Everything posted by ஏராளன்
-
பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள 135 வைத்தியசாலைகள் மூடப்படக் கூடிய அபாயம் ; பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் திங்கள் முதல் தொடர் வேலை நிறுத்தம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க முயற்சிக்கின்றோம் - சுகாதார அமைச்சர் Published By: DIGITAL DESK 2 09 AUG, 2025 | 04:05 PM (எம்.மனோசித்ரா) அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை திங்கட்கிழமை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டத்தினை தடுப்பதற்கு சுகாதார அமைச்சின் சார்பில் சகல முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. இனங்காணப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு வழங்கப்படும். எனவே பொது மக்களுக்கு தடையற்ற மருத்துவ சேவையை வழங்குவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சனிக்கிழமை (09) இடம்பெற்ற இலங்கை அவசர மருத்துவ நிபுணர்கள் கல்லூரியின் வருடாந்த ஆய்வு மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துக்கு வேலை நிறுத்த போராட்டத்துக்குச் செல்வதற்கான காரணமொன்று இருக்கும் என நான் நினைக்கவில்லை. அவர்களுடன் நான் கலந்துரையாடினேன். சில இடங்களிலுள்ள பிரச்சினைகள் இனங்காணப்பட்டுள்ளன. தற்போது சேவையாற்றும் வைத்தியர்கள் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுடன் இணைக்கப்பாட்டுடனேயே பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு நாம் நியாயமான தீர்வொன்றை வழங்குவோம். மக்களுக்கு சிறந்த சேவை வழங்க வேண்டும் என்பதே அனைவரதும் நோக்கமாகும். எவ்வாறிருப்பினும் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே நாம் அந்த சேவையை ஆற்றிக் கொண்டிருக்கின்றோம். கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகளுக்கு தற்போது படிப்படியாக தீர்வினை வழங்கிக் கொண்டிருக்கின்றோம். எனவே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடாது என எதிர்பார்க்கின்றோம். கடந்த ஆட்சிக் காலங்களில் செயற்பட்டதைப் போன்றே தற்போதும் சில அதிகாரிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு நியாயமானதல்ல. சுகாதார அமைச்சின் அனைத்து அதிகாரிகளும் ஒரே இலக்குடனேயே பணியாற்றுகின்றனர். சுகாதாரத்துறையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு என்ன காரணம் என்பதை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நன்கு அறியும். தட்டுப்பாடு நிலவும் மருந்துகளை விரைவாக கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. திங்களன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் வேலை நிறுத்த போராட்டத்தினை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் சுகாதார அமைச்சின் சார்பில் நாம் முன்னெடுத்திருக்கின்றோம். எமது முயற்சி வெற்றியளிக்கும் என்று நம்புகின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/222173
-
முத்தையன்கட்டில் இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனவர் சடலமாக மீட்பு : விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ரவிகரன் வலியுறுத்து
முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன் : சந்தேகத்தில் 6 இராணுவத்தினர் கைது : மூவருக்கு விளக்கமறியல்! 09 AUG, 2025 | 08:08 PM முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் 6 இராணுவ வீரர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் 3 இராணுவத்தினரை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை (8) முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடாத்தியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போன நிலையில் இன்று காலை (09) குறித்த குடும்பஸ்தர் குளத்திலிருந்து சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, குறித்த இளைஞனின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு எடுத்து சென்று பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் உத்தரவிட்ட நிலையில், சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த இராணுவ முகாமிற்கு சென்ற ஐவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன் மற்றுமொரு நபருக்கு முதுகு பகுதிகளில் பலத்த அடிகாயங்கள் ஏற்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். மேலதிக விசாரணைகளை ஒட்டிசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்ற நிலையில் ஐந்து இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ முகாமிற்கு வாருங்கள் தகரங்கள் கழற்ற வேண்டும் என அழைப்பு எடுத்து வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடத்தியதில், முத்தையன்கட்டில் வசிக்கும் எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற 32 வயதுடைய ஏழு மாத குழந்தையின் தந்தையே காணாமல்போன நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு வாருங்கள் தகரங்கள் கழற்ற வேண்டும் என குறித்த பகுதி இளைஞர் ஒருவருக்கு ஒரு தொலைபேசி இலக்கத்தில் இருந்து வெள்ளிக்கிழமை (07) இரவு 7.30 மணியளவில் அழைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்ததாகவும் அதனையடுத்தே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இராணுவ முகாம் ஒரு சில நாட்களில் விடுவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவ் இராணுவ முகாமிலுள்ள கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் தகரங்கள் தருவதாக கூறி அப்பகுதியில் இளம் குடும்பஸ்தருக்கு இராணுதினர் ஒருவரால் தொலைபேசியில் கூறப்பட்டுள்ளது. அதனையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஐவர் சென்றுள்ளனர். இராணுவ முகாமிற்கு சென்ற இளைஞர்களுக்கு தடிகள், கம்பிகளால் இராணுவத்தினர் துரத்தி துரத்தி குறித்த இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக உள்ள குளம் வரை தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், தாக்குதலால் என்ன செய்வதென்று தெரியாது இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக ஓடி தப்பி வந்ததாகவும் 20 ற்கு மேற்பட்ட இராணுவத்தினர் தம்மை தாக்கியதாக தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் ஒருவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இராணுவ முகாமிற்கு சென்ற ஐந்து நபர்களில் நால்வர் திரும்பி வந்துள்ள நிலையில் ஒருவர் மாயமாகிய நிலையில், இன்று காலை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இன்றையதினம் இராணுவ முகாமிற்கு சென்ற இராணுவ வாகனம் வீதியில் பொதுமக்களால் வழிமறிக்கப்பட்டு நியாயம் கிடைக்க வேண்டும் என கேட்டுள்ளனர். காணாமல்போன குறித்த இளைஞர் தப்பி ஒடும்போது இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக உள்ள முத்தையன்கட்டு குளத்தின் பின்பகுதியில் வீழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அப்பகுதி கிராம மக்கள் நீரில் இறங்கி நேற்று வெள்ளிக்கிழமை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோதும் குறித்த குடும்பஸ்தரின் சடலம் இன்றுகாலை மீட்கப்பட்டது. இந்நிலையில் குறித்த காணாமல்போன இளைஞனின் சகோதரரால் குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/222183
-
மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
மன்னார் சிந்துஜா மரணம் தொடர்பில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் மூவர் கைது 09 AUG, 2025 | 08:16 PM மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரியான இளம் குடும்ப பெண் மரணத்துடன் தொடர்புடையதாக பணி நீக்கம் செய்யப்பட்ட வைத்தியர் ஒருவர் உள்ளடங்களாக ஐவரில் மூவர் இன்றைய தினம் சனிக்கிழமை (9) கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த வருடம் ஜூலை மாதம் 28 உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரியான இளம் குடும்ப பெண்ணின் மரணத்திற்கு நீதி கோரி வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. மருத்துவக் கவனயீனத்தால் ஏற்பட்ட அதீத இரத்தப்போக்கு காரணமாக குறித்த இளம் தாயின் மரணம் சம்பவித்துள்ளது என மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளிவந்தது. இந்த நிலையில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் உள்ளடங்களாக இரண்டு தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக குறித்த ஐவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குறித்த ஐவரில் தாதிய உத்தியோகத்தர் ஒருவரும், இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர் களும் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை(9) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் போது மன்னார் நீதவான் குறித்த மூவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் சந்தேக நபரான வைத்தியர் ஒருவரையும், தாதிய உத்தியோகத்தர் ஒருவரையும் கைது செய்ய உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்தார். இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/222178
-
முத்தையன்கட்டில் இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனவர் சடலமாக மீட்பு : விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ரவிகரன் வலியுறுத்து
முல்லைதீவில் இளைஞன் மரணமடைந்தமை தொடர்பில் நீதியான விசாரணை முல்லைத்தீவு முத்தையன் கட்டு இராணுவ முகாமிற்குள் சென்ற இளைஞர்கள் தாக்கப்பட்டமை மற்றும் மரணமடைந்தமை தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குள் சென்ற இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தப்பியோடிய இளைஞர்களில் ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் இன்று (9) கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குள் 7 இளைஞர்கள் சென்றதாகவும், அவர்கள் இராணுவத்தால் விரட்டப்பட்டதாகவும், தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளதுடன் தப்பியோடிய ஒருவர் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களுடன் தொலைபேசி ஊடாக உரையாடியதுடன் அவர்களது கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டேன். இது தொடர்பில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பிரதேச செயலாளர் ஆகியோருடன் தொலைபேசியில் பேசியிருந்தேன். பொலிஸார் இது தொடர்பில் நீதியான வகையில் விசாரணைகளை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளனர். அத்தோடு, எமது உயர்மட்ட அமைச்சர்களுக்கும் இது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளேன். அவர்களும் இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளனர். ஆகவே, இச் சம்பவம் தொடர்பில் எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு உண்மைத் தன்மையினை வெளிபபடுத்தி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்படும் எனத் தெரிவித்தார். -வவுனியா தீபன்- https://adaderanatamil.lk/news/cme3z7wt802bqqp4k1h7g2pps
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஆபரேஷன் சிந்தூர்: எத்தனை பாகிஸ்தான் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன? - இந்திய விமானப்படை தலைவர் புதிய தகவல் பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, இந்தியா நடத்திய ராணுவ நடவடிக்கைகள் பற்றி விமானப் படை தலைவர் பேசினார். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்த ஆண்டு மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையே நிகழ்ந்த ராணுவ மோதலின்போது ஐந்து போர் விமானங்களும் ஒரு பெரிய விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தலைவர் மார்ஷல் ஏபி சிங் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இதைப்பற்றி பேசியுள்ளார். இந்தியா நடத்திய ராணுவ நடவடிக்கைகள் பற்றி விமானப் படை தலைவர் பேசினார். ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மே 6, 7 இரவு அன்று நடந்த தாக்குதலில் குறி வைக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்திருந்தது. இந்த நடவடிக்கைகளுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' எனப் பெயரிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் தொடங்கியது. பெங்களூருவில் நடைபெற்ற 16வது ஏர் சீஃப் மார்ஷல் எல் எம் கத்ரே சொற்பொழிவில் ஏபி சிங் கலந்து கொண்டார். அப்போது, இந்த ராணுவ நடவடிக்கையின்போது இந்திய விமானப்படை குறைந்தது ஐந்து பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் மற்றும் ஒரு பெரிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்தார். பெரிய விமானம் எலிண்ட் (ELINT) அல்லது ஏஇடபிள்யு&சி (AEW&C) ஆக இருக்கலாம் எனத் தெரிவித்தார். ஏபி சிங்கின் கூற்றுப்படி விமானம் தரையிலிருந்து 300 கிலோமீட்டர் தூரத்தில் குறிவைக்கப்பட்டது. இது தற்போது வரை மேற்கொள்ளப்பட்டதிலே தரையிலிருந்து வான் இலக்குகளைக் குறிவைக்கும் மிகப்பெரிய தாக்குதல் ஆகும் என்றார். '80-90 மணி நேரம் வரை நீடித்த உயர் தொழில்நுட்ப போர்' பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, இந்தியா – பாகிஸ்தான் ராணுவ மோதலை 'உயர் தொழில்நுட்ப போர்' என்று விவரித்தார். இந்தியா – பாகிஸ்தான் ராணுவ மோதலை 'உயர் தொழில்நுட்ப போர்' என்று அவர் விவரித்தார். "இது இந்தியா சண்டையிட்ட உயர் தொழில்நுட்ப போர் என நான் கூறுவேன். இதில் அவர்களின் (பாகிஸ்தான்) வான் பாதுகாப்பு அமைப்புக்கு மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தினோம்" எனத் தெரிவித்தார். மேலும், "இந்த இழப்புகளைப் பார்த்த பிறகு, இனியும் இதைத் தொடர்ந்தால் அதிக இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்தது. அதனால் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தனர். இது உயர்மட்ட அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது" என்றார். மே 7-10 வரை நடைபெற்ற ராணுவ மோதல் தொடர்பாக பல்வேறு வகையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. மே 31 ஆம் தேதி, இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகான், பாகிஸ்தான் உடனான மோதலின்போது இந்திய விமானப்படை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்திருந்தார். இந்தியா - அமெரிக்கா உறவில் ஏற்பட்டுள்ள 'கசப்புணர்வு' பாகிஸ்தானுக்கு சாதகமாகுமா? 'இந்தியாவுக்கு பாகிஸ்தான் கச்சா எண்ணெய் விற்கலாம்' - பாகிஸ்தானின் எண்ணெய் வளம் பற்றிய ஒரு பார்வை இந்தியாவை விமர்சித்துவிட்டு பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்த டிரம்ப் - எந்த துறைகளுக்குப் பாதிப்பு? 'ஆபரேஷன் சிந்தூரை' நிறுத்த சொன்னது யார்? வேறுபடும் மோதி - டிரம்ப்! இந்திய விமானங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறிய பாகிஸ்தானின் கூற்றையும் அவர் முற்றிலுமாக மறுத்தார். எனினும், கடந்த மாதம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா – பாகிஸ்தான் மோதலில் 'ஐந்து விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது' எனத் தெரிவித்தார். ஆனால், எந்த நாடுகளின் விமானங்கள் பாதிக்கப்பட்டன என டிரம்ப் தெரிவிக்கவில்லை. இதற்கு முன்னதாக ஐந்து இந்திய ராணுவ விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. எனினும், இந்தியா இந்தக் கூற்றை தொடர்ந்து மறுத்து வருகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c78znz37862o
-
மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
மன்னாரில் காற்றாலை அமைத்தல், கனிய மணல் அகழ்வுக்கு எதிராக தொடர் போராட்டம் : பேசாலை கிராம மக்களும் இணைவு 09 AUG, 2025 | 02:46 PM மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி 2வது கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியாக மன்னார் பஜார் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை (9) 7 வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் மன்னார் பேசாலை கிராம மக்கள் கலந்து கொண்டு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். மன்னார் தீவு பகுதியில் 2வது கட்டமாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) பாரிய காற்றாலைகளின் பாகங்கள் வாகனங்களில் மன்னார் நகர பகுதியை நோக்கி எடுத்து வரப்பட்ட நிலையில் மன்னார் தள்ளாடி சந்தியில் ஞாயிற்றுக்கிழமை மாலை மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் தள்ளாடி சந்தி மற்றும் மன்னார் சுற்றுவட்ட பகுதியில் தொடர்ச்சியாக மக்களும்,பொது அமைப்புக்கள் இணைந்து சுழற்சி முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில்,மக்களின் எதிர்ப்பையும் மீறி காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பாகங்கள் மன்னார் நகர பகுதிக்கு பலத்த பொலிஸாரின் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டது. எனினும் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம் பெற்று வந்தது.இந்த நிலையில் குறித்த போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் மன்னார் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பேருந்துகள் மூலம் இன்றைய தினம் சனிக்கிழமை (09) வருகை தந்து குறித்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கினர். குறிப்பாக மன்னார் தீவு பகுதியில் ஏற்கனபேவ அமைக்கப்பட்ட காற்றாலை மின் கோபுரங்களினால் மீனவர்கள் பாரிய அளவில் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதோடு,காற்றாலைகள் காணப்படும் பகுதிகளில் வசித்து வருகின்ற மக்கள்,குறிப்பாக வயோதிபர்கள்,சிறுவர்கள்,கர்ப்பிணித்தாய்மார்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும் காற்றாலை கோபுரங்கள் அமைத்ததன் காரணமாக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளினால் அண்மையில் ஏற்பட்ட மழை காரணமாக பேசாலை கிராமம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாரிய வெள்ள நீர் தேங்கிய நிலையில் அவற்றை கடலுக்குள் செலுத்த தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததாகவும் அந்த மக்கள் தெரிவித்தனர். மேலும் மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் கணிய மணல் அகழ்வுக்கு நாங்கள் ஒரு போதும் அனுமதி வழங்க மாட்டோம் எனவும் மன்னார் தீவை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் குறித்த இரு திட்டங்களையும் நிறுத்த ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மன்னார் நகர சுற்று வட்டத்தில் இருந்து பதாகைகளை ஏந்தியவாறு மாவட்டச் செயலக பிரதான வீதியூடாக சென்று மீண்டும் நகர சுற்று வட்ட பகுதியை சென்றடைந்தனர். பின்னர் நகர சுற்றுவட்ட பகுதியில் தமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/222161
-
ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நாளை
09 AUG, 2025 | 01:07 PM (எம்.மனோசித்ரா) ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஞாயிற்றுக்கிழமை (10) நாடளாவிய ரீதியில் 2587 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளன. இம்முறை சிங்கள மொழி மூலம் 2,31,637 மாணவர்களும், தமிழ் மொழி மூலம் 76,313 மாணவர்களும் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளனர். அதற்கமைய ஒட்டு மொத்தமாக 3,07,951 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பரீட்சை நிலையங்களுக்கான முழுமையான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி தெரிவித்தார். கொழும்பிலுள்ள பரீட்சை திணைக்களத்தில் சனிக்கிழமை (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் அவற்றை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து அதற்கான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே ஏதேனும் அனர்த்த நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து தேவையான ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும். யாழ்ப்பாணத்தில் தீவுகளில் நிறுவப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களுக்கு வினாத்தாள்களைக் கொண்டு சேர்ப்பதற்கு கடற்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏதேனும் தேவை ஏற்படும் பட்சத்தில் விமானப்படை மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படும். தடையற்ற மின் விநியோகம் தொடர்பில் இலங்கை மின்சாரசபையுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் குறித்து இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று அவசர மருத்துவ நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பரீட்சாத்திகள் காலை 8.30 மணிக்கு பரீட்சை மண்டபங்களுக்கு சென்று விட வேண்டும். முதலில் இரண்டாம் பகுதி வினாத்தாள் வழங்கப்படும். காலை 9.30க்கு பரீட்சை ஆரம்பமாகி 10.45க்கு நிறைவடையும். அதன் பின்னர் முற்பகல் 11.15க்கு முதலாம் பகுதி வினாத்தாள் வழங்கப்படும். 12.15க்கு பகுதி ஒன்று பரீட்சை நிறைவடையும். பரீட்சைக்கு தேவையான உபகரணங்கள் மாத்திரமமே மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படும். கைக்கடிகாரத்தை உபயோகிக்க முடியும். ஆனால் நவீன கைக்கடிகாரங்களை உபயோகிப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்றார். https://www.virakesari.lk/article/222152
-
முத்தையன்கட்டில் இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனவர் சடலமாக மீட்பு : விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ரவிகரன் வலியுறுத்து
09 AUG, 2025 | 03:32 PM முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்துஐயன்கட்டு பகுதியில் கடந்த வியாழக்கிழமை (07) அன்று இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போய் தேடப்பட்டுவந்த நபர் முத்துஐயன்கட்டுக் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களிடம் உடனடியாக வாக்குமூலங்களைப் பெறுவதுடன், துரிதகதியில் விசாரணைகளை மேற்கொண்டு, குற்றத்தில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 07.08.2025 இரவு இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போன நிலையில் தேடப்பட்டுவந்த முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்துஐயன்கட்டு இடதுகரை, ஜீவநகர் பகுதியைச்சேர்ந்த 32 வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்னும் குடும்பஸ்தர் முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து இன்று சனிக்கிழமை (09) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறிப்பாக கடந்த 07.08.2025 வியாழக்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்ட குறித்த நபர் உள்ளடங்கலாக முத்துஐயன்கட்டு இடதுகரை ஜீவநகர் பகுதியைச் சேர்ந்த ஐவர், முத்துஐயன்கட்டுக் குளத்திற்கு அண்மைய பகுதியில் அமைந்துள்ள 63 ஆவது படைப்பிரிவு இராணுவ முகாம் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவ்வாறு இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை அறிந்து அப்பகுதி மக்கள் குறித்த பகுதிக்குச் சென்றபோது, ஒரு இளைஞனை இராணுவத்தினர் மிகக் கொடூரமாகத் தாக்கிக்கொண்டிருந்ததாக நேரில் பார்வையிட்ட ஊர்மக்கள் தெரிவிக்கின்னர். இந்நிலையில் இராணுவத்தால் தாக்கப்பட்ட இளைஞனை ஊர்மக்கள் காப்பாற்றச் சென்றபோது அவர்களையும் இராணுவத்தினர் தாக்கமுற்பட்டுள்ளதாக மக்களால் தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து ஊர் மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற பலத்த முரண்பாட்டினையடுத்து, இராணுவத்தினர் இளைஞனை ஊர்மக்களிடம் ஒப்படைத்துள்ளனர். இவ்வாறு இராணுவத்தினரால் தாக்கப்பட்ட குறித்த இளைஞன் முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றார். இந்நிலையில் இராணுவத்தால் தாக்கப்பட்ட ஒருவர் காணாமல் போயிருந்தார். இவ்வாறு காணாமல்போயிருந்த நபரை ஊர்மக்கள் இணைந்து முத்துஐயன்கட்டுக்குளத்தில் தேடியதுடன், கடந்த 08.08.2025அன்று முத்துஐயன்கட்டுப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இத்தகைய சூழலிலேயே இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல் போயிருந்தநபர் 09.08.2025 இன்று காலை முத்துஐயன்கட்டுக் குளத்திலிருந்து சடலமாக இனங்காணப்பட்டிருந்தார். குறிப்பாக முத்துஐயன்கட்டு இடதுகரை ஜீவநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முத்துஐயன்கட்டுப் பகுதியிலுள்ள இராணுவத்தினர் குறைந்தவிலையில் எரிபொருள் உள்ளிட்ட பொருட்களை வழங்கிவந்ததாகவும், இவ்வாறு இராணுவத்தால் இளைஞர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வந்த பின்னணியிலேயே இராணுவத்தால் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இந்த கொலைச்சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான சூழலில் சடலம் இனங்காணப்பட்ட குறித்த இடம் குற்றப்பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டு, சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில் குறித்த இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் த.பிரதீபன் வருகைதந்திருந்தார். இந்நிலையில் நீதவானின் முன்னிலையில் சடலம் குளத்திலிருந்து மீட்கப்பட்டதுடன், தடயவியல் பொலிசாரால் தடயவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சடலம் உடல்கூற்றுப் பரிசோதனைக்காக கிளிநொச்சிக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த இடத்திற்கு வருகைதந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இராணுவத்தின் அடாவடிச் செயற்பாடுகள் குறித்து நீதிபதியிடம் முறையிட்டிருந்தார். அதேவேளை மக்களாலும் இதன்போது நீதிபதியிடம் முறையீடுகள் செய்யப்பட்டன. மக்களின் முறைப்பாடுகளை பொலீசாரிடம் வாக்குமூலமாகப் பதிவுசெய்யுமாறு நீதிபதியால் இதன்போது தெரிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் இந்த விவகாரம் தொடர்பில் உடனடியாக மக்களிடம் வாக்குமூலங்களைப் பெறுமாறும், குற்றச்செயல்களில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதன்போது போலிசாரிடம் வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222166
-
காஸாவில் பேரழிவுக்கு நடுவே ஹமாஸ் ஊழியர்களுக்கு சம்பளப் பணத்தை வழங்கும் 'ரகசிய நெட்வொர்க்'
பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, காஸாவில் வங்கி அமைப்பு செயல்படவில்லை என்பதால், சம்பளம் பெறுவது மிகவும் சிக்கலானதும், சில நேரங்களில் ஆபத்தானதுமாக இருக்கிறது. கட்டுரை தகவல் ருஷ்டி அபுஅலூஃப் காஸா செய்தியாளர் 9 ஆகஸ்ட் 2025, 03:56 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் கிட்டத்தட்ட இரண்டு வருடப் போருக்குப் பிறகு, ஹமாஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன் ராணுவத் திறன் பலவீனமடைந்துள்ளது, அதன் அரசியல் தலைமை மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆனால், போர் நடந்து கொண்டிருந்த போதிலும், ரகசிய முறையைப் பயன்படுத்தி, ஹமாஸ் தொடர்ந்து பணம் வழங்கி வந்துள்ளது. இதன் மூலம், 30,000 அரசு ஊழியர்களுக்கு, மொத்தமாக 7 மில்லியன் டாலர் (சுமார் 5.3 மில்லியன் யூரோ ) சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. காஸாவில் பிபிசி பேசிய 3 அரசு ஊழியர்கள் கடந்த வாரம் தலா 300 டாலர் பெற்றதை உறுதிப்படுத்தினர். இவ்வாறு சம்பளம் பெற்ற பல்லாயிரக்கணக்கான ஊழியர்களில் இவர்களும் அடங்குவர். இவர்கள் போர் தொடங்குவதற்கு முன் பெற்ற முழு சம்பளத்தில் 20% மட்டுமே ஒவ்வொரு 10 வாரங்களுக்கு ஒருமுறை பெறுகின்றனர். பணவீக்கம் அதிகரித்து வருவதால், இந்த குறைவான சம்பளம் ஹமாஸின் விசுவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இஸ்ரேலிய கட்டுப்பாடுகளால் கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உதவி அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. காஸாவில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது. சமீபத்திய வாரங்களில் ஒரு கிலோ மாவின் விலை 80 டாலர் வரையிலும் உயர்ந்துள்ளது. பட மூலாதாரம், GETTY IMAGES காஸாவில் வங்கி அமைப்பு செயல்படவில்லை என்பதால், சம்பளம் பெறுவது மிகவும் சிக்கலானதும், சில நேரங்களில் ஆபத்தானதுமாக இருக்கிறது. இஸ்ரேல், ஹமாஸின் சம்பள விநியோகஸ்தர்களை அடையாளம் கண்டு தாக்குகிறது, இதனால் ஹமாஸின் ஆட்சித் திறனை சீர்குலைக்க முயல்கிறது. காவல்துறை அதிகாரிகள் முதல் வருமான வரித்துறை ஊழியர்கள் வரை, பலரும் தங்கள் தொலைபேசியிலோ அல்லது தங்கள் துணைவரின் தொலைபேசியிலோ ரகசிய செய்தி பெறுகின்றனர். அந்த செய்தியில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு "நண்பரைச் சந்தித்து தேநீர் அருந்த" செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அந்த குறிப்பிடப்பட்ட இடத்தில், ஒரு ஆணோ, சில சமயங்களில் ஒரு பெண்ணோ அந்த ஊழியரிடம் வந்து, சீல் வைக்கப்பட்ட ஒரு உறையை அமைதியாக ஒப்படைத்துவிட்டு, எதுவும் பேசாமல் மறைந்து விடுகிறார். அந்த உறைக்குள் தான் சம்பளப் பணம் வைக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் மத விவகார அமைச்சகத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர், பாதுகாப்பு காரணங்களுக்காக தனது பெயரை வெளியிட மறுத்தார். அவர், சம்பளம் வாங்கும் போது ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி விவரித்தார். "ஒவ்வொரு முறை சம்பளம் வாங்கச் செல்லும் போதும், என் மனைவி மற்றும் குழந்தைகளிடம் விடைபெற்றுச் செல்கிறேன். நான் திரும்பி வருவேனா என்பது தெரியாது," என்று கூறிய அந்த அதிகாரி, "பல முறை, இஸ்ரேல் சம்பள விநியோக இடங்களைத் தாக்கியுள்ளது. காஸா நகரில் ஒரு பரபரப்பான சந்தையை குறிவைத்த தாக்குதலில் நான் உயிர் பிழைத்தேன்."என பகிர்ந்துகொண்டார். அலா (பாதுகாப்புக்காக அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஹமாஸ் நடத்தும் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். ஆறு பேர் கொண்ட குடும்பத்தில் இவர் தான் பொருள் ஈட்டும் ஒரே நபர். "எனக்கு 1,000 ஷெக்கல்கள் (சுமார் 300 டாலர்) கிடைத்தன, ஆனால் எல்லாம் பழைய, கிழிந்த நோட்டுகள். வியாபாரிகள் இவற்றை ஏற்கவில்லை. 200 ஷெக்கல்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய வகையில் இருந்தன. மீதி பணத்தை என்ன செய்வது என தெரியவில்லை," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "இரண்டரை மாத கால காத்திருப்புக்குப் பிறகு, இப்படி கிழிந்த பணத்தில் சம்பளம் தருகிறார்கள்", "என் குழந்தைகளுக்கு உணவளிக்க கொஞ்சம் மாவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், உதவி விநியோக மையங்களுக்கு அடிக்கடி செல்ல வேண்டியிருக்கிறது. சில சமயங்களில் கொஞ்சம் மாவு கொண்டு வர முடிகிறது, ஆனால் பெரும்பாலும் வெறுங்கையுடன் திரும்புகிறேன்" என்றும் குறிப்பிட்டார். மார்ச் மாதம், இஸ்ரேல் ராணுவம், கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையில் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் நிதித் தலைவர் இஸ்மாயில் பர்ஹூமை கொன்றதாக தெரிவித்தது. அவர் ஹமாஸின் ராணுவப் பிரிவுக்கு நிதி திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டார். ஹமாஸின் நிர்வாக மற்றும் நிதி அமைப்புகள் பெருமளவு அழிக்கப்பட்டிருந்தாலும், அவர்களால் இன்னும் ஊழியர்களுக்கு எப்படி சம்பளம் வழங்க முடிகிறது என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஹமாஸின் பொருளாதார நடவடிக்கைகளை நன்கு அறிந்த, முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் இதுகுறித்து பேசினார். ஹமாஸின் நிதி நடவடிக்கைகளை நன்கு அறிந்த ஒரு மூத்த அதிகாரி, பிபிசியிடம் பேசுகையில், 2023 அக்டோபர் 7-ஆம் தேதி தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு முன், அவர்கள் நிலத்தடி சுரங்கங்களில் சுமார் 700 மில்லியன் டாலர் ரொக்கமாகவும், நூற்றுக்கணக்கான மில்லியன் ஷெக்கல்களையும் சேமித்து வைத்திருந்ததாக தெரிவித்தார். இந்த நிதியை ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் மற்றும் அவரது சகோதரர் முகமது ஆகியோர் நேரடியாக கண்காணித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், இருவரும் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டனர். பட மூலாதாரம், GETTY IMAGES ஹமாஸின் செயலால் மக்கள் அதிருப்தி ஹமாஸ் வரலாற்று ரீதியாகவே, காஸா மக்களுக்கு விதிக்கப்பட்ட அதிக இறக்குமதி வரிகள் மற்றும் பிற வரிகளின் மூலம் நிதி திரட்டியுள்ளது. கத்தாரிடமிருந்து மில்லியன்கணக்கான டாலர் நிதியைப் பெற்றுள்ளது. ஹமாஸின் ராணுவப் பிரிவான கஸ்ஸாம் படை, தனி நிதி அமைப்பின் மூலம் செயல்படுகிறது, இதற்கு முக்கியமாக இரான் நிதியளிக்கிறது. உலகில் மிகுந்த செல்வாக்கு கொண்ட இஸ்லாமிய அமைப்புகளில் ஒன்றான, எகிப்தை தளமாகக் கொண்ட (தடை செய்யப்பட்ட) இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் ஒரு மூத்த அதிகாரி, தங்கள் பட்ஜெட்டில் சுமார் 10% ஹமாஸுக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்தார். போர்க்காலத்தில் வருவாய் ஈட்ட, ஹமாஸ் வணிகர்களிடம் வரி வசூலித்து, சிகரெட்டுகளை 100 மடங்கு அதிக விலையில் விற்று வருகிறது. போருக்கு முன் 20 சிகரெட்டுகள் கொண்ட பெட்டி 5 டாலராக இருந்தது, இப்போது 170 டாலருக்கும் மேல் விற்கப்படுகிறது. ரொக்கமாக சம்பளம் கொடுப்பதுடன், ஹமாஸ் தனது உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உள்ளூர் அவசரக் குழுக்கள் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்குகிறது. இஸ்ரேலின் தாக்குதல்களால் இந்தக் குழுக்களின் தலைவர்கள் அடிக்கடி மாற்றப்படுகின்றனர். இது காஸாவில் பொதுமக்களிடையே கோபத்தைத் தூண்டியுள்ளது. ஹமாஸ் தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமே உதவி வழங்கி, மற்ற மக்களை புறக்கணிப்பதாக பலர் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட போர் நிறுத்தத்தின் போது, காஸாவிற்கு வந்த உதவிகளை ஹமாஸ் திருடியதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. ஹமாஸ் இதை மறுத்தாலும், பிபிசிக்கு தகவல் அளித்த காஸா வட்டாரங்கள், அந்தக் காலகட்டத்தில் ஹமாஸ் கணிசமான அளவு உதவிகளை எடுத்ததாக உறுதிப்படுத்தியுள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன், புற்றுநோயால் கணவரை இழந்த பிறகு, தற்போது மூன்று குழந்தைகளைப் பராமரிக்கும் நிஸ்ரீன் கலீத் எனும் பெண்ணிடம் பிபிசி பேசியது. "பசியால் வாடிய போது, என் குழந்தைகள் வலியால் மட்டுமல்ல, ஹமாஸ் ஆதரவு பெற்ற எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் உணவுப் பொட்டலங்களையும் மாவுப் பைகளையும் பெறுவதைப் பார்த்தும் அழுதனர். நாங்கள் இப்போது அனுபவிக்கும் துன்பங்களுக்கு அவர்கள் காரணமல்லவா? அக்டோபர் 7 தாக்குதலுக்கு முன், ஏன் உணவு, தண்ணீர், மருந்து ஆகியவற்றை பாதுகாக்கவில்லை?" என்று அப்பெண் கேள்வி எழுப்புகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp37q1e417yo
-
மன்னாரின் கனிய மணலகழ்வு...எங்கள் மக்களைச் சூழவுள்ள பேராபத்து.-நாகமுத்து பிரதீபராஜா
Published By: RAJEEBAN 09 AUG, 2025 | 12:38 PM மன்னார் மாவட்டம் அண்மைய நாட்களில் பேசு பொருளாக மாறி இருக்கின்றது. மன்னாரில் மேற்கொள்ள இருக்கின்ற பல்வேறு செயற்பாடுகள் மன்னார் மக்கள் மத்தியில் கொதிநிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏற்கனவே சில பகுதிகளில் அமைக்கப்பட்டு மீளவும் சில இடங்களில் அமைக்கப்பட இருக்கின்ற காற்றாலை மின்சார திட்டமும் எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருக்கின்ற கனியமணல் அகழ்வுச் செயற்பாடும் மன்னார் மாவட்ட மக்களிடையே மிகப்பெரிய பீதியை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கையினுடைய ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகின்ற பொழுது மன்னார் தீவு தனித்துவமான புவியியல் அமைப்பை கொண்டிருக்கின்ற பிரதேசமாகும். இதிகாச அடிப்படையில் இராமாயணத்தில் கூறப்படுகின்ற ராமர் பாலத்தினுடைய தொடர்ச்சியாக மன்னார் தீவு காணப்படுகின்ற அதே வேளை இராமர் பாலத்தில் ஊடாக இலங்கைக்கு வந்த இராம சேனை மன்னார் தீவினூடாகவே முதன் முதலில் இலங்கைக்கு வந்தது இந்துக்களிடையே உள்ள மிகப்பெரிய நம்பிக்கையாகும். புவியியல் அடிப்படையில் மிகவும் தனித்துவமான அமைவிடத்தினை மன்னார் தீவு கொண்டிருக்கின்றது. இந்தியாவிற்கு மிக அண்மித்து இலங்கையில் உள்ள பகுதியாக மன்னார் காணப்படுகின்றது. மன்னார் தீவு அமைந்திருக்கின்ற புவியியல் மற்றும் புவிச்சரிதவியல் நிலைமைகள் என்பது மிகவும் சிறப்பு தன்மை வாய்ந்தது. மன்னார் தீவினுடைய தாய்ப்பாறை கடல் மட்டத்திலிருந்து மிக ஆழத்தில் காணப்படுகின்றது. இந்த தாய்ப்பாறை அமைந்துள்ள புவிச்சரிதவியலை காவேரி வடிநிலம் (C1) என அழைக்கப்படும். ஆனால் இதன் தடிப்பு இதனைச் சூழ உள்ள பல பகுதிகளுடன் ஒப்பிடும்போது குறைவாகும். இது 12- 35 கி.மீ. தடிப்பிலேயே காணப்படுகின்றது. இதற்கு மேலாக மயோசின் காலச்சுண்ணக்கற் படிவகள் காணப்படுகின்றன. இதற்கு மேல் அண்மைக்கால மணற் படிவுகள் உள்ளன. இவை அலைகளால் கொண்டு வந்து படிய விடப்பட்டுள்ளன. இவ்வாறு கொண்டு வரப்பட்டு படிய விடப்பட்ட மணல் படிவுகளே இன்று மன்னார் மாவட்டத்தின் இருப்பிற்கே சவால் விடுகின்ற அளவுக்கு மாறியுள்ளது. மன்னாரில் இயல்பாகவே கடலலைகளினால் கொண்டுவரப்பட்டு படிய விடப்பட்டிருக்கின்ற இல்மனைற் மணற்படிவுகள் பற்றிய ஆய்வுகள் 2004ம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் கூட 2009 ஆம் ஆண்டிலிருந்து அதாவது குறிப்பாக யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அதாவது 2009 இல் இருந்து 2014 வரையிலான காலப்பகுதியிலேயே மிக ஆழமான ஆராய்ச்சிகள் ஊடாக மன்னார் மாவட்டத்தில் பொருளாதார பெறுமதி மிக்க இல்மனைற் படிவுகள் இருப்பது அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. இந்த இல்மனைற் படிவுகள் இலங்கையின் பல பகுதிகளில் காணப்பட்டாலும் மொத்த பார உலோகங்களின் சதவீதம் கூடிய, சுத்திகரிப்பு செலவு குறைந்த குறிப்பாக இல்மனைற் செறிவு கூடிய கனிய மணற்படிவுகள், மிகப் பெரிய அளவில் மன்னாரில் அமைவு பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. தென்னாசியாவில் மிகப்பெரிய அளவிலான செறிவு மிக்க இல்மனைற் படிவுகளுடன் கூடிய மணற்படிவுகள் மன்னரில் அமைவு பெற்றுள்ளது. பொருளாதார அடிப்படையில் மிக பெறுமதியான மணற்படிவுகள் மன்னாரில் உள்ளமை பெருமையும் மகிழ்ச்சியும் தரக்கூடியது. ஆனால் மறு வகையில் மன்னாரின் அழிவுக்கும் அதுவே காரணமாக அமையக்கூடும் என்பது துன்பமானது. மன்னாரில் காணப்படும் கனிய மணலில் Ilmenite (இல்மனைற், Leucoxene: (லியூகோக்சீன்), Zirconium: (சிர்க்கோனியம்), Rutile (ரூடைல்),Titanium oxide(டைட்டானியம் ஒக்சைடு),Granite (கருங்கல்),Sillimanite (சிலிமனைட்) மற்றும் Orthoclase(ஓர்த்தோகிளாஸ்) போன்ற கனிமங்கள் உள்ளன. அதனால் தான் மன்னாரில் உள்ள கனிய மணல் பொருளாதார பெறுமதிமிக்கதாக உள்ளது. மன்னார் தீவு 26 கிலோ மீற்றர் நீளமும் 6 கிலோமீற்றர் அகலமும் கொண்ட 140 சதுர கிலோமீற்றர் பரப்பைக் கொண்ட ஒரு தீவாகும். இந்த தீவினுடைய சராசரி உயரமாக 7.8 மீற்றர் காணப்படுகின்றது. இருந்தாலும் இந்த சராசரி உயரம் என்பது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியானதாக இல்லை. சில பிரதேசங்களில் மிகக் குறைவான உயரமும் கொண்டதாக அதாவது கடல் மட்டத்தை விட உயரம் குறைந்ததாகவே காணப்படுகின்றது. தாழ்வுப்பாடு எழுத்தூர், சவுத் பார், தோட்ட வெளி, எருக்கலம்பிட்டி, கொன்னையன் குடியிருப்பு, தாராபுரம், செல்வா நகர் போன்ற பிரதேசங்களின் சராசரி உயரம் கடல் மட்டத்தை விட குறைவாக அல்லது அதற்கு அண்மித்ததாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை சில பிரதேசங்களில் கடல் மட்டத்தை விட 12 மீட்டர் உயரம் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மிக சிறப்பான பொருளாதார பெறுமதிமிக்க இந்த இல்மனைற் மணல் அகழ்வினை மேற்கொள்வதற்காக இலங்கையில் ஐந்து நிறுவனங்கள்( உள்ளூர் நிறுவனங்களின் பெயரில் வெளிநாட்டு நிறுவனங்கள்) விண்ணப்பித்து ஐந்து நிறுவனங்களுக்குமே மன்னார் தீவின் கனியமணல் அகழ்வுக்கான அனுமதியினை கடந்த கால அரசாங்கங்களின் ஆட்சிக் காலத்தில் தேசிய கனிய வளங்கள் ஆய்வு மற்றும் மற்றும் சுரங்கமறுத்தல் பிரிவு (NGSMB) அனுமதியை வழங்கி இருக்கின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த அனுமதி தொடர்பாக மன்னாரில் அமைந்துள்ள தேசிய கனிய வளங்கள் மற்றும் சுரங்கமறுத்தல் பிராந்திய காரியலத்திலிருந்து ஒப்புக்காகவேனும் தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை. இந்த அனுமதி பெற்ற நிறுவனங்களில் நிறுவனங்களில் கில்சித் எக்ஸ்ப்ளோரேஷன் (Kilsythe Exploration) (செப்டம்பர் 2015 இல் 1 அனுமதிப்பத்திரம்), ஹேமர்ஸ்மித் சிலோன் (Hammersmith Ceylon)(செப்டம்பர் 2015 இல் 2 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன), சுப்ரீம் சொல்யூஷன் (Supreme Solution) (நவம்பர் 2015 இல் 2 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன), சனூர் மினரல்ஸ் (Sanur Minerals) (செப்டம்பர் 2015 இல் 2 உரிமங்கள் வழங்கப்பட்டன) மற்றும் ஓரியன் மினரல்ஸ் (Orion Minerals) (ஜூலை 2015 இல் 2 உரிமங்கள் வழங்கப்பட்டன) ஆகியவை அடங்கும். அனுமதி வழங்கப்பட்ட இந்த ஐந்து நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள் மணல் அகழ்வுக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்தி வருகின்றன. அவர்கள் இந்த கனிய மணலை அகழ்ந்து, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, யப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளன. மன்னாரின் கனிய மணல் அகழ்விற்காக விண்ணப்பித்திருக்கின்ற அனைத்து நிறுவனங்களுமே கடல் மட்டத்திலிருந்து 12 மீற்றர் ஆழம் வரைக்கும் மணல் அகழ்வை மேற்கொள்ளவுள்ளதாகவும் அகழப்பட்ட மணலில் கனிமங்கள் மட்டும் தனித்து பிரித்தெடுக்கப்பட்டு பின்னர் மிஞ்சிய மணல்கள் மீண்டும் அகழப்பட்ட இடத்திலே கொட்டப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆனால் மன்னார் தீவினுடைய சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 7.8 மீற்றர். ஆனால் 12 மீற்றர் அகழப்பட்டால் அது அகழப்படும் இடம் முழுவதும் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 10 அடி ஆழத்தில் தோண்டியதற்கு சமமாகவே அமையும். அகழ்வுக்காக முன்மொழியப்பட்ட மூன்று பிரதானமான இடங்களிலும் பல சதுர கிலோமீற்றர் பரப்பிற்கு 10 அடி ஆழத்திற்கு தோண்டியதற்கு சமனாகும். இந்த 10 அடி ஆழத்திற்கும் கடல்நீர் உள்வந்து நிறைந்து விடும். இதனை சாதாரண மக்களும் விளங்கும் வகையில் சொல்வதானால் மணல் அகழப்படும் இடங்கள் முழுவதும் 10 அடி ஆழ கடலாக மாறிவிடும். பொதுவாக ஒரு இடத்தில் இயற்கையாக படிந்த மணலை அல்லது மண்ணை அகழ்ந்து அதே மண்/ மணல் முழுவதையும் மீண்டும் அதே இடத்தில் கொட்டினால் கூட அந்த பிரதேசம் ஒரு குறிப்பிட்ட நாட்களின் பின்னர் பள்ளமாகவே மாறிவிடும். ஆகவே அனுமதி பெற்ற நிறுவனங்கள் குறிப்பிடுவது போல அந்த பிரதேசத்தில் அகழப்பட்ட மண்ணைக் கொண்டே அந்த அகழ்வுக் குழி மூடப்படும் என்பது மக்களை ஏமாற்றும் தந்திரம். சில நாட்களில் அந்த இடம் மீண்டும் பள்ளமாகும். இந்த கனிய மணல் அகழ்விற்காக அனுமதி பெற்ற நிறுவனங்கள் அகழ்வுச் செயற்பாட்டுக்காக பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன. பல வழிகளிலும் முயன்று வருகின்றனர். இந்த நிறுவனங்களில் சில உள்ளூர் மக்களிடம் காணிகளைக் கொள்வனவும் செய்துள்ளார்கள். உள்ளூரின் சந்தைப்பெறுமதியை விட பல மடங்கு விலை கொடுத்து காணிகளை வாங்கியுள்ளார்கள். எடுத்துக்காட்டாக 10000/- பெறுமதியான காணி ஒன்றை அந்த நிறுவனங்கள் 100000/- கொடுத்து வாங்குகிறார்கள் எனில் அகழ்விற்கு பின்னாலுள்ள பொருளாதாரப் பெறுமதி எத்தகையது என்பது நோக்கற்பாலது. மன்னார் தீவின் கனிய மணல் அகழ்வினை மேற்கொள்வதற்கு பல மட்டங்களில், பல தரப்புக்களினாலும், பல வகைகளான தந்திரங்களும் பாவிக்கப்படும் என அறியக் கிடைக்கின்றது. ஆனால் மன்னார் தீவில் கனிய மணலகழ்வு என்பது; 1. மன்னார் தீவு முழுவதும் 10 அடி பள்ளமாக மாறி கடல் நீரால் நிரப்பப்படும். 2. அகழ்வுக்காக மன்னார் தீவிலுள்ள பனை வளங்களில் குறைந்து 10000 பனைகளாவது அழிக்கப்படும். 3. தரைக்கீழ் நீர்வளம் முழுமையாக பாதிக்கப்படும். 4. மன்னார் தீவின் உருவவியல் மாறிவிடும். எனவே என் அன்புக்குரிய மன்னார் உறவுகளே............ நீங்கள் இப்பொழுது விழித்துக் கொள்ளாவிட்டால் இனி எப்போதும் மன்னார் தீவைக் காப்பற்ற முடியாது. அகழ்வை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு மன்னார் ஒரு கனிய மணல் அகழ்வு மையம். ஆனால் எங்களுக்கு மன்னார் எங்கள் தாய் நிலம். அன்புக்குரிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்களே, இது மன்னார் தீவுக்கு மட்டுமேயுரித்தான பிரச்சினையல்ல. எங்கள் எல்லோருக்கும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினை. https://www.virakesari.lk/article/222153
-
தாய் சொல்லைத் தட்டாதே
எனக்குப் பதினைந்து வயது இருக்கும்போது, நான் கல்லூரியில் கணிதம் / கணினியியல் / அறிவியல் படிக்க வேண்டும் என என் அம்மா ஆசைப்பட்டார். எனக்கு இலக்கியத்தைத் தவிர எதிலும் நாட்டமில்லை. கல்வி மகிழ்ச்சியானதாக, என் இலக்குடன் தொடர்புள்ளதாக இருக்க வேண்டும் என நினைத்தேன். அம்மா என்னென்னமோ காரணம் சொல்லி என்னை ஏற்க வைக்க முயன்றார். படிக்கவே வைக்க மாட்டேன் என்று மிரட்டினார். வயதுக்கே உரிய பிடிவாதத்தால் நான் ஏற்கவில்லை. கல்லூரியில் இலக்கியம் கற்றேன். ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு கணத்தையும் ரசித்து பங்குபெற்றேன். இளங்கலையிலும், முதுகலையிலும் முதலாவது மதிப்பெண் பெற்றேன். தங்கப்பதக்கம் வென்றேன். அப்போது எனக்கு நான் எடுத்தது மிகச்சிறந்த முடிவு எனத் தோன்றியது. அதன்பிறகு நான் ஆய்வுக் கட்டுரைகளைத் திருத்துவது, தொழில்நுட்பக் கட்டுரைகளை எழுதுவது போன்ற பணிகளைச் செய்தபோதும், கல்லூரி ஆசிரியர் ஆனபோதும் என் முடிவு மிகவும் சரியானது என்றே நினைத்தேன் - ஏனென்றால் மொழிசார்ந்த பணிகள் எவையும் சிரமமாக இருக்கவில்லை. நான் ஏற்கனவே கற்றிருந்தவையே போதுமானதாக இருந்தது - புதிதாக மெனெக்கெட்டுக் கற்று என்னை வேலையிடத்தில் நிரூபிக்கத் தேவையிருக்கவில்லை. சுலபமாக வேலையில் ஜொலிக்கவும் நற்பெயர் வாங்கவும் முடிந்தது. முனைவர் பட்ட ஆய்வு கூட ஒரு புத்தகம் எழுதுவதைப் போலத்தான் இருந்தது. இப்படி என் பட்டப்படிப்புக்குப் பின் முதல் 10-15 ஆண்டுகள் ‘துளிகூட வியர்க்காமல்’ கழிந்தது. நான் மென்பொருளோ மருத்துவமோ கற்றிருந்தால் பிடிக்காத வேலையைச் செய்து மனம் ஒப்பாமல் நாளைக் கழித்து நிம்மதியற்று இருந்திருப்பேன் என ஒவ்வொரு நாளும் எனக்குச் சொல்லிக்கொண்டேன். ஆனால் கடந்த அரைப்பத்தாண்டுகளில் கல்விப்புலத்தில் தனியார்மயமாக்கல் உச்சம் பெற்றது; ஆசிரியப் பணியென்றால் ஆவணமாக்கல், தேர்வுத்தாள் திருத்துதல், மீண்டும் மீண்டும் தோல்வியுறும் மாணவர்களுக்கு மீண்டும் மீண்டும் மதிப்பெண்களை அளித்தல், சிவாலய ஓட்டம் போலத் தொடரும் எண்ணற்ற கூட்டங்களில் கலந்துகொள்ளுதல் மட்டுமே, கல்வி கற்பித்தம் கட்டக்கடைசியாகச் செய்ய வேண்டியது எனும் நம்பிக்கை வேரூன்றிவிட்டது. குமாஸ்தா பணி! பெரும்பாலான தனியார் உயர்கல்வி ஆசிரியர்கள் கற்பித்தலுக்கும் ஆய்வுக்கும் தொடர்பற்ற பணிகளிலே 90% நேரத்தைச் செலவிட வேண்டிய அழுத்தம் உள்ளது (பள்ளி ஆசிரியர்களின் நிலையும் இதுதான்). இன்னொரு பிரச்சினை ஊதியமும் வேலையுயர்வும் - ஒரு கட்டத்திற்கு மேல் இரண்டுமே சாத்தியமில்லை என்றாகிறது. தொழில்நுட்பக் கல்வியில் இளங்கலைக் கற்றவருக்கு உள்ள வாய்ப்புகளில் 1% கூட முனைவர் பட்டம் முடித்தவருக்கு இருக்காது. ஒரு பள்ளிக்கும் இன்னொரு பள்ளிக்கும், ஒரு கல்லூரிக்கும் இன்னொரு கல்லூரிக்கும் வித்தியாசம் இல்லாதபடி கல்வி நிறுவன நிர்வாகமும் அதன் மொழியும் நகலெடுக்கப்படுகிறது. எங்கு போனாலும் ஒரே இடத்தில் இருப்பதாகவே தோன்றும். இப்போதுதான் எனக்கு வேலையென்பது விரும்பிச் செய்வது அல்ல, சம்பாதிக்கவும் வளரவும் செய்வது எனும் தெளிவு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் நாம் என்னதான் விரும்பிச் செய்தாலும் சூழல் மாறிவிட்டால் டைட்டானிக் கப்பல் மூழ்கும்போது இரண்டு இசைக்கலைஞர்கள் வாசித்துக்கொண்டிருப்பார்களே அப்படித்தான் இருக்க வேண்டும். மரியாதை, அங்கீகாரம், கண்ணியம் எதுவும் கிடைக்காது. மேலும் கணிதமோ மென்பொருளோ கொஞ்சம் பிரயத்தனம் பண்ணியிருந்தால் என்னால் கற்றிருக்க முடியும், நான் பெரிய போராட்டமின்றி படிப்பை முடித்து நல்லவேலையில் அமர்ந்திருக்க முடியும் என இப்போது தோன்றுகிறது. அப்போதிருந்த பிடிவாதம் என் மனதை மூடிவிட்டிருந்ததால் நிறைய விசயங்கள் புரியவில்லை. என் தொழில்வாழ்வு ரெண்டாயிரத்தில் ஆரம்பித்திருந்தால் பல்வேறு வாய்ப்புகளைப் பெற்றிருப்பேன், பொருள் வாழ்வில் சிரமங்கள் இன்றி இருந்திருப்பேன். என்னுடன் முதுகலையில் ஒரு நண்பர் படித்தார். அவர் இளங்கலை ஆங்கில இலக்கியம் முடித்துவிட்டு பி.பி.ஓவில் சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு முதுகலை படிக்க எங்களுடன் இணைந்தார். அவர் படிப்பில் சுத்தமாக ஆர்வம் காட்ட மாட்டார். நான் ஒருநாளில் 18 மணிநேரமும் படித்துக்கொண்டிருப்பேன். அவர் ஜெயிக்கும் அளவுக்கு மட்டுமே படித்து பட்டம் பெற்றபின்னர் ஒரு பிரசித்தமான வங்கியில் சேர்ந்தார். நான் அவரைப் படிப்பில் ஆர்வமற்ற தெளிவற்றவர் என நினைத்தேன். ஆனால் அவர் இப்போது அந்த வங்கியில் வி.பியாக இருக்கிறார். இன்னொரு சகமாணவர் பிரமாதமான கிரிக்கெட் வீரர். அவரும் படிப்பில் சரியாக கவனம் செலுத்த மாட்டார். முழுநேரமும் மைதானத்திலே இருப்பார். நான் படிப்பை முடித்து வேலையில் சேர்ந்தபோது அவர் எந்த கிரிக்கெட் கிளப்பிலும் நிலைக்க முடியாமல் ஊருக்குப் போய்விட்டதாக நண்பர்கள் சொன்னார்கள். வருத்தமாக இருந்தது. அதன்பிறகு அவர் என்ன செய்தார் என்பதை நான் சில ஆண்டுகளுக்குப் பின்பே தெரிந்துகொண்டேன் - அவர் கடற்பொறியியல் படிக்க அமெரிக்கா சென்றார். அப்படியே அங்கு கப்பற்படையில் வேலை பெற்று, பின்னர் தனியார் கப்பல்களில் சேர்ந்து பணிபுரிந்து பல நாடுகளில் சுற்றித்திரிந்து அமெரிக்கப் பெண்ணொருத்தியை மணமுடித்து செட்டில் ஆகிவிட்டார். இரண்டு பேரும் என் புரிதலில் ஆரம்பத்தில் தோல்வியுற்றவர்கள், ஆனால் நிஜத்தில் அவர்களே வென்றவர்கள். நாம் தீவிரமான நேசிக்கும் ஒன்றையோ திறமையுள்ள ஒன்றையோ அல்ல, சம்பாதிக்க வாய்ப்பைத் தரும் ஒன்றையே கற்றுக்கொள்ள வேண்டும், வேலையாக செய்ய வேண்டும் என்று இளமையிலேயே புரிந்துகொண்டவர்கள். இலக்கியம் கற்றாலும் அதன் பொறியில் சிக்கி அழியாதவர்கள். மேலும் இரு நண்பர்களையும் குறிப்பிட வேண்டும். அவர்களும் என்னைப் போலத்தான் - வகுப்பில் ஜொலித்தவர்கள், ஆனால் பின்னர் சாதாரண வேலைகளில் சிக்கி அலைகழிபவர்கள். அன்று என்னிடம் கேட்டிருந்தால் அவர்கள் மிக உயர்ந்த நிலையை எட்டுவார்கள் என்று சொல்லியிருப்பேன். ஆனால் அப்படி நடக்கவில்லை. அதுவே எதார்த்தம். அதனாலே passionஐப் பின் தொடர்ந்துப் போகப் போகிறேன் என்று சொல்லும் இளைஞர்களை நான் இப்போதெல்லாம் ஊக்கப்படுத்துவதில்லை. நமது கனவைப் பின் தொடர்வது அல்ல அக்கனவு நம்மை எங்கு கொண்டு போய் சேர்க்கும் என்பதே முக்கியம். போகாத வழியைக் கனவு காண்பதால் பயனில்லை. என் அம்மா அதிகமாகப் படித்தவர் அல்லர். நான் என் பதின்வயதை எட்டியபோது நான் அவரைவிட பலமடங்கு அதிகமாகக் கற்றிருந்தேன். அதனாலே அவரால் என்னிடம் வாதிட்டு என்னை ஏற்றுக்கொள்ள வைக்க இயலவில்லை. என்னளவுக்கு ஆயிரக்கணக்கான நூல்களை வாசிக்காத ஒருவருடைய சொல்லை நான் ஏன் கேட்க வேண்டும் என்னுடைய ஈகோவும் அவரைப் பொருட்படுத்த என்னை அனுமதிக்கவில்லை. என்ன வேண்டுமானாலும் பண்ணிக் கொள் எனும் மனநிலை கொண்டவர் என் அப்பா. இப்போதுள்ள முதிர்ச்சி அப்போதிருந்தால் அதிகம் படிக்காத என் அம்மா சொல்வதையே கேட்டிருப்பேன். கொஞ்சம் மனம் வைத்துப் படித்தால் சுலபத்தில் எந்த பட்டப்படிப்பையும் என்னால் முடித்திருக்கவும் எந்த வேலையிலும் சிறந்திருக்க முடியும். முனைவர் பட்டம் முடித்து ஆசிரியராகி - ஆசிரியப் பணிக்குச் சம்மந்தமில்லாமல் - குமாஸ்தா வேலையைப் பன்ணிக்கொண்டிருக்க மாட்டேன். எந்த சக-ஆசிரியரிடம் பேசினாலும் அவர்களும் என்னைப் போன்றே புலம்புவதைக் கேட்டுக்கொண்டிருக்க மாட்டேன். படிப்பு, வேலை விசயத்தில் மட்டுமல்ல உறவுகள் விசயத்திலும்கூட என் அம்மா தந்த அறிவுரைகள் எவ்வளவு சிறப்பானவை என்பதையும் நான் தாமதமாகவே ஒவ்வொரு முறையும் புரிந்துகொள்கிறேன். தாய் சொல்லைத் தட்டாதே! Posted 14 hours ago by ஆர். அபிலாஷ் https://thiruttusavi.blogspot.com/2025/08/blog-post_8.html
-
இஸ்ரேலிற்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்தியது ஜேர்மனி
09 AUG, 2025 | 11:33 AM ஜேர்மனி இஸ்ரேலிற்கான அனைத்து ஆயத ஏற்றுமதியையும் நிறுத்தியுள்ளது. காசா நகரை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி வழங்கியதை தொடர்ந்தே ஜேர்மனி இது குறித்து அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலைகளின் கீழ் காசா பள்ளத்தாக்கில் எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடிய எந்த இராணுவ ஏற்றுமதிக்கும் ஜேர்மனி அனுமதியளிக்காது என ஜேர்மன் சான்சிலர் பிரெட்ரிச் மேர்ஸ் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிற்கு தன்னைபாதுகாப்பதற்கான உரிமையை ஆதரிப்பதாக தெரிவித்துள்ள அவர் ஹமாஸ் தனது பிடியில் உள்ள பணயக்கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்களின் உயிரிழப்புகள் அதிகரிப்பதை இதற்கு மேலும் ஜேர்மனியால் சகித்துக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள ஜேர்மனியின் சான்சிலர் காசா பள்ளத்தாக்கில் மேலும் கடுமையான நடவடிக்கைகளிற்காக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி காரணமாக இந்த இலக்குகள் எப்படி நிறைவேறப்போகின்றன என்பது தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/222147
-
காசா நகரை கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்
காசா நகரத்தினை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் - இஸ்ரேல் நிராகரிப்பு Published By: RAJEEBAN 09 AUG, 2025 | 11:22 AM காசா நகரத்தினை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் உலகம் நாடுகள் வெளியிட்டுள்ள கண்டனத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. இஸ்ரேலை கண்டித்து தடைகளை விதிக்கப்போவதாக எச்சரிக்கும் நாடுகளால் எங்கள் உறுதிப்பாட்டை குலைக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் ஹட்ஸ் தெரிவித்துள்ளார். காசாவை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்திற்கு ஐநாவும் உலக நாடுகள் பலவும் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளன. ஜேர்மனி இஸ்ரேலிற்கான ஆயுதவிநியோகத்தை நிறுத்தியுள்ளது. மோதல் மேலும் விரிவடைவது மேலும் பாரிய இடம்பெயர்வை உருவாக்கும்,மேலும் கொலைகளை மேலும் துயரத்தை அர்த்தமற்ற அழிவை இரத்தக்களறியை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் தெரிவித்துள்ளார். பிரிட்டிஸ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் இது தவறான நடவடிக்கை மேலும் இரத்தக்களறியை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/222146
-
பொறுப்புக்கூறலில் ஐ.நா.வின் அணுகுமுறை அதிருப்தி ; ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு பாக்கியசெல்வம் அரியநேத்திரன் கடிதம்
Published By: VISHNU 08 AUG, 2025 | 10:31 PM (நா.தனுஜா) இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தி கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். வட, கிழக்கு மாகாணங்களில் இயங்கிவரும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் அறிக்கை குறித்த தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி கடந்த வாரம் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் மற்றும் பேரவையில் அங்கம்வகிக்கும் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்தி பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை தொடர்பில் தீவிர கரிசனை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக இவ்விடயத்தில் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையின் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தன்மை, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் தொடரும் பேரவையின் தாமதம், சுயாதீனமானதும், நியாயமானதும், செயற்திறன்மிக்கதுமான செயன்முறையொன்றை ஸ்தாபிப்பதற்குப் பதிலாக இலங்கை அரசாங்கத்தில் தங்கியிருத்தல் என்பன தொடர்பில் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவேண்டும், ஐக்கிய நாடுகள் கட்டமைப்புக்குள் நடைமுறைச்சாத்தியமான வேறு வழிமுறைகளைப் பரிந்துரைத்தல், உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை முற்றுமுழுதாக சர்வதேசமயப்படுத்தி விரிவுபடுத்தல், சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான பொறிமுறையொன்றைப் பரிந்துரைத்தல் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/222137
-
விளையாட்டுகள் பெண் உடலில் தனித்துவமான வகையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து விஞ்ஞானிகள் குழுக்கள் ஆய்வு
வீராங்கனைகளின் மார்பகங்களும் மாதவிடாயும் விளையாட்டு திறனை எப்படி பாதிக்கின்றன? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, UEFA மகளிர் யூரோ 2022 இறுதிப் போட்டியில் தனது கோலை கொண்டாடுகிறார் பிரிட்டன் வீராங்கனை க்ளோய் கெல்லி 5 மணி நேரங்களுக்கு முன்னர் பெண்கள் விளையாட்டில் ஒரு முக்கிய கோடையில் யூரோ கோப்பை போட்டிகள் முடிவை எட்டிக்கொண்டிருக்கின்றன. ஆனால், ஆடுகளத்தின் உணர்ச்சிகரமான காட்சிகள் மற்றும் உற்சாகத்திலிருந்து விலகி, ஒரு அறிவியல் புரட்சியும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. உயர் அளவில் விளையாடப்படும் விளையாட்டுகள் பெண் உடலில் தனித்துவமான வகையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து விஞ்ஞானிகள் குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன. மார்பகங்கள் ஒருவர் ஓடும் விதத்தை எப்படி மாற்றுகின்றன, ஆனால் சரியான ஸ்போர்ட்ஸ் பிரா உங்களுக்கு சற்று சாதகத்தை தரலாம்; செயல்திறன் மீது மாதவிடாய் சுழற்சியின் தாக்கம், மாதவிடாய் கண்காணிப்பு கருவிகள் என்ன பங்காற்றமுடியும்; சில காயங்கள் ஏற்படுவதற்கான அபாயம் கூடுதலாக இருப்பதற்கு காரணம் என்ன, அவற்றை தவிர்க்க என்ன செய்யலாம்? தொழில்முறை விளையாட்டு வீராங்கனைகள் தாங்கள் "மினி ஆண்களாக" கருதப்பட்டதாக என்னிடம் கூறிய காலத்திலிருந்து இது மிகவும் வேறுபட்டது. மார்பக இயங்கியல் (Breast biomechanics) பட மூலாதாரம், GETTY IMAGES 2022ஆம் ஆண்டு நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியின் பிரபலமான காட்சியை நினைவுகூருங்கள். வெம்ப்லி மைதானத்தில் போட்டியின் கூடுதல் நேரத்தில் பிரிட்டன் வீராங்கனை க்ளோய் கெல்லி ஜெர்மனிக்கு எதிரான வெற்றி கோலை அடித்தார். இதைத் தொடர்ந்த வெற்றிக்கொண்டாட்டத்தில், அவர் தனது பிரிட்டன் சட்டையை கழற்றி தனது ஸ்போர்ட்ஸ் பிராவை உலகுக்கு காட்டினார். இதை வடிவமைத்தவர் "பிரா ப்ரொஃபசர்" என்ற புனைப்பயரால் அழைக்கப்படும் போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜோனா வேக்ஃபீல்ட்-ஸ்கர். இதோ மார்பகங்கள் பற்றிய அவரது தகவல்கள் ஒரு கால்பந்தாட்ட போட்டியின் போது மார்பகங்கள் சராசரியாக 11,000 முறை மேலும்கீழுமாக அசையக்கூடும் (bounce) உரிய ஆதரவு இல்லாவிட்டால் ஒரு பவுன்ஸின் சராசரி அளவு 8 சென்டிமீட்டர் (3 அங்குலம்) அவை 5ஜி விசையுடன் (புவியீர்ப்பு விசையைவிட ஐந்து மடங்கு அதிகம்) நகர்கின்றன. இது ஃபார்முலா 1 கார் ஓட்டுநரின் அனுபவத்துக்கு ஒப்பானது. மார்பின் மீது நகர்வுகளை அளவிடும் மோஷன் சென்சார்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வக சோதனைகள், நகரும் மார்பக திசுக்களின் எடை உடலின் மற்ற பாகங்களின் செயல்பாட்டை எப்படி மாற்றுகின்றன என்பதையும், அவ்வாறு மாற்றப்படும் செயல்பாடு விளையாட்டு திறனை எப்படி பாதிக்கிறது என்பதையும் காட்டியுள்ளன. "சில பெண்களுக்கு அவர்களது மார்பகம் அதிக எடையுள்ளதாக இருக்கலாம், அவை நகர்ந்தால், அது அவர்களது உடல் நகர்வை மாற்றக்கூடும், களத்தில் அவர்கள் வெளிப்படுத்தும் விசையின் அளவைக் கூட அது மாற்றக்கூடும்," என வேக்ஃபீல்ட்-ஸ்கர் என்னிடம் தெரிவித்தார். பட மூலாதாரம், UNIVERSITY OF PORTSMOUTH படக்குறிப்பு, போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகம், உடற்பயிற்சியின் போது மார்பக திசு இயக்கத்தைக் கண்காணிக்க மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. உடலின் மேற்பகுதி நகர்வுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் மார்பகங்கள் மேலும்கீழுமாக அசைவைதை ஈடுகட்டுவது, இடுப்பு இருக்கும் நிலையை மாற்றி, எடுத்துவைக்கும் ஒவ்வொரு எட்டின் நீளத்தை குறைக்கிறது. அதனால்தான் ஸ்போர்ட்ஸ் பிராக்கள் வசதிக்கும், ஃபேஷனுக்கும் மட்டுமல்லாது செயல்திறனை அதிகரிக்கும் ஒரு கருவியாகவும் இருக்கின்றன. "மார்பகங்களுக்கு குறைவான ஆதரவு இருந்தால், அது எடுத்துவைக்கும் அடியின் நீளத்தை நான்கு சென்டிமீட்டர் குறைத்ததை நாங்கள் பார்த்தோம்," என விளக்குகிறார் வேக்ஃபீல்ட்-ஸ்கர். "ஒரு மாரத்தானில் நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் நான்கு சென்டிமீட்டரை இழந்தால் அது மொத்தமாக ஒரு மைலாக கணக்காகிறது." ஸ்போர்ட்ஸ் பிராக்கள் மார்பின் உள்ளே இருக்கும் மென்மையான அமைப்புகளையும் பாதுகாக்கின்றன, "நாம் அவற்றை நீட்டினால் அவை நிரந்தரமாகிவிடும்," என்கிறார் அந்த பேராசிரியர், எனவே "இது குணப்படுத்துவதைவிட, நிகழாமல் தடுப்பதில் இருக்கிறது." மாதவிடாய் சுழற்சியும், செயல்திறனில் அதன் தாக்கமும் பட மூலாதாரம், CALLI HAUGER-THACKERY படக்குறிப்பு, காலி ஹாகர்-தாக்கரி, பிரிட்டன் தொலைதூர ஓட்ட வீராங்கனை மாதவிடாய் சுழற்சி உடலின் மீது தெளிவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது உணர்வுகளையும், மனநிலையையும், தூக்கத்தையும் பாதிக்கக்கூடும் என்பதுடன் களைப்பு, தலைவலி மற்றும் பிடிப்புகளை (cramps) உண்டாக்கலாம். ஆனால், விளையாட்டின் மீது மாதவிடாயின் தாக்கத்தை பற்றி பேசுவது "இன்னமும் விலக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், இன்னமும் அதனுடன் போராடிக்கொண்டிருப்பதால் அதை பற்றி பேசுவது விலக்கிவைக்கப்பட்டதாக இருக்கக்கூடாது," எனவும் ஒலிம்பிக்கில் கிரேட் பிரிட்டன் சார்பாக பங்கேற்ற தொலைதூர ஓட்ட வீராங்கனை காலி ஹாகர்-தாக்கரி சொல்கிறார். மாதவிடாய் நெருங்கும்போது தனது உடலில் ஏற்படும் மாற்றங்களை எப்போதும் உணர்வதாக சொல்கிறார் காலி. "நான் சோர்வாக உணர்கிறேன், கால்கள் கனமாக இருக்கின்றன, சில நேரங்களில் கிட்டத்தட்ட சேற்றில் ஓடுவதைப் போல் உணர்கிறேன், எல்லாமே வழக்கத்தை விட கூடுதல் முயற்சி தேவைப்படுவதாக இருக்கின்றன," எனகிறார் அவர். தனது மாதவிடாய் கண்காணிப்பு கருவியின் அடிப்படையில் தனது வாழ்க்கையை வாழ்வதாகவும், மாதவிடாய் நேரம் "குறிப்பாக பெரிய பந்தயங்கள் வரும்போது" தனக்கு கவலையளிப்பதாகவும் உணர்கிறார். அப்படி ஒரு பெரிய பந்தயம், பாஸ்டன் மாரத்தான், ஏப்ரலில் நடைபெற்ற போது அவரது மாதவிடாய் காலம். அப்போட்டியில் அவர் ஆறாவது இடத்தை பிடித்தார். "அதிர்ஷ்டவசமாக அதை கடந்ததாக" நினைவுகூரும் அவர், அதே நேரம் தன்னால் இதைவிட சிறப்பாக செய்திருக்க முடியுமா என்பதை சிந்திக்காமல் இருக்க முடியவில்லை என கூறுகிறார். மாதவிடாய் சுழற்சி. இரண்டு ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் ஆகியவற்றின் ஏற்ற இறக்கங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது விளையாட்டு செயல்திறன் மீது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்? "அது தனிநபர் சார்ந்தது என்பதுடன் இதில் பல நுணுக்கங்கள் உள்ளன. மாதவிடாய் சுழற்சி செயல்திறனை பாதிக்கிறது என வெறுமனே சொல்லிவிடும் அளவு எளிதானது அல்ல," என்கிறார் மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தில் பெண் உட்சுரப்பியல் மற்றும் உடற்பயிற்சி உடலியல் நிபுணரான பேராசிரியர் கிர்ஸ்டி எலியட்-சேல். "போட்டிகள், தனிப்பட்ட சிறந்த செயல்பாடு, உலக சாதனை, எல்லாம் படைக்கப்பட்டுள்ளன, மாதவிடாய் காலத்தின் ஒவ்வொரு நாளிலும் வெல்லப்பட்டு, இழக்கப்பட்டுள்ளன," என்கிறார் அவர். இதில், 2022 சிகாகோவில் நடைபெற்ற மாரத்தானில் மாதவிடாயால் ஏற்பட்ட பிடிப்புகளுடன் ஓடி உலக சாதனையை முறியடித்த பவுலா ராட்கிளிஃப்பும் அடங்கும். படக்குறிப்பு, மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கிர்ஸ்டி எலியட்-சேல் மாதவிடாய் சுழற்சி விளையாட்டு திறனை பாதிக்கிறதா என்பதை அறிய, ஹார்மோன்களால் உடல் முழுவதும் ஏற்படும் உடலியல் மாற்றங்கள், மாதவிடாய் அறிகுறிகளுடன் செயல்படுவதிலுள்ள சவால், மாதவிடாய் நேரத்தில் போட்டியிடும் மன உளைச்சல் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் இவை அனைத்தைப் பற்றிய பார்வைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். "ஒருவர் வலுவாகவோ அல்லது பலவீனமாகவோ இருக்கும் ஒரு கட்டமோ, அவர் வெல்வார் அல்லது தோல்வியடைவார் என்ற கட்டமோ கிடையாது என பேராசிரியர் எலியட்-சேல் சொல்கிறார். ஆனால் கோட்பாட்டு அடிப்படையில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் எலும்பு, தசை அல்லது இதயம் போன்ற உடல் பகுதிகளை மாற்றலாம். "நாம் இன்னமும் புரிந்துகொள்ளாதது இதுதான்: இது உண்மையில் செயல்திறனை பாதிக்கும் அளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறதா?," என்கிறார் அவர். "தூக்கமின்மை, களைப்பு மற்றும் பிடிப்புகள் செயல்பாட்டை பாதிக்கும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முடிவு, தங்கள் மாதவிடாயின்போது ஒரு பெரிய கூட்டத்தின் முன் விளையாடவுள்ள வீராங்கனைகளுக்கு ஏற்படும் பயமும் கவலையும் "முற்றிலும் உணரக்கூடிய நிலையில் உள்ள ஒன்று என அந்த பேராசிரியர் மேலும் தெரிவித்தார். கசிவு அபாயம் மற்றும் அதனால் ஏற்படும் சங்கடங்களை தவிர்க்க மும்மடங்கு மாதவிடாய் உள்ளாடைகளை அணிந்துகொள்ளும் வீராங்கனைகளுடன் பேசியிருக்கும் அவர், "அது ஒரு பெரிய மன பாரம்." என கூறுகிறார். படக்குறிப்பு, கேட்டி டேலி-மெக்லீன், பிரிட்டனின் மிக அதிக புள்ளிகளைப் பெற்ற ரக்பி வீராங்கனை சேல் ஷார்க்ஸ் வுமென் ரக்பி அணி, மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது. நான் முன்னாள் பிரிட்டன் ரக்பி கேப்டனும், இங்கிலாந்து அணியின் மிக அதிக புள்ளிகளை குவித்தவருமான கேட்டி டேலி-மெக்லீனை சந்தித்தேன். மாதவிடாய் ஏற்படுத்த வாய்ப்புள்ள தாக்கத்தைப் பற்றியும் அதற்கு எப்படி திட்டமிடுவது என்பது பற்றியும் அவர்கள் புரிந்துகொள்ள அணி வெளிப்படையான ஆலோசனைகளை நடத்திவருகின்றன. "இதைப்பற்றி நான் செய்வதற்கு ஒன்றுமில்லை." என நினைப்பதற்கு பதிலாக மூன்று நாட்களுக்கு முன்பே இப்யூபுரூஃபன் மாத்திரிகளை எடுத்துக்கொள்வது இதில் அடங்கும்." என்கிறார் டேலி-மெக்லீன். "இந்த புரிதல் மற்றும் தகவல் மூலம்தான் நாம் இதைப் பற்றி பேசமுடியும், திட்டங்களை வகுத்து, ஒருவரை மேலும் சிறந்த ரக்பி வீரராக மாற்ற அவரது நடத்தையை மாற்றலாம்," என அவர் சொல்கிறார். காயங்களை தவிர்ப்பது எப்படி? பெண்கள் விளையாட்டுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுவதால் தெரியவந்திருக்கும் ஒரு விஷயம் சில காயங்கள் ஏற்படுவதற்கான் வாய்ப்பில் ஏற்பட்ட மாற்றம். காலின் மேல் மற்றும் கீழ் பகுதியை இணைக்கும் பகுதியான முன்புற சிலுவை தசைநார் (ACL) மீதுதான் பெரும்பகுதி கவனம் செலுத்தப்படுகிறது. இதில் ஏற்படும் காயங்கள் மிகவும் மோசமானதாக இருப்பதுடன், இவற்றிலிருந்து மீண்டுவருவதற்கு ஓராண்டு ஆகலாம். பங்கேற்கும் விளையாட்டைப் பொறுத்து இந்த காயங்கள் ஏற்படுவதற்கான அபாயம் ஆண்களை விட பெண்களுக்கு எட்டு மடங்கு அதிகம் என்பது மட்டுமல்லாமல், அவை மிகவும் சாதரணமாகி வருகின்றன என்கிறார், மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு இயங்கியல் ஆய்வாளர் தாமஸ் டாஸ்'சான்டோஸ். ஆனால், பெண்களுக்கு அதிக அபாயம் ஏற்படுவதை விளக்க "எளிதான விளக்கம்," ஏதும் இல்லை, என்கிறார் அவர். உடற்கூற்றில் இருக்கும் வேறுபாடுகள் இதற்கு காரணமாக இருக்கலாம். பெண்களுக்கு பெரிய இடுப்புகள் இருப்பதால், தொடை எலும்பின் மேற்பகுதி மேலும் அகலமான ஒரு நிலையிலிருந்து தொடங்குவதால் முழங்காலில் காலின் கீழ்பகுதியுடன் இணையும் கோணத்தை மாற்றுகிறது, இது காயங்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடும். பெண்களில் ACL சற்றே சிறியதாக இருக்கிறது, எனவே அது சற்றே பலவீனமாக இருக்கலாம்," என முனைவர் டாஸ்'சான்டோஸ் விளக்குகிறார். படக்குறிப்பு, முனைவர் தாமஸ் டாஸ்'சான்டோஸ், மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம் ACL காயங்கள் மாதவிடாய் சுழற்சியின் அனைத்து கட்டத்திலும் ஏற்படலாம், ஆனால், உலக அளவில் கால்பந்தாட்டத்தை நிர்வகிக்கும் ஃபிஃபா நிதியுதவியுடன் நடத்தப்படும் ஆய்வு உட்பட பல ஆய்வுகளால் ஹார்மோன் மாற்றங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மாதவிடாய்க்கு முன் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருப்பது தசைநார்களின் பண்புகளை மாற்றலாம். இது அவற்றின் நீட்டிக்கப்படக்கூடும் தன்மையை அதிகரிக்கிறது, அதனால் காயமடையும் அபாயம் கோட்பாட்டளவில் அதிகமாக இருக்கலாம்," என்று அவர் கூறுகிறார். ஆனால், ஆண்களுக்கு இணையான தரத்தில் ஆதரவும், வலுப்படுத்தும் பயிற்சிகளையும் பெண்கள் இன்னும் பெறுவதில்லை என்பதால் தூய உடற்கூறியலைத் தாண்டி சிந்திப்பது முக்கியம் என்று டாஸ்'சான்டோஸ் வாதிடுகிறார். அவர் அதை நடன கலைஞர்கள் தரமான பயிற்சியை பெறும் பாலே நடனத்துடன் ஒப்பிடுகிறார், "ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான காய விகிதத்தில் இருக்கும் வேறுபாடு அடிப்படையில் பொருட்படுத்தத்தக்கதல்ல," என்று டாஸ்'சான்டோஸ் கூறுகிறார். சற்றே வித்தியாசமான முறைகளில் நகர விளையாட்டு வீராங்கனைகளுக்கு பயிற்சியளிப்பதன் மூலம் ACL காயங்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க முடியுமா என்பது பற்றிய ஆய்வுகள் இருக்கின்றன. ஆனால், இதன்மூலம் செயல்திறன் குறையும் அபாயம் உள்ளது. தடுப்பாட்டக்காரரை ஏமாற்ற தோளை தாழ்த்திவிட்டு பிறகு வேறொரு திசையில் பாய்வது கால்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளில் அவசியமானது. இதைப் போன்ற நுட்பங்கள் ACL மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. "நாம் அவற்றை மறைத்துவிட்டு விளையாட்டு விளையாடுபவரை தவிர்க்க வேண்டும் என சொல்ல முடியாது," என்கிறார் டாஸ்'சாண்டோஸ். "அந்தச் சுமைகளை தாங்குமளவு அவர்கள் வலிமையாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்வதுதான் நாம் செய்யவேண்டியது, நாம் 100% ACL காயங்களை நீக்கிவிடலாம் என சிலர் சொல்வதைப்போல் அது அவ்வளவு எளிதானதல்ல, நம்மால் முடியாது." இனியும் 'மினி ஆண்கள் அல்ல' இன்னமும் பதில் இல்லாத பல கேள்விகள் இருந்தாலும், சேல் ஷார்க்ஸ் வுமென் அணியை சேர்ந்த கேட்டி டேலி-மெக்லீனுக்கு இதுவே ஒரு மிகப்பெரிய மாற்றமாகும். 2007-ல் அவர் அணிக்காக முதல்முறையாக விளையாட தொடங்கியபோது, அவரது உடல் எப்படி செயல்படும் என்பது பற்றிய அனைத்து அனுமானங்களும் ஆண் ரக்பி வீரர்களின் தரவுகளின் அடிப்படையில் அமைந்திருந்தன என்பதை நினைவுகூருகிறார். "நாங்கள் மினி-ஆண்களாகவே நடத்தப்பட்டோம்." என்கிறார் டேலி மெக்லீன். இப்போது சிறுமியரும், பெண்களும் விளையாட்டில் வெளிநபர்கள் போன்று உணருவதில்லை என்கிறார் அவர். விளையாட்டு உயர்மட்ட அளவில் திறனை அதிகரிப்பதுடன் மேலும் அதிக பெண்களை விளையாட்டில் வைத்திருக்க உதவுகிறது. "இது அற்புதமானது, இதை கொண்டாட வேண்டிய ஒன்று, புள்ளிவிவரங்களைப் பார்த்தால், இளம்பெண்கள் விளையாட்டை விட்டு வெளியேறுவதற்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்று உடல் தோற்றம், இது மாதவிடாயை சார்ந்தது மற்றும் சரியான ஸ்போர்ட்ஸ் பிரா இல்லாதது, இவை மிக எளிதாக தீர்க்கப்படக்கூடியவை." ஜெரி ஹோல்ட் தயாரித்த பிபிசியின் 'இன்சைட் ஹெல்த்' நிகழ்ச்சியிலிருந்து - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3v3xql41weo
-
நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் - பொலிஸார் எச்சரிக்கை
யாழ். நல்லூருக்கு செல்வோருக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு Published By: DIGITAL DESK 2 08 AUG, 2025 | 07:43 PM யாழ். நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளமையால், ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக செல்லுமாறு யாழ்ப்பாண பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். ஆலய சூழலில் திருடர்களின் நடமாட்டம் காணப்படுவதால், ஆலயத்திற்கு தங்க நகைகளை அணிந்து வருவதை தவிர்க்குமாறும், அணிந்துள்ள தங்க நகைகளில் கவனம் செலுத்துமாறும் பொலிஸார் கோரியுள்ளனர். அத்துடன், பொலிஸ் சீருடை மற்றும் சிவில் உடைகளில் பொலிஸார் ஆலய சூழல்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும், அருகில் உள்ளவர்கள் தொடர்பில் சந்தேகங்கள் எழுந்தால், பொலிஸாருக்கு உடன் அறிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். அதேவேளை ஆலய சூழல்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு, அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/222119
-
மனித - யானை மோதல்களைக் குறைக்க புதிய செயலி : 5 கிலோமீற்றர் சுற்றளவில் எச்சரிக்கை
Published By: DIGITAL DESK 2 08 AUG, 2025 | 04:34 PM மனித - யானை மோதலைக் குறைப்பதையும், இதனால் ஏற்படும் உயிர் மற்றும் உடைமை இழப்புகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு, காட்டு யானைகளின் நடமாட்டத்தை நிகழ் நேரத்தில் அறிவிக்கும் புதிய மொபைல் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செயலியின் உருவாக்குநர்களில் ஒருவரான வினுர அபேரத்ன தெரிவிக்கையில், யானைகள் அருகில் வரும்போது மக்களுக்கு எச்சரிக்கை செய்வதன் மூலம் சேதங்கள் மற்றும் மனித உயிரிழப்புகளைக் குறைப்பதே இந்தச் செயலியின் நோக்கம். இலங்கையில் சுமார் 3,000 பேர் இந்தச் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் செயலியின்படி, ஒரு குறிப்பிட்ட பகுதியில் யானை நடமாட்டம் தென்பட்டால், பயனர்கள் அதனைச் செயலி மூலம் அறிவிக்க முடியும். உடனடியாக, அந்த இடத்திலிருந்து ஐந்து கிலோமீற்றர் சுற்றளவில் உள்ள ஏனைய பயனர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு அனுப்பப்பட்டு, அவர்கள் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்குமாறு அறிவுறுத்தப்படுவார்கள். யானை நடமாட்டம் குறித்த தகவல்களைப் பகிர்வதுடன், யானை மரணங்கள், யானை மோதல்களால் ஏற்படும் மனித உயிரிழப்புகள், சொத்து சேதங்கள் மற்றும் வனவிலங்கு குற்றங்கள் போன்ற சம்பவங்களையும் இந்தச் செயலி மூலம் பயனர்கள் முறைபாடளிக்க முடியும். இதன் மூலம், மனித - யானை மோதல் தொடர்பான விரிவான தகவல்களைப் பெற்று, அதற்கான தீர்வுகளைக் கண்டறியவும் இந்தச் செயலி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/222100
-
திவால் நிலையில் நிறுவனங்கள், அமலாக்கத்துறை விசாரணை - அனில் அம்பானியின் வணிக சாம்ராஜ்யம் வீழ்கிறதா?
பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, அனில் அம்பானி குழுமத்தின் சில நிறுவனங்கள் திவால்நிலை செயல்முறையை எதிர்கொள்கின்றன கட்டுரை தகவல் தினேஷ் உப்ரேதி பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு காலத்தில் ஒரு டிரில்லியன் ரூபாய் மதிப்பிலான வணிக சாம்ராஜ்யத்தின் உரிமையாளராக இருந்த அனில் அம்பானி இன்று பல்வேறு கவலைகளை எதிர்கொண்டிருக்கிறார். அவரது குழும நிறுவனங்கள் அமலாக்க இயக்குநரகத்தால் விசாரிக்கப்படுகிறது. 35க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு, மிகப் பெரிய தொகை தொடர்பான விசாரணை மும்முரப்படுத்தப்பட்டுள்ளது. அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி செவ்வாய்க்கிழமையன்று (ஆகஸ்ட் 5) அன்று டெல்லியில் உள்ள அமலாக்க இயக்குநரகத்தின் (ED) தலைமையகத்துக்கு விசாரணைக்கு வரவேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அனில் அம்பானி குழுமத்தின் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள வங்கிக் கடன்களை போலி நிறுவனங்கள் (shell companies) மூலம் மாற்றியதாகக் கூறப்படுகிறது. வங்கிக் கடன் மோசடி தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ், அமலாக்கத் துறை அனில் அம்பானியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தது. நிதி முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் அனில் அம்பானி குழுமம் முற்றிலும் மறுத்துள்ளது. நிறுவனமும் அதன் அதிகாரிகளும் விசாரணை நிறுவனத்துடன் முழுமையாக ஒத்துழைப்பதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு அனில் அம்பானி குழும நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளின் இடங்களில் அமலாக்கத் துறை நடத்திய விரிவான சோதனைகளுக்குப் பிறகு, அனில் அம்பானியிடம் விசாரணை நடைபெறுகிறது. ஜூலை 24 அன்று தொடங்கி, மும்பையில் 35க்கும் மேற்பட்ட இடங்கள், 50 நிறுவனங்கள் மற்றும் 25 தனிநபர்களிடம் மூன்று நாட்கள் சோதனை நடைபெற்றது. அமலாக்கத் துறையின் விசாரணையில் அனில் அம்பானி குழும நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட ரூ.17,000 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் வந்துள்ளன. இந்த நிறுவனங்கள் வங்கிகளில் இருந்து பெறப்பட்ட கடன்களை போலி நிறுவனங்கள் மூலம் மாற்றியதாகக் கூறப்படுகிறது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, 2004 ஆம் ஆண்டு, ராணா கபூர் தனது உறவினர் ஒருவருடன் சேர்ந்து யெஸ் வங்கியைத் தொடங்கினார் யெஸ் வங்கியுடன் இணைந்து கூட்டுச் சதி செய்யப்பட்டதா? இதைத் தவிர, 2017 மற்றும் 2019க்கு இடையில், அனில் அம்பானி குழும நிறுவனங்கள் யெஸ் வங்கியிடமிருந்து (YES Bank) சுமார் 3,000 கோடி ரூபாய் கடன் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஈடாக, அனில் அம்பானி குழுமம் யெஸ் வங்கியின் நிறுவனருக்கு நிதிச் சலுகைகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது. கடன் ஒப்புதல் கொடுப்பதற்கு முன்பே வங்கி நிறுவனருக்கு நேரடியாக பணம் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. யெஸ் வங்கியிடமிருந்து கடன் பெறுவதிலும் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்க இயக்குநரகம் சந்தேகிக்கிறது. CBI தாக்கல் செய்த குறைந்தது இரண்டு எஃப்.ஐ.ஆர்களை அடிப்படையாகக் கொண்டு, அமலாக்க இயக்குநரகத்தின் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தவிர, பல ஒழுங்குமுறை அமைப்புகளும் அனில் அம்பானி குழுமத்துக்கு எதிரான விசாரணை அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தன. இந்த நிறுவனங்களில் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் செபி, தேசிய வீட்டுவசதி வங்கி, தேசிய நிதி அறிக்கையிடல் ஆணையம் (National Financial Reporting Authority) மற்றும் பாங்க் ஆஃப் பரோடா ஆகியவை அடங்கும். பட மூலாதாரம், ADAG அனில் அம்பானி குழுமம் சொல்வது என்ன? சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி, 2024ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், பிற நிறுவனங்களுக்கு நிதியை திருப்பிவிடுவதற்கு 'சூத்திரதாரி' அனில் அம்பானி என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், தகுதியற்ற நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு கடன் வழங்க வேண்டாம் என ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (RHFL) இயக்குநர்கள் குழு எச்சரித்ததாகவும் கூறியது. RHFLஇன் கடன் ஒப்புதல் செயல்பாட்டில் பல முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன, இதில் கொள்கை மீறல் மற்றும் முழுமையற்ற ஆவணங்கள் அடங்கும். முன்னதாக, அனில் அம்பானி குழுமத்தின் நிறுவனமான ரிலையன்ஸ் பவர், அமலாக்கத்துறை சோதனை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், "அனைத்து இடங்களிலும் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. நிறுவனமும் அதன் அனைத்து அதிகாரிகளும் அமலாக்கத்துறைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர், எதிர்காலத்திலும் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குவோம். அமலாக்கத்துறையின் நடவடிக்கை, நிறுவனத்தின் தொழில்துறை செயல்பாடுகள், நிதி செயல்திறன், பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்கள் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது" என்று கூறப்பட்டுள்ளது. "ரிலையன்ஸ் பவர் சுயாதீனமாக பட்டியலிடப்பட்ட நிறுவனம், அனில் அம்பானி இந்த நிறுவனத்தின் குழுவில் இல்லை. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் பவருக்கு பொருளாதார ரீதியில் எந்தவிதத் தொடர்பும் இல்லை. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 2016 முதல் திவால்நிலை செயல்முறைக்கு உட்பட்டுள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, அனில் அம்பானி குழுமம் பல துறைகளில் வணிகம் செய்கிறது, ஆனால் அனைத்து நிறுவனங்களும் கடனில் சிக்கியுள்ளன விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி? 2019 ஜூன் மாதத்தில் இந்த விஷயம் முதன்முதலில் வெளிச்சத்துக்கு வந்தது, ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தைத் தணிக்கை செய்து கொண்டிருந்த PwC, அந்தப் பணியில் இருந்து விலகியது. பின்னர் பல பரிவர்த்தனைகள் குறித்து கேள்விகளை எழுப்பிய PwC, சில பரிவர்த்தனைகள் கவனிக்கப்பட்டு சரி செய்யப்படாவிட்டால், அது நிறுவனத்தின் நிதி நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறியது. ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனத்தை தணிக்கை செய்வதில் இருந்து விலகிய PwCவின் விலகல் கடிதம் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில், ரிலையன்ஸ் கேபிடலின் நிதி குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. ஆனால் பின்னர் ஒரு பொது அறிக்கையை வெளியிட்ட அனில் அம்பானி குழுமம், தணிக்கை நிறுவனத்தின் இந்த 'கவலையை' முற்றிலுமாக நிராகரித்தது. மேலும், நிறுவனத்தின் புதிய தணிக்கையாளராக பதக் எச்டி & அசோசியேட்ஸ் இருப்பார் என்றும் அதன் பங்குதாரர்களுக்குத் தெரிவித்தது. இந்தியாவின் நிதிச் சந்தைகளில் கொந்தளிப்பு உச்சத்தில் இருந்த அந்த சமயத்தில், IL&FS மற்றும் திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (DHFL) போன்ற நிறுவனங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டன. எகனாமிக் டைம்ஸ் வங்கி ஆசிரியர் சங்கீதா மேத்தா ஒரு பாட்காஸ்டில் பேசியபோது, இதுபோன்ற சூழலில் (2017 மற்றும் 2019 க்கு இடையிலான காலகட்டத்தில்) வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் நம்பிக்கை ஆட்டம் கண்டதாகக் கூறினார். இதுபோன்ற சூழ்நிலையில், யெஸ் வங்கி ரிலையன்ஸ் கேபிட்டலுக்கு கடன் வழங்கியது. யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூரின் குடும்ப நிறுவனங்களில் ரிலையன்ஸ் கேபிடல் முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது. ரிலையன்ஸ் கேபிடலுக்கு கடன் வழங்கப்பட்டபோது, அது குறித்த தகவலை வங்கியின் இயக்குநர்கள் குழுவிடம் ராணா கபூர் தெரிவிக்கவில்லை. பாங்க் ஆஃப் பரோடாவிலும் அனில் அம்பானி குழும நிறுவனங்கள் பெரும் தொகையை கடனாக பெற்றிருந்தது. அத்தகைய சூழ்நிலையில், நிறுவனத்தின் நிதி பரிவர்த்தனைகள் குறித்தும் கேள்விகளை எழுப்பிய பாங்க் ஆஃப் பரோடா, விசாரணைக்குஉத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் நிதி சார்ந்த தகவல்களை ஆராய்வதற்காக பரோடா வங்கி கிராண்ட் தோர்ன்டனை நியமித்தது. அதன் அறிக்கையில், அனில் அம்பானியின் குழு நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனைகளில் முறைகேடுகள் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, இந்த வழக்கு விசாரணையில் மத்திய அமைப்புகள் ஈடுபட்டன. அதன் தொடர்ச்சியாக, விசாரணை தற்போது அமலாக்கத்துறையில் அனில் அம்பானி ஆஜராகும் கட்டத்தை எட்டியுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தை எப்போது அமல்படுத்த முடியும்? முறைகேடுகளைக் கண்டறியும் வங்கி, தடயவியல் தணிக்கையை நடத்துகிறது. நிதி திசைதிருப்பல் அல்லது மோசடி பரிவர்த்தனைகளை இந்தத் தணிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. வங்கி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து கடனை 'மோசடி' என்று அறிவிக்கிறது. குற்றச் செயல்கள் வெளிப்படையாகத் தெரியும்போது அமலாக்க இயக்குநரகம் அல்லது சிபிஐ விசாரணை தொடங்குகிறது. PMLA இன் பிரிவு 3இன் படி, ஒருவர் குற்றம் மூலம் வரும் வருமானம் தொடர்பான செயல்களில் தெரிந்தே ஈடுபட்டால், அவர் 'பணமோசடி' குற்றவாளி ஆவார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ADA குழுமத் தலைவர் அனில் அம்பானி ஒரே நேரத்தில் பல சட்டப் போராட்டங்களைச் சந்தித்து வருகிறார் அனில் அம்பானி தொடர்பான வழக்கு இதில் எவ்வாறு பொருந்துகிறது? ரிலையன்ஸ் ADA குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் வாங்கிய 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கடன்கள் தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் விசாரணை மேற்கொண்டுள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக இந்தப் பணம் ஷெல் நிறுவனங்கள் மூலம் மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது, இங்கு PMLAஇன் பிரிவுகள் பொருந்தும். கடந்த காலங்களில் நடந்த பல உயர்நிலை மோசடிகள் இதேபோன்ற செயல்பாட்டைக் கொண்டிருந்தன, அவை: திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (DHFL)- வாத்வான் (34,000 கோடி ரூபாய்): போலி வீட்டுக் கடன்கள் மற்றும் நிதி திசைதிருப்பல் ஏபிஜி கப்பல் கட்டும் தளம் (22,842 கோடி ரூபாய்): உயர்த்தப்பட்ட சொத்து மதிப்பீடுகள் மற்றும் வெளிநாட்டு நிதி பரிமாற்றங்கள் ரோட்டோமேக் பென் (3,695 கோடி ரூபாய்): ஏற்றுமதி கடன்களை தவறாகப் பயன்படுத்துதல் IL&FS: நிறுவனங்களுக்கு இடையேயான கடன்கள் மூலம் சொத்து மதிப்பை உயர்த்திக் காட்டுதல் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz935240qxqo
-
விழுமியங்களை வளர்ப்பதும், தொழிற்கல்விக்கு வழிநடத்துவதுமே கல்வி சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கம் - ஹரிணி அமரசூரிய
Published By: DIGITAL DESK 2 08 AUG, 2025 | 04:40 PM (நமது நிருபர்) பிள்ளைகளிடம் விழுமியங்களை வளர்ப்பதும், பாடசாலை கல்வியை இடையில் நிறுத்திய பிள்ளைகளை தொழிற்கல்விக்கு வழிநடத்துவதும் அதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பை உறுதி செய்வதும் கல்வி சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கமாகும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடலொன்று பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையிலான ஆயர்களுடன் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது பிரதமரும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவௌவும் கல்வி சீர்திருத்தங்கள் குறித்த முழுமையான விளக்கத்தை முன்வைத்தனர். எல்லா பிள்ளைகளுக்கும் உயர்தரமாகக் கருதப்படும் வேலைகளில் ஈடுபட வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதுடன், கடற்றொழில், மின் பொறியியல் துறை மற்றும் வாகன பழுதுபார்ப்பு போன்ற தொழிற்கல்வித் துறைகளின் பெறுமதியை விளக்கி, அத்துறைகளில் நிபுணர்களை உருவாக்குவதற்கான அடித்தளத்தை பாடசாலைக்குள்ளேயே எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதில் பாடத்துறை நிபுணர்களைத் தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவம், அந்த தேர்வு செயல்முறையை முறைப்படுத்துதல் மற்றும் பிள்ளைகளுக்கு சிறந்த தரமான கல்வியை வழங்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. இந்த நிகழ்வில் இலங்கை ஆயர் பேரவையின் தலைவர் மேன்மைதங்கிய ஆயர் ஹரோல்ட் அந்தோணி உள்ளிட்ட ஆயர்கள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/222104
-
சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்கிறது
யாழில் சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! 08 AUG, 2025 | 04:39 PM யாழ். வலிகாமம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக பௌர்ணமி தினமான இன்று வெள்ளிக்கிழமை (08) குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பக தலைவர் தீபன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/222103
-
யாழ்ப்பாணத்தில் மீண்டும் மலேரியா!
மலேரியா தாக்கம் குறித்து யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிக்கை! 08 AUG, 2025 | 07:46 PM மலேரியா தாக்கம் குறித்து ஊடக அறிக்கை ஒன்றினை யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய அதிகாரி ஆ.கேதீஸ்வரன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கையில் மலேரியா நோய் பரம்பல் பூரணமாக ஒழிக்கப்பட்டதாக 2016 ஆம் ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனத்தால் பிரகடனப்படுத்தபட்டது. அதன் பின்னர் உள்ளூரில் பரவும் மலேரியா நோயாளர்கள் யாரும் எமது நாட்டில் இனங்காணப்படவில்லை. ஆயினும், உலகில் பல நாடுகளில் குறிப்பாக ஆசிய, ஆபிரிக்க மற்றும் தென்அமெரிக்கா கண்டங்களில் உள்ள பல நாடுகளில் மலேரியா நோயின் பரம்பல் இன்னமும் அதிகமாகக் காணப்படுகின்றது. இந்நிலையில் எமது நாட்டைச் சேர்ந்த பல இளைஞர்கள் ஐரோப்பிய, வடஅமெரிக்க கண்டங்களுக்கு சட்ட விரோதமாக சென்று குடியேறும் நோக்குடன் ஆபிரிக்க நாடுகளுக்குச் சென்று தங்கியுள்ளனர். இவர்களில் பலர் ஐரோப்பிய, வட அமரிக்க கண்டங்களுக்குச் செல்ல முடியாது பல மாதங்களாக ஆபிரிக்க நாடுகளில் தங்கியிருந்து விட்டு எமது நாட்டிற்கு மீண்டும் திரும்பி வரும் போது அவர்களிடையே மலேரியா நோய் இனங்காணப்பட்டுள்ளது. இவ்வாறாக எமது நாட்டில் கடந்த பல வருடங்களாக மலேரியா அதிக பரம்பல் உள்ள நாடுகளுக்குச் சென்று நாடு திரும்பியோர் மத்தியில் மலேரியா நோய் இனங்காணப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையில் 2021 ஆம் ஆண்டு 26 பேரும், 2022 இல் 37 பேரும், 2023 இல் 62 பேரும், 2024 இல் 38 பேரும், 2025 இல் 29 பேரும் நாடு திரும்பியோர் மத்தியில் மலேரியா நோயுடன் இனங்காணப்பட்டுள்ளனர். அவ்வாறே யாழ் மாவட்டத்திலும் 2021 ஆம் ஆண்டு 2 பேரும், 2022 இல் 7 பேரும், 2023 இல் 6 பேரும், 2024 இல் 2 பேரும், 2025 இல் இது வரையான காலப்பகுதியில் 5 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த வாரம் யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஆபிரிக்க நாடான டோகாவிற்குச் சென்று கடந்த செப்ரெம்பர் 30 ஆம் திகதி இலங்கைக்குத் திரும்பிய 2 நோயாளர்களிடையே மலேரியா நோய் இனங்காணப்பட்டுள்ளது. முதலாவது நோயாளி நெடுந்தீவைச் சேர்ந்த 38 வயதான ஆண் ஒருவர் கடந்த ஒக்டோபர் 2 ஆம் திகதி நெடுந்தீவை வந்தடைந்துள்ளார். இவர் ஏற்கனவே வேறு பல நோய்களுக்கு உட்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி கடுமையான நடுக்கம், மாறாட்டம் போன்ற அறிகுறிகளுடன் இரவு 10.30 மணிக்கு நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு உடனடியாகவே இடமாற்றம் செய்யப்பட்டார். யாழ். போதனா வைத்தியசாலையில் உடனடியாகவே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஒக்டோபர் 5 ஆம் திகதி காலையில் இவரது குடும்பத்தினர் மூலம் இவர் ஆபிரிக்க நாட்டிற்கு சென்று வந்த தகவல் கிடைத்ததும் மலேரியாவிற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவருக்கு Falciparum malaria இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவருக்கு உடனடியாகவே மலேரியா நோய்க்கான ஊசி மருந்துகள் நாளத்தின் ஊடாக ஏற்றப்பட்டது. தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்பட்ட மலேரியாவிற்கான குருதிப் பரிசோதனையில் ஒக்டோபர் 7 ஆம் திகதி அவரது குருதியில் மலேரியா கிருமிகள் முற்றாக அழிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. ஆயினும், அவருக்குக் காணப்பட்ட பல்வேறு வேறுநோய் நிலைகளால் அவர் சுய நினைவற்ற நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையிலேயே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். மேற்படி நோயாளியுடன் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த 30 வயதான இளைஞர் ஒருவரும் டோகா நாட்டில் தங்கியிருந்து நாடு திரும்பியுள்ளார். இத்தகவல் கிடைத்ததுமே மலேரியா தடுப்பு இயக்க உத்தியோகத்தர்கள் இவருக்கு மலேரியா பரிசோதனைகளை மேற்கொண்ட போது இவருக்கும் Falciparum malaria இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இவருக்கு காய்ச்சலோ அல்லது வேறு எந்த நோய் அறிகுறிகளோ காணப்படவில்லை. இருப்பினும், இவரையும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்து மலேரியாவிற்கான பூரணமான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இந்த 2 நோயாளிகளைப் பொறுத்த வரையில் சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்கள் எவ்விதத்தாமதமும் இன்றி உடனடியாக தமது மலேரியா தடுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். எமது நாட்டில் மலேரியா நோயின் உள்ளூர் பரம்பல் முற்றாக ஒழிக்கப்பட்டாலும் மலேரியா நோயைப் பரப்புகின்ற நுளம்புகள் இன்னமும் காணப்படுகின்றன. எனவே, மேற்படி நோயாளர்களிடம் இருந்து அந்தப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு மலேரியா நோய் பரவாதிருக்க அவர்களது வதிவிடங்களைச் சுற்றி நுளம்புகளுக்கான பூச்சியியல் ஆய்வும், நுளம்புகளை அழிக்கும் புகையூட்டல் நடவடிக்கைகளும் வீடுகளுக்கான நுளம்பு கொல்லி மருந்துகளை விசிறும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களைத் தவிர்க்கும் நோக்குடன் மலேரியா பரம்பல் உள்ள நாடுகளுக்குச் செல்லும் பொது மக்கள் பண்ணையில் அமைந்துள்ள மலேரியா தடுப்புப் பணிமனையுடன் தொடர்பு கொண்டு மலேரியா தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். அவர்கள் அந்த நாடுகளில் தங்கியுள்ள காலப்பகுதியில் இத்தடுப்பு மருந்துகளைப் பாவிப்பதன் மூலம் மலேரியா நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ளலாம். அடுத்ததாக மலேரியா பரம்பல் உள்ள நாடுகளுக்குச் சென்று வந்தவர்கள் நாடு திரும்பியவுடன் மலேரியாவிற்கான குருதிப் பரிசோதனையை எமது வைத்தியசாலைகளில் மேற்கொண்டு உரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே, பொது மக்கள் அனைவரும் மலேரியா பரம்பல் அதிகமாகக் காணப்படும் ஆசிய, ஆபிரிக்க மற்றும் தென் அமெரிக்க கண்டங்களுக்குச் செல்லும் போது மேற்படி பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கையாண்டு எமது நாட்டில் மலேரியா நோய் பரவாதிருக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/222118
-
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
சிறையில் இருந்து பிள்ளையான் அனுப்பிய கடிதம் தொடர்பாக மட்டு மாநகர சபை முதல்வரிடம் சிஜடி விசாரணை Published By: VISHNU 08 AUG, 2025 | 07:16 PM மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்கு புனர் நிர்மானிக்கப்பட்ட பொது நூலகத்தை திறந்து மக்கள் பாவனைக்கு விடுமாறு சிறையில் இருக்கும் பிள்ளையான் ஆனுப்பிய கடிதம் தொடர்பாக மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதனிடம் சிஜடி யினர் வியாழக்கிழமை (07) விசாரணை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ள சம்பவம் தொடர்பாக கடந்த ஏப்பிரல் 6ம் திகதி சந்தேகத்தில் சிஜடி யினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் இந்த நிலையில் கடந்த 30 ம் திகதி பிள்ளையான் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் மட்டு மாநகர முதல்வருக்கு மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் புதிதாக அமைக்கப்பட்ட நூலகத்தை மக்கள் பாவனைக்கு கையளிப்பது தொடர்பாக என தலைப்பிடப்பட்டு அதில் கையொப்பம் இட்டு கடிதம் ஒன்றை கட்சி உறுப்பினர் ஒருவர் மாநகரசபை முதல்வரிடம் ஒப்படைத்துள்ளார். பிள்ளையான் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிஜடி யின் கீழ் இருக்கும் போது கடிதம் ஒன்று வெளிவந்ததுடன் அது முகநூலில் பிரசுரிக்கப்பட்ட நிலையில் சம்பவதினமான நேற்று முன்தினம் சிஜடி யினர் மாநகரசபைக்கு சென்று மாநகரசபை முதல்வரிடம் இந்த கடிதம் தொடர்பான விசாரணை ஒன்றை மேற்கொண்டு சென்றுள்ளனர். https://www.virakesari.lk/article/222129
-
பனை மரங்களுக்கு தீ வைத்த விஷமிகள்!
யாழ். வடமராட்சி கட்டைக்காட்டில் நூற்றுக்கணக்கான பனைகளுக்கு தீ வைப்பு! Published By: DIGITAL DESK 2 08 AUG, 2025 | 07:07 PM யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் விஷமிகளால் தீ வைக்கப்பட்டதில் நூற்றுக்கணக்கான பனை மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் கட்டைக்காடு இராணுவ முகாமிற்கு முன்னால் உள்ள பனைகள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளன. இதனை அவதானித்த இராணுவத்தினர், தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வாகனம் மற்றும் மருதங்கேணி இராணுவ முகாமிலிருந்து 200க்கும் மேற்பட்ட இராணுவத்தினரை வரவழைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். விஷமிகளால் வைக்கப்பட்ட தீ வேகமாகப் பரவியதால், அருகில் இருந்த ஏனைய பனை மரங்களும் தீக்கிரையாகின. சுமார் இரண்டு மணிநேர கடும் போராட்டத்திற்குப் பின்னரே தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. தற்போது பனம் பழ சீசன் என்பதால், பனைகளை நம்பி வாழும் மக்கள் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/222126
-
சிரிக்க மட்டும் வாங்க
அண்ணை, சரி சரி Positive ஆ எடுத்துக்கிறோம். மாப்பிள்ளைக்கு கைக்கு எட்டியது..... பயமா இருக்குமில்லையா?
-
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்: என்னால் உத்தரவாதம் வழங்க முடியாது - அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
தமிழ் அரசியல் கைதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் பொதுமன்னிப்பளியுங்கள் - சிறிதரன் நீதியமைச்சரிடம் வலியுறுத்தல் Published By: DIGITAL DESK 2 07 AUG, 2025 | 04:18 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்பதை இந்த உயரிய சபை ஊடாக வலியுறுத்துகிறேன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் நீதியமைச்சரிடம் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற அமர்வின் போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதியமைச்சர் குறிப்பிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க அவதானிக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் குறிப்பிடுவது வரவேற்கத்தக்கது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கதிர்காமதம்பி சிவகுமார்,விக்னேஸ்வரநாதன் பார்த்திபன்,கிருஷ்ணசாமி ராமசந்திரன், சண்முகலிங்கம் சூரியகுமார்,ஜோன்ஷன் கொலின் லெவன்டினோ, சச்சிதானந்தம் ஆனந்த சுதாகர், ஏ.எச். உமர் காதர், தங்கவேலு விமலன், செல்வராஜா கிருபாகரன், தம்பியையா பிரகாஷ் ஆகியோர் 14 முதல் 30 ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களின் குடும்பத்தை கருத்திற்கொள்ளுங்கள், ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் பெற்றோர் இல்லாமல் வாழ்கிறார்கள். அந்த பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் கரிசனை கொள்ளுங்கள். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்ட காலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்பதை இந்த உயரிய சபை ஊடாக வலியுறுத்துகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/222058