Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. நிசாந்த உலுகேதன்ன கடற்படை புலனாய்வு பிரிவிற்கு பொறுப்பாகயிருந்த காலத்தில் திருகோணமலை தளத்திற்குள் சுதந்திரமாக நடமாடிய வெள்ளை வான்கள் - சித்திரவதைகள் - சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் Published By: RAJEEBAN 06 AUG, 2025 | 05:36 PM இலங்கையின் நீதிமன்ற ஆவணங்களுடன் வெளிநாடுகளில் உயிர்பிழைத்து வாழும் தமிழர்களின் வாக்குமூலங்களையும் கன்சைட்டில் பணியாற்றிய சிங்கள படையினரினதும் கடற்படையினரும் ஆதாரங்களையும் கண்ணால் பார்த்தவர்களின் தகவல்களையும் அடிப்படையாக வைத்து இலங்கையில் சிஐடியினரால் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி நிசாந்த உலுகேதன்ன இலங்கையில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லீம்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்களிற்கு காரணமாவர்களில் ஒருவர் என்ற முடிவிற்கு நாங்கள் வந்தோம் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது. நிசாந்த உலுகேதன்ன குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, நிசாந்த உலுகேதென்ன 2010 ஒக்டோபர் மாதம் முதல் டிசம்பர் 2013 வரை கடற்படையின் புலனாய்வு பிரிவின் தலைவராக பணியாற்றினார். 2025 ஜூலை மாதம் இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி நிசாந்த உலுகேதென்ன இலங்கையின் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். ஆள்கடத்தல், சித்திரவதை, பலவந்தமாக காணாமல் போகச்செய்தல் மற்றும் நாட்டின் மிக பாதுகாப்பான கடற்படை தளமான திருகோணமலை கடற்படை தளத்தில் சட்டவிரோத படுகொலைகள் ஆகியவை தொடர்பான விசாரணைகளை தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுபவர்கள் திருகோணமலை கடற்படை தளத்தில் நிலத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்திற்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். (இது கன்சைட் என அழைக்கப்பட்டது) இவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் வெளியான நம்பகதன்மை மிக்க அறிக்கையிடல்களின் படி கன்சைட் எனப்படுவது தடுத்துவைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட சட்டவிரோதமான அனுமதியளிக்கப்படாத பகுதி என்பதை முன்னாள் கடற்படை தளபதி ஏற்றுக்கொண்டுள்ளார். கன்சைட் என்ற நிலத்தின் கீழ் அமைந்துள்ள சட்டவிரோத சித்திரவதை கூடம் ஒன்று உள்ளது என்பதை 2015 முதன்முதலில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் அம்பலப்படுத்தியிருந்தது. இலங்கையின் நீதிமன்ற ஆவணங்களுடன் வெளிநாடுகளில் உயிர்பிழைத்து வாழும் தமிழர்களின் வாக்குமூலங்களையும் கன்சைட்டில் பணியாற்றிய சிங்கள படையினரினதும் கடற்படையினரினதும் ஆதாரங்களையும் கண்ணால் பார்த்தவர்களின் தகவல்களையும் அடிப்படையாக வைத்து இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லீம்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்களிற்கு காரணமாவர்களில் நிசாந்த உலுகேதென்னவும் ஒருவர் என்ற முடிவிற்கு நாங்கள் வந்தோம். மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் தடுத்து வைக்கப்பட்டு கடுமையான சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை உள்ளிட்ட பிற வகையான கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது இழிவான சித்திரவதைகளிற்கு உட்படுத்தப்பட்ட உயிர் பிழைத்த தமிழர்களிடமிருந்து விரிவான தகவல்களின் அடிப்படையில் பெறப்பட்டவிரிவான தகவல்களின் அடிப்படையில் சர்வதேசஉண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இந்த நிலத்தடி சட்டவிரோத தடுப்பு மற்றும் சித்திரவதை கூடம் இருப்பதை முதன்முதலில் 2015 இல் வெளிப்படுத்தியது. பின்னர் அவை 2015 நவம்பர் மாதம் அந்த இடத்திற்கு விஜயம் செய்த பலவந்தமாக காணாமல் போதல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பணிக்குழுவால் சரிபார்க்கப்பட்டன. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்திடம் அதன் செயல்பாட்டின் போது குறைந்தது 75 - 100 நபர்கள் சட்டவிரோதமாக "கன்சைட் தளத்தில்" தடுத்து வைக்கப்பட்டதாக மதிப்பிட்டுள்ளது. இது 2005 - 2006 முதல் 2012 வரை இடம்பெற்றதாக நம்பப்படுகிறது. இங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் மிகமோசமான மனிதாபிமானமற்ற நிலையில் ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளிற்குள்ளாக்கப்பட்டனர். அக்டோபர் 2019 இல் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கானதிட்டம் இலங்கை இலங்கை கடற்படையின் "கன் சைட்" எனப்படும் ரகசிய தடுப்பு முகாமில் சித்திரவதை, கட்டாயமாக காணாமல் போதல் மற்றும் பிற கடுமையான மீறல்கள் உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டது. இந்த மீறல்கள் உள்நாட்டுப் போரின் போதும் அதற்குப் பின்னரும் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த அறிக்கை 2008 - 2009ல் ("திருகோணமலை 11") திருகோணமலை கடற்படைத் தளத்தில் 11 பேர் காணாமல் போனது தொடர்பான இலங்கை காவல்துறையின் கடந்த கால விசாரணையிலிருந்து ஆவண ஆதாரங்களையும் 2008 முதல் 2012 வரை இலங்கை கடற்படையின் பரந்த முறையான மீறல்களைப் பற்றிப் பேசிய நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் சாட்சியங்களையும் அடிப்படையாகக் கொண்டது. குறிப்பாக 2008 ஆகஸ்ட் 25 முதல் 2009 பிப்ரவரி வரை கொழும்பில் பதினொரு இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான “திருகோணமலை ” விசாரணையை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இலங்கை ஆய்வு செய்தது. பாதிக்கப்பட்டவர்கள் முதலில் கொழும்பில் உள்ள கடற்படை தலைமையகத்தில் தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் தடுத்து வைக்கப்பட்டனர். பின்னர் மார்ச் 2009 இல் “கன்சைட்டிற்கு” மாற்றப்பட்டனர். இந்தக் குழுவில் ஆறு தமிழர்கள் அடங்குவர், இருவர் சிங்களவர்கள் மற்றும் மூவர் முஸ்லிம்கள். இந்த குறிப்பிட்ட வழக்கைத் தாண்டி புலிகள் மற்றும் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அதே இடத்தில் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டிருந்ததை - பெரும்பாலும் தமிழர்களை - சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் ஆவணப்படுத்தியது. அவர்களில் பலர் இன்னும் உயிருடன் உள்ளனர், மற்றும் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை உட்பட அவர்கள் அனுபவித்த கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு சாட்சிகளாக இருக்கலாம். அக்டோபர் 2010 முதல் டிசம்பர் 2013 வரை கடற்படை புலனாய்வு இயக்குநராகவும் கடற்படை ஆயுத இயக்குநராகவும் நிஷாந்த உலுகேதென்ன பணியாற்றினார். 2008 முதல் 2012 நடுப்பகுதி வரையிலான காலகட்டத்துடன் நேரடியாக ஒன்றுடன் ஒன்று இணைந்த ஒரு காலம் கடற்படை உளவுத்துறையால் ஏராளமான பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைத்தவர்கள் "கன் சைட்" இல் தடுத்து வைக்கப்பட்ட காலகட்டம். நிசாந்த உலுகேதென்னவின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட கடற்படை பிரிவான கடற்படை புலனாய்வு பிரிவினால் பாதிக்கப்பட்ட பெருமளவானவர்களும் உயிர் பிழைத்தவர்களும் கன்சைட்டில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்திடம் வாக்குமூலம் வழங்கியவர்கள் மற்றும் நீதிமன்ற ஆவணங்களின்படி மிகவும் கடுமையான பாதுகாப்புடன் காணப்பட்ட கடற்படை தளத்திற்குள் கடற்படையினர் சுதந்திரமாக சென்று வந்தனர். கடற்படை புலனாய்வு பிரிவினரின் வாகனங்களிற்கு சோதனையிலிருந்து விலக்களிக்கப்பட்டது, அவர்களின் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை, ஆனால் ஏனைய அனைத்து நடவடிக்கைகளும் துல்லியமாக பதிவு செய்யப்பட்டன. சட்டவிரோத கடத்தல்கள் தன்னிச்சையாக தடுத்துவைக்கப்படுதல், சித்திரவதை மற்றும் பலவந்தமாக காணாமல்போதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களை வெள்ளை வான்கள் தளத்திற்குள் இலகுவாக கொண்டு போவதை சுலபமாக்கியது. நாட்டின் கடும் பாதுகாப்பு மிக்க தளத்திலிற்குள் இந்த வெள்ளை வான்கள் எந்த வித சோதனையும் இன்றி சென்று வந்தன. கடற்படை புலனாய்வுத் துறையில் அவரது உயர் பதவி திருகோணமலை கடற்படைத் தளத்திற்கான மிகவும் இறுக்கமான பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் சிஐடியில் அவரது சொந்த அனுமதிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நிஷாந்த உலுகேதென்ன தனது கட்டளையின் கீழ் நீண்டகாலமாகவும் முறையாகவும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையாக அறிந்திருந்தார் ஆனால் பொறுப்பானவர்களைத் தண்டிக்க மற்றும் மேலும் மீறல்களைத் தடுக்க பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டார். மீறல்களுக்குப் பொறுப்பேற்காமல் அவர் மே 2019 இல் கடற்படைத் தலைமைத் தளபதியாகவும் ஜூலை 2020 இல் கடற்படைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். இறுதியில் டிசம்பர் 2022 இல் ஏராளமான கௌரவங்களுடன் ஓய்வு பெற்றார். 17 அக்டோபர் 2023 இல் அவர் கியூபாவிற்கான இலங்கைத் தூதராக நியமிக்கப்பட்டார். 18 நவம்பர் 2024 இல் அவர் அரசாங்கத்தால் திரும்ப அழைக்கப்பட்டதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. https://www.virakesari.lk/article/221977
  2. அண்ணை, அன்று உண்பது செரிக்க நன்றாக வேலை செய்தார்கள், இப்ப உடலுக்கு வேலை இல்லையே!
  3. வாசித்து புரிந்தது நிலையாமை...
  4. 06 AUG, 2025 | 05:38 PM தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான உள்ளக முரண்பாடுகளை, ஒரே மேசையில், ஒன்றாய் அமர்ந்து பேச்சு நடத்தி, தீர்க்க முடியுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா கொண்டுவந்த ஓட்டமாவடி எல்லைப் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பான பிரேரணை தொடர்பில் உரையாற்றியபோதே ரிஷாட் பதியுதீன் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது: சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து தீர்வு காண முடியாது. எந்த அரசாங்கமானாலும் எமது சமூகங்களின் பிரச்சினைகளைத் தூண்டிவிட முயற்சிக்குமே தவிர, தீர்த்துவைக்க முயற்சிக்காது. கடந்தகால அனுபவங்களினூடாக நாங்கள் புரிந்து வைத்துள்ள உண்மையே இது. ஓட்டமாவடி பிரதேச சபையை எமது கட்சியே வென்றிருந்தது. எனினும் எங்களை ஆட்சி அமைக்கவிடாமல், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளன. இவ்விடயத்தில் ஏற்பட்ட புரிந்துணர்வு போன்று ஏனைய காணி பிரச்சினை மற்றும் கல்விப் பிரச்சினைகளில் ஏன் இவர்களால் ஒன்றுபட முடியாது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ், முஸ்லிம் சமூங்களின் அக முரண்பாடுகளை பேசித் தீர்க்க முடியும். கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தையும் இழுத்தடிக்க வேண்டியதில்லை. சமூகத் தலைமைகள் இணைந்தால் இதையும் இலகுவாகத் தீர்க்கலாம். தனிநாடு, சமஷ்டி கோரிப் போராடிய தமிழ் தலைமைகள் முஸ்லிம்களின் உள்ளக விடயங்களை பெரிதுபடுத்தவேண்டிய அவசியமுமில்லை. பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட சிறுபான்மை சமூகங்களின் எந்தப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டதாக வரலாறுகள் இல்லை. எனவே, நமது உள்ளக பிரச்சினைகளை நாமே பேசித் தீர்த்துக்கொள்வோம். தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஒரே மேசையில் அமர்ந்தால், எல்லா உள்ளக முரண்பாடுகளுக்கும் முடிவு கிடைக்கும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/221963
  5. 06 AUG, 2025 | 03:14 PM இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியிவில் வீதியில் உள்ள கழிவுகள் மற்றும் மண் என்பன வாவியினுள் உட்புகுவதை தடுத்து மண்ணரிப்பு ஏற்படாமல் வாவியை பாதுகாக்கும் நடவடிக்கைகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊடாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கமைய மட்டக்களப்பு வாவியோரம் சுமார் ஒன்றரை மீட்டர் மற்றும் இரண்டு மீட்டர் வரையான அளவிலான உயரமான தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மட்டக்களப்பு லேடி மெனிங் டிரைவ் வாவியோரத்தில் இத்திட்டத்தின் முதற்கட்டம் நடைமுறைப்படுத்துகிறது. இதற்கென 58 மீட்டர் நீளமான தடுப்புச் சுவர் சுமார் 4 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் தெரிவித்தார். ஆரம்பத்தில் இத்திட்டம் நாலு மில்லியன் செலவில் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் தொடர்ந்தும் மட்டக்களப்பு வாவியோரத்தில் இவ்வாறான தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/221956
  6. படக்குறிப்பு, திருநெல்வேலியில் மென்பொறியாளர் கவின் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் சமீபத்தில் சாதியின் பெயரில் நடைபெற்ற கொலை சம்பவங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இத்தகைய கொலைகளை தடுக்க வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் கட்சியான திமுகவின் கூட்டணி கட்சிகள் கோரி வருகின்றன. இதில் அரசு மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. காவல்துறைக்கு அரசியல் அழுத்தம் இருக்கும், ஆனால் அவர்கள் அதைக் கடந்து செயல்பட வேண்டும் என்கிறார் ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளரான எஸ்.கருணாநிதி. அரசியல் கட்சிகளிலிருந்து அரசு நிர்வாகம் வரை அதன் செயல்பாடுகளில் சாதி என்பது ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறுகிறார் அரசியல் விமர்சகர் ராமு மணிவண்ணன். சாதியின் பெயரில் நடக்கும் கொலைகளுக்கு தனிச் சட்டம் தான் தீர்வாக இருக்க முடியும் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அதே சமயம் தனிச்சட்டம் தேவையில்லை எனக் கூறுபவர்கள் காவல்துறை சுதந்திரமாக செயல்பட விட்டாலே போதுமானது என்கின்றனர். நீதிமன்ற விசாரணை தமிழ்நாட்டின் இரு வேறு பகுதிகளில் சாதியின் பெயரால் பட்டியல் சாதியைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்குகள் இந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்தன. திருநெல்வேலியில் நிகழ்ந்த கொலை தொடர்பான வழக்கு மதுரைக் கிளையிலும், கடலூரில் நிகழ்ந்த மற்றுமொரு கொலை தொடர்பான வழக்கு சென்னையிலும் விசாரணைக்கு வந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அவருடன் பழகி வந்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித்தும், தந்தை சிறப்பு சார்பு ஆய்வாளரான சரவணனும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கை நீதிபதியின் மேற்பார்வையில் விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தொடரப்பட்டிருந்தது. இந்த மனுவில் முறையாக விசாரணை நடத்த வேண்டுமென்றும் 8 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சிபிசிஐடிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, சென்னை உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்) அதே போல கடலூர் மாவட்டம் அரசகுழி கிராமத்தில் சாதியின் பெயரால் நிகழ்ந்த ஒரு கொலை தொடர்பான வழக்கின் விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற வேண்டும் என கொலையுண்ட பட்டியல் பிரிவைச் சேர்ந்த பிகாம் மாணவரின் தந்தை கோரியிருந்தார். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. "தமிழ்நாட்டில் பல ஆணவக் கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆனால் துர்திருஷ்டவசமாக இத்தகைய குற்றங்களுக்கு எந்த முற்றுப்புள்ளியும் இல்லை. ஆணவக் கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆனால் அதன் பின் உள்ள உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படுவதில்லை" என நீதிபதி பி வேல்முருகன் தெரிவித்துள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது. பட மூலாதாரம், FACEBOOK/HARIPARANDHAMAN படக்குறிப்பு, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் பெரம்பலூரில் என்ன நடந்தது? இந்தநிலையில் அரசுத் துறைகளில் சாதிய உணர்வுகள் அவ்வப்போது வெளிப்படுவதாக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் கூறுகிறார். இதற்கு சமீபத்திய உதாரணமாக பெரம்பலூரில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தையும் மேற்கோள் காட்டுகிறார் அவர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தில் வேத மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலின் தேரை பட்டியல் சாதியினர் வசிக்கும் தெரு வழியே கொண்டு செல்வது தொடர்பாக பிரச்னை நிலவிய நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஜூன் 3ஆம் தேதி நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில், தேர் தங்கள் தெருவுக்குள் வர வேண்டியதில்லை என பட்டியல் சமுக மக்கள் சிலரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மாவட்ட வருவாய் அலுவலரை கண்டித்ததுடன், அமைதிப் பேச்சுவார்த்தை தீர்மானத்தையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. தேரை போலீஸ் பாதுகாப்புடன் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் தெருக்களுக்குள் மாவட்ட நிர்வாகம் எடுத்துச் செல்ல வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இது ஒரு உதாரணம் தான் என்கிறார் அரிபரந்தாமன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இதுபோல பல சந்தர்ப்பங்களில் காவல்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள், உள்ளூர் அரசியல் போன்ற காரணங்களுக்காக பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதில்லை. தற்போது சமூக ஊடகங்களின் வீச்சு அதிகமாகிவிட்டதால் எந்த சிக்கலென்றாலும் உடனடியாக வெளிச்சத்திற்கு வந்துவிடுகிறது." எனத் தெரிவிக்கிறார். அரசியல் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்? திருநெல்வேலியில் கவினின் குடும்பத்தினரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை ஆணவக் கொலைகள் தமிழ்நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் நீண்டகாலமாக ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் வேண்டும் என்று கோரி வருவதாகக் கூறிய அவர், "சாதியப் பெருமையால் நடத்தப்படும் மிருகத்தனமான சம்பவங்களை எந்த ஜனநாயக சக்திகளும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை ஒரு பாடமாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். ஆணவக் கொலைகளைத் தடுக்க ஏற்கெனவே உள்ள சட்டங்களை திறம்பட அமல்படுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்த சட்டங்களை அமல்படுத்துவதில் ஏற்படுகிற தோல்விதான் இத்தகைய குற்றங்கள் தொடர காரணமாக அமைகின்றன என்றும் தெரிவித்தார். ஆணவக்கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர வலியுறுத்துவோம் என சிபிஎம் கட்சியைச் சேர்ந்த கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி பிபிசி தமிழிடம் தெரிவித்தார். மேலும் அவர், "சட்டமன்றத்தில் இது தொடர்பாக பேசிய போது தனிச்சட்டம் தேவையில்லை என முதலமைச்சர் தெரிவித்தார். இதன் தீவிரத்தன்மையை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம். அதேசமயம் இதுதொடர்பான தீவிர விழிப்புணர்வும் காவல்துறைக்கும் கூட தேவைப்படுகிறது. அரசு நிர்வாகச் சீர்திருத்தங்களைச் செய்ய முன்வர வேண்டும்" எனத் தெரிவித்தார். பட மூலாதாரம், FACEBOOK/NAAGAI MALI படக்குறிப்பு, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கண்ணகி - பட்டியல் சாதியைச் சேர்ந்த முருகேசன் கொலை வழக்கை நடத்திய வழக்கறிஞர் ரத்தினம், சமூகத்தில் ஆதிக்க சாதி உணர்வு குறையவில்லை என்கிறார். கண்ணகி முருகேசன் வழக்கில் நடந்த ஒரு நிகழ்வையும் அவர் மேற்கோள் காட்டுகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சாதிய அமைப்புகளால் பாதிக்கப்படும் குடும்பங்கள் மிரட்டப்படுகின்றன அல்லது விலை பேசப்படுகின்றன. சாட்சியங்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் போதுமானதாக இல்லை. கண்ணகி முருகேசன் வழக்கை கூட சிபிஐ தான் விசாரித்தது. சில அமைப்புகளின் அழுத்தத்தால் முருகேசனின் நெருங்கிய ஒரு உறவினரே சாட்சியத்தை மாற்றிக் கூறினார். ஒரு சாட்சியம் மாறினால் கூட அது வழக்கின் விசாரணையை கடுமையாகப் பாதிக்கும்." என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார கட்டமைப்பு சாதி அடிப்படையிலானது என்கிறார் அரசியல் விமர்சகரும் ஓய்வுபெற்ற அரசியல் அறிவியல் துறை பேராசிரியருமான ராமு மணிவண்ணன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தேர்தலில் தொடங்கி நிர்வாகம் வரை இங்கு பல விஷயங்கள் சாதி அடிப்படையிலான வாங்கு வங்கி அரசியலால் தீர்மானிக்கப்படுகின்றன. யார் ஆட்சியில் இருந்தாலும் நிலைமை இவ்வாறுதான் இருக்கும்." என்றார். சாதியின் பெயரால் நடக்கும் கொலைக்கு என தனிப் பிரிவுகள் உண்டா? கௌரவம் என்ற பெயரில் சாதிக்காக நடக்கும் கொலை வழக்குகளுக்கு என்று தனிப் பிரிவுகள் எதுவும் இல்லை என்கிறார் வழக்கறிஞர் ரத்தினம். பாதிக்கப்பட்டவர்கள் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகள் கூடுதலாக சேர்க்கப்படும் எனத் தெரிவித்தார். காவல்துறைக்கு அரசியல் அழுத்தம் இருப்பது உண்மை தான் என்கிறார் ஓய்வு பெற்ற காவல்துறை கண்காணிப்பாளரான கருணாநிதி. தற்போது காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து விட்டது என்று அவர் தெரிவிக்கிறார், "இதற்கு முக்கியமான காரணம் காவல்துறைக்கு உள்ள பணி அழுத்தம் தான். பெரும்பாலான காவலர்கள் அவர்களின் நிலைய எல்லைக்குள் வேலை செய்வதே குறைந்துபோனது. இதனால் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகமாகிவிட்டது" என்கிறார். "ஆணவக்கொலை வழக்குகளில் அரசியல்வாதிகளிடமிருந்தும் எதிர் தரப்பினரிடம் இருந்தும் அழுத்தம் வரும். ஆனால் அது சம்மந்தப்பட்ட அதிகாரிகளைப் பொருத்தது. அவர்கள் அதற்கு கட்டுப்பட வேண்டியதில்லை. ஆனால் எல்லோராலும் அதைச் செய்ய முடிவதில்லை. அதனால் தான் போலீஸ் விசாரிக்கக்கூடாது எனக் கூறுகிறார்கள். ஆனால் சிபிசிஐடி என்பது காவல்துறையின் ஒரு பிரிவு தான். அவர்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் வேலை செய்யவிட்டாலே போதுமானது" எனத் தெரிவித்தார். தனிச்சட்டம் தீர்வாக அமையுமா? பட மூலாதாரம், GETTY IMAGES சாதியின் பெயரால் நடக்கும் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை என்கிறார் பேராசிரியர் ராமு மணிவண்ணன். ஆனால் அதற்கான அவசியம் இல்லை என்கிறார் வழக்கறிஞர் ரத்தினம். சமூகத்தில் ஆதிக்க உணர்வுகளைக் கட்டுப்படுத்த சட்டங்கள் உதவும் என்கிறார் ராமு மணிவண்ணன். இது தொடர்பாக மேலும் விவரித்தவர், "நகர்ப்புறங்களை விட கிராமங்களில் சாதிய இறுக்கம் அதிகமாக இருக்கும். காவல்துறையும் சமூகத்தில் ஒரு அங்கமாகத் தான் உள்ளனர். எனவே அவர்களிடமும் அதன் தாக்கம் இல்லாமல் இருக்காது. தற்போது அனைத்து கொலை வழக்குகளைப் போலதான் ஒரு ஆணவக் கொலை வழக்கும் நடத்தப்படுகிறது." என்றார். ''ஒரு குற்றத்திற்கு என தனிச்சட்டம் வருகிறபோது அவை கூடுதல் கவனம் பெறும். இது பொதுமக்களுக்கானது மட்டுமல்ல. காவல்துறையும் நீதித்துறையும் கூட அந்த வழக்குகளை மேலும் சுதந்திரமாக கையாளத் தொடங்கும். தண்டனை ஒன்று மட்டுமே நம்மிடம் உள்ள ஒரே தடுப்பு. சட்டத்தின் கை இல்லாமல் அதைச் செய்ய முடியாது" எனத் தெரிவித்தார். ஏற்கெனவே உள்ள சட்டப்பிரிவுகளை வலுவாக்குவதே போதுமானது எனத் தெரிவிக்கிறார் ரத்தினம். "புதிய சட்டம் கொண்டு வந்தாலும் அதைச் செயல்படுத்துவது இதே காவல்துறையும் நிர்வாக அமைப்பும் தான். இதே அமைப்பு தான் சில வழக்குகளில் தண்டனை பெற்றும் கொடுத்துள்ளது. எனவே ஏற்கெனவே உள்ள தண்டனைச் சட்டங்களில் சில பிரிவுகளைச் சேர்த்துவதே போதுமானதாக இருக்கும். கூடுதலாக எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உள்ளதைப் போல சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக மாவட்ட அளவில் குழுக்களை உருவாக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். இதற்கிடையே திமுகவின் கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்), மற்றும் விடுதலை சிறுத்தைகள் (விசிக) கட்சிகளின் தலைவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை இன்று அவருடைய இல்லத்தில் சந்தித்தனர். சாதியின் பெயரால் நடக்கும் கொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றுவது தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சட்டத்தை தேர்தலுக்கு முன்பாக கொண்டு வர வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் கூறியதாக விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கும் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், சிபிஎம் செயலாளர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crlzdx924lno
  7. Published By: DIGITAL DESK 3 06 AUG, 2025 | 02:14 PM மஸ்கெலியாவில் மண்மேடொன்று சரிந்து விழுந்ததில் புதையுண்ட ஐவர் காயங்களுடன் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் பனியன் பாலத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றின் மீது இடிந்து விழுந்த மண் மேட்டின் கீழ் புதைந்திருந்த ஐந்து பேரை அப்பகுதி மக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் நேற்று செவ்வாய்க்கிழமை (05) மஸ்கெலியா பகுதியில் பெய்த கடும் மழையினால் வீடொன்றின் மீது பாரிய மண் திட்டு சரிந்து வீழ்ந்துள்ளது. இன்று புதன்கிழமை (06) மதியம் 12:00 மணியளவில் அந்த மண் மேட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஐவர் மீது மற்றொரு மண் மேடு சரிந்து விழுந்துள்ளது. பொது மக்கள் இணைந்து மண் மேட்டின் கீழ் புதையுண்டிருந்த ஐவரையும் மீட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். https://www.virakesari.lk/article/221950
  8. Published By: NANTHINI 06 AUG, 2025 | 07:44 PM வரலாற்றில் இன்று : ஒரு நாளேடு உதயமான கதை! (மா.உஷாநந்தினி) வரலாற்றில் இன்று, அதிசிறப்பான ஒரு நாள். ஒரு தமிழ்ப் பத்திரிகைப் பரம்பரையின் முதல் தலைமுறை, முதல் முறையாகக் கண்டு, கைகளில் தாங்கி, முகர்ந்து, அறிவாலும் உணர்வுகளாலும் அனுபவித்துக் கொண்டாடிய, ஒரு நாளேட்டின் உதயம், இதே புதன்கிழமையில், இதே திகதியில், 95 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. “இலங்கைவாழ் தமிழ் மக்கள் பேராவலோடு எதிர்நோக்கியிருந்த சீரிய, தேசீய, செந்தமிழ்த் தேன்பிலிற்றும், தினசரி ‘வீரகேசரி’ என்ற இன்னுரைக் களஞ்சியம் வெளிவந்துவிட்டது!” என்ற பேரறிவிப்போடு, 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி நிகழ்ந்த, அந்த அற்புதமான, அதி உன்னதமான தொடக்கத்தையும், இன்றைய தினம், 95ஆவது அகவையை நிறைவு செய்து, 96ஆவது அகவையில் தடம் பதித்திருக்கும் ‘வீரகேசரி’யையும், சிரேஷ்ட மற்றும் புதிய தலைமுறை ஊழியர்கள், வாசகர்கள் என அனைவரும் ஆத்மார்த்தமாக மகிழ்ந்து வரவேற்கின்றனர் என்பதை இக்கணம் உணர முடிகிறது. துணிவும் கம்பீரமும் அறிவொளியும் நடுநிலையும் பொருந்திய ‘வீரகேசரி’யானது மிக விரைவில், நூற்றாண்டு பயணச் சாதனையை அடையப்போகும் நன்னாளுக்காக நம்பிக்கையோடு காத்திருக்கும், இத்தமிழ் ஊடகத்தை அடையாளமாகக் கொண்டு இயங்கி வரும் ஸ்தாபனமான எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் ஊழியர்களின் உழைப்பும் நலன் விரும்பிகளின் ஆலோசனைகளும் ஆதரவும் வாசகப் பெருமக்கள் அளிக்கும் வரவேற்பும் அன்பும் அளவிட முடியாதது. இப்பத்திரிகையின் மீது வாசகர்கள் சில விமர்சனங்கள், மாற்றுக் கருத்துக்களைக் கொண்டுள்ள போதிலும், “வாசிக்க ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை வீரகேசரியுடன் இருக்கிறேன்...” என்று சொல்பவர்களையும் பார்த்திருக்கிறேன்... “காலையில் முதல் வேலையாக, வீரகேசரியை வாங்கி முழுதாய் வாசித்துவிட்டுத்தான் மறுவேலை!” என்று உரிமை பாராட்டுபவர்களையும் சந்தித்திருக்கிறேன். பேருந்தின் ஜன்னலோரம் உட்கார்ந்து, ஒரு முதியவர், வீரகேசரியை விரித்து, பின்பு, தான் வாசிக்கவேண்டிய ஒரு சிறு பகுதியை மட்டுமே, காகிதமும் கசங்காமல், கைக்கும் நோகாமல் நேர்த்தியாக, இரண்டு மூன்று மடிப்பாக மடித்து, வாசிக்கின்ற அழகையும் பார்த்திருக்கிறேன். நாளேடுகளை ஓர் எளிய வாசகன் கையாளும் விதம் அத்தனை அழகு! ஒரு பத்திரிகையின் ஆணிவேரும் வாசகன்தான். அதன் இருப்பைத் தீர்மானிப்பவனும் வாசகன்தான். அந்த வகையில், வாசகர்களின் உற்சாகமும் ஒத்துழைப்பும் அவர்களது அறிவுத் தேடலுமே, ‘வீரகேசரி’ என்ற நாமம் தரித்த இந்தப் பாரம்பரிய ஊடகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்குகிறது என்றால் அது மிகையல்ல. 'தரமான வழியில் தெளிவான தகவல்’ என்ற மகுட வாசகத்துக்கு இணங்க, தரமான உள்ளடக்கங்களும், தெளிவான அறிக்கையிடலும் அறம் பிறழாத அணுகுமுறைகளும் விசாலமான கருத்துச் செறிவும் அறிவார்ந்த கருத்தாடல்களும் ஆச்சரியமூட்டும் கருத்துக்கணிப்புகளும் வீரகேசரிக்கு தனித்துப் பெருமை சேர்க்கின்றன. உள்ளூர், உள்நாட்டு விவகாரங்களில் மட்டுமல்ல, சர்வதேசமெங்கும் தொலைநோக்குப் பார்வையை செலுத்தி, உலகில், எங்கோ ஒரு புள்ளியில் நிகழும் சிறு சம்பவமாயினும், உலகளாவிய பிரச்சினைகளாயினும் பாரதூரமான விவகாரங்களாயினும், அவற்றையும் பொதுவெளிக்குக் கொண்டு வருகிறது. பல்வேறு சமூகத்தினர் இணைந்து வாழும் இந்நாட்டில், அந்தந்த சமூகத்தவர்களின் வளமான வாழ்க்கைக்காகவும், பொருளாதார எழுச்சிக்காகவும் மக்களது வாழ்வியல் மேம்பாட்டுக்காகவும் சமூக அபிவிருத்தி நலன்களுக்காகவும் கொண்டுவரப்பட்ட சில திட்டங்கள் கூட, ஒரு தமிழ்ப் பத்திரிகை என்ற வகையில், வீரகேசரி தலையிட்டு வெற்றிகரமாக செயற்படுத்த துணை புரிந்ததற்கு, கடந்த கால வரலாறுகள் சான்றுகளாகின்றன. அத்தோடல்லாமல், வீதி அபிவிருத்தி என்ற பெயரில் இடம்பெறும் மோசடிகள், பின்தங்கிய கிராமங்களில் காணப்படும் பிரச்சினைகள், சரிவர பராமரிக்கப்படாத பாடசாலைகளின் நிலைமைகள், கல்வியில் பின்நிற்கும் மாணவர்களின் எதிர்காலம் குறித்த கரிசனை, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், பால்புதுமையினருக்கு எதிரான கடும்போக்குத்தனம், இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களின் அவல நிலை, போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட சமுதாய சீர்கேட்டுத்தனங்களை சுட்டிக்காட்டியும், கண்டித்தும் கரிசனையோடு குரல் கொடுத்து வருகிறது. பத்திரிகைத்தர்மம் காப்பதில் காலங்காலமாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில், இடையூறுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் வீரகேசரி முகங்கொடுத்து வருகிறபோதிலும், நேர்மையான செய்தியிடலின் ஊடாக துணிவோடு நீதியை சுட்டிக்காட்டவோ, பொதுமக்களின் பிரச்சினைகளையும் அவலங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டவோ, அவற்றுக்கான தீர்வுகளை நாடவோ வீரகேசரி பின்நிற்பதில்லை. உள்நாட்டு யுத்த சூழ்நிலைகள், இனக் கலவரங்கள், வன்செயல்கள், சமூக சீர்கேடுகள், கல்வி மற்றும் கலாசார முரண்பாடுகள், பாதாள உலகக் கும்பல்களின் அராஜகங்கள், அரசியல் குழப்பங்கள், சில அரசியல்வாதிகளின் இடையூறுகள், ஊடக அடக்குமுறைகளையும் தொடர்ந்து வீரகேசரி சந்தித்திருக்கிறது. அதைவிடவும் நாட்டில் அதிகப்படியாக தலைவிரித்தாடிய இனக் கலவரங்களால் தமிழர்கள் சந்தித்த இடப்பெயர்வுகள், போராட்டங்கள், பத்திரிகை நிறுவன ஊழியர் பற்றாக்குறை, உற்பத்திக்கான வசதி வளம் குன்றியமை, சுனாமி ஆழிப் பேரலை அனர்த்தம், கொரோனோ நோய்த்தொற்றுப் பரவல், பொருளாதார நெருக்கடி, அரசியல் குளறுபடிகள், போராட்ட நிலைமைகள், உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறைகள், அனைத்துக்கும் மேலாக, அச்சுப் பணியை கொண்டுசெல்வதில் பெருந்தடையாய் உருவெடுத்த காகிதப் பற்றாக்குறை, ஊழியர்களின் பணி இடைநிறுத்தம் முதலான பாரிய வீழ்ச்சிகளையும் மேடு பள்ளங்களையும் கையறு நிலையையும் இப்பத்திரிகை நிறுவனம் கடுமையாக எதிர்த்துப் போராடியிருக்கிறது. எனினும், எத்தனைத் தடைகள் வந்துபோனபோதிலும், ஊழியர்களது தளராத உழைப்பும், வாசகர்கள் இப்பத்திரிகையின் மீது கொண்ட நம்பிக்கையுமே வீரகேசரியை மீண்டும் மீண்டும் தூக்கி நிறுத்தியிருக்கிறது என்றே சொல்லவேண்டும். வீரகேசரி உருவான கதை ‘வீரகேசரி’யின் வெற்றிப் பயணத்தை இன்று நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த நாளேடு ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து, இன்று வரை, இந்த ஒன்பது தசாப்தங்களுக்கும் மேலான பயணம், அத்தனை எளிதானதல்ல. தமிழ்ப் பேசும் மக்களுக்காக, ஒரு தமிழ் தேசிய நாளேடு தோன்றிய காலமும் பொற்காலமன்று, அது, 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலம். இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முந்தைய அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த தமிழ் மக்களைப் பற்றி நாம் சற்றே சிந்தித்தாக வேண்டும். அன்றைய தமிழ் மக்களின் மனநிலையும் வாழ்க்கை முறையும் பெரிதும் வேறு. அவர்கள் வெகுளித்தனமானவர்கள். வெளியுலகம் அறியாதவர்கள். நாட்டு நடப்போ உலக நிலைவரமோ தெரியாதவர்களாகத்தான் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். காரணம், நாட்டிலும் உலகிலும் நடக்கும் விடயங்களை அன்றைய தமிழ் மக்களுக்கு அறியத்தர, ஒரு தமிழ் ஊடகம் அப்போது நம் நாட்டில் இருக்கவில்லை. அந்த காலகட்டத்தில் ‘கொழும்பு ஜேர்னல்’ என்றொரு ஆங்கிலப் பத்திரிகையும், ‘லங்கா லோக்கய’ என்ற சிங்கள பத்திரிகையும் ‘உதய தாரகை’ என்றொரு தமிழ்ப் பத்திரிகையும் வெளிவந்துகொண்டிருந்தன. இவற்றில் ‘கொழும்பு ஜேர்னல்’, 1832இல் வெளியான முதல் ஆங்கிலப் பத்திரிகையாகவும், ‘லங்கா லோக்கய’, 1860இல் காலியில் வெளியான முதல் சிங்கள பத்திரிகையாகவும், ‘உதய தாரகை’, 1841இல் யாழ்ப்பாணத்தில் வெளியான முதல் தமிழ்ப் பத்திரிகையாகவும் அறிமுகமாயின. அப்போது ‘உதய தாரகை’ தமிழ்ப் பத்திரிகை வெளிவந்தபோதும், அது, யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டுமே விற்பனையாகி வந்தது. இதனால், யாழ்ப்பாண மாவட்ட தமிழ் மக்களைத் தவிர, வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மக்களால் அந்தப் பத்திரிகையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை இருந்தது. அவ்வாறான ஒரு சூழ்நிலையில், இலங்கைவாழ் இந்தியத் தமிழரான திரு. பெ.பெரி. சுப்பிரமணியம் செட்டியார் அவர்கள், நாடெங்கும் உள்ள அனைத்து தமிழ்ப் பேசும் மக்களும் வாசித்து, உலக நடப்புகளை அறிந்து, பயன் பெறும் வகையில், ஒரு தமிழ்ப் பத்திரிகையை தேசிய அளவில் உருவாக்க வேண்டும் எனக் கருதினார். அது மட்டுமன்றி, அக்காலகட்டத்தில், நாட்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைக் கூட தமிழ் மக்களால் அறிந்துகொள்ள முடியவில்லை. 1927ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து மகாத்மா காந்தி இலங்கைக்கு வருகை தந்தபோது, அவரது இலங்கை விஜயம் பற்றியோ அதன் நோக்கம் பற்றியோ, மக்களுக்காக காந்தி ஆற்றிய உரையோ கருத்துக்களோ எதுவுமே தமிழ் மக்களை போய்ச் சேரவில்லை. இதுபோன்ற முக்கியமான வரலாற்று நிகழ்வுகள், சம்பவங்கள், நாட்டு நிலவரம் குறித்து தமிழ் மக்களுக்கு அறியத்தருவதற்கென ஒரு தமிழ்ப் பத்திரிகை இல்லையே என்ற தவிப்பும் ஏக்கமும் சுப்பிரமணியம் செட்டியார் அவர்களுக்கு நிச்சயம் ஏற்பட்டிருக்கும். தவிர, மலையக மக்கள் மீதும் கரிசனை கொண்ட சுப்பிரமணியம் செட்டியார் அவர்கள், அந்த மக்களின் பிரச்சினைகளும் தேவைகளும் வெளியுலகுக்குத் தெரியவரவேண்டும் எனில், அதற்காகவேனும் ஒரு தமிழ்ப் பத்திரிகை கட்டாயம் தேவை என்று சிந்தித்தார். காலச் சூழ்நிலைகளையும் தேவைகளையும் கருத்திற்கொண்டு, தமிழ்ப் பேசும் மக்களின் குரலாக ‘வீரகேசரி’ என்கிற ஒரு தேசிய தமிழ்ப் பத்திரிகையை உருவாக்கினார். கேசரி என்றால் சிங்கம். சுப்பிரமணியம் செட்டியாரின் துணிவு மிகு பிரவேசமாக ‘வீரகேசரி’ வெளியாவதை எடுத்துக்காட்டும் விதமாக, பெயருக்குத் தகுந்தாற்போல் வாளேந்திய இரண்டு சிங்கங்களின் உருவங்கள் வீரகேசரி இலச்சினையில் வரையப்பட்டன. 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி புதன்கிழமை வீரகேசரியின் முதல் நாளிதழ் 8 பக்கங்களை உள்ளடக்கி வெளியானது. அந்த முதல் நாளேட்டின் விலை வெறும் 5 சதமே என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அன்றைய வீரகேசரி காரியாலயம் கொழும்பு - மருதானையில் அமைந்திருந்தது. அதன் பின்னர், கொட்டாஞ்சேனைக்கு மாற்றப்பட்டு, சிறிது காலத்தின் பின், தற்போதைய அமைவிடமான கொழும்பு - கிராண்ட்பாஸ் பிரதேசத்துக்கு மாற்றப்பட்டு, இன்று வரை நிலைபெற்றிருக்கிறது. ‘வீரகேசரி’ ஆசிரியர்களும் முகாமைத்துவப் பணிப்பாளர்களும் வீரகேசரியின் ஸ்தாபகரும் அதன் ஆசிரியருமான திரு. பெ.பெரி.சுப்பிரமணியம் செட்டியாரைத் தொடர்ந்து, திரு. எச். நெல்லையா, திரு. வ.ராமசாமி, திரு. கே.பி.ஹரன், திரு. கே.வி.எஸ்.வாஸ், திரு. கே.சிவப்பிரகாசம், திரு. ஆ.சிவனேசச்செல்வன், திரு. எஸ்.நடராசா, திரு. ஆர்.பிரபாகன் ஆகியோர் ஆசிரியர்களாக பணிபுரிந்துள்ளனர். இவர்களின் வரிசையில், தற்போது திரு. எஸ்.ஸ்ரீகஜன் பிரதம ஆசிரியராகக் கடமையாற்றி வருகிறார். வீரகேசரி ஸ்தாபனமானது, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவேட்) லிமிட்டெட் என மாற்றப்பட்ட பின்னர், இந்த ஸ்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்களாக திரு.டி.பி.கேசவன் கடமையாற்றினார். அவரையடுத்து, திரு. ஹரோல்ட் பீரிஸ், திரு. ஆர்.ஏ.நடேசன், திரு. எஸ்.கிருஷ்ணமூர்த்தி, திரு. ஏ.வை.எஸ்.ஞானம், திரு. எம்.ஜி.வென்சஸ்லாஸ் ஆகியோர் பதவி வகித்தனர். அவர்களை அடுத்து, தற்போது, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவேட்) லிமிட்டெட் ஸ்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக திரு. குமார் நடேசன் வழிநடத்தி வருகிறார். நாளேட்டுக்கு நிகரான சஞ்சிகைகள் வீரகேசரி இதழுக்கு நிகராக, ஆரம்ப காலங்களில் நாளேட்டுடன் இணைந்து வெளியான சஞ்சிகைகளும் விசேட பக்கங்களும் கூட பெரிதளவில் வாசகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றன. அந்த வகையில், 1960களில் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் ‘தோட்ட மஞ்சரி’, ‘குறிஞ்சி மலர்’ போன்றன பெரிதளவில் பேசப்பட்டன. அத்துடன் அதே ஆண்டில் வெளியான ‘மித்திரன்’ மாலை தினசரி, ‘ஜோதி’ குடும்ப வார சஞ்சிகை, பின் ‘மித்திரன் வாரமலர்’ ஆகியவை வாசகர்களை அதிகமாக ஈர்த்தன. அதன் பின், மெட்ரோ நியூஸ், விடிவெள்ளி, சுகவாழ்வு, கலைக்கேசரி, ஜோதிட கேசரி, ஜீனியஸ், தமிழ் டைம்ஸ், சூரியகாந்தி, நாணயம், சுட்டி கேசரி, ஜூனியர் கேசரி, மாலை எக்ஸ்பிரஸ், Weekend Express என மேலும் சில வெளியீடுகள் வரத் தொடங்கின. எனினும், 2020ஆம் ஆண்டு கொரோனோ நோய்த்தொற்றுப் பரவலின் தாக்கம் காரணமாக நாடு முடக்கப்பட்டமை, பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஆகிய காரணங்களால் அனேகமான இணை வெளியீடுகள் நிறுத்தப்பட்டன. தற்போது ‘வீரகேசரி நாளிதழ்’, ‘வீரகேசரி வாரஇதழ்’ மற்றும் ‘விடிவெள்ளி’ ஆகிய பத்திரிகைகள் மட்டுமே வெளிவருவதோடு, இம்மூன்று பத்திரிகைகளுடன் சேர்ந்து மித்திரன் வாரமலரும் மின்னிதழாக (E-Paper) வெளியாகின்றமை குறிப்பிடத்தக்கது. சில முக்கிய வரலாற்றுப் பதிவுகள் வீரகேசரி உருவான நாள் முதல் இன்று வரை, உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் இடம்பெற்றுள்ள பல்வேறு முக்கிய வரலாற்று நிகழ்வுகளை பத்திரிகைகளில் செய்திகளாக, ஆசிரியர் தலையங்கங்களாக, கட்டுரைகளாக, ஆக்கங்களாக, பத்திகளாக பதிவு செய்துள்ளன. அவற்றில் சில நிகழ்வுகளை நோக்குவோமாயின், 'சங்கநாதத்துடன் இலங்கை சுதந்தரோதயம்' (1948.2.4) 'இந்தியா பூரண சுதந்திர குடியரசாகிறது' (1950.1.26) 'நீச்சல் வீரர் நவரத்தினசாமி வல்வெட்டித்துறையில் இருந்து பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து தமிழகம் கோடிக்கரையை அடைந்து சாதனை' (1954) போன்றவற்றை குறிப்பிடலாம். இவற்றோடு, தனிச்சிங்கள சட்டம் (1956), பண்டா - செல்வா ஒப்பந்தம் (1957), இன வன்முறை சம்பவங்கள் (1958), ஸ்ரீ குழப்பம், முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்க படுகொலை - வழக்கு (1959), தமிழரசுக் கட்சியின் வடக்கு கிழக்கு சத்தியாக்கிரகம் (1961), சீன கம்யூனிஸ்ட் கட்சி யாழ். மே தின ஊர்வலம் மீது பொலிஸார் தாக்குதல், அமெரிக்க தூதுவர் மீது முட்டை வீச்சு (1965), ஜே.வி.பி. ஆயுதப் போராட்டம், யாழ். நூலக எரிப்பு (1981) முதலானவற்றை பதிவிட்டுள்ளன. மேலும், பரிசுத்த பாப்பரசர் சின்னப்பர் மறைவு, தந்தை செல்வா மறைவு, சீன மக்கள் குடியரசு தலைவர் மாவோ சே துங் மறைவு, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான விடயம், இந்திய அரசியல் தலைவர் காமராஜர் மறைவு, கிழக்கு பாகிஸ்தானை பங்களாதேஷ் என இந்தியா அங்கீகரித்தமை, மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் இலங்கை விஜயம் போன்றனவும் அடங்குகின்றன. பின்வந்த நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இன ரீதியான போராட்டம் முடிவுற்றமை, அரசியல் கட்சிகளிடையே முறுகல் நிலை, குருந்தூர் மலை விவகாரம், கொரோனா பெருந்தொற்றுப் பரவல் - நாடு முடக்கப்பட்டமை, அரசியல் கட்சிகளிடையே மோதல், பொருளாதார நெருக்கடி, அரகலய மக்கள் போராட்டம், பாப்பரசர் பிரான்ஸிஸின் மறைவு, 2024 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவாகி பதவியேற்றமை, ஜே.வி.பி. ஆட்சியில் புதிய அரசாங்கம், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்.... போன்ற காத்திரமான செய்திகளாயினும், அவற்றை மிகைப்படுத்தல் இன்றி, நடுநிலையுடன் அறிக்கையிடுவதிலும் பிரசுரிப்பதிலும் வீரகேசரி அவதானமாக செயற்படுகிறது. இணைய, டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி அன்று, எழுத்துக்கள் காகிதங்களில் அச்சேற்றப்பட்டு, அச்சு ஊடகமாக உருப்பெற்ற வீரகேசரி, இன்று, இணையமேறி, டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளின் ஊடாக, பல்வேறு நவீனங்களைத் தாங்கி, பரிணாமம் அடைந்து, உரு மாறி, இன்றைய காலச் சூழ்நிலைக்கு ஏற்ப, பொதுமக்களை எளிய முறையில் அணுகும் இலத்திரனியல் ஊடகமாகவும் மிளிர்கிறது. அவ்வாறே செய்திகள், கட்டுரைகள், நேர்காணல்கள், விளம்பரங்கள், ஏனைய அறிவித்தல்களை தாங்கியவாறு வீரகேசரி நாளிதழ் மற்றும் வார இதழ் வெளிவருவதோடு, நாளேட்டின் உள்ளடக்கங்கள் இணையத்தில் கட்டமைக்கப்பட்டு, வீரகேசரி இணையத்தள செய்திச் சேவையும் தனித்துவமாக இயங்கி வருகிறது. 2002ஆம் ஆண்டு இலங்கையில் முதல் தமிழ் செய்தி இணையத்தளமாக virakesari.lk உருவாக்கப்பட்டது. இதழியலை இலத்திரனியலோடு இணைக்கும் அடுத்தகட்ட முயற்சியாக 2005இல் வீரகேசரி மின்னிதழாக (E-paper) பதிவாகத் தொடங்கியது. வீரகேசரி வெறுமனே பத்திரிகைகளாக மாத்திரம் கைகளில் தவழ்ந்த காலம் போய், இன்று எண்ணும சஞ்சிகைகளாகவும் இணையத்தில் உலா வருவதைக் காண்கிறபோது, நாளுக்கு நாள் வீரகேசரி அதன் இருப்பை புதுப்பித்துக்கொள்கிற விதம் ஆச்சரியம்தான். அவ்வாறே, இணையத்தின் மூலம் பத்திரிகையை பல தளங்களிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு எடுத்துச் சென்ற வீரகேசரி இணையத்தளமானது, 2010ஆம் ஆண்டில் “இலங்கையின் அபிமான தமிழ் இணையத்தளமாக” bestweb.lkஆல் தெரிவுசெய்யப்பட்டது. அத்துடன், நமது செய்திகள், நேர்காணல்கள், அரசியல் மற்றும் சமூகம் சார் கருத்துக்கணிப்புகள், பொருளாதார நிலவரம், குற்றச் சம்பவங்கள், வரலாற்று ஆவணப் பதிவுகள், விளையாட்டு, சினிமா சுவாரஸ்யங்கள், கலை, கலாசார நிகழ்வுகள், சமையல் குறிப்புகள், மருத்துவம், மங்கையருக்கான அம்சங்கள் போன்றவை ஒளிஃ ஒலி வடிவ இணைப்புப் பெற்று, காணொளிகளாக உருவாக்கப்பட்டு, வீரகேசரி என்ற ஒற்றைக் குடையின் கீழ் இணையவெளியில் பதிவிடப்பட்டு, அவை யூடியூப், முகநூல், எக்ஸ் தளம், வட்ஸ்அப் முதலிய சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு, வாசகர்களின் காட்சிக்கெளியனாகவும் தோன்றுவது, வீரகேசரியின் மற்றுமொரு வளர்ச்சி. ‘வீரகேசரி’ பற்றி திரு. பெ.பெரி. சுப்பிரமணியம் செட்டியார் அவர்களின் நினைவுப் பதிவு ‘வீரகேசரி’யின் முதலாவது நாளிதழில், அதன் ஆசிரியரான திரு. பெ.பெரி. சுப்பிரமணியம் செட்டியார் அவர்கள், தனது ஆசிரியத் தலையங்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “தன்னால் இயன்ற அளவு பொது ஜனங்களுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்ற அவாவினால் தூண்டப்பட்டே வீரகேசரி தோன்றுகிறான். அசாதாரண காரியங்களைச் செய்து முடிக்கும் திறன் பெற்றவனென அவன் வீறு பேசுத் தயாராயில்லை. நியாய வரம்பை எட்டுணையும் மீறாமல், நடுநிலைமையிலிருந்து, உலகத்தின் முன்னேற்றத்திற்கான இயக்கங்களையும் பிரச்சினைகளையும் பரிவுடன் ஆராய்ந்து, பொதுஜன அபிப்பிராயத்தை நல்ல முறையில் உருவகப்படுத்த வேண்டியதையே வீரகேசரி தன்னுடைய முதற்கடனாகக் கொண்டுள்ளான். இராஜீய, சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளை வீரகேசரி அவ்வப்போது ஆராய்வதிலிருந்து இவ்வுண்மையை நண்பர்கள் அறிந்துகொள்ளட்டும். தாராள சிந்தனையும், பரந்த நோக்கும், சமரஸ உணர்ச்சியும் பெற்ற வீரகேசரி, சமயச் சண்டைகளில், சாதிச் சமர்களில், வீண்கிளர்ச்சிகளில், கலந்துகொள்ள மாட்டான். நியாயமே அவன் வீற்றிருக்கும் பீடம், அவனது அபிப்பிராயங்கள் நீதியையே அடிப்படையாகப் பெற்றிருக்கும். பொதுஜனங்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கும் விஷயத்தில் தளராத ஊக்கமும், சலியாத உழைப்பும் அசைக்க முடியாத உறுதியும் காட்டி நமது கேசரி திகழ்வான்........................................................ மிகப் பெரிய பொறுப்பைத் தாங்கிக்கொண்டு, உயர்ந்த நோக்கங்களுடன் வெளிவரும் வீரகேசரி, தமிழ் மக்களின் ஆதரவையும், அன்பையும் நாடுகிறான்.” வீரகேசரி பத்திரிகையை ஆரம்பித்ததன் பின்னணியில் உள்ள தனது நோக்கத்தை இவ்வாறு அவர் வெளிப்படுத்தியிருந்தார். பத்து வருடங்களுக்குப் பின்... 1940 ‘வீரகேசரி’யில் சுப்பிரமணியம் செட்டியார்... அதன் பிறகு, பத்து ஆண்டுகள் கழித்து, வீரகேசரியின் பத்தாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி வெளியான வீரகேசரி நாளிதழின் 6ஆம் பக்கத்தில், சுப்பிரமணியம் செட்டியார் எழுதிய “வீரகேசரியின் வளர்ச்சி வரலாறு” என்கிற கட்டுரைத் தொடர்ச்சியைக் காணக் கிடைத்தது. அதில் அவர், “பத்து வருடங்களுக்கு முன்னர் விளையாட்டாக நான் இந்த 'வீரகேசரி’யை ஆரம்பித்தேன். அது இன்று மிகப் பெரிய அமைப்பாகவும், மதிக்கமுடியாத மாணிக்கமாகவும், ஒப்புயர்வற்ற தொண்டனாகவும் ஓங்கி வளர்ந்துவிட்டது. மனித வாழ்க்கை நிலையில்லாதது. இன்னும் சில வருடங்களோ, பல வருடங்களோ நான் இந்த ‘வீரகேசரி’யை நடத்திக்கொண்டு போகமுடியும். அதற்குப் பின்னர் ‘வீரகேசரி’யின் நிலை என்ன? ‘வீரகேசரி’யின் தொண்டும், ‘வீரகேசரி’யும் இலங்கையில் சாசுவதமாக இருக்க வேண்டும்” என்று கேசரி மீதான தனது அபிலாசையினை வெளிப்படுத்தியிருந்தார். அன்று, அவர் எண்ணியது, விரும்பியது, எதிர்பார்த்தது இன்று பல மடங்கு நிறைவேறியிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டாக முன்னகர்ந்து, 96ஆவது அகவையை எட்டியுள்ள ‘வீரகேசரி’ விரைவில் நூறு ஆண்டுகளைத் தொட்டு, இலங்கையின் தமிழ் நாளேடுகளில் நூற்றாண்டு நாயகனாக சாதனை படைக்கும் நாளை நோக்கி நாமும் கம்பீரமாக, சந்தோஷமாக பயணிப்போம்....! வீரகேசரியின் நெஞ்சார்ந்த நன்றிகள் அனைவருக்கும் உரித்தாகட்டும்! https://www.virakesari.lk/article/221915
  9. உக்ரைனின் விசேட படைப்பிரிவினரின் தாக்குதலில் 330 ரஸ்ய படையினர் பலி - 550க்கும் அதிகமானவர்களிற்கு காயம் 06 AUG, 2025 | 02:55 PM உக்ரைனின் விசேட படைப்பிரிவினர் மேற்கொண்ட தாக்குதலொன்றில் 330 ரஸ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என உக்ரைனின் பாதுகாப்பு புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. உக்ரைனின் விசேட படைப்பிரிவான டிமுர் எதிரிகளின் நிலைகளிற்குள் ஊருடுவி மேற்கொண்ட தாக்குதலில் விளாடிமிர் புட்டினின் பெருமளவு படையினரை கொன்றுள்ளனர் என உக்ரைனின் பாதுகாப்பு புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. இருதரப்பும் நெருக்கமான கடும்மோதலில் ஈடுபட்டனர் ஆளில்லா விமான ஆட்டிலறி தாக்குதல்களும் இடம்பெற்றன என உக்ரைன் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சமி என்ற பகுதியை நோக்கி ரஸ்யாவின் முன்னேற்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளது என உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் இடம்பெற்ற திகதியை உக்ரைன் குறிப்பிடவில்லை எனினும் கடந்த சில வாரங்களாக உக்ரைனின் கடும் தாக்குதலால் ரஸ்யாவின் முன்னேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது என டெலிகிராவ் தெரிவித்துள்ளது. உக்ரைனின் படையினர் தாழப்பறக்கும் ஹெலிக்கொப்டரில் இலக்குகளை நோக்கி செல்வதையும்,காட்டுப்பகுதியில் மோதலில் ஈடுபடுவதையும் காண்பிக்கும் வீடியோவை உக்ரைன் வெளியிட்டுள்ளது. ரஸ்ய படையினர் உக்ரைனின் நிலைகளை தாக்க மறுத்துள்ளமை அவர்கள் மத்தியிலான உரையாடல்களை இடைமறித்து கேட்டபோது தெரியவந்துள்ளதுஎன தெரிவித்துள்ள உக்ரைனின் இராணுவ புலனாய்வு பிரிவு 334 ரஸ்ய படையினர் கொல்லப்பட்டனர், 550க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர் என தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/221934
  10. காஸா: நெதன்யாகு அரசின் புதிய திட்டம் இஸ்ரேலில் பிளவை ஏற்படுத்தியுள்ளது ஏன்? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, காஸாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட பஞ்சம் நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது கட்டுரை தகவல் யோலண்ட் நெல் மத்திய கிழக்கு செய்தியாளர் யாங் டியன் பிபிசி நியூஸ் 41 நிமிடங்களுக்கு முன்னர் காஸாவை முழுமையாக மீண்டும் ஆக்கிரமிக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிடுவதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து காஸாவில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்தினால் அது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என ஐநா மூத்த அதிகாரி எச்சரித்துள்ளார். இத்தகைய நகர்வு "மிகவும் கவலையளிக்கும்" எனவும், இது மேலும் பல பாலத்தீனர்களின் உயிர்களையும், ஹமாஸால் பிணையாக வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உயிர்களையும் ஆபத்தில் ஆழ்த்தலாம் எனவும் ஐநா உதவி பொதுச் செயலாளர் மிரோஸ்லாவ் ஜென்கா ஐநா பாதுகாப்பு அவையில் கூறினார். நெத்தன்யாகு தனது பாதுகாப்பு அமைச்சரவையுடன் இந்த வாரம் ஆலோசனை நடத்த திட்டமிட்டிருப்பதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. "முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. நாங்கள் காஸா பகுதியை முழுமையாக கைப்பற்றி, ஹமாஸை தோற்கடிக்கப் போகிறோம்," என நெதன்யாகு அரசை சேர்ந்த ஒரு மூத்த நபர் கூறியதாக செய்தியில் மேற்கோள் காட்டப்பட்டது. பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES ஆனால், வியாழக்கிழமை நடைபெறவுள்ள பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டம் இத்தகைய நடவடிக்கையை அங்கீகரிக்க வேண்டும். சமீபத்தில் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஹமாஸ் மீது அழுத்தம் கொடுக்கும் உத்தியாக இந்தத் திட்டம் இருக்கலாம் அல்லது நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி கூட்டணியில் உள்ள கூட்டாளிகளின் ஆதரவை உறுதிப்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. காஸாவில் நடைபெறும் யுத்தம் தொடர்பாக இஸ்ரேலுக்கு சர்வதேச அழுத்தம் அதிகரித்து வந்திருக்கிறது, காஸாவில் படிப்படியாக பஞ்சம் ஏற்பட்டு வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தனது உரையில் ஜென்கா, இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளை விரிவாக்குவதற்கு எதிராக எச்சரித்தார். "இது பல மில்லியன் பாலத்தீனர்களுக்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் காஸாவில் மீதமுள்ள பணயக்கைதிகளின் உயிர்களை மேலும் ஆபத்தில் ஆழ்த்தலாம்," என்று அவர் கூறினார். சர்வதேச சட்டத்தின் கீழ், "காஸா எதிர்கால பாலத்தீனத்தின நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கிறது, இருக்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார். இஸ்ரேலின் ராணுவம், தற்போது காஸாவின் 75% பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறியது. ஆனால் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் வாழும் பகுதிகள் உட்பட முழு பகுதியையும் ஆக்கிரமிக்க புதிய திட்டத்தை இஸ்ரேல் பரிந்துரைக்கும் என கூறப்படுகிறது ராணுவத் தளபதி மற்றும் பிற ராணுவத் தலைவர்கள் இந்த உத்திக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த முன்மொழிவுகள் இஸ்ரேலில் பிளவை ஏற்படுத்தியுள்ளன . இத்திட்டம் குறித்து ஊடகங்களில் பேசிய பெயர் குறிப்பிடாத அந்த மூத்த நபர், "இது ராணுவ தளபதிக்கு ஏற்புடையதில்லையென்றால் அவர் பதவி விலக வேண்டும்," என்று பதிலளித்தார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, 2023 அக்டோபர் முதல் உணவு பற்றாக்குறையால் 89 குழந்தைகள் உட்பட 154 பேர் இறந்ததாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் காஸாவின் சுகாதார அமைச்சகம் கூறியது இத்தகைய முடிவு தங்கள் அன்புக்குரியவர்களின் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தலாம் என்று பணயக்கைதிகளின் குடும்பங்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 49 பணயக்கைதிகள் இன்னும் காஸாவில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது, அவர்களில் 27 பேர் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது. போர் நிறுத்தம் மற்றும் அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுவிக்க வேண்டும் ஆகியவற்றை ஜென்கா பாதுகாப்பு அவையில் அவர் மீண்டும் வலியுறுத்தினார். பாலத்தீனர்கள் எதிர்கொள்ளும் "அசுத்தமான" மற்றும் "மனிதாபிமானமற்ற" நிலைமைகளைக் குறிப்பிட்டு, உடனடியாக போதுமான மனிதாபிமான உதவிகளை தடையின்றி அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலை அவர் வலியுறுத்தினார். "இஸ்ரேல், காஸாவிற்கு உள்ளே நுழையும் மனிதாபிமான உதவிகளை கடுமையாகக் கட்டுப்படுத்தி வருகிறது, மேலும் அனுமதிக்கப்படும் உதவிகள் முற்றிலும் போதுமானதாக இல்லை," என்று ஜென்கா கூறினார். மே 2023 முதல் உணவு மற்றும் பொருட்களைப் பெற முயன்றபோது 1,200-க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறி உணவு விநியோக மையங்களில் நடைபெறும் தொடர்ச்சியான துப்பாக்கிச்சூடுகளை அவர் கண்டித்தார். 2023 அக்டோபர் முதல் உணவு பற்றாக்குறையால் 89 குழந்தைகள் உட்பட 154 பேர் இறந்ததாகக் ஹமாஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் காஸாவின் சுகாதார அமைச்சகம் கடந்த வாரம் கூறியது. காஸாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட, பரவலான பட்டினி நிலவுவதாக ஐநா முகமைகள் எச்சரித்துள்ளதுடன் இந்த மாதம் குறைந்தது 63 ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான மரணங்கள் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளன. உதவி வழங்கப்படுவதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை என்றும், காஸாவில் "பட்டினி இல்லை" என்றும் இஸ்ரேல் முன்னதாக வலியுறுத்தியிருந்தது. ஹமாஸ் 2023 அக்டோபர் 7 ஆம் தேதி தெற்கு இஸ்ரேலில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காஸாவில் ராணுவத் தாக்குதலைத் தொடங்கியது, அந்தத் தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் காஸாவிற்கு பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளால் 60,000-க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக அந்தப் பிரதேசத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cqxg4d8jyn8o
  11. 06 AUG, 2025 | 02:21 PM மன்னார் மாவட்டத்தில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிய மணல் சுரண்டல்களினால் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் பூர்வீக நிலங்கள் அழிவடையும் அபாயம் காணப்படுகின்ற நிலையில் குறித்த நடவடிக்கைகளை கண்டித்து, மன்னார் மாவட்ட இளையோர் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு போராட்டம் இன்று புதன்கிழமை (06) காலை 10.30 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் இடம்பெற்றது. 'மன்னார் மாவட்டத்தின் இயற்கை வளங்களில் ஒன்றாக மணல் உள்ளது. இந்த மணல், இல்மனைட் கனிமத்தை கொண்டிருப்பதால் உலகளவில் பெரும் கேள்வி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்தேசிய நிறுவனம் ஒன்று இல்மனைட் மணல் அகழ முயற்சித்து வருகிறது. இதற்கான அனுமதிகள் இழுபறியில் இருந்த போதிலும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அவை வழங்கப்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளதாக தெரிய வருகிறது. குறிப்பாக அவுஸ்திரேலிய நிறுவனம் அகழ்வுக்கு சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை ஒன்றை சுற்றுச்சூழல் அதிகார சபையிடம் சமர்ப்பித்திருந்தது. இதற்கு சுற்றுச்சூழல் அதிகார சபை சாதகமான அறிக்கையை வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்தேசிய நிறுவனங்களுக்கு மணல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இல்மனைட் மணல் அகழபட்டால் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மன்னார் மாவட்டத்தின் வாழ்நிலங்களுக்குள் கடல் நீர் உட்புகுந்து மக்களின் வாழ்விடங்களையும் பூர்வீக நிலங்களையும் அழித்து விடும் அபாயம் உள்ளது. இந்த அழிவை தடுக்கவும், எமது பூர்வீக நிலங்களையும் மக்களின் இருப்பையும் பாதுகாக்கவும் 'கருநிலம் பாதுகாப்பு' என்ற கருப்பொருளுடன் மக்களை விழிப்புணர்வு செய்யும் போராட்டத்தை முன்னெடுக்க இளையோர் நடவடிக்கைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த விழிப்புணர்வு போராட்டம் இன்று புதன்கிழமை (6) மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம்பெற்றது. இதன் போது கலந்து கொண்ட இளையோர் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த பேரணி மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் ஆரம்பமாகி மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வீதியை சென்றடைந்தது. அங்கிருந்து மன்னார் பொது விளையாட்டு மைதான வீதியூடாக மன்னார் நகர சுற்று வட்ட பகுதியை சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து கணிய மணல் அகழ்வுக்கு எதிராக ஜனாதிபதிக்கு அனுப்பும் வகையில் தபாலட்டையில் கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தின் ஒரு அங்கமாக விழிப்புணர்வு நாடகம், கையெழுத்து பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகள் நாளை வியாழக்கிழமை (7) இடம் பெற்று இறுதியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221949
  12. "உங்கள் கரிசனைகளை மனித உரிமை பேரவைக்கான எனது அறிக்கை பிரதிபலிக்கும்; மனித புதைகுழிகள் மூலம் வெளிவரும் ஆதாரங்களை பாதுகாக்கவேண்டிய அவசிய தேவை உள்ளது" - தமிழ் அரசியல்வாதிகள் சிவில் சமூகத்தினரின் கடிதத்திற்கு ஐநா மனித உரிமை ஆணையாளர் பதில் கடிதம் Published By: RAJEEBAN 06 AUG, 2025 | 04:29 PM தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் சிவில்சமூகத்தினரும் மதத்தலைவர்களும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கும்மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளிற்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கும் அனுப்பிவைத்த கடிதத்திற்கு பதில் கடிதத்தை எழுதியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் தனக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கரிசனைகளை பிரதிபலிக்கும் விதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கான தனது அறிக்கை இடம்பெற்றிருக்கும் என தெரிவித்துள்ளார். இலங்கைக்கான தனது விஜயத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் பலருடனான தனது சந்திப்பு மிகவும் உணர்வூர்வமானதாக காணப்பட்டது என தெரிவித்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் செம்மணி மனித புதைகுழிக்கான எனது விஜயமும் பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்தரணிகளை சந்தித்தமை அந்த பகுதியில் இடம்பெற்ற பெரும் நினைவுகூரலை பார்வையிட்டமையும் மிகவும் உணர்வுபூர்வமானதாக காணப்பட்டது என தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எனது இலங்கை விஜயம் குறித்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் எதிர்வரும் 60வது அமர்வு குறித்தும் 14ம் திகதி ஜூலை மாதமும் இஆகஸ்ட் மாதம் நான்காம் திகதியும் நீங்கள் அனுப்பிய கடிதத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். எனது விஜயத்தின் போது உங்களில் சிலரை சந்திக்க முடிந்தமை குறித்தும் இ எனது விஜயத்தின் முன்னரும் பின்னரும் சிவில் சமூகத்திடமிருந்து கிடைம் பல மகஜர்கள் மற்றும் கடிதங்கள் குறித்தும் நான் நன்றியுடையவனாக உள்ளேன். கடந்தகால தற்போதைய மனித உரிமை மீறல்களிற்கான சர்வதேச குற்றங்களிற்கான பொறுப்புக்கூறல் எனது விஜயத்தின் முக்கிய நோக்கமாகவும்இஅரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் முக்கிய விடயமாகவும் காணப்பட்டதுமுன்னோக்கி செல்லும்போது இது தொடரும். எனது விஜயத்தின்போது எனது அலுவலகத்தின் முன்னைய அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்ட கரிசனைகளை வலியுறுத்தினேன்இதன்போது இராணுவத்தினரின் பிடியில் உள்ள நிலங்களை விடுவித்தலின் அவசியம்வடக்குகிழக்கில் காணிகளை கையகப்படுத்துவதை நிறுத்துதல்பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்துவைத்திருப்பவர்களை விடுதலைசெய்தல்கண்காணிப்பு துன்புறுத்தலை முடிவிற்கு கொண்டுவருதல்பொதுமக்களின் நினைவுகூரும் நடவடிக்கைகளை குற்றமாக கருதுவதை விடுத்து அதற்கு ஆதரவளித்தல் போன்றவற்;றையும் வலியுறுத்தினேன். இந்த விடயங்களிற்கு தீர்வை காண்பது பாதிக்கப்பட்ட மக்கள் சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு மிக முக்கியமான ஒரு நடவடிக்கையாகும். எனது விஜயத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் பலருடனான தனது சந்திப்பு மிகவும் உணர்வூர்வமானதாக காணப்பட்டது செம்மணி மனித புதைகுழிக்கான எனது விஜயமும் பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்தரணிகளை சந்தித்தமை அந்த பகுதியில் இடம்பெற்ற பெரும் நினைவுகூரலை பார்வையிட்டமையும் மிகவும் உணர்வுபூர்வமானதாக காணப்பட்டது என்னுடைய இந்த விஜயங்கள் மனித புதைகுழிகள் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் ஆதாரங்களை பேணவேண்டியது சுயாதீன விசாரணை குறித்து கவனத்தை திருப்பியுள்ளதுடன் அவசரதன்மையை கொடுத்துள்ளன. இலங்கையின் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் இதுவரை சுயாதீனமான வலுவான நியாயமான பொறுப்புக்கூறும் பொறிமுறைகளை ஏற்படுத்த தவறிவிட்டனர் பொதுமக்களினதும் சர்வதேச சமூகத்தினதும் நம்பிக்கையை பெறக்கூடிய உண்மை நீதி மற்றும் பொறுப்புக்கூறலிற்கான முழுமையான செயல்முறையை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தினை நான் கேட்டுக்கொண்டேன். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கான எனது எதிர்வரும் அறிக்கை உங்களின் கரிசனைகளை பிரதிபலிக்கும் விதத்தில் காணப்படுவதை நீங்கள் காண்பீர்கள் என எதிர்பார்க்கின்றேன். https://www.virakesari.lk/article/221941
  13. ஹோமாகமவில் உள்ள ஒரு முன்னணி பாடசாலையின் பதினோராம் வகுப்பு மாணவியின் அகால மரணம் இந்த நாட்டின் கல்வி முறை குறித்த ஒரு ஆழமான விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக பல மருந்து மாத்திரைகளை உட்கொண்டதன் காரணமாக ஏற்பட்ட கடுமையான ஒவ்வாமையினால் அந்தச் சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக அறியப்படுகின்றது. பாடசாலையில் ஓர் ஆசிரியரின் செல்வாக்கு காரணமாக தனது மகள் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்ததாக அவரது முன்னாள் அதிபரான தந்தை தெரிவித்திருப்பது, இக்கட்டான சூழலில் இருக்கும் பாடசாலை மாணவர்களின் உளவியல் நிலையை ஒரு கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தனது மரணத்திற்கு முன்னர் அந்த மாணவி தான் அனுபவித்த மன அழுத்தத்தைப் பற்றி தனது சகோதரியிடம் பகிர்ந்துகொண்டமை, பாடசாலைகள் குழந்தைகளின் உளநலன் குறித்து எவ்வளவு அக்கறை கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. உண்மையில், இது ஒரு தனிப்பட்ட சம்பவம் மட்டுமல்ல, தேர்வு மையப்படுத்தப்பட்ட கல்வி முறையால் குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயகரமான மன அழுத்தத்தின் ஒரு கொடூரமான எடுத்துக்காட்டு. இந்தத் துயரமான நிகழ்வின் தாக்கம் தனிப்பட்ட குடும்பத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. தேர்வு மன அழுத்தத்தின் காரணமாக ஒரு குழந்தை தனது உயிரை மாய்த்துக்கொண்டமை, பாடசாலைக் கல்வியின் அடிப்படை நோக்கமே கேள்விக்குறியாகியிருப்பதைக் காட்டுகிறது. இந்தப் போக்கு தொடருமாயின், அது சமூகத்தின் எதிர்கால தலைமுறையின் மனநல ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கும். அழகியல் பாடங்கள் புறக்கணிக்கப்பட்டு, அவை வெறும் கூடைப் பாடங்களாக மாற்றப்பட்டதனால், குழந்தைகள் கலை, இலக்கியம், மற்றும் வாசிப்பு இன்பங்களை இழந்து விடுகிறார்கள். இதனால், ஆளுமையையும், படைப்பாற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டிய வயதில், வெறுமனே மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாகவே அவர்கள் உருமாறுகின்றனர். இந்தத் தேர்வு மையப்படுத்தப்பட்ட முறை, குழந்தைகளின் உடல்நலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தூக்கமின்மை, கவனச்சிதறல், மற்றும் பல்வேறு அக்கறையின்மைகளை இது உருவாக்குகின்றது. இந்த எதிர்மறையான விளைவுகள், உலக அளவில் மனநலம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்துவருவதைச் சுட்டிக்காட்டும் ஐ.நா. மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) அறிக்கைகளுடன் ஒத்திருக்கின்றன. இந்தத் துயரச் சம்பவம் குறித்து சமூகத்தில் பல்வேறு விதமான எதிர்வினைகள் எழுந்துள்ளன. இறந்த மாணவியின் தாய் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள், இந்தச் சம்பவம் எவ்வளவு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் காட்டுகின்றன. "இனி ஒருபோதும் இதுபோன்ற பேரழிவுகள் நடக்காத வகையில் கல்வித் துறையில் மாற்றம் ஏற்பட வேண்டும்" என அவர் முன்வைத்த கோரிக்கை, பலரின் மனங்களில் எதிரொலித்தது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களிலும், பொது விவாதங்களிலும் கல்வி முறை குறித்த கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் கல்வி நிபுணர்களும், மனநல மருத்துவர்களும் தேர்வு மன அழுத்தம் குறித்து அவ்வப்போது விவாதங்களை நடத்திய போதிலும், ஹோமாகம மாணவியின் மரணம் இந்த விவாதங்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. வினாத்தாள்கள் எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து ஒருபுறமிருந்தாலும், யதார்த்தத்தில் தேர்வுகளின் கடினத்தன்மை அதிகரித்தே வருகின்றது. இந்த நிலைமைக்கு அரசியல் தலைவர்களின் எதிர்வினைகள் பெரும்பாலும் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த பேச்சுகளிலேயே மையப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அந்த சீர்திருத்தங்கள் இந்த துயரத்தின் அடிப்படைக் காரணத்தை முழுமையாக நிவர்த்தி செய்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது. உதாரணத்திற்கு, பரிந்துரைக்கப்பட்டுள்ள இரண்டு பாடசாலை இடைவேளைகளோ, அல்லது விரிவுபடுத்தப்பட்ட பாடவேளைகளோ குழந்தைகளின் மன அழுத்தப் பிரச்சினைக்கு தீர்வாக அமையப் போவதில்லை. புதிய 'மோடியூலர் பை'கள் குறித்து பேசுகின்ற அதேவேளை, வாசிப்புப் பழக்கத்தையும், படைப்பாற்றலையும் வளர்ப்பதற்கான வழிகள் குறித்துப் பேசுவதில்லை. ஒருபுறம் நாட்டின் கல்வி முறையை மாற்றியமைப்பதாகக் கூறிக்கொண்டே, மறுபுறம் கல்வி முறைக்குள் ஏற்கனவே இருக்கும் அழகியல் பாடங்களைக் குறைத்து, அவற்றை வெறும் பெயரளவுக்கு மட்டுமே வைத்திருப்பது, இந்த அரசியல் பதில்கள் வெறும் கண்துடைப்பிற்கானவையாகவே இருக்கின்றன என்பதைக் காட்டுகிறது. என்னுடைய பார்வையில், இந்த மாணவியின் மரணம் ஓர் அலறல்; அது நாட்டின் ஒட்டுமொத்த கல்வி முறைக்கும் விடுக்கப்பட்ட ஓர் எச்சரிக்கை. இந்தச் சோகத்திற்கு நேரடியாக ஆசிரியரையோ, பெற்றோரையோ அல்லது பாடசாலையையோ மட்டும் குற்றஞ்சாட்டுவது சரியானதல்ல. மாறாக, பல ஆண்டுகளாகத் தேர்வு மையப்படுத்தப்பட்ட கல்வி முறைக்கு வழிவகுத்து, குழந்தைகளுக்கு ஓய்வையும், மகிழ்ச்சியையும், சுதந்திரத்தையும் மறுத்த அரசியல் தலைவர்களும், கல்வித் துறையின் உயர் அதிகாரிகளுமே இதற்கு முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும். கல்வி என்பது மதிப்பெண்கள் எடுப்பது மட்டுமல்ல, ஆளுமையை வளர்த்துக்கொள்வது, படைப்பாற்றலுடன் சிந்திப்பது, சமூகத்துடன் இணைந்து வாழ்வது, மற்றும் வாழ்வின் அழகியலை ரசிப்பது போன்றவற்றை உள்ளடக்கியது என்பதை நாம் உணர வேண்டும். இன்றைய நிலையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள், இந்த அடிப்படை உண்மையை உணர்ந்து வடிவமைக்கப்பட வேண்டும். இந்த அபாயகரமான போக்கைத் தடுக்க, நடைமுறைச் சாத்தியமான சில தீர்வுகளை உடனடியாக நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். முதலாவதாக, பாடசாலைக் கல்வியில் அழகியல் பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், அவை வெறும் கூடைப் பாடங்களாக இல்லாமல், கட்டாயப் பாடங்களாக மாற்றப்பட வேண்டும். இதன் மூலம், குழந்தைகள் தமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான வழிகளைப் பெற முடியும். இரண்டாவதாக, பாடசாலைகளில் நூலக வசதிகளை மேம்படுத்தி, புதிய புத்தகங்களை வாங்குவதன் மூலம் மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும். வெறும் பாடத்திட்டப் புத்தகங்களுக்கு அப்பால் உலகத்தை அறியும் வாய்ப்பை அது உருவாக்கும். மேலும், கடந்த காலத்தில் இருந்ததைப் போன்று, பாடசாலைகளில் மாதாந்த பொது மாணவர் கூட்டங்கள், கலை விழாக்கள், நாடகங்கள் போன்றவற்றை மீண்டும் அறிமுகப்படுத்துவது, குழந்தைகளின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர உதவும். இந்த மாற்றங்கள் தனிநபர்கள், அரசாங்கம், மற்றும் ஆசிரியர்கள் என அனைவராலும் மேற்கொள்ளப்பட வேண்டிய கூட்டு நடவடிக்கைகளாகும். ஹோமாகம மாணவியின் அகால மரணம் நாட்டிற்கு அனுப்பிய செய்தி மிகவும் தெளிவானது: நமது கல்வி முறைக்கு ஒரு முழுமையான மறுசீரமைப்பு தேவை. இந்தத் துயர சம்பவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளத் தவறினால், இது போன்ற சோகமான நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழலாம். ஒரு குழந்தையின் எதிர்காலத்தை மதிப்பெண்களால் மட்டுமே தீர்மானிக்கும் இந்த முறையை கைவிட்டு, ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான ஆற்றலுடன் சமூகத்தில் பங்களிக்கக்கூடிய ஒரு நல்ல தலைமுறையை உருவாக்குவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். இந்த இலக்கை அடைவதற்குத் தேவையான மனமாற்றத்தையும், நடைமுறை நடவடிக்கைகளையும் எடுப்பதற்கான நேரம் இது. கல்வி சீர்திருத்தங்கள் என்பது வெறும் கொள்கைகளை உருவாக்குவது மட்டுமல்ல, அது எதிர்கால தலைமுறையின் வாழ்க்கையை கட்டமைப்பதற்கான ஒரு பொறுப்பான கடமை என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். https://vellisaram.blogspot.com/2025/08/blog-post_5.html
  14. செம்மணி மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும் - உமா குமரன் Published By: RAJEEBAN 06 AUG, 2025 | 11:51 AM செம்மணி மனித புதைகுழி தொடர்பில்சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் வேண்டுகோள் விடுத்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, செம்மணியில் உள்ள மனிதப் புதைகுழியின் அளவு பெரும்பேரழிவு. அகழப்படும் ஒவ்வொரு புதைகுழிக்கு பின்னாலும் துயரத்தில் சிக்குண்ட உண்மை மற்றும் நீதியை தேடும் ஒரு குடும்பம் உள்ளது. சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும். பிரிட்டன் மனித புதைகுழிதொடர்பான விசாரணைக்கு தொழில்நுட்ப உதவியை வழங்குமா என கேள்வியெழுப்பியிருந்தேன். இந்த விஷயம் குறித்து சமீபத்தில் பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளருக்கு நான் கடிதம் எழுதினேன். அதனை வாசித்துக்கொண்டிருப்பதை அவர் உறுதி செய்தார்.. சர்வதேச நட்பு நாடுகளுடன் இணைந்து இங்கிலாந்து நமது பங்கை முழுமையாக ஆற்ற வேண்டும். நாடாளுமன்றம் திரும்பியதும் நான் அவரைத் தொடர்புகொள்வேன். https://www.virakesari.lk/article/221936
  15. 6-6-6 நடை பயிற்சி நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்தும்? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, தினமும் நடைப்பயிற்சி செய்யும் பழக்கம் நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 7 மணி நேரங்களுக்கு முன்னர் மிகவும் எளிதான உடற்பயிற்சியாகக் கருதப்படுவது நடைபயிற்சி செய்வது தான். அதை எப்படிச் செய்தாலும், அதனால் எந்தத் தீங்கும் கிடையாது. தினமும் நடைப்பயிற்சி செய்யும் பழக்கம் நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒவ்வொரு நாளும் ஏழாயிரம் அடிகள் நடப்பது புற்றுநோய், டிமென்சியா (Dementia) மற்றும் இதயம் தொடர்பான கடுமையான நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது என்று லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வு கூறுகிறது. நடைப்பயிற்சியால் விளையும் நன்மைகளைக் குறித்து விளக்க பல்வேறு ஆய்வுகள் உள்ளன. ஆனால் எப்படி நடக்க வேண்டும், எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என்பதற்கான விதிகள் மற்றும் முறைகள் வெவ்வேறாக இருக்கின்றன. கடந்த சில மாதங்களாக, சமூக ஊடகங்களில் ஒரு நடைப்பயிற்சி முறை குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த முறையில் நடந்தால் இதய ஆரோக்கியத்திற்கும் மன ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கு 6-6-6 நடைப்பயிற்சி வழக்கம் என்று பெயரிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள் (கோப்புப்படம்) சரி, இந்த 6-6-6 நடைப்பயிற்சி முறை என்றால் என்ன? இது நமது ஆரோக்கியத்திற்கு எவ்வாறு நன்மை பயக்கும்? இந்த நடைப்பயிற்சி முறையை எவ்வாறு பின்பற்ற வேண்டும்? மிக முக்கியமாக, இதைப் பின்பற்றும்போது என்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்? இந்த கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்ள, உணவியல் நிபுணர், ஆரோக்கிய சிகிச்சையாளர் மற்றும் ஆரோக்கிய தளமான மெட்டமார்போசிஸின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான திவ்யா பிரகாஷிடமும், உத்தரபிரதேசத்தின் லக்ஷ்யா ஸ்ட்ரெங்த் அண்ட் கண்டிஷனிங்கின் நிறுவனர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கைலாஷ் மேனனுடனும், பிபிசி இந்தி சேவை பேசியது. 6-6-6 நடை பயிற்சி முறை என்றால் என்ன ? தினமும் காலை 6 மணி அல்லது மாலை 6 மணிக்கு 60 நிமிடங்கள் நடப்பதைத் தான், 6-6-6 நடைப்பயிற்சி எனக் கூறுகிறார்கள். அத்துடன், 6 நிமிட வார்ம்-அப் (உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக உடலைத் தயார்படுத்த உதவும் எளிமையான அசைவுகள்) மற்றும் 6 நிமிட கூல்-டவுனும் (உடற்பயிற்சி முடிந்தவுடன் உடலைத் தளர்வாக உணர வைக்க செய்யப்படும் அசைவுகள்) தேவை. இதை வாரத்தில் 6 நாட்கள் செய்ய வேண்டும் என்கிறார் திவ்யா பிரகாஷ். 6-6-6 எனும் நடைப்பயிற்சி முறை குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாகக் கூறுகிறார் கைலாஷ் மேனன். "சிலர் 6 ஆயிரம் அடிகள் நடப்பது பற்றிப் பேசுகிறார்கள், சிலர் இந்த வழக்கத்தை 6 நாட்கள் பின்பற்றுவது பற்றிப் பேசுகிறார்கள். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு நாளைக்கு 60 நிமிடங்கள் நடக்க வேண்டும் என்பது தான். அதனை, காலை 30 நிமிடங்களும் மாலை 30 நிமிடங்கள் எனப் பிரித்துக் கொண்டாலும் 60 நிமிடங்கள் நடக்க வேண்டும்," என்று அவர் கூறுகிறார். அதாவது, நடைப்பயிற்சியை உங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதே இதன் நோக்கம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். 6-6-6 நடைப்பயிற்சி எவ்வாறு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, தினமும் காலை 6 மணி அல்லது மாலை 6 மணிக்கு 60 நிமிடங்கள் நடப்பதைத் தான், 6-6-6 நடைப்பயிற்சி என நிபுணர்கள் கூறுகிறார்கள். லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, ஒரு நாளைக்கு 7,000 அடி நடப்பது புற்றுநோய், டிமென்ஷியா மற்றும் கடுமையான இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது எனக் கூறுகிறது. 6-6-6 முறைப்படி நடைப்பயிற்சி செய்வது, உடலை ஆரோக்கியமாகவும், இதயத்தையும், மனதையும் உறுதியுடன் வைத்திருக்க உதவும் என திவ்யா பிரகாஷும், கைலாஷ் மேனனும் கூறுகிறார்கள். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வாரத்திற்கு 150 நிமிடங்கள் நடப்பது நல்லது. அதே நேரத்தில் ஆசிய மக்கள் வாரத்திற்கு குறைந்தது 250 நிமிடங்கள் நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என்கிறார் திவ்யா பிரகாஷ். "நாம் வாரத்தில் 6 நாட்கள் 60 நிமிடங்கள் நடக்கும்போது, அது ஒரு வாரத்தில் மொத்தம் 360 நிமிடங்கள் ஆகும், இது நம் இதயத்திற்கு ஆரோக்கியமானது" என திவ்யா விளக்குகிறார். ஆனால், இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக, இந்த முறையில் தினமும் 60 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை அவர் வலியுறுத்துகிறார். சுறுசுறுப்பாக நடைபயற்சி செய்யும்போது, உடலில் ஏற்படும் மாற்றங்களை விளக்கிய அவர், "இந்த நிலையில், உங்கள் இதயத் துடிப்பு, அதிகபட்ச இதயத் துடிப்பில் 60%-70% வரை இருக்க வேண்டும். இது ' 2ம் மண்டல இதயத் துடிப்பு' (Zone 2 Heart Rate) என்று அழைக்கப்படுகிறது" என்கிறார். நமது அதிகபட்ச இதயத் துடிப்பு எவ்வளவு இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு, திவ்யா பிரகாஷ் ஒரு கணக்கை முன்வைக்கிறார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள் (கோப்புப்படம்) முதலில், உங்கள் வயதைக் 220-ல் இருந்து கழியுங்கள். இப்போது, உங்கள் 50 வயது என்று வைத்துக்கொள்வோம். அந்த 50 ஐ, 220 இலிருந்து கழித்தால் 170 கிடைக்கும். அதுதான் 50 வயதுடைய ஒருவரின் அதிகபட்ச இதயத் துடிப்பு. இந்த 170 இல் 60 முதல் 70 சதவீதத்தைக் கணக்கிட்டால், 102 முதல் 119 வரை வரும். அப்படியென்றால், 50 வயதுடைய ஒருவர், நிமிடத்திற்கு 102 முதல் 119 வரையிலான எண்ணிக்கையில் இதயத் துடிப்பு இருக்கும்படி நடக்க வேண்டும். உடற்பயிற்சியைக் கண்காணிக்கும் கருவிகள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் பயன்படுத்தியும் இதயத் துடிப்பைக் கண்காணிக்க முடியும். சாதாரணமாக, ஒரு நபரின் இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 60 முதல் 100 வரை இருக்கும். வேகமாக நடைப்பயிற்சி செய்யும்போது, இதயத் துடிப்பு அதிகரிக்கும். அப்போது, இரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது. இது தான் இந்த நடைப்பயிற்சியின் நோக்கம். இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது என்கிறார் திவ்யா பிரகாஷ். மன ஆரோக்கியத்திற்கு 6-6-6 நடைப்பயிற்சி எவ்வாறு நன்மை பயக்கும்? 6-6-6 எனும் முறையில் நடைப்பயிற்சி செய்வது, நமது மன ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். காலையிலோ, மாலையிலோ சிறிது நேரம் திறந்தவெளியில் நடக்கும்போது, மூளைக்கு தளர்வு கிடைப்பது தான் இதற்குக் காரணம். "நல்ல நடைப்பயிற்சி மேற்கொள்வதும் ஒரு வகையான தியானம் தான் . நீங்கள் தனியாக ஒரு வேகத்தில் நடக்கும்போது, மனம் அமைதியாகிறது" என்கிறார் திவ்யா பிரகாஷ். காலையில் இந்த நடைப்பயிற்சி முறையைப் பின்பற்றும்போது, நாள் முழுவதும் நன்கு செயல்படுவதற்கு தயாராக இருக்கிறீர்கள் என்று அவர் கூறுகிறார். மாலையில் நடப்பது அன்றைய நாளின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், உங்கள் மனநிலையை மேம்படுத்தவும், உங்கள் முழு நாளையும் அசைபோட உதவும் என்று கைலாஷ் மேனன் குறிப்பிடுகிறார். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடக்க வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம், நன்றாக தூக்கம் வருவதிலிருந்து மற்ற அனைத்தும் சரிவர ஒரு சுழற்சியில் நடக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு என்ன செய்ய வேண்டும்? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள் (கோப்புப்படம்) ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு இரண்டு விஷயங்கள் முக்கியம் என்கிறார் திவ்யா பிரகாஷ். 1. சமநிலையான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுமுறை 2. உடல் இயக்கம் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது மிகவும் கடினமாகிவிட்டது. ஒரு வகையில், நம்மில் பெரும்பாலோர் உட்கார்ந்தபடியே இயங்கும் வாழ்க்கை முறையைத் தான் கொண்டுள்ளோம். "இப்போதெல்லாம் பல வசதிகள் கிடைப்பதால், நம் உடலைப் பயன்படுத்த முடியவில்லை. முதல் தளத்திற்குச் செல்லக்கூட லிஃப்ட் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, மக்கள் டிஜிட்டல் திரையை உபயோகிக்கும் நேரம் அதிகரித்து வருவதால், உடலின் இயக்கம் குறைந்து வருகிறது" என்று கைலாஷ் மேனன் கூறுகிறார். அத்தகைய சூழ்நிலையில், 6-6-6 எனும் முறையில் நடைப்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்றுக்கொள்வது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கிய ஒரு நேர்மறையான படியாக இருக்கும். உங்கள் வழக்கமான மற்றும் பரபரப்பான அட்டவணைக்கு ஏற்ப நீங்கள் இதில் ஈடுபடலாம் என்பதால் இது பின்பற்றுவதற்கும் எளிதானது. "6-6-6 நடைப்பயிற்சி முறையை அனைவரும் பின்பற்றலாம். இதற்கு நீங்கள் உடற்பயிற்சி கூடத்தில் (ஜிம்) சேர வேண்டிய தேவையில்லை. ஆடம்பரமான உபகரணங்களை வாங்கவும் தேவையில்லை. நடைபயிற்சி செய்ய காலணிகள் இருந்தால் மட்டும் போதும்" என்கிறார் கைலாஷ் மேனன். வயதானவராக இருந்தாலும் சரி, இளைஞராக இருந்தாலும் சரி, அனைவரும் இந்த வழக்கத்தைப் பின்பற்றலாம் என்கிறார் திவ்யா பிரகாஷ். "ஏற்கனவே அதிக எடை கொண்டவர்களுக்கு, ஓடுவது கடினமாக இருக்கலாம், ஆனால் நடப்பதால் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது" என்றும் அவர் குறிப்பிட்டார். இதைச் செய்யாமல் இருப்பதற்கு உங்களுக்கு எந்த சாக்குப்போக்கும் தேவைப்படாது. உங்களுக்காக நேரம் ஒதுக்கினால் மட்டும் போதும் என்று கைலாஷ் மேனன் கூறுகிறார். மனதில் கொள்ள வேண்டியவை படக்குறிப்பு, நீங்கள் வேகமாக நடப்பவராக இருந்தால், நடப்பதற்கு முன் எளிமையான அசைவுகளைச் செய்து, உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள். ஆனால், இதை உடனடியாகப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று இரு நிபுணர்களும் வலியுறுத்துகின்றனர். ஒருவர் படிப்படியாக இந்த வழக்கத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளலாம். "நாம் ஒரு இலக்கை நிர்ணயிக்கும்போது, முதன்முதலாக அதை முயற்சிப்பவர்களுக்கு அது கடினமாகிவிடும் என நான் நினைக்கிறேன். உதாரணமாக, ஒருவர் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் தொடர்ந்து நடக்க முடியாமல் போகலாம், எனவே அவர் 10 நிமிடங்களுடன் தொடங்கினால் கூட அது நல்லது தான்" என்று கைலாஷ் மேனன் கூறுகிறார். அதேபோல், உங்கள் நடைப்பயிற்சி வழக்கத்தை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். அதாவது, 6-6-6 எனும் முறையில் நடைப்பயிற்சி செய்வதன் சாராம்சம் என்னவென்றால், நீங்கள் காலையிலும் மாலையிலும் நடக்க வேண்டும் என்பது தான் என அவர் குறிப்பிடுகிறார். வாரத்தில் 6 நாட்கள், 6 மணிக்கு, 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்ற 6-6-6 நடைமுறை என்பது, மக்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார் திவ்யா பிரகாஷ். ஆனால், ஒருவர் இதுவரை நடைப்பயிற்சி செய்ததே இல்லை என்றால், முதல் நாளிலேயே அவர் 60 நிமிடங்கள் வேகமாக நடக்க வேண்டிய அவசியம் கிடையாது என்றும் தெரிவிக்கிறார். "உங்கள் உடலையும் நீங்கள் கேட்க வேண்டும். 6-6-6 எனும் முறையில் நடைப்பயிற்சி செய்யும் வழக்கம் நன்றாகத் தெரிகிறது, ஆனால் நடைமுறை வழிகாட்டுதல்களைப் புரிந்து கொள்ள வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார். 6-6-6 எனும் நடை பயிற்சி முறையில், 6 நிமிட வார்ம் அப் மற்றும் கூல் டவுன் செய்வது பற்றி கைலாஷ் மேனன் கூறுகையில், நடை பயிற்சிக்கு எந்தவிதமான வார்ம் அப்போ, அல்லது கூல் டவுனோ தேவையில்லை என்றாலும், நீங்கள் வேகமாக நடந்தால், நடைபயிற்சிக்கு முன்னும் பின்னும் ஸ்ட்ரெச்சிங் செய்யலாம் என்கிறார். குறிப்பிட்டுச் சொல்லப்போனால், 'வார்ம் அப்' மற்றும் 'கூல் டவுன்' என்பது, உடற்பயிற்சியை திடீரென்று தொடங்கவோ அல்லது திடீரென்று நிறுத்தவோ கூடாது என்பதற்காகத் தான் எனக் கூறுகிறார்கள் நிபுணர்கள். நடைப்பயிற்சியைத் தொடங்கும் போது, முதலில் மெதுவாக நடப்பதன் மூலம் உடலை சுறுசுறுப்பாக்கி, அதன் பின் வேகத்தை அதிகரிக்கலாம். வேகமான நடைப்பயிற்சி முடிந்தவுடன், வேகத்தை படிப்படியாகக் குறைப்பது சிறந்த கூல் டவுன் முறையாக இருக்கும். இந்த வழக்கத்தை ஆரோக்கியமான உணவு முறையுடன் சேர்த்து நேர்மறையான முறையில் பின்பற்றினால், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c206z7072zno
  16. Published By: DIGITAL DESK 3 06 AUG, 2025 | 03:29 PM இவ்வருடத்தின் முதல் பாதியில் உலகெங்கிலும் உள்ள மக்களை குறிவைத்து மோசடி செய்ய பயன்படுத்தப்பட்ட 6.8 மில்லியன் கணக்குகளை வட்ஸ்அப் நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுப்படும் மோசடி மையங்களுடன் பலர் பிணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பெரும்பாலும் தங்கள் செயல்பாடுகளில் கட்டாயப்படுத்தி உழைப்பை பெற்றுள்ளதாக மெட்டாவுக்குச் சொந்தமான செய்தியிடல் தளம் தெரிவித்துள்ளது. பயனர்களை அவர்களின் தொடர்பு பட்டியலில் இல்லாத நபர் குழு ஒன்றில் இணைக்கும் போது ஏற்படும் மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கும் வகையில் புதிய மோசடி எதிர்ப்பு நடவடிக்கைகளை வட்ஸ்அப் அறிமுகப்படுத்திய நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை, குற்றவாளிகள் வட்ஸ்அப் கணக்குகளை அபகரிப்பது அல்லது போலி முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் பிற மோசடிகளை ஊக்குவிக்கும் குழு அரட்டைகளில் பயனர்களைச் சேர்ப்பது அதிகரித்து வரும் பொதுவான தந்திரத்தை இலக்காகக் கொண்டுள்ளது. மோசடி மையங்கள் அவற்றைச் செயல்படுத்துவதற்கு முன்பே கணக்குகளை கண்டறிந்து அவற்றை நீக்கியதாக வட்ஸ்அப் தெரிவித்துள்ளது. ஒரு சந்தர்ப்பத்தில், போலியான ஸ்கூட்டர் வாடகை பிரமிட் திட்டத்தை விளம்பரப்படுத்த, சமூக ஊடக இடுகைகளில் லைக்குகளுக்கு பணத்தை வழங்கிய கம்போடிய குற்றவியல் குழுவுடன் தொடர்புடைய மோசடிகளை முறியடிக்க வட்ஸ்அப்பின் உரிமையாளரான மெட்டா, ChatGPT-டெவலப்பரான OpenAI உடன் இணைந்து பணியாற்றியுள்ளது. மோசடி செய்பவர்கள் ChatGPT ஐப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட வழிமுறைகளை உருவாக்கியதாக வட்ஸ்அப் தெரிவித்துள்ளது. பொதுவாக, மோசடி செய்பவர்கள், உரையாடலை சமூக ஊடகங்கள் அல்லது தனியார் செய்தியிடல் செயலிகளுக்கு மாற்றுவதற்கு முன்பு, குறுஞ்செய்தி ஒன்றின் மூலம் சாத்தியமான இலக்குகளைத் தொடர்புகொள்வார்கள் என வட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இந்த மோசடிகள் பொதுவாக பணம் பெறுதல் அல்லது கிரிப்டோகரன்சி தளங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்துள்ளது. மக்களிடம் பில்லியன் கணக்கான டொலர்களை ஏமாற்றி பெற்றுக்கொள்ள மியன்மார், கம்போடியா மற்றும் தாய்லாந்து போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து மோசடி மையங்கள் செயல்படுவதாக அறியப்படுகிறது. இந்த மையங்கள் மக்களுக்கு வேலை த’ருவதாக கூறி அவர்களை மோசடிகளைச் செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றன. மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்கவும், தங்கள் கணக்குகள் திருடப்படாமல் பாதுகாக்க வட்ஸ்அப்பின் இரண்டு-படி சரிபார்ப்பு அம்சம் போன்ற மோசடி எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்தவும் பிராந்திய அதிகாரிகள் மக்களை வலியுறுத்தியுள்ளனர். எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரில், செய்தியிடல் பயன்பாடுகளில் பயனர்கள் பெறும் எந்தவொரு அசாதாரண கோரிக்கைகள் குறித்தும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸாரினால் கூறப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/221957
  17. தர்மஸ்தலா: நூற்றுக்கணக்கான மரணங்களும் நீடிக்கும் மர்மமும் -1979 முதல் நடந்தது என்ன? பிபிசி கள ஆய்வு படக்குறிப்பு, 2012-ம் ஆண்டு உயிரிழந்த சிறுமியின் சிலைக்கு அருகே அமர்ந்துள்ள அவரது தாய் கட்டுரை தகவல் சதிஷ் பிபிசி 5 ஆகஸ்ட் 2025 (இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை தரலாம்) ஜூலை 29ம் தேதி முதல் கர்நாடகாவின் தக்‌ஷிண கன்னட மாவட்டத்தில், நேத்ராவதி ஆற்றங்கரையோரத்தில் எலும்பு கூடுகள் புதையுண்டு கிடக்கின்றவா என்று தேடும் பணி நடைபெறுகிறது. காவல்துறை மேற்பார்வையில் ஆற்றங்கரையோரத்தில் உள்ள நிலப் பகுதிகள் தோண்டப்பட்டு வருகின்றன. அந்த இடத்தில் நூற்றுக்கணக்கான உடல்களை தான் புதைத்துள்ளதாக ஒருவர் கூறினார். அவர் தர்மஸ்தலா என்ற புனித தலத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றியதாகவும், ஒரு அதிகாரம் மிக்க குடும்பம் கூறியதன் அடிப்படையில் அதை செய்ததாகவும் தெரிவிக்கிறார். 1998 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் புதைக்கப்பட்ட அந்த உடல்களில் பலவும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் உடையது என்று ஜூலை 3ம் தேதி செய்தியை வெளிக்கொண்டு வந்த அந்த அடையாளம் தெரியாத தலித் நபர் தெரிவித்தார். படக்குறிப்பு, நேத்ராவதி ஆறு சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை இந்த விவகாரத்தை விசாரிக்க, ஜூலை 19ம் தேதி கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. புகார் அளித்தவர் அடையாளம் காட்டிய இடங்களில் தோண்டி ஆய்வு செய்யும் பணியை மேற்கொள்ள அந்த குழுவுக்கு உத்தரவிடப்பட்டது. ஆய்வுப் பணி முடிந்துள்ள எட்டு இடங்களில் ஒன்றில், எலும்பு கூடுகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் தடயவியல் பகுப்பாய்வுக்கு பிறகே, ஒரு முடிவுக்கு வர முடியும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். தர்மஸ்தலா கோயில் பொறுப்பாளரின் சகோதரர், மத தலத்தை நடத்தி வரும் குடும்பத்துக்கு எதிராக "அவதூறு" செய்திகளை வெளியிடுவதற்கு தடை உத்தரவு பெற்றிருந்தார். அந்த உத்தரவை கர்நாடக உயர்நீதிமன்றம் தற்போது நீக்கியுள்ளது. ஜூலை 20ம் தேதி, கோயில் அதிகாரிகள் "வெளிப்படையான மற்றும் நியாயமான" விசாரணைக்கு ஆதரவு அளிப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். "ஒரு சமூகத்தின் ஒழுக்கம் மற்றும் விழுமியங்களுக்கு உண்மையும் நம்பிக்கையுமே ஆதாரமாக விளங்குகின்றன. சிறப்பு புலனாய்வுக் குழு முழுமையான பாரபட்சமற்ற விசாரணையை நடத்தி உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம், நம்புகிறோம்" என்று அந்த அறிக்கை கூறியது. தர்மஸ்தலா மரணங்கள் குறித்த மர்மமும் கோபமும் சமீபத்திய நிகழ்வுகள் தர்மஸ்தலா மீது கவனத்தை ஈர்த்திருந்தாலும், இவ்வாறு நடப்பது முதல் முறை அல்ல. 2001 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 452 சந்தேகத்துக்கு இடமான மரணங்கள் தர்மஸ்தலா மற்றும் அருகில் உள்ள உஜ்ரே கிராமத்தில் நடைபெற்றதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு காவல்துறையினர் பதில் அளித்திருந்தனர். இவை தற்கொலைகளாகவோ, விபத்துகளாகவோ இருக்கலாம். மேலும், இந்த 452 மரணங்கள் தற்போது புதையுண்டிருக்கலாம் என்று முன்னாள் துப்புரவு ஊழியர் கூறும் உடல்களுடன் சம்பந்தப்பட்டவை அல்ல, ஏனென்றால் இவை காவல்துறையால் விசாரிக்கப்படாத வழக்குகளாகும். எனினும், இரண்டு கிராமங்களிலும் நடைபெற்ற சந்தேகத்துக்கு இடமான மரணங்களின் எண்ணிக்கை வழக்கத்துக்கு மாறானது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பிய நாகரிக சேவா அறக்கட்டளை எனும் தன்னார்வ அமைப்பு பிபிசியிடம் கூறியது. காவல்துறை பதிவு செய்த மரணங்களை விட மேலும் பல சந்தேகத்துக்கு இடமான மரணங்கள் குறித்த புகார்கள் கடந்த ஆண்டுகளில் எழுந்துள்ளன. படக்குறிப்பு, மகேஷ் ஷெட்டி தனது இல்லத்தில் உயிரிழந்தவரின் புகைப்படத்தை, தனது விருப்பமான தலைவர்களின் படத்துடன் வைத்துள்ளார். 1979-ல் பள்ளி ஆசிரியர் உயிருடன் எரிக்கப்பட்டதாக வழக்கு தர்மஸ்தலாவில் செல்வாக்கு மிக்கவர்களுக்கு எதிராக நீதிமன்றம் சென்றதற்காக 1979-ல் வேதவள்ளி என்ற பள்ளி ஆசிரியர் எரித்து கொல்லப்பட்டார் என்று அப்பகுதியில் உள்ள மகேஷ் ஷெட்டி திமரோடி மற்றும் கிரீஷ் மட்டேனவர் குற்றம் சாட்டுகின்றனர். தர்மஸ்தலா மற்றும் உஜ்ரேவில் உள்ள பலர் 1986-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தை நினைவு கூறுகின்றனர். கல்லூரியிலிருந்து காணாமல் போன 17 வயது மாணவி, 56 நாட்கள் கழித்து நேத்ராவதி ஆற்றங்கரையோரத்தில் நிர்வாணமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்று கூறுகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அந்த மாணவியின் தந்தை முடிவு செய்ததால் அவர் கொல்லப்பட்டார் என்று அவரது குடும்பமும் உள்ளூர் மக்களும் குற்றம் சாட்டுகின்றனர். காவல்துறையினர் முறையாக விசாரிக்கவில்லை என்று பிபிசியிடம் பேசும் போது அவர்கள் புகார் தெரிவித்தனர். "எனது சகோதரியின் உடல் கைகள் மற்றும் கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. எதிர்காலத்தில் விசாரணைக்கு உதவியாக இருக்கும் என்பதால் எங்கள் வழக்கப்படி எரிக்காமல் அவரது உடலை புதைத்துவிட்டோம். அவரது முன் வரிசை பற்கள் காணவில்லை என்று உடலை பார்த்த எனது அத்தை கூறினார். கிராமத்தில் உள்ள அதிகாரம் மிக்கவர்கள் எங்கள் தந்தையின் மீது கோபம் கொண்டிருந்தனர்" என்று அவரது சகோதரி கூறினார். இதே போன்ற மற்றொரு சம்பவம் குறித்த புகார் 2003-ம் ஆண்டு எழுந்தது. முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த மாணவி, தனது நண்பர்களை காண வந்த போது தர்மஸ்தலாவிலிருந்து காணாமல் போய்விட்டார். இது குறித்தான புகாரை கூட காவல்துறை ஏற்க மறுத்துவிட்டனர் என்று அவரது தாய் குற்றம் சாட்டுகிறார். கிராமத்தின் பெரியவர்களும் அவரை கடிந்துக் கொண்டதாக பிபிசியிடம் கூறுகிறார். "இது தான் எங்களுக்கு இருக்கும் ஒரே வேலையா? நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்" என்று அவரிடம் கூறப்பட்டதாக தெரிவிக்கிறார். "நான் கோயிலுக்கு வெளியில் அமர்ந்திருந்த போது என்னை யாரோ சிலர் கடத்தி சென்றனர். அவர்களிடம் எனது மகள் குறித்து கேட்ட போது, தலையின் பின் பக்கத்தில் அடித்து தாக்கினர். மூன்று மாதங்கள் கழித்து பெங்களூரூவில் ஒரு மருத்துவமனையில் நான் கண் விழித்தேன்" என்கிறார். மங்களூரூ திரும்பிய போது, அவரது வீடு எரிக்கப்பட்டது தெரிய வந்தது. "எனது துணி, ஆவணங்கள் மற்றும் எனது மகளின் துணி மற்றும் ஆவணங்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டிருந்தன" என்று கூறினார். தற்போது நடைபெற்று வரும் தோண்டும் பணிகளின் போது தனது மகளின் உடல் கிடைத்தால், அதை தன்னிடம் ஒப்படைக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். படக்குறிப்பு, 1986-ம் ஆண்டு உயிரிழந்த 17 வயது மாணவியின் உடலை, எதிர்கால விசாரணைக்காக குடும்ப வழக்கப்படி எரிக்காமல் புதைத்துள்ளார் அவரது தந்தை திருப்பத்தை ஏற்படுத்திய சிறுமி வழக்கு இந்த சம்பவங்களுக்கு இடையில் ஒரு சம்பவம் 2012-ம் ஆண்டு நடைபெற்றது. 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் காயங்கள் நிறைந்த ஆடைகளற்ற ஒரு சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. "அவளது உடலை பார்த்தால், அவள் பல பேரால் பாலியல் துன்புறுத்துலுக்கு ஆளானவள் என்று யார் வேண்டுமானாலும் கூறிவிட முடியும்" என்கிறார் பிபிசியிடம் பேசிய அந்த சிறுமியின் தாய். சிறுமியின் குடும்பத்தினரும் உள்ளூர் மக்களும் காவல்துறை விசாரணை முறையாக நடத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர். உள்ளூர் மக்களும் உரிமை கோரும் அமைப்புகளும் நீதி கேட்க தொடங்கிய போது கர்நாடகா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. சந்தோஷ் ராவ் என்பவரை குற்றம் சாட்டப்பட்டவர் என்று காவல்துறையினர் கொண்டு வந்து நிறுத்தினர். சிறுமியின் குடும்பத்தினர் புகாரில் குறிப்பிட்ட தர்மஸ்தலாவில் செல்வாக்கு மிக்க அந்த 4 பேரும் விடுவிக்கப்பட்டனர் ஒன்பது ஆண்டு காலம் சிறையில் கழித்த சந்தோஷ் ராவை சிறப்பு சி பி ஐ நீதிமன்றம் விடுவித்தது. அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் கூறியது. மேற்கூறிய வழக்குகளில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறையினரின் பதிலை கேட்க பிபிசி தொடர்ந்து முயன்றது. ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை. படக்குறிப்பு, 2012-ம் ஆண்டு உயிரிழந்த சிறுமிக்கு வைக்கப்பட்டுள்ள சிலை. தர்மஸ்தலாவின் "செல்வாக்கு மிக்கவர்கள்" மேற்குறிப்பிட்டுள்ள வழக்குகள் மற்றும் தலித் நபர் எழுப்பிய குற்றச்சாட்டுகள் அனைத்திலும் பொதுவாக இருப்பது தர்மஸ்தலா கோயிலை நடத்தும் குடும்பம் தான். அவர்களை நோக்கியே புகார் சொல்லும் கைகள் நீள்கின்றன. "குற்றவாளி யார் என்று அனைவருக்கும் தெரியும்" என்று 2012-ம் ஆண்டு சடலமாக கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் தாத்தா கூறுகிறார். "அவர்கள் கொலை செய்து விட்டு, காவல்துறை குறித்த எந்த பயமும் இன்றி, உடல்களை சாலைக்கு அருகில் புதைத்துவிடுவார்கள். கழிவறை வசதி இல்லாததால் அந்த காலத்தில் நாங்கள் காடுகளுக்கு செல்வோம். அப்போது காட்டுப் பன்றிகளால் தோண்டி எடுக்கப்பட்டிருக்கும் உடல்களை பார்ப்போம்" என்றார். இதே கருத்தை நாகரிக சேவா அறக்கட்டளையின் நிர்வாகி சோமநாதாவும் தெரிவிக்கிறார். "இங்கு ஒரு கும்பல் உள்ளது. 'டி' (D) கும்பல் என்றழைக்கப்படும் அவர்களுக்கு தர்மஸ்தலாவில் உள்ள செல்வாக்குமிக்கவர்களின் ஆதரவு உள்ளது" என்று அவர் பிபிசியிடம் கூறினார். உயிருடன் ஒருவர் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து வழக்கை நடத்தி வரும் மகேஷ் ஷெட்டி திமரொடி, கடந்த 13 ஆண்டுகளில் தனக்கு எதிராக 25 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறுகிறார். தர்மஸ்தலாவில் நடைபெற்றதாக புகார் எழுப்பப்படும் குற்றங்கள் குறித்து, " நான் எனது சிறு வயதிலிருந்து இதை பார்த்து வருகிறேன். காடுகளில் அழுகிய உடல்கள் எத்தனை என்று தெரியுமா? சாலைகளில் புதைக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை தெரியுமா?" என்கிறார் அவர். இந்த சட்டப் போராட்டத்தில் அவருக்கு துணை நிற்கும் முன்னாள் காவல் அதிகாரியும் முன்னாள் பாஜக தலைவருமான கிரிஷ் மட்டேனவர், நூற்றுக்கணக்கான பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொலை வழக்குகள் பதிவு செய்யப்படவே இல்லை என்று குற்றம் சாட்டுகிறார். "குற்றவாளிகள் மதம் மற்றும் கடவுள் என்ற போர்வையை பயன்படுத்தி வருகின்றனர்" என்று அவர் பிபிசியிடம் கூறினார். சமீப காலங்களில் எழுப்பப்படும் புகார்கள் சமீப காலங்களிலும் செயற்பாட்டாளர்களும், பத்திரிகையாளர்களும் கோயிலை நடத்தி வரும் குடும்பம் பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். மாணவர் தலைவர் தனுஷ் ஷெட்டி, தனது சமூக ஊடகப் பக்கத்தில் தர்மஸ்தலா குடும்பம் குறித்து தான் எழுத ஆரம்பித்த பிறகு, "உனக்கு விரைவில் ஒரு விபத்து நிகழப் போகிறது" என்று தனது செல்போனில் குறுஞ்செய்தி வந்ததாக தெரிவித்தார். சுமார் இரண்டு மாதங்கள் முன்பு, அவர் ஆட்டோ ஒன்றினால் மோதப்பட்டதாக கூறுகிறார். அதன் பின், "நான் உனது விபத்தை நேரில் பார்த்தேன். அது கடவுளின் ஆசை" என்று மற்றொரு குறுஞ்செய்தி வந்ததாகவும் கூறுகிறார். காவல்துறை முதலில் புகாரை பெற மறுத்ததாகவும், காவல் கண்காணிப்பாளரை அணுகிய பிறகே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்று ஷெட்டி மேலும் கூறுகிறார். "எனினும் விசாரணைக்கு எதிராக நீதிமன்றத்தில் தடையாணை பெறப்பட்டது. தர்மஸ்தலாவில் செல்வாக்கு மிக்கவர்களை எதிர்த்து யார் போராடினாலும் அவர்கள் குறிவைக்கப்படுவார்கள்" என்று அவர் கூறினார். கர்நாடகாவில் உள்ள பிரபல யூடியூபர் எம் டி சமீர், தர்மஸ்தலாவில் உள்ள செல்வாக்குமிக்கவர்களுக்கு எதிராக பேசியதற்காக தானும் குறிவைக்கப்பட்டதாக கூறுகிறார். 2012ம் ஆண்டு சிறுமியின் மரணத்துக்கு பிறகு இந்த விவகாரம் குறித்த கவனத்தை ஈர்ப்பதற்கு சமீர் போன்ற உள்ளூர் சமூக ஊடகவியலாளர்கள் காரணமாக இருந்தனர். தற்போது மூன்று வழக்குகளை எதிர்கொண்டு வருவதாகவும் யூ டியூப் சேனலிலிருந்து உள்ளடகத்தை நீக்குமாறு பல சட்ட உத்தரவுகள் வந்துள்ளதாகவும் சமீர் பிபிசியிடம் தெரிவித்தார் புகார் கொடுத்த முன்னாள் துப்புரவு ஊழியர் தனது வாக்குமூலத்தில், "பெயர்களை சொல்லும் முன் மாயமாவது அல்லது கொல்லப்படுவது" குறித்த கவலைகளை வெளிப்படுத்தியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கான பதிலை பெற தர்மஸ்தலா கோயில் பிரதிநிதிகளை பிபிசி அவர்களை தொடர்பு கொண்ட முயன்றது. ஆனால் அவர்களை தொடர்பு கொண்டு பதில் பெற இயலவில்லை. படக்குறிப்பு, நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படும் புகார் அளித்த முன்னாள் துப்புரவு ஊழியர் கர்நாடக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு கர்நாடகாவில் செல்வாக்குள்ள அரசியல் கட்சிகள் – பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்றும் கோயிலை நடத்தும் குடும்பத்தினரை பாதுகாப்பதே அவர்கள் தைரியமாக செயல்பட காரணம் என்று மகேஷ் ஷெட்டி திமரொடி கூறுகிறார். "மாநில மற்றும் தேசிய அளவிலான தலைவர்கள் அவர்களை வந்து பார்க்கின்றனர்" என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் மூன்று கட்சிகளும் இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கின்றன. தனது பெயரை குறிப்பிட விரும்பாத பாஜக செய்தித் தொடர்பாளர் ஒருவர், "சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை முடிந்து, விசாரணை அறிக்கை பொது வெளிக்கு வரட்டும்" என்றார். கர்நாடக காங்கிரஸ் ஊடக கமிட்டியின் துணைத் தலைவர் சத்ய பிரகாஷ், காங்கிரஸ் தலைமையிலான அரசே சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது என்று சுட்டிக்காட்டினார். "குற்றவாளிகள் எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும் அவர்களை கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டியது காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு. அதோடு, உண்மையை பேசுபவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதும் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு" என்றார். அதே நேரம் மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த அறிவழகன் தங்கள் கட்சிக்கும் கோயிலை நடத்தும் குடும்பத்தினருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறினார். "சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை முடியும் வரை காத்திருப்போம்" என்றார். முன்னாள் துப்புரவு ஊழியரின் புகாரை எடுத்து வாதாடி வரும் வழக்கறிஞர் கே வி தனுஞ்சயா இந்த விவகாரத்தின் சமீபத்திய நிகழ்வுகளை தொகுத்து பேசினார். "தனது கட்சிக்காரரின் புகார்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்வது காவல்துறையினரின் வேலை" என்று பிபிசியிடம் கூறினார். "அவரது குற்றச்சாட்டுகள் கடந்த கால புகார்கள் அல்லது நிலுவையில் உள்ள விசாரணைகளுடன் எந்த விதத்திலும் சம்பந்தப்படவில்லை. இது முற்றிலும் புதிய புகார். எனக்கு தெரிந்த வரையில் இது இந்திய நீதித்துறையில் ஒரு அரிய வழக்காகும்" என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy98d9vl511o
  18. Published By: VISHNU 06 AUG, 2025 | 01:32 AM பௌதீக ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் சிதைந்துபோன அரச கட்டமைப்பு தொடர்பில் சுயவிமர்சனம் செய்து, நவீன அரச சேவையை உருவாக்க அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதிஒதுக்கீடு செய்யப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அரச சேவையை நவீனத்துவ கலாச்சாரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், அதைப் பாதுகாக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டார். அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், அதன் பௌதீக வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் சிதைந்துபோன அரச சேவையை நவீனமயமாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். அலரி மாளிகையில் செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் (SASA) 41 ஆவது வருடாந்த மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 41 ஆவது வருடாந்த மாநாடு ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தலைமையில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது. இலங்கை நிர்வாக சேவை சங்கம் என்பது, அரச சேவையின் முதன்மையான நாடளாவிய சேவையான இலங்கை நிர்வாக சேவையின் அதிகாரிகளைக் கொண்ட ஒரு தொழில்சார் அமைப்பாகும். இம்முறை அதன் வருடாந்த மாநாடு 05 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அரச சேவையை வலுப்படுத்தும் வகையில், கடந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட சம்பள உயர்வு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு அடுத்த ஆண்டு சம்பள உயர்வு வழங்குவதற்காக ரூ. 11,000 கோடி ஒதுக்கப்படும் என்றும், 2027 ஆம் ஆண்டுக்கான அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக ரூ. 11,000 கோடி ஒதுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி விளக்கினார். கவர்ச்சிகரமான அரச சேவையை உருவாக்குவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும், இதற்காக அரச நிர்வாக அதிகாரிகளின் அர்ப்பணிப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கூறினார். தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு அரச சேவையிலுள்ள சிறுகுழுவினால் கொடுக்கல் வாங்கலாக மாற்றப்பட்டுள்ளது என்றும், சமூக விழுமியங்களை விட நிதி மதிப்புகளுக்கு முன்னுரிமை அளித்த அரச சேவை அந்த சூழ்நிலையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். குடிமக்கள் மீதான அரச அதிகாரிகளின் பொறுப்பை சுற்றறிக்கைகள் அல்லது கட்டளைகளால் கட்டுப்படுத்த முடியாது என்றும், சமூக மதிப்புகள் மற்றும் சமூக விழுமியங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அதிகாரிகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கூறிய ஜனாதிபதி, தமக்குக் கிடைத்த பொறுப்பை மற்றவர்களை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தாமல், சிறந்த அரச சேவையை கட்டியெழுப்புவதற்கும், மக்களுக்கு உயர்தர வாழ்க்கையை வழங்குவதற்கும் பயன்படுத்துவது அரசு அதிகாரிகளின் பொறுப்பாகும் என்று சுட்டிக்காட்டினார். அரச சேவை இன்று ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது என்றும், நேரம் எடுத்து தொடர்ந்து முன்னேற முடியும் என்றும், இல்லையெனில், நமது பங்கை சுயமதிப்பீடு செய்து, குடிமக்களின் தேவைகளின் அடிப்படையில் திறமையான சேவையை வழங்குவதற்கான பாதையைத் தேர்வு செய்ய வேண்டிய காலம் கனிந்துள்ளது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறினார். புதிய மாற்றத்திற்குத் தேவையான புதிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், குடிமக்கள் விரும்பும் நாட்டை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், சிதைவடைந்த அரசை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முழு உரை: இங்குள்ளவர்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் நாங்கள் சந்தித்துள்ளோம். எங்களுடன் படித்தவர்கள் உள்ளனர். பல்கலைக்கழகத்தில் எங்களுடன் பல்வேறு சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் உள்ளனர். எனவே, பல்வேறு துறைகளில் பணிபுரியும் போது பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்துள்ளோம். இருப்பினும், அந்த அனைத்து சந்திப்புகளையும் விட 'இந்த சந்திப்பு' மிகவும் முக்கியமானது. ஏனென்றால், நமது நாட்டின் அரச சேவையில் முன்னணி சேவையான இலங்கை நிர்வாக சேவையின் இந்த வருடாந்த மாநாட்டில் பங்கேற்கும் நீங்கள், நமது அரச கட்டமைப்பைப் பராமரிக்க அதிக முயற்சி மற்றும் பொறுப்பைக் கொண்ட ஒரு குழு. எனவே, உங்களுடன் இந்த வகையான கலந்துரையாடலை நடத்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆரம்பத்தில், இலங்கை நிர்வாக சேவையின் இதுவரை வளர்ந்த வரலாறு குறித்த ஒரு காணொளி காட்சிப்படுத்தப்பட்டது. எங்கள் நிர்வாக சேவைக்கு நீண்ட வரலாறு உண்டு. சுதந்திரத்திற்குப் பிறகும், எங்கள் அரசியல் துறைக்கும் நீண்ட வரலாறு உண்டு. எனவே, எங்கள் அரச சேவையும் அரசியல் இயந்திரமும் இணைந்து இந்த நாட்டை நீண்ட காலமாக வழிநடத்தி வருகின்றன. இருப்பினும், எங்கள் நாட்டின் தற்போதைய நிலைமையைப் பார்த்தால், அரசியல் அதிகாரத்திற்கும் அதனுடன் தொடர்புடைய அரச கட்டமைப்பிற்கும் எங்கள் நாடு இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? நாங்கள் பல்வேறு சட்டங்களை இயற்றியுள்ளோம். கட்டளைகள் இயற்றப்பட்டுள்ளன. பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பல்வேறு பதவிகள் மாற்றப்பட்டுள்ளன. ஆனால், நாம் திரும்பிப் பார்த்தால், நாம் அனைவரும் நம் மனசாட்சியுடன் நம்மை நாமே கேட்டுக்கொண்டால், இந்த அரச சேவையின் நிலையில் திருப்தி அடைய முடியுமா? நம்மில் யாரும் இதில் திருப்தி அடைய முடியாது என்று நினைக்கிறேன். நமது சொந்த அளவீடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, சாதாரண குடிமக்கள் திருப்தி அடைகிறார்களா என்று கேட்போம். அவர்கள் திருப்தி அடையவில்லை. எனவே, நாம் ஒரு மிக முக்கியமான கட்டத்தை அடைந்த நேரத்தில் உங்களின் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்த சூழ்நிலையில் நாம் தேர்ந்தெடுக்க இரண்டு பாதைகள் உள்ளன. பழைய முறைப்படி உங்கள் நேரத்தை செலவழித்து, உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரத்தை அந்த சமயத்திற்கு ஏற்ப மாத்திரம் நிறைவேற்றுவதற்கான பழைய முறையை தெரிவு செய்யலாம். அதுதான் நம் நாடு நீண்ட காலமாகச் சென்று வரும் பாதை. மிகவும் எளிதான பாதை. ஆனால், இன்னொரு பாதை உள்ளது. இந்த அரசை உருவாக்குவதற்கும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் நமது பங்கு எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை சுய மதிப்பீடு செய்வதன் மூலம் இதை மாற்றுவதற்கான உறுதியுடன் அனைவரும் செயல்படுவது அது எளிதான பாதை அல்ல. ஏனெனில், பொதுவாக, மக்களின் ஒரு பண்பு உள்ளது. மக்கள் பழக்கங்களுக்கு அடிமையாகிறார்கள். மக்கள் பரிசோதனைகள் செய்து பார்க்க பயப்படுகிறார்கள். நமக்கு அன்றாட நடவடிக்கைகள் இருந்தால், நாம் தினமும் நம் கடமைகளைச் செய்தால், நாம் பழக்கங்களுக்கு அடிமையாகி அந்தக் கடமைகளைச் செய்ய முடியும். ஆனால், நாம் புதிய சோதனைகளைச் செய்தால். புதிய மாற்றங்களுக்கு நாம் தயாராக இருக்கிறோம். ஆனால், பழக்கத்தின் சக்தி அதற்குத் தடை போடும். ஆனால், இன்று மனித நாகரிகம் அடைந்துள்ள சாதனைகள் மற்றும் முன்னேற்றத்தை நாம் திரும்பிப் பார்த்தால், மனித நாகரிகம் அடைந்துள்ள சாதனைகளுக்குப் பின்னால் உள்ள முக்கிய ரகசியம் பரிசோதனைகளுக்கு பயப்படாமல் இருப்பதுதான். புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றிக் கொள்வது மிகவும் முக்கியம். ஆம், நீங்கள் சூழ்நிலைக்கேற்ப மாற்றிக் கொள்ளவில்லை என்றால், சமூகத்தால் நிராகரிக்கப்படுவீர்கள். எனவே, புதிய மாற்றங்களுக்கு ஏற்ப உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுமாறு நான் முதலில் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியாத ஒரு உயிரினம் அல்லது கோட்பாடு இல்லை. இன்றேல் மிக விரைவாக அழிக்கப்படும். எனவே, புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப உங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது முதல் வேண்டுகோள். இருப்பினும், சிதைவடைந்த அரசில் இருந்தே உங்களை மாற்றிக் கொள்ளுமாறு நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நமது அரச தேகம் அழிந்துவிட்டது. நமது அரசு பௌதிக மற்றும் ஆன்மீகம் இரண்டும் அழிந்துவிட்டது. இதுதான் யதார்த்தம். நமக்கு முன்னால் உள்ள கடுமையான உண்மையைப் பற்றி ஆராயாமல் விட்டு விட்டால்,அந்த கல்லறைக்கு முன்னால் கடந்து செல்லும்போது நாம் வேறுபக்கம் பார்த்துக் கொண்டு சென்றால், இந்த மாற்றத்தை நாம் செய்ய முடியாது. எனவே, முதலில், நமக்கு முன்னால் உள்ள கடினமான யதார்த்தத்தின் தன்மையை, உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் வெளிப்படையாகப் பேச வேண்டும். அதை விவாத மேசையில் முன்வைக்க வேண்டும். நம் முன் உள்ள யதார்த்தம் என்ன?இன்று இங்குள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ வாகனங்கள் 15-16 ஆண்டுகளுக்கும் மேலான பழைய மற்றும் சிதைவடைந்த வாகனங்கள் என்பதை நான் அறிவேன். உங்கள் மேசையில் உள்ள கணினி பழைய ஒன்றாகும். எனவே,பௌதீக ரீதியான அரச சேவை சேதமடைந்துள்ளது. எனவே, ஒரு சேதமடைந்த அரச சேவையிலிருந்து ஒரு நவீன அரசை உருவாக்க முடியாது. எனவே, இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், அரச சேவையை நவீனமயமாக்க தேவையான வசதிகள் மற்றும் ஒத்துழைப்பை வழங்கத் தேவையான நிதி ஒதுக்கீட்டிற்கு நாங்கள் விசேட கவனம் செலுத்துகிறோம். டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையை நோக்கி நாம் மிக விரைவாக செல்ல வேண்டும். அதுதான் நமது அடுத்த கட்டத்தில் மிக முக்கியமான மாற்றம். இருப்பினும், பழக்கதோசம் அந்த மாற்றத்தைத் தடுக்கிறது. சில நிறுவனங்களில் மென்பொருள் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை நான் அறிவேன். அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அது சிறந்தது. மாவட்ட செயலாளர்களுடன் நடந்த ஒரு கலந்துரையாடலின் போது, தனது ஒரு அலுவலகத்தின் டிஜிட்டல் மயமாக்கல் குறித்து ஒரு மாவட்ட செயலாளர் எனக்கு தெளிவுபடுத்தினார். அதற்குக் காரணம், அந்த அலுவலகத்தில் டிஜிட்டல் மயமாக்கலை விரும்பும் அதிகாரிகள் இருப்பதுதான். அப்போது அது அங்குள்ளவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் நடந்துள்ளதுடன், பொதுவான மாற்றமாக அல்ல. பழக்க வழக்கத்தின் அதிகாரம் இதற்கு சவால் விடுகிறது. ஆனால் எமது அரச சேவையை நவீனமயப்படுத்த வேண்டும் என்ற பொதுவான தேவை எமக்கு உள்ளது. இதன்போது, அண்மைய வரலாற்றில் மிக அதிக அடிப்படை சம்பள உயர்வை நாம் உங்களுக்கு வழங்கினோம். இந்த சம்பள உயர்வுக்கு இந்த ஆண்டு 11,000 கோடி ரூபா தேவைப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில் மீண்டும் சம்பள உயர்வு கிடைக்கும். அதற்கும் 11,000 கோடி தேவைப்படுகிறது. 2027 சம்பள உயர்வுக்கும் 11,000 கோடி தேவைப்படுகிறது. எனவே, இந்த உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்குவதற்கு ரூபா 33,000 கோடி செலவினச் சுமையை நாம் சுமக்க வேண்டியுள்ளது. இது வழங்கப்படும் சம்பளத்திற்கு கூடுதலானதாகும். 2027 வரவு செலவுத்திட்டத்தில் இதை நாம் ஒதுக்க வேண்டும். இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 11,000 கோடி ஒதுக்கப்பட்டது. அடுத்த ஆண்டுவரவு செலவுத்திட்டத்தில் அது 22,000 கோடியாக மாறும். 2027 ஆம் ஆண்டில் இந்த மொத்த சம்பள உயர்வைச் செலுத்த, ரூபா 33,000 கோடி செலவினத்தை ஏற்க வேண்டியிருக்கும். நமது அரச சேவையை ஒரு கவர்ச்சிகரமான இடமாக மாற்ற, நியாயமான சம்பள அளவை நிறுவ வேண்டும் என்பதை நாம் அறிவோம். நாம் அதைச் செய்துள்ளோம். 80% சம்பள உயர்வை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆனால், அரச கட்டமைப்பில் சில இடங்களில் அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை கண்டுகொள்வதில்லை. லொக்கரில் பணம் வைத்திருந்த அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். இவை மனப்பான்மை ரீதியிலான பிரச்சினை. கைதிகளிடம் கைவிலங்குகளும் அவற்றின் சாவிகளும் உள்ளன. இது என்ன பிரச்சினை? தமது பொறுப்பும் சமூக மதிப்பும் நிதி மதிப்பாக மாற்றப்பட்டுள்ளது. மனிதகுலம் முழுவதும் பனிக்கட்டி நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டுவிட்டது. அவை சுற்றறிக்கைகள், கட்டளைகள் அல்லது அரசியலமைப்புச் சட்டங்கள் மூலம் உருவாக்கக்கூடிய ஒன்றல்ல. பிரஜைகளாக தமது பொறுப்புகள் மற்றும் சமூகக் கடமைகளாக புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஒரு நவீன அரச சேவையை உருவாக்க வேண்டுமென்றால், மேலே நான் குறிப்பிட்டுள்ள குறிக்கோள்களைப் போலவே, ஒரு புதிய மனப்பான்மையுடன் கூடிய அரச சேவையை உருவாக்க வேண்டும். நமது அரச சேவைக்கு ஒரு புதிய பெறுமதிகள் மற்றும் நெறிமுறைகள் தேவை. மேலும் பெறுமதிகளின் உண்மையான அர்த்தத்தை நாம் அடையாளம் காண வேண்டும். பெறுமதிகள் என்பது மிகை-நுகர்வு அல்லது மற்றவர்களை நசுக்கி உயர்ந்தவர்களாக மாறுவது அல்ல.இந்த தவறான பெறுமதிகள் மற்றும் மதிப்பு கட்டமைப்புகளுக்கு பதிலாக சமூகத்திற்கு புதிய பெறுமதிகளின் மதிப்பு கட்டமைப்பு தேவைப்படுகிறது. அதற்கு மென்மை, இரக்கம், தனக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புக்கு பொறுப்புக்கூறல் தேவைப்படுகிறது. நாம் அனைவரும் பிரஜைகள். மேலும் நம் ஒவ்வொருவருக்கும் நமது துறைகளில் பொறுப்புகள் உள்ளன. அந்தப் பொறுப்புகளில் எதுவும் மற்றவர்களை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படக்கூடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம் நாட்டு குடிமக்கள் நம் ஒவ்வொருவரையும் கெஞ்சும் கண்களால் பார்க்கிறார்கள். இந்த சூழ்நிலையிலிருந்து நம் நாட்டையும் குடிமக்களையும் விடுவிப்பீர்களா என்று எம்மை கெஞ்சும் கண்களால் பார்க்கிறார்கள். இந்த நேரத்தில் அதைத் தவிர்க்க எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நீங்களும் நாங்களும் அந்த மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றால், நம் நாட்டின் குடிமக்கள் ஒரு புதிய உலகத்தையும் நல்ல விடயங்களையும் கனவு கூட காண மாட்டார்கள். எனவே, இந்த நல்ல விடயங்களை உருவாக்குவதில் உங்களுக்கும் எனக்கும் பங்கு உண்டு. சில விசாரணைகள் குறித்து சில விமர்சனங்களும் கருத்துகளும் உள்ளன. யாரும் அதைப் பற்றி பயப்படத் தேவையில்லை. அதிகாரிகளின் கடந்த கால நடைமுறைகள் உள்ளன. ஒருவரையொருவர் பற்றி கேள்விப்பட்ட விடயங்கள் உள்ளன. ஒருவரையொருவர் பற்றி அறியப்பட்ட விடயங்கள் உள்ளன. இருப்பினும், ஒவ்வொரு அதிகாரி பற்றிய பழைய கருத்துகளின்படி நாங்கள் உங்களைப் பார்க்கவில்லை. அவை எங்களுக்கு தேவையில்லை. ஆனால், உங்களுக்குப் பொறுப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து நீங்கள் நடந்துகொண்ட விதத்தை வைத்து நாங்கள் உங்களை அளவிடுகிறோம். கடந்த கால நிகழ்வுகள் விசாரிக்கப்படுகின்றன. நீங்கள் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான கையொப்பங்களை இடுகிறீர்கள். சமூக மதிப்பை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட இந்த கையொப்பம் நிதி ஆதாயத்திற்காக பயன்படுத்தப்பட்டால், நாங்கள் சட்டத்தை அமுல்படுத்துவோம். இதை அரச சேவையை கட்டுப்படுத்துவதாகவோ அல்லது அரச அதிகாரிகளை மிரட்டுவதாகவோ கருத முடியாது. எங்களுக்கு அத்தகைய விருப்பம் இல்லை. சமீபத்தில் ஒரு முன்னாள் ஜனாதிபதி, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவை இப்படியே தொடர விட்டுவிடுங்கள். எதுவும் கூறவேண்டாம் என்று கூறியதை நான் பார்த்தேன். மக்கள் அதன் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அரசாங்கம் அங்குதான் விழும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்தச் சட்டம் அமுல்படுத்தப்படும்போது, அவர் கோபப்படுவார், இவர் கோபப்படுவார், அரசாங்கம் வீழ்ந்துவிடும் என்று நினைக்கிறார்கள். அதன் அர்த்தம் என்ன? சட்டத்தின் ஆட்சி மீண்டும் நிலைநாட்டப்படுகிறது. அரச சேவைக்குத் தேவையான எல்லைகளை மீண்டும் நிறுவுவது ஒரு அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கான காரணமாகுமா என்பதை நான் அறிய விரும்புகிறேன். இந்த நாட்டில் அரச சேவையில் ஒரு புதிய கலாசாரத்தை நாமே கொண்டு வர வேண்டும். குடிமக்களுக்கு திருப்திகரமான அரச சேவையை வழங்க வேண்டும். புதன்கிழமை உங்கள் அலுவலகத்திற்கு வரும் மக்களில் எத்தனை பேர் மீண்டும் மீண்டும் வருகிறார்கள் என்பதை நீங்கள் தேடிப்பாருங்கள். ஏன் அவ்வாறு நிகழ்ந்துள்ளது? எனவே, எமது அரச சேவையை ஒரு புதிய கலாசாரமாக மாற்ற நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். அதற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவோம். அதற்காக எடுக்கப்படும் எந்தவொரு முடிவிற்கும் நாங்கள் பாதுகாவலர்களாக மாறுவோம். நாங்கள் வேட்டைக்காரர்கள் அல்ல, ஆனால் எங்கள் நாட்டை மீட்டெடுக்கும் முயற்சி எங்களிடம் உள்ளது. இது யாரும் பயப்பட வேண்டிய முயற்சி அல்ல, மாறாக ஆசிர்வதிக்கப்பட வேண்டிய முயற்சி. நீங்கள் அதில் எங்களுடன் இணைவீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த நாட்டை ஒரு புதிய மாற்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற தேவையும் சவாலும் எமக்கு உள்ளது. இந்த நாடு தொடர்பில் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க முடியுமா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொண்டால், இந்த நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை வழங்க வேண்டும் என்ற விருப்பம் நிறைந்த உள்ளம் உங்களிடம் உள்ளது. ஆனால், நமது நல்லெண்ணத்திற்கும் நமது பணிக்கும் இடையே ஒரு முரண்பாடு உள்ளது. உங்கள் உண்மையான மனசாட்சியின்படி செயல்படத் தொடங்குங்கள். உங்கள் உண்மையான மனசாட்சியைக் கேட்கத் தொடங்குங்கள். அரசியல் அதிகாரமும் அரச துறையும் ஒன்றுபட்ட நோக்கத்துடன் செயல்பட்டால் மட்டுமே இந்த நல்ல செயலைச் செய்ய முடியும். ஒரு அரசியல் அதிகாரமாக எங்களுக்கும், ஒரு அரச ஊழியராக உங்களுக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது. நாங்கள் அதை ஒருபோதும் மாற்ற மாட்டோம். நாம் ஒரே நோக்கத்திற்காக எங்கள் கடமைகளைச் செய்வோம். பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுவான இலக்கைப் பற்றி கலந்துரையாடிய குழுக்கள் உள்ளன. நண்பர்களாகச் செயல்பட்ட குழுக்கள் உள்ளன. அனைவரும் ஒன்றிணைந்து இந்த மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். ஒரு வலுவான அரச சேவையை உருவாக்கவும், மக்களுக்கு சிறந்த வாழ்க்கைக்குத் தேவையான வசதிகளை வழங்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று அழைப்பு விடுப்பதுடன், இந்த மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய: சில காலமாக, நமது நாட்டில் அரச நிர்வாக சேவையின் மதிப்பும் கண்ணியமும் ஓரளவு குறைந்துள்ளது. அரசியல் தலையீடும் இதற்கு ஒரு காரணமாகும். இதன் விளைவாக, அரச நிர்வாக சேவையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைந்துள்ளது. நீண்ட வரலாற்றைக் கொண்ட அரச நிர்வாக சேவையில் நம்பிக்கையை எவ்வாறு ஏற்படுத்துவது என்பதை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒரு அரசியல் அதிகாரமாக, மக்கள் சார்ந்த அரசாங்கத்தை நிறுவ நாங்கள் தலையிடுகிறோம். நீங்கள் செய்யும் மிக முக்கியமான கடமையை மக்கள் சார்ந்த சேவையாக மாற்ற அரசியல் அதிகாரம் ஊடாக முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. அந்த மாற்றத்தை ஏற்படுத்த உங்கள் பங்களிப்பு தேவை. அரச சேவையில் தவறு செய்ய நாங்கள் உங்களிடம் கேட்கவில்லை. அதை நாங்கள் அங்கீகரிக்கவும் இல்லை. அந்த நம்பிக்கையில், இந்த நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் உங்கள் சேவையில் செயல்படுமாறு நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம். அந்த நம்பிக்கை, நாட்டிற்காக உருவாக்கப்படும் கொள்கைகளை செயல்படுத்த உங்களுக்கு பலத்தை அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய: அரச சேவையில் டிஜிட்டல் மயமாக்கலின் சக்தியுடன், நாட்டு மக்கள் திறமையான சேவையைப் பெற முடியும். சர்வதேச திறன்களைக் கொண்ட நாடாக முன்னேற, அரச நிர்வாக சேவைக்கு டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் அவசியம். இலங்கை கிரிக்கெட், இலங்கை வரலாறு போன்றவை உலகில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளன போன்று, டிஜிட்டல் மயமாக்கல் மூலம், அரச சேவையையும் உலகிற்கு எடுத்துச் செல்ல முடியும். எனவே, இந்த வாய்ப்பைத் தவறவிடக்கூடாது. இதற்கு முன்னர் இருந்த பொருளாதார நெருக்கடியை குறுகிய காலத்தில் வெற்றி கொள்ள அரச நிர்வாக சேவை வழங்கிய சேவை மிகவும் முக்கியமானது. நெருக்கடியின் போது இலங்கையைப் பார்த்த சர்வதேச சமூகம், இவ்வளவு விரைவாக நெருக்கடியைச் சமாளிக்க முடியும் என்று நினைக்கவில்லை. ஆனால் இலங்கை அரச நிர்வாக சேவை அந்த பாரிய பொறுப்பை ஏற்றுக்கொண்டது. அதனுடன் டிஜிட்டல் மயமாக்கலும் சேர்க்கப்படும்போது, இலங்கையை உலகளவில் முன்னேற்றுவது கடினமான விடயம் அல்ல.டிஜிட்டல் மயமாக்கல் உலகத்தரம் வாய்ந்த நிர்வாக அமைப்பை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. எனவே, இந்த வாய்ப்பைத் தவறவிடக்கூடாது. இந்த நிகழ்வில், இலங்கை நிர்வாக சேவை சங்கத்தால் தயாரிக்கப்பட்ட ஆராய்ச்சி சஞ்சிகையொன்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கி வைக்கப்பட்டது. பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன உள்ளிட்ட அமைச்சர்கள், ஆளுநர்கள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜெயசுந்தர, அமைச்சுகளின் செயலாளர்கள், இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் அதன் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/221923
  19. முகமது சிராஜ் தனது தவறையே மறுநாள் சாதிப்பதற்கான தூண்டுகோலாக மாற்றியது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் தினேஷ் குமார்.எஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் 1,113 பந்துகள்… சிராஜ் தொடர்பாக எழுதப்படும் எல்லா கட்டுரைகளிலும் தவறாமல் இடம்பெறும் ஒரு புள்ளிவிபரம் இதுவாகத்தான் இருக்கும். பொதுவாக ஒரு வேகப்பந்து வீச்சாளரின் பங்களிப்பை மதிப்பீடு செய்ய சராசரி, ஸ்ட்ரைக் ரேட், எகானமி ரேட் போன்றவற்றைதான் விமர்சகர்களும் ரசிகர்களும் முன்வைப்பார்கள். ஆனால், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக, ஒரு வேகப்பந்து வீச்சாளர் வீசிய பந்துகளின் எண்ணிக்கை பேசுபொருளாக மாறியுள்ளது. 'பொதிகாளை' என்று வர்ணிக்கும் அளவுக்கு, தொடர்ந்து 5 டெஸ்ட்கள் ஓய்வின்றி விளையாடி இந்திய அணிக்கு வரலாற்று வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார் முகமது சிராஜ். பும்ராவின் நிழலில் விளையாடுவதாலேயெ சிராஜின் சாதனைகளுக்கான நியாயமான அங்கீகாரம் கூட கிடைப்பதில்லை. சிராஜ் என்றைக்கும் பும்ராவின் இடத்தை இட்டு நிரப்பிவிட முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அதேயளவு உண்மை சிராஜின் பங்களிப்பு பும்ராவுக்கு எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல என்பதும். கிரிக்கெட்டில் இந்த சிக்கல், இன்று நேற்று தோன்றியது அல்ல. கடந்த காலங்களில் உச்ச நட்சத்திரங்களின் நிழலில் விளையாடும் போது, திறமையான வீரர்கள் எதிர்கொண்ட சவாலைத்தான் இப்போது சிராஜும் சந்தித்து வருகிறார். இயான் சேப்பல் தனது கட்டுரை ஒன்றில் ஒருமுறை இப்படி எழுதினார். விவியன் ரிச்சர்ட்ஸுடன் ஒன்றாக பேட் செய்யும் போது வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிரீனிட்ஜ் அடக்கித்தான் வாசிப்பார்; ஆனால், ரிச்சர்ட்ஸ் இல்லாத சமயங்களில் அவருடைய ஆட்டம் நம்பமுடியாத அளவுக்கு இருக்கும் என்பார் இயான் சேப்பல். பட மூலாதாரம், GETTY IMAGES இதை நாம் பும்ரா-சிராஜ் விஷயத்திலும் பொருத்திப் பார்க்கலாம். இந்த தொடரில் பும்ரா விளையாடாத பர்மிங்ஹாம், லார்ட்ஸ் டெஸ்ட்களில் 17 விக்கெட்களை சிராஜ் சாய்த்துள்ளார். பும்ராவுடன் பந்தை பங்கிட்டுக் கொண்ட மற்ற 3 டெஸ்ட்களில் மொத்தமாக 6 விக்கெட்கள் மட்டும்தான் எடுத்துள்ளார். பும்ராவுடன் விளையாடும் போதும் அதே 100 சதவீத ஈடுபாட்டுடன்தான் விளையாடுகிறார். பிறகு ஏன் விக்கெட்கள் கிடைப்பதில்லை? இதற்கு பல்வேறு காரணிகள் காரணமாக இருக்கலாம். பும்ராவுடன் சேர்ந்து விளையாடும் போது, சிக்கனமாக பந்துவீசி ரன் ரேட்டை கட்டுக்குள் வைப்பதுதான் சிராஜின் பிரதான வேலை. அதுவே பும்ரா இல்லாத போது, தனக்காக சுதந்திரத்துடன் பந்துவீச முடிகிறது. வேகப்பந்து படையை முன்னின்று வழிநடத்துகிறோம் என்கிற பெருமிதமே, அவருடய முழுத் திறமைமையும் வெளிக்கொணர்கிறது. கிரிக்கெட் வெறுமனே திறமை, உடற்தகுதி அடிப்படையில் மட்டுமே இயங்கின்ற விளையாட்டு அல்ல. உளவியலும் தனிநபர் ஆளுமையும் பெரியளவில் தாக்கம் செலுத்தும் விளையாட்டு இது. ஓவல் டெஸ்டில் இந்தியா ஒருவேளை தோற்றிருக்குமானால், புரூக் கேட்ச்சை சிராஜ் தவறவிட்டது பேசுபொருளாகியிருக்கும். தான் தவறவிட்ட கேட்ச்சால் தப்பிப் பிழைத்தவர், சதமடிப்பதை பார்ப்பதை விட வலி மிகுந்த தருணம், வேறு ஒன்று ஒரு கிரிக்கெட் வீரருக்கு இருக்காது. அழுத்தம் மிகுந்த தருணங்களை கடந்து வருவது சிராஜுக்கு ஒன்றும் புதிதல்ல. 2020-2021 ஆஸ்திரெலிய சுற்றுப்பயணத்தின் போது, டெஸ்ட் போட்டியில் அறிமுகமாவதற்கு சில நாள்கள் முன்பாக, தனது தந்தையின் மரண செய்தியை எதிர்கொண்ட துயரத்தில் இருந்தே அவர் மீண்டு வந்திருக்கிறார். மகனின் (சிராஜ்) கிரிக்கெட் கனவுகளை மனதில் சுமந்துகொண்டு ஹைதராபாத்தின் மூலை முடுக்குகளில் ஆட்டோ ஓட்டியவர், சிராஜின் தந்தை மிர்ஸா முகமது கவுஸ். கரோனா காலம் என்பதால் தந்தையின் இறுதிசடங்கில் கூட சிராஜால் பங்கேற்க முடியவில்லை. எப்படிப்பட்ட இழப்பு அது! ஆனால் சிராஜ் சோர்ந்து போய்விடவில்லை. இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவுசெய்த அந்த தொடரில், இந்திய அணி சார்பில் அதிக விக்கெட்களை சிராஜ்தான் கைப்பற்றினார். ஒவ்வொரு தொடருக்கும் முன்பாக தந்தையின் கல்லறைக்கு சென்று பிரார்த்தனை செய்வதை சிராஜ் வழக்கமாக வைத்துள்ளார். சிராஜூக்கு கோலி தந்த ஆதரவு சிராஜின் கிரிக்கெட் வரலாற்றில் 2018 ஐபிஎல் தொடர் மிக மோசமான அனுபவம் என்றே சொல்ல வேண்டும். மோசமான பந்துவீச்சு காரணமாக, சொந்த அணி ரசிகர்களாலேயே ஆன்லைனில் கடுமையாக வசைபாடப்பட்டார். கேப்டன் விராட் கோலி தொடர்ச்சியாக கொடுத்த வாய்ப்புகளாலும் ஆதரவினாலும் அதையும் வெற்றிகரமாக சிராஜ் கடந்துவந்தார். கடந்த ஐபிஎல் ஏலத்தில் பெங்களூரு அணி தக்கவைக்காதது சிராஜுக்கு கடுமையான மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்ககூடும். சமீபத்தில் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடிய சிராஜ், பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தின் போது, பந்துவீச முடியாமல் தவித்ததை பார்த்திருப்போம். பணம் மட்டுமே பிரதானம் என்றாகிவிட்ட லீக் கிரிக்கெட்டில், தன்னை ஆளாக்கி வளர்த்த அணிக்கு எதிராக பந்துவீசுவதற்கு தயங்கிய சிராஜின் அர்ப்பணிப்பும் விஸ்வாசமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஒருநாள் போட்டிகளில் 24.04 என்ற சிறப்பான சராசரி வைத்திருந்தும், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இடம் மறுக்கப்பட்டதால் சிராஜ் கலங்கிப் போனார். ஆனால், 2025 ஐபிஎல் தொடரில் நன்றாக பந்துவீசி, வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியில் தன்னை புறக்கணிக்க முடியாது என்று நிரூபித்துக்காட்டினார். சமீபத்தில் லார்ட்ஸ் டெஸ்டில் ஜடேஜாவுக்கு தோள் கொடுத்து, ஒவ்வொரு ரன்னாக குருவி சேர்ப்பது போல சேர்த்து, வெற்றிக் கோட்டை நெருங்கிக் கொண்டிருந்த போது, பஷீர் பந்தில் துரதிர்ஷ்டவசமாக பவுல்டானார். அப்போது வேதனையின் உச்சத்துக்கே சென்ற சிராஜை, வெற்றிக் கொண்டாட்டத்தை கூட ஒத்திவைத்துவிட்டு இங்கிலாந்து வீரர்கள் ஆற்றுப்படுத்தினார்கள். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, சிராஜூக்கு ஆறுதல் கூறும் இங்கிலாந்து வீரர்கள் கிராலி, ஜோ ரூட் பட மூலாதாரம், GETTY IMAGES தவறையே சாதிப்பதற்கான தூண்டுகோலாக மாற்றிய சிராஜ் உணர்ச்சிகரமான வீரராக இருப்பதில் இருக்கும் சாதகமான அம்சம் என்னவெனில், களத்திலும் சரி, களத்துக்கு அப்பாலும் சரி, உங்களுக்கு கிரிக்கெட்டை தவிர வேறெதுவும் மனதை ஆக்கிரமிக்காது. ஓவல் டெஸ்டின் நான்காம் நாளில் புரூக் கேட்ச்சை தவறவிட்ட நிகழ்வு, சிராஜுக்கு ஒரு கிரியா ஊக்கியாக செயல்பட்டுள்ளது. ஐந்தாம் நாளில் வழக்கத்தை விட இரண்டு மணி நேரம் முன்னதாக எழுந்துகொண்ட சிராஜ், 'believe' என்ற வார்த்தையை பொறித்த தனக்கு பிடித்த ரொனால்டோவின் படத்தை போன் வால்பேப்பராக வைத்துள்ளார். இதை உளவியலாளர்கள் விசுவலைசேசன் (visuvalaization) என்று அழைக்கிறார்கள். அதாவது நடக்கப் போவதை முன்னரே மனதில் ஒத்திகை பார்ப்பது. உலகப் புகழ்பெற்ற 153* இன்னிங்ஸை லாரா இப்படித்தான் விசுவலைசேசன் செய்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பார்படாஸ் டெஸ்டில் நிகழ்த்திக் காட்டினார். சிராஜுக்கு விசுவலைசேசன் குறித்து தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், அதை வெற்றிகரமாக ஓவல் மைதானத்தின் கடைசி நாளின் முதல் ஒரு மணி நேரத்தில் நிகழ்த்தி காட்டினார். கடினமான பின்னணியில் இருந்து வந்த கிரிக்கெட் வீரர்கள் சாதிப்பதை தொடர்ந்து பார்த்து வருகிறோம். ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆல்ரவுண்டர் கீத் மில்லரிடம், 'நீங்கள் எப்போதாவது ஆட்டத்தில் அழுத்தத்தை எதிர்கொண்டது உண்டா?' என்று கேட்ட போது, 'ஜெர்மனி போர் விமானம் முதுக்குக்கு பின்னால் பறப்பதை பார்த்தவனுக்கு கிரிக்கெட்டின் அழுத்தம் எம்மாத்திரம்' என்கிற தொனியில் பதிலளித்தார். கீத் மில்லர் உலகப் போரின் போது பிரிட்டனுக்காக போர் விமானியாக பணியாற்றியவர். கடினமான சூழல்களில் சிராஜ், தனது முழுத் திறமையை வெளிக்கொணர்வதற்கு அவருடைய கடினமான கடந்த காலம் ஒரு முக்கிய காரணியாக இருந்துவருகிறது. அணிக்காக எவ்வளவோ தியாகங்கள் செய்தும், சிராஜின் பங்களிப்புகள் பெரிதாக பேசப்படாததற்கு அவருடைய பந்துவீச்சு பாணியும் ஒரு முக்கிய காரணம். தையலை பயன்படுத்தி பந்துவீசும் வேகப்பந்து வீச்சாளர்கள் (seam) வரலாற்றில் பெரிதாக கொண்டாடப்பட்டதில்லை. வால்ஷ், ஆம்புரோஸ், மெக்ராத் என சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், பெரும்பான்மையினர் சிராஜை போல வசீகரம் குறைந்தவர்கள். சிராஜை இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடுடன் ஒப்பிடுவது பொருத்தமாக இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 604 விக்கெட்கள் கைப்பற்றினாலும், அவருக்கு எந்நாளும் ஆண்டர்சனுக்கு கிடைத்த புகழ் வெளிச்சம் கிடைத்ததில்லை. ஸ்விங் பந்துவீச்சாளர்கள் காற்றில் நிகழ்த்தும் ஆச்சர்யங்கள் கண்ணுக்கு இதமானவை. ஆனால் பிராட், சிராஜ் போன்றவர்கள் ஸ்விங் செய்ய முடிந்தும் அணியின் நலனுக்காக அதை தியாகம் செய்து, கடினமான பணியை தங்களின் முத்திரையாக வரித்துக்கொண்டவர்கள். சிராஜ் பிரமாதமான அவுட் ஸ்விங் பந்துகளை வீசத் தெரிந்தவர். அவுட் ஸ்விங் பந்துகளுக்கு செட் செய்துதான், ஓவல் டெஸ்டின் கடைசி நாளில் ஸ்மித் விக்கெட்டை அவர் கைப்பற்றினார். ஆனால் அவருடைய ஆதார பந்து (stock ball) என்பது தளர்வாக தையலைப் பிடித்து வீசும் வாபில் சீம்தான் (wobble seam) வழக்கமாக வாபில் சீமில் வீசும்போது, பந்தின் போக்கை பந்து வீச்சாளரால் கூட தீர்மானிக்க முடியாது. ஆனால் சிராஜ் தன்னுடைய மணிக்கட்டை நுட்பமாக பயன்படுத்துவதன் மூலம் பந்து உள்ளே செல்ல வேண்டுமா வெளியே செல்ல வேண்டுமா என்பதையும் அவரே முடிவு செய்கிறார். ரூட், போப் உள்பட இங்கிலாந்தின் முன்னணி பேட்டர்கள், சிராஜின் உள்ளே வரும் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் தொப் தொப்பென்று கால்காப்பில் வாங்கி எல்பிடபிள்யூ முறையில் வெளியேறியதைப் பார்த்தோம். பட மூலாதாரம், GETTY IMAGES சிராஜ் இனி தளபதி அல்லர்; தலைவன்! பந்து உள்ளேதான் வரப் போகிறது என்று பேட்டருக்கும் தெரியும். ஆனால், அதை அத்தனை எளிதாக எதிர்கொண்டு விட முடியாது. சிராஜின் நூல் பிடித்தது மாதிரியான லெங்த்தும் தொய்வற்ற வேகமுமே காரணம். ஐந்து டெஸ்ட் விளையாடிய பிறகும் கடைசி நாளில் மணிக்கு 145 கிமீ வேகத்துக்கு மேல் வீசி, பாஸ்பால் கோட்பாட்டின் பிதாமகனான மெக்கலத்தை ஆச்சர்யப்பட வைத்தவர் சிராஜ். ஒரு பந்துவீச்சாளர்களுக்கு லைன் முக்கியமல்ல; லெங்த்தான் முக்கியம் என்பார்கள். ஆனால் சிராஜின் லைனும் கூட சோடை போவதில்லை. இப்படி, எல்லாமே கச்சிதமாக செய்வதாலேயே, சிராஜின் பந்துவீச்சு வசீகரத்தை இழந்துவிடுகிறதோ என்று தோன்றுகிறது. பும்ராவின் உடற்தகுதி இன்னும் எத்தனை ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட அவரை அனுமதிக்கும் என்று தெரியவில்லை. அப்படியே அவர் தொடர்ச்சியாக விளையாடினாலும், உடற்தகுதியை கருத்தில் கொண்டு அவர் எல்லா டெஸ்ட்களிலும் விளையாட முடியாது. ஓவல் டெஸ்ட், இந்திய வேகப்பந்து வீச்சுக்கு யார் தலைமையேற்பது என்பதையும் வெளிச்சம் போட்டுக்காட்டிவிட்டது. ஹைதராபாத்தில் தொடங்கி, ஆஸ்திரேலிய மண்ணில் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த சிராஜ், இங்கிலாந்து மண்ணில் வைத்து, இந்திய வேகப்பந்து வீச்சின் தலைவன் தான்தான் என நிரூபித்துள்ளார். ஆம், இனி சிராஜ், இந்திய வேகப்படையின் தளபதி அல்லர்; தலைவன்! - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c30zq6z1v4yo
  20. சோமரத்ன ராஜபக்ஷவின் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் – ரோஹினி ராஜபக்ஷ வலியுறுத்தல் Published By: VISHNU 06 AUG, 2025 | 02:54 AM செம்மணி தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதில் சாட்சியம் அளிப்பதற்குத் தயாராக இருப்பதாக மனைவியின் கடிதத்தின் ஊடாக தனது சகோதரரான சோமரத்ன ராஜபக்ஷ கூறியிருப்பதன் விளைவாக அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால், அவருக்குரிய பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சோமரத்ன ராஜபக்ஷவின் சகோதரி ரோஹினி ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். யாழ். செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அத்தோடு யுத்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் நடாத்தப்பட்டுவந்த சித்திரவதைக்கூடங்கள் என்பன பற்றிய விபரங்களை வெளியிடுவதற்குத் தனது கணவர் தயாராக இருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தற்போது இவ்விவகாரம் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், வெலிக்கடை சிறைச்சாலையில் இருக்கும் தனது சகோதரரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் எனவும், அவரது பாதுகாப்பைப் பலப்படுத்துவற்கு சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ள அவரது சகோதரி ரோஹினி ராஜபக்ஷ, இதுகுறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். அதுமாத்திரமன்றி மரணதண்டனை விதிக்கப்பட்டு 29 வருடகாலமாக சிறைவாசம் அனுபவித்துவரும் தனது சகோதரர் சோமரத்ன ராஜபக்ஷவுக்கு கடந்த காலங்களில் சிறைக்கு உள்ளிருந்தும், வெளியே இருந்தும் பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகவும், அத்தோடு சில சந்தர்ப்பங்களில் அவரது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது சோமரத்ன ராஜபக்ஷவின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அவரது சகோதரி வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/221927
  21. ஓவல் டெஸ்டில் ரசிகர்கள் கண்ணிமைக்க மறந்த கடைசி 57 நிமிடங்கள் பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் ஸ்டீபன் ஷெமில்ட் தலைமை கிரிக்கெட் நிருபர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஓவல் மைதானத்தில் உள்ள ஜேஎம் ஃபின் ஸ்டாண்டின் உள்ளே, பெவிலியனுக்கு எதிரே, டெஸ்ட் போட்டி சிறப்பு கமெண்ட்ரி அறைக்கு செல்லும் ஒரு படிக்கட்டு உள்ளது. இது ஊடகங்கள் மற்றும் பார்வையாளர்கள் என அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையிலான பரபரப்பான ஐந்தாவது டெஸ்ட் போட்டி முடிந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, மைதானம் காலியாகிக் கொண்டிருந்தது. அப்போது, அந்த படிக்கட்டில் ஒரு இடது கால் ஷூ, உள்ளாடை, வலது கால் ஷூ ஒன்றும் இருந்தன. அவற்றின் அளவை வைத்து பார்க்கும்போது அவை ஒரு ஆணுடையதாக இருக்கலாம் எனத் தெரிகிறது. தங்கள் உடைமைகளை அவர் எவ்வாறு தவறவிட்டார், அவற்றை இழந்ததை எப்போது உணர்ந்தார் என்பது தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், யாரோ ஒருவர் இந்த புகழ்பெற்ற மைதானத்தில் இருந்து செல்லும்போது, காலணிகள் மற்றும் உள்ளாடைகள் இல்லாமல் சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது. இது, திங்கட்கிழமை காலை ஏற்கனவே நிகழ்ந்த உற்சாகமான களேபரத்துடன் முற்றிலும் பொருந்தியிருக்கும். அங்கு, நீங்கள் பார்க்க விரும்பும் மிக தீவிரமான, பரபரப்பான உணர்ச்சிகரமான விளையாட்டு 57 நிமிடங்கள் அரங்கேறியிருந்தது. இருபத்தைந்து நாட்கள் தொடர்ந்த பரபரப்பான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இறுதி நாளன்று, ஒரு ஒற்றைக் கை மனிதன் தெற்கு லண்டனின் 22 யார்டு புல்வெளியில் வலியுடன் ஓடுவதை பார்க்க முடிந்தது. வாரத்தின் முதல் பணிநாளில் இங்கிலாந்தின் உற்பத்தித்திறன் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கும், அல்லது மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூருவில் எத்தனை அலுவலகங்கள் முன்கூட்டியே மூடப்பட்டன என நினைத்துப் பார்க்க தோன்றுகிறது. ஆனால் நான்காம் நாள் ஆட்டத்தின் மாலையில் ஆட்டம் ஒரு முக்கியமான தருணத்தில் இருக்கும்போது, நிலைமை வித்தியாசமாக இருந்தது. மழை மற்றும் மங்கலான வெளிச்சம் காரணமாக வீரர்கள் டிரெசிங் ரூமிற்கு சென்றனர். பின்னர், மங்கலான மாலைப் பொழுது பளிச்சென மாறியபோதும், போட்டி மீண்டும் தொடரவில்லை. ஞாயிறு மாலை நிகழ்வுகள் ஏற்படுத்திய எரிச்சல், திங்கள்கிழமை என்ன நடக்கும் என்ற ஆவலாக உருமாறியது. முப்பத்தைந்து ரன்கள் அல்லது நான்கு விக்கெட்டுகள். ஓவல் மைதானத்தின் டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்திருந்தது, ஆனால் போட்டியை காண வருவதற்கு யாரேனும் அக்கறை காட்டுவார்களா? என்ற சந்தேகமும் இருந்தது. ஆனால் ரசிகர்கள் வந்தார்கள், வந்து வரலாற்று சிறப்புமிக்க மைதானத்தை தொடர்ந்து சத்தத்தாலும், பரபரப்பான உற்சாகத்தாலும் நிரப்பினார்கள். 2005 ஆஷஸ் கிளாசிக் போட்டியில் இரண்டே பந்துகளுக்காக எட்ஜ்பாஸ்டன் மைதானம் நிரம்பியிருந்ததை இது நினைவூட்டியது. பட மூலாதாரம், GETTY IMAGES அன்று போலவே, இங்கு வந்தவர்களுக்கும் அற்புதமான விருந்து காத்திருந்தது. 20 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவை இரண்டு ரன்களில் இங்கிலாந்து வீழ்த்தியதற்குப் பிறகு, இந்தியாவின் இந்த ஆறு ரன்கள் வெற்றிதான் இந்த நாட்டில் இவ்வளவு நெருக்கமான வெற்றியாகும். போட்டித்தொடரின் இறுதி நாளன்று ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் இந்திய அணி விளையாடத் தொடங்கியது, அங்கு, பாதுகாவலர்கள், சமையல்காரர், பேருந்து ஓட்டுநர் உட்பட அனைவருமே அந்தக் கூட்டத்தில் இருந்ததாகத் தோன்றியது. பொருத்தமாக, இது சர்ரே அணிக்கு எதிராக எதிராக இங்கிலாந்து விளையாடுவது போல இருந்தது. ஜேமி ஓவர்டன் முதல் இரண்டு பந்துகளிலும் நான்கு ரன்கள் எடுத்தபோது, இங்கிலாந்துக்கு தேவையான ரன்களில் கால் பகுதியை கிட்டத்தட்ட எட்டியது. அதுதான் அன்று அவர்களுக்கு கிடைத்த சிறந்த தருணம். தனது முதல் ஐந்து டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பராக இருந்த ஜேமி ஸ்மித், சற்று சோர்வாக தெரிந்தார். அவர் இரண்டு பந்துகளை வீணாக்கினார், மூன்றாவது பந்து பேட்டின் விளிம்பில் பட்டு ஆட்டமிழந்தார். பாரத் ஆர்மியின் மேளம் "வி வில் ராக் யூ" இசையின் தாளத்தை அடித்து, அதிர வைத்தது. ஓவர்டன் காலில் பந்து பட்டபோது, நடுவர் குமார் தர்மசேனா, 2005-ல் ரூடி கோர்ட்ஸனின் மெதுவான விரல் அசைவை நினைவூட்டும் வகையில் தனது முடிவை அறிவித்தார். ஞாயிறு மாலை, வோக்ஸ் தனது முறிந்த தோள்பட்டையை கிரிக்கெட் வெள்ளை உடைகளுக்குள் திணித்துக்கொண்டு அரங்கிற்குள் வந்தார், இது நினைப்பதற்கே வலியைத் தருகிறது. டங்கின் ஸ்டம்புகள் பிரசித் கிருஷ்ணாவால் சிதறடிக்கப்பட்டபோது, பாதுகாப்பு பணியாளர்கள் ஆட்டம் முடிந்துவிட்டதாக நினைத்து மைதானத்திற்கு விரைந்தனர். ஆனால், கிரிக்கெட்டில் மிகவும் நல்ல மனிதரான வோக்ஸ்தான் மிகவும் தைரியமானவர் என்பது அவர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ஸ்வெட்டருக்குள் வோக்ஸின் காயமடைந்த இடது கை கட்டப்பட்டிருந்தது வோக்ஸ் தனது இடது கையில், கடந்த ஆண்டு காலமான தனது தந்தை ரோஜரின் நினைவாக பச்சை குத்தியிருந்தார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஸ்வெட்டருக்குள் வோக்ஸின் காயமடைந்த இடது கை கட்டப்பட்டிருந்தது. கிரிக்கெட்டின் இரண்டு வடிவங்களிலும் உலகக் கோப்பை வென்றவராகவும், ஆஷஸ் கோப்பையை வென்றவராகவும், இங்கிலாந்தின் மைதானங்களில் சிறந்த 'சீமர்'களில் ஒருவர் என்றும் கிரிக்கெட் சரித்திரத்தில் வோக்ஸ்க்கு சிறப்பான இடம் உண்டு. அதிலும், தோள்பட்டை காயத்தால், ஒரு கையில் கட்டுப்போட்டிருந்த நிலையில், தனது அணியை காப்பாற்ற ஒற்றைக் கையால் பேட்டிங் செய்ய களமிறங்கிய மந்திரவாதி என்று கிரிக்கெட்டர் கிறிஸ் வோக்ஸ் போற்றப்படுவார். அடிபட்ட கையுடன் விக்கெட்டுகளுக்கு இடையில் நான்கு முறை ஓடுவது வோக்ஸுக்கு மிகவும் வேதனையாக இருந்திருக்கும் என்பதை அவர் ஓடும்போது, எடுத்துவைத்த ஒவ்வொரு அடியிலும் அவர் தோள்பட்டை நடுங்கியதை வைத்து உணரமுடிகிறது. நல்லவேளையாக, ஒற்றை கையுடன் பந்துவீச்சை எதிர்கொள்ளும் நிலைமை அவருக்கு வரவில்லை. ஸ்கோரை சமன் செய்து தொடரை வெல்லக்கூடிய சிக்ஸரை அடிக்க முயன்ற அட்கின்சன் லெக் சைடில் பெரிய ஷாட் ஒன்றை விளையாட முற்பட்டார். அந்த முயற்சி தோல்வியடைந்து, ஆஃப் ஸ்டம்பை பந்து பதம்பார்த்துவிட்டது. பட மூலாதாரம், GETTY IMAGES இளம் இந்திய அணியில் தளராத மனம் கொண்ட முகமது சிராஜ், உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விராட் கோலி ஓய்வு பெற்றுவிட்டாலும், அவரது உத்வேகமான போர் குணத்தை எடுத்துச் செல்லும் திறன் சிராஜுக்கு இருந்தது. இந்த டெஸ்டில் சிராஜ் பந்து வீசாமல் பெவிலியனில் இருந்த சந்தர்ப்பமே இருக்கவில்லை. ஜஸ்பிரித் பும்ராவின் நிழலில் விளையாடாதபோது, பொறுப்பை உணர்ந்து சிறப்பாகச் செயல்படும் சிராஜின் சராசரி மற்றும் ஸ்ட்ரைக்-ரேட் இரண்டும் சிறப்பாக இருக்கும். இந்தத் தொடரில் இந்தியாவிற்கு கிடைத்த இரு வெற்றிகளும் பும்ரா விளையாடாத போட்டிகளில் இருந்தே வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது டெஸ்டில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது வருத்தத்தை அளித்தாலும், தொடர் 2-2 என சமநிலையில் முடிவடைந்தது நியாயமான முடிவாகும். அந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவையோ அல்லது இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர்கள் அடித்த சிக்ஸர்களில் ஏதேனும் ஒன்றையோ இங்கிலாந்து அணியினர் கேட்ச் செய்திருந்தால், நிலைமை வேறு மாதிரியாக இருந்திருக்கும். ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தனது தொலைக்காட்சி தயாரிப்பு குழுவினரை பாடல் மூலம் வழிநடத்திய காட்சி, எந்த அணி இந்த முடிவில் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை வெளிப்படையாகச் சொன்னது. 374 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி, வெற்றிக்கு மிக நெருக்கமாக சென்றது மிகவும் பாராட்டத்தக்கது. இருந்தபோதிலும் ஒரு கிரிக்கெட் தொடரில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை இங்கிலாந்து அணி தவறவிட்டது துரதிருஷ்டவசமானது. தற்போதைய இங்கிலாந்து அணிக்கு இது இறுதி உள்நாட்டு டெஸ்ட் போட்டியாக இருக்கும் வாய்ப்புகளும் தென்படுகிறது. பட மூலாதாரம், GETTY IMAGES மோசமான ஆஷஸ், கேப்டன் ஸ்டோக்ஸ் அல்லது பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் அணியில் இருந்து விலகிச் செல்ல வழிவகுக்கலாம். வோக்ஸின் வீரம் அனைவராலும் பாராட்டப்பட்டாலும், இது, அவர் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடிய கடைசி போட்டியாக இருக்கலாம். மார்க் வுட்டுக்கு ஜனவரியில் 36 வயது. இங்கிலாந்தின் அடுத்த உள்நாட்டு டெஸ்ட் ஜூன் மாதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டெஸ்ட் போட்டியின்போது சனிக்கிழமை காலை, இங்கிலாந்து பீல்டிங் செய்து, DRS மதிப்பாய்வைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த தருணமும் இருந்தது. உரையாடலில் ஸ்மித், அட்கின்சன், சாக் கிராலி, ஜேக்கப் பெத்தேல், ஓலி போப் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் இருந்தனர். அடுத்த முறை இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யும்போது இங்கிலாந்தின் மூத்த வீரர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கான ஒரு காட்சியாக இதைப் பார்க்கலாம். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgkrgjl4754o
  22. மனிதப்புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட பொருட்களை அடையாளம் காண்பதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு: உண்மை, நீதியை நோக்கிய நடவடிக்கை என ஐ.நா பாராட்டு Published By: VISHNU 05 AUG, 2025 | 10:10 PM செம்மணி மற்றும் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட உடைமைகளை அடையாளம் காண்பதில் பொதுமக்களின் உதவியை நாடுவதற்கான தீர்மானம் உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டதோர் நடவடிக்கை ஆகும் என இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: செம்மணி சித்துபாத்தி மற்றும் கொக்குத்தொடுவாய் கூட்டுப்புதைகுழி தளங்களில் இருந்து மீட்கப்பட்ட தனிப்பட்ட உடைமைகளை அடையாளம் காண்பதில் பொதுமக்களின் உதவியை நாடும் தீர்மானம், இலங்கையில் உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டதோர் நடவடிக்கையாகும். பல தசாப்தகாலமாக தமது அன்புக்குரியவர்களின் நிலை குறித்து அயராது, திடமாக பதில்களைத் தேடிவரும் காணாமல்போனோரின் குடும்பங்களுடன் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் உறுதியாக நிற்கிறது. உண்மை மற்றும் நீதியைப் பின்தொடர்வதில் அவர்களது தாங்கும் வல்லமை ஒரு தார்மீக வழிகாட்டியாகத் தொடர்கிறது. இலங்கை அரசாங்கம், குறிப்பாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தமது பணியை வெளிப்படைத்தன்மையுடனும், விரைவாகவும், காணாமல்போனோரின் குடும்பங்களுடனான அர்த்தமுள்ள ஆலோசனைகளுடனும் நிறைவேற்றவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/221921
  23. 05 AUG, 2025 | 10:08 PM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) அரசாங்க பாடசாலைகள் மூடப்பட மாட்டாது என்றும் 50 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் கல்வி, உயர்கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) வாய்மூல விடை க்கான கேள்வி நேரத்தில், ரவி கருணாநாயக்க எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது மக்கள் பிரதிநிதிகள், பிரதேச ஒருங்கிணைப்புக் குழு, பிரதேச செயலாளர், கிராம சேவை உத்தியோகத்தர்கள் என அனைவரும் ஒன்றிணைந்தே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறு தீர்மானங்களை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் சில வேளைகளில் 50 மாணவர்களுக்கும் குறைவான எண்ணிக்கை உள்ள பாடசாலைகளை நடத்திச் செல்வது தொடர்பிலும் ஆராயப்படும். தற்போதைய அரசாங்கம் கல்விக்கான சந்தர்ப்பங்களை விரிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயற்படுகிறது. பாடசாலைகளை மூடி விடுவது நோக்கம் அல்ல. அத்துடன் பாடசாலைகளை நடத்திச் செல்லும் நடவடிக்கைகளை கல்விய மைச்சினால் மட்டும் முன்னெடுத்துச் செல்ல முடியாது. அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமாகும் என்றார். https://www.virakesari.lk/article/221910 ஆரம்பக்கல்வியை 1 கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்திற்குள் உள்ள பாடசாலையிலும் இடைநிலைக்கல்வியை 3 கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பாடசாலையிலும் உயர்கல்வியை 5 கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பாடசாலையிலும் தான் கற்க முடியும் என சட்டம் கொண்டு வந்தால் தேசியப் பாடசாலை அல்லது முன்னணிப் பாடசாலை என்ற கற்பிதம் மாறும்!
  24. Published By: VISHNU 05 AUG, 2025 | 09:56 PM செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டிருந்தனர் என தெரிவித்த சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா எவரும் எதனையும் அடையாளம் காட்டவில்லை என்றார். செம்மணி அகழ்வுப்பணிகள் இரண்டாம் கட்டத்தின் 31 ஆவது நாள் யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் செவ்வாயக்கிழமை (5) முன்னெடுக்கப்பட்டது. அகழ்வு பணிக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், புதிதாக ஆறு மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளது. நான்கு மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளது. 141 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு இலக்கமிடப்பட்டதுடன் 130 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளது. வழமையைப் போல அகழ்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெறும். இதேவேளை செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டிருந்தனர். புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணி முதல் மாலை 05 மணி வரையில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.அவற்றை சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டிருந்தனர். எவரும் அவற்றை அடையாளம் காட்டவில்லை. தனிமனிதனோடு தொடர்புடைய சான்று பொருட்களை காட்சிப்படுத்தப்பட்டது. இனிவரும் காலங்களிலும் தனிமனிதனோடு தொடர்புடைய சான்று பொருட்கள் மீட்கப்பட்டால் அவற்றையும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதேவேளை செம்மணி மனித புதைகுழி அமைந்துள்ள அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் நடைபெற்ற ஸ்கான் பரிசோதனை தொடர்பான இறுதி அறிக்கை எதிர்வரும் மூன்று வாரத்தில் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் - என்றார். https://www.virakesari.lk/article/221920
  25. செம்மணி மனிதப் புதைகுழி: மேலும் 6 எலும்புக்கூட்டு தொகுதிகள் கண்டுபிடிப்பு Published By: VISHNU 05 AUG, 2025 | 09:28 PM யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மனித புதைகுழிகளில் இருந்தும் செவ்வாயக்கிழமை (5) புதிதாக 06 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 04 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில், 65 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி பகுதியில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மற்றும் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 31 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்படும் நிலையில் இன்றைய தினம் வரையில் 65 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 40 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 04 எலும்பு கூட்டு தொகுதியுடனுமாக 130 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 141 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை இன்றைய தினம் செவ்வாய்கிழமையும் செம்மணியில் தற்போதுள்ள மனித புதைகுழிகளை விட அயலில் மேலும் மனித புதைகுழிகள் உள்ளனவா என்பதனை ஆராயும் நோக்கில், ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/221919

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.