தமிழர் மீதான கூட்டுத் தண்டனைக்கான விதைகளை விதைக்கத் தொடங்கிய சிங்களப் பேரினவாதம்
தமிழ் மீனவர்கள் மீது சிங்கள மீனவர்கள் நன்கு ஒருங்கமைக்கப்பட்ட முறையில் தாக்குதல் ஒன்றினை நடத்திய நாளான 1983 ஆனி 2 ஆம் திகதி நான் திருகோணமலையில் இருந்தேன். அந்நேரம், மீன்வளத்துறை அமைச்சர் பெஸ்டஸ் பெரேராவினால் சிங்களக் குடியேற்றப்பகுதியான சமுத்திரபுரவில் பாடசாலை ஒன்று திறந்துவைக்கப்பட்டிருந்தது. அந்நிகழ்வில் நான் கலந்துகொண்டிருந்தபோது திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் நிர்வாகி எம். செல்வராஜா என்னைப் பார்க்க அவசரமாக வந்திருந்தார். "சபா, பிரச்சினை தொடங்கீட்டுது. தமிழர்களின் படகுகளை கடந்த இரவு அவர்கள் எரித்து விட்டார்கள்" என்று கூறிவிட்டு மீன்வளத்துறை அமைச்சர் பெஸ்டஸ் பெரேராவிடம் இதுகுறித்துப் பேசியதுடன் பிரச்சினை மேலும் பெரிதாகாது பார்த்துக்கொள்ளுமாறு வேண்டிக்கொண்டார்.
திருகோணமலையில் அதிகரித்து வந்துகொண்டிருந்த பதற்றத்தை என்னால் அன்று காலையில் இலகுவாக உணர்ந்துகொள்ள முடிந்தது. மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடிநின்று கடந்த நாள் நடைபெற்ற அசம்பாவிதங்கள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். பல சிங்களவர்கள் வெளிப்படையாகவே, "தமிழர்களுக்கு ஒரு பாடத்தைப் புகட்டவேண்டும், அவர்களின் தலைகளை நொறுக்க வேண்டும்" என்று பேசினார்கள். லலித் அதுலத் முதலி மற்றும் ஜெயார் அடிக்கடி பாவித்த இவ்வார்த்தைகள் சாதாரண சிங்களவர்களின் நாவிலும் அப்போது தவழ்ந்துகொண்டிருந்தன.
மீன்வளத்துறை அமைச்சுபற்றி நான் செய்தி சேகரிப்பதில்லை, ஆனால் அமைச்சர் எனக்கு நன்கு பரீட்சயமானவர். கத்தோலிக்கரான அமைச்சர் பெஸ் டஸ் பெரேராவை யாழ்ப்பாண மீனவ சமூகத்துடனும், யாழ்ப்பாண கத்தோலிக்கத் திருச்சபையுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளுமாறு ஜெயார் பணித்திருந்தார். ஜெயாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களில் பெஸ்டஸ் பெரேராவும் ஒருவர். 1972 ஆம் டட்லி சேனநாயக்கவுடன் ஜெயார் முரண்பட்டபோது பெஸ்டஸ் பெரேரா ஜெயாருக்கு ஆதரவாக நின்றார். ஆபத்தான வேளைகளில் தனக்கு ஆதரவாக நின்றவர்களை பின்னர் தான் அதிகாரத்திற்கு வந்ததும் அரவணைத்துக்கொள்ளும் நற்பண்பு ஜெயாருக்கு இருந்தது. ஆகவே, 1977 ஆம் ஆண்டு தான் ஆட்சியைக் கைப்பற்றியபோது பெஸ்டஸ் பெரேராவுக்கு மீன்பிடித்தித்துறை அமைச்சினை வழங்கினார் ஜெயார். இனப்பிரச்சினை தொடர்பான செய்திகளை சேகரிப்பதில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நான், பெஸ்டஸ் பெரேராவுடன் நெருங்கிப்பழகும் பல சந்தர்ப்பங்களைப் பெற்றிருந்தேன்.
பெஸ்டஸ் பெரேரா
1983 ஆம் ஆண்டு ஆனி 1 ஆம் திகதி திருகோணமலைக்குப் பயணமான ஊடக் குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். நாம் பயணம் செய்துகொண்டிருந்த வான் குருநாகல் நகர் மத்தியை அடைந்தபோது கறுப்புச்சட்டை அணிந்த இளைஞர்கள் சிலர் வீதியின் குறுக்கே, எமது வாகனத்தின் முன்னால் பாய்ந்து சாரதியை வாகனத்தை நிறுத்துமாறு பணித்தனர். ஆனால், சாரதியோ அவர்களை நோக்கி வாகனத்தை நிறுத்தாது தொடர்ந்து செலுத்தவே அந்த இளைஞர்கள் விதியின் ஓரத்திற்குப் பாய்ந்து விலகிக்கொண்டார்கள். நகரில் இருந்த பல தமிழர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு சிங்களவர்களால் சூறையாடப்பட்டுக்கொண்டிருந்ததை வாகனத்தில் இருந்த அனைவரும் கண்ணுற்றோம். தமிழ் ஆண்கள் வீதிகளுக்கு இழுத்துவரப்பட்டு சிங்களவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள். தமிழர்களைத் தேடித் தேடி வேட்டையாடிக்கொண்டிருந்த அந்தச் சிங்களக் காடையர் கூட்டத்தின் கண்களிலிருந்து என்னை, என்னுடன் வந்த சிங்களப் பத்திரிக்கையாளர்கள் காத்துக்கொண்டார்கள். எமது வாகனம் நகரின் எல்லையினைத் தாண்டிச் சென்றபோது, "நாம் சபாவைக் காப்பற்றிவிட்டோம்" என்று எனது சிங்கள நண்பர்கள் தமக்குள் குதூகலித்துக்கொண்டார்கள்.
அன்று காலை, வவுனியா நகரில் கொல்லப்பட்ட இரு விமானப்படை வீரர்களின் இழப்பிற்குப் பழிவாங்க நாடு முழுவதிலும், சுமார் 50 இடங்களில் தமிழ் மக்கள் மீது ஒருங்கமைக்கப்பட்ட ரீதியில் "கூட்டுத் தண்டனை" ஒன்று சிங்களவர்களால் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. அவ்வாறான தண்டனை வழங்கப்பட்ட இடங்களில் ஒன்றான குருநாகல் நகரில் வாழ்ந்து வந்த தமிழர்களும் தண்டிக்கப்பட்டார்கள். அன்று காலை வவுனியால் பணியாற்றி வந்த நான்கு விமானப்படை வீரர்கள் நகருக்கு மரக்கறிகளைக் கொள்வனவு செய்ய வந்திருக்கிறார்கள். பெரேரா, குணசேகர ஆகிய வீரர்கள் தமது ஜீப் வண்டிக்கு அருகே காவல் நிற்க ஏனைய இருவரும் சந்தையின் உட்பகுதிக்குச் சென்றுவிட்டார்கள். இவர்களின் வருகைக்காகக் காத்திருந்த நான்கு புளொட் போராளிகள் இவர்கள் இருவர் மீதும் கைக்குண்டுகளை எறிந்துவிட்டு, அவர்கள் சுதாரிப்பதற்குள் அவர்கள் மீது துப்பாக்கிகளால் சுடத் தொடங்கினார்கள். அந்த வீரர்கள் இருவரும் இறந்து விழ, அவர்களின் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு புளொட் போராளிகள் தலைமறைவானார்கள்.
தமது விமானப்படையினர் மீதான தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ராணுவம் இறங்கியது. வவுனியா நகரில் இருந்து இரு கிலோமீட்டர்கள் தூரத்தில் அமைந்திருக்கும் கோவில்குளத்திற்குச் சிவில் உடைகளில் சென்ற ராணுவத்தினர் அப்பகுதியில் காந்தியம் அமைப்பினால் பராமரிக்கப்பட்டுவந்த பண்ணை மீது தாக்குதல் நடத்தி, அப்பண்ணையில் இருந்த பயிர்களையும், சேமிப்பிடங்களையும், கொட்டகைகளையும் எரித்தார்கள். மேலும், பண்ணையில் பாவிக்கப்பட்டு வந்த உழவு இயந்திரங்கள், போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட வான்கள் என்பனவும் ராணுவத்தால் எரிக்கப்பட்டன. தாக்குதல் ஆரம்பித்த வேளையில் பண்ணையிலிருந்து தப்பியோடிய தமிழ் விவசாயிகள் தமது உயிரைக் காப்பாற்றிக்கொண்டார்கள்.
திருகோணமலையில் தமிழரின் மீன்பிடிப் படகுகள் எரிக்கப்பட்டதன் பின்னால் இருந்தது இராணுவத்தினர்தான் என்று செல்வராஜா என்னிடம் தெரிவித்தார். "தம்மை பின்புலத்தில் வைத்துக்கொண்டு, சிங்களக் காடையர்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதை அவர்கள் ஊக்குவித்து வருகிறார்கள்" என்று அவர் என்னிடம் கூறினார்.
ஆனி 3 ஆம் திகதி இரவு இவ்வாறான, ராணுவத்தினரின் பின்னணியில் நடந்த தாக்குதல் ஒன்றினை திருகோணமலை நகரில் நான் கண்டேன். திருகோணமலை பிரதான வீதியில் அமைந்திருந்த மன்ஷன் விடுதியில் வெடிபொருட்கள மறைத்துவைக்கப்பட்டிருப்பதாக தமக்குக் கிடைத்த தகவல்களையடுத்து ராணுவம் அங்கு தேடுதல் நடத்துவதற்குச் சென்றிருப்பதாக எமக்குச் செய்தி கிடைத்திருந்தது. ஆகவே, இதுபற்றிச் செய்தி சேகரிக்க எமது ஊடக் குழு அங்கு சென்றிருந்தது. நாம் அங்கு சென்றபொழுது ராணுவம் தனது தேடுதலை முடித்துவிட்டிருந்தது. அந்த விடுதியில் வெடிபொருட்கள் எவையும் இருக்கவில்லை. செய்தி சேகரிக்கச் சென்ற எமக்கு அது ஏமாற்றத்தைத் தந்திருந்தது.
ஆனால், சற்று நேரத்தின் பின்னர் எமக்கு இன்னொரு திகைப்பூட்டும் செய்தி கிடைத்தது. அப்பகுதியில் அமைந்திருந்த இன்னொரு கட்டடத்திற்கு ராணுவம் தேடுதல் நடத்தச் சென்றிருந்தது. மன்ஷன் விடுதியில் காவலுக்கு நின்றிருந்த இரு பொலீஸாரையும் கூட்டிக்கொண்டு இந்தக் கட்டடத்திற்கு ராணுவம் சென்றது. அப்போது, சந்தைப்பகுதியிலிருந்து காடையர் கூட்டமொன்று வெளியே வந்துகொண்டிருந்ததை நாம் கண்டோம். மன்ஷன் விடுதிக்குள் நுழைந்த அந்தக் காடையர் குழு அவ்விடுதியில் இருந்த அனைத்தையும் அடித்து உடைக்கத் தொடங்கியது. பின்னர், தாம் கொண்டுவந்திருந்த பெற்றொலினை விடுதி மீது ஊற்றி அதற்குத் தீவைத்தது. அந்த விடுதிக்குச் சொந்தக்காரர் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நெமினாதன் என்பதை நாம் பின்னர் அறிந்துகொண்டோம்.
இத்தாக்குதலைத் தொடர்ந்து, திருகோணமலை நகரில் தமிழர்களின் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கின. ஒருங்கமைக்கப்பட்ட வலையமைப்பும், தாக்குதல் நடத்தப்படுவதற்கான சூழ்நிலையும் அங்கு மிகவும் திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்டுள்ளதை நாம் உணர்ந்துகொண்டோம். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இளம் வாகனச் சாரதியான சபாரட்ணம் பழணிவேலின் படுகொலை குறித்து நான் இங்கு முன்னர் குறிப்பிட்டிருந்தேன். வைகாசி 30 ஆம் திகதி அதிகாலை திருகோணமலை நோக்கிச் செல்லும் பஸ் வண்டியில் தனது உறவினர்களை ஏற்றிவிடுவதற்காக பழனிவேல் தனது வாகனத்தை ஓட்டிச் சென்றார். வல்வெட்டித்துறையிலிருந்து பருத்தித்துறை பஸ்நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பழனிவேலின் வாகனம் மீது அதிகாலை 4:30 மணிக்கு வல்வெட்டித்துறை ராணுவக் காவலரணில் கடமையில் நின்ற கோப்ரல் எம் விமலரட்ண கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். கொல்லப்பட்ட பழனிவேலின் உடலை வீதியில் இழுத்துவிட்ட ராணுவத்தினர் அதன் மீது தமது ராணுவ ட்ரக் வண்டியை ஏற்றிச் சிதைத்தனர்.
பழனிவேலின் கொலைக்காக கோப்ரல் விமலரட்ண கைதுசெய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். தமிழர் மீதான கொலைகளுக்கு இறுதியாகத் தண்டிக்கப்பட்ட ராணுவ வீரர் விமலரட்ணதான் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த நிகழ்வும், இதற்கு முதல் நடத்தப்பட்ட நவரட்ணராஜா மீதான படுகொலை தொடர்பான நீதிவிசாரணையும் ராணுவத்தையும், அரசாங்கத்தையும் ஆத்திரப்பட வைத்திருந்தது. ஆகவே, இவ்வாறான நீதிவிசாரணைகளிலிருந்து தனது ராணுவத்தினரைப் பாதுகாக்க ஜெயார் தனது வழமையான சதிகளை அரங்கேற்றத் தொடங்கினார். தனது ஏவலாளிகளில் ஒருவரின் ஊடாக இப்பிரச்சினையினை பாராளுமன்றத்திலோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிலோ விவாதிப்பதன் மூலம் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜெயார் விரும்பினார். இவ்வாறு செய்வதன் மூலம் உள்நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் தான் அழுத்தம் காரணமாகவே சில விடயங்களைச் செய்யவேண்டி ஏற்ப்பட்டதாகக் காட்டுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். இத்தருணத்தில், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் அனைத்து சரத்துக்களையும் நடைமுறைப்படுத்துவதன் மூலம் பயங்கரவாதத்தை அழிக்க ஜனாதிபதி முன்வரவேண்டும் என்கிற தீர்மானத்தை தனது கட்சியின் செயற்குழு நிறைவேற்றுவதை ஜெயார் உறுதிப்படுத்திக்கொண்டார். மிகவும் கொடூரமான இச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான பொதுமக்கள் ஆதரவினை இனவாதம் கக்கும் பத்திரிக்கைகளான தி சண், தி ஐலண்ட் மற்றும் இவற்றின் சிங்கள மொழிப் பத்திரிக்கைகள் உருவாக்கிவந்தன.
ஜெயாரின் ஆட்சிக் காலம் முழுவதும் லலித் அதுலத் முதலியே அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளராகச் செயற்பட்டு வந்தார். ஊடகங்களுக்குத் தேவையான தகவல்களை அவரே வழங்கியும் வந்தார். அவரை ஊடகவியலாளர்கள் "செய்தியாளன்" என்றே அழைத்து வந்தார்கள். அவருக்கு எவற்றினைச் செய்தியாக்கவேண்டும், எவற்றினைச் செய்தியாக்கல் ஆகாது என்கிற அறிவு இருந்தது. அரசாங்கத்தின் நலன்களுக்காக ஊடகங்களை எவ்வாறு கையாள்வது என்பது அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. அவர் ஊடகங்களுடன் நட்புப் பாராட்டி வந்தார். அனைத்துப் பத்திரிக்கை ஆசிரியர்களுடனும் சிநேகபூர்வமான உறவை ஏற்படுத்திக்கொண்ட லலித், திறமைவாய்ந்த நிருபர்களுடனும் தொடர்புகளைப் பேணிவந்தார். நோர்ட்டன் வீரசிங்கவும் நானும் டெயிலி நியூஸ் பத்திரிக்கையில் அவரது நண்பர்களாக இருந்தோம். அவருக்குத் தெரிந்தவர்களுக்கு தனது பிரத்தியே தொலைபேசி தொடர்பெண்ணை அவர் வழங்கியிருந்தார். அந்த தொலைபேசி எண்ணுடன் காலை 5:30 மணியிலிருந்து நீங்கள் அவரைத் தொடர்புகொள்ள முடியும். ஒவ்வொரு செவ்வாய் காலை உணவின்போதும் நாம் அவருடன் தொடர்புகொள்வது வழக்கம். ஒவ்வொரு புதன் நாளிலும் அமைச்சரவையில் விவாதிக்கப்படவிருக்கும் முக்கிய விடயங்கள் தொடர்பான தகவல்களை அவர் செவ்வாயன்றே எம்முடன் பகிர்ந்துகொள்வார்.
ஜெயாருடன் அவரது ஏவலாளிகள்
இவ்வாறான நாள் ஒன்றில், தி சண் பத்திரிக்கையின் நிருபர் ஜெனிபருக்கு செய்தியொன்றினை காலையுணவை அருந்தியவாறே லலித் வழங்கியிருந்தார். செய்தியை வழங்கிய பின்னர் ஜெனிபரைப் பார்த்து, "இது உங்களுக்கான செய்தியல்ல, டெயிலி நியூஸுக்கானது. ஏனென்றால், டெயிலி நியூஸில் வரும் செய்திகளை மக்கள் அப்படியே நம்பப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். ஆகவே, அவர்களுக்கு தகவல்களையும் உங்களுக்குப் பிரச்சாரச் செய்திகளையும் நான் தர விரும்புகிறேன்" என்று கூறினார். பொதுமக்கள் கருத்தறியும் வல்லமை அதுலத் முதலிக்குக் கைவந்த கலை. தனியார் ஊடகங்களைப் பாவித்து அரசுக்குச் சார்பான பிரச்சாரங்களை முன்னெடுப்பதில் அவர் கைதேர்ந்து விளங்கினார்.