துரோகத்தின் நாட்காட்டி : நாள் 24, மார்கழி 2005
பிரேமினியைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வின் பின்னர் கூறுபோட்டுக் கொன்றுதள்ளிய கறுனா குழு
வெலிக்கந்தைப் பகுதியில் 24 ஆம் திகயிலும் சில நாட்களுக்குப் பின்னரும் கருணா துணைராணுவக் குழுவினரால் கடத்தப்பட்ட 10 தமிழர் புனர்வாழ்வுக் கழக ஊழியர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உடபட மூவர் கடத்தல்காரர்களால் விடுவிக்கப்பட்ட நிலையில், மீதி ஏழு பேரினதும் கதிபற்றி தெரியாமலேயே இருந்துவந்தது.
ஆனால், இக்கடத்தல் சம்பவத்தின் பின்னர் கருணா குழுவில் இயங்கிய ஒருவர் வழங்கிய தகவல்களின்படி அந்த ஊழியர்களுக்கு நடந்த கொடூரம் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது.
இலங்கை ராணுவத்தின் புலநாய்வுத்துறையினரால் இயக்கப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் இயற்பெயர் கொண்ட பிள்ளையான் என்றழைக்கப்பட்ட ஒருவனே இக்கடத்தல்களின் பின்னால் இருப்பது தெரியவந்திருக்கிறது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்கிற பெயரில் அரச படைகளின் கொலைக்குழுவாக இயங்கும் இவன் தலைமையிலான கூலிப்படையே இக்கடத்தல் கொடூரத்தில் ஈடுபட்டது. மட்டக்களப்பு வீரகேசரி நிருபர் நடேசன், பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் பரராஜசிங்கம் ஆகியோரின் கொலைகளுடன் நேரடியான தொடர்பினை பிள்ளையான் கொண்டிருக்கிறான். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அமைப்பிற்கும் இலங்கை ராணுவப் புலநாய்வுத்துறைக்கும் இடையிலான முக்கிய இணைப்பாக இவனே இருக்கிறான். அத்துடன் கொழும்பில் பல தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு கப்பமாக பல மில்லியன் ரூபாய்கள் அறவிடப்பட்ட நிகழ்வுகளிலும் இவனே தலைமைதாங்கிச் செயற்பட்டிருக்கிறான்.
தீவுச்சேனை எனும் கிராமம், பொலொன்னறுவை மாவட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் அமைந்திருக்கிறது. இப்பகுதியினை ஒட்டிய காட்டுப்பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழு பல முகாம்களை அமைத்து வந்தது. இந்த முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த கொலைக்குழுவிற்கு பிள்ளையானிடமிருந்து குறித்த தினத்தன்று முக்கிய செய்தியொன்று தொலைபேசி மூலம் வந்தது. அம்முகாமின் பொறுப்பாளனாக இருந்த சிந்துஜன் எனும் துணைராணுவக்குழு உறுப்பினன் தலைமையிலான கொலைக்குழுவிற்கு பிள்ளையானிடமிருந்து வந்த கட்டளையினையடுத்து சிந்துஜன் எனப்படும் பிரதீபன் தலைமையில் கடத்தல்க் குழு உருவாக்கப்பட்டது, இக்குழுவில் ஜெயந்தன், குமார், புலேந்திரன், சிரஞ்சீவி, யோகன் ஆகிய கொலைகாரர்களும் இருந்தனர்.
கடத்தப்பட்டவர்களின் மூன்று பெண்களை இக்கொலைக் குழுவின் புலநாய்வுக்குப் பொறுப்பான சீதா எனப்படு பிரதீப்பும் இன்னும் இருவரும் சேர்ந்து விசாரித்துவிட்டு விடுதலை செய்தார்கள். இந்த சீதாவே பிள்ளையானின் உதவியுடன் நத்தார் தினத்தன்று பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் பரராஜசிங்கத்தை ஆலயத்தில் வைத்துச் சுட்டுக் கொன்றவன் என்பதும் குறிப்பிடத் தக்கது.
தெல்லிப்பழையைச் சேர்ந்த கணேசலிங்கம், கிளிநொச்சியைச் சேர்ந்த தங்கராசா ஆகிய இரு ஊழியர்களை விசாரித்த சிந்துஜன் அவர்களை தலையில் சுட்டுக் கொன்றான்.
விடுவிக்கப்பட்ட நடேஸ்வரியும், சிவமதியும் பொலிஸாருக்கு வாக்குமூலம் கொடுக்கவேண்டிய தேவை இருந்தது. தமது கைதுபற்றி விடயம் தெரிவிக்க பொலீஸ் நிலையம் சென்ற இவர்களை பொலீஸ் வேண்டுமென்றே அலைக்கழித்துக்கொண்டிருந்தது. பின்னர் இவர்கள் கொழும்பிற்குச் சென்று மனித உரிமைகள் அமைப்பிடம் தமது முறையீட்டைப் பதிவுசெய்தார்கள்.
மறுநாள் இதே கொலைக் கும்பல் இன்னும் 15 கழக உறுப்பினர்களைக் கடத்திச் சென்று, விசாரணையின் பின்னர் 10 பேரை விடுதலை செய்தது.
இக்கொலைக் குழுவால் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்ட ஊழியர்களின் விபரங்கள்,
அருனேஸ்வரராஜா சதீஸ்வரன்
கைலாயப்பிள்ளை ரவீந்திரன்
சண்முகனாதன் சுஜேந்திரன்
தம்பிராஜா வசந்தராஜன்
பிரேமினி தனுஷ்கோடி
நான்கு ஆண் ஊழியர்களை கடுமையாகச் சித்திரவதை செய்து விசாரித்த சிந்துஜன் எனும் கொலைகாரன் அவர்களைக் கொண்டே புதைகுழிகளை வெட்டுவித்தான். அவர்கள் தமக்கான குழிகளை வெட்டி முடிந்தவுடன் முழங்காலில் இருக்கவைக்கப்பட்டு அழுத மன்றாடிய நிலையிலேயே அவர்களை தலையில் சுட்டுக்கொன்று குழிக்குள் வீழ்த்தி மூடினார்கள்.
மீதியாக இருந்த பிரேமினிக்கு நடந்த கதியோ மிகவும் கோரமானது. தமிழ்ப்பெண்கள் மீது சிங்களப் பேரினவாத ராணுவ மிருகங்கள் நிகழ்த்தும் கொடூரத்திற்குச் சற்றும் குறையாத வகையில் கருணா குழு மிருகங்கள் நடந்துகொண்டன. முதலில் சிந்துஜன் எனும் மிருகத்தினாலும், பின்னர் அங்கிருந்த அனைத்து துணை ராணுவக்குழு மிருகங்களாலும் கூட்டாகப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட பிரேமினியின் அரை உயிருடன் துடித்துக்கொண்ட உடலை அந்த மிருகங்கள் வாள்களால் கீலங்களாக வெட்டி அக்காட்டுப் பகுதியில் தூக்கியெறிந்தன.
**********"
https://www.tamilnet.com/img/publish/2007/03/TRO_release.pdf