Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    39346
    Posts
  2. பகிடி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    597
    Posts
  3. Cruso

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    1887
    Posts
  4. Nathamuni

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    13720
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/23/23 in all areas

  1. போதமும் காணாத போதம் – 01 October 2, 2023 வீரயுகத்தின் அந்தி நந்திக்கடலில் சாய்ந்து ஆண்டுகள் இரண்டாகியிருந்தன. செட்டிக்குளம் அகதி முகாமில் அடைக்கப்பட்டு பலாத்காரங்களுக்கும் வன்முறைக்கும் உள்ளான சொற்ப சனங்கள் சொந்தவூர்களுக்கு மீளக்குடியமர்த்தப்பட்டனர். வரிசையில் நிற்க வைத்து அடையாளங்களைச் சரிபார்த்து ஆவணங்களை தருவித்து இராணுவப் பேருந்துகளில் அவர்கள் ஏற்றப்பட்டனர். செத்துப்போனாலும் சொந்தக் காணியில் சாகவேண்டும் என்பவர்களுக்கு நிம்மதி திரும்பிற்று. ஒரு பெருங்கனவு சிதைந்து உருக்குலைந்து மண்ணோடு மண்ணாகியிருந்தது. அளவற்ற தியாகமும், உயிரிழப்பும் அந்த மண்ணில் வெறித்திருந்தது. சொந்தவூரில் இறக்கிவிடப்படும் வரை அம்மாவோ அக்காவோ எதுவும் கதையாமல் வந்தனர். வழிநெடுக பனைகள் தலையற்றும் நிமிர்ந்து நின்றன. வீட்டுக்கு முன்பாக இறக்கிவிடப்பட்டோம். புதர்கள் மண்டிக்கிடந்தன. வீட்டுக் கூரையில் கறையான் படை. சுடுகாட்டமைதி. வாசலற்ற வீடு. சொந்த வீட்டினுள் செல்வதற்கு வழியற்று நின்றோம். எந்தத் துயரத்திலும் கண்ணீர் சிந்தாத அம்மா தனது காலடி மண்ணை இரண்டு கைகளாலும் அள்ளி வான் நோக்கி எறிந்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். அது சாபமோ, பிரார்த்தனையோ யாரறிவார்? காணியைத் துப்புரவு செய்வது அவ்வளவு கஷ்டமாயிருக்கவில்லை. இரண்டு காட்டுக்கத்திகளாலும் மண்வெட்டியாலும் மரங்களையும் புதர்களையும் புரட்டிப்போட்டோம். வீட்டினுள்ளே எழுந்திருந்த பாம்பு புற்றுக்களை எதுவும் செய்யாமல் அடுத்தநாள் பார்த்துக் கொள்ளலாம் என்றாள் அம்மா. பார்த்தீனியத்தின் நாற்றம். இரவானதும் மாமரத்தின் கீழே அம்மாவும் நானும் அக்காவும் படுத்துக் கொண்டோம். நான்கு வருடங்களுக்குப் பிறகு சொந்தக் காணியில் நித்திரையாவது கனவெனத் தோன்றியது. அம்மாவுக்கு நித்திரை வரவில்லை. அவள் லாம்பைத் தீண்டி வைத்துவிட்டு எழுந்திருந்தாள். காற்றில்லாத இரவு. அம்மாவிடம் அனலின் விறைப்பு. அவள் மெல்ல எழுந்து கிணறு நோக்கிப் போனாள். வெட்டப்பட்ட செடிகளும், புற்களும் கும்பியாகி கிடந்தது. என்ன தோன்றியதோ! லாம்பிலிருந்து மண்ணெண்ணையை ஊற்றி கும்பியில் தீ வைத்தாள். அந்த இரவுக்கு அப்படியொரு வெளிச்சம் தேவையாகவிருந்தது. தீயின் சடசடப்பு பச்சையத்தில் எழுந்தது. அக்கா பயந்தடித்து நித்திரையிலிருந்து எழுந்தாள். புன்னகைத்தபடி நெருப்பு என்றேன். ஏற்கனவே சித்தம் குழம்பியிருந்த அவள் வெளிச்சத்தைப் பார்த்து வெருண்டிருந்தாள். நந்திக்கடலில் இறப்பதற்கு விஷம் தேடி அலைந்து களைத்தவள் அக்கா. “ஊழியில சாவு வாய்ப்பதெல்லாம் ராசியடி மோளே” என்று ஆச்சி சொல்லியும் அவள் கேட்கவில்லை. அக்காவுக்கு சித்தம் குழம்பியதை அம்மாதான் முதலில் உணர்ந்தாள். ஆனால் என்னிடமோ யாரிடமோ அதனைச் சொல்லாமல் தவிர்த்தாள். முள்ளிவாய்க்கால் நாட்களில் கட்டுப்படுத்தமுடியாமல் போயிற்று. பதுங்குகுழிக்குள் இருந்தபடி வெறித்துப் பார்த்து அழுவாள். யாரேனும் சமாதானம் சொன்னால் வெளியே எழுந்து ஓடுவாள். பிறகு அந்தக் கூடாரங்களுக்குள் அவளைக் கண்டுபிடிப்பது பெரியதொரு வாதை. என்னிடமொரு பழங்கால செபமாலையிருந்தது. டச்சுக்காரர்களின் தேவாலய அருங்காட்சியத்திலிருந்து அதனைக் களவாடியிருந்தேன். எங்கு சென்றாலும் என்னோடு வருகிற நிழலது. அக்காவின் கழுத்தில் அதனை விளையாட்டாக அணிவித்து உனக்கு வடிவாக இருக்கிறது என்றேன். அவள் சிலுவையைப் பிடித்து அறுத்தாள். செபமாலையை பதுங்குகுழிக்கு வெளியே எறிந்துவிட்டு “போடா கள்ளா” என்று அழத்தொடங்கினாள். சாவுகள் மலிந்து விளைந்த படுகளத்தில் தற்கொலை செய்து உயிரை மாய்க்க எண்ணி பலமுறை முயன்றும் தோற்றாள். ஒருநாள் இரவு அவளைப் பதுங்குகுழியில் காணாமல் தேடித்திரிந்தோம். நீரடர்ந்த குளத்து ஒற்றைப்பனையின் கீழே நின்றாள். அவள் இன்னும் நந்திக்கடல் வீழ்ச்சியை அறியவில்லை. எரியும் நெருப்பைப் பார்த்தபடி அம்மா….அம்மா என்று கூப்பிட்டாள். எந்த அசைவுமின்றி எரிந்தசையும் ஒளியின் முன்னே இரவு முழுவதும் நின்றாள் அம்மா. அடுத்தநாள் காலையில் மீண்டும் துப்பரவு பணிகளைத் தொடங்கினோம். வீட்டினுள்ளே இருந்த புற்றை வெட்டியெறிந்தோம். பாம்பில்லை. புற்று மண்ணை அம்மா பத்திரமாக எடுத்து வைத்தாள். காணி கொஞ்சம் வடிவெய்தியிருந்தது. கிணறு இறைக்க வேண்டும். வீடு வேயவேண்டும் என பெரிய பட்டியல் போட்டோம். நாங்கள் இடம்பெயர்கையில் மண்ணுக்குள் புதைத்து வைத்த அம்மிக்கல்லையும், சில பொருட்களையும் எடுக்கலாமென்று அகழ்ந்தோம். எல்லாமும் இருந்தது. இரண்டு பெரிய புகைப்பட அல்பங்கள் பொலித்தீன் படையால் காக்கப்பட்டிருந்தது. அக்கா ஒவ்வொன்றாக எடுத்துப் புரட்டினாள். வீரயுகத்தின் நாயகர்கள் பலர் உயிர்ப்புடன் இருந்த புகைப்படங்கள். அக்கா எல்லோரையும் பார்த்து புன்னகை செய்து, அவர்களின் பெயர்களையெல்லாம் மறவாமல் சொன்னாள். அம்மிக்கல்லை எடுத்து தென்னைமரத்தின் கீழே வைத்தோம். அம்மியில் அரைத்த சம்பலும், ரொட்டியும் சாப்பிடவேண்டுமென சொன்னேன். அம்மா சரியென்று தலையசைத்தாள். அன்றைக்கு வெளியில் அடுப்பு மூட்டி, மாவைக் குழைத்து ரொட்டி சுட்டோம். சம்பலுக்கு வெங்காயம் போடாமல் வெறும் மிளகாயை தேங்காய்ப் பூவோடு அரைத்தோம். அக்கா நன்றாகச் சாப்பிட்டாள். அவளுக்கு ஏதோ பேய் பிடித்திருக்கிறது என்றாள் அம்மா. ஊரில் ஏனையோரும் தங்களது வீட்டையும் வளவையும் சீராக்கியிருந்தனர். பொதுக்கிணற்றை எல்லோரும் பணம் போட்டு இறைத்துச் சுத்தம் செய்தனர். கள்ளருந்திக் கூத்திசைக்கும் கனவான்கள் பனைமரங்களின் பாளையைச் சீவி முட்டியைக் கட்டிக் காத்திருக்கத் தொடங்கினர். கள்வெறிக்கு நிகர்த்த இன்பம் ஈழருக்கு வேறில்லை. காவோலையில் கருவாட்டைச் சுட்டு இரண்டு தூசணங்களோடு பொழுதை மங்கலமாக்கும் அப்புமார் பனைக்கு கீழே அமர்ந்திருந்து கதையளந்தனர். வசந்தம் வருமென்றில்லை, ஆனாலும் நாம் பூப்போம் என்பதைப் போல பெண்கள் கூந்தல் நனைத்து வழிநெடுக காற்சங்கிலி ஒலிக்க நடந்து போயினர். கனரக ஆயுதங்களின் வெற்றுக் கோதுகளைச் சேமித்து பூஞ்செடிகளை நட்டுவைத்து சின்னஞ்சிறுசுகள் தங்களை ஆமி இயக்கமாய் பாவித்து சண்டை செய்து விளையாடினர். கிளித்தட்டு விளையாடும் இளையோர்கள் வேர்த்தொழுக மறிக்கின்றனர். அடிக்கின்றனர். இரவானதும் விளக்குகள் திரி குறைக்கப்பட்டு வீடுகள் குளிர்கின்றன. வெறுமை அழிந்து உடல்கள் இன்பம் நுகர்கின்றன. காற்றில் ஈரம் திரும்புகிறது. கிளைகளில் அசையும் மலர்களில் தேன் அடர்ந்து திரள்கின்றது. ஊரில் மனுஷ வாசனை தளும்பத் தளும்ப முட்டிகளில் கள் நிரம்பிற்று. ஒரு மாதத்தில் வீட்டை திறமாகச் சரிப்படுத்தியிருந்தோம். அக்காவும் நானும் யாழ்ப்பாணத்திலுள்ள பெரியம்மா வீட்டுக்குச் சென்றிருந்தோம். அம்மா மட்டுமே வீட்டிலிருந்தாள். ஒரு குழம்பும் சோறும் வைத்துச் சாப்பிடுவது அவளுக்கு போதுமானதாக இருந்தது. உறைப்புக்கு கொச்சி மிளகாய் காய்த்திருந்தது. ஒருநாள் சந்தைக்குச் சென்று திரும்புவதற்குள் அம்மாவைத் தேடி வந்திருந்த ஆச்சியொருத்தி வீட்டின் முன்னால் குந்தியிருந்துள்ளாள். நடுவெயில் வெக்கை வீச தலைவிரிகோலமாய் வெள்ளைச் சீலை உடுத்தியிருந்த ஆச்சியைப் பார்த்த ஊரவன் “ஆரன வேணும்” என்று கேட்டிருக்கிறார். ஆச்சி வீட்டைக் காண்பித்து “இவள் தான்” என்றிருக்கிறாள். “சந்தைக்குப் போயிட்டாள். வரப்பிந்தும். அவள் வருகிற வரைக்கும் என்ர வீட்டில வந்து இருங்கோ. அவள் வந்ததும் இஞ்ச வரலாம்” “அவள் வரட்டும். நான் இதிலையே இருக்கிறன்” “நீங்கள் எங்க இருந்து வாறியள்” “உதில இருந்துதான். நடந்து வந்தனான்.” “உதில எண்டால் எங்க” “எனக்கு சரியான பசி. அவளைச் சோறு கொண்டுவந்து தரச் சொல்லு. என்னைக் கொஞ்சம் குளிப்பாட்டச் சொல்லு. நான் வெளிக்கிடுறன்” என்றெழுந்த ஆச்சியின் வெண்கூந்தல் மண்வரை நீண்டு, அவளது தடத்தையே அழித்திருக்கிறது. “எங்க இருந்து வந்தனியள், உங்கட பேர் என்ன, எதுவும் சொல்லாமல் போனால், அவளிட்ட நான் எப்பிடிச் சொல்லுவன்” என்று கேட்ட ஊரவனைப் பார்த்து “நீ அவளிட்ட சூலக்கிழவி வந்தனான் என்று சொல்லு, என்னை நல்லாய்த் தெரியும்” என்றிருக்கிறாள். ஊரவன் அவளுடைய பதிலைக் கேட்டு உறைந்து நின்றார். முன்னே நடந்து சென்றவள் வெயிலானாள். கண்கள் கூசுமளவுக்கு வெளிச்சம் வந்தடைந்த ஊரவன் மயக்கமுற்று வீதியில் விழுந்தான். அம்மா வீட்டுக்கு வந்ததும் இந்தச் செய்தியை அவரே சொன்னார். “உன்னைத் தேடி சூலக்கிழவி வந்து தனக்கு பசிக்குதாம், குளிக்க வேணுமாம், வந்து பார்க்க சொல்லுது” என்றார். அம்மாவிடம் அந்தத் தகவலைச் சொன்னதும் ஊரவனுக்கு இந்தச் சம்பவத்தின் அனைத்து துளிகளும் மறந்து போயிற்று. விஷயத்தைக் கேள்விப்பட்டதும் ஆற்றாமையும் சந்தோசமும் பொலிந்த அம்மா கொட்டடி காளி கோயிலை நோக்கி ஓடினாள். வழிநெடுக அவள் காளியை நோக்கி ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தாள்.“இஞ்ச உள்ள ஒருத்தரிட்டையும் வராமல் என்ர வீடு தேடி வந்த உனக்கு நான் என்ன செய்வேன். என்ர ஆச்சியே” என்றபடி கோயிலிருக்கும் இடத்தை அடைந்தாள். சதுப்புக் காணியில் வெள்ளம் தேம்பி நின்றது. புதர்களும் செடிகளும் மண்டி வளர்ந்திருந்தன. காளி செடிகளுக்குள் புதைந்திருந்தாள். ஓடுகளற்ற கோயில் கூரையையும் கொடிகள் சடைத்து பிடித்திருந்தன. ஆழமிக்க தண்ணீரில் இறங்கி நடந்தாள். எதற்கும் அஞ்சாதவள் தாய். உக்கிரம் பெருகி தளும்பித் தளும்பி அழுதபடி புதர்களை பிடுங்கி எறிந்தாள். ஈரச்சருகுகளின் வாசனையும் பூச்சிகளும் குமைந்து கிடந்தன. வெடிக்காத எறிகணையொன்று குத்திட்டிருந்து. துருவேறிய அதன் மேற்பரப்பில் லட்சோப லட்ச சனங்களின் குருதியுறைவு. காளியின் பீடம் தகர்ந்திருந்தது. எங்களுடைய குலத்தின் விலா எலும்பு சூலம். எங்கே எங்கள் விலா எலும்பு! அம்மா பிய்த்துக் கொண்டு அலறினாள். விஷப்பூச்சிகள், எதையும் பொருட்படுத்தாமல் சருகுகளை கைகளால் அகற்றினாள். ஒரு படை விலக இன்னொரு படை. சருகுகள் அழுகிக் கிடந்தன. நாற்றம் குமட்டியது. முறிந்து துருப்பிடித்த சூலத்தை கண்டெடுத்து நெஞ்சோடு அணைத்து “என்ர ஆச்சி, உன்னைக் கைடவிடமாட்டேன்” என்ற அம்மாவின் குரல் பேரிகையாக ஒலித்தது. அவளது இரு கால்களுக்குமிடையால் துயின்றிருந்த நாகமொன்று படமெடுத்தபடி அசைந்து அருளியது. மண்ணில் சரிந்திருந்த சூலத்தை நிமிர்த்தி ஊன்றிய அம்மா, புதர்களில் மலர்ந்திருந்த செங்காந்தள் மலர்களை ஆய்ந்து படைத்தாள். சூலத்தில் சூட்டப்பட்ட செங்காந்தள் மலர்களின் நெருப்பு இதழ்கள் கனன்று நிறத்தன. வளவை மொத்தமாய் துப்புரவு பண்ணி, அடுத்தமாதமே பூசையைத் தொடங்கவேண்டுமென எண்ணம் தகித்தது. ஊழியுண்ட பெருநிலத்தின் மீதியாய் தன்னைப் போலவே காளியும் காந்தள் மலர்களோடு வெறித்திருப்பதை அவளால் ஏற்கமுடியாதிருந்தது. தெய்வமும் வாழ்வுக்கு மீளட்டுமென்று மண்ணை வேண்டிக்கொண்டு புறப்பட்டாள். கொட்டடி காளி காந்தள் மலர்கள் சூடி நின்ற அன்றிரவு அம்மா விளக்கு வைத்தாள். வெகு விரைவிலேயே கோவில் வளவைத் துப்பரவு செய்து வழிபாடு தொடங்கியது. முறிந்து போன சூலத்தை வைத்து வழிபடுவது ஊருக்கு நல்லதில்லை என்று பலர் சொல்லியும் அம்மா கேட்கவில்லை. அதே சூலம் புளிபோட்டு மினுக்கி மீண்டும் வழிபடு பீடத்திற்கு வந்தது. காந்தள் மலர்கள் மீண்டும் சூடப்பட்டது. கொட்டடி காளிக்கு இப்போது காந்தள் காளி, கார்த்திகைப் பூ காளி எனப் பலபெயர்கள். கோயிலை ஒட்டியுள்ள சதுப்பு நிலத்தில் எல்லா மாதங்களிலும் காந்தள் பூக்கள் மலர்கின்றன. அது காளியின் அற்புதம் என்கின்றனர் சனங்கள். நீண்ட வருடங்களின் பின்னர் காந்தள் காளி அம்மாவின் கனவில் வந்தாள். அவளுடைய முகத்தில் ஒருவித உலர்ச்சியிருப்பதைக் கண்ட அம்மா “ஏதேனும் உடம்பு சுகமில்லையா” என்று கேட்டாளாம். காளி ஓமென்று தலையசைத்திருக்கிறாள். என்னவென்று கேட்க காளி பதில் சொல்லாமல் உம்மென்று இருந்திருக்கிறாள். சித்தம் பிசகிய அக்காவிடம் கனவைச் சொல்லிக்கொண்டிருந்தாள் அம்மா. எல்லாவற்றையும் கேட்ட அக்கா, தன்னுடைய கனவிலும் காளி வந்தாள் என்றாள். அம்மா திகைப்புற்று “என்ன சொன்னவா” என்று கேட்டாள். “காளிக்கு ஒரு காயமிருந்திருக்கு. ஷெல் காயம். ஒரு பீஸ் துண்டு காளியின்ர தலைக்குள்ள இப்பவும் இருக்கு. வெயில் நேரத்தில அது குத்தி நோக வெளிக்கிடுது. மண்ட பீஸ். காளி அதை நினைச்சு பயப்பிடுறா” என்றாள் அக்கா. அம்மாவுக்கு வந்த கோபம் ஆறாமல் “போடி விசரி, உனக்குத் தான் மண்ட பீஸ்” என்றாள். “அதுதான் நானும் சொல்றேன். காளிக்கு மண்ட பீஸ். கொட்டடி காளிக்கு மண்ட பீஸ்” என்று அக்கா அரற்றத் தொடங்கினாள். அப்போதும் சூலம் மண்ணில் நிமிர்ந்து நிற்க காந்தள் மலர்கள் கனன்று மலர்ந்தன. https://akaramuthalvan.com/?p=847
  2. இவர் சொல்லும் கருத்துக்கள் சரியாக இருந்தாலும், நான் நினைக்கிறன், நிராஜ் சொல்லவரும் சங்கீதா அண்ணா கேணல் சங்கீதனாக 2009 இல் மாவீரராகிவிட்டார். இணைப்பை பார்வையிடவும் https://eelamhouse.com/?p=2701
  3. போதமும் காணாத போதம் – 09 அண்ணாவின் வித்துடலை குருதியூறும் நிலத்தினுள் விதைத்து மூன்றாம் நாள் அதிகாலையில் பெருங்குரலெடுத்து அழுதாள் அம்மா. திகைப்படைந்து எழுந்தவர்கள், மங்கலான உறக்கக் கலக்கத்தோடு பார்த்தார்கள். நீராடி விரிந்திருந்த ஈரக் கூந்தலோடு அண்ணாவின் புகைப்படத்துக்கு முன் அமர்ந்திருந்தாள். சிறிய குத்து விளக்கில் அணையாச் சுடர் ஈகித்திருந்தது. நேற்றிரவு படைக்கப்பட்ட சாப்பாட்டில் ஈரம் விலகியிருந்தது. அம்மா தண்ணீர் செம்பைத் தூக்கி கவிழ்த்துக் காட்டினாள். ஒரு சொட்டு நீரில்லை. மீண்டும் அழத்தொடங்கினாள். வாதையின் செதில்கள் அகலமறுத்துப் பெருகிய பொழுதாயிற்று. “என் நிழலில் மரணத்தின் நித்தியம் முழுமரமாய் வளர்ந்து நிற்கிறது. ஆனாலும் உதிரும் ஓரிலையின் நடுக்கம் கூட என் இதயத்தில் இல்லை. மீளவும் சொல்கிறேன். பீரங்கிகளினதும் போர்விமானங்களினதும் தாக்குதல்களால் பீதியாகமாட்டேன். விடுதலைக்காக போரிட்டு மடியுமிந்த வாழ்வு மகத்தானது. தெளிந்த வானத்தை விடவும் ஆகிருதியில் வலுத்தது என் பெருங்கனவு. இதோ இக்கணத்தில் தியாகத்தின் பலிபீடத்தில் கிடத்தப்பட்டுள்ளேன். என் விழுப்புண் மீது அழுந்தப் பதிந்திருக்கும் ரத்த வரிகளை மேற்கு வானில் தாழும் சூரியன் பார்க்கிறது. நெருப்பேந்தி நாளையது கிழக்கில் தோன்றுகையில் என் முகத்தைச் சூடி வரும். ஆகுதியின் இனிமையை அருளும் நிலத்தை எதனாலும் விழுங்கிவிட முடியாது.” வீரச்சாவு எய்துவதற்கு முன்பாக அண்ணா திரும்பத் திரும்ப சொன்ன வார்த்தைகள் இவையென களமுனையிலிருந்து வந்த படையணிக்காரர்கள் சொன்னார்கள். அண்ணா நன்றாக உரையாற்றுவான். கவிதைகள் எழுதவும் செய்வான். விடுப்பில் வந்திருந்த நாட்களில் எழுதிய சில கவிதைகளை அம்மாவிடம் கையளித்திருந்தான். ஒருநாள் நானும் அவனும் குளத்தில் குளித்துவிட்டு வீடு திரும்பிய போது கொந்தளிப்பாக சிலவற்றைக் கதைத்தோம். “போரால் எதையும் பெறமுடியாது போனால், இத்தனை இழப்புகளும் வீண் அல்லவா” என்றேன். இத்தனை தியாகங்களும் வெறும் இழப்பாகவே எஞ்சுமென உன்னால் நினைத்துப் பார்க்க முடிகிறதா! போரை நம்பியதல்ல இந்தப் போராட்டம். எங்கள் வாழ்வுரிமையை போரின் வழியாக மட்டுமே வலியுறுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை நம்பமுடியாதபடி காலம் தருவித்துவிட்டது. நீ சொல்வதைப் போல இழப்புக்கள் வீண் போனாலும் மிஞ்சியிருப்பவர்கள் நினைவு கூருவர். மாண்டவர்கள் இங்கேயே தான் இருப்பார்கள். ஏனென்றால் இந்த மண் அவர்களின் மேனி. எஞ்சியவர்களை அவர்கள்தான் சுமப்பார்கள். இறுதியில் இழப்பைத் தான் பெறுவோமென்றால் ஞாலத்தின் அறம் புழுத்துப்போகும். குமட்டல் வாடை மனுஷகுலத்தின் மீது ஈயெனப் பெருகும். அற்பமான நோய்களில் உலகு நொடியும். எம் இனத்தின் புராதனக் கண்ணீரும் குருதியும் அறத்தை விடவும் மேன்மையான ஆற்றலோடு தீவிரமாகும். இழப்பின் ஞாபகங்கள் பரம்பரை பரம்பரையாக எங்கள் மாதர்களின் ஆதிக்குகையுள் அனற்குழம்பெனக் கனன்று கருவாகி வெளியுமிளும். பூர்வீகச் சந்ததி பெருகும்” என்றான். உடலீரம் காய்ந்திருந்தது. அண்ணாவின் சொற்கள் சுதந்திரத்தின் பிரசங்கமென என்னுள்ளே வலுவாக உருகி இறங்கியது. “தியாகங்கள் எல்லாமும் ஞாபகங்களாய் எஞ்சினால், பாழான போரை பூமி நினைவில் வைத்துக் கொள்ளும். அது நன்மைக்கே” என்றேன். “போரை விடவும் பூமி பாழானது. ஏனெனில் போர் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வழி மட்டுமே” என்ற அண்ணா நாயுண்ணிப் பழங்களைப் பிடுங்கி வாயில் போட்டான். இனிப்புச் சுரந்து இதமாய் உடல் மொழிந்தான். அன்றிரவு நேரமாகியும் நான் விழித்திருந்தேன். குப்பி விளக்கு வெளிச்சத்தில் ஓவியமொன்றை வரைந்து கொண்டிருந்தேன். வீட்டின் வெளியே அமர்ந்திருந்து அம்மாவும் அண்ணாவும் கதைத்துக் கொண்டிருந்தார்கள். களமுனையாகவிருக்கும் சொந்தவூரின் கோவில்களுக்கு விளக்கு வைக்குமாறு சொன்னாள். அண்ணாவுக்கு இறை பக்தி அதிகம். சிறிய வயது முதலே சைவ மடத்தில் தீட்சை பெற்று நடராஜருக்கு பூசை செய்தவன். அவனுடைய ஆச்சார நெறிகள் தீவிரமானவையாக இருந்தன. இயக்க வாழ்க்கையில் எல்லாமும் நொறுங்குண்டு தலைகீழானது. மாட்டிறைச்சியை விடவும் ருசியானது எதுவுமில்லை என்பது அண்ணாவின் உச்சாடனமாய் ஆகியிருந்தது. அண்ணாவுக்கு எட்டாம் நாள் படையல் வைக்கும் போது அம்மா மாட்டிறைச்சியையும் சேர்த்துக் கொண்டாள். சொந்தக்காரர்கள் சிலர் முகம் சுழித்து வேண்டாமென்றனர். “பிள்ளைக்கு பிடிச்சததான் வைக்கோணும், உங்களுக்கு பிடிச்சத வைக்க வேணுமெண்டால் நீங்கள் மோசம் போன பிறகு செய்து வைக்கிறன்” என்ற அம்மாவின் கூற்று பலரையும் சங்கடத்தில் ஆழ்த்தியது. செம்பு தளும்ப தண்ணீர் வைக்கப்பட்டு தலை வாழை இலையில் மாமிசக் குழம்புகள் எல்லாமும் படைக்கப்பட்டன. முச்சந்தியில் கழிப்புக் கழித்து பூசணியை இரண்டாகப் பிளந்து குங்குமம் தடவி, எல்லாவற்றையும் சுளகொன்றில் பரப்பி வைத்துவிட்டு வந்தோம். வீட்டில் அனைவரும் நிறைவாகச் சாப்பிட்டனர். அம்மா உபசரித்து கவனித்தாள். தண்ணீர் என்று சபையில் யாரும் கேட்காத வண்ணம் எல்லோருக்கும் வழங்கப்பட்டுக் கொண்டே இருந்தது. வீட்டைச் சுற்றியும் புதுக்குடங்களில் குடிதண்ணீர் நிறைத்து வைத்திருந்தாள். அம்மாவுக்கு சித்தம் குலைந்திற்றோவென நொந்த சிலர் சிறிய தலையசைப்போடு எழுந்து சென்றனர். பிள்ளையின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தாள் அம்மா. “நான் சாகத் தயாரானவன், வீரச்சாவு அடைந்தால் அழாதேங்கோ. நீங்கள் என்னைப் பிரசவித்த தருணத்தை விடவும் பூமிக்குள் விதைக்கும் போது மங்கலம் கொள்வீர்கள்” என்றுரைத்த அண்ணாவின் குரல் அம்மாவின் ஞாபகத்தில் பொங்கி நுரைத்தது.”வந்து கொண்டிருக்கிறான், தேவலோகத்திலிருந்து என் மகன் வருகிறான்” அம்மா ஆனந்தித்து உறுதியாகச் சொன்னாள். பரவசமாகி தன்னுடைய முலைகளை எடுத்து வெளி நோக்கி விரல்களால் பிசுக்கி “பிள்ளைக்கு சரியான தண்ணி விடாய்” என்றாள். இரவு முழுதும் நிலவும் பனியும் விழித்திருந்தது. அம்மா அடிக்கடி குடங்களையும், படையலில் வைக்கப்பட்டிருந்த செம்பையும் சென்று பார்த்தாள். அளவு குறையவில்லை. வீட்டின் வாசலை விட்டு ஒதுங்கியிருந்தாள். அண்ணா உள்ளே செல்ல ஏதும் தடையாக இருக்கவே கூடாது என ஒழுங்குகள் செய்திருந்தாள். ஆவியாய் அலைக்கழியும் அண்ணாவுக்காக சொந்தக்காரர்கள் சிலரும் காத்திருந்தனர். அற்புதங்களுக்காக காத்திருந்த சனங்களின் கதைகள் இரவைத் தீண்டியது. வீட்டினுள்ளே ஒரு பல்லி சொன்னது. அதன் நீளவொலி எல்லோரையும் தன்பக்கம் திருப்பியது. செய்வினைகள் அறுப்பதில் வல்லவளாக இருந்த புறாக்குட்டி அத்தை “காயப்பட்டு துடிதுடித்து பங்கருக்குள்ள தாகமெடுக்க, தண்ணியில்லாமல் தன்ர ரதத்தையே அள்ளி நக்கியிருக்கிறான். அந்தச் சீவன்ர தாகம் பூலோகத்தில தான் இருக்கு. அவன் வருவான்” என்றாள். நான் பொறுமையிழந்து “ எங்களுடைய ஊகத்திற்கும் ஆசைக்கும் எதுவும் நடக்காது. விசர்த்தனமாய் கதைக்கிறத விட்டிட்டு எல்லாரும் போய் படுங்கோ” என்றேன். “இந்தப் பூமியில இரவு வாறதே ஆவிகளுக்காகத் தான். அதுகள் நடமாடுகிற ஒரு பொழுது இது. நீ நம்பாட்டி உள்ள போய் படன்ரா” என்ற கனகு பெரியப்பா சுருட்டை புகைக்கத் தொடங்கினார். “அவன் வந்து தண்ணி குடிப்பான். அதுவரைக்கு நான் முழிச்சிருப்பன்” அடைகாத்திருக்கும் தாய்மையின் தழல் குழம்பு வெடித்தது. “எடியே விசரி. இப்பிடி செத்த இயக்கப் பிள்ளையள் வந்து தண்ணி குடிக்க வெளிக்கிட்டால் எங்கட கடல் தண்ணி வத்தியிருக்குமெல்லே. உள்ளே போய் படு” என்று முஸ்பாத்தியாகச் சொன்ன காங்கேசந்துறை மாமாவை திரும்பிக்கூடப் பார்க்காமல் அம்மா தவிர்த்தாள். “உன்னுடைய முஸ்பாத்திக்கு அந்த செவிட்டுப் பரத்தை சிரிக்கலாம். இஞ்ச ஆரும் சிரிக்க மாட்டினம். எழும்பிப் போடா பு***ண்டி” கனகுப் பெரியப்பாவின் பேச்சில் எச்சரிக்கை தொனி தெரிந்தது. காங்கேசந்துறை மாமா பேச்சிழந்து வெட்கி நின்றார். அம்மாவுக்கு விழித்திருப்பது ஆறுதலாகவிருந்தது. ஆமை போலூர்ந்த இரவு தீர்ந்து போனது. ஆனாலும் செம்பிலோ, குடங்களிலோ தண்ணீர் அப்படியே இருந்தது. அம்மா செம்பு நீரை எடுத்து பூக்கன்றின் அடியில் ஊற்றிவிட்டு புதிய நீர் நிறைத்து வைத்தாள். அவளுக்குள் பிரார்த்தனையின் அழுகுரல் பூகம்பமாய் ஒட்டிக்கிடந்தது. தன்னையிழந்த ஞாபகமாய் அம்மா வீட்டுக்குள் நடமாடினாள். கல்லறைகளும் நடுகற்களும் நிறையும் விதியின் வசியத்தை வாழ்வென எண்ணும் வருத்தம் எனக்குமிருந்தது. சாவளிக்கும் அடைக்கலம் அரணாகவிருந்தது. “அண்ணா வந்து தண்ணி குடிக்கவில்லையெண்டு, கவலைப்படாதேயம்மா. அவன் உன்ர விரும்பத்தை விளங்கிக் கொள்வான்” என்றேன். “அவனுக்கு தண்ணி விடாய், பிள்ளையைத் தெய்வம் அப்பிடி கூட்டிக் கொண்டு போயிருக்க கூடாது. சீவனுக்கு தாகமிருக்கிறது சிவனுக்கு தெரியாமல் போச்சே” “அதுக்காக அவர் ஆவியா வந்து தண்ணி குடிப்பாரே ” “அடேய், அண்டைக்கு வந்து தண்ணி குடிச்சது அவன் தான். அவன் ஆவியில்லை. என்ர பிள்ளை தேவர். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு நிகர்த்த முதலாமவன்” மறக்கவியலாத தழும்பென பதில் உரைத்தாள் அம்மா. முகம் வெளிறி இயல்புக்கு வர முயன்றேன். தீ பெருகும் காலத்தின் முற்றுகையில் உதிர்காலத்து இலையென கணங்கள் பொசுங்கின. அலைகளின் ஓயாத முறையீடு போல அம்மா பெரும் பொழுதுக்காய் காத்திருந்தாள். பெருங்கூவலோடு மழையின் பெருவிழிகள் திறந்தன. உப்புதிர்க்கும் கடல் காற்று கூரையூடே புகுந்தது. கொடுஞ்சாபமென உறைந்திருந்த நிலப்புழுதி மணமெழுந்தது. இடியதிர மிகுந்து பரவிய மின்னல் ஒளியிழந்து உலர்ந்தது. அண்ணாவின் புகைப்படத்து குத்துவிளக்குத் திரியில் குருதியின் சுளிப்பு நிறம் கொண்டெரிந்தது. “அற்புதங்களின் வருகையை நிரூபிக்க அதிகம் சிரமப்படவேண்டியதில்லை” என்றாள் அம்மா. ஒழுகும் தாழ்வாரத்தின் கீழ் நின்று சிறுநீர் பொழியும் நாயின் கண்கள் சலனமடைந்திருந்தன. நிழல் மரவள்ளி மரத்தில் அடைந்திருந்த கோழிகள் நனைந்து நடுங்கின. அம்மா மழையில் நனைந்தபடி வீட்டுப் படலையைத் திறந்து வைத்தாள். “அவன் வருகிறான், தண்ணி விடாய்ல வருகிறான். இந்தத் தண்ணி போதாது.” என்றாள். துயர் ததும்பும் ஒரு முதுமுரம் மண்ணில் வேரூன்றி மழையில் நனைந்து கிளையசைப்பதைப் போல கையசைத்து சொல்லிக்கொண்டே இருந்தாள். “அவன் வருகிறான் அவனுக்கு சரியான தண்ணி விடாய்” அடுத்தநாள் காலையில் குடங்களில் தண்ணீர் இல்லை. செம்பு காய்ந்திருந்தது. வரலாற்றை தேடுபவளைப் போல வீட்டின் வாசல்வரை அண்ணாவின் காலடித்தடம் தேடி கண்ணீர் கசிந்தாள். கரைக்க இயலாது திணறும் சாம்பல் சேற்றில் அவள் கால்கள் புதைந்து விடுபட மறுத்தன. “அவன் வந்திருக்கிறான். ஆனால் நடந்து வரேல்ல. பறந்து வந்திருக்கிறான். பூமியில் தேவர்கள் நடக்க மாட்டார்கள் அல்லவா” என்றாள். இது நீண்டால் அம்மாவுக்கு சித்தம் பிசகிவிடுமென எண்ணிப் பயந்தேன். எங்கள் சொந்தக்கார பரியாரியிடம் விஷயத்தைச் சொல்லி மருந்து கேட்டேன். “அவளுக்கு சித்தம் நன்றாகவே இருக்கிறது. எங்களுக்குத் தான் பிசகிவிட்டது மோனே. நீ எழும்பிப் போ” என்றார். அம்மா வீட்டுக்குளேயே இருந்தாள். ஊரிலுள்ள குளங்களில் இருந்து கிணறுகள் வரை தண்ணீர் சுத்தமாக இருக்கிறதாவென கூலிக்கு ஆள் வைத்துப் பார்த்தாள். ஒவ்வொரு இரவும் அவள் அண்ணாவுக்காக காத்திருந்தாள். குடங்களையும், செம்பையும் வற்றிய நீரோடு கனவில் கண்டாள். அன்றைக்கு ஊரில் இன்னொரு வீட்டில் வீரச்சாவு. இரவு முழுவதும் அங்கிருக்கலாமெனத் தோன்றியது. ஆனாலும் அம்மாவை தனியாக விடுவது பயமாகவுமிருந்தது. நள்ளிரவு வீட்டுக்கு புறப்பட்டு வந்தேன். இரண்டு நாய்கள் தெருவின் முடக்கில் படுத்திருந்தன. ஒரு நாயின் குழைவொலி கொஞ்சம் துணையாகவிருந்தது. வீட்டின் படலையைத் திறந்து உள்ளே நுழைந்தேன். தாழ்வாரத்தின் கீழே அமர்ந்திருந்த அண்ணா சிதைந்து அறுந்து தொங்கும் காலைப்பிடித்தபடி குடத்திலிருந்து தண்ணீரைக் குடிக்கிறான். இரண்டு கால்களும் சிதைந்து ரத்தம் விலகித் தேங்கியிருந்தது. விடாய் அடங்காது நிலமெனக் கிடக்கும் குருதியை அள்ளி பருகுகிறான். அண்ணா….என்று பெருங்குரலெடுத்து அழுதபடி ஓடிப்போனேன். வீட்டினுள்ளிருந்து அம்மா சொன்னாள் “ எடேய், விசரா கொண்ணா வீட்டுக்குள்ள என்னோட இருக்கிறான். உள்ள வா” வாசலில் நின்று உள்ளே பார்த்தேன். சிதைந்து தொங்கிய கால்களோடு குருதி தேங்கிய சாணத்தரையில் அண்ணாவுக்கு பாலூட்டிக் கொண்டிருந்தாள் அம்மா. என்னைக் கண்டதும் “ இவனுக்கு சரியான தண்ணி விடாய், பா**யை விட்டு வாய எடுக்க மாட்டேன் என்கிறான்” எனச் சொல்லி மகிழ்ந்தாள். அம்மா, என்றபடி அவளருகே ஓடினேன். அவள் என்னை அணைத்துச் சொன்னாள். “சந்ததி சந்தியாய் இவனுக்கு நாங்கள் தண்ணி வைக்கவேணும். அவன் எங்கட வாசலுக்கு பறந்து வருவான்” அண்ணாவின் கால்களைத் தொட்டுப் பார்த்தேன். குருதியின் நீளக் கனியென தணல் பழுத்திருந்தது. கைகளை விசுக்கென எடுத்துக் கொண்டேன். “சரியான வெக்கை என்ன! இதுதான் எங்கட ஞாபகமடா மோனே” என்றாள் அம்மா. https://akaramuthalvan.com/?p=1359
  4. ஜாலியா ஜிம்கானா .........! படம்: அமரதீபம்.....பாடியவர்: ஜிக்கி ........நடனம்: பத்மினி......! 😍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.