காலை 8 மணியிருக்கும். தான் கூறியதுபோலவே மைத்துனரின் வீட்டு வாயிலில் நண்பனது கார் வந்து நின்றது. "வெளிக்கிட்டியாடா?" என்று நண்பன் தொலைபேசியில் கேட்டான். "ஓம், வாறன்" என்று சொல்லிவிட்டு மைத்துனரின் வீட்டிலும் விடைபெற்று கிளம்பினேன்.
ஆனைப்பந்தியூடாக, பலாலி வீதியை குறுக்கறுத்து பருத்தித்துறை வீதியில் ஏறினோம். பருத்தித்துறை வீதியில் நல்லூருக்கு அண்மையில் ஒரு அசைவக உணவகம். காலைச்சாப்பட்டிற்காக வண்டியை நிறுத்தி வாங்கிக்கொண்டோம். சுடச்சுட பட்டீஸும், ரோல்ஸும். அருமை. ஒரு பை நிறைய வாங்கிக்கொண்டு வந்தான். பயணம் முழுதற்கும் என்று யோசித்திருக்கலாம்.
மீண்டும் பலாலி வீதியில் வண்டி ஏறியது. தின்னைவேலி, பாமர்ஸ் ஸ்கூல், கோண்டாவில்ச் சந்தி, டிப்போவடி என்று நான் சிறுவயதில் தவழ்ந்து திரிந்த வீதிகளும் ஊர்களும் நண்பனது வாகனத்தில் பயணிக்கும்போது சடுதியாகத் தோன்றி மறைந்தது போலவும், வீதிகள் சுருங்கிவிட்டது போலவும் ஒர் உணர்வு. இந்தவிடங்கள் எல்லாவற்றிலும் நிறையவே நினைவுகள் கலந்திருக்கின்றன. பசுமரத்தாணி போல என்று சொல்வார்களே? அதுபோல. என்றும் பசுமையான நினைவுகள். எளிதில் எழுத்தில் வடித்துவிடமுடியாதவை. ஆதலால் தொடர்ந்து செல்கிறேன்.
சிட்னியிலிருக்கும் நண்பர் ஒருவரது தகப்பனாரைப் பார்ப்பதே உரும்பிராய்ப் பயணத்தின் நோக்கம். ஊரில் பிரபல வர்த்தகரான அவர் அண்மைக்காலமாகச் சற்று சுகயீனமற்று இருந்தார். அவரது உடல்நிலை குறித்த கவலைகள் நண்பருக்கு இருந்து வருகின்றன. ஆகவே நான் யாழ்ப்பாணம் போகிறேன் என்று கேள்விப்பட்டதும், "ஒருக்கால்ப்போய் அப்பாவையும் பார்த்துவிட்டு வரமுடியுமா?" என்று கேட்டபோது ஆமென்றேன். டிப்போவடி தாண்டியதும் வரும் சிற்றொழுங்கையில் வீடு. விசாலமான இரண்டுமாடிக் கட்டடம். ஒழுங்கையினிரு மரங்கிலும் கமுக மரங்கள் ஓங்கி வளர்ந்திருக்க, வீட்டைச் சுற்றி சோலைபோன்று மரங்கள் நடப்பட்டிருந்த அமைதியான அழகான வீடு. நண்பன் தான் வாகனத்திலேயெ இருப்பதாகக்கூறிவிட நான் உள்ளே சென்றேன். என்னை முதன்முதலாகப்பார்ப்பதால் அவர் அதிகம் பேசவில்லை. பலவீனமாகத் தெரிந்தார். சிறிதுநேரம் மட்டுமே அவரால் வெளியில் வந்து அமர்ந்துகொள்ள முடிந்தது. "தம்பி, எனக்கு இப்படி கனநேரம் இருக்கேலாது, நான் உள்ளுக்கை போகப்போகிறேன், இருந்து தேத்தண்ணி ஏதாச்சும் குடிச்சுப்போட்டு போம்" என்று சொன்னார். "இல்லை அங்கிள் உங்களை பார்க்கத்தான் வந்தேன். நீங்கள் உள்ளுக்கைபோங்கோ, முடிந்தால் கொழும்பு போகுமுன் இன்னொருமுறை வந்து சந்திக்கிறேன்" என்று கூறிவிட்டுக் கிளம்பினேன்.
உரும்பிராயிலிருந்து பலாலி வீதியூடாக கோண்டாவில்ச் சந்திநோக்கிச் சென்றோம். அங்கிருந்து இடதுபுறம் திரும்பி இருபாலை, பின்னர் செம்மணிப் பகுதியூடாகச் சென்று கண்டிவீதியில் ஏறினோம்.
செம்மணி பற்றி 80 களிலும் 1995 இலும் நாம் கேள்விப்பாடிருக்கிறோம். புளொட் அமைப்பின் ஆரம்பகால உள்வீட்டுப்பிரச்சினைகளின்போதும் பின்னர் கிருசாந்தி குமாரசாமி மற்றும் அவரது தாய், சகோதரர், உறவினர் ஆகியோரின் படுகொலைகளின் போதும் இப்பெயர் தமிழர்களுக்கு மிகுந்த பரீட்சயமாகிப்போனது. செம்மணிச் சுடலையூடாக வரும்போது, "இதுதான் மச்சான் செம்மணிச் சுடலை, இங்கதான் கிருசாந்தியையும் மற்ற ஆக்களையும் கொண்டு புதைத்தவங்கள்" என்று நண்பன் கூறிக்கொண்டு வந்தான்.
கண்டிவீதிவழியாக பூநகரி நோக்கித் திரும்பி பயணிக்கத் தொடங்கியது நண்பனின் வாகனம். பூநகரி என்று கேள்விப்படும்போதெல்லாம் 1993 இல் புலிகள் நடத்திய தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையும் நாகதேவந்துறை என்கிற பெயரும் என்னால் தவிர்க்கமுடியாமல் மனதில் வந்துபோகிறது. பூநகரியின் புதிய பாலத்தினூடு வரும்போது இருவகையான உணர்வுகள். முதலாவது தமிழ்மக்களின் பயணம் இப்பகுதியில் சற்று இலகுவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது, எம்மீதான இனக்கொலை புரிந்தவர்கள் கட்டியிருக்கும் இப்பாலத்தில் நாம் பயணிக்கிறோம் என்பது. மக்களுக்கு இப்போது எது தேவையானதோ, அது இருந்தால்ப் போதும் என்று மனதை ஆறுதல்ப்படுத்திக்கொண்டேன்.
மப்பும் மந்தாரமுமாக இருந்த அந்த முற்பகல் வேளையில், சனநடமாட்டம் இல்லாத அப்பாதையில் நண்பன் 130 - 140 வேகத்தில் வாகனத்தைச் செலுத்திக்கொண்டு சென்றான். சிறுவயதில் இருந்தே காரோட்டுவதில் நன்கு பரீட்சயமானவன். ஆகவே, அவனது திறமையில் முழு நம்பிக்கை வைத்து இருக்கையில் அட்டை போல ஒட்டிக்கொண்டேன். பாலம் கடந்து இருமருங்கிலும் அண்மையில் பெய்த வெள்ளத்தில் வழிந்தோடாது இன்னும் மிச்சமாய் இருக்கும் நீர் வீதியின் ஓரங்களில் தரித்து நிற்க, பனை வடலிகளும், பற்றைகளும் செழித்து வளர்ந்து நிற்க, நன் இதுவரை வந்திராத தாயகத்தின் ஒரு பகுதியூடாகச் சென்றுகொண்டிருந்தேன், நண்பனின் அனுக்கிரகத்தில்.
யாழ்ப்பாணத்தில் நான் வாழ்ந்த 7 வருடங்களில் குடாநாட்டைத் தவிர வேறு எந்தப் பகுதிகளுக்கும் சென்றது கிடையாது. அதற்கான தேவையும் அப்போது இருந்ததில்லை. ஆகவே, தாயகத்தில் கிட்டத்தட்ட 90 வீதமான பகுதிகள் நான் வாழ்நாளில் பார்க்காதவை. எனவேதான் அக்கராயன் நோக்கிய பயணத்தில் எல்லாமே புதிய இடங்களாக எனக்குத் தெரிந்தது.
நாவற்குழி - கேரதீவு - மன்னார் வீதியிலிருந்து விலகி கிளிநொச்சி நோக்கிப் பயணித்தோம். இந்த வீதியின் இருமருங்கிலும் தெரிந்த இயற்கை அழகு அபரிமிதமானது. சிட்னியில் சில இடங்கள் பார்க்கும்போது அழகாக இருப்பதாகத் தோன்றும். ஆகா ஓகோ என்று செயற்கையாகப் புகழ்ந்துந்துகொள்கிறோம் என்றுகூட நினைப்பதுண்டு. ஆனால், தாயகத்தில் இருக்குமிந்த அழகையெல்லாம் பார்க்க மறந்துவிட்டோமே என்று பெரிய ஏக்கம் வந்துபோனது. அத்துடன் நான் இங்கு இருக்கப்போவது ஓரிரு நாட்களுக்கு மட்டுமே என்று நினைத்தபோது ஏக்கமும் சேர்ந்துகொண்டது. தாயகத்தில் வாழும் மக்கள்பேறுபெற்றவர்கள் என்று நான் நினைப்பதற்கு இந்த இயற்கை அழகும் இன்னொரு காரணம்.
ஒருவாறு கிளிநொச்சி நகரை அடைந்தோம். நகரே விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று மாவீரர் நாள். கண்டி - யாழ்ப்பாணம் பிரதான வீதியிலும், அவ்வீதியிலிருந்து கனகபுரம், அக்கராயன் நோக்கிச் செல்லும் வீதியிலும், வீதியின் மேலாகக் கம்பீரமாக அலங்கரிக்கப்பட்டிருந்த வளைவுத் தோரணம் "மாவீரர் நாள் 2023" என்று சொல்லிற்று. ஆக்கிரமிப்பாளனின் ஏதோவொரு படைத் தலைமையகம் முன்னால் இருக்க, மாவீரர் நாள் அனுஷ்ட்டிக்கப்படும் கொட்டகைகளும், வளைவுகளும், தோரணங்களும் அப்பகுதியெங்கிலும் சிவப்பு மஞ்சள் வர்ணத்தை அள்ளித் தெளித்திருந்தன. எமது விடுதலை வீரர்களை அழித்துவிட்டோம், எச்சங்களையும் தோண்டி எறிந்துவிட்டோம் என்று ஆக்கிரமிப்பாளன் கொக்கரித்து வந்தபோதும் மக்களின் மனங்களில் அவர்கள் இன்னும் வாழ்கிறார்கள் என்பதற்கு நான் அன்று பார்த்த காட்சிகள் சாட்சியம். மாவீரர் நாள் வளைவுகளூடாக நாம் பயணிக்கும்போது அவற்றை முடிந்தளவு படமாக்கிகொண்டேன். "மச்சான் , கவனம், பாத்தெடு. உன்ர போனை நோண்டினாங்கள் என்டால் பிரச்சினை வரலாம்" என்று நண்பன் கூறவும், "உவ்வளவு சனம் நிண்டு அவனுக்கு முன்னாலை உதைச் செய்யுது?" என்று கேட்டேன். "ஆருக்குத் தெரியும், பிரச்சினை குடுக்கிறதெண்டால் குடுப்பாங்களடா" என்று பதில் வந்தது.
கிளிநொச்சியிலிருந்து அக்கராயன் போகும் வீதியில்த்தான் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் வருகிறது. நாம் அவ்விடத்தை அடையும்போது மாலையாகிவிட்டிருந்தது. மாவீரர் துயிலும் இல்லம் ஆக்கிரமிப்பாளனினால் அழிக்கப்பட்டபோது மாவீரர் கல்லறைகள் தோண்டப்பட்டு, நடுகற்கள் உடைத்தெறியப்பட்டிருந்தன. ஆனால், தொடர்ந்து வந்த வருடங்களில் அப்பகுதி மக்கள் துயிலும் இல்லத்தைப் புணரமைத்து, நடுகற்களைச் சேகரித்து ஒரு மலைபோல குவித்து வைத்திருந்தார்கள். அக்குவியலின் அடிவாரத்திலிருக்கும் இன்னும் முற்றாக உடையாத நடுகற்களில் மாவீரரது பெயர்கள் உச்சரித்துக்கோன்டிருந்தன. இவற்றோடு அந்தத் துயிலும் இல்லம் எங்கும் மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கவென தென்னங்கன்றுகள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன. அப்பகுதியெங்கும் வீதிகளும், வளைவுகள் மஞ்சள் சிவக்கு நிறக் கொடிகளில் அலங்கரிக்கப்பட்டிருக்க, தேசம் எழுச்சி பெற்று நின்றது போன்ற உணர்வு. கனகபுரம் மாவீரர் துயிலும் இல்ல வாயிலில் பெருத்த சனக்கூட்டம். நிகழ்வுள் ஆரம்பிக்கப்பட இன்னும் பல மணித்தியாலங்கள் இருக்கவே மக்கள் பெருவாரியாக அப்பகுதிக்கு வந்துகொண்டிருந்தார்கள். மழை தூரத் தொடங்கியிருந்தது. ஆனால் மக்கள் வெள்ளமும் குறையவில்லை. அக்கூட்டத்தைப் படமெடுக்கவென ஒரு சிலர் வீதியின் எதிர்க்கரையில் நின்றுகொண்டிருந்ததைக் காணக்கூடியதாய் இருந்தது. அவர்கள் எமது மக்களில்லை என்பதும் தெளிவாகத் தெரிந்தது.
எனது தம்பியின் பூதவுடலும் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலேயே விதைக்கப்பட்டதாக அறிந்தேன். துயிலும் இல்லத்தைக்கடந்து கார் மெதுவாகச் சென்றுகொண்டிருக்கும்போது அவனுக்காகவும் இன்னும் மரணித்த ஆயிரமாயிரம் மாவீரகளுக்காகவும் மனம் வேண்டிக்கொண்டது. இப்போதைக்கு இதைத்தவிர வேறு என்னதான் செய்ய முடியும் என்னைப்போன்றவர்களா? உங்கள் கனவுகள் வீண்போகாது என்று மனதிற்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேன். வீண்போகக்கூடாது.