வேண்டுமென்றே தாமதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் - தொடரும் தமிழ் இனக்கொலை, ஜூலை 1983
தமிழரின் கடைகளைச் சூறையாடும் சிங்களக் காடையர்களுடன் சாதாரணச் சிங்களப் பெண்மணிகள்
தமிழர்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்ட சிங்களக் காடையர்களின் கைகளில் இருந்த தமிழர்களின் வீடுகள் குறித்த விபரப் பட்டியல்களோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களே தமிழர்கள் மீதான தாக்குதலை தலைமையேற்று முன்னின்று நடத்தியமை ஆகியவை மட்டுமே அரச உயர்பீடம் இத்தாக்குதல்களை பின்னால் இருந்து இயக்கிவருகிறது என்பதை நிறுவதற்கான காரணங்களாக இருக்கவில்லை. தாக்குதல்கள் உக்கிரமமாக நடந்துகொண்டிருந்தவேளை அதனைத் தடுக்காது, ஊரடங்குச் சட்டத்தை அமுல்ப்படுத்த இறுதிவரை ஜெயார் காட்டிய அசமந்தப் போக்கும் இத்தாக்குதல்களை ஐக்கிய தேசியக் கட்சியின் அதியுயர் பீடமே நடத்துகிறது என்பதற்கு இன்னொரு காரணமாகிவிடுகிறது.
ஜூலை 83 இனக்கொலையினைத் திட்டமிட்டு நடத்திய சிங்களப் பேரினவாதப் பயங்கரவாதி ஜே ஆர் ஜெயவர்த்தன
தனது அலுவலகத்திற்கும், வாசஸ்த்தலத்திற்கும் வெளியே நடந்துகொண்டிருந்த தமிழர் மீதான தாக்குதல்கள் குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்று ஜெயவர்த்தன சொல்லலாம். ஆனால், நடந்துவரும் அக்கிரமங்கள் குறித்து அவரது ஆலோசகர்களாலும், காவல்த்துறை அதிகாரிகளாலும் அவருக்குத் தொடர்ச்சியாகவே அறிவுருத்தப்பட்டு வந்தது. தமிழர்கள் கொல்லப்பட்டு வருவதும் அவர்களது சொத்துக்களும் உடைமைகளும் எரியூட்டப்பட்டு வருவதும் அவருக்கு நன்கு தெரிந்தே இருந்தது. ஜெயாரின் வாசஸ்த்தலம் அமைந்திருந்த வோர்ட் பிளேசின் அருகில்க் கூட கொல்லப்பட்ட தமிழர் ஒருவரின் உடல் கிடப்பதை ஒரு பொலீஸ் அதிகாரியே ஜெயாருக்குச் சொல்லியிருந்தார். ஞாயிறு இரவு முதல் நிலைமை மோசமாகி வருவது குறித்து பொலீஸ் அதிகாரிகள் ஜெயாருக்கு எச்சரித்து வந்ததுடன் உடனடியாக ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பிக்குமாறும் பலமுறை கேட்டிருந்தார்கள்.
மறுநாள் திங்கட்கிழமை காலையிலும் ஜெயாரின் அமைச்சர்கள் சிலரும் பொலீஸ் அதிகாரிகளும் ஊரடங்குச் சட்டத்தை உடனடியாக அமுல்ப்படுத்துமாறு ஜெயாரிடம் மன்றாட்டமாக வேண்டிக்கொண்டிருந்தார்கள். கொழும்பு கோட்டைப் பகுதியில் அமைந்திருக்கும் பொலீஸாரின் தலைமைச் செயலகத்தில் திங்கள் காலை 6:30 மணிக்கு உயரதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் ஒன்று இடம்பெற்றது. பொலீஸ் மா அதிபர் ருத்ரா ராஜசிங்கம் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். கூட்டத்தின் முடிவில் உடனடியாக ஊரடங்குச் சட்டத்தினை அமுல்ப்படுத்த ஜனாதிபதிக்கு பரிந்துரைப்பதென்றும், பொலீஸ் மா அதிபரூடாக பொலீஸார் ஊரடங்கினை அமுல்ப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் எனும் தகவலை ஜனாதிபதிக்குச் சொல்வதென்றும் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, பொலீஸ் மா அதிபர் ஜனாதிபதிக்கு தமது கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தைத் தெரிவித்தார். ஆனால், பொலீஸ் மா அதிபர் பரிந்துரைத்த ஊரடங்கினை ஜெயார் அமுல்ப்படுத்த விரும்பவில்லை. அத்துடன், தமிழர்கள் மீதான சிங்களவர்களின் வன்முறைகளைக் கட்டுப்படுத்துமாறு பொலீஸாரையோ, இராணுவத்தையோ பணிப்பதையும் ஜெயார் முற்றாக நிராகரித்திருந்தார்.
தமிழரின் உடைமைகள் கடைகளிலிருந்து வெளியே வீசி எறியப்பட்டுத் தீமூட்டப்படுகின்றன
அமைச்சர்களான தொண்டைமான், பெஸ்ட்டஸ் பெரேரா, ரொனி டி மெல் மற்றும் தேவநாயகம் ஆகியோர் தாம் ஜனாதிபதியை திங்கள் காலை சந்தித்தபோது ஊரடங்குச் சட்டத்தினை உடனடியாக அமுல்ப்படுத்துமாறு கோரியதாக என்னிடம் தெரிவித்தனர். ஆனால், ஜெயார் அவர்கள் கோரிக்கையினை நிராகரித்து விட்டார்.
என்னுடன் பின்னர் பேசிய அமைச்சர்களும், பொலீஸ் அதிகாரிகளும் நாட்டில் நடந்துகொண்டிருந்த அக்கிரமங்கள் குறித்து ஜெயார் கவலைப்பட்டவராகத் தெரியவில்லை என்று கூறினார்கள். தொண்டைமானும் இதனையே என்னிடம் கூறினார். ஆனால், அன்று காலை ஜெயாருடன் பேசிய சில பொலீஸ் அதிகாரிகள் எனக்கு வேறுவிதமான செய்தியைச் சொன்னார்கள். அதாவது பொலீஸ் உயரதிகாரிகளுக்கும், இராணுவத் தளபதிக்கும் தேவையான நேரத்தில் அறிவுரைகளை வழங்கிய ஜெயார், அவற்றை நடைமுறைப்படுத்துமாறும் பணித்ததாகக் கூறினர். இதில் குறிப்பிடும்படியான விடயம் என்னவெனில், இந்திய உதவி உயர்ஸ்த்தானிகரான அப்யங்கரின் மனைவிக்குப் பாதுகாப்பளிக்குமாறு ஜெயார் உதவிப் பொலீஸ் மா அதிபரைக் கேட்டுக்கொண்டபோது நடந்த சம்பவமாகும். இந்திய உயர்ஸ்த்தானிகர் சத்வால், தில்லியில் அப்போது நின்றதால், உதவி உயர்ஸ்த்தானிகர் அப்யங்கரே அப்பதவியை அப்போது வகித்துவந்தார். அவரது வாசஸ்த்தலம் பார்க் வீதியில் அமைந்திருந்தது.
எட்வேர்ட் குணவர்த்தனவே கொழும்பு நகரின் உதவிப் பொலீஸ் மா அதிபராக அப்பொழுது பணியாற்றி வந்தார். அவர் ஜெயாருக்கு நன்கு விசுவாசமான ஒரு அதிகாரி. அவர் பணியில் இருந்து ஓய்வுபெற்றபோது லேக் ஹவுஸ் நிறுவனத்தின் இயக்குநராகப் பதவியில் அமர்த்தப்பட்டார். அவர் எழுதிய இரத்தமும் சயனைட்டும் எனும் புத்தகத்தில் 1983 ஆம் ஆண்டு இனக்கொலையில் இடம்பெற்ற சில விடயங்கள் குறித்து தெளிவாக எழுதியிருக்கிறார். 256 ஆம் 257 ஆம் பக்கங்களில் அப்யங்கரின் மனைவியின் பாதுகாப்புக் குறித்த திகிலான பதிவுகளை அவர் சேர்த்திருக்கிறார்.
பொலீஸாரின் வானொலி வலையமைப்பில் தலைமைச் செயலகத்தின் பணிப்புரை வெளிவந்தபோது எட்வேர்ட் குணவர்த்தன நாரஹேன்பிட்டவில் இருந்தார். "அனைத்து அதிகாரிகளுக்கும், கொழும்பு தெற்குப் பிரிவில் நடமாடும் பிரிவுகளுக்கும் தலைமையகத்திலிருந்து விடுக்கப்படும் அறிவித்தல்: இந்திய உப உயர்ஸ்த்தானிகரின் இல்லம் அமைந்திருக்கும் பார்க் வீதிக்குச் செல்லுங்கள். திருமதி அப்யங்கர் எரிந்துகொண்டிருக்கும் வீட்டினுள் அகப்பட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. மீண்டும் கூறுகிறேன், உடனடியாக அவரது இல்லம் அமைந்திருக்கும் பார்க் வீதிக்குச் செல்லுங்கள். இதுவே உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அதிமுக்கிய பணியாகும்" என்று கூறப்பட்டது.
அதற்குப் பதிலளித்த குணவர்த்தன, "கொழும்பு தெற்குப் பிரிவிலிருந்து தலைமைஅயகத்திற்கான செய்தி : உங்கள் தகவல் கிடைக்கப்பெற்றது, நாம் உடனடியாக அங்கு செல்கிறோம்"
நடமட்டும் தெற்குப் பிரிவிலிருந்து தலைமைச் செயலகத்திற்கு : "தகவல் கிடைத்தது, வெள்ளவத்தை நிலையத்தில் நிற்கிறோம், பார்க் வீதி நோக்கிப் பயணமாகிறோம். எல்லா வீதிகளும் மிகுந்த நெரிசலாகக் காணப்படுகிறது".
கொழும்பு தெற்கு, பிரிவு 2 இலிருந்து தலைமையகத்திற்கான செய்தி : "நாம் பார்க் வீதிக்கு அருகில்த்தான் நிற்கிறோம். வாகன நெரிசலூடாகப் போக முடியவில்லை. கால்நடையாக இரு கொன்ஸ்டபிள்களுடன் அப்பகுதி நோக்கி ஓடிக்கொன்டிருக்கிறேன். பார்க் வீதியின் திசையிலிருந்து கரும்புகை மேலெழுந்து வருகிறது"
தொலைத்தொடர்பு பரிவர்த்தனை நிலையத்திற்கு பொலீஸ் மா அதிபரிடமிருந்து செய்தி: நான் பார்க் வீதிக்கு உப பொலீஸ் மா அதிபருடன் சென்றுகொண்டிருக்கிறேன். இதுகுறித்து ஜனாதிபதி செயலகத்திற்கு உடனடியாக அறிவியுங்கள்".
கொழும்பு தெற்கு பிரிவு 2 இலிருந்து பொலீஸ் மா அதிபருக்கு : "நான் பேசுவது கேட்கிறதா சார்?"
பொலீஸ் மா அதிபர் : "ஆம் கேட்கிறது".
கொழும்பு தெற்கு பிரிவு 2 : "நான் பார்க் வீதியில் நிற்கிறேன், அங்கு புகை மண்டலம் எதனையும் காணவில்லை. உயர்ஸ்த்தானிகரின் வீட்டில் நெருப்பு எதனையும் காண முடியவில்லை. திருமதி அப்யங்கர் பாதுகாப்பாகவே இருக்கிறார். சற்றுத் தொலைவிலிருக்கும் ஜிம் ரட்ணத்தின் வீட்டிலிருந்தே புகைமண்டலம் எழுந்து வருகிறது சேர்".
பொலீஸ் மா அதிபர் : "நன்றி தெற்கு பிரிவு 2, நாங்கள் வரும்வரை அங்கேயே நில்லுங்கள்".
தெற்கு பிரிவு 2 : "அப்படியே செய்கிறோம் சேர்".
திருமதி அப்யங்கரின் வீட்டினை பொலீஸ் மா அதிபர் அடைந்தபோது அவரை வரவேற்ற திருமதி அப்யங்கர், அவர்களுக்கு தேநீர் விருந்தளித்தார். அப்போது கொழும்பு தெற்கின் பொலீஸ் அதிகாரியும் இரு கொன்ஸ்டபிள்களும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு தனது நன்றியை பொலீஸ் மா அதிபர் தெரிவித்தார்.
பொலீஸ் மா அதிபருக்கும் அவரது உதவியாளருக்கும் தேநீரை வழங்கியவாறே பேசிய திருமதி அப்யங்கர், தான் தனது வீட்டில் தீப்பிடித்ததாக எவருக்கும் சொல்லவில்லை, அயலில் தீப்பற்றியிருக்கிறது என்றுதான் வெள்ளவத்தை பொலீஸாருக்கு அறிவித்தேன் என்று கூறினார்.
உடனேயே அவ்விட்டிலிருந்து ஜனாதிபதிக்குத் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்ட பொலீஸ் மா அதிபர், நிலைமையினை விளக்கி, திருமதி அப்யங்கர் பாதுகாப்பாகவே இருப்பதாகக் கூறினார்.
குணவர்த்தனவின் தகவல்கள் ஜெயார் நாட்டில் நடக்கும் அக்கிரமங்கள் குறித்து தெளிவாகவே தெரிந்து வைத்திருந்தார் என்பதையே கூறுகின்றன. கொழும்பில் நிலைமை மிக மோசமாகக் காணப்பட்டது. வீதிகளில் பல அரச திணைக்களங்களில் பணிபுரிந்து வந்த சிங்கள தொழிலாளர்கள் அத்திணைக்களங்களுக்குச் சொந்தமான பாரவூர்திகளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். சனமிகுதியால் பாரவூர்திகளின் பின் கதவினை கீழே இழுத்துவிட்டு அதன் மீதும் பயணம் செய்துகொண்டிருந்தனர். இவ்வாறு பயணித்துக்கொண்டே, "தமிழர்களை அடித்து விரட்டுங்கள், தமிழர்களைக் கொல்லுங்கள், சிங்களவர்களுக்கே வெற்றி" என்று கோஷமெழுப்பிக்கொண்டே சென்றனர்.
காலை 10 மணியளவில் சமூகத்திற்கும், மதத்திற்குமான மத்திய நிலையத்தின் இயக்குனர் பாதிரியார் திஸ்ஸ பாலசூரியர் டீன் வீதிக்குச் சென்று தனது தேவாலயத்தில் தஞ்சமடைந்திருக்கும் தமிழர்களை அகதிகள் முகாமிற்கு அழைத்துச் செல்ல வருமாறு வீதியில் சென்றுகொண்டிருந்த இராணுவ ட்ரக் வண்டிக்கு சைகை காண்பித்தார். இதனை அவதானித்த நவ சம சமாஜக் கட்சியின் லீனஸ் ஜயதிலக்க தமிழ் அகதிகளை இராணுவத்தினரிடம் கையளிக்க வேண்டாம் என்று தடுத்தார். "அவர்கள் சாதாரண இராணுவத்தினர் இல்லை, இராணுவ சீருடையில் பவனிவரும் அரச காடையர்கள். அவர்களிடம் தமிழர்களைக் கையளித்தால் நிச்சயம் கொன்றுவிடுவார்கள்" என்று கூறினார்.
லேக் ஹவுஸில் என்னுடன் பணிபுரிந்த சிங்கள நண்பர்கள் என்னுடன் பேசும்போது பல அரச அமைச்சர்கள் தமது தொகுதிகளில் இருந்து காடையர்கள் பலரை அரச வாகனங்களிலேயே கொழும்பிற்குக் கொண்டு வந்ததாகக் கூறினர். இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ்களும் இத்தேவைக்காகப் பாவிக்கப்பட்டன. இலங்கை மின்சார சபையின் பல வாகனங்களும் காடையர்களை கொழும்பிற்கு ஏற்றிவந்தன. அரச திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் வாகனங்களும் இத்தேவைக்காக அரச அமைச்சர்களால் பாவிக்கப்பட்டன. வீதிகளில் இராணுவ வாகனங்கள் தென்பட்ட போதெல்லாம், "சிங்கள் இராணுவத்திற்கு வெற்றி கிட்டட்டும்" என்று சிங்களக் காடையர்களும் மக்களும் உரக்கக் கோஷமிட்டனர்.
தமிழர்கள் மீது தாக்குதலை நடத்திக்கொண்டிருந்த காடையர்களுடன் பொலீஸாரும் இராணுவத்தினரும் இணைந்து செயற்பட்டனர். பியதாச பின்வரும் சம்பவத்தை ஆவணப்படுத்தியிருக்கிறார்,
"காலி வீதியும், டிக்மன்ஸ் வீதியும் சந்திக்கும் சந்தியில் உயிர்காக்க ஓடிக்கொண்டிருந்த ஆறு தமிழர்களைத் துப்பாக்கி முனையில் இராணுவத்தினர் மறித்து வைத்திருந்து அவர்கள் மேல் தாக்குதல் மேற்கொண்டனர். பின்னர் அப்பகுதிக்கு வந்த காடையர்களிடம் அவர்களைக் கையளித்தபோது, அவர்கள் தமிழர்கள் ஆறு பேரையும் அடித்துக் கொன்றதோடு இராணுவத்தினருடன் சேர்ந்து உடல்களைத் தீமூட்டி எரித்தனர்" என்று கூறுகிறார்.
எரிக்கப்பட்ட மினிபஸ், இனக்கொலை ஜூலை 1983
தமிழ்மக்கள் மீதான படுகொலைகளும், அவர்களின் சொத்துக்களை சூறையாடுதலும், சொத்தெரிப்புக்களும் தெகிவளை, கொகுவளை, கோட்டே, நாவலை, பேலியகொட மற்றும் ஏனைய பகுதிகளுக்கும் பரவின. இறுதியாக ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட வேளை கொழும்பு மாவட்டத்தின் பெரும்பாலான தமிழர்களின் வீடுகள் எரிந்துகொண்டிருந்தன.
இந்தியர்களுக்குச் சொந்தமான பல தொழிற்சாலைகள் தரைமட்டமாக்கப்பட்டன. உலக வங்கியிடமிருந்து கடன்பெற்ற ஒரே இலங்கையரான ஏ. வை ஞானம் என்பவருக்குச் சொந்தமான தொழிற்சாலைகள், மகராஜா நிறுவனத்துக்குச் சொந்தமான தொழிற்சாலைகள், சுமார் 4,000 சிங்களத் தொழிலாளர்கள் பணிபுரிந்துவந்த இந்திய புடவைத் தொழிற்சாலையான ஹிட்ரமணி உள்ளிட பல தொழிற்சாலைகள் தரைமட்டமாக்கப்பட்டன.யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தொழிலதிபரான கே குணர்டணம் என்பவருக்குச் சொந்தமான கே ஜி இன்டஸ்ட்ரீஸ் மற்றும் அவரது பல சினிமாக் கொட்டகைகள் எரித்துச் சாம்பலாக்கப்பட்டன. இலங்கையின் மிகப்பெரிய ஆடையுற்பத்தி நிறுவனமான ஹென்ட்லி காமன்ட்ஸ் உட்பட பல ஆடைத் தொழிற்சாலைகள் எரியூட்டப்பட்டன. இலங்கை அல்லது இந்தியத் தமிழர்களுக்குச் சொந்தமான அனைத்துச் சொத்துக்களும் தெளிவாக அடையாளம் காணப்பட்டு எரிக்கப்பட்டன.
இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி மற்றும் ஓமான் வங்கி என்பனவும் எரிக்கப்பட்டன. தமிழருக்குச் சொந்தமான கொழும்பில் இயங்கிவந்த அனைத்து சினிமா அரங்குகளும் எரிக்கப்பட்டன.
தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மற்றும் சர்வதேசச் செய்தியாளர்களின் கூற்றுப்படி இந்த வன்முறைகள் மிகக் கொடூரமாகவும், இரத்தக்களறி நிறைந்தும் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனது விசாரணைகளின்படி, தாக்குதல் குழுக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுருத்தல் யாதெனில், "உங்களின் தாக்குதல்கள் வேகமாகவும், துல்லியமாகவும் இருக்க வேண்டும்" என்பதுதான். தமிழர் மீதான இந்த திட்டமிட்ட இனக்கொலையினை நடத்தி முடிப்பதற்கு அரச உயர்பீடம் சிங்களக் காடையர்களுக்கு காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரையான நான்குமணிநேர அவகாசத்தினையே வழங்கியிருந்தது. ஆகவே, சிங்களக் காடைக்குழுக்களுக்குத் தலைமை தாங்கியவர்கள் சரியாக காலை 10 மணிக்குத் தாக்குதல்களை ஆரம்பித்ததுடன், சரியாக 2 மணிக்கு தாக்குதல்களை முடித்துக்கொண்டு பின்வாங்கத் தொடங்கினர். கொழும்பு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடந்தது இதுதான். 4 மணிநேரத்திற்கு தாக்குதல்கள் மட்டுப்படுத்தப்பட்டதனால்த்தான் சில வீடுகள் தப்பிக்க முடிந்தது. குறிப்பாக தாக்குதல் ஆரம்பித்த இடங்களில் இருந்து தொலைவில் அமைந்திருந்த தமிழரின் வீடுகள் சில இதனால் தப்பிக்கொண்டன.
திங்கள் காலை முதல் பிற்பகல் வரை ஜெயார் ஜனாதிபதி செயலகத்திலேயே தங்கியிருந்தார். பின்னர், மாலையாகியதும், இராணுவத் தலைமைச் செயலகத்தில் நடைபெறவிருந்த கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார். அக்கூட்டத்தில் பிரட்மண் வீரக்கோனும் சமூகமளித்திருந்தார். பொலீஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் பலரும் அக்கூட்டத்திற்கு வந்திருந்தனர். கூட்டம் நடந்துகொண்டிருக்கையில் சிறைச்சாலை ஒன்றில் படுகொலை ஒன்று நடந்திருப்பதாக செய்தி வந்திருப்பதாக பிரட்மன் வீரக்கோன் அங்கிருந்தவர்களைப் பார்த்துக் கூறினார்.