குற்றாலம் செல்கிறீர்களா! ஆர்ப்பரிக்கும் அருவிகள் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
மதுரையிலிருந்து 165 கி.மீ. தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 59 கி.மீ. தொலைவிலும் குற்றாலம் அமைந்துள்ளது
கட்டுரை தகவல்
எழுதியவர், சிராஜ்
பதவி, பிபிசி தமிழுக்காக
6 மணி நேரங்களுக்கு முன்னர்
அரபிக் கடலுடன் இணைந்து குஜராத் முதல் கன்னியாகுமரி வரை பரந்து விரிந்து கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் ஒரு வரப் பிரசாதம் என்று சொன்னால் மிகையாகாது.
அரபிக் கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்று இந்த மலைகளால் தடுக்கப்பட்டு பருவமழை பொழியக் காரணமாகிறது.
ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை காலத்தின்போது இந்த மலைத் தொடர்களில் அமைந்துள்ள ஏராளமான நீர் வீழ்ச்சிகளும், ஆறுகளும் நிரம்பி வழியும்.
அதில் முக்கியமானவை குற்றால அருவிகள். உங்கள் குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் குறைந்த செலவில் ஒரு நிறைவான சுற்றுலா செல்லத் திட்டமிடுகிறீர்கள் என்றால் உங்களுக்காகத்தான் இந்த சிறப்பு கட்டுரை.
குற்றாலம் செல்வது எப்படி?
படக்குறிப்பு,
குற்றால நுழைவு வாயில்
தென்காசி, செங்கோட்டை ரயில் நிலையங்கள் குற்றாலத்திற்கு அருகில் அமைந்துள்ளன.
சென்னையிலிருந்து குற்றாலம் செல்ல விரும்புவோருக்கு எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி, மதுரை வழியாக தென்காசிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ் போன்றவை தினசரி ரயில்களாக இயக்கப்படுகின்றன.
சிலம்பு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் புதன், வெள்ளி, ஞாயிற்று ஆகிய கிழமைகளில் இயக்கப்படுகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென்காசி மற்றும் செங்கோட்டைக்கு தினமும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மதுரையிலிருந்து 165 கி.மீ. தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 59 கி.மீ. தொலைவிலும் குற்றாலம் அமைந்துள்ளது. இந்த மாவட்டங்களில் இருந்து தென்காசி மற்றும் செங்கோட்டைக்கு பயணிகள் ரயில்களும் அரசுப் பேருந்துகளும் தினமும் இயக்கப்படுகின்றன.
படக்குறிப்பு,
குற்றாலப் பேரருவி
குற்றால அருவிகள்
ஊரின் நுழைவுவாயிலை கடக்கும்போதே பிரமாண்டமான மேற்குத் தொடர்ச்சி மலை உங்களை வரவேற்கும். இங்குள்ள அருவிகளில் விழும் தண்ணீர், பொதிகை மலைகளில் உள்ள பல்வேறு மூலிகைச் செடிகளைக் கடந்து வருவதால், அருவி நீரிலும் மூலிகை குணங்கள் நிறைந்துள்ளதாக நம்பப்படுகிறது.
இங்குள்ள ஐந்து பிரதான அருவிகளான பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலி அருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் மக்கள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
பருவமழைக் காலங்களின்போது இந்த அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளிப்பதற்குத் தடை விதிக்கப்படும். சில நிமிடங்களில்கூட இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுவிடும்.
எனவே இந்த அருவிகளில் குளிப்பவர்கள் காவல்துறை எச்சரிக்கை விடுத்தவுடன் அருவி பகுதியிலிருந்து வெளியேறிவிட வேண்டும். இந்த அருவிகளில் சோப்பு, ஷாம்பூ போன்றவற்றைப் பயன்படுத்தி குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
படக்குறிப்பு,
பருவமழை காலத்தில் பேரருவியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு
பேரருவி
பேரருவி என்று சொல்வதைவிட “மெயின் அருவி” என்று சொன்னால்தான் பலருக்கும் தெரியும். குற்றாலத்தின் முதல் பிரதான அருவியான பேரருவியின் அருகில்தான் தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றான திருக்குற்றாலநாதர் கோவில் அமைந்துள்ளது.
‘குற்றால சீசன்’ என்று அழைக்கப்படும் பருவமழைக் காலங்களின்போது பிற அருவிகளைவிட பேரருவியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
60 மீட்டர் உயரத்திலிருந்து இந்த அருவியில் தண்ணீர் விழுகிறது. இடையே உள்ள பொங்குமாக்கடல் எனும் 19 மீட்டர் ஆழமுள்ள குழி போன்ற அமைப்பில் முதலில் தண்ணீர் விழுந்து, பொங்குமாக்கடல் நிரம்பிய பிறகு தண்ணீர் குளிக்கும் பகுதியில் விழுகிறது.
இந்த பொங்குமாக்கடல் என்ற அமைப்பு இல்லையென்றால், பேரருவி மக்கள் குளிப்பதற்கு ஏற்ற இடமாக இருந்திருக்காது, காரணம் அதிக உயரத்திலிருந்து தண்ணீர் விழுவதால் அழுத்தமும் அதிகமாக இருந்திருக்கும்.
படக்குறிப்பு,
குற்றால கடை வீதிகளில் கிடைக்கும் இரம்புட்டான், மங்குஸ்தான், முட்டைப் பழம், பன்னீர் கொய்யா உள்ளிட்ட அரிய வகை பழங்கள்
கடைவீதி உலா
ஆசை தீர குளித்து முடித்துவிட்டு பேரருவிக்கு அருகிலுள்ள கடை வீதியில் ஒரு சிறு உலா வந்தால் தேங்காய் எண்ணெயில் பொரித்த வாழைக்காய் சிப்ஸ், சூடான ரவை அல்வா, மிளகாய் பஜ்ஜி, பாதாம் பால் எனப் பல்வேறு வகையான சிற்றுண்டிகளைச் சுவைக்கலாம்.
குற்றாலத்தில் கிடைக்கும் துரியன், இரம்புட்டான், மங்குஸ்தான், முட்டைப் பழம், பன்னீர் கொய்யா, ஸ்டார் பழம், பிளம்ஸ் போன்ற அரிய வகை பழங்களைச் சுவைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது.
அருவிகள் மட்டும் அல்லாது இத்தகைய அரிய பழங்களுக்கும் குற்றாலம் மிகவும் பிரசித்தம்.
படக்குறிப்பு,
புலியருவியில் ஆனந்தமாய் குளிக்கும் சுற்றுலா பயணிகள்
புலியருவி
குற்றாலம் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் பழைய குற்றால அருவிக்குச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது புலியருவி. மிகச் சிறிய அருவியான இது, குழந்தைகளும் பெரியவர்களும் குளிப்பதற்கு ஏற்ற அருவி எனச் சொல்லலாம்.
ஒரே நேரத்தில் ஐந்து அல்லது ஆறு பேருக்கு மேல் நின்று குளித்தாலே, அருவியில் நிற்க இடம் இருக்காது. அருவிக்கு முன் இருக்கும் சிறு தடாகம், குழந்தைகளுக்கான ஒரு சிறிய நீச்சல் குளம் போலக் காட்சியளிக்கிறது.
பிற பிரதான அருவிகளில் தண்ணீரின் வேகமும் அழுத்தமும் அதிகமாக இருக்கும். அதை விரும்பாதவர்களுக்கு இதுபோன்ற சிறிய அருவிகளில், குறைவான உயரத்திலிருந்து விழும் மிதமான தண்ணீரில் குளிப்பது நிச்சயம் ஓர் அழகான அனுபவமாக இருக்கும்.
படக்குறிப்பு,
பளழய குற்றால அருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்
பழைய குற்றால அருவி
குற்றால அருவிகளில் இந்த அருவி சற்றுத் தனித்துவமானது. இங்கு விழும் தண்ணீரின் வேகமும் அழுத்தமும் அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம். பேரருவியிலிருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த அருவிக்கு குற்றால பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நுழைவு வாயிலில் இருந்து அருவிக்குச் செல்லும் பாதை மிகவும் அழகாக இருக்கும். வாகனத்தை நிறுத்திவிட்டு படிக்கட்டுகளில் ஏறி அருவியின் அழகை ரசித்துக்கொண்டே நடந்தால், நம் மீது விழும் சாரல் மூலமாகவே தண்ணீரின் வேகத்தையும் புரிந்து கொள்ளலாம்.
இந்த அருவியின் பாறையில் மிகப் பெரிய படிக்கட்டுகள் போல செதுக்கப்பட்டு, அந்த ஒவ்வொரு படிக்கட்டிலும் தண்ணீர் விழுந்து பிறகு குளிக்கும் பகுதியில் விழுகிறது. முடிந்தளவு தண்ணீரின் வேகத்தை குறைக்கவே இதைச் செய்துள்ளார்கள்.
ஆண்களுக்கும் பெண்களுக்குமான அருவியின் இரு பிரிவுகளின் முன்பு அதிக ஆழமில்லாத சிறு தடாகங்கள் உள்ளன. அருவியின் முன்பகுதியில் குழந்தைகள் விளையாடுவதற்கென்று ஒரு சிறிய நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. பிற அருவிகளுடன் ஒப்பிடும்போது விடுமுறை அல்லாத நாட்களில் இங்கு மக்கள் கூட்டம் சற்று குறைவாகவே இருக்கும்.
படக்குறிப்பு,
பருவமழை காலங்களின்போது தண்ணீர் ஐந்து கிளைகளாகப் பிரிந்து விழுவது தான், ஐந்தருவி எனப் பெயர் வரக் காரணம்.
ஐந்தருவி
வழக்கமாக ஐந்தருவிகளில் குளிப்பவர்களுக்குத் தெரியும், பிற அருவிகளின் நீரைவிட இங்கு விழும் நீரின் குளிர்ச்சி சற்று அதிகமாகவே இருக்கும். பருவமழை காலங்களின்போது தண்ணீர் ஐந்து கிளைகளாகப் பிரிந்து விழுவது தான், ஐந்தருவி எனப் பெயர் வரக் காரணம்.
இதில் ஆண்களுக்கு மூன்று பிரிவுகளும், பெண்களுக்கு இரண்டு பிரிவுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் பல பிரிவுகளில் குளித்து மகிழ வாய்ப்பு கிடைப்பதால் இங்கு வழக்கமாகவே மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
பேரருவியிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த அருவிக்கு குற்றால பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஐந்தருவிக்கு செல்லும் வழியில் தமிழ்நாடு சுற்றுலா துறையின் படகு குழாம் அமைந்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் குற்றால சீசனுக்கும் சுற்றுலாத் துறை சார்பாக படகு சவாரி ஏற்பாடு செய்யப்படுகிறது.
சிறிய படகு குழாம்தான் என்றாலும் மலைகளை ரசித்தவாறே, குற்றால சாரலில் உங்கள் குடும்பத்துடன் படகு சவாரி செய்வது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
படக்குறிப்பு,
குற்றாலத்தில் காணக் கிடைக்கும் அரிய வகை இரம்புட்டான் பழ மரம்
சுற்றுச்சூழல் பூங்கா
இந்த அருவிக்கு அருகிலுள்ள மற்றொரு முக்கியமான இடம், தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறையின் சார்பாக ஐந்தருவியின் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்கா.
முப்பது ஏக்கர் பரப்பளவில் இந்தப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. நீருற்றுப் பூங்கா, ரோஜா தோட்டம், வண்ணத்துப் பூச்சி தோட்டம், மரப்பாலம் எனப் பல அம்சங்கள் உள்ளன.
தோட்டக்கலைத் துறையின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள நர்சரியில் மா, பலா, இரம்புட்டான், மலை வாழை, மங்குஸ்தான் போன்ற பழக் கன்றுகளையும், மிளகு, கிராம்பு போன்ற செடிகளையும் குறைந்த விலைக்கு வாங்கலாம்.
வாரத்தில் ஏழு நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த குற்றால சுற்றுச்சூழல் பூங்காவை சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம்.
செண்பகாதேவி அருவி
இந்த அருவியை அதிகமானோர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. சில ஆண்டுகளாகவே இங்கு செல்ல பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை. வனத்துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று வனக்காவலர் ஒருவருடன் சேர்ந்து இந்த அருவிக்குச் செல்லலாம்.
பேரருவிக்கு மேலே அமைந்திருக்கும் மலையில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. அருவியின் அருகே உள்ள செண்பகா தேவி அம்மன் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கும் வனத்துறையிடமிருந்து சிறப்பு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் இந்த அருவியில் குளிப்பதற்கு மட்டும் யாருக்கும் அனுமதி கிடையாது.
படக்குறிப்பு,
தண்ணீர் கொட்டும் செண்பகாதேவி அருவி
பேரருவியிலிருந்து ஐந்தருவிக்கு செல்லும் சாலையில் உள்ள சிற்றருவியைக் கடந்து ஒரு காட்டுப் பாதையின் வழியாகவே இந்த அருவிக்குச் செல்ல முடியும். பார்ப்பதற்கு எளிதான பாதை போலத் தெரிந்தாலும், காட்டுயிர்களின் நடமாட்டம் இந்தப் பாதையில் அதிகமாக உள்ளது. இது அகத்திய முனிவர் நடந்து சென்ற பாதை எனவும் நம்பப்படுகிறது.
செண்பகாதேவி அருவிக்குச் செல்லும் வழியில் பேரருவிக்கு நீர் செல்லும் பாதையைப் பார்க்கலாம். இவ்வாறு பாயும் நீர்தான் பொங்குமாக்கடலில் விழுந்து பிறகு மெயின் அருவியாக விழுகிறது. மழைக் காலங்களின்போது இந்தப் பாதையில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் இங்கு செல்லும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
செண்பகாதேவி அருவிப் பகுதியில் இருந்துதான் குற்றாலத்தைச் சுற்றியுள்ள ஊர்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மக்கள் நடமாட்டம் இல்லாத, நெகிழிக் குப்பைகள் இல்லாத, ஒரு தூய்மையான அழகான அருவியைக் காண விரும்பினால் செண்பகாதேவி அருவிதான் சிறந்த இடம். இதற்கு மேலே உள்ள தேனருவிக்குச் செல்ல யாருக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை.
குற்றால அருவிகளின் தனிச் சிறப்பு
மற்ற சுற்றுலா தலங்கள், நீர்வீழ்ச்சிகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு குற்றால அருவிகளுக்கு உண்டு.
இங்குள்ள அனைத்து பிரதான அருவிகளும் மக்கள் எளிதாக செல்லக்கூடிய வகையில் அமைந்துள்ளன.
பருவமழை காலங்களின்போது அருவிகளில் குளித்து மகிழ உயரமான மலைகளில் ஏற வேண்டாம்.
ஆபத்தான காடுகளின் வழியே பயணம் செய்ய வேண்டாம்.
உங்கள் வாகனங்கள் மூலமாகவே அருவியை அடைந்து, சில நிமிடங்கள் நடந்தாலே குற்றாலத்து அருவிகளின் சாரலில் நனையலாம்.
https://www.bbc.com/tamil/articles/c72mv381jgpo