பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் அமீரின் திடீர் முடிவினை விமர்சித்த இயக்கங்கள்
பேச்சுவார்த்தைகளில் மீளவும் ஈடுபடப்போவதாக அமிர்தலிங்கம் அறிவித்ததையடுத்து ஆயுத அமைப்புக்கள் அவர் மீது மிகக் கடுமையான விமர்சனங்களை வெளியிடத் தொடங்கின. தமிழ் மக்களின் இலட்சியத்திற்கெதிரான துரோகி என்று அவரை அழைக்கத் தலைப்பட்டன. தமிழர்களை ஏமாற்றவே ஜெயார் முயல்கிறார் என்று கூறிய இயக்கங்கள், அமிர்தலிங்கம், ஜெயாருடன் பேச்சுக்களில் ஈடுபடக் கூடாதென்று வற்புறுத்தின. தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினை முற்றாக நசுக்கிவிடும் நோக்கத்திற்காக தனது இராணுவத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கைக்கு கால அவகாசம் தேடவே ஜெயார் பேச்சுக்களை பயன்படுத்தப்போகிறார் என்று புலிகள் இயக்கம் சென்னையிலிருந்து அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தது. ஆகவே இச்சதிக்குத் துணைபோக வேண்டாம் என்றும் அமிர்தலிங்கத்தை புலிகளின் அறிக்கை கோரியிருந்தது.
பிரபாகரனைச் சந்தித்த அமிர்தலிங்கம்
ஆகவே, தனது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்துவதற்காக அமிர்தலிங்கம் பிரபாகரனைச் சந்தித்தார். ஒரு திட்டத்திற்கு அமையவே இந்திரா காந்தி செயற்பட்டுவருவதாக பிரபாகரனிடம் தெரிவித்தார் அமிர். அத்திட்டத்தின் ஒரு அங்கமாகவே ஜெயாருடனான பேச்சுக்களில் ஈடுபடுமாறு தன்னை இந்திரா கேட்டுக்கொண்டதாக அமிர் கூறினார். தனது நெறிப்படுத்தல்களுக்கு அமைவாகச் செயற்படுமாறு இந்திரா தன்னைக் கேட்டிருப்பதாக அவர் மேலும் கூறினார். தனது இக்கட்டான நிலையினைப் புரிந்துகொள்ளுமாறு அமிர் பிரபாகரனிடம் வேண்டிக்கொண்டார். ஆனால், அமிர் மீதான விமர்சனங்களை புலிகளோ அல்லது வேறு இயக்கங்களோ கைவிடவில்லை. பிரபாகரனைச் சென்று சந்தித்தமைக்காக அமிர்தலிங்கத்தைக் கடுமையாகச் சாடத் தொடங்கினார் ஜெயார்.
ஆயுத அமைப்பொன்றினை உருவாக்கிய அமிர்தலிங்கமும் அவரது புதல்வன் பகீரதனும்
தமிழ் ஈழத் தேசிய இராணுவம் எனும் ஆயுத அமைப்பினை அமிரின் மகனான பகீரதன் ஆரம்பித்திருந்ததும் உண்மைதான். இந்தியாவின் ஆயுத மற்றும் பயிற்சி உதவிகளினூடாக ஆயுத அமைப்புக்கள் பலம் பெற்று விடும் என்றும், இதனால் தமிழர்களின் தலைமைக்கான போட்டியில் தாம் தோற்றுவிடக் கூடும் என்கிற அமிரின் அச்சத்தினாலேயே பகீரதனின் ஆயுத அமைப்பு உருவாக்கப்பட்டது என்றால் அது மிகையில்லை. மேலும், ஆயுத அமைப்புக்களுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுத்துவிடலாம் என்கிற அமீரின் அச்சமும் அவரது புதல்வனின் ஆயுத அமைப்பின் உருவாக்கத்திற்குக் காரணமாக அமைந்தது.
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கென்று தனியான ஆயுத அமைப்பொன்றினை உருவாக்குவதே தமிழ் மக்கள் மீதான செல்வாக்கினைத் தக்கவைத்துக்கொள்ளவும், தலைமைப்பதவிக்கான போட்டியினை சமாளிக்கவும் ஒரே வழியென்று அமிர் நம்பினார். ஆகவேதான் தமது கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் ஆயுத அமைப்பொன்று இயங்கவேண்டும் என்று அமிர்தலிங்கமும், பகீரதனும் முடிவெடுத்தார்கள். இதன் அடிப்படையிலேயே பகீரதனால் தமிழ் ஈழத் தேசிய இராணுவம் என்கிற ஆயுத அமைப்பு உருவாக்கப்பட்டது. லண்டனில் உள்ள தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் கிளை மூலம் சேர்க்கப்பட்ட நிதியினைக் கொண்டு மதுரையில் 13 ஏக்கர்கள் நிலம் பகீரதனால் தனது ஆயுத அமைப்பின் பயிற்சி நடவடிக்கைகளுக்கென்று வாங்கப்பட்டது. இந்த அமைப்பினர் அக்காலத்தில் ஆயுதங்கள் எவற்றையும் கொண்டிருக்காமையினால் அவர்களுக்கான பயிற்சித் திட்டம் ஒன்று அப்போது இருந்திருக்கவில்லை. ஆகவே, இவ்வமைப்பில் ஆரம்பத்தில் சேர்ந்துகொண்ட இளைஞர்களும் பிற்காலத்தில் விரக்தியடைந்து அவ்வியக்கத்திலிருந்து விலக ஆரம்பித்தார்கள். அமிர்தலிங்கத்தினாலும், பகீரதனாலும் ஆரம்பிக்கப்பட்ட ஆயுத அமைப்பின் மிகச்சிறிய ஆயுட்காலத்தின் சரித்திரம் இதுதான்.
இந்த ஆயுத அமைப்பினை ஏனைய அமைப்புக்கள் எள்ளி நகையாட ஆரம்பித்தன. "அகிம்சையே எமது மூச்சு, ஆயுதங்களைத் தூர எறியுங்கள் என்று கோஷமிடும் தலைவர்கள் தமக்கென்று ஆயுத அமைப்பொன்றினை உருவாக்குவது ஏன்?" என்று அவர்கள் கேள்வியெழுப்பினர். ஆகவே. பகீரதனால் எழுதப்பட்ட அக்கடிதங்களை அமிர்தலிங்கத்தை அரசியலில் ஓரங்கட்டும் நடவடிக்கைகளுக்கு ஜெயார் பாவித்தார்.
இரு தினங்களுக்குப் பின்னர், அதாவது புரட்டாதி 19 ஆம் திகதியன்று அதுவரையில் அமிர்தலிங்கத்தின்மீது முன்வைக்கப்பட்டு வந்த பிரச்சாரங்கள் திடீரென்று நிறுத்தப்பட்டன. புரட்டாதி 18 ஆம் திகதி தில்லியில் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் மற்றும் சம்பந்தன் ஆகியோருடன் இந்திரா காந்தி மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் மாநாடொன்றில் அவர் வெளியிட்ட மிகவும் காட்டமான அறிக்கையே விமர்சனங்கள் நிறுத்தப்படக் காரணமாகியது என்று எமக்கு சொல்லப்பட்டது.
அந்த அறிக்கையில் இலங்கையில் மிகவும் அபாயகரமான சூழ்நிலை ஒன்று உருவாகி வருவதாக அவர் கூறியிருந்தார். அதற்கான காரணங்களாக பின்வருவனவற்றை அவர் முன்வைத்திருந்தார்,
1. மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகப்பெரியளவிலான சிங்களக் குடியேற்றம் ஒன்று முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.
2. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் பாராளுமன்றத்தில் தமது ஆசனங்களை இழந்து வருகின்றார்கள்.
3. பேச்சுவார்த்தைகளை வேண்டுமென்றே இலங்கையரசு இழுத்தடித்து வருகிறது.
ஆகவே, பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்க தனது விசேட தூதுவர் பார்த்தசாரதியை கொழும்பிற்கு அனுப்பவிருப்பதாக இந்திரா தெரிவித்தார்.
பாராளுமன்ற ஆசனங்களை இழந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர்
ஆறாம் திருத்தச் சட்டத்திற்கமைய, இலங்கையின் ஒற்றையாட்சி நடைமுறையினை முழுதாக ஏற்றுக்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள வேண்டும் அல்லது பதவிகளை அவர்கள் இழக்க நேரிடும் என்கிற அரசின் கட்டளையின்படி கார்த்திகை 4 ஆம் திகதி தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை இழந்தார்கள். அதுவரை அமிர்தலிங்க்கம் வகித்துவந்த எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பதவியும் இதன்மூலம் காலியாகியது. 34 வயதே நிரம்பியிருந்த அநுர பண்டாரநாயக்க அமிர்தலிங்கம் வகித்துவந்த எதிர்க்கட்சித் தலைவர் எனும் பதவிக்குத் தெரிவானார்.
1977 ஆம் ஆண்டுப் பாராளுமன்றத் தேர்தலில் தனக்குக் கிடைத்த ஆறில் ஐந்து பெரும்பான்மையினைப் பாவித்து ஆட்சி செய்துவந்த ஜெயார், அனுபவம் இல்லாத எதிர்க்கட்சித் தலைவர ஒருவரை எதிர்கொண்டதன்மூலம் பாராளுமன்றத்தின்மீதான தனது செல்வாக்கினை முழுமையாக்கிக் கொண்டார். அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தகாலத்தில் தனக்கு அஞ்சி அடிபணிந்து நடக்கவேண்டும் என்று ஜெயார் எதிர்பார்த்தார். ஆனால், அது நடவாது போகவே அமிரின் அரசியல் இருப்பை எப்படியாவது அழித்துவிட கங்கணம் கட்டிச் செயற்பட்டு வந்தார் ஜெயார்.
நான் இத்தொடரின் ஆரம்ப அத்தியாயங்களில் கூறியவாறு, ஜெயார் தனது பிரதான அரசியல் எதிரியான சிறிமாவை அவரது சிவில் உரிமைகளைப் பறித்தும், அவரது மூன்று பிள்ளைகளுக்குள் பிரிவினையினை ஏற்படுத்தியும், சிறிமாவின் 8 பேர் அடங்கிய கட்சியை உடைத்தும் அரசியல் ரீதியில் அவரைத் தோற்கடித்திருந்தார். சிறிமாவின் புதல்விகளில் ஒருவரும், பிரபல சிங்களத் திரைப்பட நடிகரான விஜயவைத் திருமணம் முடித்திருந்தவருமான சந்திரிக்காவுக்கும், சிறிமாவின் ஒரே ஆண் மகனும், சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை எதிர்காலத்தில் ஏற்கும் கனவில் இருந்தவருமான அநுரவுக்கும் இடையில் பிரிவினையினை உருவாக்குவதில் ஜெயார் வெற்றி கண்டார்.
சந்திரிக்காவுக்கும் அநுரவுக்கும் இடையிலான பிரிவினை சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுவிற்குள்ளும் பிரிவினையினை உருவாக்கியது. 1981 ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரான மைத்திரிபால சேனநாயக்கவுடன் கட்சியில் இருந்து வெளியேறிய அநுர பண்டாரநாயக்க, தனது புதிய கட்சிக்கு சுதந்திரக் கட்சி - எம் என்று பெயரிட்டார். வெறும் மூன்றே உறுப்பினர்களை அவரது கட்சி கொண்டிருந்தபோதும்கூட அக்கட்சி உடனடியாக பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டதுடன், அக்கட்சியின் வரவினை வெகுவாகப் பாராட்டிய ஜெயார், அக்கட்சியினை உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியென்றும் அறிவித்தார். ஜெயாரின் இந்தச் சதியே அமிர்தலிங்கத்தின் எதிர்கட்சித் தலைவர் எனும் பதவி அநுரவுக்குக் கிடைக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது.