அப்பாவி இளைஞரான நவரட்ணராஜாவை சித்திரவதைகளுக்குப் பின்னர் கொன்றுபோட்ட இராணுவப் புலநாய்வுத்துறை
முதலாவது கவசவாகனச் சாரதி வாகனத்தின் தடுப்புக்களைப் பிரயோகித்தார். புலிகளின் தாக்குதலில் அந்த வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த இரு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். தமக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த கவச வாகனம் சடுதியாக வீதியின் நடுவே நின்றதைக் கண்ட இரண்டாவது கவச வாகனத்தின் சாரதி, தனது வாகனம் முதலாவது வாகனத்துடன் மோதுப்படுவதைத் தவிர்க்க வீதியின் கரைநோக்கி வாகனத்தைச் செலுத்த, அது கண்ணிவெடியால் உருவாகியிருந்த கிடங்கிற்குள் வீழ்ந்தது. எதிர்பாராது நடந்த இந்த சம்பவத்தை அடுத்து நிலைகுலைந்துபோன புலிகள், தாக்குதல் திட்டத்தினைக் கைவிட்டு, தமது மினிபஸ் தரித்துநின்ற பரந்தன் பகுதிநோக்கி ஓடத் தொடங்கினர்.
அவசரத்தில், புலிகளின் அணியினைச் சேர்ந்த நால்வர் தமது பாதணிகளை அவ்விடத்திலேயே விட்டுச் சென்றிருந்தனர். அவற்றினைப் பரிசோதித்த ராணுவப் புலநாய்வுத்துறையினர் அவை காடுகளில் பாவிக்கப்படும் பாதணிகள் என்பதை அறிந்துகொண்டதோடு, அவற்றில் அதன் உரிமையாளர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருப்பதையும் கண்டுகொண்டனர். பாதணிகளில் கிட்டு, கணேஷ், விக்டர் மற்றும் பொட்டம்மான் ஆகியோரின் பெயர்கள் காணப்பட்டன. காடுகளில் பாவிக்கும் பாதணிகளை அதிகப் பாவித்துப் பழகியிருக்காமையினால், அவற்றுடன் ஓடுவதைக் காட்டிலும் வெறுங்காலுடன் ஓடுவதே அவர்களைப் பொறுத்தவரை அன்று இலகுவானதாக இருந்திருக்கிறது.
மேலும், ராணுவ வாகனத்தின் அருகில் சிறிய காகிதம் ஒன்றினையும் புலநாய்வுத்துறையினர் கண்டெடுத்தனர். அக்காகிதத்தில் ஒருவருடைய பெயர் இருந்தது. திருகோணமலை மாவட்டம், கிளிவெட்டியை வதிவிடமாகக் கொண்ட சித்திரவேல் சிவானந்தராஜா என்பதே அந்தப் பெயர். இதனையடுத்து, கிளிவெட்டியைச் சேர்ந்த சிவானந்தராஜாவை விசாரிக்க ராணுவப் புலநாய்வுத்துறை அங்கு சென்றது. இராணுவத்தினருடன் பேசிய அவர், சார்ள்ஸ் அன்டனி எனப்படும் சீலன் தனது பாடசாலை நண்பர் என்றும், தன்னை புலிகளுடன் இணைந்துகொள்ளுமாறு அவர் வற்புருத்தி வந்ததாகவும், ஆனால் தான் இணைய விரும்பவில்லையென்றும் கூறினார். அவரை விடுதலை செய்த ராணுவப் புலநாய்வாளர்கள், கிளிவெட்டியைச் சேர்ந்த இன்னொரு இளைஞரான 28 வயது நிரம்பிய கதிர்காமத்தம்பி நவரட்ணராஜாவை பங்குனி 26 ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைப் பாவித்து குருநகர் முகாமிற்கு அழைத்து வந்ததோடு கடுமையான சித்திரவதைகளின்பின்னர், 1983 ஆம் ஆண்டு சித்திரை 10 ஆம் திகதி அவர் ராணுவத்தினரால் கொல்லப்பட்டார். அவர் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணத்தை ராணுவத்தினர் ஒருபோதும் கூறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
தம்மால் கொல்லப்பட்ட நவரட்ணராஜாவின் உடலை யாழ் வைத்தியசாலையில் கையளித்த ராணுவத்தினர் அவர் சுகயீனம் காரணமாக இறந்தார் என்று கூறினர். அன்று, ராணுவத்தை எதிர்த்துக் கேள்விகேட்கும் துணிவு வைத்தியசாலையில் இருந்த எவருக்கும் இருக்கவில்லை.
யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் தடயவியல் நிபுணராக பணியாற்றிவந்த மருத்துவர் என். சரவணபவனந்தன் கொல்லப்பட்ட நவரட்ணராஜாவின் பிரேதப் பரிசோதனையை நடத்தியிருந்தார்.
வைத்தியர் சரவணபவனந்தனால் வழங்கப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை பின்வருமாறு கூறியது, "இறந்துபோன நவரட்ணராஜாவின் உடலில் 25 வெளிக்காயங்களும், பத்து உட்காயங்களும் காணப்பட்டன. அவரது நுரையீரலில் காணப்படும் காயங்கள் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டவையாகும். அவரது மரணம் இதயம் மற்றும் சுவாசத் தொகுதிகளின் செயலின்மையினால் ஏற்பட்டிருக்கிறது. அவரது உடலின் தசைப் பகுதிகள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாலேயே இந்த செயலிழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன். சரியான நேரத்தில் உரிய மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டிருப்பின் அவரது உயிரைக் காத்திருக்க முடியும் என்று நான் நம்புகிறேன்" என்று கூறப்பட்டிருந்தது.
சித்திரை 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் சட்டர்டே ரிவியூ பத்திரிக்கை இளைஞர் நவரட்ணராஜாவின் மரணம் பற்றிய செய்தியைத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்ததோடு, வைத்தியர் சரவணபவனந்தனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் வைத்தியசாலையின் சவ அறைக்குச் சென்ற பொலீஸார் நவரட்ணராஜாவின் மரணம் தொடர்பாக வைத்தியர் வெளியிட்ட மருத்துவ அறிக்கையினைத் தேடியதாகவும், ஆனால் அதனை மருத்துவர் சரவணபவனந்தன் பாதுகாப்பாக மறைத்து வைத்துவிட்டதனால் பொலீஸார் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாகவும் கூறியிருந்தது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அப்பாவி இளைஞரான நவரட்ணராஜாவின் சித்திரவதையும் அதன்பின்னரான கொலையும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் அரசு மீதும், இராணுவத்தினர் மீதும் அதீத கோபத்தினை ஏற்படுத்தியிருந்ததுடன், அரசிடமிருந்து மேலும் மேலும் அவர்களை அந்நியப்படவும் வைத்திருந்தது. கைதுசெய்யப்படும் அனைவரையும் சித்திரவதைக்குள்ளாகுதல் என்பது அன்றைய கால கட்டத்தில் இராணுவத்தினராலும் பொலீஸாரினாலும் பொதுவான நடைமுறையாகக் கையாளப்பட்டு வந்ததுடன், கைதுசெய்யப்படும் தமிழர்கள் அனைவரும் பாரபட்சமின்றி சித்திரவதைகளுக்கு முகம்கொடுத்துவந்தனர். இவ்வாறான செயற்பாடுகளால் தமிழ் மக்கள் அரச இயந்திரத்தின் ராணுவப் பொலீஸ் படைகளுடன் நேரடியான மோதல்களுக்கு தம்மை தயார்ப்படுத்தும் நிலைக்கும் இட்டுச் சென்றிருந்தது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு, சித்திரவதைகளை அனுபவித்துவருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்களால் சித்திரை 5 ஆம் திகதியன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நவரட்ணராஜா கொல்லப்படுவதற்கு ஐந்து தினங்களுக்கு முன்னரே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தினைக் கலைக்க பொலீஸார் குண்டாந்தடிப் பிரயோகமும், கண்ணீர்ப் புகைக்குண்டுத் தாக்குதலையும் மாணவர் மீது மேற்கொண்டிருந்தனர். சித்திரை 5 ஆம் திகதி காலை, புனித ஜேம்ஸ் ஆலயத்திலிருந்து ஆரம்பித்து பிரதான வீதி வழியாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஏற்பாடாகியிருந்தது. இதனையடுத்து புனித ஜேம்ஸ் தேவாலயத்தைச் சுற்றித் தடைகளை ஏற்படுத்திய பொலீஸார், அத்தேவாலயம் நோக்கி மாணவர்கள் வருவதைத் தடுக்க எத்தனித்தனர். ஆனால், அருகிலிருந்த புனித மரியாள் பேராலயத்திலிருந்து தமது பேரணியினை மாணவர்கள் ஆரம்பித்து நடத்தவே, அப்பகுதிக்குச் சென்ற பொலீஸார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி ஆர்ப்பாட்டத்தைக் கலைத்துப் போட்டனர்.