந்தை செல்வாவின் வெற்றியும் "தம்பியின்" வெளிப்படுத்தலும்
1972 ஆம் ஆண்டில் சிங்களத் தலைவர்களால் கொண்டுவரப்பட்ட அரசிய சட்டத்திற்கு எதிராகவும், தரப்படுத்தல்களுக்கெதிராகவும் தமிழ் மாணவர் பேரவை தீவிரமாகச் செயற்படத் தொடங்கியது. 1970 பொதுத் தேர்தல்களில் வெற்றிபெற்ற கூட்டணியான சுதந்திரக் கட்சி, சமசமாஜக் கட்சி, கம்மியூனிஸ்ட் கட்சி என்பன இணைந்து புதிய அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்கியிருந்தன. சமஷ்ட்டிக் கட்சியும் தனது பங்கிற்கு ஒரு அரசியலமைப்பு நகலை பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தது. சமஷ்ட்டிக் கட்சியின் அரசியலமைப்பு நகலின்படி இலங்கை ஒரு சமஷ்ட்டிக் குடியரசாக இருப்பதுடன் ஐந்து சுய அதிகாரம் பெற்ற பிரதேசங்களையும் கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஐந்து சுயாட்சி பிரதேசங்களாவன, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள், வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள், ஊவா, சப்ரகமுவா மற்றும் மத்திய மாகாணங்கள், வடமாகாணமும், கிழக்கின் திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டங்களும், இறுதியாக அம்பாறை மாவட்டத்தின் தென்கிழக்குப் பிரதேசமும் ஆகும்.
சமஷ்ட்டிக் கட்சி முன்வைத்த யோசனைகளை பாராளுமன்றம் ஏறெடுத்தும் பார்க்க விரும்பவில்லை. அதற்குப் பதிலாக பின்வரும் அரசியலமைப்பினை அது முன்வைத்தது,
"சிறிலங்கா குடியரசு ஒரு ஒற்றையாட்சி நாடாகும். சிங்களமே இந்நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாகும். பெளத்த மதம் நாட்டிலுள்ள அனைத்து மதங்களிலும் மேலானதாக போற்றிக் காக்கப்படும்" என்று கூறியது.
இதனால் மிகுந்த ஆத்திரமடைந்த தமிழ் இளைஞர்கள், உடனடியாக பாராளுமன்றத்தை விட்டு விலகுமாறு சமஷ்ட்டிக் கட்சிக்கு அழுத்தம் கொடுக்கவே, அக்கட்சியும் அவர்களின் வேண்டுகோளினை ஏற்று விலகிக் கொண்டது. இப்புதிய அரசியலமைப்புக் குறித்துப் பேசிய தந்தை செல்வா, "இது ஒரு அடிமைச் சாசனம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
1972 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பு, தமிழ் இளைஞர்களை தமிழர்களுக்கான தனிநாடு ஒன்றிற்கான போராட்டம் நோக்கித் தள்ளிவிட்டிருந்தது. புதிய அரசியலமைப்பு அமுல்ப்படுத்தப்படுவதற்கு சரியாக 8 நாட்களுக்கு முன்பு, வைகாசி 14, 1972 இல் தமிழ்க் கட்சிகள் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி எனும் அமைப்பை உருவாக்கின. இதில் சமஷ்ட்டிக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி, அகில இலங்கை தமிழ் மாநாட்டுக் கட்சி மற்றும் சில தொழிற்சங்கங்கள் என்பனவும் பங்குகொண்டிருந்தன.
ஒருங்கிணைக்கப்பட்ட தமிழர் ஐக்கிய முன்னணி வைகாசி 22, 1972 இல் பாரிய மக்கள் போராட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்தது. இளைஞர்கள் இப்போராட்டத்தை கிராமங்கள் தோறும் எடுத்துச் சென்றனர். கிராமங்கள் தோறும் கூட்டங்களும், கருத்தரங்குகளும் நடத்தப்பட்டதோடு சிங்கள பெளத்தத்தை பிரகடனப்படுத்தும் இலங்கைத் தேசியக்கொடியும், அரசியலமைப்பின் மாதிரிகளும் இளைஞர்களால் தமது எதிர்ப்பினைக் காட்டும் முகமாக எரிக்கப்பட்டன. புதிய அரசியலமைப்பிற்குத் தமிழர்களிடத்திலிருந்த எதிர்ப்பினை அரசு புரிந்துகொள்ளச் சந்தர்ப்பம் கொடுப்பதற்காக தந்தை செல்வா தனது பாராளுமன்ற பதவியினை ராஜினாமாச் செய்திருந்தார். செல்வாவின் தொகுதிக்கான இடைத்தேர்தலை 1975 வரை அரசு பின்போட்டுக்கொண்டே வந்தது.
தனது புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கெதிரான தமிழர்களின் போராட்டத்தை அடக்க சிங்களத் தலைமை தீவிரமாகச் செயற்படத் தொடங்கியது. அதன்படி இந்த ஆர்ப்பாட்டங்களில் முன்னால் நின்று செயற்பட்ட 70 இளைஞர்களை அது கைதுசெய்தது. இது அரச காவல்த்துறையுடனும், ராணுவத்துடனும் தமிழ் இளைஞர்கள் நேரடியாக மோதும் நிலையினை உருவாக்கியது. தரப்படுத்தலினால் மிகுந்த விரக்திக்கும், கோபத்திற்கும் உட்பட்டிருந்த இளைஞர்கள் தம்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ராணுவ அடக்குமுறைக்கெதிராகத் தீவிரமான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். அத்துடன், அகிம்சை ரீதியிலான போராட்டமும், அரசுடன் ஒத்துழைத்துச் செயற்படும் வழிமுறையும் முற்றாகத் தோற்றுவிட்டதனையும் மக்களிடம் தெளிவாக எடுத்துரைக்கத் தலைப்பட்டனர். வங்கதேசத்தில் இடம்பெற்ற ஆயுதக் கிளர்ச்சியையும், தெற்கின் மக்கள் விடுதலை முன்னணியினரின் ஆயுதக் கிளர்ச்சியையும் முன்னுதாரணமாகக் காட்டி, ஆயுதப் போராட்டம் ஒன்றினாலன்றி தமிழருக்கான சுதந்திரம் சாத்தியமில்லை என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்தத் தொடங்கினர். இதன் தொடர்ச்சியாக ரகசிய தமிழ் ஆயுத அமைப்புக்கள் உருப்பெறத் தொடங்கின. அவற்றுள் ஒன்றே பிரபாகரனின் புதிய தமிழ்ப் புலிகள் எனும் அமைப்பாகும்.
1974 ஆம் ஆண்டு தமிழர் ஆராய்ச்சி மாநாடு மீது சிங்கள அரசு நடத்திய மிலேச்சத்தனமான படுகொலைகள் தமிழ் இளைஞர்களை வெகுவாக ஆத்திரம் கொள்ள வைத்திருந்தது. சிவகுமாரன் அடங்கலாக பெருமளவு இளைஞர்கள் இத்தாக்குதலை அரசு திட்டமிட்டே நடத்தியதாக வெளிப்படையாக மக்களிடம் தெரிவித்து வந்தனர். இதன் ஒரு கட்டமாக பெருமளவு ஆர்ப்பாட்டங்களை இளைஞர்கள் ஒழுங்குசெய்தனர். தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளுக்கு பழிவாங்கியே தீர்வேண்டும் என்கிற வெறி சிவகுமாரன் மனதில் ஆழமாக வேரூன்றிவிட்டிருந்தது. அவரின் இலக்குகளாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் சி. குமாரசூரியர், யாழ்ப்பாண மேயர் அல்பிரெட் துரையப்பா மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர சந்திரசேகர ஆகியோரே இருந்தனர். ஆனால், 1974, ஆனி 4 ஆம் திகதி கோப்பாய் மக்கள் வங்கிக் கொள்ளையில் சுற்றிவளைக்கப்பட்டபோது தப்ப வழியின்றி சிவகுமாரன் தனது சயனைட் வில்லையினை உட்கொண்டு மரணமாக வேண்டி ஏற்பட்டது. அவரது மரணம் வடபகுதி மக்களிடையே ஆற்றொணாத் துயரத்தையும், ஆத்திரத்தையும் ஒருங்கே ஏற்படுத்தியிருந்தது.
1975, மாசி 6 ஆம் திகதி காங்கேசன் துறையில் நடந்த இடைத்தேர்தலில் தந்தை செல்வா அமோகமான வெற்றியடைந்ததையடுத்து, தனிநாட்டிற்கான கோரிக்கையும், விருப்பும் தமிழ் மக்களிடையே வெகுவாக அதிகரித்திருந்தது. தனது தேர்தல் வெற்றியினையடுத்து மக்களிடம் பேசிய தந்தை செல்வா பின்வருமாறு கூறினார்,
" சரித்திர கால்கம்தொட்டு இந்த நாட்டில் தமிழர்களும் சிங்களவர்களும் தனித்தனி இறையாண்மையுள்ள இன மக்களாக வாழ்ந்தே வந்தனர். அந்நியர்கள் இந்த நாட்டை ஆக்கிரமிக்கும்வரை நிலைமை இப்படித்தான் இருந்தது. கடந்த 25 வருடங்களாக இந்த நாட்டில் சிங்களவருக்கு நிகரான அரசியல் உரிமைகளை தமிழர்களும் அனுபவிக்கவேண்டும் என்கிற நோக்கிலேயே போராடி வருகிறோம். ஆனால், துரதிஷ்ட்டவசமாக ஆட்சிக்கு வரும் அனைத்துச் சிங்களத் தலைவர்களும் தமது பலத்தினைப் பாவித்து தமிழர்களை இரண்டாம்தர குடிமக்களாகவே நடத்தி வருகின்றனர். எமது அடிப்படை உரிமைகளைத் தரமறுப்பதுடன், எமது உணர்வுகளையும் நசுக்கி வருகின்றனர். எனக்கு நீங்கள் இன்று தந்திருக்கும் மகத்தான வெற்றி கூறும் செய்தி ஒன்றுதான், அதாவது, தமிழ்மக்களுக்கு சரித்திரகாலம் தொட்டு இருந்துவரும் இறையாண்மையினைப் பாவித்து, எமக்கான தனியான நாடான தமிழீழத்தை உருவாக்கி, நம்மை மீண்டும் விடுதலைபெற்ற இனமாக உருவாக்க வேண்டும் என்பதுதான். தமிழர் ஐக்கிய முன்னணியினரின் சார்பாக நான் உங்களுக்குக் கூறும் உறுதிமொழி என்னவெனில், உங்களின் ஆணையான சுதந்திரத் தமிழீழத் தனிநாட்டினை உருவாக்கியே தீருவோம் என்பதுதான்".
கூடியிருந்த இளைஞர் வெற்றிமுழக்கம் செய்ததோடு, தமிழீழம் மட்டுமே எமக்கு வேண்டும், வேறெதுவும் வேண்டாம்" என்று வானதிரக் கோஷமிட்டனர். ஒருசிலர் தமது சுட்டுவிரலை ஊசிகளால் துளைத்து, வெளிக்கசிந்த குருதியெடுத்து தந்தை செல்வாவின் நெற்றியில் இரத்தத் திலகமிட்டு, தாம் தமது இலட்சியத்தை அடைய எத்தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பதை வெளிப்படுத்தினர். இந்த ஒன்றுபட்ட விடுதலை உணர்வே 1976 இல் செய்யப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு முன்னோட்டமாக அமைந்தது.
1976, வைகாசி 5 ஆம் நாளன்று, வட்டுக்கோட்டைத் தீர்மான நடைபெறுவதற்கு சரியாக 9 நாட்களுக்கு முன்னர், 21 வயதே நிரம்பிய, எல்லாராலும் தம்பி என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட பிரபாகரன் தனது ஆயுத அமைப்பான புதிய தமிழ்ப் புலிகளுக்கு "தமிழீழ விடுதலைப் புலிகள்" என்று பெயர் சூட்டி வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிதர்சனமாவதற்கான அனைத்தையும் செய்வேன் என்று சபதமெடுத்தார்.