ஜெயவர்த்தனவுக்கு இந்திரா காந்தியிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு
1983 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று இலங்கையில் தமிழர்கள் மீது அட்டூழியங்கள் இழைக்கப்பட்டதாக செய்தி பரவியதும் தமிழகம் கொதிப்படைந்தது. சென்னை, மதுரை மற்றும் பிற நகரங்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தெருக்களில் இறங்கி ஜெயவர்த்தன அரசைக் கண்டித்தும், இனப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரதமர் இந்திரா காந்தி கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும் போராட்டம் நடத்தினர். இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நோக்கி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றது.
முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு. கருணாநிதி ஆகியோர் கொழும்பு அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். ராமச்சந்திரனின் அறிக்கையில், இலங்கைத் தமிழர்கள் மீதான அனுதாபத்தால் தமிழ்நாட்டில் உள்ள ஐம்பது மில்லியன் தமிழ் இதயங்கள் இரத்தம் சிந்துகின்றன என்று கூறியிருந்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதாகவும் உறுதியளித்தார். இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க பிரதமர் இந்திரா காந்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருணாநிதியின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்தியாவின் பிற பகுதிகளும் தமிழர் மீது நடத்தப்பட்ட படுகொலைகளை ஆத்திரத்துடன் எதிர்கொண்டன. தமிழர்களை படுகொலையில் இருந்து பாதுகாக்க இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் ராஜ் நரேன் இந்திரா காந்தியிடம் வலியுறுத்தினார். கலவரம் குறித்து ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் வேதனை தெரிவித்திருந்தார். கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே, உயர்மட்ட அளவில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு புது தில்லியைக் கேட்டுக் கொண்டார்.
எம்.ஜி.ராமச்சந்திரனும், கருணாநிதியும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளான லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளிலும் இந்த விவகாரத்தை அவையில் எழுப்புமாறு தங்கள் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினர். பிற்பகலில் அவை கூடியதும் உறுப்பினர்கள் இதையே முதல் விஷயமாக செய்தனர்.
லோக்சபாவில், உறுப்பினர்கள் ஜெயவர்த்தனே அரசாங்கம் செயலற்றதாகவும், கலவரக்காரர்களுக்கு உடந்தையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். கடும் நடவடிக்கை எடுத்து கொலைகளை தடுக்க வேண்டும் என இந்திரா காந்தியிடம் எம்.பி.க்கள் வேண்டுகோள் விடுத்தனர். இலங்கையுடனான இராஜதந்திர தொடர்புகளை துண்டிக்குமாறு தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் சி.டி.தண்டபாணி புதுடெல்லியை கேட்டுக் கொண்டார். கொழும்பில் சிங்களவர்கள் நடத்திய தாக்குதல்களின்போது இந்திய தொழில்கள் மற்றும் இந்திய வங்கிகள் எரிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இலங்கை நிலவரம் குறித்து விவாதிக்க ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் சிறப்புக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என திமுக எம்பி வி கோபாலசாமி (வைகோ) கேட்டுக் கொண்டார். இலங்கையுடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டிக்க வேண்டுமென்று அவர் முன்மொழிந்தார், மேலும் இலங்கையின் உயர்ஸ்த்தானிகரை "இரத்த வெறி பிடித்த அரசாங்கத்தின் முகவர்" என்று அழைத்த அவர், அவரை உடனடியாகத் திருப்பி அனுப்புமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். எம் கல்யாணசுந்தரம் பேசும்போது, “தமிழர்கள் மீதான தாக்குதல் இந்தியாவின் மீதான தாக்குதல்” என்றார். இந்தியா தமிழ் இளைஞர்களுக்கு அரசியல் புகலிடம் வழங்க வேண்டும் என்றும், அவர்கள் இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு தெரிவிக்க நாடு முழுவதும் உள்ள மாநிலங்களுக்குச் செல்வதற்கான வசதிகளையும் இந்தியா வழங்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் - நரசிம்ம ராவ்
ராஜ்யசபாவில், இலங்கையின் நிலைமையை அரசாங்கம் ஒரு கட்சி விஷயமாக கருதவில்லை என்று ராவ் கூறினார். இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த தேசமும் ஒன்றுபட்டுள்ளது, இத்தாக்குதல்களினால் ஏற்பட்டிருக்கும் அழிவுகள் மற்றும் பக்க விளைவுகள் குறித்து அரசாங்கம் முழுமையாக அறிந்துள்ளது என்றும் அவர் கூறினார். அவர் மேலும் கூறுகையில், “இலங்கைக்கு நெருங்கிய அண்டை நாடான நமது சொந்த நாட்டிற்கு விரும்பத்தாகாத விளைவுகளை இத்தாக்குதல்கள் ஏற்படுத்தக் கூடும் என்பதனால், நிலைமைகளை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகிறது" என்றும் கூறினார்.
இரு அவைகளிலும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிவி நரசிம்மராவ் பேசினார். லோக்சபாவில், இந்திய தூதரகத்தைச் சேர்ந்த சிலரும் தாக்கப்பட்டதாகக் கூறினார். "அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை," என்று அவர் கூறினார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி எரிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை சரிபார்க்க முயற்சிப்பதாக அவர் கூறினார்.
இந்திராவால் பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட அமைச்சரவைச் செயலாளர் அலெக்ஸான்டர், அங்கிருந்து பாராளுமன்றத்தில் நடப்பவற்றை அவர் தொடர்ச்சியாக இந்திராவுக்குத் தெரிவித்து வந்தார். பாராளுமன்ற உறுப்பினர்களின் உணர்வுகளை அடக்கும் வகையில் செயற்பட இந்திரா எண்ணினார். ஆகவே, தில்லியில் அப்பொழுது தங்கியிருந்த இலங்கைத் தூதர் சத்வாலை உடனடியாகக் கொழும்பு திரும்பப் பணித்தார். சென்னைக்கு தான் செய்யவிருந்த பயணத்தை இரத்துச் செய்த இந்திரா, உயர் மட்ட் அமைச்சரவை உபகுழு, அரசியல் நடவடிக்கைகள் குழு ஆகியவற்றை அன்று மாலை கூட்டி இலங்கையில் உருவாகியிருக்கும் நிலைமைகள் குறித்து ஆராய்ந்தார்.
பின்னர், இலங்கையில் இடம்பெற்றுவரும் இனவன்முறைகளைக் கண்டித்து அறிக்கையொன்றினை வெளியிட்டார் இந்திரா. மிக அண்மையில் அமைந்திருக்கும் நாடான இலங்கையில் இடம்பெற்றுவரும் நிகழ்வுகள் குறித்து இந்தியா கவலைப்படாது இருக்கமுடியாது என்று அவர் கூறியிருந்தார்.
அரசியல் விவகாரக் குழு மாலையில் கூடி இரண்டு தெரிவுகளை பரிசீலித்தது. முதலாவது ஒரு அரசியல் தெரிவு - நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ஜயவர்தனவிற்கு அழுத்தம் கொடுப்பது. இரண்டாவது இராணுவ நடவடிக்கை.
இந்திரா முதலாவது தெரிவையே விரும்பினார். அதன்படி, முதலாவதாக இந்திரா காந்தி ஜெயவர்த்தனாவுடன் தொலைபேசியில் பேசுவது என்றும் , நரசிம்மராவை கொழும்புக்கு அனுப்புவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. இரண்டாவதாக, ராவின் வருகைக்கு ஜெயவர்த்தனே சம்மதிக்க மறுத்தால், இராணுவ நடவடிக்கையினை முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
உடனடியாக இலங்கை மீது படையெடுப்பதற்கான அவசரத் திட்டத்தைத் தயாரிக்குமாறு இந்திராவால் பாதுகாப்புத் தலைவர்களிடம் கூறப்பட்டது. அந்த பணி செகுந்தராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட இந்திய ராணுவத்தின் தெற்கு கட்டளைக்குப் படைப்பிரிவிற்கு ஒதுக்கப்பட்டது. தில்லியில் தங்கியிருந்த அனைத்து மூத்த அதிகாரிகளும் இராணுவ அதிகாரிகளும் உசார்ப்படுத்தப்பட்டதுடன், பராட்ரூப்பர்களை இறக்கி விமான நிலையங்களை கைப்பற்றி, செயலிழக்கப் பண்ணுவதே இந்தியாவின் திட்டமாக இருந்தது. இதன்மூலம் ஜெயவர்த்தனவை வழிக்குக் கொண்டுவரலாம் என்று இந்திரா நம்பினார்.
இந்திரா காந்தி மாலை 4 மணியளவில் ஜெயவர்த்தனவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். புதன்கிழமை (ஜூலை 27). அந்த தொலைபேசி உரையாடலின் விபரங்கள் மறுநாள் வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டது. உரையாடலின் உள்ளடக்கம் பின்வருமாறு:
இந்திரா காந்தி: இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் படுகொலை செய்யப்பட்டதாக வதந்திகள் பரவி வருவதாக எனக்கு இங்கு வந்துள்ள செய்திகள் குறித்து நான் வருந்துகிறேன், கவலையடைகிறேன். இப்போது நடைபெற்று வரும் மக்களவையில் இதுகுறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன .
ஜயவர்தன: நானும் அதே அக்கறையுடன் இருக்கிறேன். கலவரத்தையும் அதன் விளைவுகளையும் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன்.
இந்திரா காந்தி: அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வழங்குவதன் மூலம் நான் உதவ விரும்புகிறேன்.
ஜெயவர்தன: இந்த வகையான சலுகைக்கு மிக்க நன்றி. தேவைப்பட்டால் நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
இந்திரா காந்தி: எனது வெளியுறவு அமைச்சர் ஸ்ரீ நரசிம்மராவ் இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொண்டால், நீங்கள் அவருடன் கலந்துரையாட முடியுமா?
ஜயவர்தன: உங்கள் வெளிவிவகார அமைச்சரை நான் வரவேற்கிறேன்.
ஜனாதிபதி ஜயவர்தன உடனடியாக சில அமைச்சர்களை, ஹமீட், அதுலத் முதலி, திஸாநாயக்க, ரணில் விக்கிரமசிங்க, பெஸ்டஸ் பெரேரா மற்றும் இன்னும் சிலரை – அழைத்து இந்திராவுடனான தனது தொலைபேசி உரையாடல் குறித்து அவர்களுக்கு அறிவித்தார். அதுலத்முதலியும் திஸாநாயக்கவும் ராவை உபசரிப்பதை எதிர்த்தனர். இது எதிர்காலத்தில் இந்தியா தலையிட இடமளிக்கும் என்றும் அவர்கள் வாதிட்டனர். ஹமீட் அவர்களை எச்சரித்தார். ராவை ஜெயார் வரவேற்கவேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். அந்த நிலைப்பாட்டிற்கு அவர் இரண்டு காரணங்களைக் கூறினார். முதலாவதாக, ராவை வரவேற்க ஜெயார் ஒத்துக்கொண்டார். இரண்டாவது, அப்படி ராவை ஜெயார் வரவேற்க மறுக்கும் பட்சத்தில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டினை எடுக்கும் என்று ஹமீட் எச்சரித்தார்.
அன்று மாலை கூடுதல் செயலாளர் சங்கர் பாஜ்பாயுடன் விமானப்படை விமானத்தில் ராவ் கொழும்பு சென்றார். ஹமீட் விமான நிலையத்தில் அவரை வரவேற்றார். அன்று மாலையே லோக்சபாவில் ராவின் கொழும்புக்கான பணியை இந்திரா காந்தி அறிவித்தார். ராவின் இலங்கை வருகையை அகில இந்திய வானொலி புதன்கிழமை இரவு செய்தித் தொகுப்பில் அறிவித்தது.
இந்திய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான இந்தியா ஹவுஸில் தங்கியிருந்த ராவ் மற்றும் பாஜ்பாய், ஜெயவர்த்தனவை வார்ட் பிளேஸில் உள்ள அவரது தனிப்பட்ட இல்லத்தில் காலை உணவின் போது சந்தித்தனர். 1983 ஜூலை 31 வார இறுதியில் சிங்க ரத்ணதுங்க தனது கட்டுரையில் விவாதங்கள் பற்றிய சில தகவல்களைத் தந்தார். ரத்ணதுங்க ஜெயவர்த்தனாவுடன் நெருக்கமாக இருந்ததால் இலங்கை அதிபருக்கு ஆதரவாக தகவல்களைச் சேகரித்திருந்தார். ஆனால், அவரது தகவல்கள் சரியானவைதான் என்று என்னுடன் அந்நாட்களில் தொடர்பில் இருந்த தூதர் சத்வால் உறுதிப்படுத்தினார். ஹமீதும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாக அவர் கூறினார்.
ஜெயவர்த்தனா, ராவை அரவணைப்புடன் வரவேற்று, இந்தியா மற்றும் அதன் தலைவர்கள் மீதான அவரது அபிமானத்தையும் நெருக்கத்தையும் பற்றி அவரிடம் கூறி உரையாடலைத் தொடங்கினார். "இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் போற்றிய பல இலங்கையர்களில் நானும் ஒருவன்" என்று ஜெயவர்த்தனே கூறியதுடன், இந்தியர்களை விட தமிழ் மக்களின் உணர்வுகளை அவர் புரிந்துகொண்டதாக ராவிடம் பதிய முயன்றார். மேலும்,கலவரம் ஆரம்பித்ததற்கான காரணம் என்று அரசால் கூறப்பட்டதை ராவிடம் விளக்கிய ஜெயார், அதற்கான முழுக் காரணத்தையும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மீதும், புலிகள் மீதும் சுமத்தினார். மேலும், இலங்கையின் உள்விவகாரத்தில் இந்தியா தேவையற்ற விதத்தில் தலையிடுவதாக இலங்கை உணர்வதாகவும் ராவிடம் ஜெயார் தெரிவித்தார். ராவ் ஜெயவர்த்தனாவை குறுக்கிட்டு, "இல்லை, இல்லை- அப்படி எதுவும் இல்லை" என்று மறுத்தார்.
இந்த கலவரம், அனைத்து இந்தியர்களினதும், குறிப்பாக தமிழர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டதாக ஜெயவர்த்தனாவிடம் ராவ் மிக உறுதியாக கூறினார். இலங்கையில் ஸ்திரமற்ற நிலை இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எடுத்துரைத்தார். இலங்கையில் உள்ள இந்தியர்களின் உயிர்கள் மற்றும் உடைமைகள் மீதான இந்தியாவின் உண்மையான கரிசணையினையும் அவர் ஜெயவர்த்தனவிடம் தெரிவித்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும், இந்தியர்களுக்குச் சொந்தமான 17 தொழிற்சாலைகளும் எரிக்கப்பட்டதாக ராவ் மேலும் ஜெயாரிடம் முறையிட்டார்.
ஜெயவர்த்தனே சாமர்த்தியமாக புது டெல்லிக்கும் சென்னைக்கும் இடையே விரிசல் ஒன்றினை ஏற்படுத்த முனைந்தார். இந்திரா காந்தி தமிழகத்தை அமைதிப்படுத்தவே முயல்கிறாரே அன்றி, இலங்கைத் தமிழர் குறித்து புதுதில்லி உண்மையிலேயே அக்கறை காட்டவில்லை என்று ஜெயார் ராவிடம் கூறினார். ஆனால், ஜெயாரின் தந்திரத்தைப் புரிந்துகொள்ளாத வாஜ்பாய், அப்பாவியாக ஜெயாரிடம் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையான இலங்கைக்கு எப்படி உதவலாம் என்று கேட்டபோது, அதற்கு உடனடியாகவே பதிலளித்த ஜெயார், "அவர்கள் அங்கே தடுத்து வைத்திருக்கும் பயங்கரவாத சந்தேக நபர்களை இங்கே அனுப்புவதன் மூலம் இலங்கைக்கு உதவலாம்" என்று நறுக்கென்று பதிலளித்தார். பின்னர் சிறு இடைவெளிவிட்டு, "நாங்கள் அவர்களை எமது நீதிமன்றங்களில் விசாரிக்கிறோம்" என்று கூறினார்.
“திருமதி காந்திக்கு ஒரு சிறப்புச் செய்தியாக நான் ஏதாவது தெரிவிக்க விரும்புகிறீர்களா?” என்ற கேள்வியுடன் கூட்டத்தை நிறைவு செய்ய விரும்பினார் ராவ்.
சிறிது நேர அமைதிக்குப் பின்னர் பேசிய ஜெயார், "அப்படியானால்....." என்று கூறத் தொடங்குமுன்னமே, "சொல்லுங்கள்" என்று ராவ் அவசரப்பட்டார்.
"எனது நட்பினை அவ்ரிடம் தெரிவித்து விடுவீர்களா?" என்று பவ்வியமாகக் கேட்டர் ஜெயார்.
அதிலிருந்த சூட்சுமத்தை உணர்ந்துகொண்ட ராவ், அதை அப்படியே இந்திராவிடம் தெரிவித்தார்.
பிரதமர் பிரேமதாசவும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு விஷமச் செய்தியொன்றை வழங்கினார். பிரேமதாசாவை மரியாதை நிமித்தமாக சந்திப்பதற்கு ராவ் கேட்டிருந்தார். . அவர் ராவை 20 நிமிடங்கள் அதிதிகள் அறையில் காத்திருக்க வைத்தார். பின்னர் அவர் இலங்கை விவகாரங்களில் இந்தியா தலையிட முயற்சிப்பதற்காக, கிட்டத்தட்ட திட்டும் வகையில் பேசினார். "தமிழகத்தில் ஏற்பட்டுள்ள எதிர்வினையை சமாளிப்பது இந்திரா காந்தியின் வேலை" என்று அவர் ராவிடம் கூறினார். "அது அவருடைய பிரச்சினை, எங்களுடையது அல்ல" என்று பிரேமதாச ராவிடம் கூறினார். கலவரத்தை இலங்கையின் உள்விவகாரமாக இந்தியா பார்க்கவில்லை என்றும், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதிக்கக்கூடிய பிரச்சினையாக பார்க்கிறது என்றும் இந்திய அமைச்சர் பிரேமதாசாவிடம் உறுதியாக கூறினார். அன்றைய பிரேமதாசாவின் நடத்தை அவர் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறையில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று ஜே.என்.தீட்சித் தனது அசைன்மென்ட் கொழும்பு என்ற புத்தகத்தில் பின்னாட்களில் எழுதியிருந்தார்.
அகதிகள் முகாம்களுக்குச் செல்லுமாறு ராவ் விடுத்த கோரிக்கை வெளியுறவு அமைச்சகத்தால் நிராகரிக்கப்பட்டது. இந்த கோரிக்கை குறித்து ஜெயவர்தனவிடம் ஆலோசனை நடத்தியதாக ஹமீட் என்னிடம் கூறினார். ராவை அகதிகள் முகாமுக்குச் செல்ல அனுமதிப்பது இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு சமம் என்று கூறி அதை நிராகரிக்குமாறு ஜெயார் ஹமீதிடம் கூறியிருந்தார். ஹமீட் கண்ணியமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். அகதிகள் முகாம்களை அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும், அகதிகள் பதற்றத்தில் இருப்பதாகவும் கோரிக்கை விடுத்த இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் அவர் தெரிவித்தார். "சில நாட்களில் விஷயங்கள் தணிந்துவிடும்," என்று அவர் தனது இந்தியப் பிரதிநிதியிடம் கூறினார்.
மலையகத்தில் சேதமடைந்த பகுதிகளை பார்வையிடவும் அனுமதி மறுக்கப்பட்டது. கண்டிக்குச் சென்று அங்குள்ள பிரதி இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்திக்க மட்டுமே அவர் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.