Everything posted by ஏராளன்
-
வோசிங்டனின் பொலிஸ் பிரிவை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார் டிரம்ப் - குற்றச்செயல்கள் அதிகரித்ததால் இந்த நடவடிக்கை என தெரிவிப்பு
12 AUG, 2025 | 01:21 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வோசிங்டன் டிசியின் பொலிஸ்பிரிவை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதுடன் தலைநகரை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தேசிய காவல் படையினரை ஈடுபடுத்தியுள்ளார். வோசிங்டனின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத்தை மீறி டிரம்ப் இவ்வாறு செயற்படுவது குறித்து கடும் கண்டனங்கள் வெளியாகியுள்ளன. வோசிங்டனில் சட்டஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நகரத்தை மீட்பதற்கு தனது நடவடிக்கைகள் அவசியம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். எங்கள் தலைநகரத்தை நாங்கள் மீளப்பெறப்போகின்றோம் குடிசைகளை இல்லாமல் ஆக்குவோம் என அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயககட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் உள்ள ஏனைய நகரங்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவேன் சிக்காக்கோவிற்கும் இது நடக்கலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். இதேவேளை டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வெள்ளை மாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. டிரம்பின் நடவடிக்கை சட்டவிரோதமானது என வோசிங்டன் டிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/222394
-
பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கின்றது அவுஸ்திரேலியா - ஹமாஸ் நிர்வாகத்தில் பங்கேற்ககூடாது என நிபந்தனை
காசாவில் காணப்படும் மனிதாபிமான நெருக்கடியை மறுதலிக்கும் நிலையில் பெஞ்சமின் நெட்டன்யாகு - அவுஸ்திரேலிய பிரதமர் 12 AUG, 2025 | 12:06 PM காசாவில் காணப்படும் மனிதாபிமான நெருக்கடியை மறுதலிக்கும் மனோநிலையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு காணப்படுகின்றார் என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை காரணமாக ஏற்பட்ட விரக்தியே பாலஸ்தீன அரசை அவுஸ்திரேலிய அரசாங்கம் அங்கீகரிப்பதற்கு ஒரு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நான் இஸ்ரேலிய பிரதமருடன் மீண்டும் பேசினேன், அவர் பொதுவெளியில் தெரிவித்ததையே என்னிடம் தெரிவித்தார், அது அப்பாவி மக்களிற்கு ஏற்படுத்தப்படும் தாக்கங்களை மறுப்பதாக காணப்படுகின்றது என அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். இதேவேளை பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முடிவை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் வரவேற்றுள்ளார். https://www.virakesari.lk/article/222388
-
யாழில் பனையால் விழுந்ததாக கூறி குடும்பஸ்தர் வைத்தியசாலையில் சேர்ப்பிப்பு - வைத்தியர்கள் சந்தேகம்!
Published By: VISHNU 13 AUG, 2025 | 08:05 PM 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் பனையால் விழுந்ததாக கூறி மயக்க நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டுவந்து சேர்ப்பித்துவிட்டு வைத்தியசாலைக்கு அழைத்து வந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், பண்டத்தரிப்பு - சாந்தை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரே இவ்வாறு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவருக்கு தலையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் மயக்க நிலையில் இருந்து அவர் மீளவில்லை. குறித்த குடும்பஸ்தரின் தலை மற்றும் ஒரு கையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. குறித்த காயம் பனையால் விழுந்ததுபோல் இல்லை என சந்தேகிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/222526
-
முத்தையன்கட்டு சம்பவம் - கைதுசெய்யப்பட்ட நபரை அன்றிரவே பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டோம் - இராணுவ பேச்சாளர்
Published By: RAJEEBAN 13 AUG, 2025 | 11:10 AM முத்தையன்கட்டு குளத்தில் கபில்ராஜ் என்ற இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமைக்கும் இராணுவத்திற்கும் தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படுவதை இராணுவ பேச்சாளர் வருணகமகே நிராகரித்துள்ளார். ஐலண்ட் நாளிதழிற்கு இதனை அவர் தெரிவித்துள்ளார். ஒட்டிசுட்டான் முத்தையன்கட்டு வீதியில் உள்ள முகாமில் உள்ள படையினர் ஆகஸ்ட் ஏழாம் திகதி இரவு நபர்கள் சிலர் முகாமிற்குள் நுழைய முற்பட்டதை தடுத்து நிறுத்தினார்கள் என இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். படையினர் அவர்களில் ஒருவரை கைதுசெய்தனர், ஏனையவர்கள் தப்பியோடிவிட்டனர். நாங்கள் அவர்களை துரத்திச்செல்லவில்லை என இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். இராணுவ தலைமையகத்தின் உத்தரவின் பேரில் குறிப்பிட்ட இராணுவ முகாமை சேர்ந்தவர்கள் பொலிஸாருக்கு உரிய ஒத்துழைப்பை வழங்கினார்கள் என அவர் தெரிவித்துள்ளார். மூன்று படையினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர், எவரும் கபில்ராஜின் உடல் மீட்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சிங்க ரெஜிமன்டின் 12வது பட்டாலியனின் முகாம் அது 2025 ஆகஸ்ட் ஏழாம் திகதி இரவு கைது செய்யப்பட்டவரை பின்னர் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்துவிட்டோம், என தெரிவித்துள்ள இராணுவ பேச்சாளர் பல உள்நோக்கம் கொண்ட சக்திகள் இந்த விடயத்தை பயன்படுத்த முயல்கின்றன, ஆனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த முகாமை சேர்ந்தவர்களுடன் சிறந்த உறவை பேணுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினரால் கைவிடப்பட்ட பொருட்களை எடுத்துச்செல்வதற்காக சிலரை அழைத்த பின்னர் இராணுவத்தினர் அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டார்கள் என தெரிவிக்கப்படுவதை மறுத்துள்ள இராணுவ பேச்சாளர் இது முற்றிலும் பொய் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/222466
-
வீரமுனை படுகொலை - மக்களின் நீதிக்கான கோரிக்கை
35 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட வீரமுனைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு 13 AUG, 2025 | 11:27 AM வீரமுனைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு 35 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை (12) மாலை ஆலய பூசையுடன் ஆரம்பமானது. அம்பாறை மாவட்டத்தில் 35 ஆண்டுகளுக்கு முன் நடந்தேறிய வீரமுனைப் படுகொலை நினைவேந்தலானது வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மங்கள விளக்கேற்றல் ஏற்றி வைக்கப்பட்டு 2 நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் படுகொலை செய்யப்பட்டவர்கள் ஞாபகார்த்த தூபியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து ஆலய வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. வீரமுனைப் படுகொலை 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்னும் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். குறித்த படுகொலை செய்யப்பட்ட நாளின் 35 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இன வன்செயல் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருட்டிண மிசன் பாடசாலை வளவினுள்ளும் 1990 தஞ்சம் புகுந்திருந்தனர். இக்காலகட்டத்தில், ஆகஸ்ட் 12 ம் நாளன்று முஸ்லிம் ஊர்காவல்படையினர் இராணுவத்தின் துணையுடன் இந்த படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதாக பதிவுகள் பல உள்ளன. இதன்போது 400க்கும் அதிகமான தமிழ் மக்களை சுட்டும் வெட்டியும் தாக்கினர். இவர்களில் பெண்கள் குழந்தைகள் உட்பட 55 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். அதிகமானோர் படுகாயமுற்றனர். அவ்வேளையில் கடத்தப்பட்டோர் பற்றி எவ்விதத் தகவலும் இதுவரையில் இல்லை. இவ்வாறு படுகொலை நடந்து அதில் படுகாயமடைந்தவர்கள் அம்பாறை உட்பட பல வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டபோதும் அவர்களும் அங்கிருந்து கொண்டுசெல்லப்பட்டு படுகொலைசெய்யப்பட்டனர். 1990ஆம் ஆண்டு வீரமுனை மக்கள் முற்றாக அங்கிருந்து துரத்தப்பட்டு அக்கிராமத்தினை அபகரிக்க மேற்கொண்ட முயற்சி அன்றைய பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கோவிந்தன் கருணாகரத்தின் முயற்சியினால் தடுத்து நிறுத்தப்பட்டு வீரமுனை மக்கள் மீள குடியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்ப பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இளையதம்பி சிறிநாத் ,ஞானமுத்து சிறிநேசன் ,மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன், நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் செயலாளரும் கல்முனை தொகுதி இணைப்பாளருமான அருள். நிதான்சன், சிவில் சமூக செயற்பாட்டாளரும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க ஆலோசகருமான தாமோதரம் பிரதீபன், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு செயலாளர் காந்தன் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் உட்பட ஆலய நிர்வாக குழுவினர் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் பொதுமக்கள் படுகொலையானவர்களின் உறவுகள் என பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/222465
-
சர்வதேச யானைகள் தினம் இன்று
'குட்டியை விடவும் நட்புக்கு முன்னுரிமை' - 55 ஆண்டுகளாக ஒன்றாகவே வலம் வரும் இரு பெண் யானைகளின் கதை பட மூலாதாரம், MUDUMALAI TIGER RESERVE படக்குறிப்பு, இணை பிரியா தோழிகளான பாமா-காமாட்சி கட்டுரை தகவல் நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 12 ஆகஸ்ட் 2025 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "எங்கு சென்றாலும் ஒன்றாகத்தான் செல்லும். அருகருகே நிற்க வைக்காமல் உணவு கொடுத்தால் பிடிக்காது. 55 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டும் இணைபிரியா தோழிகளாக உள்ளன. ஒன்றுக்கொன்று துணையாகவும் வழிகாட்டியாகவும் திகழ்கின்றன." முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நெருங்கிய தோழிகளாக உள்ள காமாட்சி - பாமா யானைகளின் நட்பு குறித்து இவ்வாறு விவரித்தார், முதுமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநரான சி வித்யா. இரு யானைகளின் நட்பும் பலரையும் ஆச்சர்யப்படுத்துகிறது. சமீபத்தில் தமிழ்நாடு வனத்துறையின் கூடுதல் முதன்மை செயலாளர் இவ்விரு யானைகள் குறித்த காணொளியை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்ததையடுத்து, அந்த யானைகள் குறித்து அறிய வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கு அதிகரித்தது. நட்பை வெளிப்படுத்தும் அவ்விரு யானைகளின் செயல்கள் பலவும் சுவாரஸ்யத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதாக உள்ளன. உலக யானைகள் தினமான இன்று (ஆக. 12) இந்த யானைகளின் நட்பு குறித்த சுவாரஸ்யமான தகவல்களை அறியலாம். 1960களில் இருந்தே காமாட்சி, பாமா இரு யானைகளும் தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்ததை புகழ்பெற்ற கால்நடை மருத்துவரான கிருஷ்ணமூர்த்தி பதிவு செய்திருப்பதாகக் குறிப்பிடுகிறார், வன உயிரின ஆர்வலரான 'ஓசை' காளிதாசன். இவர் 'ஓசை' எனும் பெயரில் சூழலியல் அமைப்பை நடத்திவருகிறார். 1960களில் இருந்தே இரு யானைகளும் முகாமில் இருந்தாலும் அதன் வயது குறித்து மாறுபட்ட தகவல்களே கிடைக்கப் பெறுகின்றன. சுப்ரியா சாஹுவின் பதிவின்படி, பாமாவுக்கு 75 வயது, காமாட்சிக்கு 65 வயது. 'ஒன்றாகவே சாப்பிடும்' பட மூலாதாரம், MUDUMALAI TIGER RESERVE படக்குறிப்பு, 'ஒன்றை விட்டு ஒன்று தனித்து இருக்காது' 1960ம் ஆண்டு வாக்கில் காமாட்சியும் 1963ம் ஆண்டில் பாமாவும் ஆனைமலையிலிருந்து இந்த முகாமுக்கு அழைத்து வரப்பட்டதாகக் கூறுகிறார் 'ஓசை' காளிதாசன். ஆசியாவின் மிகவும் பழமையான யானை முகாம்களுள் ஒன்றான இந்த முகாமில், சுமார் 30 யானைகள் உள்ளன. அவற்றில் தனித்துவமான பாமா-காமாட்சியின் நட்பு குறித்து விளக்கினார், சி வித்யா. "இந்த முகாமில் காலை, மாலை வேலைகளில் யானைகளுக்கு உணவு வழங்கப்படும். பாமா-காமாட்சி யானைகளை அருகருகே நிற்க வைத்தால்தான் இரண்டும் சாப்பிடவே வரும். ஒரு யானையை முகாமுக்கு அழைத்து வராவிட்டாலோ அல்லது கொஞ்சம் தள்ளி நிற்க வைத்தாலோ மற்றொரு யானை சாப்பிட வராது. தன் அருகே தோழி இல்லையென்றால், ஏதேனும் சத்தம் எழுப்புவது அல்லது தலையை மறுப்பது போல அசைப்பது என பல்வேறு சமிக்ஞைகளால் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தும். மற்றபடி இரண்டும் மிகவும் கனிவான யானைகள். பல ஆண்டுகளுக்கு முன்பு உள்ள ஆவணங்களை எடுத்துப் பார்த்தாலும் இந்த யானைகளின் நட்பு இப்படித்தான் இருந்திருக்கிறது." என்கிறார் சி வித்யா. இந்த முகாம்களில் மற்ற யானைகளை போல இந்த இரு யானைகளுக்கு சங்கிலி போடப்படுவதில்லை. எனவே, அவற்றால் தான் விரும்பிய நேரத்துக்கு மேய்ச்சலுக்கு சுதந்திரமாக, ஒன்றாக சுற்றித் திரிய முடியும். "காலை உணவுக்குப் பின் இரண்டும் மேய்ச்சலுக்கு சென்றுவிடும். பின் மீண்டும் இரவு நேரத்தில் காட்டுக்குள் ஒன்றாக திரியும். காமாட்சி யானையின் 3 குட்டிகள் இதே முகாமில் உள்ளன. ஆனால், அவற்றுடன் கூட காமாட்சி யானை அவ்வளவாக நேரம் செலவழிக்காது, பாமாவுடன்தான் இருக்கும்." என்கிறார் வனத்துறை அதிகாரியான வித்யா. சுப்ரியா சாஹுவும் தன் பதிவில், "இரண்டு யானைகளும் ஒன்றாகவே சாப்பிடும், ஒன்றாகத்தான் இருக்கும். கரும்பு கொடுத்தால் கூட இணைந்து சாப்பிடவே இரண்டும் விருப்பப்படும்" என பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம், SUPRIYA SAHU IAS/X படக்குறிப்பு, அன்பு, விசுவாசம், நீண்ட கால நட்பின் அடையாளமாக திகழ்வதாக தன் பதிவில் கூறியுள்ளார் சுப்ரியா சாஹு தோழிகளானது எப்படி? இந்த பெண் யானைகளிடையே இப்படியொரு பிணைப்பு எப்படி ஏற்பட்டது? இயல்பாகவே பெண் யானைகளுக்குள் பெரும் பிணைப்பு ஏற்படும் என்கிறார், யானைகள் ஆய்வாளரான பி. ராமகிருஷ்ணன். ஊட்டி அரசு கலைக் கல்லூரியில், காட்டுயிர் உயிரியல் துறையில் உதவிப் பேராசிரியராக இருக்கும் பி.ராமகிருஷ்ணன், 20 ஆண்டுகளுக்கும் மேலாக யானைகளைப் பற்றி ஆய்வு செய்து வருகிறார். யானைகளின் வழித்தடங்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார் ராமகிருஷ்ணன். "பெண் யானைகளிடையே எப்போதும் நெருக்கமும் பிணைப்பும் அதிகம். ஓர் ஆண் யானை தன் 14-15 வயதில் வயதுவந்த பின்பு, அதன் குடும்பத்தில் உள்ள வயது முதிர்ந்த பாட்டி யானை, அந்த ஆண் யானையை குடும்பத்தை விட்டு வெளியேற்றிவிடும். பெண் யானைகள் குடும்பத்துடனேயே இருக்கும். மனிதர்களிடத்தில் பெரும்பாலான சமூகங்களில் வயதுவந்த பின்பு, திருமண உறவின்போது பெண்கள் தான் வீட்டிலிருந்து வெளியேறுவார்கள். ஆனால், யானைகளிடத்தில் இது வித்தியாசமானது. அதனாலேயே பெண் யானைகள் கூட்டமாகவே இருக்கும்." எனக் கூறுகிறார் பி. ராமகிருஷ்ணன். ஆண் யானைகள் பெண் யானைகளுடன் ஒப்பிடுகையில் தனித்து இருக்கும் என்றும், வேறு கூட்டத்தில் உள்ள ஆண் யானையுடன் சண்டையிட்டுதான் இணையை அடையும் என்றும் கூறுகிறார் அவர். இதே கருத்தை வலியுறுத்தும் 'ஓசை' காளிதாசன், "யானைகள் தாய்வழிச் சமூகத்தைக் கடைபிடிப்பவை. குடும்பத்தை பெண் யானைகள் தான் வழிநடத்தும். எனவே தான் இயல்பாகவே பெண் யானைகளிடையே நட்புறவு ஏற்படுகிறது. பாமா-காமாட்சி யானை சில நாட்களில் மேய்ச்சலுக்கு செல்லும்போது இரு நாட்கள் கழித்துகூட முகாமுக்கு திரும்பி வரும். தும்பிக்கைகள் மூலம் தொட்டு அன்பை வெளிப்படுத்தும். ஆண் யானைகளிடையே பொதுவாக அவ்வளவு பிணைப்பு இருக்காது." என்றார். பட மூலாதாரம், OSAI KALIDASAN/FACEBOOK படக்குறிப்பு, 'பெண் யானைகள் தான் வழிநடத்தும்' - ஓசை காளிதாசன் முதுமலையில் தன்னுடைய ஆய்வு படிப்பின்போது (2000-2007) இதேபோன்று கௌரி - ரதி என இரண்டு யானைகள் இணைபிரியா தோழிகளாக இருந்ததை நினைவுகூர்கிறார் ராமகிருஷ்ணன். பெண் யானைகள் தோழிகளாக இருக்கும்போது, பெரும்பாலும் மனிதர்களின் நடத்தையை போன்றே யானைகளின் செயல்பாடுகளும் இருக்கும் என அவர் விளக்கினார். "மனிதர்களில் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தால், எப்படி வீட்டிலுள்ள மற்ற பெண்கள் குழந்தையை கவனித்துக்கொள்வார்களோ, அதேபோன்று பெண் யானைகள், குறிப்பாக வயதான யானை சேர்ந்து ஒரு குட்டி யானையை பராமரிக்கும். அந்த குட்டி யானையை புலி, சிறுத்தை போன்றவை தாக்காமல் பாதுகாக்கும். குட்டி யானைக்கு உணவளிப்பது மட்டுமே தாய் யானையின் வேலையாக இருக்கும். மற்றபடி, பல இடங்களுக்கு அழைத்துச் செல்வதெல்லாம் மற்ற பெண் யானைகள் தான்." என பெண் யானைகளுக்குள் இயல்பாகவே இருக்கும் பந்தம் குறித்து கூறினார் ராமகிருஷ்ணன். 1960களில் ஓர் ஆண் காட்டு யானையை பிடிக்க, பெண் யானைகள் பயன்படுத்தப்படும் (decoy method) என்றும் அச்சமயத்தில் நிறைய பெண் யானைகள் முதுமலை யானைகள் முகாமுக்கு அழைத்து வரப்பட்டதாகவும் கூறுகிறார் ராமகிருஷ்ணன். அதன் ஒரு பகுதியாகவே பாமாவும் காமாட்சியும் இந்த முகாமுக்கு வந்திருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம், SUPRIYA SAHU IAS/X படக்குறிப்பு, "பாமாவுக்கு கண் புரை இருப்பதால், காமாட்சி தான் அதை எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்லும்." "பாமா-காமாட்சி என இரு யானைகளுக்குமே வயது முதிர்வால் ஏற்படும் நோய்கள் உள்ளன. பாமாவுக்கு 70 வயதை கடந்துவிட்டது. காமாட்சி அதைவிட இளையது. பாமாவுக்கு கண் புரை இருப்பதால், காமாட்சி தான் அதை எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்லும். அதனால் தான் இரண்டுக்கும் பிணைப்பு அதிகமாக இருக்கிறது. வயதாக ஆக மனிதர்களுக்கு எப்படி துணை தேவைப்படுகிறதோ, அதேபோன்றுதான் யானைகளுக்கும். இரண்டு யானைகளும் தனித்து எங்கும் செல்லாது," என காமாட்சி-பாமா யானைகள் குறித்து தான் கவனித்ததை சுவாரஸ்யமாக தெரிவித்தார் ராமகிருஷ்ணன். இரண்டு யானைகளுமே மெனோபாஸ் நிலையை அடைந்தவை என்பதால், கண் பார்வை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் இயல்பாகவே உள்ளன. வாசனை மூலமே அடையாளம் கண் பார்வை உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும் நிலையில், பாமா யானை, காமாட்சியை எப்படி அடையாளம் காண்கிறது? "யானைகளுக்கு அதன் வாசனைதான் தொடர்புக்கான அம்சம். இரவில் இரு யானைகளையும் மேய்ச்சலுக்கு அனுப்பும்போது, ஒன்றையொன்றின் வாசனை மூலமே பின் தொடர்ந்து செல்லும், அதன்மூலமே அடையாளம் கண்டுவிடும். மற்ற விலங்குகளின் ஆபத்து அல்லது தண்ணீர் இருக்கும் இடம் என எங்கெல்லாம் பாதுகாப்பின்மையை உணருகின்றனவோ, அங்கெல்லாம் இரு யானைகளும் இன்னும் நெருக்கத்துடனேயே சுற்றித் திரியும்." என கூறுகிறார் ராமகிருஷ்ணன். யானைகளில் கண்ணுக்கும் காதுக்கும் இடையே டெம்போரல் கிளாண்ட் (temporal gland) எனும் சுரப்பி இருக்கும். அதை நுகர்ந்தே இரு யானைகளும் பார்வைத் திறன் குறைந்திருந்தாலும் ஒன்றையொன்று அடையாளம் கண்டுவிடும் என்கிறார் ராமகிருஷ்ணன். முகாமில் உணவு கொடுத்த பின் ஒரு யானை முன்னே சென்றாலும் மற்றொன்றுக்காக காத்திருக்கும், அதை பார்ப்பதே மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்றும் பகிர்ந்துகொண்டார் அவர். "தங்களின் தும்பிக்கைகளை இணைத்துக்கொண்டே தான் இரண்டும் இருக்கும்." என்கிறார் ராமகிருஷ்ணன். 'வலி கூட புரியும்' இந்த இரு யானைகளும் மகிழ்ச்சியை மட்டுமல்ல, தங்களின் வலியை கூட புரிந்துகொண்டு பயணிப்பதாக கூறுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. "இரண்டில் ஏதேனும் ஒரு யானைக்கு வலி இருந்தால் ஓரிடத்திலேயே நின்றுவிடும் அல்லது மெதுவாக நகரும். அச்சமயங்களில் மற்றொரு யானை அதை தொட்டுப் பார்க்கும். வலியில் இருக்கும் யானையின் ஹார்மோன் மாறுவதால், அதன் வாசனையை நுகர்ந்து மற்றொரு யானை வலியில் இருக்கிறது என்பதை உணரும். மனிதர்களால் கேட்க முடியாத ஒலி அலைகள் மூலமும் யானைகள் தொடர்புகொள்ளும். ஒரு யானை வலியில் இருந்தால், மன அழுத்த ஹார்மோன்கள் வெளிப்படும். அப்போது, அந்த யானையின் சிறுநீரை நுகரும்போது மற்றொரு யானையால் அதை உணர முடிகிறது. யானை ஒரு சமூக விலங்கு என்பதால், மனிதர்களுடன் ஒத்த பண்புகள் அவற்றிடம் அதிகம்." என தெரிவித்தார் ராமகிருஷ்ணன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdxyq2px14ko
-
இலங்கையில் மனிதபுதைகுழிகள் தோண்டப்படும் நிலையில் தமிழ் மக்கள் வெளிநாட்டு உதவியை எதிர்பார்க்கின்றனர்
Published By: RAJEEBAN 13 AUG, 2025 | 03:40 PM https://www.dw.com Jeevan Ravindran இலங்கையில் மனித புதைகுழியொன்று தோண்டப்படும் ஒவ்வொரு தருணத்திலும் தம்பிராசா செல்வராணி உறக்கமிழந்தவராக காணப்படுகின்றார். "எங்கள் உறவுகளிற்கு என்ன நடந்தது என்பது தெரியாது அவர்கள் தோண்ட ஆரம்பிக்கும்போது நாங்கள் பதற்றமடைகின்றோம்" என அவர் டிடயில்யூவிற்கு(dw) தெரிவித்தார். இலங்கையின் உள்நாட்டு போரின் இறுதி தருணங்களில் இலங்கைஇராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல்போன தனது கணவர் முத்துலிங்கம் ஞானசெல்வத்தை 54வயது செல்வராணி தேடிவருகின்றார். 3 தசாப்தகால மோதலின் பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் யுத்தம் முடிவிற்கு வந்தது. அதன் பின்னர் பல பாரிய மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதகாலமாக தொல்பொருள் ஆய்வாளர்கள் செம்மணியில் உள்ள மனித புதைகுழியை அகழ்ந்துவருகின்றனர், இது இலங்கையின் வடபகுதி தலைநகரமான யாழ்ப்பாணத்தின் புறநகரில் உள்ளது. இதுவரை குழந்தைகளினது எலும்புக்கூடுகள் உட்பட 140க்கும் அதிகமான எலும்புக்கூடுகளை மீட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் ஒரு ஆழமற்ற கல்லறையில் ஒன்றாக புதைக்கப்பட்டுள்ளனர் செம்மணி 1998 முதல் ஒரு மனித குழியாகயிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட பகுதி. பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல்வன்முறை கொலை வழக்கில் விசாரணையை எதிர்கொண்டிருந்த முன்னாள் இராணுவ கோப்பிரல், அந்த மாணவியுடன் உடலுடன் நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தார். செம்மணியை சுற்றியுள்ள பகுதிகளில் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களுடன் 1990ம் ஆண்டு முதல் தான் பணியாற்றுவதற்காக சட்டத்தரணி நிரஞ்சன் டிபில்யூவிற்கு தெரிவித்தார். "இதுவரை உடல்கள் தோண்டப்பட்டதில், உடல்கள் எந்தவித சட்டத்தடைகளும் இல்லாமல், ஆழமற்ற குறிக்கப்படாத புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ளமை" தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்தார். நாங்கள் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுகின்றோம் என தெரிவித்த அவர் ஏற்கனவே இறந்தநிலையில் அவர்கள் புதைக்கப்பட்டிருந்தால் அவர்களின் உடல்கள் வளையாது என குறிப்பிட்டார். சிலரின் கைகால்கள் வளைக்கப்பட்டதாக தோன்றுகின்றது என அவர் குறிப்பிட்டார். அந்த இடத்தில் எலும்புக்கூடுகளுடன் செருப்புகள், ஒரு குழந்தையின் பால்போத்தல், குழந்தையின் பாடசாலை பை உள்ளிட்ட பல பொருட்களை கண்டுபிடித்துள்ளனர். காயங்களை கிளறுதல் செம்மணிக்கு மிகவும் வலிமிகுந்த அதிர்ச்சிகரமான வரலாறு உள்ளது. குறிப்பாக யாழ்ப்பாண மக்களுடன் என யாழ்ப்பாணத்தை தளமாக கொண்ட அடையாளம் ஆய்வு கொள்கை ஆய்வு மையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அனுஷானி அழகராஜா தெரிவித்தார். அந்த காலத்தில் எங்களின் நண்பர்களின் சகோதரர்கள் தந்தைமார் சகோதரிகள் காணாமல்போனார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் இது நடந்து 25 வருடங்களாகிவிட்டது, இது மிகவும் பழைய காயங்களை கிளறுகின்றது, பாதிக்கப்பட்டவர்களிற்கு மாத்திரமில்லை, முழு சமூகத்திற்கும் முழுயாழ்ப்பாணத்திற்கும், இது உங்களால் உண்மையில் மறக்க முடியாத நினைவுபடுத்தல் என அவர் குறிப்பிட்டார். இலங்கையில் இதுவரை இடம்பெற்ற மனித புதைகுழி விசாரணைகளில் செம்மணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக கவனத்தை ஈர்த்ததாக மாறியுள்ளது. இந்த மனித புதைகுழி அகழ்வு சர்வதேச மேற்பார்வை என்ற கோரிக்கையை கிளறியுள்ளது குறிப்பாக இலங்கையின் தமிழ் சமூகத்திடமிருந்து. ஜூன் மாதம் இந்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேக்கர் "பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை பெற்ற நம்பகதன்மை மிக்க உள்நாட்டு பொறிமுறைகளுடன் முன்னேறிச்செல்வதில் இலங்கை சிரமங்களை எதிர்கொண்டுள்ளது, இதன் காரணமாக இலங்கையர்கள் நாட்டிற்கு வெளியே நீதியை தேடுகின்றனர், சர்வதேச சமூகத்தின் உதவியுடன்" என தெரிவித்தார். அவர்கள் அடுத்தது யாரை கண்டுபிடிக்கப் போகின்றார்கள் என்பது தெரியாது வோல்க்கெர் டேர்க்கின் விஜயத்தின் போது தமிழ் செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர், தம்பிராசா செல்வராணி அதில் கலந்து கொண்டு ஐநாவின் மனித உரிமை ஆணையாளரை நேரடியாக சந்தித்தார். இலங்கையின் நீதி பொறிமுறையில் தனக்கு நம்பிக்கை இல்லை என அவர் மனித உரிமை ஆணையாளரிடம் தெரிவித்தார். அம்பாறையின் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள் சங்கத்தின் தலைவி செல்வராணி, தனது மாவட்டத்தில் உள்ள மனித புதைகுழிகளையும் அகழவேண்டும் என அவர் தெரிவிக்கின்றார். 'நாங்கள் அச்சமடைந்துள்ளோம், அடுத்தது யாரை கண்டுபிடிக்கப்போகின்றார்கள் என்பது எங்களிற்கு தெரியாது என டிடபில்யூவிடம் தெரிவித்த அவர் நான் இரவும்பகலும் இதனையே நினைத்துக்கொண்டிருக்கின்றேன் என்னால் நிம்மதியாக உறங்கமுடியவில்லை, உண்ணமுடியவில்லை, நான் பெரிதும் குழப்பமடைந்துள்ளேன் என தெரிவித்தார். கடந்த 17 வருடங்களாக, ஜனாதிபதிகள் மாறிக்கொண்டிருக்க நாங்கள் அவர்களிடம் எங்கள் பிள்ளைகள் எங்கள் அன்புக்குரியவர்களிற்கு என்ன நடந்தது என்ற உண்மையை தெரிவிக்கும்படி கேட்டுவருகின்றோம் என அவர் தெரிவித்தார். ஆனால் முன்னேற்றம் என்பது மிகவும் மெதுவானதாக காணப்படுகின்றது. ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளும் வேளை செல்வராணி தற்போதும் சிஐடியினரின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றார். "அவர்கள் நான் அங்கு செல்லக்கூடாது என தெரிவிக்கின்றனர், உங்கள் உறவினர்கள் இறந்துவிட்டனர் நீங்கள் ஏன் அங்கு செல்கின்றீர்கள் என கேட்கின்றனர்" என்கின்றார் செல்வராணி. புதிய அரசாங்கம் பழைய பிரச்சினைகள் இலங்கையின் வழமையான வம்சாவளி அரசியலில் இருந்து விலகி செப்டம்பர் 2024 இல் நாடு இடதுசாரி ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவை தெரிவு செய்தது. எனினும் சட்டத்தரணி நிரஞ்சன் 'சந்தேகம் வெளியிடுகின்றார்' அரசாங்கங்களை நம்பமுடியாது என்பதை வரலாறு எங்களிற்கு தெரிவித்துள்ளது. அவர்கள் சர்வதேச கண்காணிப்பை எதிர்ப்பார்கள் என அவர் குறிப்பிடுகின்றார். அரசாங்கத்திற்கு இனப்பிரச்சினை குறித்த புரிதல் இல்லை அவர்கள் அதனை புரிந்துகொள்ளவில்லை என சட்டத்தரணி நிரஞ்சன் ஊழலை ஒழித்தால் நாடு அமைதியாகயிருக்கும் என அவர்கள் கருதுகின்றனர், ஆனால் "நாடு கடனிற்குள் சிக்கியமைக்கு இனப்பிரச்சினையும் ஒரு காரணம்" என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என குறிப்பிட்டார். மனித உரிமை சட்டத்தரணியும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான அம்பிகா சற்குணநாதனும் தனது நம்பிக்கையின்மையை வெளியிட்டார். "வரலாற்றுரீதியாக, மிக தெளிவாக இலங்கையின் ஒவ்வொரு அரசாங்கமும் பல்வேறு பொறுப்புக்கூறல் செயற்பாடுகளில் சர்வதேச உதவியை நாடுவதற்கு தயங்கியுள்ளன" என அவர் தெரிவித்தார். ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க யுத்தகுற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவது தொடர்பில் தான் சர்வதேச உதவியை பெறப்போவதில்லை என தெரிவித்திருந்தார். அரசாங்கம் நீதியை நிலைநாட்டுவது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளது என்பது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் உள்ள நம்பிக்கையின்மையை அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டினார். அனுரகுமார திசநாயக்க அரசாங்கம் சர்வதேச மேற்பார்வையை கோரும் என தான் கருதவில்லை என அடையாளத்தின் அழகராஜா தெரிவித்தார். முன்னைய அகழ்வுகளில் இருந்து இம்முறை அகழ்வில் வித்தியாசமான எதனையும் பார்க்கவில்லை என அவர் தெரிவித்தார். தங்கள் பிள்ளைகளை செம்மணியில் பார்ப்போம் என எதிர்பாக்கும் குடும்பங்களை நான் சந்தித்தேன், அவர்கள் இந்த செயற்பாடுகள் தங்களிற்கு ஏதோ பதிலை தரப்போகின்றது என நம்பமுயல்கின்றார்கள், ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கான பதில் மிகவும் ஆபத்தானது என அவர் தெரிவித்தார். நம்பிக்கை என்பது எப்போதும் சிறந்தவிடயமல்ல, ஏனெனில் அது உங்களை மிக மோசமாக ஏமாற்றும் காயப்படுத்தும் குறிப்பாக இலங்கையில் என அழகராஜா தெரிவித்தார். https://www.virakesari.lk/article/222491
-
மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
மன்னார் சொர்க்கம் இல்லை - காற்றாலை மின்திட்டத்தினால் பறவைகளிற்கு ஆபத்து இல்லை - எரிசக்தி அமைச்சர் 12 AUG, 2025 | 05:00 PM மன்னாரில் காற்றாலை மின்திட்டத்தினால் பறவைகளிற்கும் இயற்கை சமநிலைக்கும் பாதிப்பு ஏற்படாது என எரிசக்தி அமைச்சர் குமாரஜயக்கொடி தெரிவித்துள்ளமைக்கு சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். காற்றாலை மின்திட்டத்தினால் பறவைகளிற்கு ஆபத்து என தெரிவிக்கப்படுவது ஆதாரமற்ற விடயம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சர் நான் அந்த பகுதிக்கு சென்றுள்ளேன் காற்றாலைமின்திட்டத்தினால் பறவைகளிற்கு பாதிப்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை,மன்னார் முதல் பூநகரி வடக்கு முதல் அரசகாணி என தெரிவித்துள்ளார். மன்னாரை சில தரப்பினர் ஒரு சொக்கம் எனவும் அது காற்றாலை விசையாழிகளால் அழிக்கப்படலாம் என தெரிவிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் மன்னார் முதல் பூநகரி வடக்கு முதல் காணப்படும் பகுதி ஒரு தரிசு நிலம் மக்கள் பறவைகளை பற்றி பேசுகின்றனர், ஆனால் அந்த பாதையில் பறவைகள் எதுவுமில்லை என தெரிவித்துள்ளார். அமைச்சரின் கருத்து குறித்து பதிவிட்டுள்ள சூழல் ஆர்வலர் மெலனி குணதிலக மழைக்காலத்தில் புவிவெப்பமடைதல் உண்மையா என அமைச்சரிடம் கேட்காதீர்கள் என தெரிவித்துள்ளார். இதேவேளை அமைச்சரின் கருத்து குறித்து பதிவிட்டுள்ள ரெகான்ஜயவிக்கிரம 2025 இல் அரசியல்வாதிகளின் முட்டாள்தனமான பதில்களில் இதுவே தலைசிறந்தது என குறிப்பிடலாமா என கேள்வி எழுப்பியுள்ளார். https://www.virakesari.lk/article/222424
-
ஊடகவியலாளர் குமணனை மீண்டும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை அழைத்துள்ளனர்
இலங்கை பொலிஸார் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணனை விசாரணைக்கு அழைப்பதை உடனடியாக கைவிடவேண்டும் - பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு Published By: RAJEEBAN 12 AUG, 2025 | 05:33 PM இலங்கை பொலிஸார் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணனை விசாரணைக்கு அழைப்பதை உடனடியாக கைவிடவேண்டும் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. கணபதிப்பிள்ளை குமணனை விசாரணைக்கு அழைப்பதை, இலங்கை பொலிஸார் உடனடியாக கைவிடவேண்டும், தங்கள் துன்புறுத்தல்களை நிறுத்தவேண்டும், பத்திரிகையாளர்கள் பழிவாங்கப்படுதல் குறித்த அச்சமின்றி சுதந்திரமாக பணியாற்றுவதை உறுதி செய்யவேண்டும் என சிபிஜேயின் பிராந்திய இயக்குநர் பெஹ் லிஹ் யி வேண்டுகோள் விடுத்துள்ளார். நியாயபூர்வமான செய்தியறிக்கையிடலிற்கு எதிராக பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை பயன்படுத்துவது பொலிஸ் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்வதாகும், அச்சு ஊடக சுதந்திரத்தை மீறுவதாகும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/222431
-
மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
காற்றாலை, கனிய மணல் அகழ்வு திட்டங்களுக்கு எதிராக மன்னாரில் 10-வது நாளாக தொடர் போராட்டம் Published By: DIGITAL DESK 2 12 AUG, 2025 | 04:41 PM மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு திட்டங்களை உடனடியாக நிறுத்தக் கோரி, மன்னார் மாவட்ட மக்கள், பொது அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்தி வரும் போராட்டம் செவ்வாய்க்கிழமை (12) 10-வது நாளாகத் தொடர்கிறது. இப்போராட்டத்தில் மன்னார் தாழ்வுபாடு கிராம மக்கள் இன்றைய தினம் சுழற்சி முறையில் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். நேற்று (11) நள்ளிரவு, காற்றாலை திட்டங்களுக்கான பாரிய உபகரணங்களை, பொலிஸ் பாதுகாப்புடன் மன்னார் தீவுக்குள் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், போராட்டக்காரர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, உபகரணங்களை ஏற்றி வந்த பார ஊர்தி உள்ளே நுழைய முடியாமல் தடைபட்டது. இதன்போது, போராட்டக்காரர்களை அச்சுறுத்தி, புகைப்படம் எடுத்து அங்கிருந்து வெளியேற்ற பொலிஸார் முயற்சித்தபோதும், போராட்டக்காரர்களின் தொடர் எதிர்ப்பு காரணமாக, அந்த வாகனம் மன்னார் நீதிமன்ற வளாகம் முன்பாக நிறுத்தப்பட்டது. இந்த போராட்டம் மற்றும் போராட்டக்காரர்களுக்கு எதிராக, மன்னார் பொலிஸார் தடை உத்தரவு பெறுவதற்காக இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளனர். இந்த வழக்கில் போராட்டக்காரர்கள் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222410
-
புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்
பேர்மிங்காம் 2016 உதவும் கரங்கள் அமைப்பினரால் காரைநகரில் அத்தியாவசியப் பணி நிறைவேற்றப்பட்டது கடந்த 04/07/2025 வெள்ளிக்கிழமை அல்வின் வீதி, காரைநகரைச் சேர்ந்த திரு வே.நாகராசா (3பேர் விசேட தேவை உடையவர்கள்) ஐயாவின் வீட்டிற்கு குடிநீருக்காக புதிய தண்ணீர்தாங்கி பொருத்தி, பழுதடைந்திருந்த மலசலகூடத்தினை மீளப்புனரமைப்பு செய்துள்ளோம். இப்பணிகளுக்காக 44110 ரூபா செலவு செய்துள்ளோம். இந்த அத்தியாவசியப் பணியை செய்ய நிதி உதவி அளித்த பே்மிங்காம் (2016) உதவும் கரங்கள் அமைப்பினருக்கு எமது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். விசேடமாக இவ்அமைப்பின் செயற்பாட்டாளர்களான திரு கதிர் அண்ணா, திரு இராசகுமார் அண்ணா, திரு ஜெயசசி அண்ணா ஆகியோருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம். இப்பணிகளை பல்வேறு பணிச்சுமைகளுக்கு மத்தியில் தொடர்ச்சியாக முயன்று செய்வித்த புலர் அறக்கட்டளையின் பொருளாளர் திரு கு.பாலகிருஸ்ணாவிற்கும் கணக்காய்வாளர் திரு சி.சிறீரங்கன் அவர்களிற்கும் J/46 கிராம சேவகராக உள்ள திருமதி ப.சிவப்பிரியா அவர்களுக்கும் சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி குயிலினி ஆகியோருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிகிறோம். உதவிகள் செய்ய விரும்பும் நல்லுள்ளங்கள் கீழுள்ள எமது WhatsApp இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள். +94 77 777 5448 +94 77 959 1047 ஒளிப்பதிவு திரு இ.சிறிதரன்.
-
செம்மணி மனித புதைகுழியின் கதை சிங்களத்தில் - கொழும்பில் வியாழக்கிழமை நூல் வெளியாகின்றது
Published By: RAJEEBAN 12 AUG, 2025 | 02:43 PM செம்மணி மனித புதைகுழியின் கதையை கேட்டறிந்த பின்னர் சிங்களத்தில் அது குறித்து எழுத தீர்மானித்ததாக தெரிவித்துள்ள ஊடகவியலாளர் தரிந்து ஜெயவர்த்தன கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலைஇசெம்மணி மனித புதைகுழி குறித்த முதற்கட்ட விசாரணைகள்இஇலங்கையில் காணாமல்போதல்இசெம்மணி படுகொலையின் தற்போதைய கதைகோப்ரல் சோமரட்ண ராஜபக்சவின் மனைவி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் ஆகிய விடயங்கள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் என தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எதிர்வரும் வியாழக்கிழமை செம்மணி என்ற நூல் வெளியிடப்படும்யாழ்;ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் கதையை கேட்டபிறகு இந்த நூல் வெளியாகின்றது.கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலைஇசெம்மணி மனித புதைகுழி குறித்த முதற்கட்ட விசாரணைகள்இலங்கையில் காணாமல்போதல்இசெம்மணி படுகொலையின் தற்போதைய கதைகோப்ரல் சோமரட்ண ராஜபக்சவின் மனைவி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் ஆகியன இந்த நூலில் அடங்கியிருக்கும். செம்மணிக்கு சென்ற பிறகு நாங்கள் செம்மணி மற்றும் காணாமல்போனவர்கள் குறித்து மேலதிக தகவல்களை பெறுவதற்காக தேசிய நூலகத்திற்கு சென்றோம். ஆனால் செம்மணி பற்றி பெருமளவிற்கு தகவல்கள் வெளியாகவில்லை. இதன் காரணமாக தரிந்துஉடுவரகெதர நாங்கள் நூலொன்றை வெளியிடுவோம் என தெரிவித்தார். நாங்கள் தொடர்ந்தும் செம்மணி குறித்து பத்திரிகைகளில்முகநூலில்எழுதி பதிவிட்டு வருகின்றோம் யூடியுப்பில் பதிவிட்டுள்ளோம். முதலில் செம்மணி குறித்து ஆவணப்படத்தை வெளியிடுவோமா வீடியோ வெளியிடுவோமா என சிந்தித்து பின்னர் இறுதியாக நூலை எழுத தீர்மானித்தோம். இதனடிப்படையில் செம்மணி குறித்து பல தரப்புகளிடமிருந்து தகவல்களை பெற்றோம்பல ஆயிரக்கணக்கான பக்க ஆவணங்களை ஆராய்ந்தோம்வடக்கின் காணாமலாக்கப்பட்டவர்கள் குடும்பத்தவர்களுடன் பேசினோம்குற்றம்சாட்டப்பட்ட இராணுவவீரர்களின் குடும்பத்தவர்களுடன் பேசினோம். இறுதியாக நாங்கள் நூலை எழுதினோம்எதிர்வரும் வியாழக்கிழமை தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இந்த நூல் வெளியாகவுள்ளது. https://www.virakesari.lk/article/222401
-
ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் இன்றுடன் 80 ஆண்டுகள் நிறைவு!
ஹிரோஷிமா மீது முதல் அணுகுண்டை வீசியதும் வீரர்கள் கீழே கண்ட காட்சி என்ன? விமானக் குழுவின் அனுபவம் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ஹிரோஷிமா மீது எனோலா கே விமானம் அணுகுண்டு வீசியதை சித்தரிக்கும் படம் கட்டுரை தகவல் ரெஹான் ஃபசல் பிபிசி இந்தி 12 ஆகஸ்ட் 2025, 01:59 GMT அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் உள்ள அலமோகோர்டோ குண்டுவீச்சு தளம் முதல் அணுகுண்டு சோதனைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த விஷயம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததால், அப்போதைய அமெரிக்க துணை அதிபர் ஹாரி ட்ரூமனுக்கு கூட இது குறித்து தெரியாது. அமெரிக்க அதிபராக பதவி வகித்த ரூஸ்வெல்ட் இறந்த 24 மணி நேரத்துக்குப் பிறகுதான், அமெரிக்கா மிகவும் அழிவுகரமான அணுகுண்டை உருவாக்கும் திட்டத்தில் செயல்பட்டு வரும் தகவல் ஹாரி ட்ரூமனுக்குத் தெரிவிக்கப்பட்டது. 1945 ஜூலை 15ஆம் நாளன்று, அணுகுண்டை உருவாக்கிய ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் மற்றும் மன்ஹாட்டன் திட்ட இயக்குநர் லெஸ்லி க்ரோவ்ஸ் இருவரும், பதுங்கு குழியில் அணுகுண்டு சோதனை செய்வதற்கான அனுமதிக்காகக் காத்திருந்தனர். அன்று, அலமோகோர்டோ குண்டுவீச்சு தளம் உள்ள பகுதியில் கடுமையான புயல் வீசியது. இயன் மெக்கிரேகர் தனது 'தி ஹிரோஷிமா மென்' என்ற புத்தகத்தில், "1945 ஜூலை 16 அன்று, அதிகாலை 5:30 மணிக்கு, முதல் அணுகுண்டு சோதனை செய்யப்பட்டது. அந்த அதிகாலை வேளையில், நியூ மெக்ஸிகோவின் பாலைவனம் நண்பகல் போல பிரகாசித்தது." "லெஸ்லி க்ரோவ்ஸ் தனது சகாக்களான வன்னேவர் புஷ் மற்றும் ஜேம்ஸ் கோனன்ட் ஆகியோருடன் கைகுலுக்கினார். 'உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்' என்று ஓப்பன்ஹெய்மரை வாழ்த்திய அவர், அமெரிக்கா நீண்டகாலமாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த அணுகுண்டு இறுதியாக நமக்கு கிடைத்துவிட்டது." பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, 1945 ஜூலை 16-ஆம் தேதி அமெரிக்கா அணுகுண்டை பரிசோதித்து பார்த்தது அதேநேரத்தில், க்ரோவ்ஸ் தனது அறிக்கையை போர் செயலாளர் ஹென்றி ஸ்டிம்சனுக்கு சங்கேத மொழியில் அனுப்பினார். ஸ்டிம்சன் அதை அதிபர் ட்ரூமனுக்கு வாசித்துக் காட்டினார். 24 மணி நேரத்துக்குள், ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 10 வரை எந்த நேரத்திலும் அணுகுண்டு பயன்படுத்தப்படலாம் என்ற செய்தி இருவருக்கும் கிடைத்தது. ஆகஸ்ட் 6ஆம் தேதி அணுகுண்டை வீசலாம் என்று முடிவு செய்யப்பட்டது. 1945 ஜூலை 26-ஆம் நாளன்று ஜப்பானை எச்சரித்த ஹாரி ட்ரூமன், நிபந்தனையின்றி சரணடையவில்லை என்றால், கற்பனைகூட செய்ய முடியாத அழிவுக்கு ஜப்பான் தயாராக வேண்டும் என்று தெரிவித்தார். இந்த எச்சரிக்கைக்கு ஜப்பான் செவிசாய்க்கவில்லை என்பதால், அந்நாட்டின் மீது அணுகுண்டு வீச முடிவு செய்யப்பட்டது. அணுகுண்டு வீசும் பணிக்கு 'மிஷன் எண்-13' என்று பெயரிடப்பட்டது. ஆகஸ்ட் 6ஆம் தேதி குண்டுவீச்சுக்கான நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கான தலைவர் பால் டிபெட்ஸ் உடன் கலந்தாலோசித்த பிறகு, ஜெனரல் கர்டிஸ் லீமே, ஹிரோஷிமா, கோகுரா மற்றும் நாகசாகி ஆகிய மூன்று நகரங்களின் மீது குண்டு வீசலாம் என்று திட்டத்தை இறுதி செய்தார். அதற்கு முன்னதாக டிபெட்ஸ் குழுவினர் அணுகுண்டை வீசுவதற்கான ஒத்திகையை ஜூலை 31-ஆம் தேதி மேற்கொண்டனர். பட மூலாதாரம், GETTY IMAGES ரிச்சர்ட் ரோட்ஸ் தனது 'The Making of the Atomic Bomb' என்ற புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: "டினியன் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த 15 பி-29 போர் விமானங்களில் மூன்று, போலி அணுகுண்டுகளுடன் புறப்பட்டன. அவை இவோ ஜிமா தீவைச் சுற்றி வந்து, போலி அணுகுண்டை கடலில் வீசிவிட்டு விமானத்தைத் திருப்பிக் கொண்டு செல்வதைப் பயிற்சி செய்தன. ஆகஸ்ட் 1ஆம் தேதி ஜப்பானை வலுவான புயல் தாக்காமல் இருந்திருந்தால், அன்றைய தினமே ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டிருக்கும்." ஜப்பானில் அணுகுண்டை வீசுவதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவின் 32 பிரதிகள் தயார் செய்யப்பட்டன. பால் டிபெட்ஸ் பின்னொரு சமயம் 'கிளாஸ்கோ ஹெரால்டு' பத்திரிகையின் வில்லியம் லாவுடர் உடனான நேர்காணலின்போது அணுகுண்டு வீசிய அனுபவத்தைப் பற்றி இவ்வாறு கூறினார். "எனக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ உத்தரவின் நகலை அலுவலகப் பெட்டகத்தில் வைத்து பூட்டி விட்டு, தொழில்நுட்பப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 'எனோலா கே' குண்டுவீச்சு விமானத்தை ஆய்வு செய்வதற்காக ஜெனரல் லெமேயுடன் சென்றேன். அந்த விமானம் தார்பாலினால் மூடப்பட்டு யாரும் பார்க்க முடியாதபடி வைக்கப்பட்டிருந்தது. தளத்தில் பணியில் இருந்த ஒரு சிப்பாய், உள்ளே செல்வதற்கு முன்பு சுருட்டு மற்றும் தீப்பெட்டியை ஒப்படைக்குமாறு அந்த இடத்தின் மூத்த அதிகாரியான ஜெனரல் லெமேயை அறிவுறுத்தியதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்." பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, அணுகுண்டை சுமந்து சென்ற விமானம் எனோலா கே பட மூலாதாரம், SIMON & SCHUSTER படக்குறிப்பு, அணுகுண்டை வீசுவதற்கு முன்பு இறுதி விளக்கத்தை அளித்த பால் டிபெட்ஸ் விமானப் பணிக்குழு கூட்டத்தை கூட்டிய டிபெட்ஸ் டிபெட்ஸின் கண்ணெதிரே 'எனோலா கே' குண்டுவீச்சு விமானத்தின் வெடிகுண்டு வைக்கும் இடத்தில் தொழில்நுட்ப ஊழியர்கள் மிகவும் கவனமாக அணுகுண்டை வைத்தனர். அன்று மாலை, டிபெட்ஸ் அந்த பணியுடன் தொடர்புடைய அனைவருடனும் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார். இந்தப் பணியுடன் தொடர்புடைய தியோடர் வான் கிர்க், பின்னொரு சமயம் நியூ ஆர்லியன்ஸில் உள்ள தேசிய அருங்காட்சியகத்துக்கு அளித்த பேட்டியில், "அது ஒரு முக்கியமான கூட்டம், அந்தக் கூட்டத்தில் யார் எந்தப் பணியில் ஈடுபடுவது, எந்த கட்டத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது போன்ற பல விஷயங்களை முடிவு செய்ய வேண்டியிருந்தது" என்று கூறினார். "பயன்படுத்தப் போகும் ஆயுதம் சில நாட்களுக்கு முன்பு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக டிபெட்ஸ் சொன்னார். தற்போது அந்த ஆயுதத்தை எதிரிக்கு எதிராகப் பயன்படுத்துவோம் என்று சொன்ன அவர், எங்கள் அனைவரையும் சற்று நேரம் உறங்கச் சொன்னார். இரவு 10 மணிக்குப் பிறகு இறுதியான விளக்கக் கூட்டத்துக்கு அழைப்பதாக அவர் சொன்னார். ஆனால், அணுகுண்டை வீசப் போகிறவர்களால் எப்படி தூங்க முடியும் என்பது எனக்குப் புரியவில்லை" என்று தியோடர் வான் கிர்க் தெரிவித்தார். பால் டிபெட்ஸ் உரை இதற்கிடையில், 'எனோலா கே' விமானத்துக்கான ரகசிய குறியீடு 'விக்டர்' என்பதற்குப் பதிலாக 'டிம்பிள்ஸ்' என்று இருக்கும் என்று டிபெட்ஸ் முடிவு செய்தார். இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தில் விமானத்தை ஐந்தாயிரம் அடி உயரத்தில் வைத்திருக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், 'எனோலா கே' செல்லும் வழியில் இருந்த அமெரிக்க கடற்படை கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதையும் உறுதி செய்வதிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. ஏதேனும் காரணத்தால் அணுகுண்டை சுமந்து செல்லும் 'எனோலா கே' விமானம் கடலில் விழுந்தால், அதை உடனடியாக அங்கிருந்து மீட்பதற்காக இந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. 11 மணிக்கு குழு உறுப்பினர்கள் அனைவரும் இறுதி விளக்கத்துக்காக கூடியிருந்தனர். தனது 'Mission: Hiroshima' என்ற புத்தகத்தில் பால் டிபெட்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: "நான் அவர்களிடம் உரையாற்றினேன், இவ்வளவு நாளாக இந்த இரவுக்காகத் தான் நாம் காத்துக்கொண்டிருந்தோம் என்று சொன்னேன்." "கடந்த மாதங்களில் நாம் பெற்ற அனைத்து பயிற்சிகளையும் இப்போது பயன்படுத்துவோம். நமது பணியில் வெற்றி பெற்றோமா அல்லது தோல்வியடைந்தோமா என்பது இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும். நீங்கள் இதுவரை பார்த்த மற்றும் செய்த பணிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பணியான அணுகுண்டை வீசும் பணியை மேற்கொள்கிறோம். இந்த அணுகுண்டு 20 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான டிஎன்டி ஆற்றல் கொண்டது." பட மூலாதாரம், BETTMANN ARCHIVE/GETTY IMAGES எனோலா கே-வுக்கு முன்னர் அனுப்பப்பட்ட 3 விமானங்கள் இதன் பிறகு, அனைவருக்கும் போலராய்டு லென்ஸ்கள் கொண்ட சிறப்பு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. அவை வெல்டர்கள் அணியும் கண்ணாடிகளைப் போலவே இருந்தன. "அணுகுண்டு வீசப்பட்டதும் எழும் வெளிச்சத்தால் கண் பார்வை பறிபோகாமல் இருக்க இந்தக் கண்ணாடிகளை பயன்படுத்த வேண்டும் என்று மன்ஹாட்டன் திட்டத்தின் பேராசிரியர் ராம்சே கூறினார். கூட்டம் முடிந்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகு உணவகத்துக்குச் சென்ற அனைவரும் காலை உணவாக முட்டை, இறைச்சி, வெண்ணெய், ரொட்டியை உண்டனர், காபியும் பருகினார்கள். குழுவினர் அனைவரும் காலை உணவு உட்கொண்டபோது, குழுவின் தலைவர் பால் டிபெட்ஸ், யாருக்கும் தெரியாமல் தனது சட்டைப் பையில் பொட்டாசியம் சயனைடு மாத்திரைகளை பத்திரமாக வைத்தார்" என்று இயன் மெக்கிரெகர் எழுதினார். சிறிது நேரத்துக்குப் பிறகு, 'Straight Flush', 'Jabbit Third', 'Full House' ஆகிய மூன்று விமானங்கள் வானிலை பற்றிய தகவல்களைச் சேகரிக்க புறப்படும் ஓசை கேட்டது. ஜப்பான் மீது அணுகுண்டு வீசும் பணி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக, முக்கிய இலக்கில் தற்போதைய வானிலை நிலைமைகள் பற்றிய தகவல்களை வழங்குவதற்காக இவை இலக்கை நோக்கி பறந்தன. பட மூலாதாரம், CONSTABLE படக்குறிப்பு, இயன் மெக்கிரேகர் எழுதிய 'The Hiroshima Men' புத்தகம் அதிகாலை 2:45 மணிக்கு புறப்பட்ட 'எனோலா கே' 'எனோலா கே'வில் பயணித்தவர்கள், அதிகாலை 1:45 மணிக்கு காபி குடித்த பிறகு ஜீப்பில் ஏறி ஓடுபாதையில் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தை நோக்கிச் சென்றனர். அந்த இடம் பகல் போல வெளிச்சமாக இருந்தது. விமானத்தளத்தில் இருந்த பிற பணியாளர்கள், எனோலா கே விமானத்தில் பயணிக்கும் குழுவினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். மன்ஹாட்டன் திட்டத்தின் அனைத்து மூத்த உறுப்பினர்களும் அங்கு இருந்தனர். "விமானத்தில் சமநிலையை பராமரிக்க பின்புறத்தில் பெட்ரோல் பீப்பாய்கள் ஏற்றப்பட்டன. அதிகாலை 2:45 மணிக்கு விமானம் புறப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. பத்திரிகையாளர் பில் லாரன்ஸ் உட்பட சுமார் 100 பேர் பார்த்துக் கொண்டிருந்த அந்த இரவு வேளையில், டிபெட்ஸ்-இன் மேற்பார்வையில் குழுவினர் விமானத்தில் ஏறினார்கள்" என்று இயன் மெக்கிரெகர் தனது 'The Hiroshima Men' புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். "துணை விமானி ராபர்ட் லூயிஸ் விமானத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றதும், 'உன் கைகளை கட்டுப்பாட்டு அமைப்பில் இருந்து விலக்கி வை. நான் விமானத்தை ஓட்டுகிறேன்'" என்று டிபெட்ஸ் கூறிவிட்டார். "தனக்கு முன்னால் இருந்த எட்டாயிரத்து ஐநூறு அடி நீள ஓடுபாதையைப் பார்த்த டிபெட்ஸ், அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்துகொள்வதற்காக தனது குழுவினரிடம் பேசினார்" என்று இயன் மெக்கிரேகர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்ட டிபெட்ஸ் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புகொண்டு, "'டிம்பிள்ஸ் 82 டு நார்த் டினியன் டவர். புறப்படத் தயாராகிவிட்டோம்" என்றார். அதற்கு ஒரு வினாடிக்குள் பதில் வந்தது, டிம்பிள்ஸ் 82, டிம்பிள்ஸ் 82. புறப்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது." "ஹிரோஷிமா மீது முதல் அணுகுண்டை வீசும் பணி தொடங்கிவிட்டது. எனோலா கே வானில் பறந்தபோது, கண்காணிப்பு உபகரணங்களை ஏந்திய மேலும் மூன்று B-29 விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அதனைப் பின்தொடர்ந்தன. அதில் 'Necessary Evil' என்ற விமானத்தின் கேப்டன் ஜார்ஜ் மார்குவார்ட்டுக்கு அணுகுண்டு வீசுவது மற்றும் அதன் தாக்கங்களை புகைப்படம் எடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது," என்று இயன் மெக்கிரேகர் 'The Hiroshima Men' புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ஹிரோஷிமா மீது அணுகுண்டை வீசிய குழுவினர் ஜப்பான் மீது முதல் அணுகுண்டு வீச்சு குறித்த இலக்கை அடைய ஆறு மணி நேரம் 15 நிமிடங்கள் ஆகும். தாங்கள் நீண்ட நேர பயணம் செய்யவேண்டும் என்பதை 'எனோலா கே' விமானத்தில் பயணித்தவர்கள் அறிந்திருந்தனர். விமானம் இவோ ஜிமாவை அடைந்ததும், விமானத்தில் வைக்கப்பட்டிருந்த 'லிட்டில் பாய்' அணுகுண்டை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக விமானத்தில் இருந்த வில்லியம் பார்சன்ஸ் மற்றும் மோரிஸ் ஜெப்சன் தெரிவித்தனர். பச்சை நிற பிளக்கை அகற்றி சிவப்பு வண்ண பிளக்கைப் போடுவதை அவர்கள் பலமுறை பயிற்சி செய்திருந்தாலும், அதைச் செய்ய வேண்டிய உண்மையான நேரம் வந்த போது, அவர்களுக்கு வியர்த்துப் போனது. கன்சோலுக்கு வந்த பார்சன்ஸ், குண்டு செயல்படுத்தப்பட்டதாக டிபெட்ஸிடம் தெரிவித்தார். "இதைக் கேட்டதும், டிபெட்ஸ் 'எனோலா கே'வை 30 ஆயிரம் அடி உயரத்துக்கு எடுத்துச் சென்றார். அங்கிருந்து 100 மைல் தொலைவில் ஜப்பானின் கடற்கரையை பார்க்க முடிந்தது. ஹிரோஷிமா நகரத்தையும் 75 மைல் தூரத்திலிருந்து பார்க்க முடிந்தது" என்று பின்னர் ஒரு சமயம் வான் கிர்க் அளித்த நேர்காணல் ஒன்றில் கூறினார். "இதற்கிடையில், விமானக் குழுவினர் பேசுவதை நிறுத்திவிட்டு, அனைவரும் அமைதியாகிவிட்டனர். அங்கு நிலவிய கனத்த மௌனத்தைக் கலைத்த டிபெட்ஸ், அனைவரும் கண்ணாடி அணிய வேண்டும் என்று கூறினார். இதற்குப் பிறகு, விமானம் 360 டிகிரி திருப்பத்தை எடுத்தது, 6 நிமிடங்கள் 15 வினாடிகளில் விமானம் திருப்பப்பட்டது, நாங்கள் நேராக ஹிரோஷிமா நோக்கிச் சென்றோம்." பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, அணுகுண்டை சுமந்து சென்ற விமானம் குண்டுவெடிப்பும் ரேடியோ சிக்னலும் T-வடிவ அயோய் பாலத்தைப் பார்க்க முடிவதாக தாமஸ் ஃபேர்பி கூச்சலிட்ட போது, விமானம் இலக்கிலிருந்து 10 நிமிட தொலைவில் இருந்தது. அந்த நேரத்தில் திபெட்ஸ் விமானத்தை இயக்கும் பொறுப்பை ஃபேர்பியிடம் ஒப்படைத்தார். அணுகுண்டை வீசுவதற்கு இன்னும் சிறிது நேரமே இருந்த நிலையில், 'Necessary Evil' என்ற விமானத்தில் அமர்ந்திருந்தவர்கள், அணுகுண்டு கீழே வீசப்படுவதை எதிர்பார்த்துத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டனர். குழு உறுப்பினர் ரஸ்ஸல் கைகன்பாக் பின்னர் அளித்த ஒரு நேர்காணலில், "நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்த சிக்னல் கிடைத்தது. அனைத்து ரேடியோ சிக்னல்களும் செயலிழக்கும் சமயத்தில் நாங்கள் அணுகுண்டை வீசவிருந்தோம். அதுதான் எங்கள் திட்டம்" என்று ரஸ்ஸல் கேக்கன்பாக் கூறினார். மேலும், "ரேடியோ சிக்னல் செயலிழந்தவுடன், அணுகுண்டு வைக்கப்பட்டிருந்த பகுதியின் கதவு திறக்கப்பட்டது, அணுகுண்டு கீழே செல்லத் தொடங்கியது. அந்த சமயத்தில் எங்கள் விமானத்தில் இருந்த விஞ்ஞானிகள் 'ஸ்டாப் வாட்ச்' கடிகார பொத்தானை அழுத்தினார்கள். சில விநாடிகளில் எங்கள் கேமராக்கள் புகைப்படங்களை எடுக்கத் தொடங்கின." பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, பால் டிபெட்ஸ், எனோலா கே விமானத்தின் தலைமை விமானி தரையிலிருந்து 1890 அடி உயரத்தில் வெடித்த அணுகுண்டு இந்த விஷயத்தை பின்னர் ஒரு நேர்காணலில் வைன் கர்க் நினைவு கூர்ந்தார், "அணுகுண்டு விழுந்தவுடன், 'எனோலா கே' விமானம் முன்னோக்கி சாய்ந்தது. உடனடியாக விமானத்தை தானியங்கி நிலைக்குக் கொண்டு சென்ற பால், வெகுதொலைவுக்கு விமானத்தை கொண்டு செல்ல விரும்பினார். எனவே, விமானத்தை 160 டிகிரி வலப் புறமாகத் திருப்பத் தொடங்கினார். 43 வினாடிகளில் குண்டு வெடித்துவிடும், அங்கிருந்து தப்பிக்க எங்களிடம் இருந்த கால அவகாசமும் அவ்வளவுதான்." பட மூலாதாரம், GETTY IMAGES பிரகாசமான வெளிச்சம் மற்றும் விமானத்தில் தடுமாற்றம் "எங்கள் விமானத்தில் இருந்த அனைவரிடமும் கடிகாரம் இல்லை. நேரத்தை கணக்கிட, நாங்கள் 1001, 1002, 1003 என எண்ணத் தொடங்கினோம். அப்போது திடீரென பிரகாசமான ஒளி தோன்றியது, சில நொடிகளில் விமானம் குலுங்குவதை அதற்குள் இருந்த நாங்கள் உணர்ந்தோம். உலோகத் தாள் ஒன்று கிழிந்து போவது போன்ற விசித்திரமான சத்தமும் கேட்டது" என அணுகுண்டு வெடித்த சந்தர்பத்தை வைன் கர்க் நினைவு கூர்ந்தார். "என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துக்கொள்வதற்காக, நாங்கள் கீழே பார்த்தோம். நான் முதலில் கவனித்தது பெரிய வெள்ளை மேகங்கள் நாங்கள் குறி வைத்திருந்த இலக்கை நோக்கி கூடின, அவை மேல்நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்தன. அந்த மேகங்களின் கீழ் பகுதியில் அடர்த்தியான புகை போர்வை நகரம் முழுவதையும் சூழ்ந்திருந்தது. அதற்கு கீழே எங்களுக்கு வேறு எதுவுமே தெரியவில்லை." "எங்கள் விமானம் நகரத்தைச் சுற்றி வரவில்லை. ஹிரோஷிமாவின் தென்கிழக்கே பறந்து, நாங்கள் புறப்பட்ட இடத்துக்கு திரும்பிச் செல்லத் தொடங்கினோம்." பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, 'லிட்டில் பாய்' அணுகுண்டு திரும்பிய விமானம் "82 V 670 Abil, Line, Line 2, Line 6, Line 9. Clear cut. We're heading for base" என்று முன்னரே தீர்மானிக்கப்பட்ட குறியீட்டு செய்தி அனுப்பப்பட்டது. அணுகுண்டு வீசப்பட்ட பிறகு, 'எனோலா கே' விமானம் மிகவும் பலமாக குலுங்கியது, விமான எதிர்ப்பு துப்பாக்கிகளால் தாக்கப்படுவதாகவே விமானத்தில் இருந்தவர்களுக்கு தோன்றியது. ஆனால், அப்படி ஏதும் இல்லை என்று ஜார்ஜ் கரோன் உறுதியாகக் கூறினார். ஹிரோஷிமா நகரின் மேலே பறந்த அவர்களை தாக்க எந்த ஜப்பானிய விமானமும் வரவில்லை. "நாங்கள் நிதானமாகவே கடலை நோக்கி விமானத்தைத் திருப்பினோம். திரும்பி வரும் வழியில் ஜப்பானுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டது என்றே நாங்கள் பேசிக் கொண்டுவந்தோம். ஏனெனில், அணுகுண்டு போன்ற ஆயுதத்தை எதிர்கொள்ளும் திறன் யாரிடமும் இல்லை என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்" என்று டிபெட்ஸ் தனது சுயசரிதையில் எழுதினார். அச்சம் தந்த காட்சி பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்ட பிறகு வானில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் எனோலா கே விமானத்தைத் தொடர்ந்து பறந்துவந்த விமானத்தில் இருந்த ரஸ்ஸல் கேக்கன்பாக், "வழக்கமாக குண்டுகளை வீசிய பிறகு, நாங்கள் தளத்துக்குத் திரும்பும்போது, மகிழ்ச்சியாக இருப்போம், நகைச்சுவையாக பேசிக் கொண்டிருப்போம், நல்ல மனநிலையில் இருப்போம். ஆனால் அன்று, விமானம் முழுவதும் அமைதி நிலவியது. யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை" என்று அன்றைய நினைவுகளை நினைவு கூர்ந்தார். "அணுகுண்டை வீசிவிட்டு எனோலா கே விமானத்தை திருப்பும் போது, வாழ்க்கையில் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு காட்சியைக் கண்டேன்" என்று டிபெட்ஸ் தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார். "ஊதா நிறத்தில் மாபெரும் காளான் போல் உருவாகி, அது 45,000 அடி உயரத்தை எட்டியது. அதுவொரு பயங்கரமான காட்சி. பல மைல்கள் தொலைவில் நாங்கள் இருந்தாலும், அந்த காளான் எங்களை விழுங்கிவிடும் என்றே நாங்கள் ஒரு கணம் நினைத்துவிட்டோம். அந்த தருணத்தை என்னால் ஒருபோதும் மறக்கமுடியவில்லை, ஹிரோஷிமா மக்களும் மறக்கவில்லை." இந்த அணுகுண்டு தாக்குதலில் சுமார் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டனர் என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது. ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசிய 3 நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 9ஆம் நாளன்று, ஜப்பானின் மற்றொரு நகரமான நாகசாகி மீது இதேபோன்ற அணுகுண்டு வீசப்பட்டது. அங்கே சுமார் 80 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y009lnqyxo
-
தமிழர் தாயகம் அமைதியாகக் கைப்பற்றப்படும் வேளையில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூக அமைப்புகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஏன் இவ்வளவு தேவையற்ற மௌனம்? - பிரித்தானிய தமிழர் பேரவை
தமிழர் தாயகம் அமைதியாகக் கைப்பற்றப்படும் வேளையில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூக அமைப்புகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஏன் இவ்வளவு தேவையற்ற மௌனம்? - பிரித்தானிய தமிழர் பேரவை Published By: RAJEEBAN 12 AUG, 2025 | 02:20 PM தமிழர் தாயகம் அமைதியாகக் கைப்பற்றப்படும் வேளையில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூக அமைப்புகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? நமது உரிமைகளையும் நமது அடையாளத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர்களிடமிருந்து ஏன் இவ்வளவு தேவையற்ற மௌனம் நிலவுகிறது? என பிரித்தானிய தமிழர் பேரவை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ் மக்களின் நிலமான மணலாற்றின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள பிரித்தானிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று ரீதியாக தமிழ் பிராந்தியமான மணல் ஆறு கடந்த பல தசாப்தங்களாக ஒரு சோகமான மாற்றத்தைச் சந்தித்துள்ளது. ஒரு காலத்தில் துடிப்பான தமிழ் கிராமமாக இருந்த இது வளர்ச்சி என்ற போர்வையில் வலுக்கட்டாயமாக மறுபெயரிடப்பட்டு சிங்களமக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக மதுரு ஓயா நீர்ப்பாசனத் திட்டம் மூலம் 1988 ஏப்ரல் 16 அன்று இலங்கை அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவிப்பில் மணல் ஆறு என்ற பெயரை வேலி ஓயா என்ற சிங்களப் பெயராக அதிகாரப்பூர்வமாக மறுபெயரிட்டது. இது வெறும் மறுபெயரிடுதல் அல்ல - இது பிராந்தியத்தின் மக்கள்தொகை மற்றும் கலாச்சார அடையாளத்தை மாற்றுவதற்கான ஒரு பரந்த மற்றும் கணக்கிடப்பட்ட உத்தியின் ஒரு பகுதியாகும் கட்டாய இடப்பெயர்வு மற்றும் வன்முறை 1984 டிசம்பர் 1 முதல் 15 வரை முல்லைத்தீவுக்கும் திருகோணமலைக்கும் இடையில் அமைந்துள்ள தமிழ் கிராமங்களில் ஒருங்கிணைந்த படுகொலைகள் நடத்தப்பட்டன. இந்தக் கொடூரமான தாக்குதல்கள் தமிழ் பொதுமக்களை குறிவைத்தன, அவர்களில் பலர் பல நூற்றாண்டுகள் பழமையான நிலத்துடன் மூதாதையர் உறவுகளைக் கொண்டிருந்தனர். உயிர் பிழைத்தவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர் மேலும் இப்பகுதியில் அரசால் ஆதரிக்கப்படும் சிங்களக் குடியேற்றம் தீவிரமாகத் தொடங்கியது. அபிவிருத்தி என்ற பெயரில் சிங்களக் குடியேறிகள் கொண்டுவரப்பட்டனர். இலங்கை இராணுவத்தால் பெரிதும் பாதுகாக்கப்பட்டனர். வெளியேற்றப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த தமிழ் பூர்வீக மக்கள் வறுமையில் வாடினர். அவர்களின் நிலங்கள் வாழ்வாதாரங்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை அணுகுவதில் அவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்பு கிடைத்தது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போன்ற கொடூரமான சட்டங்களின் பயன்பாடு அத்தகைய செயல்களுக்கும் தண்டனையிலிருந்து விலக்குக்கும் சட்டப்பூர்வ மறைப்பை வழங்கியது. மக்கள்தொகை மாற்றம் மற்றும் முறையான காலனித்துவம் 1980 களில் இருந்து குறிப்பாக 2009 இல் போர் முடிவடைந்த பின்னர் அரசு ஆதரவுடன் ஆக்கிரமிப்பு தொடர்ந்தது. சிங்களக் குடியேற்றங்கள் எண்ணிக்கையிலும் உள்கட்டமைப்பிலும் வளர்ந்துள்ளன. அதே நேரத்தில் தமிழ் சமூகங்கள் ஓரங்கட்டப்பட்டவை வளங்கள் குறைவாக உள்ளன மேலும் பெரும்பாலும் இராணுவத்தால் அச்சுறுத்தப்படுகின்றன அல்லது கண்காணிக்கப்படுகின்றன. மக்கள்தொகை வரைபடங்கள் (கீழே இணைக்கப்பட்டுள்ளன) 2015 இல் பெரும்பான்மையான தமிழர் பகுதியான வெலி ஓயாவின் தற்போதைய நிலைக்கு ஆபத்தான மாற்றத்தை எடுத்துக்காட்டுகின்றன - பல தசாப்தங்களாக திட்டமிடப்பட்ட இடம்பெயர்வு மற்றும் காலனித்துவத்தின் காட்சி பிரதிநிதித்துவம். தமிழர் தாயகம் அமைதியாகக் கைப்பற்றப்படும் வேளையில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூக அமைப்புகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? நமது உரிமைகளையும் நமது அடையாளத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர்களிடமிருந்து ஏன் இவ்வளவு தேவையற்ற மௌனம் நிலவுகிறது? நமது மொழி நமது நிலம் நமது எதிர்காலம் நிலம் என்பது வெறும் மண் அல்ல - அது கலாச்சாரம் அடையாளம் நினைவகம் மற்றும் எதிர்காலம். நமது நிலத்தின் அரிப்பு நமது மொழி மதம் மற்றும் வாழ்க்கை முறையின் உயிர்வாழ்வை நேரடியாக பாதிக்கிறது. கடந்த 77 ஆண்டுகளில் நாம் அதிகமாக இழந்துவிட்டோம். இப்போது எழுந்து செயல்பட வேண்டிய நேரம் இது. நமது நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும் நமது தமிழ் தாயகத்தைப் பாதுகாக்கவும் பொக்கிஷமாகக் கருதவும் நீதியைக் கோரவும் நாம் ஒன்றிணைய வேண்டும் - நாளை அல்ல அடுத்த ஆண்டு அல்ல - இப்போதே. https://www.virakesari.lk/article/222399
-
சர்வதேச யானைகள் தினம் இன்று
12 AUG, 2025 | 10:40 AM 'சர்வதேச யானைகள் தினம்' இன்று செவ்வாய்க்கிழமை (12) கொண்டாடப்படுகிறது. உலகளவில் யானைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்காக 2012 ஆம் ஆண்டு சர்வதேச யானைகள் தினம் அறிவிக்கப்பட்டது. ஆப்பிரிக்க மற்றும் ஆசிய காட்டு மற்றும் வளர்ப்பு யானைகளைப் பாதுகாப்பது, யானை வேட்டையாடுதல் மற்றும் கடத்தலைத் தடுப்பது, யானைகளின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது மற்றும் வளர்ப்பு யானைகள் சுதந்திரமாக வாழ முடியும் என்பதை உறுதி செய்வது இதன் நோக்கமாகும். நாட்டில் யானை - மனித மோதலைத் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய இணைப்பாளர், சுற்றாடல் நிபுணர் கலாநிதி ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222372
-
இலங்கை – இந்திய கூட்டு கடற்படை பயிற்சி
இலங்கை – இந்திய கூட்டு கடற்படை பயிற்சி 14 ஆம் திகதி ஆரம்பம் Published By: DIGITAL DESK 3 12 AUG, 2025 | 04:21 PM 2025ஆம் ஆண்டுக்கான இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையேயான 12 ஆவது வருடாந்த இருதரப்பு கூட்டு பயிற்சி (SLINEX-2025 ) எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சி இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. அன்படி, 14 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகம் சார் பயிற்சியும், அதனை தொடர்ந்து 17 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை கொழும்பில் கடல்சார் பயிற்சியும் நடைபெறும். இந்த பயிறச்சிகளில் இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் ஜோதி (கப்பற்படை டேங்கர்) மற்றும் ஐஎன்எஸ் ராணா (அழிப்பான்) ஆகிய கப்பல்கள் பங்கேற்க உள்ளன. இலங்கை கடற்படையில் எஸ்எல்என்எஸ் விஜயபாகு (முன்னேற்ற ஆஃப்ஷோர் ரோந்து கப்பல்) மற்றும் எஸ்எல்என்எஸ் சயுரா (OPV) ஆகிய கப்பல்கள் பங்கேற்க உள்ளன. மேலதிகமாக இலங்கை விமானப்படையின் பிஇஎல் 412 ஹெலிகொப்டர்களும் இந்தப் பயிற்சியில் பங்கேற்க உள்ளது. இரு கடற்படைகளின் விசேட படைகளும் பயிற்சியை மேற்கொள்ளும். இதற்கு முன்னர் இந்த பயிற்சி 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி இரு கடற்படைகளுக்கும் இடையேயான பன்முக கடல்சார் நடவடிக்கைகளில் இடை-செயல்பாட்டை மேம்படுத்துதல், பரஸ்பர புரிதலை மேம்படுத்துதல் மற்றும் விசேட நடைமுறைகள்/நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. துறைமுக கட்டத்தில் விளையாட்டுப் போட்டிகள், யோகா அமர்வு மற்றும் கலாச்சார நிகழ்வுகள் ஆகியவை அடங்கும். இது இரு கடற்படைகளின் பணியாளர்களும் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளவும், பகிரப்பட்ட மதிப்புகளை மீண்டும் வலுப்படுத்தவும், நட்பு மற்றும் தோழமையின் பிணைப்புகளை உருவாக்கவும் வாய்ப்பளிக்கும். இலங்கை கடற்படை தலைமையகத்தின் பணிப்பாளர் ரியர் அட்மிரல் பி லியனகமகே, ஐஎன்எஸ் ஜோதியின் கட்டளை அதிகாரி, கேப்டன் சேதன் ஆர் உபாத்யாயா மற்றும் ஐஎன்எஸ் ராணாவின் கட்டளை அதிகாரி, கேப்டன் கேபி ஸ்ரீசன், இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் ஆனந்த் முகுந்தன் ஆகியோர் பயிற்சியின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். https://www.virakesari.lk/article/222409
-
"கல்லீரலில் ஒரு குழந்தை இருக்கிறது" - அதிர்ச்சியூட்டும் பெண்ணின் கர்ப்பம்
கல்லீரலில் 3 மாத கரு வளர்ந்ததால் இந்த பெண்ணுக்கு என்ன நடந்தது? பட மூலாதாரம், PRABHAT KUMAR/BBC படக்குறிப்பு, உலகிலேயே மிகவும் அரிதான கர்ப்பம் இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம். கட்டுரை தகவல் பிரேர்னா பிபிசி செய்தியாளர் 12 ஆகஸ்ட் 2025, 09:30 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் மேற்கு உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு பெண்ணின் கர்ப்பம் குறித்த செய்தி சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. இந்தத் தகவல் மிகவும் வித்தியாசமானது, ஏனென்றால் அந்தப் பெண்ணின் கருப்பையில் இல்லாமல், கல்லீரலில் கரு வளர்ச்சியடைந்தது. புலந்த்சாஹர் மாவட்டத்திலுள்ள தஸ்துரா கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான சர்வேஷ், தற்போது பல முக்கிய மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இது எப்படி நடந்தது? சர்வேஷ் இப்போது எப்படி இருக்கிறார்? சாதாரண மக்கள் மட்டுமல்ல, நிபுணர்களும் இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். இந்த கேள்விகளுக்குப் பதில் தேடி, நானும் தஸ்துரா கிராமத்துக்குச் சென்றேன். நாங்கள் சர்வேஷின் வீட்டை அடைந்தபோது, அவர் ஒரு கட்டிலில் படுத்திருந்தார். அவரது வயிற்றில் அகலமான பெல்ட் ஒன்று கட்டப்பட்டிருந்தது, அதனால் அவர் திரும்புவதற்கு கூட சிரமப்பட்டார் . வயிற்றின் மேல் வலது பக்கத்தில் இருபத்தி ஒரு தையல்கள் இருப்பதாக கூறிய அவர், கனமான எதையும் தூக்குவதைத் தவிர்க்கவும், மிகவும் லேசான உணவை உண்ணவும், நன்றாக ஓய்வு எடுக்கவும் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளதாக என்னிடம் தெரிவித்தார். கட்டிலில் அமர்வதில் இருந்து குளியலறைக்குச் சென்று திரும்ப, உடை மாற்றுவது வரை சர்வேஷ் தனது கணவர் பரம்வீரின் உதவியை நாட வேண்டியுள்ளது. மூன்று மாதங்கள் எங்கள் குடும்பத்திற்கு ஒரு புதிராகவே இருந்தன என்று கூறுகிறார்கள் சர்வேஷும் அவரது கணவர் பரம்வீரும். பட மூலாதாரம், PRABHAT KUMAR/BBC படக்குறிப்பு, விரைவில் அறுவை சிகிச்சை செய்யுமாறு மருத்துவர் அறிவுறுத்தினார் என்று கூறுகிறார் சர்வேஷின் கணவர் பர்வமீர். "எனக்கு நிறைய வாந்தி வந்தது. நான் எப்போதும் சோர்வாகவும் வலியுடனும் இருந்தேன். எனக்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக இருந்தது" என்று சர்வேஷ் பிபிசியிடம் கூறினார். அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கிய போது, மருத்துவர் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யச் சொன்னதாக அவர் கூறுகிறார். ஆனால் அல்ட்ராசவுண்ட் ரிப்போர்ட்டிலும் எதுவும் தெரியவில்லை, வயிற்று தொற்றுக்கு மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டார் சர்வேஷ். ஆனால் ஒரு மாதம் மருந்துகள் எடுத்துக்கொண்ட பிறகும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், அவர் மீண்டும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது, மிகவும் அரிதான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. மருத்துவர்களுக்குக் கூட, நம்புவதற்கு கடினமான செய்தியாக அது இருந்தது. "உங்கள் கல்லீரலில் ஒரு குழந்தை இருக்கிறது" பட மூலாதாரம், PRABHAT KUMAR/BBC படக்குறிப்பு, கதிரியக்க நிபுணர் மருத்துவர் கே.கே. குப்தா, தனது இருபது வருட வாழ்க்கையில் இப்படி ஒன்றை பார்த்ததில்லை என்று கூறுகிறார். அல்ட்ராசவுண்ட் செய்த மருத்துவர் சானியா ஜெஹ்ரா, சர்வேஷின் கல்லீரலில் ஒரு குழந்தை இருப்பதாகக் கூறினார். இது சர்வேஷுக்கும் அவரது கணவர் பரம்வீருக்கும் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவலை உறுதிப்படுத்த, புலந்த்சாஹரிலிருந்து மீரட்டுக்குச் சென்று மீண்டும் அல்ட்ராசவுண்ட் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து கொண்டார் சர்வேஷ். அங்கு கிடைத்த அறிக்கையும் அதை உறுதிப்படுத்தியுள்ளது. சர்வேஷின் மாதவிடாய் சுழற்சி, எப்போதும் போல சாதாரணமாக இருந்ததால், இந்தத் தகவலை நம்புவது அவருக்கு கடினமாக இருந்தது. எம்ஆர்ஐ ஸ்கேன் செய்த கதிரியக்க நிபுணர் மருத்துவர் கே.கே. குப்தா, தனது 20 ஆண்டுகால வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு சம்பவத்தைப் பார்த்ததில்லை என்று பிபிசியிடம் தெரிவித்தார். ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு, அவர் அந்த மருத்துவ அறிக்கையை பலமுறை படித்து, மாதவிடாய் சாதாரணமாக இருக்கிறதா இல்லையா என்பதை சர்வேஷிடம் அவர் திரும்பத் திரும்பக் கேட்டுள்ளார். "அந்தப் பெண்ணுக்கு கல்லீரலின் வலது புறம் 12 வார கரு இருந்தது, அதில் இதயத் துடிப்பும் தெளிவாகத் தெரிந்தது. இந்த நிலை 'இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம்' என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் அரிதானது. இதுபோன்ற சூழ்நிலையில், பெண்களுக்கு அதிக இரத்தப்போக்கு ஏற்படுகிறது, இதனை அவர்கள் சாதாரண மாதவிடாய் என்று கருதுகிறார்கள். இவ்வகையான கர்ப்பத்தைக் கண்டறிய நேரம் எடுக்கும்" என்று அவர் கூறுகிறார். "அறுவை சிகிச்சை தவிர வேறு வழியில்லை" பட மூலாதாரம், PRABHAT KUMAR/BBC படக்குறிப்பு, சர்வேஷின் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் குழுவில் மருத்துவர் பருல் தஹியாவும் இருந்தார். கரு பெரிதாக இருந்தால், கல்லீரல் வெடிக்கும் அபாயம் இருப்பதாக அந்த தம்பதியரிடம் மருத்துவர் கூறியுள்ளார். இந்த சூழ்நிலையில், குழந்தையோ அல்லது தாயோ உயிர் பிழைக்க மாட்டார்கள். எனவே, அறுவை சிகிச்சையைத் தவிர வேறு வழியில்லை. புலந்த்ஷாஹரில் உள்ள எந்த மருத்துவரும் சர்வேஷுக்கு மருத்துவம் அளிக்க தயாராக இல்லை என்று பரம்வீர் கூறுகிறார். அதன் பிறகு அவர் மீரட்டுக்குச் சென்றுள்ளார், ஆனால் அங்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இது ஒரு கடினமான நிகழ்வு என்றும், தாய் மற்றும் குழந்தையின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர். அதேபோல் அனைவரும் அவரை டெல்லிக்குச் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர். "நாங்கள் ஏழைகள், டெல்லிக்குச் சென்று அங்குள்ள செலவுகளைச் சமாளிக்க எங்களுக்கு வசதி இல்லை. பல முறை யோசித்த பிறகு, இங்கேயே சிகிச்சை பெறுவது என்று முடிவு செய்தோம்" என்று சர்வேஷ் கூறினார். இறுதியாக, மீரட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு சர்வேஷுக்கு அறுவை சிகிச்சை செய்ய ஒப்புக்கொண்டது. பட மூலாதாரம், PRABHAT KUMAR/BBC படக்குறிப்பு, சர்வேஷின் கணவர் பரம்வீர் பிபிசி குழுவிடம் மருத்துவ அறிக்கைகளைக் காட்டுகிறார். "நோயாளி என்னிடம் வந்தபோது, மூன்று மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். அவர் அல்ட்ராசோனோ மற்றும் எம்ஆர்ஐ பரிசோதனை முடிவுகளை கொண்டு வந்திருந்தார். அதில் இது 'ஹெபடிக் எக்டோபிக்' கர்ப்பம். (அதாவது கல்லீரலில் கரு வளர்ந்துள்ள நிலை) என்பது தெளிவாக தெரிந்தது. இதுகுறித்து மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் சுனில் கன்வாலுடன் பேசினோம். ஏனெனில் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உங்களுக்கு ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் தேவை. அவரும் ஒப்புக்கொண்டார், அதன் பிறகு நோயாளி அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்" என மருத்துவக் குழுவில் இடம் பெற்றிருந்த மருத்துவர் பருல் தஹியா கூறினார். இந்த அறுவை சிகிச்சை ஒன்றரை மணி நேரம் நீடித்தது எனக் கூறுகிறார்கள் மருத்துவர்கள். அறுவை சிகிச்சையின் காணொளியையும் கருவின் படங்களையும் மருத்துவர் கே.கே. குப்தா பிபிசிக்குக் காட்டினார். 'இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம்' என்றால் என்ன? பொதுவாக ஒரு பெண்ணின் கருப்பையில் இருந்து வெளியாகும் கருமுட்டை, விந்தணுவுடன் இணைந்தால், அப்பெண் கர்ப்பமாகிறார். இந்த கருவுற்ற முட்டை ஃபெலோபியன் குழாய் வழியாக கருப்பையை நோக்கி நகர்கிறது, பின்னர் கருப்பையிலேயே கரு வளர்கிறது. சில சந்தர்ப்பங்களில், கருவுற்ற முட்டை கருப்பையை அடைவதற்குப் பதிலாக, ஃபெலோபியன் குழாயிலேயே இருக்கும் அல்லது வேறு சில உறுப்பின் மேற்பரப்பில் ஒட்டிக்கொண்டிருக்கும் என்று பிஎச்யு மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் மருத்துவர் மம்தா கூறுகிறார். "உதாரணமாக, சர்வேஷ் விஷயத்தில் கரு கல்லீரலில் சிக்கிக் கொண்டது. கல்லீரலுக்கு நன்றாக ரத்த ஓட்டம் இருப்பதால், ஆரம்ப நாட்களில் கரு வளர 'வளமான இடமாக' அது செயல்படுகிறது. ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்தான சூழ்நிலை ஏற்படுகிறது. அப்போது, அறுவை சிகிச்சையைத் தவிர வேறு வழியில்லை," என்றார் மம்தா. இந்தியாவில் இதுவரை எத்தனை பேர் இந்தச் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்? படக்குறிப்பு, இதனைப் புரிந்துகொள்ள, பாட்னா எய்ம்ஸில் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறைப் பேராசிரியர் மருத்துவர் மோனிகா அனந்திடம் பேசினோம். உலகம் முழுவதும், சராசரியாக 1% பேருக்கு மட்டுமே இதுபோன்ற 'உள்-கல்லீரல்' கர்ப்பம் ஏற்படுகிறது. இந்த வகை கர்ப்பத்தில், கரு கருப்பையில் இருக்காது என்கிறார் மருத்துவர் மோனிகா. "ஒரு மதிப்பீட்டின்படி, 70 முதல் 80 லட்சம் கர்ப்பங்களில் ஒன்று 'உள் கல்லீரல்' கர்ப்பமாக இருக்கலாம்" எனத் தெரியவருகிறது, என்றும் அவர் கூறினார். இதற்கு முன்பு, உலகம் முழுவதும் 45 இன்ட்ராஹெபடிக் கர்ப்பங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 3 கர்ப்பங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை மருத்துவர் மோனிகா குறிப்பிட்டார். முதல் சம்பவம் 2012 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள லேடி ஹார்டிங்கே மருத்துவக் கல்லூரியில் பதிவாகியது. பின்னர் 2022 ஆம் ஆண்டில், மூன்றாவது சம்பவம் கோவா மருத்துவக் கல்லூரியிலும் , 2023 ஆம் ஆண்டில் பாட்னா எய்ம்ஸிலும் கண்டறியப்பட்டது. பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் பதிவான கல்லீரலில் கரு வளர்ந்த பெண்ணுக்கு மருத்துவர் மோனிகா ஆனந்த் மற்றும் அவரது குழுவினர் சிகிச்சை அளித்தனர். அவரது குழுவினர் மருந்தின் (மெத்தோட்ரெக்ஸேட்) உதவியுடன் பெண்ணுக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்கள் ஒரு வருடம் முழுவதும் நோயாளியை தொடர்ந்து கண்காணித்தனர். பின்னர், மருத்துவர் மோனிகா அந்த அரிதான நிகழ்வை ஆவணப்படுத்தினார். இது இந்தியாவின் மூன்றாவது இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பமாக பப்மெட் (PubMed) இல் வெளியிடப்பட்டது . அமெரிக்காவின் முன்னணி மருத்துவ ஆராய்ச்சி தரவுத்தளம் தான் பப்மெட் . மருத்துவர் பருல் தஹியா மற்றும் மருத்துவர் கே.கே. குப்தா ஆகியோர் தங்கள் குழுவும் சர்வேஷ் விஷயத்தை ஆவணப்படுத்தத் தொடங்கியுள்ளதாகக் கூறுகிறார்கள். விரைவில் அது முடிக்கப்பட்டு ஒரு நம்பிக்கைக்குரிய மருத்துவ இதழில் வெளியிட அனுப்பப்படும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c87eyxwwv7lo
-
இலங்கை – இந்திய கூட்டு கடற்படை பயிற்சி
திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கப்பல் Published By: VISHNU 12 AUG, 2025 | 02:06 AM (எம்.மனோசித்ரா) இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். ரனா' திருகோணமலை துறைமுகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்திற்காக வந்தடைந்தது. திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ள இக்கப்பல் 147 மீட்டர் நீளம் கொண்டதுடன், 300 அங்கத்துவ குழுவினரைக் கொண்டுள்ளது, மேலும் இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் கே.பீ. ஸ்ரீசன் பணியாற்றுகின்றார். இக்கப்பல் நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் பயிற்சி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் அதன் குழுவினர்கள் பங்கேற்பார்கள், அத்துடன் தீவில் உள்ள பல சுவாரஸ்யமான இடங்களைப் பார்வையிடவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் இலங்கை இராணுவத்தினருக்கான ஒரு யோகா நிகழ்ச்சியை நடத்துவதற்கும், திருகோணமலையில் உள்ள சிறப்பு படகுப் படை தலைமையகத்திலும் கப்பலிலும் பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இக்கப்பல் வியாழக்கிழமை (14) நாடு திரும்பவுள்ளது. https://www.virakesari.lk/article/222362
-
முத்தையன்கட்டில் இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனவர் சடலமாக மீட்பு : விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ரவிகரன் வலியுறுத்து
முத்தையன்கட்டு குளத்தில் இளைஞர் சடலம் – பொருட்களை திருட வந்தவர்களை விரட்டியதில் ஏற்பட்டது என பொலிஸ் விளக்கம் Published By: VISHNU 12 AUG, 2025 | 01:59 AM (எம்.வை.எம்.சியாம்) முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் இருந்து உயிரிழந்த நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வட மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பொறுப்பின் கீழ் பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. அத்துடன் இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பொருட்களை திருடுவதற்கு முற்பட்டவர்களை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதே குறித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் எந்தவித தலையீடும் இன்றி விசாரணை நடவடிக்கைகள் வெளிப்படையாக முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் முத்தையன் கட்டு இடதுகரை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த 32 வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் எனும் இளைஞர் காணாமல் போயிருந்தார். தொடர்ச்சியாக அப்பிரதேச மக்களால் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் கடந்த 9ஆம் திகதி முத்தையன்கட்டு குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். குறித்த இளைஞர் உள்ளிட்ட 5 பேர் முத்தையன்கட்டு குளத்துக்கு அண்மித்து அமைந்துள்ள 63 ஆவது படைப்பிரிவு இராணுவ முகாமுக்கு சென்றிருந்த தருணத்தில் இராணுவத்தினரால் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்திருந்தனர். இந்த பின்னணியில் இந்த சம்பவத்துக்கு நீதி வேண்டும் எனவும் இராணுவத்தினரே குறித்த இளைஞரின் மரணத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் பொலிஸ் ஊடகப்பிரிவு இந்த விடயம் தொடர்பில் நேற்று முன்தினம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு சம்பவத்தை தெளிவுபடுத்தியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு; முல்லைத்தீவு பொலிஸ் அத்தியட்சகர் ஒட்டுச் சுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவநகர் பிரதேசத்தில் அமைந்துள்ள 12 ஆவது சிங்கப்படையணி முகாமை அப்புறப்படுத்துவதற்கு அண்மைய நாட்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 7 ஆம் திகதி இரவு குறித்த முகாமையில் அகற்றப்பட்ட இரும்பு மற்றும் இதர பொருட்களை எடுத்துச் செல்வதற்காக முகாமின் வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஐந்து பேரை வெளியேற்றுவதற்காக முகாமில் இருந்த இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்போது தப்பிச்செல்ல முயன்ற ஒருவர் முத்தையன்கட்டு குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பொறுப்பின் கீழ' விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் குறித்த 5 பேரும் முகாம் வளாகத்தினுள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அவர்களை விரட்டியடிக்க முற்பட்ட போது அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்து குறித்த முகாமில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் குறித்த பொருட்களை திருடுவதற்கு சந்தேக நபர்களுக்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் மேலும் இரு இராணுவ சிப்பாய்கள் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய சந்தேகநபர்கள் மூவரும் கடந்த சனிக்கிழமை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார். உயிரிழந்தவரின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எந்தவித தலையீடும் இருக்காது. விசாரணை நடவடிக்கைகள் வெளிப்படையாகவும் தராதரம் பாராமல் முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/222361
-
ஆஸ்திரேலிய அணியை அச்சுறுத்தும் தமிழர்: யார் இந்த செனுரன் முத்துசாமி?
பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட தென் ஆப்ரிக்க வீரர் செனுரன் முத்துசாமி கட்டுரை தகவல் க.போத்திராஜ் பிபிசி தமிழுக்காக 11 ஆகஸ்ட் 2025 இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பலர் பல்வேறு வெளிநாட்டு அணிகளுக்காக கடந்த காலங்களில் கிரிக்கெட் விளையாடியுள்ளனர், தற்போதும் சிலர் விளையாடி வருகிறார்கள். ஆனால், தமிழகத்தை வேராகக் கொண்டு வெளிநாட்டு அணிகளுக்காக கிரிக்கெட் விளையாடியது மிகச் சிலர்தான். கடந்த காலங்களில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக ஆல்வின் ஐசக் காளிச்சரண், மகிந்திரா நாகமுத்து, சிவ்நரேன் சந்தர்பால் உள்ளிட்ட சில வீரர்கள் விளையாடியுள்ளனர். தென் ஆப்பிரிக்க அணியில் தமிழர் தென் ஆப்ரிக்க அணியில் இதற்கு முன் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஹசிம் ஆம்லா, கேசவ் மகராஜ் உள்ளிட்டோர் விளையாடி இருந்தாலும், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட வீரர் ஒருவர்கூட விளையாடியதில்லை. அந்த குறையைப் போக்கும் விதத்தில் முதல்முறையாக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட செனுரன் முத்துசாமி இடம் பெற்று விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். செனுரன் முத்துசாமியின் டெஸ்ட் போட்டி அறிமுகமே அமர்க்களமாக இருந்தது. 2019ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய முத்துசாமி விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்து, வாழ்வில் மறக்க முடியாத வகையில் முதல் டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார். நீண்ட இடைவெளிக்குப்பின் தற்போது தென் ஆப்ரிக்க டி20 அணியில் இடம் பெற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பந்துவீச்சில் மிரட்டி வருகிறார். ஆஸ்திரேலிய அணியின் பேட்டர்களை அதன் சொந்த மண்ணில் திணறவிட்டு, நிலைகுலைய வைப்பது எளிமையானது அல்ல. அதிலும், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் சுழற்பந்துவீச்சு மூலம் பேட்டர்களுக்கு சிம்ம சொப்பனமாக ஒரு பந்துவீச்சாளர் இருந்துவிட்டால் உலக கிரிக்கெட்டின் பார்வையை ஈர்த்துவிடுவார். அந்த வகையில் தென் ஆப்ரிக்காவின் பேட்டிங் ஆல்ரவுண்டரான செனுரன் முத்துசாமி இப்போது ட்ரெண்டிங்காக மாறியுள்ளார். இடதுகை சுழற்பந்து(ஆர்த்தடாக்ஸ்) வீச்சாளரான முத்துசாமி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 2 நாட்களுக்கு முன் முடிந்த முதல் டி20 போட்டியில் பிரமாதமான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். 4 ஓவர்கள் வீசிய முத்துசாமி 15 டாட் பந்துகளுடன் 24 ரன்கள் கொடுத்து, ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, 4 ஓவர்கள் வீசி, 15 டாட் பந்துகளுடன் 24 ரன்கள் கொடுத்து, ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். யார் இந்த செனுரன் முத்துசாமி? செனுரன் முத்துசாமி தென் ஆப்ரிக்காவில் முதல்தரப் போட்டிகளிலும், ஏ லிஸ்ட் போட்டிகளிலும் 100க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் ஆடியுள்ளார். முதல் தரப்போட்டிகளில் 9 சதங்கள், 20 அரைசதங்கள் உள்ளிட்ட 5,111 ரன்களையும், 266 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஏ லிஸ்ட் போட்டிகளில் 2,364 ரன்களையும், 97 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 2019ம் ஆண்டு தென் ஆப்ரிக்க டெஸ்ட் போட்டியில் அறிமுகமான முத்துசாமி அதன்பின் நீண்ட இடைவெளிக்குப் பின்தான் மீண்டும் தேசிய அணியில் வாய்ப்புக் கிடைத்தது. இதுவரை 5 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடிய முத்துசாமி 173 ரன்கள் சேர்த்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்துதான் தென் ஆப்ரிக்க ஒருநாள், டி20 அணியில் தொடர்ந்து வாய்ப்புப் பெற்று முத்துசாமி விளையாடி வருகிறார். 4 டி20 போட்டிகளில் ஆடிய முத்துசாமி 4 விக்கெட்டுகளை எடுத்து, 15 ரன்கள் சேர்த்துள்ளார். கீழ்வரிசை பேட்டராக, முத்துசாமி தென் ஆப்ரிக்க அணியில் களமிறங்குவதால், பேட்டிங் செய்வதற்கு பெருமளவு வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஜனநாயகமும்- முத்துசாமியின் பிறப்பும் தென் ஆப்ரிக்காவில் நாடல் மாகாணத்தில், டர்பன் நகரில் 1994ம் ஆண்டு, பிப்ரவரி 22ம் தேதி செனுரன் முத்துசாமி பிறந்தார். தென் ஆப்பிரிக்கா தேசம் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து மீண்டு, 1994ம் ஆண்டுதான் ஜனநாயகத்துக்கு திரும்பியது. அந்த நேரத்தில் அந்நாட்டில் பிறந்தவர்தான் செனுரன் முத்துசாமி. அதனால்தான் அனைத்து மக்களுக்கும் சமமான வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முத்துசாமிக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே கல்வி முதல் விளையாட்டுவரை சமமான வாய்ப்புக் கிடைத்தது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, முத்துசாமிக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே கல்வி முதல் விளையாட்டுவரை சமமான வாய்ப்புக் கிடைத்தது. தமிழகத்தில் நாகப்பட்டினம் பூர்வீகம் செனுரன் முத்துசாமியின் பூர்வீகம் சென்னைதான் என்றாலும், உறவினர்கள் பலரும் இன்னும் நாகை மாவட்டம், நாகப்பட்டினத்தில் வாழ்ந்து வருகிறார்கள். முத்துசாமியின் தந்தைவழி தாத்தா காலத்திலேயே தென் ஆப்ரிக்காவுக்கு புலம்பெயர்ந்துவிட்டனர். இருப்பினும், தமிழக்கத்தில் உள்ள உறவினர்களோடு முத்துசாமி குடும்பத்தினருக்கு உறவுநிலை இன்னும் தொடர்ந்து வருகிறது. இந்த தகவலை ஒரு பேட்டியில் செனுரன் முத்துசாமியே தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இந்து பாரம்பரியத்தைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த செனுரன் முத்துசாமி, தென் ஆப்ரிக்காவில் அடிக்கடி கோயிலுக்கு செல்லும் பழக்கம் இருப்பதாக 'இந்துஸ்தான் டைம்ஸ்' நாளேட்டுக்கு கடந்த 2019ம் ஆண்டு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும், "தனக்கு தமிழ் பேசத் தெரியாது என்றபோதிலும், தமிழகத்துக்கு இருமுறை வந்து நாகையில் உள்ள உறவினர்களை சந்தித்துச் சென்றிருக்கிறேன். என் குடும்பத்தினர் சிலர், உறவினர்கள் இன்னும் நன்றாக தமிழ் பேசினாலும், எனக்கு தமிழ் தெரியாது. விரைவில் கற்றுவிடுவேன். இந்தியாவுடன் எங்களுக்கு இருக்கும் பிணைப்பு அற்புதமானது, எங்கள் கலாசாரம் எப்போதும் இந்தியராகவே வைத்திருக்கிறது" என முத்துசாமி அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, "எனக்கு தமிழ் தெரியாது. விரைவில் கற்றுவிடுவேன்" என்றார் முத்துசாமி சிறுவயதிலேயே கிரிக்கெட் பயிற்சி டர்பனில் உள்ள கிளஃப்டன் கல்லூரியில் படிப்பை முடித்த முத்துசாமி, க்வா ஜூலு நாடல் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். டர்பனில் முத்துசாமி வசித்தபோது சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது தீராத ஆசையோடு இருந்ததால், முதல் வகுப்பு படிக்கும்போதே முறையான பயிற்சியில் பெற்றோரால் சேர்க்கப்பட்டார். க்வா ஜூலு நாடல் மாகாணத்தில் 11 வயதுக்குட்பட்டோர், 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் செனுரன் முத்துசாமி சிறப்பாக விளையாடி அனைவரின் பாராட்டுகளைப் பெற்றார், பள்ளிப் போட்டிகளிலும், உள்ளூர் போட்டிகளிலும் முத்துசாமியின் ஆட்டம் பிரமாதப்படுத்தியது. முத்துசாமியின் திறமையான ஆட்டம் அவரை தென் ஆப்பிரிக்காவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்குள் தேர்வு செய்ய வைத்தது. இவரின் ஆட்டத்தைப் பார்த்த டால்பின் அணி, 2015-16ம் ஆண்டு அணியில் ஒப்பந்தம் செய்தது. அதன்பின் க்வா ஜூலு நாடல் மாகாண அணியில் முத்துசாமி இடம் பெற்று விளையாடினார், 2017ம் ஆண்டு டி20 குளோபல் லீக் தொடரில் கேப்டவுன் நைட் ரைடர்ஸ் அணிக்காக முத்துசாமி ஒப்பந்தம் செய்யப்பட்டார். 2018ம் ஆண்டு நடந்த ஆப்ரிக்க டி20 கோப்பைத் தொடருக்காக க்வா ஜூலு நாடல் மாகாண அணியில் முத்துசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் 2021, ஏப்ரல் மாதத்தில் நார்த்வெஸ்ட் அணியிலும் முத்துசாமி இடம் பெற்றார். 2021-22ம் ஆண்டு நடந்த சிஎஸ்ஏ எனப்படும் கிரிக்கெட் சவுத் ஆப்ரிக்கா ஒருநாள் தொடரில் முத்துசாமி தனது முதல் சதத்தை மேற்கு மாகாணத்துக்கு எதிராகப் பதிவு செய்தார். இதுதான் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் முத்துசாமியின் முதல் சதமாக அமைந்தது. சங்கக்கராவால் ஈர்க்கப்பட்டவர் 2016-17ம் ஆண்டில் டால்பின் அணியில் நிரந்தரமாக முத்துசாமிக்கு இடம் கிடைத்தது. பேட்டிங்கைப் பொருத்தவரை இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார சங்ககராவை பின்பற்றி அவரைப் போல் பேட்டிங் செய்ய முத்துசாமி ஆர்வமாகினார், அவரின் பேட்டிங் ஸ்டைலைப் போலவே பல ஷாட்களையும் முத்துசாமி தனது ஆட்டத்தில் கொண்டு வந்தார். முத்துசாமிக்கு திருப்புமுனையாக அமைந்தது 2017-18ம் ஆண்டு சீசன்தான். இதில் நைட்ஸ் அணிக்கு எதிராக தொடக்க வீரராக ஆடிய முத்துசாமி 181 ரன்கள் குவித்தார். அதன்பின் தனது பேட்டிங் வரிசையை கீழ்வரிசைக்கு மாற்றிய முத்துசாமி, சுழற்பந்துவீச்சில் கவனத்தைச் செலுத்தினார். அந்த ஆண்டில் மட்டும் டால்பின்ஸ் அணிக்காக 33 விக்கெட்டுகளை கைப்பற்றிய முத்துசாமி, 4 விருதுகளையும், அந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதையும் பெற்றார். 2018ம் ஆண்டு தென் ஆப்ரிக்க அணியின் பயிற்சி முகாமுக்கு அழைக்கப்பட்ட முத்துசாமிக்கு சுழற்பந்துவீச்சில் பயிற்சி அளிக்கப்பட்டு, 2019ம் ஆண்டு இந்தியப் பயணத்துக்கு தயார் செய்யப்பட்டார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, 2017-18ஆம் ஆண்டில் மட்டும் டால்பின்ஸ் அணிக்காக 33 விக்கெட்டுகளை கைப்பற்றிய முத்துசாமி மறக்க முடியாத முதல் விக்கெட் இதற்கிடையே க்வா ஜூலு நாடல் மாகாண அணியில் முத்துசாமியின் ஆட்டத்தைப் பார்த்த தென் ஆப்ரிக்க அணியின் தேர்வாளர்கள், 2019ம் ஆண்டு இந்திய பயணத்துக்கான தென் ஆப்ரிக்க அணியில் முத்துசாமியை தேர்வு செய்தனர். இதையடுத்து, 2019ம் ஆண்டு இந்திய பயணத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துசாமி விசாகப்பட்டினத்தில் அக்டோபர் 2ம் தேதி நடந்த இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகினார். முத்துசாமிக்கு டெஸ்ட் அறிமுகம் வாழ்வில் மறக்கமுடியாத தருணமாக அமைந்தது. டெஸ்ட் வாழ்க்கையில் தனது முதல் விக்கெட்டாக அப்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை 20 ரன்னில் காட்அன்ட் போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்து முத்துசாமி மறக்க முடியாத நினைவுகளைப் பெற்றார். அதன்பின் தென் ஆப்ரிக்க அணியில் மீண்டும் இடம் பெற முத்துசாமிக்கு நீண்ட இடைவெளி காத்திருக்க நேர்ந்தது. கேசவ் மகராஜ், ஷம்சி உள்ளிட்ட சுழற்பந்துவீச்சாளர்களின் கடும் போட்டியால் 6 ஆண்டுகளுக்குப்பின் இந்த ஆண்டிலிருந்து மீண்டும் அணிக்குள் முத்துசாமி வாய்ப்புப் பெற்றார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்ரிக்க அணியில் முத்துசமி இடம் பெற்றாலும், அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. "இதற்காகத்தான் காத்திருந்தேன்" தென் ஆப்பிரிக்க அணிக்குள் மீண்டும் வந்தது குறித்து முத்துசாமி கிரிக்இன்போ தளத்துக்கு அளித்த பேட்டியில் "மீண்டும் ப்ளேயிங் லெவனுக்குள் வந்தது அற்புதமான தருணம். இந்த வாய்ப்புக்காகத்தான் நான் இதுவரை காத்திருந்தேன், கடந்த சில மாதங்களாக சீரான வாய்ப்புக் கிடைப்பது சிறப்பானது. அணிக்குள் இருந்தாலும், வீரர்களுக்கு குளிர்பானங்கள் அளிக்கும் வேலையே செய்தபோதிலும் என்னால் கற்றுக்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது, அதனால்தான் என்னால் அணிக்குள் வர முடிந்தது. வித்தியாசமான தளங்களில் விளையாடும் பக்குவத்தை பெற முடிந்தது" எனத் தெரிவித்தார். பயிற்சியாளர் கான்ராட்டின் முயற்சி தென் ஆப்ரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை முதல்முறையாக வென்றபின் அணிக்குள் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. குறிப்பாக புதிய பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் புதிய வீரர்களை அடையாளம் கண்டு தொடர்ச்சியாக வாய்ப்புகளை அளித்து வருகிறார். அதில் முக்கியமானவர் முத்துசாமி. முத்துசாமிக்கு திறமை இருந்தபோதிலும் போதுமான வாய்ப்புக் கிடைக்காமல் சர்வதேச அளவில் 8 ஆட்டங்களில் மட்டுமே ஆடி இருந்தார். அவருக்கு தொடர்ச்சியாக கடந்த பாகிஸ்தான், ஜிம்பாப்பே தொடரிலிருந்து வாய்ப்புகளை வழங்கி பயிற்சியாளர் கான்ராட் ஊக்கப்படுத்தி வருகிறார். இந்தியாவை ஒப்பிடும்போது தென் ஆப்ரிக்காவில் திறமையான இளம் வீரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும், இங்கிலாந்தை விட தொழில்முறை நிலை (professionalism) குறைவாக இருந்தாலும், ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடும்போது பொதுமக்களின் கவன ஈர்ப்பு மிகக் குறைவாக வைத்திருந்தாலும், தென்னாப்பிரிக்கா வெற்றி பெறுகிறது. சமவாய்ப்பு வழங்குவது, நிதி சிக்கல் மற்றும் பிற வளங்களின் பற்றாக்குறை உள்ளிட்ட யதார்த்தங்களை மீறி தென் ஆப்ரிக்கா முத்துசாமி போன்ற வீரர்களை வளர்த்தெடுத்து வெற்றி பெறுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62wwjqjvd8o
-
மேலதிகாரிகளால் பழிவாங்கப்படும் மனைவியான கிராம அலுவலர் - நீதியை பெற்று தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை
துணுக்காய் பிரதேச செயலகம் முன் நபர் ஒருவரின் போராட்டம் Published By: VISHNU 12 AUG, 2025 | 01:46 AM துணுக்காய் பிரதேச செயலகம் முன்னால் நபரொருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். துணுக்காய் பிரதேச செயலகம் தனியார் முதலாளிகளிடம் இருந்து இதுவரை இலஞ்சமாக பெற்ற அனைத்தையும் மீள கையளிக்க வேண்டும். பிரதேச செயலக ஆளுகைக்குள்ள மக்கள் அனைவரும் சமமாக மதிக்கப்படவேண்டும். 2017ம் ஆண்டு வரட்சி நிவாரணம் வழங்கியமை தொடர்பில் அதன் தெரிவு பட்டியல் தொடர்பிலும் அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் நீதியானதும் நியாயமானதுமான விசாரணை மேற்கொள்ளவேண்டும். காணிப்பிணக்குகளை பாரபட்சமற்ற முறையில் தீர்க்கவேண்டும் மற்றும் காணிகள் வழங்கப்படவேண்டும். கிராம அலுவலர் திருமதி கிருஸ்ணரூபன் கலைச்செல்வியின் தண்டனை பணியிட மாற்றம் தொடர்பில் வெளிப்படையான விசாரியும் தீர்வும் வேண்டும் என்று கூறியே அவர் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவரை பேச அழைத்த போது அவர் பேசுவதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். இதேவேளை இது தொடர்பில் கருத்துரைத்த பிரதேச செயலாளர் ராமதாஸ் ரமேஸ் திருவாளர் கிருஸ்ணரூபன் இன்றையதினம் துணுக்காய் பிரதேச செயலகம் முன்பாக சில விடயங்களை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார், அவர் குறிப்பிடுகின்ற விடயங்கள் அனைத்தும் எனது நிர்வாக காலப்பகுதியில் இடம்பெறவில்லை, இது தொடர்பில் அவர் ஏற்கனவே ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம், ஆளுநர் அலுவலகம், மாவட்ட செயலகம் உள்ளிட்ட திணைக்களங்களுக்கு முறைப்பாடுகளை அனுப்பி வைத்துள்ளார், இது தொடர்பிலான விசாரணைகள் கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக மாவட்ட செயலாளருடைய புலனாய்வு பிரிவினரால் அது தொடர்பிலான ஆவணங்கள் எடுத்து செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட செயலாளரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவர் தனது கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் செய்வது அவரின் ஜனநாயக உரிமையாக இருந்தாலும் அது தொடர்பில் விசாரணை முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்பதனை நான் கூற முடியாது. அவர் போராட்டம் நடாத்துகின்ற இடத்துக்கு எமது உதவி பிரதேச செயலாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தரை அனுப்பி வைத்து அழைப்பு விடுத்திருந்தேன், ஆனால் அவர் கதைப்பதற்கு உடன்பாடில்லை நான் கதைக்க விருப்பமில்லை என தெரிவித்திருந்தார். அவரின் கோரிக்கைகள் தொடர்பில் மாவட்ட செயலாளரை அணுகி அவரின் வேண்டுகோளை விரைவுபடுத்த முடியும், மேலும் இது தொடர்பிலான அறிக்கைகளை மாவட்ட செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளேன் என்று தெரிவித்தார். https://www.virakesari.lk/article/222358
-
மழையால் யாழில் 32 பேர் பாதிப்பு!
Published By: DIGITAL DESK 2 11 AUG, 2025 | 08:26 PM யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (11) காலை பெய்த கனமழையால், ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில், கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஜே/351, ஜே/363, ஜே/364 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஜே/393 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/222348
-
உயர்தர, சாதாரண தர பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு
11 AUG, 2025 | 05:23 PM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் சாதாரண தர பரீட்சைகளுக்கான தினத்தை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய இவ்வாண்டுக்கான உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரையும், சாதாரண தர பரீட்சைகள் 2026 பெப்ரவரி 17 முதல் 26 வரையும் நடைபெறும் என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செவ்வாய்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. இந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகள் ஊடாக பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அதிபர்கள் ஊடாக விண்ணிப்பிக்க முடியும் என்றும், தனிப்பட்ட பரீட்சாத்திகள் தமது தேசிய அடையாள அட்டை ஊடாகவும் விண்ணப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic என்பவற்றில் வழிகாட்டுதல்களை அவதானித்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பத்தின் அச்சிடப்பட்ட நகலை வேறு தேவைகளுக்காக வைத்துக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை ஊடாக விண்ணப்பிக்கவுள்ள விண்ணப்பதாரர்களுக்கு பயனர்பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் ஏற்கனவே அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/222329
-
இந்தியாவின் அபாச்சிக்கு போட்டியாக பாகிஸ்தான் களமிறக்கும் சீன ஹெலிகாப்டர் - காத்திருக்கும் சவால் என்ன?
பட மூலாதாரம், PAFFALCONS படக்குறிப்பு, இசட்-10 எம்இ, பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்க்கப்பட்ட நவீன தாக்குதல் ஹெலிகாப்டர் கட்டுரை தகவல் முன்ஜா அன்வர் பிபிசி உருது, இஸ்லாமாபாத் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவில் தயாரிக்கப்படும் இசட்-10 எம்இ (Z-10 ME) ஹெலிகாப்டர் பாகிஸ்தானில் ஒரு துப்பாக்கிசுடுதல் பயிற்சி மைதானத்தில் நிற்பது போன்ற புகைப்படம் கடந்த மாதம் சமூக ஊடகங்களில் வலம் வந்துகொண்டிருந்தது. பலரும் இது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட படம் என தெரிவித்தனர்., வேறு சிலர் இது பாகிஸ்தானில் பரிசோதனைக்காக வந்த இசட்-10 ஹெலிகாப்டரின் முந்தைய பதிப்பு என நம்பினர். இந்த ஊகங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்பு துறை (ISPR) சீனாவில் தயாரிக்கப்பட்ட இசட்-10 எம்இ ஹெலிகாப்டர்கள் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்க்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட தாக்குதல் ஹெலிகாப்டர்களை இந்தியா முதல்முறையாக அதிக அளவில் கொள்முதல் செய்த முதல் சில நாட்களில் இந்த செய்தி வெளியாகியிருக்கிறது. இதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான், அமெரிக்காவிலிர்ந்து மூன்று அபாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் டெல்லி அருகில் உள்ள ஹிண்டன் விமானபடைதளத்திற்கு வந்து சேர்ந்தன. அதிநவீன வசதிகளுடனான இசட்-10 எம்இ ஹெலிகாப்டர்கள் எல்லா காலநிலைகளிலும், பகலிலோ, இரவிலோ துல்லியமான தாக்குதலை நடத்தும் ஆற்றல் கொண்டது என நிபுணர்கள் கூறுகின்றனர். நவீனா ரேடர் மற்றும் மின்னணு போர் கருவிகள் பொருத்தப்பட்ட இசட்-10 எம்இ தரைவழியாகவும், வான் மார்க்கவாகவும் வரக்கூடிய அபாயங்களை எதிர்கொள்ளும் ஆற்றலை அதிகரிக்கிறது. இந்த கட்டுரை சீனாவின் இசட்-10 எம்இ மற்றும் அமெரிக்காவின் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களுக்கு இடையிலான வேறுபாடுகளை விளக்குகிறது. பட மூலாதாரம், SINGAPORE AIR SHOW படக்குறிப்பு, இசட்-10 எம்இயில் பல வகையான ஆயுதங்களை பொருத்த முடியும் இசட்-10 எம்இ தாக்குதல் ஹெலிகாப்டரின் சிறப்பு அம்சங்கள் என்ன? பட மூலாதாரம், ISPR படக்குறிப்பு, இசட்-10 எம்இயின் நவீன மாடலில் புதிய, சக்திவாய்ந்த இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது, இது திறனையும் வரம்பையும் அதிகரிக்கிறது ஏர் கமோடோர் (ஓய்வு) முஸாமில் ஜிப்ரான் தற்போது முல்தானின் ஏர் பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்துகிறார். அவரது கூற்றுப்படி இசட்-10 எம்இ ஹெலிகாப்டர், டபிள்யு 10 என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கான தயாரிப்பு 1994ஆம் ஆண்டு நவீன தாக்குதல் ஹெலிகாப்டருக்கான தேவையை சீனா உணர்ந்தபோது தொடங்கப்பட்டது. இதுதான் சீனாவால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தாக்குதல் ஹெலிகாப்டராகும். ஏசியன் மிலிட்டரி ரெவ்யூவின் கூற்றுப்படி, இந்த ஹெலிகாப்டர் குறுகிய தூர வான்வழி ஆதரவு, டாங்கிகளுக்கு எதிரான நடவடிக்கை, குறைவான அளவு வான்வழி தாக்குதல் ஆகியவற்றை செயல்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த அம்சங்கள் காரணமாக அது இந்தியாவின் ஏஹெச்-64இ(AH-64E) அபாச்சி கார்டியன் ஹெலிகாப்டருடன் ஒப்பிடப்படுகிறது. முஸாமில் ஜிப்ரான் கூற்றுப்படி கடந்த காலத்தில் இந்த ஹெலிகாப்டரின் பல்வேறு பதிப்புகள் இருந்திருக்கின்றன. அவரது கூற்றுப்படி பனிமூட்டமான சூழலில் பெரும்பாலான ரேடர்கள் சரியாக செயல்படுவதில்லை, ஆனால் இசட்-10 எம்இயில் பொருத்தப்பட்டுள்ள ரேடர் மூடுபனியிலும் வெகு சிறப்பாக செயல்படும். "இந்த ஹெலிகாப்டரின் துப்பாக்கிகள் ஹெல்மெட் மவுண்டட் சைட்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது, இது ஒரு நகரும் ஆயுத அமைப்பாகும், பைலட் எந்த திசையைப் பார்த்தாலும், துப்பாக்கி தானாக அந்த திசையில் சுடும்," என்கிறார் முஸாமில் ஜிப்ரான். அதன் புதிய பதிப்பில் கூடுதல் ஆற்றல் கொண்ட ஒரு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது, இது அதன பறக்கும் ஆற்றலையும், தூரத்தையும் அதிகரிக்கிறது. டிபென்ஸ் செக்யூரிட்டி ஆசியாவின் கூற்றுப்படி, "செயல்திறன் அடிப்படையில், இசட்-10 எம்இ-யின் அதிகபட்ச வேகம் மணிக்கு 300 கிலோமீட்டராக உள்ளது. எடை மற்றும் கூடுதல் எரிபொருளைப் பொறுத்து அதன் பயண வரம்பு 800 முதல் 1,120 கிலோமீட்டர் வரை இருக்கும்." இந்த ஹெலிகாப்டரின் வெற்று எடை சுமார் 5,100 கிலோகிராம், அதிகபட்ச டேக்-ஆஃப் எடை 7,200 கிலோகிராம் வரை செல்லலாம். இது எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை (Line of Control) ஒட்டி நீண்ட தூரம் ஊடுருவி தாக்குதல் நடத்தும் ஆற்றலை அதற்கு வழங்குகிறது. பாதுகாப்பு ஆய்வாளர் சவுத்ரி ஃபாரூக்-கின் கூற்றுப்படி இந்த ஹெலிகாப்டரில் பலவகையான ஆயுதங்களை பொருத்த முடியும். இசட்-10 எம்இ-யில் தரையில் உள்ள இலக்குகளை தாக்கவும், வான்வழி அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள பயன்படும் வழிநடத்தக்கூடிய 16 டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், 32- ட்யூப் ராக்கெட் பாட்கள் மற்றும் டி ஒய்-90 வானிலிருந்து வானில் ஏவக்கூடிய ஏவுகணைகளை பொருத்தலாம். இசட்-10எம்இ மற்றும் அபாச்சி இடையிலான வேறுபாடுகள் பட மூலாதாரம், INDIAN MEDIA படக்குறிப்பு, அமெரிக்க அபாச்சி ஹெலிகாப்டர் சர்வதேச போர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் இசட்-10 எம்இ இதுவரை அதுபோல் பயன்படுத்தப்படவில்லை அபாச்சியுடன் ஒப்பிடுகையில் இசட்-10எம்இ யில் சீனா பல்வேறு மேம்பாடுகளை செய்திருப்பதாக ஏர் கமோடோர் (ஓய்வு) முஸாமில் ஜிப்ரான் சொல்கிறார். அவரது கூற்றுப்படி, ஏவுகணைகளில் இன்ஃப்ராரெட் (ஹீட்-சீக்கிங்) ஏவுகணைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது."இந்த சூழலில், இந்த சீன ஹெலிகாப்டர் ஒரு முக்கிய சாதக அம்சத்தை கொண்டுள்ளது, இதன் இன்ஜினின் புகை வெளியேற்றும் அமைப்பு கிடைமட்டமாக இல்லாமல் 45 டிகிரி கோணத்தில் பின்புறமாக சாய்ந்துள்ளது. இதனால், இதன் வெப்ப அடர்வு (heat signature) கணிசமாகக் குறைகிறது." இந்த வடிவமைப்பு காரணமாக, எதிரிகளின் ரேடர் அல்லது வெப்பத்தை உணரும் கருவி இந்த ஹெலிகாப்டரை கண்டுபிடிப்பதில் சிரமத்தை சந்திக்கின்றன என அவர் கூறுகிறார். அமெரிக்காவின் அபாச்சி ஹெலிகாப்டர்கள் பல போர்களிலும் சர்ச்சைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இசட்-10 எம்இ பாகிஸ்தானுக்காகவே தயாரிக்கப்பட்டது என பாதுகாப்புத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த தாக்குதல் ஹெலிகாப்டர்கள் தற்போது பாகிஸ்தான் ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் இந்த ஹெலிகாப்டர்கள் இதுவரை எந்த போரிலும் பயன்படுத்தப்படவில்லை. அட்லாண்டிக் கவுன்சிலின் மூத்த உறுப்பினரும், முன்னாள் பென்டகன் அதிகாரியுமான அலெக்ஸ் பிளெட்சாஸ், பாதுகாப்பு, விண்வெளி மற்றும் உயர்-தொழில்நுட்பத் துறைகளில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் மாற்றத்தில் நிபுணராவார். "இசட்-10 எம்இ குறைவான எடை கொண்டது, அளவில் சற்று சிறியது மற்றும் நீண்ட தூரம் பயணிக்கும் திறன் கொண்டது, இது அதை மிகவும் இலகுவாக இயக்கும் தன்மையுடையதாக்குகிறது. ஆனால், ஏஹெச்-64 அபாச்சியின் வேகம் அதிகம்," என அலெக்ஸ் பிளெட்சாஸ் விளக்குகிறார். மேலும், "இது பலவகையான ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடியது மற்றும் நவீன ரேடார் மற்றும் இலக்குகளை குறிவைக்கும் அமைப்புகளைக் கொண்டுள்ளது. இசட்-10 எம்இயின் விலை குறைவு, ஆனால் இரு ஹெலிகாப்டர்களும் டாங்கிகளை தாக்குவதற்காகவே உருவாக்கப்பட்டவை," என்று அவர் விளக்குகிறார். சீன மற்றும் மேற்கத்திய தொழில்நுட்பங்களின் ஒப்பீடு பட மூலாதாரம், SINGAPORE AIR SHOW படக்குறிப்பு, இசட்-10 எம்இ, பாகிஸ்தானின் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட ஹெலிகாப்டர் எனக் கூறப்படுகிறது 1965ஆம் ஆண்டு பாகிஸ்தான்-இந்தியப் போருக்குப் பிறகு, அமெரிக்க ஆயுதங்களுக்கு தடை விதிக்கப்பட்ட பிறகே பாகிஸ்தான்- சீனா பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடங்கியது. பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள், டேங்குகள் மற்றும் பீரங்கிகளை வழங்கி நீண்டகால ராணுவ மற்றும் ராஜதந்திர உறவுகளுக்கு சீனா அடித்தளம் அமைத்தது. பனிப்போருக்கு பிறகு, ஆயுதங்கள் வாங்க பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு பதிலாக சீனாவை சார்ந்திருக்க தொடங்கிய பிறகு இந்த கூட்டணி மேலும் ஆழமடைந்தது. சீனாவும், பாகிஸ்தானும் 1963-ல் கையெழுத்திட்ட ஒரு ஒப்பந்தம் எல்லை சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்து, 1966-ல் பாகிஸ்தானுக்கு சீனா ராணுவ உதவி அளிக்கத் தொடங்கியது. கடந்த சில சதாப்தங்களில், சீனா தான் தயாரித்த பல ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியிருக்கிறது. ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (SIPRI) தரவுகளின்படி, 2020 முதல் 2024 வரை பாகிஸ்தான் இறக்குமதி செய்த ஆயுதங்களில் 81% சீனாவிலிருந்து வந்தவை. SIPRIயின் கூற்றுப்படி, 2015-2019 மற்றும் 2020-2024 ஆண்டுகளுக்கு இடையில் பாகிஸ்தானின் ஆயுத இறக்குமதி 61% அதிகரித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, சீனாவிலிருந்து பாகிஸ்தான் வாங்கிய ஆயுதங்களில் நவீன போர் விமானங்கள், ஏவுகணைகள், ரேடார்கள் மற்றும் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் அடங்கும். பாகிஸ்தானில் உள்ளூரில் தயாரிக்கப்படும் சில ஆயுதங்களில் சீனாவின் பங்களிப்பு உள்ளது. இவை சீன நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவை அல்லது சீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியவை. இசட்-10 எம்இ தேர்வு செய்யப்பட்டது எப்படி? பட மூலாதாரம், SINGAPORE AIR SHOW படக்குறிப்பு, இசட்-10 எம்இ, சிங்கப்பூர் ஏர் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது பாகிஸ்தான் ராணுவம் முதலில் ஏஹெச் -1இசட் வைப்பர் ஹெலிகாப்டர்களை வாங்க திட்டமிட்டது. 2015இல் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்தது, ஆனால் இந்தியாவுடனான வளர்ந்து வரும் பாதுகாப்பு உறவுகள் காரணமாக இதிலிருந்து பின்வாங்கியது. பாகிஸ்தான் ராணுவ விமானப் பிரிவைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத மூத்த பைலட் ஒருவர், "தாக்குதல் ஹெலிகாப்டர்களில் மிக முக்கியமானது பராமரிப்பு," என பிபிசியிடம் தெரிவித்தார். " அமெரிக்க அபாச்சி முற்றிலும் புதிய கட்டமைப்பு தேவைப்படும் ஒரு முற்றிலும் வேறுபட்ட ஒரு இயந்திரம். முன்னதாக பாகிஸ்தான், 'சூப்பர் கோப்ரா' அல்லது 'வைப்பர்' எனப்படும் ஏ ஹெச்-1இசட் ஹெலிகாப்டரில் ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பொருத்த தயாராகி வந்தது, ஆனால் அந்த ஹெலிகாப்டர் இதுவரை கிடைக்கவில்லை," என அவர் கூறினார். பின்னர், துருக்கியின் டி129 ஹெலிகாப்டர்களைப் பெற பாகிஸ்தான் முயற்சித்தது, ஆனால் இயந்திர சிக்கல்கள் காரணமாக அந்த வாய்ப்பும் முடிவுக்கு வந்ததையடுத்து, சீனாவை நாடியது. 2015இல் வந்த சீன ஹெலிகாப்டர்களை தொழில்நுட்பக் காரணங்களால் பாகிஸ்தான் நிராகரித்ததாக அவர் சொல்கிறார். அதன் பின்னர் 2019இல் இறுதி முடிவு எடுக்கப்பட்டது. பாகிஸ்தான் நிபுணர்கள் இசட்-10 எம்இ ஹெலிகாப்டர்களில் பாகிஸ்தானின் தேவைகளுக்கு ஏற்ப அபாச்சி போன்ற ரேடர், வானிலிருந்து வானில் தாக்கும் மற்றும் வானிலிருந்து தரையில் தாக்கும் ஏவுகணைகள் மற்றும் நவீன ஆயுத அமைப்புகளை பொருத்தினர். பட மூலாதாரம், SOCIAL MEDIA படக்குறிப்பு, சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்ட இசட்-10 எம்இ படத்தை பலர் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என்று கூறினர் இசட்-10 பாகிஸ்தானின் முதல் தேர்வாக இருக்கவில்லை என அலெக்ஸ் பிளெட்சாஸ் சொல்கிறார். "பாகிஸ்தான் துருக்கியில் தயாரான ஹெலிகாப்டர்களை வாங்க விரும்பியது, ஆனால் அமெரிக்கா இன்ஜின் பகுதிகள் இறக்குமதியை தடை செய்தது. இதன் பின்னர், சீனாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் உறவை வலுப்படுத்த பாகிஸ்தானுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்தது," என்று அவர் சொல்கிறார். இந்த கட்டுரையை எழுதும் நேரம்வரை பாகிஸ்தான் ராணுவம் (ஐஎஸ்பிஆர்) இந்த ஒப்பந்தம் பற்றிய தகவல்களை பிபிசியிடம் தெரிவிக்கவில்லை. ஆனால், பாகிஸ்தான் ராணுவ விமானப் பிரிவின் மூத்த பைலட் ஒருவரின் கூற்றுப்படி பாகிஸ்தான் சீனாவிலிருந்து 30 ஹெலிகாப்டர்களை வாங்கியுள்ளது, இவை பல தொகுதிகளாக பாகிஸ்தானுக்கு வந்து சேரும். ஏர் கமோடோர் (ஓய்வு) முஸாமில் ஜிப்ரான் இத்துடன் உடன்படுவதாகத் தெரிகிறது - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyvvmn2604o
-
பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள 135 வைத்தியசாலைகள் மூடப்படக் கூடிய அபாயம் ; பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் திங்கள் முதல் தொடர் வேலை நிறுத்தம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
ஏற்பட்ட இணக்கப்பாடுகளை செயற்படுத்துவதில் தாமதம் வைத்தியர்களின் இடமாற்றச் செயல்பாட்டில் ஏற்பட்ட முறைகேடுகளைத் திருத்துவது தொடர்பாக, சுகாதார அமைச்சருடன் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த சில மாதங்களாக, சுகாதார அமைச்சுக்குள் வைத்தியர் இடமாற்றப் பட்டியல்களைத் தயாரித்தல், இடமாற்ற உத்தரவுகளை செயல்படுத்துதல் மற்றும் வைத்தியசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புதல் ஆகிய செயற்பாடுகள் உரிய வகையில் மேற்கொள்ளப்படவில்லை என அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக எழுந்துள்ள சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, தொழிற்சங்க நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டியுள்ளது என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறாயினும், சுகாதார அமைச்சர் அளித்த வாய்மொழி வாக்குறுதிகளை செயல்படுத்தத் தவறுகின்றமை, தங்கள் சங்கத்திற்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சருக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் அதன் நிறைவேற்றுக் குழுவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. சுகாதார அமைச்சின் இடமாற்ற சபைகள் தலையிட்டு, இடமாற்ற உத்தரவுகளை வெளிப்படையாக செயல்படுத்தப்படாவிட்டால் அல்லது சுகாதார கட்டமைப்பை முடக்க முயற்சித்தால், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடுமையான தீர்மானங்களை எடுக்க தயங்காது. சுகாதார அமைச்சரின் உரிய ஆலோசனைகளை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் அதிகாரிகள் மீது, பொது சேவை ஆணைக்குழு உட்பட அனைத்து தரப்பினரிடமும் முறைப்பாடு செய்ய, தமது சங்கம் பின்நிற்காது எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cme710xs602egqp4kt74j8op7