அன்பும், மகிழ்ச்சியும் டாக்டர் சொக்கலிங்கம் தமிழக அளவில் மட்டுமல்ல, இந்திய அளவில் புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோருக்குச் சிகிச்சையளித்தவர். 50 ஆண்டுகளாக இதய அறுவைசிகிச்சைத் துறையில் சாதனை படைத்துவருபவர். அவரிடம் மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் குறித்துப் பேசினோம்... `` `வாழ்க்கை என்பது ஒரு மலர்ப் படுக்கை அல்ல’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். ஆனால், அது ஒரு முள் படுக்கையும் கிடையாது. அந்தப் பாதையில் முள்ளும் மலரும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். அதற்கு ஏற்ற மாதிரி நம் உடலையும் மனத்தையும் மாற்றிக்கொள்ளவேண்டி வரும். அப்படிச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முயலும்போது நிறைய போராடவேண்டியிருக்கும். அந்தப் போராட்டம்தான் நமக்கு மன அழுத்தமாக மாறுகிறது. ஸ்ட்ரெஸ் என்பது, `ரியாக்ஷன் ஆஃப் மைண்ட் அண்ட் பாடி டூ தி என்விரோன்மென்ட்.’ உடலும் உள்ளமும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற முயலும்போது, நமக்குள் எதிர்மறை எண்ணங்கள் ஏற்பட்டால், அது மன அழுத்தமாக மாறும். நமக்கு வந்த தடைகளையும் சிரமங்களையும் நேர் மறை எண்ணங்கள் வழியாக நாம் கடந்து போனால் அந்த மனிதருக்கு ஸ்ட்ரெஸ் ஏற்படாது. நேர்மறை எண்ணங்கள் மனதைத் தென்றலைப்போல் வைத்துக்கொள்ளும். ஆனால், எதிர்மறை எண்ணங்கள் நம் மனத்தைத் தவறான பாதையில் வழிநடத்தத் தொடங்கிவிடும். எண்ணங்கள்தாம் நம் வாழ்க்கை ஆகிறது. அதனால் எண்ணங்கள் மேம்பட வேண்டும். எண்ணங்கள் மேம்பட்டால்தான் சிறப்பான வாழ்க்கை அமையும். ஆவதும் மனத்தால்தான் அழிவதும் மனத்தால்தான். நேர்மறை எண்ணங்களுடன் மனதுக்குப் பிடித்த வேலையை நீங்கள் செய்தால், உங்கள் வேலையில் உங்களுக்கு அலுப்பே தெரியாது. 20 மணி நேரம்கூட நீங்கள் தொடர்ந்து பணியாற்றிவிடுவீர்கள். அதே நேரத்தில் உங்களுக்கு விருப்பமில்லாத வேலையை ஆபீஸிலோ வீட்டிலோ செய்தால், எங்கு வேண்டுமானாலும் இருக்கட்டும்... விரைவிலேயே சோர்வடைந்துவிடுவீர்கள். டே ஷிஃப்ட், நைட் ஷிஃப்ட்... எனப் பணம் சம்பாதிப்பதற்காக நேரம் பார்க்காமல் வேலை பார்க்கிறார்கள்; பணத்தின் பின்னாலேயே ஓடுகிறார்கள்; மாதம் நான்கு முதல் ஐந்து லட்ச ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்கள்; நீச்சல் குளத்துடன் கூடிய வீடு கட்டிக்கொள்கிறார்கள். படிப்பது, பணம் சம்பாதிப்பது இவையெல்லாமே மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்குத்தான். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகக் கால நேரம் பார்க்காமல் வேலை பார்ப்பது எப்படிச் சரியாகும்? அப்படி வேலை பார்ப்பவர் அமைதியை இழந்துவிடுகிறார். அந்த மனிதன் அமைதியை இழக்கும்போது, பல பிரச்னைகள் வந்து சேர்கின்றன. அதனால், 27 வயது, 30 வயதிலேயே, மூளைச் சோர்வு ஏற்பட்டு ஹார்ட் அட்டாக், பிரெய்ன் ஸ்ட்ரோக் போன்றவையெல்லாம் ஏற்பட்டு சிகிச்சைக்காக வருபவர்களைப் பார்க்கிறேன். ஏன், இந்த ஓட்டம்... எதை நோக்கி இந்த ஓட்டம்? கவிஞர் அப்துல் ரகுமானின் வரிகளில் சொல்வதென்றால், `இவர்கள் தன்னை விற்றுவிட்டு எதை வாங்கப்போகிறார்கள்?' என்பதைத்தான் சொல்ல வேண்டும். நான் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் போன்றவர்களுக்கெல்லாம் சிகிச்சையளித்திருக்கிறேன். இந்த இதய அறுவை சிகிச்சைத் துறைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. அப்போதெல்லாம், 70 வயது, 60 வயதைத் தாண்டியவர்களுக்குத்தான் ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்றவை வரும். ஆனால், ஒவ்வொரு பத்து ஆண்டுகளிலும் இது 50, 40, 30 எனக் குறைந்து 25 வயதில் உள்ளவர்களுக்குக்கூட இப்போது வரத்தொடங்கிவிட்டன. முன்பெல்லாம் டைஃபாயிடு, காலரா போன்ற தொற்று நோய்களால்தாம் மனிதர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால், தொற்றுநோய் அல்லாத நோய்களான `ரத்த அழுத்தம்', `சர்க்கரைநோய்', `ஹார்ட் அட்டாக்' போன்றவற்றால்தான் இப்போது அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். `மனதுக்குப் பிடித்த தொழிலைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் வேலை செய்யவேண்டிய அவசியமிருக்காது’ என்று சீனத் தத்துவஞானி கன்பூசியஸ் சொல்வார். மனதுக்குப் பிடித்த தொழில், வேலையைத் தேர்வு செய்துகொள்வது நல்லது. மனத்தூய்மையுடன் அறநெறியுடன் கூடிய வாழ்வைத் தேர்வு செய்யவேண்டியது மிகவும் முக்கியம். பர்சனலான சொந்த விஷயங்கள் தவிர மற்றவற்றில் முடிந்த அளவு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவது, நமது மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றிலிருந்து முழுவதும் விலகி இருங்கள். `சவுண்ட் மைண்ட் இன் சவுண்ட் பாடி’ என்பார்கள். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மனம் ஆரோக்கியமாக இருக்கும். அண்மையில் நான் அமெரிக்காவில் 22 ஆயிரம் டாக்டர்கள் கலந்துகொண்ட ஒரு மாநாட்டுக்குச் சென்றிருந்தேன். அந்த மாநாட்டில், `பரம்பரை காரணமாக, சர்க்கரைநோய், ஹார்ட் அட்டாக் போன்ற குறைபாடு உடையவர்கள்