அலன் தம்பதிகளை விடுவிக்க நேரடியாக செயலில் இறங்கிய இந்திரா
வெள்ளியன்று அதுலத் முதலி கொழும்பு மாநகரசபை கேட்போர் கூடத்தில் பத்திரிக்கையாளர் மாநாடொன்றினைக் கூட்டியிருந்தார். அந்த மாநாட்டிற்கு நானும் சென்றிருந்தேன். அலன் தம்பதிகள் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு தன்னால் நீண்ட மெளனத்தைத் தவிர சொல்வதற்கு வேறொன்றுமில்லை என்று கூறினார் அவர். தொடர்ந்து பேசிய அவர், இக்கடத்தல் தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணிக்க யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் இரு அவதானிப்பு நிலையங்களைத் தாம் நிறுவியிருப்பதாகக் கூறினார். அதன் பின்னர் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஸ்கன்டிநேவிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மக்களை வடக்கிற்குச் செல்லவேண்டாம் என்று அறிவுருத்தினார்.
"இந்த நாடுகளில் வாழுகின்ற புலம்பெயர்ந்த தமிழர்களே இந்த நாட்டில் பயங்கரவாதாம் செயற்பட பணம் வழங்கி வருகிறார்கள்" என்று அவர் கூறினார். "தாம் வாழும் நாடுகளின் பிரஜைகளைக் கடத்துவதற்கு பயங்கரவாதிகளுக்கு அவர்களே பணம் கொடுத்து உதவுகிறார்கள்" என்றும் அவர் கூறினார். மேலும், இலங்கை இக்கடத்தல்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறினார்.
"இக்கடத்தைல்ச் சம்பவம் இரு விடயங்களை இலங்கைக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சென்றிருக்கிறது. முதலாவது, அமெரிக்கா இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக துடைத்தழிக்க இலங்கைக்கு உதவ வேண்டும் என்பது. இரண்டாவது, இலங்கையில் செயாற்பட்டு வரும் பயங்கரவாதிகளுக்கு தமிழ்நாடே அடைக்கலம் கொடுத்து வருகிறது என்பது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இக்கருத்துக்கள் இந்தியாவை அவமானப்பட வைத்தன. அமெரிக்க உதவி ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் இந்தியாவுக்கான உத்தியோக பூர்வப் பயணத்தை வைகாசி 12 ஆம் திகதி ஆரம்பிக்கவிருந்த நேரத்தில் இரு அமெரிக்கர்களின் உயிர்கள் அச்சுருத்தலுக்கு உள்ளாகியிருந்தன. ஆகவே, இந்திரா காந்தி தனிப்பட்ட ரீதியில் இவ்விடயம் தொடர்பாகச் செயற்பட எண்ணினார். உடனேயே தொலைபேசியூடாக எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்ட இந்திரா "அலன் தம்பதிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாதவாறு ஈ.பி.ஆர்.எல்.எப் இனரைப் பார்க்கச் சொல்லுங்கள்" என்று பணித்தார். எம்.ஜி.ஆரு உம் உடனடியாகவே இந்தச் செய்தியை பத்மநாபாவிடம் தெரிவித்தார்.
கே.பத்மநாபா
றோ செயலில் இறங்கியது. அமெரிக்க தம்பதிகள் விடுவிக்கப்படவில்லையென்றால் ஈ.பி.ஆர்.எல். எப் இன் தலைவர்கள் அனைவரும் நாடுகடத்தப்படுவார்கள் என்று அவர்களை மிரட்டியது.
சனிக்கிழமை அன்று ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர்கள் மீதான றோவின் அழுத்தம் மேலும் அதிகரித்தது. அகில இந்திய வானொலிச் சேவையின் சென்னை நிலையத்திலிருந்து "மனிதாபிமான ரீதியில் அலன் தம்பதிகளை விடுவியுங்கள்" என்கிற இந்திரா காந்தியின் கோரிக்கை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறையென்று தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வந்தது. அன்று மாலை இந்திய உளவுத்துறையினரிடமிருந்து பத்மநாபாவுக்கு வந்த கையொப்பம் இடப்படாத கடிதத்தில், "அலன் தம்பதிகளை விடுவியுங்கள், உங்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் நான் செய்து தருகிறேன்" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இக்கடத்தல்ச் சம்பவம் நடைபெற்று பல வருடங்களுக்குப் பின்னர் என்னுடன் பேசிய டக்கிளஸ் தேவானந்தாவும், ரமேஷும், இந்திரா காந்தியிடமிருந்து வந்த கடிதத்தின் பின்னரே அலன் தம்பதிகளை விடுவிப்பதற்கான முடிவினைத் தாம் எடுத்ததாகக் கூறினர். இந்திரா காந்தியைப் பலதடவைகள் சந்தித்திருந்த பத்மநாபா அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார்.
சனிக்கிழமை பின்னிரவு வேளையில் அலன் தம்பதிகள் விடுவிக்கப்பட்டனர். யாழ்ப்பாண ஆயர் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள் அங்கு வைத்து விடுவிக்கப்பட்டிருந்தனர். கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவராலயத்தின் அதிகாரிகள் அலன் தம்பதிகளை 13 ஆம் திகதி கொழும்பிற்கு அழைத்துவந்ததுடன், மறுநாள் பத்திரிக்கையாளர் சந்திப்பையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர். அமெரிக்கத் தகவல் தினைக்களக் கேட்போர் கூடத்தில் பல பத்திரிக்கையாளர் சமூகமளித்திருக்க அந்தக் கூட்டம் நடைபெற்றது. செய்திகளைச் சேகரிப்பதற்காக நானும் அங்கு சென்றிருந்தேன்.
மிகச் சரளமாகப் பேசிய ஸ்டான்லி தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் தயக்கமின்றி, வெளிப்படையாகப் பதிலளித்தார். பிக்கப் வாகனத்தின் பின்னிருக்கையில் முகத்தைத் தரையில் அழுத்தியபடி தம்மைப் படுக்கவைத்து அரைமணிநேரம் ஓட்டிச் சென்றதாக அவர் கூறினார். ஆனால், சிறிது நேரத்தின்பின்னர் தாம் ஒரே இடத்தைப் பலமுறை சுற்றிவந்துகொண்டிருப்பது தமக்குப் புலப்பட்டதாகவும், நீண்டதூரம் தம்மைக் கடத்திச் செல்வது போன்ற பிரமையினை ஏற்படுத்தவே அவ்வாறு அவர்கள் நடப்பதை தாம் உணர்ந்துகொண்டதாகவும் கூறினார். "உண்மையயைகச் சொல்லப்போனால், நாம் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்கு மிக அருகிலிருந்த வீடொன்றிலேயே நாம் தங்கவைக்கப்பட்டிருந்தோம் என நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறினார்.
தம்மை மிகவும் கண்ணியமாக அவர்கள் நடத்தினார்கள் என்று மேரி கூறினார். "நாம் ஒருபோதும் துன்புறுத்தபடவில்லை" என்று அவர் மேலும் கூறினார். தமிழ்ப் பிரிவினைவாதிகள் கொடூரமானவர்கள் என்பதனைக் காட்ட அவர்களிடமிருந்து ஏதாவதொரு செய்தியை எடுத்துவிடலாம் என்கிற நோக்கில் கொழும்பு ஊடகங்கள் துருவித் துருவி கேள்விகளைத் தொடுத்துக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது.
நாம் பயங்கரவாதிகள் இல்லையென்று தம்மிடம் அவர்கள் தெரிவித்ததாக மேரி கூறினார். "நாங்கள் விடுதலைப் போராளிகள், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நாம் போராடுகிறோம்" என்று அவர்கள் கூறினார்கள் என்று மேலும் அவர் தெரிவித்தார். "நாங்கள் பயங்கரவாதிகளாக இருந்திருந்தால் உங்களை கொன்றிருப்போம், மரியாதையாக நடத்தவேண்டிய தேவை எமக்கு இருந்திருக்காது" என்றும் அவர்கள் கூறியதாக அவர் தொடர்ந்தார்.
அலன் தம்பதிகளின் கடத்தல்ச் சம்பவம் இறுதியில் சுபமாக முடிந்தது. சில நாட்களின் பின்னர் அவர்கள் அமெரிக்காவுக்குத் திரும்பியிருந்தார்கள். ஆனால், இந்தக் கடத்தல்ச் சம்பவம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே கசப்புணர்வினை ஏற்படுத்தியிருந்தது.
அதுலத் முதலியும் பிரேமதாசவும் இதுகுறித்து இந்தியாவைத் தொடர்ச்சியாக விமர்சித்தே வந்தனர். மேலும் தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்குப் பயிற்சியளித்து, ஆயுதங்களைக் கொடுத்து இலங்கையைத் துண்டாட இந்தியா உதவிவருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். பிரேமதாசாவோ ஒருபடி மேலே சென்று பஞ்சாப்பில் பிரிவினை கோரிப் போராடும் சீக்கியர்களை அடக்கி ஒடுக்கும் இந்திய அரசு, இலங்கையில் பிரிவினை கோரிப் போராடும் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு உதவிவருவது நயவஞ்சகம் என்றும் தெரிவித்தார். இது இந்தியாவின் உணர்வுகளை வெகுவாகப் பாதித்திருந்தது. மேலும், சீக்கியப் பிரிவினைவாதிகளைப் பயங்கரவாதிகள் என்று அழைக்கும் இந்தியா தமிழ்ப் பிரிவினைவாதிகளை விடுதலைப் போராளிகள் என்று அழைப்பது நகைப்பிற்கிடமானது என்று அவர் தெரிவித்தார்.
பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரேமதாச, "அவர்கள் கொலைகாரர்கள், கடத்தல்க்காரர்கள், திருடர்கள் என்பது இந்தியாவுக்கு நன்கு தெரியும்" என்று கூறினார். இப்பேச்சு இந்தியாவை ஆத்திரங்கொள்ள வைத்திருந்தது. "இலங்கையின் மக்களுக்கும், அரசாங்கத்திற்கு அளவுக்கதிகமான உதவிகளையும், நிவாரணங்களையும் வழங்கிவரும் நட்புநாடான இந்தியா மீது இலங்கையின் அரசியற்பிரமுகர்கள் மிகவும் அபாண்டமான முறையில் பழிசுமத்துவது அதிர்ச்சியையும் வேதனையினையும் அளிக்கிறது" என்று இந்தியா பிரேமதாசாவின் பேச்சுக் குறித்து கருத்துத் தெரிவித்தது.